Sunday, April 21, 2013

குட்டிச் சுட்டீஸ்


ஞாயிற்றுக் கிழமைகளில் சன் டி.வி.யில் வருகிற குட்டிப் பிள்ளைகள் நிகழ்ச்சி. அந்த நேரம் வீட்டில் இருந்தால், பார்ப்பதுண்டு. குட்டிப் பிள்ளைகள், அதுவும் மழலை மாறாமல் இருக்கையில் அவர்கள் பேசுவதைக் கேட்டு விட்டால், “குழலும் யாழும் இனிதென்று சொன்னவருக்கு அப்படிச் சொல்ல எப்படித்தான் மனம் வந்ததோ?” என்று கேட்கத் தோன்றுமல்லவா?

நிகழ்ச்சி, ரசிக்கும்படியே இருந்தது, போன முறை பார்க்கும் வரையில்…


போன வாரம் வந்த குழந்தைகளில் ஒரு குழந்தை… மிஞ்சி மிஞ்சிப் போனால் 4 வயது இருக்கும். அந்தக் குட்டிப் பிள்ளை சொல்கிறது, “அப்பா ‘சரக்கு’ குடிப்பார்”, என்று! அப்படி என்றால் என்னவென்று தெரியாமல்தான் சொல்கிறது… அது தெரிகிறது… இருந்தாலும், அப்படி ஒரு பிஞ்சுக் குழந்தையின் வாயிலிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகள் வந்தால் அதிர்ச்சியாகத்தானே இருக்கிறது? வீட்டில் பெரியவர்கள் பேசுவதையும் செய்வதையும் கவனித்துத் தானே இந்தப் பிள்ளைகள் இவ்வளவும் கற்றுக் கொள்கிறார்கள்?

கள்ளம் கபடம் இல்லாத உள்ளத்தைக் குழந்தை உள்ளம் என்று சொல்கிறோம், ஆனால் இப்போது அந்தக் குழந்தை உள்ளம் குழந்தைகளிடமே கூட இல்லாமல் விரைவில் காணாமல் போய் விடுகிற அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

சரி, இது கூட அந்தக் குழந்தை தெரியாமல் ஏதோ சொல்கிறது என்று வைத்துக் கொண்டாலும், அடுத்து வந்ததுதான் எனக்கு கிட்டத்தட்ட மாரடைப்பையே கொடுத்து விட்டது!

அதாவது, நிகழ்ச்சி முடியும் போது ஒவ்வொரு குழந்தைக்கும் பரிசுகள் கொடுப்பார்கள். இந்த முறை நிகழ்ச்சி முடியும் போது, “நிகழ்ச்சியை முடித்துக் கொள்வோமா?” என்று நிகழ்ச்சி நடத்துபவர் சொன்னதும், போன பத்தியில் சொன்ன அதே குழந்தை, “பரிசு எங்கே?” என்று கேட்டது.  அவரும் விளையாட்டாக, “இன்றைக்குப் பரிசெல்லாம் கிடையாது பாப்பா. எல்லோரும் அப்படியே அவங்கவங்க வீட்டுக்குப் போக வேண்டியதுதான்”, என்றார்.

அதற்கு அந்தக் குழந்தை என்ன சொன்னது தெரியுமா?

“பரிசு கொடுக்கலைன்னா தாத்தாவை அரிவாளைத் தூக்கச் சொல்லிருவேன்!”

அட, உண்மையாகத்தான் சொல்கிறேன்! சத்தியமாக நான் கதை கட்டவில்லை! இந்த அளவிற்கெல்லாம் எனக்குக் கற்பனை வளமும் இல்லை!

நிகழ்ச்சியாளரும் அசந்து போய் விட்டார் என்று நினைக்கிறேன். “பரிசு கொடுக்கலைன்னா என்ன செய்வே?” மறுபடியும் கேட்டார்.

“தாத்தாவை அரிவாளைத் தூக்கச் சொல்லிருவேன்!”

“அப்பவும் கொடுக்கலைன்னா என்ன பண்ணுவே?”

“உங்களை மரத்துல தலை கீழா கட்டித் தொங்க விடச் சொல்லுவேன்”

அவர் இன்னும் அசந்து விட்டார்.

“நீ இப்படில்லாம் பேசினதாலயே உனக்குப் பரிசு கிடையாது”, என்று சொல்லி விட்டார்!

அது வரையில் கொஞ்சம் பரவாயில்லை.

பிறகு அந்தக் குழந்தை அவரை அருகில் வரச் சொல்லி, காதோடு, “ஏன் பரிசு தர மாட்டீங்க?” என்று கேட்டது.

அவரும், “நீ அரிவாளைத் தூக்கச் சொல்வேன்னு சொன்னேல்ல? அதுக்குதான்”, என்றார்.

“சரி நான் அப்படிச் சொல்ல மாட்டேன், பரிசு குடுங்க”, என்றது குழந்தை.

பிறகுதான் அவர் பரிசு கொடுத்தார்.

“உங்கள் குழந்தைகள் உங்களை கவனித்துக் கொண்டே இருக்கிறார்கள். கவனமாக நடந்து கொள்ளுங்கள்”, என்ற எச்சரிக்கையோடு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார்.

நிகழ்ச்சி முடிந்து விட்டாலும் மனதில் ஏறிய சுமை என்னவோ இன்னும் அப்படியேதான் இருக்கிறது :(




நன்றி: வல்லமை
படத்துக்கு நன்றி: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=9095&id1=6 (படத்தில் இருப்பது வேறு நிகழ்ச்சி)

6 comments:

  1. தொலைக்காட்சியும், குடும்பத்தாரின் பொறுப்பற்ற செயலும், குழந்தைகளின் மனநிலையை எந்தளவு சீரழித்து உள்ளது என்பதை நன்றாகவே இந்நிகழ்ச்சி சொல்கிறது... சிரிக்க வேண்டிய நிகழ்ச்சி அல்ல... அனைவரும் சிந்திக்க வேண்டிய நிகழ்ச்சி...

    ReplyDelete
  2. எதுவும் சொல்வதற்கில்லை:(!

    ReplyDelete
  3. வேதனையைப் பகிர்ந்து கொண்ட தனபாலன், ராமலக்ஷ்மி, லலிதாம்மா, அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  4. தொலைக்காட்சி மழலைகளின் மனதைக் கெடுக்கிறது. - நாம் இத்னைப் பார்த்துச் சிரித்து மகிழக் கூடாது - சிந்தித்து மழலைகளை வளர்ப்பதெப்படி என்று மேலும் மேலும் சிந்திக்க வேண்டும். நல்வாழ்த்துகள் கவிநயா - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சீனா ஐயா. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. வருகைக்கு மிக்க நன்றி.

      Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)