Sunday, March 31, 2013

கிட்ட வாயேன் நிலவே!வட்ட வட்ட நிலவே
கிட்டக் கிட்ட வாயேன்
குட்டிப் பிள்ளை உன்னைக் கொஞ்சம்
தொட்டுப் பார்க்கத் தாயேன்!

வெள்ளித் தட்டுப் போல
வட்டமிடும் நிலவே
வானம் விட்டு என்னைக் கொஞ்சம்
வட்டமிட வாயேன்!

அம்மா சுட்ட தோசை போல
வட்டமான நிலவே
சும்மா உன்னைத் தொட்டுக் கொஞ்சம்
பிட்டு உண்ணத் தாயேன்!

மேகத் துக்குப் பின் னிருந்து
எட்டிப் பார்க்கும் நிலவே
கண்ணா மூச்சி இங்கும் உண்டு
ஆடிப் பார்ப்போம் வாயேன்!

நீரைக் கண்டால் ஓடி வந்து
எட்டிப் பார்க்கும் நிலவே
நீரென்ன உன் கண்ணாடியோ
சொல்லி விட்டுப் போயேன்!

ஊருக் கெல்லாம் ஒளி கொடுத்து
உதவு கின்ற நிலவே
உன்னைப் போல உதவும் உள்ளம்
நானும் கொள்வேன் பாரேன்!!


-கவிநயா


நன்றி: செல்லம், வல்லமை
படத்துக்கு நன்றி: http://rainydaythought.blogspot.com/2010/10/autumn-full-moon-in-yellowstone-park.html

Monday, March 25, 2013

அழகழகு ஆர்கிட்!


கோலாலம்பூர் ஆர்கிட் தோட்டத்து மலர்களில் சில...

மலர்களைப் போல மலர்ந்து சிரித்து மகிழ்ச்சியைப் பரப்புவோம்!

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.

அன்புடன்
கவிநயா


Monday, March 18, 2013

மலேஷியாவின் செல்லப் பிள்ளை - 4

சென்ற பதிவின் தொடர்ச்சி...

குட்டி சைனீஸ் பிள்ளைகள் தேங்காய் உடைக்கத் தயாராக...அன்று இரவு கோவிலில் இருந்து ஷட்டில் வண்டியில் மறுபடி தண்ணீர் மலைக் கோவிலுக்குப் போய் விட்டு வந்தோம். மறு நாள் காலை ஐந்தரை மணிக்கெல்லாம் பால்குடம் எடுத்துக் கொண்டு போகத் தொடங்கி விடுவார்கள் என்று தெரிந்து கொண்டு, தைப்பூசத்தன்று அதி காலையில் நானும் நாத்தனாரும் சிவன் கோவிலுக்கு வந்து விட்டோம். நாங்கள்தான் முதலில். யாருமே, அர்ச்சகர்கள் கூட வந்திருக்கவில்லை. பிறகுதான் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள். ஒரு அர்ச்சகர் ஒவ்வொரு சந்நிதியாகப் போய் அபிஷேகம் செய்தார்; இன்னொருவர் ஒவ்வொரு சந்நிதியிலும் அலங்காரம் செய்தார்.

அலங்காரம் செய்யும் அழகையே பார்த்துக் கொண்டிருக்கலாம் போல இருக்கிறது. கூட்டம் இல்லை என்பதாலோ என்னவோ, திரை போடாமலேயே அந்தக் கோவிலில் இருந்த குட்டி முருகனுக்கு அலங்காரம் செய்தார். அழகாக கண்களை எழுதி, இதழ்களை எழுதி, திலகமிட்டு, இப்படி நிமிடமாக எல்லாவற்றையும் செய்து முடித்து விட்டார்!

பால்குடங்கள்

பிறகு குடங்களை எடுத்துக் கொண்டு ஒவ்வொருவராக வந்தார்கள். பெயர் கொடுத்து, எண்ணிக்கை பார்த்து, பூஜை செய்து, அர்ச்சகரே பாலை ஊற்றித் தந்தார். பெரும்பாலும் பெண்கள்தான். வண்ண வண்ண மயமான ஆடைகளுடன் பலவித வயதுகளில் சிறுமி முதல் மூதாட்டிகள் வரை பால் குடம் எடுக்கிறார்கள்.

பால் குடங்கள் தண்ணீர் மலைக்குப் போய்ச் சேர்ந்த பின் அங்கே முருகனுக்கு அபிஷேகம் நடைபெறும். அலங்காரம், தீபாராதனையுடன், தைப்பூசக் கொண்டாட்டம் முடிவடையும்.

