Monday, May 6, 2013

திரை


“என்ன  வாழ்க்கை இது?” சலிப்பாக இருந்தது. சஞ்சலம் நிறைந்த மனது அங்குமிங்கும் அலை பாய்ந்தபடி இருந்தது. மனசைச் சமாதானப் படுத்துவதற்காக கோவிலுக்கு வந்தால், நான் வந்த நேரம் சரியாக திரை போட்டு விட்டிருந்தார்கள்.

கொஞ்ச நேரம் காத்திருந்து பார்க்கலாம் என்று எண்ணமிட்டபடி சுற்றுப் பிரகாரத்தில் ஒரு ஓரமாக அமர்ந்து கண்களை மூடிக் கொண்டேன். 

பூனை இருக்கிறதே... அது தன் கண்ணை மூடிக் கொண்டு, உலகமே இருண்டு விட்டது என்று நினைத்துக் கொள்ளுமாம். அதைப் போல கண்களை மூடியவுடன் மனசில் உள்ள துயரங்களும், சஞ்சலங்களும் விடை பெற்று விடுவதாயிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியது.  ஆனால், இப்போது என்னைப் பார்ப்பவர்கள் நான் ஏதோ தியானத்தில் ஆழ்ந்து விட்டதாக நினைத்துக் கொள்வார்கள். இந்த நினைப்பு வந்ததும், அந்த நிலையிலும், இதழ்களில் இலேசாகச் சின்னப் புன்னகை ஒன்று எட்டிப் பார்க்க எத்தனித்தது.

அதற்குள், “ஆன்ட்டி, ஏன் அழறீங்க?” என்று சின்னக் குரல் ஒன்று கேட்டது. அதே சமயம் சிறு கரம் ஒன்று என் கன்னங்களில் வழிந்திருந்த கண்ணீரைத் துடைத்தது. அப்போதுதான் மனசின் புலம்பல் கண்ணீராகி விட்டிருந்ததையே உணர்ந்தவளாக, விழிகளைத் திறந்து பார்த்தேன். அழகிய சின்னஞ் சிறுமி ஒருத்தி என் அருகில் நின்று கொண்டிருந்தாள். மிஞ்சி மிஞ்சிப் போனால் 5 அல்லது 6 வயது இருக்கும்.

நான் கண்களைத் திறந்ததும், பல நாள் பழகியவளைப் போல சுவாதீனமாக என் மடியில் அமர்ந்து கொண்டாள்.

“ம்… எனக்கு யாருமே இல்ல, அதான் அழறேன்…”, என்று வேடிக்கையாகச் சமாளித்தபடி அவளை என்னோடு அணைத்துக் கொண்டேன். முன் பின் தெரியாத அந்த சின்னக் குழந்தையின் அக்கறை மேலும் கண்ணீரை வரவழைத்தது. சுற்றும் முற்றும் பார்த்தேன், அவளோடு வந்திருப்பவர்கள் யாரென்று அறிவதற்காக. யாருமே இந்தக் குழந்தையைக் கவனிப்பதாகத் தெரியவில்லை.

“ஏன், உங்களுக்கு ஃப்ரண்டே இல்லையா?” என் மோவாயை அவளுடைய தளிர் விரல்களால் இலேசாகத் தொட்டபடி, இரக்கத்துடன் கேட்டாள்.

“இல்லையே…”, நானும் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னேன். 

“உனக்கு?”

“எனக்கு... ம்... எனக்கு, அபி, காயத்ரி, சுந்தர்...", சின்ன விரல்களை ஒவ்வொன்றாக மடக்கி, "எனக்கு இவ்ளோ ஃப்ரண்ட்ஸ் இருக்காங்களே....", என்றாள்.

"அட... அவ்ளோ ப்ரெண்ட்ஸா? சரி... அதுல பெஸ்ட் ப்ரெண்டு யாரு உனக்கு?" என்றதும்,

"என் அம்மாதான் எனக்கு பெஸ்ட் ஃப்ரண்டு. உங்களுக்கும் அவங்களை ஃப்ரண்டா இருக்கச் சொல்றேன். சரியா? நீங்க அழாம இருக்கணும்!”

“பரவாயில்லையே… தாங்க்யூடா செல்லம்.”

மறுபடி சுற்றிலும் பார்த்தபடி, “உன் அம்மா எங்கே?” என்று கேட்டேன்.

