Sunday, March 31, 2013

கிட்ட வாயேன் நிலவே!



வட்ட வட்ட நிலவே
கிட்டக் கிட்ட வாயேன்
குட்டிப் பிள்ளை உன்னைக் கொஞ்சம்
தொட்டுப் பார்க்கத் தாயேன்!

வெள்ளித் தட்டுப் போல
வட்டமிடும் நிலவே
வானம் விட்டு என்னைக் கொஞ்சம்
வட்டமிட வாயேன்!

அம்மா சுட்ட தோசை போல
வட்டமான நிலவே
சும்மா உன்னைத் தொட்டுக் கொஞ்சம்
பிட்டு உண்ணத் தாயேன்!

மேகத் துக்குப் பின் னிருந்து
எட்டிப் பார்க்கும் நிலவே
கண்ணா மூச்சி இங்கும் உண்டு
ஆடிப் பார்ப்போம் வாயேன்!

நீரைக் கண்டால் ஓடி வந்து
எட்டிப் பார்க்கும் நிலவே
நீரென்ன உன் கண்ணாடியோ
சொல்லி விட்டுப் போயேன்!

ஊருக் கெல்லாம் ஒளி கொடுத்து
உதவு கின்ற நிலவே
உன்னைப் போல உதவும் உள்ளம்
நானும் கொள்வேன் பாரேன்!!


-கவிநயா


நன்றி: செல்லம், வல்லமை
படத்துக்கு நன்றி: http://rainydaythought.blogspot.com/2010/10/autumn-full-moon-in-yellowstone-park.html

6 comments:

  1. குட்டி நிலவை கிட்ட அழைக்கும் குட்டிப்பாப்பா கவிதை அழகு. விளையாட அழைத்து விட்டு, உன்னைப் போல் உதவும் உள்ளம் நானும் கொள்வேன் என பாப்பா சொல்வது உள்ளத்தை கொள்ளையடித்தது. மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ரசித்தமைக்கு மிக்க நன்றி பார்வதி! :)

      Delete
  2. உங்களின் உரையாடலை பலமுறை ரசித்தேன்...

    அழகு... அருமை... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. அப்படியா. மிக்க மகிழ்ச்சி, தனபாலன் :) பல முறை வாசித்து ரசித்தமைக்கு நன்றிகளும் பல!

      Delete
  3. நிலாப் பாட்டு கொஞ்சும் அழகு.
    படித்து ரசித்தேன் .
    பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராஜலக்ஷ்மி! உங்களை இந்தப் பக்கம் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி :) மிக்க நன்றி. அடிக்கடி வாருங்கள்!

      Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)