நாங்கள் இருவரும் பால்குடம் எடுப்பதைக் கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்து விட்டு, கொஞ்ச தூரம் பின்னால் சென்றோம். பிறகு ஹோட்டலுக்குப் போய் சப்பிட்டு விட்டு, கணவன்மார்களைக் கூட்டிக் கொண்டு மறுபடியும் ஷட்டில் பிடித்து தண்ணீர் மலைக் கோவிலுக்குச் சென்றோம். 

முருகனைச் சுமந்து கொண்டு நேற்று வந்த வெள்ளி ரதம் ஒரு அறை(?) (ஷெட்)டில் சமர்த்தாக அமர்ந்திருந்தது. இரவு இரண்டரை மணி ஆகி விட்டதாம் வருவதற்கு. இந்த அளவு தாமதமாக இது வரை வந்ததே இல்லையாம். தேங்காய் உடைப்பது அதிகமாகி விட்டதால் தாமதம் என்றார்கள். 

 வெள்ளி ரதத்தின் பக்கவாட்டில் வேலைப்பாடுகள்...

சந்நிதியில் மூலவருக்கு அருகில், அவருக்கு சரியாக முன்னால், உற்சவ மூர்த்தியை வைத்திருந்தார்கள். அதனால் இருவரையும் சில குறிப்பிட்ட கோணங்களில் மட்டும்தான் பார்க்க முடிந்தது. அதுவும், அந்த மலைக் கோவிலில் அழகாக வரிசைப் படுத்தி விட்டது போல் இங்கே செய்யாததால், முருகனின் தரிசனம் பெறுவது அத்தனை எளிதாக இல்லை. கூட்டம் அதிகமாக இருந்தது. எல்லாத் திசைகளிலும் போய் முயற்சித்த பின், ஒரே ஒருவர் இரக்கப்பட்டு, நீங்களும் பாருங்கள் என்று இடம் கொடுத்தார். அங்கே போய் நாங்கள் ஒவ்வொருவராக அபிஷேகத்தைப் பார்த்தோம்.

அலங்காரம் முடிய நேரம் ஆகும் என்று தெரிந்தது. மதியம் மறுபடியும் கோலாலம்பூர் செல்லும் பேருந்தைப் பிடிக்க வேண்டியிருந்தது. அதனால் அங்கிருந்த அன்னதான வரிசையில் சென்று நின்று கொண்டோம். தீபம் பார்க்காமல் சாப்பிடப் போகிறோமே என்று கொஞ்சம் உறுத்தலாக இருந்தது. தகரத்தில் மூடி மிகப் பெரிய கொட்டகை போட்டிருந்தார்கள். ஒரே சமயத்தில் 700 பேர் சாப்பிடும் படி மேசை நாற்காலிகள் போட்டிருந்தார்கள். ஒரு பந்தி (700) முடிக்க 20 நிமிடங்கள் என்று கணக்கு. சரியாக 700 பேர்களை உள்ளே விட்டார்கள். குறைந்தது 3 அல்லது 4 மணி நேரம் வரை பந்தி நடக்குமாம். எக்கச்சக்க தொண்டர்கள், குட்டிப் பிள்ளைகள் எல்லோரும் பரிமாற, உதவி செய்யத் தயாராக இருந்தார்கள். மின் விசிறிகள் போடப்பட்டிருந்தன. டி.வி. மானிட்டர்கள் ஆங்காங்கே முருகனின் கர்ப்பக்கிருகம் தெரிகிற மாதிரி அமைக்கப்பட்டிருந்தன.

தண்டாயுதபாணிக்கு அலங்காரம் முடிந்து தீபம் காண்பித்த பின்னர், அன்ன பதார்த்தங்களுக்கு தீபம் காண்பிக்கப்பட்டு, பிறகே தொடங்குவார்களாம். இதனால் நாங்கள் உள்ளே சென்று ரொம்ப நேரம் சும்மா உட்கார்ந்திருந்தோம். அலங்காரம் முடிந்த பின் தீபத்தை டி.வி. மானிட்டர்களிலேயே பார்த்தோம். தீபம் பார்க்காமல் போகிறோமே என்ற குறையைக் குமரன் இப்படியாகத் தீர்த்து வைத்தான்!

