Monday, March 11, 2013

மலேஷியாவின் செல்லப் பிள்ளை - 3

சென்ற பதிவின் தொடர்ச்சி...

பகலில் எடுத்த இந்தப் படத்தில் முருகன் கொஞ்சம் தெரிகிறான் பாருங்கள்...


தண்ணீர் மலையில் இரண்டு கோவில்கள் இருக்கின்றன. ஒன்று மலை மேல் இருக்கிறது. இன்னொன்று மலையடிவாரத்தில் இருக்கிறது. வெள்ளி ரதத்தில் வரும் வேலவன் மலையடிவாரக் கோவிலில்தான் வந்து இறங்குவான்.

தண்ணீர் மலைக் கோவில்

தண்ணீர் மலைக் கோவிலில் இலவச மிதியடி பாதுகாப்பகம் இருந்தது. தொண்டர்கள்தான் எல்லா வேலைகளும் செய்கிறார்கள். கையுறை போட்டுக் கொண்டு செருப்புகளை வாங்கி வைக்கிறார்கள்.

திருவிழா சமயம் என்பதால் வழி நெடுக திடீர்க் கடைகள் முளைத்திருந்தன. (வாடகை வண்டியிலிருந்து இறங்கி வெகு தூரம் நடக்க வேண்டி இருந்தது).  பல கடைகளில் அபிஷேகத்திற்குப் பால் என்று தனியாக எழுதிப் போட்டே வைத்திருந்தார்கள்.

கிட்டத்தட்ட 500+ படிகள் இருக்கின்ற மலை மீது அமர்ந்திருக்கிறான் முருகன். பழனியாண்டவர் கோலத்தில். உயரமாக, அழகு ததும்ப, கம்பீரமாக, ஒரு கையை இடுப்பின் மேல் வைத்து, மறு கையில் தண்டத்தைப் பிடித்தபடி!

நாங்கள் போன போது அபிஷேகம் நடந்து கொண்டிருந்தபடியால், அபிஷேகப் பால் மேலே இருந்து இரண்டு பக்கங்களிலும் அருவி போலக் கொட்டியபடி இருந்தது! படிகள் அத்தனை உயரமில்லாததாலோ என்னவோ, ஏறுவது அவ்வளவாக கஷ்டமாக இல்லை. இடையிடையே சமதளமாகவும் இருக்கிறது, ஓய்வெடுக்கத் தகுந்தாற் போல. 

பாலருவி...

கோவிலில் பக்தர்களை அழகாக வரிசைப் படுத்தி விட்டிருந்தார்கள். காவடிகளுக்கு ஒரு வரிசை, அர்ச்சனை செய்வோருக்கு ஒரு வரிசை, தரிசனம் மட்டும் செய்ய வந்தோருக்கு ஒரு வரிசை, என்று… வரிசைகள் நகர்ந்து கொண்டே இருக்கிறபடியால், முருகனை அபிஷேகத்தின் போது நன்றாக தரிசனம் செய்ய முடிந்தது. அண்டா அண்டாவாகப் பாலபிஷேகம் நடந்து கொண்டிருந்தது.

கோவில் மிகச் சுத்தமாகவும், விசாலமாகவும் இருந்தது. சுற்றுப் பிரகாரத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்திருந்தார்கள். உள்ளே இன்னொரு புறத்தில் அந்தக் கோவிலின் உற்சவ மூர்த்தியை பிரமாதமாக அலங்கரித்து வைத்திருந்தார்கள். அர்ச்சனைக்காக உடைக்கப்பட்ட தேங்காய் மூடிகள் வெற்றிலை பாக்கு, பூ, விபூதியுடன் கூடை கூடையாக வைக்கப்பட்டிருந்தன. வரிசையில் பிரகாரம் வரும்போது எனக்கும் ஒரு தேங்காய் மூடி பிரசாதம் கிடைத்தது! தற்செயலாகவோ, தப்பித் தவறியோ, அந்த அர்ச்சகர் எனக்குக் கொடுத்து விட்டார் போல… ஏனென்றால் என்னோடு வந்தவர்களுக்கெல்லாம் கிடைக்கவில்லை! அதில் ஒரு சின்ன சந்தோஷம் – மற்றவர்களுக்குக் கிடைக்காததால் அல்ல, எனக்குக் கிடைத்ததால்… ஹி..ஹி.. 