“இங்கேதான் இருக்காங்க. வாங்க, காண்பிக்கிறேன்…” என் மடியிலிருந்து எழுந்தபடி, உரிமையுடன் என் கையைப் பிடித்து இழுத்தாள்.

வேறு வழியில்லாமல் நானும் அவளுடன் எழுந்தேன். இப்பேற்பட்ட சமத்துக் குழந்தையின் அம்மா யாரென்று பார்க்க எனக்கும் ஆவலாக இருந்தது.

“அதோ…. அம்மா!” என்றாள் குழந்தை.

அவள் கை காட்ட, சரியாக அந்த சமயத்தில் திரை விலக, “டாண், டாண்” என்று கண்டாமணி ஒலிக்க, அம்பாள் அடுக்குத் தீபத்தின் ஒளியில் ஜொலித்துக் கொண்டிருந்தாள்.

அதற்குப் பின் அந்தக் குழந்தையைக் கோவில் முழுக்கத் தேடியும், தென்படவில்லை.


--கவிநயா

19 comments:

 1. சிலிர்க்கிறது. அவளிருக்க சஞ்சலமேன்? நல்ல கதை.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ராமலக்ஷ்மி!

   Delete
 2. Replies
  1. ஹ்ம்... அனுபவம் இல்லை :( ஆசை அல்லது ஏக்கம்னு வேணா வெச்சுக்கலாம் :)
   நன்றி தனபாலன்.

   Delete
 3. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_7.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. நன்றி :) பார்த்துட்டேன்...

   Delete


 4. அதற்குப் பின் அந்தக் குழந்தையைக் கோவில் முழுக்கத் தேடியும், தென்படவில்லை

  .
  அவள் தான் அம்பாள் அடுக்குத் தீபத்தின்
  ஒளியில் ஜொலித்துக் கொண்டிருந்தாளே..!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்! அவளேதான் இவள்; இவளேதான் அவள்! :)
   நன்றி அம்மா.

   Delete
 5. அன்பின் கவிநயா - சிறுகதை அருமை - எதிர் பாராத முடிவு - அருமையான முடிவு - இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. வாங்க சீனா ஐயா! மிக்க நன்றி!

   Delete
 6. பின் தொடர்வதற்காக

  ReplyDelete
 7. நல்ல கதை..
  முடிவு அருமையாக இருக்கிறது...
  வாழ்த்துக்கள் சகோதரி...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி திரு.மகேந்திரன்.

   Delete
 8. பரமாச்சார்யாரைப்பற்றி அமரர் கணபதி எழுதிய இரு சம்பவங்கள் நினைவுக்கு வரவே , வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளத்தோன்றியது :


  1)பாலாம்பிகைக்கு சாத்த அழகான பச்சைப் பட்டுப்பாவாடை பரமாச்சார்யார் அருகில் இருந்தது ;பக்தர் கூட்டத்து நடுவிலிருந்து ஒரு சிறுமி பெரியவாபக்கம் ஓடி வந்து பாவாடையைப்பிடித்து இழுக்க ,பெற்றோர்
  குழந்தையைக் கடிந்து கொள்ள ,குழந்தை "எனக்கு இந்தப்பாவாடை
  வேணும் "என்று அடம்பிடித்து அழ ,பெரியவா "நீயே எடுத்துக்கோம்மா"
  என்று பாவாடையைக் குழந்தைக்குக் கொடுத்து விட்டாராம் .
  இந்த சம்பவம் நடந்து சில மாதங்களில் அந்தக் குழந்தை.. :((


  2)பெரியவாளை த்தரிசனம் பண்ண பெரிய க்யூ ;ஒவ்வொருவரும் தன் குறைகளைச் சொல்லிப் புலம்பி ஆசி பெற்றுச்சென்றவண்ணம் இருந்தனர் ;
  அந்த வரிசையில் காத்திருந்த ஒரு எட்டுவயதுச்சிறுமி பெரியவரை நமஸ்கரிக்க ,"குழந்தைக்கு என்ன வேணும் ?"என்று பெரியவா அன்புடன் விசாரிக்க ,அவள் ,"பெரியவா நூறாயுசு நன்னா இருக்கணும் "என்று
  சொல்ல ,பெரியவா கண்ணை மூடி "காமாக்ஷி!காமாக்ஷி"என்று பரவசமாய்க்
  கூவினாராம்!
  ReplyDelete
  Replies
  1. மிக அருமையான சம்பவங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் பல, லலிதாம்மா.

   பரமாச்சார்யரின் திருவடிகளை வணங்கிக் கொள்கிறேன்.

   Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)