அன்னதானம் அமர்க்களமாக இருந்தது, பருப்பு நெய் முதல் பாயசம் வரையில் ஒன்று விடாமல் செய்து விருந்து படைத்தார்கள். சாப்பிட்டு முடிந்த பின் மறுபடியும் வந்து முருகனைப் பார்த்து விட்டு பினாங்கிலிருந்து கிளம்பி, கோலாலம்பூருக்கு இரவு வந்து சேர்ந்தோம்.

மறுநாள் காலையில் தான் ‘பத்து மலை’ முருகனைப் போய்ப் பார்த்தோம். முதல் நாள்தான் தைப்பூசம் முடிந்திருந்த படியால் அதன் பாதிப்பு எல்லா இடங்களிலும் தெரிந்தது – குப்பைகள், மலையாகக் குவிந்திருந்த செருப்புகள், இப்படி. பிரபலமான அந்தப் பெரீய்ய முருகன் முன்னால் நின்று கொண்டிருந்தான். 

பத்து மலை முருகன்

பத்து மலைப் படிகள் குறுகலாகவும் உயரமாகவும் இருந்தன. அதனால் ஏறுவது கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது, தண்ணீர் மலையைக் காட்டிலும். ஒரு பெண்மணி வேண்டுதலுக்காக முழங்கால்களால் படி ஏறினார். குரங்குகள் வேறு அதிகம் இருந்தன. கோலாலம்பூரில் அடிக்கடி மழை பெய்து கொண்டே இருந்தது. அதுவும் அடை மழை! அதனால் பத்து மலைக் குகைக்குள்ளும் ஆங்காங்கே தேங்கிய தண்ணீர். மிதியடிகளைப் போட்டுக் கொண்டேதான் மேலே போனோம். தனியாக விட இடம் இல்லை. பலரும் அர்ச்சனைக்குப் பொருட்கள் வாங்கி விட்டு அங்கேயே விட்டுச் சென்றார்கள். கூட்டத்தைப் பார்த்து, நாங்கள் அர்ச்சனைக்கெல்லாம் வாங்கவில்லை.  அங்கிருந்த பையன், “வாங்கணும்னு இல்லை, இப்படியே போட்டுட்டுப் போங்க” என்றான். 

பத்து மலைக் குகை வாயில்                    பத்து மலைக் குகைக்குள்ளே...

அன்றைக்கு மதியம் செம்பருத்தி தோட்டமும், ‘ஆர்கிட்’ தோட்டம் பார்த்தோம். இன்னும் சில பார்க்க வேண்டிய இடங்கள் இருக்கின்றன என்றார்கள், ஆனால் நேரமின்மையின் காரணமாக போக முடியவில்லை.

அன்றைக்கு மாலை தோழியின் மகளுடைய திருமண வரவேற்புக்குப் போய் விட்டு, மறு நாள் காலை சென்னை!

நடுவில் சைனா டவுனுக்குப் போய் கொஞ்சம் ஷாப்பிங் பண்ணினோம். அங்கே நன்றாக பேரம் பேசலாம் என்று சொன்னதால். ஆனால் அப்படி ஒன்றும் பேரம் பேச முடியவில்லை. ஒரு அளவிற்கு மேல் குறைக்கவே இல்லை. வேண்டாம் என்று வந்து விட்டால், “சரிதான் போய்க்கோ”, என்று விட்டு விடுகிறார்கள். பின்னாடியே வந்தெல்லாம் கெஞ்சவில்லை! 


 ஆர்கிட் தோட்டத்திலிருந்து சில மலர்கள்...

மலேஷியா போகிறோம் என்றவுடனேயே என் தங்கை அங்கே அருமையான தோசைக் கல் கிடைக்கிறதாம், வாங்கிக் கொண்டு வா என்று சொல்லியிருந்தாள். கடை பெயரெல்லாம் கூட (ரமணி ஸ்டோர்ஸ்!) விசாரித்துச் சொல்லி விட்டாள்! அந்தக் கடையைத் தேடிப் பிடித்துப் போனால், அவள் சொன்னது போல் இல்லை. ஆனால் இரும்பிலேயே இலேசான கல் இருந்தது. அந்தக் கடையிலிருந்த பையன், ‘ஏன்க்கா, இங்கே இருக்கறதெல்லாம்  நம்மூர்ல இருந்துதான் வருது; நீங்க என்னடான்னா அங்கேருந்து இங்கே வந்து, அதையே வாங்கிட்டுப் போறீங்களே!” என்றான் :) கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்த போது, “எப்படா ஊருக்குப் போவோம்னு இருக்குக்கா”, என்றான். அதைக் கேட்ட போது வருத்தமாக இருந்தது :( அந்தப் பையனின் கனவுகள், கடமைகள் சீக்கிரம் நிறைவேறி அவன் ஊர் திரும்ப முருகன் அருளட்டும்.