வெளியில் வந்து, மறுபடியும் வரிசையில் உள்ளே சென்றோம், இன்னொரு முறை அழகனைப் பார்ப்பதற்காக… வெளிப்பிரகாரத்தில் அபிஷேகப் பாலை பக்தர்களுக்கு விநியோகித்துக் கொண்டிருந்தார்கள். தூக்குகளிலும், பாத்திரங்களிலும், டம்ளர்களிலும், பலவிதமாக அனைவரும் அதை பக்தியுடன் வாங்கி எடுத்துச் சென்றார்கள். நானும் கொஞ்சூண்டு கையில் வாங்கிப் பருகினேன். பன்னீர் மணத்துடன் பால் மிகவும் ருசியாக இருந்தது! இன்னொரு புறத்தில் கூடாரம் போட்டு, வருகிறவர்களுக்கெல்லாம் இலவசமாக நீர் மோரும், பழச் சாறும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

இப்படியாகத் தரிசனம் முடித்து விட்டு, கீழே இருக்கிற மற்ற கோவில்களுக்குப் போனோம். முருகன் கோவில் தவிர இன்னொரு சிவன் கோவிலும் இருந்தது. தைப்பூசத்திற்கென எல்லாக் கோவில்களிலுமே எல்லா சுவாமிகளையும் அற்புதமாக சிறப்பாக அலங்காரம் செய்து வைத்திருந்தார்கள்.

மலையடிவாரத்தில் இருக்கிற கோவிலிலும் பழனியாண்டிக் கோலத்தில் தான் இருக்கிறான், முருகன்.

தண்ணீர் மலைக் கோவிலில் இருந்து திரும்பி பினாங்கிற்குப் போனோம். அங்கே நாங்கள் தங்கியிருந்த இடத்திற்குப் பக்கத்தில் ஒரு சிவன் கோவில் இருக்கிறது. அங்கு தொடர்ந்து அன்னதானம் நடந்து கொண்டிருந்தது. அங்கிருந்துதான் மறு நாள் தைப்பூசத்தன்று பால் குடம் எடுத்துக் கொண்டு தண்ணீர்மலைக் கோவிலுக்குச் செல்வார்கள் என்று தெரிந்தது. அங்குதான் அன்று மதியம் சாப்பிட்டோம். அப்போதுதான் அந்தக் கோவிலிலேயே தண்ணீர் மலைக் கோவிலுக்குப் போகவும் வரவும், வண்டிகள் ஏற்பாடு செய்திருந்தார்கள் என்பது தெரிந்தது.
உடைபடக் காத்திருக்கும் தேங்காய்கள்...

நகர விடுதியில் புறப்பட்ட வெள்ளி ரதம் மதியம் இந்தக் கோவிலுக்கு வருமாம், வந்து சிறிது நேரம் இளைப்பாறி விட்டு மறுபடி புறப்படுமாம். ரதம் வரும் வழியெங்கும் ஆயிரக்கணக்கில், இல்லையில்லை, இலட்சக் கணக்கில் தேங்காய்களை உடைத்துக் கொண்டே இருக்கிறார்கள்! அப்பப்பா, அவ்வளவு தேங்காய்களை ஒரே இடத்தில் அது வரை பார்த்ததே இல்லை! எல்லோருமே, சீன மக்கள், மலேஷிய மக்கள், நம் மக்கள், எல்லோருமே தேங்காய் உடைக்கிறார்கள். வழியெல்லாம் மலை மலையாகத் தேங்காய்கள் குவித்து வைக்கப் பட்டிருந்தன. வேண்டிக் கொண்டு இப்படிச் செய்வார்களாம். ரதம் அருகில் வந்ததும், தேங்காய்களை உடைக்கிறார்கள். பின்னாடியே அரசாங்கம் ஏற்பாடு செய்திருக்கும் வண்டிகள் வந்து உடனுக்குடன் சாலையைச் சுத்தம் செய்கின்றன. இல்லையென்றால் மாடுகளால் நடக்கவும் முடியாது, ரதமும் போக முடியாது…

(அங்கிருந்த ஒருவர் சொன்னார், முருகனின் ரதம் போவதற்காக வழியை இப்படிச் சுத்தம் செய்கிறார்கள் என்று. அதாவது தேங்காய்க்குள் இருக்கும் தண்ணீர் கைபடாத நீர் அல்லவா? அதனால், அதை வைத்து முருகன் வரும் பாதையை சுத்தம் செய்கிறார்கள் என்றார்.)

அதைத் தவிர அர்ச்சனைகளும், மாலைகளும், காணிக்கைகளும் குவிந்து கொண்டே இருக்கின்றன. ரதம் கொஞ்ச தூரத்திற்கு ஒரு முறை நின்று அனைத்தையும் முருகனுக்கு அர்ப்பணித்த பின்னரே முன்னேறுகிறது. நானும் என் நாத்தனாரும் இத்தனையும் வேடிக்கை பார்த்தபடி கொஞ்ச தூரம் ரதத்தின் பின்னாலேயே சென்றோம்.

அரசு ஊழியர்கள் தேங்காய்களை உடனடியாக சுத்தம் செய்து கொண்டே வருகிறார்கள்...

வழியெல்லாம் பக்தர்களுக்காக பலரும் இலவச தண்ணீர்ப் பந்தல் அமைத்திருக்கிறார்கள். தண்ணீர், பழச்சாறு, உணவு, இப்படிப் பலவற்றையும் விநியோகம் செய்தபடி இருக்கிறார்கள்.

ரதத்திற்கு பின்னால் இன்னொரு வண்டியும் மெதுவாகப் போகிறது. முருகனுக்கு வரும் மாலைகளையும் பழங்களையும் அவனுக்குப் படைத்த பின் இந்த வண்டியில் போட்டுத்தான் கொண்டு போகிறார்கள். அத்தனையையும் ரதத்தில் எடுத்துச் செல்ல முடியாதில்லையா? நாங்கள் போன போது சில சமயம் இந்த வண்டிக்கும் பின்னால்தான் நடந்து கொண்டிருந்தோம். அப்போது ஒரு முறை அந்த வண்டியிலிருந்த ஒருவர் ஒரு அழகான பெரிய்ய மாலையை எடுத்து என்னிடம் நீட்டினார். எனக்கு ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை. “வாங்கிக்கோங்கம்மா” என்றார். அப்புறம்தான் எனக்கே உறைத்தது. “சுவாமிக்குப் போட்டதா?” என்று மகிழ்ச்சி துள்ளக் கேட்டேன், “ஆம்” என்றார். ஆஹா! முருகனின் அன்பை என்னென்பது. உள்ளமெல்லாம் மகிழ அதனை வாங்கிக் கொண்டேன்! (இதுவும் எல்லோருக்கும் கிடைக்கவில்லை, என்பதைக் கவனிக்கவும்! :)

தண்டாயுதபாணி தந்த அன்பு மாலை...

இன்னும் கொஞ்ச நேரம் கழிந்த பின், மறுபடியும் இந்த வண்டிக்குப் பின்னால் வர நேர்ந்த போது, எனக்கு ஒரு ஆரஞ்சு பழமும் கிடைத்தது! ஹோட்டலுக்குத் திரும்பிய பின் அன்று இரவு அதை எல்லோரும் பகிர்ந்து சாப்பிட்டோம். மாலையை இந்தியாவிற்கு தூக்கி, பிறகு அமெரிக்காவுக்கும் கொண்டு வந்து விட்டேன்! வாடி வதங்கிப் போய் விட்டது இப்போது; இன்னும் தூக்கிப் போட மனம் வரவில்லை…

(ஸாரி... இன்னும் கொஞ்சம் இருக்கு...)