தண்டாயுதபாணியின் திருவடிகள் சரணம். தண்டாயுதபாணியின் மேலான ஒரு பாடலை இங்கே கேட்கலாம்... எழுதும்படி ஊக்குவித்து, பிறகு பாடியும் இட்ட சுப்பு தாத்தாவிற்கு மிக்க நன்றி!

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!

முற்றும்.
(யாருப்பா அங்கே அப்பாடா’ன்னு சொன்னது?! :)

Monday, March 11, 2013

மலேஷியாவின் செல்லப் பிள்ளை - 3

சென்ற பதிவின் தொடர்ச்சி...

பகலில் எடுத்த இந்தப் படத்தில் முருகன் கொஞ்சம் தெரிகிறான் பாருங்கள்...


தண்ணீர் மலையில் இரண்டு கோவில்கள் இருக்கின்றன. ஒன்று மலை மேல் இருக்கிறது. இன்னொன்று மலையடிவாரத்தில் இருக்கிறது. வெள்ளி ரதத்தில் வரும் வேலவன் மலையடிவாரக் கோவிலில்தான் வந்து இறங்குவான்.

தண்ணீர் மலைக் கோவில்

தண்ணீர் மலைக் கோவிலில் இலவச மிதியடி பாதுகாப்பகம் இருந்தது. தொண்டர்கள்தான் எல்லா வேலைகளும் செய்கிறார்கள். கையுறை போட்டுக் கொண்டு செருப்புகளை வாங்கி வைக்கிறார்கள்.

திருவிழா சமயம் என்பதால் வழி நெடுக திடீர்க் கடைகள் முளைத்திருந்தன. (வாடகை வண்டியிலிருந்து இறங்கி வெகு தூரம் நடக்க வேண்டி இருந்தது).  பல கடைகளில் அபிஷேகத்திற்குப் பால் என்று தனியாக எழுதிப் போட்டே வைத்திருந்தார்கள்.

கிட்டத்தட்ட 500+ படிகள் இருக்கின்ற மலை மீது அமர்ந்திருக்கிறான் முருகன். பழனியாண்டவர் கோலத்தில். உயரமாக, அழகு ததும்ப, கம்பீரமாக, ஒரு கையை இடுப்பின் மேல் வைத்து, மறு கையில் தண்டத்தைப் பிடித்தபடி!

நாங்கள் போன போது அபிஷேகம் நடந்து கொண்டிருந்தபடியால், அபிஷேகப் பால் மேலே இருந்து இரண்டு பக்கங்களிலும் அருவி போலக் கொட்டியபடி இருந்தது! படிகள் அத்தனை உயரமில்லாததாலோ என்னவோ, ஏறுவது அவ்வளவாக கஷ்டமாக இல்லை. இடையிடையே சமதளமாகவும் இருக்கிறது, ஓய்வெடுக்கத் தகுந்தாற் போல. 

பாலருவி...

கோவிலில் பக்தர்களை அழகாக வரிசைப் படுத்தி விட்டிருந்தார்கள். காவடிகளுக்கு ஒரு வரிசை, அர்ச்சனை செய்வோருக்கு ஒரு வரிசை, தரிசனம் மட்டும் செய்ய வந்தோருக்கு ஒரு வரிசை, என்று… வரிசைகள் நகர்ந்து கொண்டே இருக்கிறபடியால், முருகனை அபிஷேகத்தின் போது நன்றாக தரிசனம் செய்ய முடிந்தது. அண்டா அண்டாவாகப் பாலபிஷேகம் நடந்து கொண்டிருந்தது.

கோவில் மிகச் சுத்தமாகவும், விசாலமாகவும் இருந்தது. சுற்றுப் பிரகாரத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்திருந்தார்கள். உள்ளே இன்னொரு புறத்தில் அந்தக் கோவிலின் உற்சவ மூர்த்தியை பிரமாதமாக அலங்கரித்து வைத்திருந்தார்கள். அர்ச்சனைக்காக உடைக்கப்பட்ட தேங்காய் மூடிகள் வெற்றிலை பாக்கு, பூ, விபூதியுடன் கூடை கூடையாக வைக்கப்பட்டிருந்தன. வரிசையில் பிரகாரம் வரும்போது எனக்கும் ஒரு தேங்காய் மூடி பிரசாதம் கிடைத்தது! தற்செயலாகவோ, தப்பித் தவறியோ, அந்த அர்ச்சகர் எனக்குக் கொடுத்து விட்டார் போல… ஏனென்றால் என்னோடு வந்தவர்களுக்கெல்லாம் கிடைக்கவில்லை! அதில் ஒரு சின்ன சந்தோஷம் – மற்றவர்களுக்குக் கிடைக்காததால் அல்ல, எனக்குக் கிடைத்ததால்… ஹி..ஹி.. 

வெளியில் வந்து, மறுபடியும் வரிசையில் உள்ளே சென்றோம், இன்னொரு முறை அழகனைப் பார்ப்பதற்காக… வெளிப்பிரகாரத்தில் அபிஷேகப் பாலை பக்தர்களுக்கு விநியோகித்துக் கொண்டிருந்தார்கள். தூக்குகளிலும், பாத்திரங்களிலும், டம்ளர்களிலும், பலவிதமாக அனைவரும் அதை பக்தியுடன் வாங்கி எடுத்துச் சென்றார்கள். நானும் கொஞ்சூண்டு கையில் வாங்கிப் பருகினேன். பன்னீர் மணத்துடன் பால் மிகவும் ருசியாக இருந்தது! இன்னொரு புறத்தில் கூடாரம் போட்டு, வருகிறவர்களுக்கெல்லாம் இலவசமாக நீர் மோரும், பழச் சாறும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

இப்படியாகத் தரிசனம் முடித்து விட்டு, கீழே இருக்கிற மற்ற கோவில்களுக்குப் போனோம். முருகன் கோவில் தவிர இன்னொரு சிவன் கோவிலும் இருந்தது. தைப்பூசத்திற்கென எல்லாக் கோவில்களிலுமே எல்லா சுவாமிகளையும் அற்புதமாக சிறப்பாக அலங்காரம் செய்து வைத்திருந்தார்கள்.

மலையடிவாரத்தில் இருக்கிற கோவிலிலும் பழனியாண்டிக் கோலத்தில் தான் இருக்கிறான், முருகன்.

தண்ணீர் மலைக் கோவிலில் இருந்து திரும்பி பினாங்கிற்குப் போனோம். அங்கே நாங்கள் தங்கியிருந்த இடத்திற்குப் பக்கத்தில் ஒரு சிவன் கோவில் இருக்கிறது. அங்கு தொடர்ந்து அன்னதானம் நடந்து கொண்டிருந்தது. அங்கிருந்துதான் மறு நாள் தைப்பூசத்தன்று பால் குடம் எடுத்துக் கொண்டு தண்ணீர்மலைக் கோவிலுக்குச் செல்வார்கள் என்று தெரிந்தது. அங்குதான் அன்று மதியம் சாப்பிட்டோம். அப்போதுதான் அந்தக் கோவிலிலேயே தண்ணீர் மலைக் கோவிலுக்குப் போகவும் வரவும், வண்டிகள் ஏற்பாடு செய்திருந்தார்கள் என்பது தெரிந்தது.
உடைபடக் காத்திருக்கும் தேங்காய்கள்...

நகர விடுதியில் புறப்பட்ட வெள்ளி ரதம் மதியம் இந்தக் கோவிலுக்கு வருமாம், வந்து சிறிது நேரம் இளைப்பாறி விட்டு மறுபடி புறப்படுமாம். ரதம் வரும் வழியெங்கும் ஆயிரக்கணக்கில், இல்லையில்லை, இலட்சக் கணக்கில் தேங்காய்களை உடைத்துக் கொண்டே இருக்கிறார்கள்! அப்பப்பா, அவ்வளவு தேங்காய்களை ஒரே இடத்தில் அது வரை பார்த்ததே இல்லை! எல்லோருமே, சீன மக்கள், மலேஷிய மக்கள், நம் மக்கள், எல்லோருமே தேங்காய் உடைக்கிறார்கள். வழியெல்லாம் மலை மலையாகத் தேங்காய்கள் குவித்து வைக்கப் பட்டிருந்தன. வேண்டிக் கொண்டு இப்படிச் செய்வார்களாம். ரதம் அருகில் வந்ததும், தேங்காய்களை உடைக்கிறார்கள். பின்னாடியே அரசாங்கம் ஏற்பாடு செய்திருக்கும் வண்டிகள் வந்து உடனுக்குடன் சாலையைச் சுத்தம் செய்கின்றன. இல்லையென்றால் மாடுகளால் நடக்கவும் முடியாது, ரதமும் போக முடியாது…