14 comments:

  1. அரசு ஊழியர்களின் சுறுசுறுப்புக்கு, அரசுக்கு ஒரு சல்யூட்...!

    அழகான மாலை - வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. //அரசு ஊழியர்களின் சுறுசுறுப்புக்கு, அரசுக்கு ஒரு சல்யூட்...!//

      ஆமால்ல!

      //அழகான மாலை - வாழ்த்துக்கள்...//

      நன்றி தனபாலன் :)

      Delete
  2. சில நேரங்களில் இது போலத்தான் நானும் விக்கித்துப் போய் இருக்கிறேன்.

    ஷர்டி பாபா கோவில் நாசிக் அருகில் 1999 /2000 வாக்கில் சென்றிருந்தேன். சன்னிதானத்தின் வெகு அருகில் வீபூதி பிரசாதம்
    தந்து கொண்டு இருந்தார்கள். ஒரு வரிசை யில் நானும் சென்று வாங்கினேன். சிறிய வீபூதிப்பொட்டலம். திரும்பி வந்தபின்னே
    இன்னும் ஒன்று வாங்கிக்கொள்ள வேண்டும் என நினைத்தேன். திரும்பவும் க்யூவில் நின்று என் முறை வந்தபோது, கொடுப்பவர்
    சொன்னார்: நீங்கள் முன்னமேயே வாங்கிவிட்டீர்களே என்று.

    நான் மனமுடைந்தேன். அடுத்த பத்து அடிகளில் சாயியின் உருவச்சிலை அப்படியே ஷர்டி சாயியே கண்முன்னே நிற்பது போன்ற‌
    தோற்றம். அதற்கும் ஒரு க்யூ. நான் என் மனைவி வரிசையில் நின்று கொண்டு இருந்தோம். ஒவ்வொருவருக்கும் சாயி முன் நிற்கும்பொழுது
    உதிரிப்பூக்கள் சிலவற்றை அந்த பூஜாரி கொடுத்தார். நான் முன் நின்ற போது, அவர் சாயியின் கழுத்தில் இருந்த ஒரு மாலையை
    எடுத்து என் கைகளில் தந்தார்.

    என்னால் நடப்பதை நம்ப முடியவில்லை. சாயி யாரையுமே மகிழ்ச்சியுடனே தான் வந்தவரை வழியனுப்பி வைப்பார் என தெரிந்தது.

    அது போல தண்டபாணியின் மாலை உங்களுக்கு கிடைத்தது மலேஷியா மருகனின் அருள்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா, என்ன அழகான அனுபவம். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் தாத்தா. நீங்கள் சொல்வது போல் அது முருகனருள்தான். அவன் ரொம்பவே ச்வீட் :)

      Delete
  3. எத்தனை அழகாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்பதைப் படித்தபோது பெருவியப்பாக இருந்தது. உடனே 'நம்மூரில்?' என்ற எண்ணம் வருகிறதைத் தவிர்க்க முடியவில்லை(என்ன செய்ய?). 'பாலாறும் தேனாறும்' என்று படித்துத் தான் இருக்கிறேன். நிஜப் பாலருவி பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. தண்டாயுதபாணி தந்த அன்பு மாலை அழகு மாலை.பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், பார்வதி. நீங்கள் சொல்வது உண்மையே. பாலாறு இரண்டு புறங்களிலும் ஓடியது, நாங்கள் இருந்த பக்கம் மட்டுமே படம் பிடித்தேன். தொடர்ந்த வருகைக்கு நன்றி :)