(அங்கிருந்த ஒருவர் சொன்னார், முருகனின் ரதம் போவதற்காக வழியை இப்படிச் சுத்தம் செய்கிறார்கள் என்று. அதாவது தேங்காய்க்குள் இருக்கும் தண்ணீர் கைபடாத நீர் அல்லவா? அதனால், அதை வைத்து முருகன் வரும் பாதையை சுத்தம் செய்கிறார்கள் என்றார்.)

அதைத் தவிர அர்ச்சனைகளும், மாலைகளும், காணிக்கைகளும் குவிந்து கொண்டே இருக்கின்றன. ரதம் கொஞ்ச தூரத்திற்கு ஒரு முறை நின்று அனைத்தையும் முருகனுக்கு அர்ப்பணித்த பின்னரே முன்னேறுகிறது. நானும் என் நாத்தனாரும் இத்தனையும் வேடிக்கை பார்த்தபடி கொஞ்ச தூரம் ரதத்தின் பின்னாலேயே சென்றோம்.

அரசு ஊழியர்கள் தேங்காய்களை உடனடியாக சுத்தம் செய்து கொண்டே வருகிறார்கள்...

வழியெல்லாம் பக்தர்களுக்காக பலரும் இலவச தண்ணீர்ப் பந்தல் அமைத்திருக்கிறார்கள். தண்ணீர், பழச்சாறு, உணவு, இப்படிப் பலவற்றையும் விநியோகம் செய்தபடி இருக்கிறார்கள்.

ரதத்திற்கு பின்னால் இன்னொரு வண்டியும் மெதுவாகப் போகிறது. முருகனுக்கு வரும் மாலைகளையும் பழங்களையும் அவனுக்குப் படைத்த பின் இந்த வண்டியில் போட்டுத்தான் கொண்டு போகிறார்கள். அத்தனையையும் ரதத்தில் எடுத்துச் செல்ல முடியாதில்லையா? நாங்கள் போன போது சில சமயம் இந்த வண்டிக்கும் பின்னால்தான் நடந்து கொண்டிருந்தோம். அப்போது ஒரு முறை அந்த வண்டியிலிருந்த ஒருவர் ஒரு அழகான பெரிய்ய மாலையை எடுத்து என்னிடம் நீட்டினார். எனக்கு ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை. “வாங்கிக்கோங்கம்மா” என்றார். அப்புறம்தான் எனக்கே உறைத்தது. “சுவாமிக்குப் போட்டதா?” என்று மகிழ்ச்சி துள்ளக் கேட்டேன், “ஆம்” என்றார். ஆஹா! முருகனின் அன்பை என்னென்பது. உள்ளமெல்லாம் மகிழ அதனை வாங்கிக் கொண்டேன்! (இதுவும் எல்லோருக்கும் கிடைக்கவில்லை, என்பதைக் கவனிக்கவும்! :)

தண்டாயுதபாணி தந்த அன்பு மாலை...

இன்னும் கொஞ்ச நேரம் கழிந்த பின், மறுபடியும் இந்த வண்டிக்குப் பின்னால் வர நேர்ந்த போது, எனக்கு ஒரு ஆரஞ்சு பழமும் கிடைத்தது! ஹோட்டலுக்குத் திரும்பிய பின் அன்று இரவு அதை எல்லோரும் பகிர்ந்து சாப்பிட்டோம். மாலையை இந்தியாவிற்கு தூக்கி, பிறகு அமெரிக்காவுக்கும் கொண்டு வந்து விட்டேன்! வாடி வதங்கிப் போய் விட்டது இப்போது; இன்னும் தூக்கிப் போட மனம் வரவில்லை…

(ஸாரி... இன்னும் கொஞ்சம் இருக்கு...)


Sunday, March 3, 2013

மலேஷியாவின் செல்லப் பிள்ளை - 2

சென்ற பதிவின் தொடர்ச்சி...