      Delete
  4. அருமையான பதிவு. முருகனருள் முன்னிற்கும். தண்ணீர்மலை கோயிலுக்கு நானும் சென்றிருக்கிறேன். இயற்கை எழில் கொண்ட குறிஞ்சி நிலத்தில் முருகனுக்குப் பொருத்தமாகக் கோயில். முருகனின் மாலை உங்களுக்குக் கிடைத்தது சிறப்பு.
    தேங்கடம்பின் மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் என்று கந்தரலங்காரம் சொல்கிறது. வாழ்க. வாழ்க.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா, வாங்க ஜிரா. உங்களைப் போல முருகனடியார் வாசிக்காமல் நிறைவு பெறாது இந்தப் பதிவு. அதனால் உங்கள் வருகை கண்டு ரொம்பவே மகிழ்ச்சி :) நீங்க சொன்ன பிறகு மறுபடி ஒரு தரம் உங்க பழைய வீட்டுக்குப் போய் 'பட்டு பட்டு பட்டு பட்டு' வாசிச்சேன் :)

      Delete
  5. நானும் நேரடியா பாக்கராப்ல ஒரு பீலிங் ;அவ்வளவு அழகா எழுதறே !

    உன்னோட /சுப்புசாரோட அனுபவங்களைப்படித்ததும் எனக்கு ஏகப்பட்ட விஷயங்கள் நினைவுக்குவந்தது ;அதில் ஒன்னு :

    (முப்பது ஆண்டு முன்)மருதமலை கூட்டிப்போகச்சொல்லி கோவை அத்திம்பேரிடம்(காலை ஏழு) அடம் பிடித்தேன்; அவரோ" இன்னிக்கு பத்து மணி இண்டர்வியு இருக்கு;டைம் இல்லை"ன்னு சொல்ல
    "சீக்ரமா போயிட்டு வந்துடலாம் "ன்னு நான் சொல்ல என் தொந்தரவு தாங்க முடியாம கிளம்பிட்டார் ;தரிசனமெல்லாம் முடிஞ்சு திரும்புவதற்காக கார் சாவி தேடினால் ? அவசரத்தில் உள்ளே வச்சி லாக் !என் பிடிவாதத்தால் அத்திம்பேருக்கு இண்டர்வ்யு மிஸ் ஆயிடப்போறதேன்னு அழுகையே வந்துடுத்து.(முருகனை மனத்தில்திட்டினேன்) .இதையெல்லாம் கவனித்த ஒருவர்(??)அருகிலிருந்த படக்கடையிலிருந்து ஸ்கேல் மாதிரி ஒரு தகரத்துண்டை எடுத்துவந்து கதவில் விட்டு நெம்பும்படி சொல்ல ,
    அத்திம்பேர் அப்படியே செய்து காரைத் திறந்தபின் தகரத்தை என்னிடம் கொடுக்க அப்பத்தான் அதில் பொறித்திருந்த எழுத்தைப் படித்தேன் "ஓம் சரவணபவா"!






    ReplyDelete
    Replies
    1. வாங்க லலிதாம்மா. உங்க அனுபவத்தை வாசிக்க சிலிர்ப்பாக இருந்தது. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அம்மா.

      //எனக்கு ஏகப்பட்ட விஷயங்கள் நினைவுக்கு வந்தது//

      அடேயப்பா. அதையெல்லாம் எப்போ சொல்லப் போறீங்கம்மா? :)

      Delete
  6. உங்களின் தளம் பற்றிய சிறு விளக்கம்,
    காண:http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_15.html

    ReplyDelete
    Replies
    1. அறிமுகத்திற்கு மிக்க நன்றி அரசன்! அங்கு பின்னூட்டியிருந்தேன்...

      Delete
  7. முதலில் தேங்காய் முறி. அடுத்து கழுத்து மாலை. தமிழ் கடவுளின் பரிபூரண அருள்! வாழ்த்துகள் கவிநயா.

    பகிர்வு அருமை.

    ReplyDelete
    Replies
    1. ஆமால்ல? :) நன்றி ராமலக்ஷ்மி!

      Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)