மலேஷியாவின் செல்லப் பிள்ளை யாரென்று இந்நேரம் ஊகித்திருப்பீர்கள். நம்முடைய சொத்தும் சொந்தமுமான சிவசக்தி பாலன், நம் செல்லம் முருகனேதான் மலேஷியாவிற்கும் செல்லப் பிள்ளையாக இருக்கிறான். தைப்பூசம் சமயத்தில் அந்த 4 நாட்களில் மலேஷியாவையே ஒரு கலக்குக் கலக்கி விடுகிறான்! நாடே ‘ஜே, ஜே’ என்று இருக்கிறது; மக்கள் கூடும் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குத் ‘தடா’ போட்டு விடுகிறார்கள். எல்லா இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது. நம் மக்கள் மட்டுமின்றி, சீன மக்கள், மலேஷிய மக்கள், எல்லோருமே முருகனை மிகப் பக்தியுடன் வணங்குகிறார்கள்!

மலேஷியாவில் தைப்பூசம் இரண்டு இடங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஒன்று, கோலாலம்பூரில் உள்ள, எல்லோருக்கும் தெரிந்த பத்து மலையில்… அல்லது Batu caves-ல். இங்கு தைப்பூசத்திற்கு லட்சக்கணக்கில் மக்கள் கூடுகிறார்கள். இன்னொரு இடம் பினாங்கில் உள்ள தண்ணீர் மலையில்… இங்கு பலப்பல வருடங்களாக நகரத்தார்கள் தைப்பூசத் திருவிழாவைச் சிறப்பாக நடத்தி வருகிறார்கள். இங்கும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள். நாங்கள் சென்றது இந்த தண்ணீர் மலைக்குத்தான்.

 தம்பிக்கு முன்னால் சென்ற வினை தீர்க்கும் விநாயகர்

பினாங்கில் நாங்கள் பேருந்தில் சென்று இறங்கிய போது இரவாகி விட்டது. மறு நாள் அதிகாலையில் வெள்ளி ரதம் நகரத்தார் விடுதியிலிருந்து கிளம்ப இருந்தது.  அதில்தான் முருகக் கடவுள் உற்சவ மூர்த்தியாக எழுந்தருளி, தண்ணீர் மலையில் உள்ள கோவிலுக்குப் போவார். அன்றைக்கு இரவு பத்தரை மணி வரை விடுதி திறந்திருக்கும் என்றும், அதற்குள் போனால் உற்சவ மூர்த்தியைத் தரிசிக்கலாம் என்றும் கேள்விப்பட்டு, போய் இறங்கின உடனேயே அவசரமாக விடுதிக்குப் போனோம். ஆனால் பத்து மணிக்கெல்லாம் கதவை மூடி விட்டார்கள் :( அதனால் முருகனைப் பார்க்க முடியவில்லை.

அதன் பிறகுதான் அத்தனை நேரத்திற்குப் பிறகு எங்கே போய்ச் சாப்பிடுவது என்று யோசித்தோம். அப்போது விடுதியிலேயே அன்னதானம் நடந்து கொண்டிருந்த படியால், அங்கிருந்த ஒருவர், நீங்கள் இங்கேயே சாப்பிடலாமே என்றார்.

(சொல்ல மறந்து விட்டேனே… மலேஷியாவில் சைவ உணவு கிடைப்பது அரிதாக இருக்கிறது. எங்கே போனாலும் சோயாவைத்தான் (soy) சைவ சிக்கன், சைவ மீன் என்று சொல்லி ஆனால் அசைவம் சமைக்கும் அதே முறையில் சமைத்துத் தருகிறார்கள். ஒரு தரம் சாப்பிட்டதோடு சரி, பிறகு இறங்க மாட்டேனென்று விட்டது! நல்ல வேளை அன்னதானமும், சரவணபவனும், உட்லண்ட்ஸும் இருந்ததால் பிழைத்தோம்!)

சந்தோஷமாக காரசாரமான வற்றல் குழம்பும் கூட்டும் வைத்து திருப்தியாக சோறு சாப்பிட்டோம். தேவாமிர்தமாக இருந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமா!

மறுநாள் (தைப்பூசத்திற்கு முதல் நாள்) காலை ஆறரை மணிக்கு வெள்ளி ரதம் புறப்படுவதாக இருந்தது. அதனால் ஹோட்டலுக்குப் போய் உறங்கி எழுந்து, குளித்து, அதிகாலை ஐந்தரை மணிக்கெல்லாம் திரும்பவும் அதே இடத்திற்கு வந்து விட்டோம்.

கிட்டத்தட்ட ஐம்பது, அறுபது காவடிகள் ஏற்கனவே அங்கே இருந்தன. இருள் பிரியாத அந்த நேரத்திலும் கூட்டம் எக்கச்சக்கமாக இருந்தது. வெள்ளி ரதத்தில் முருகன் ஏறியதைக், கூட்டத்தில் இடித்துக் கொண்டு பார்த்தோம். ஏறிய பிறகு அவனுக்கு அர்ச்சனை, தீபாராதானைகள் நடந்தன. நிறையப் பேர் பெரிய பெரிய தாம்பாளங்களில் மாலைகளும், பட்டாடைகளும், பழங்களும் வைத்துக் கொண்டு வருகிறார்கள். அந்தக் கூட்டத்திலும் ஒருவரையும் விடாமல், அனைவருக்கும், தேங்காய் உடைத்து, அதிலேயே கற்பூரம் வைத்து தீபமிட்டு, விபூதி பிரசாதம் கொடுத்து விடுகிறார்கள். காவடிகள் எல்லோரும் பூஜையை முடித்துக் கொண்டு முன்னால் சென்று விட்டார்கள். 

 காவடிகள்

அண்ணன் கணேசனும் ஒரு குட்டி வண்டியில் எழுந்தருளியிருந்தார். அவர் முன்னால் போக, தம்பி முருகன், பின்னால் சென்றார். வெள்ளி ரதத்தில் முருகன், அர்ச்சகர் தவிர, கிட்டத்தட்ட 10 பேர்கள் இருந்திருப்பார்கள். இரண்டு பெரிய மாடுகள் அந்த ரதத்தை இழுத்துச் சென்றன. பக்தர்கள் அவைகளுக்கும் சாப்பிட ஏதாவது கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். இருந்தாலும், பாவம்தான் அந்த மாடுகள். வெயிலில், பத்தடிக்கு ஒரு முறை நின்று நின்று இழுத்துச் செல்ல வேண்டும். எங்களுக்குத் தெரிந்தே மாலைக்குள் 3 முறை மாடுகளை மாற்றினார்கள். அதற்குப் பிறகும் மாற்றியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அந்த வரை பரவாயில்லை. முருகனிடம் அந்த மாடுகளுக்காகத்தான் முதலில் வேண்டிக் கொண்டேன். ஆனால் அவை செய்த புண்ணியம்தான் என்னே! என்றும் நினைத்துக் கொண்டேன்…. முருகன் இங்கிருந்து தண்ணீர் மலை போய்ச் சேர நள்ளிரவாகி விடும் என்று பேசிக் கொண்டார்கள்.

வெள்ளி ரதம் மிக அழகாக இருந்தது. உள்ளே இருந்த வேலனோ அதை விட அழகாக இருந்தான். புருவம் தீட்டி, பொட்டிட்டு, செவ்விதழில் புன்னகை மிளிர, வண்ண வண்ண மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, பலவிதமாக நகைகள் அணிந்து, சொல்ல முடியாத அழகுடன் ஜொலித்துக் கொண்டிருந்தான். அவனைக் கஷ்டப்பட்டு அவ்வப்போது மின்னல் கீற்று மாதிரிதான் பார்க்க முடிந்தது, கூட்டம் அதிகம் இருந்தபடியால். நானும் என் நாத்தனாரும் எப்படியோ முண்டியடித்து ரதத்திற்கு அருகில் சென்று விட்டோம். எங்கள் இருவரின் கணவர்களும் பின் தங்கி விட்டார்கள். அவர்களிடம்தான் தொலைபேசி இருந்தது. எங்களிடம் தொலைபேசியும் இல்லை; தொலைந்து போனால் திரும்பிப் போகப் பணங்காசும் இல்லை! இதற்கெல்லாம் சேர்த்து திட்டு வாங்கிக் கொண்டே முருகனைத் தரிசித்தோம்.

அதிகாலையில் வெள்ளி ரதம்

ரதத்திற்கு பின்னேயே நடந்து போக ஆசையாகத்தான் இருந்தது, ஆனால் பிறகு கோவிலுக்குப் போக நேரம் இருக்காதென்பதால், கொஞ்ச தூரம் மட்டும் ரதத்தோடு போய்  விட்டு, திரும்பி விட்டோம். திரும்பி வந்து வாடகை வண்டி எடுத்துக் கொண்டு தண்ணீர் மலை முருகன் கோவிலுக்குப் போனோம்.

(தொடரும்...)