Sunday, February 3, 2013

திருச்சி ஐயப்பன் கோயில்

நலம். நலமறிய ஆவல் :) ஊருக்குப் போயிட்டு வந்தாச்! இரண்டு திருமணங்கள், மலேஷியாவில் தைப்பூசத் திருவிழா. இப்படியாக, போன இடமெல்லாம் ஒரே மக்கள் கூட்டம்தான்! பல வருடங்களாகப் பார்க்காத உறவினர் பலரையும் பார்த்தேன். நாள் தவறாம ஏதாவது ஒரு கோயிலுக்காவது போனேன். ரொம்பச் சுருக்கமா இருந்தாலும், இறையருளால் நிறைவான பயணமாக அமைந்தது.
 
தங்கையுடன் திருச்சியில் உள்ள ஒரு உறவினர் வீட்டுக்குப் போன போது அங்கே இருக்கிற ஐயப்பன் கோவிலுக்குப் போயிருந்தேன். (கீதாம்மா அடிக்க வராதீங்க! அரை நாள்தான் இருந்தது!) பல வருஷங்களா இருக்காம், அந்தக் கோயில். ஆனால் இப்போதான் எனக்கு அங்கே போக வாய்ப்பு கிடைச்சது. ஊரில் கல்யாணத்திற்குப் போயிருந்த போது, உறவினர் சிலர், இது அவசியம் பார்க்க வேண்டிய கோயில் என்று வலியுறுத்தி அனுப்பினாங்க. அவங்க சொன்னது உண்மைதான். அந்த மாதிரி ஒரு கோயிலை நம்மூர்ல பார்க்கிறது அபூர்வம்தான்.

மரங்களும், செடி கொடிகளுமா, ஏதோ ஒரு பூந்தோட்டத்துக்குள் கோயில் அமைத்தது போல இருக்கு. ரொம்பச் சுத்தமா இருக்கு. அமைதியா இருக்கு. உள்ளே வர்ற எல்லோருமே அமைதி காப்பது மிகப் பெரிய விஷயம். உண்டியல் கிடையாது, ஆனா நன்கொடை கொடுத்தா வாங்கிக்கறாங்க. ஒரு ஐயப்பன் சேவா சங்கத்தினரால் நடத்தப்படற கோவிலாம். அந்தந்த நேரத்துக்கு சரியா பூஜைகளை முடிச்சிடுவாங்களாம். நாம ஏதாவது பூஜைக்கு பணம் கட்டிட்டு, நாம வரதுக்குக் கொஞ்சம் தாமதமாயிடுச்சுன்னாலும், நமக்காகக் காத்திருக்க மாட்டாங்களாம்; நேரத்துக்கு ஆரம்பிச்சிடுவாங்களாம்.

கோயில் முழுக்க நிறைய பயனுள்ள வாசகங்களையும், செய்திகளையும், குட்டிக் கதைகளையும் எழுதிப் போட்டிருக்காங்க. எல்லாத்தையும் வாசிக்க எங்களுக்கு நேரம் இருக்கலை. சபரிமலைக்குப் போறவங்க இருக்க வேண்டிய விரத விதிகளையும் விரிவா எழுதிப் போட்டிருக்காங்க. 


அங்கே படிச்ச ஒரே ஒரு குட்டிக் கதையை நினைவிலிருந்து சொல்றேன்…

ஒரு முறை ஒரு முனிவர் (பேர் மறந்துட்டேன்) அன்னை பராசக்தியைப் பார்க்கப் போனாராம். அப்போ, அவளுடைய பாதங்களே தெரியாத அளவிற்கு மலை மாதிரி அழகழகான அபூர்வமான மலர்கள் அவள் பாதங்கள் மேலே குவிஞ்சிருந்ததாம். அதைப் பார்த்ததும் அசந்தே போயிட்டாராம், அந்த முனிவர்.

“என்னம்மா இது? இவ்வளவு அரிய, அழகான மலர்களால் உனக்குப் பூஜை செய்தது யாரு? நீ ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாயே?”ன்னு கேட்டாராம்.

“இந்தப் பூஜையால் நான் எந்த அளவு மகிழ்ச்சி அடைஞ்சிருக்கேன்னு உனக்குத் தெரியணும்னா, இந்த மலர்களை கொஞ்சம் விலக்கிப் பாரு”ன்னு சொன்னாளாம், அம்மா.

முனிவரும் மலர்களை விலக்கி அவள் பாதங்களைப் பார்த்தாராம். பார்த்தவருக்கு ரொம்ப அதிர்ச்சியாயிடுச்சாம்! ஏன்னா, அம்மாவுடைய பாதங்கள் முழுக்க சின்னச் சின்னதா கொப்புளங்கள் ஏற்பட்டிருந்ததாம்.

“அம்மா, உனக்கா இந்த நிலைமை? ஏன் இப்படி ஆச்சு?”ன்னு பதறிப் போய் கேட்டாராம்.

“இந்த மலர்களால் என்னை அர்ச்சித்தவன் இந்திரன். என் மேல் உள்ள அன்பினால் இந்த அர்ச்சனையை அவன் செய்யவில்லை; ஒவ்வொரு மலரால் அர்ச்சிக்கும்போதும் சுயநலத்துடன் ஒவ்வொரு வேண்டுதல் வைத்திருந்தான். அதனால் என் பாதங்கள் இப்படி ஆகி விட்டன”, என்றாளாம் அம்மா.

யாராக இருந்தாலும் பலன் எதிர்பாராத அன்பே செலுத்தணும்; முக்கியமா இறைவனிடம். அப்படிப்பட்ட தூய்மையான அன்பே இறைவன் விரும்புவது என்பதை இந்தக் கதை அழகாக உணர்த்துகிறது.

நாங்க போனது சரியாக உச்சிக்காலம் ஆகிற சமயம். உச்சிக்காலம் முடிஞ்சு வெளியே வரும்போது, குட்டிக் குட்டி எவர்சில்வர் தட்டுகளில் சுடச் சுட சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் வச்சுத் தந்தாங்க. சாப்பிட்டு முடிச்சதும் கழுவறதுக்கு, தண்ணீர்க் குழாய்கள் இருக்கு; பக்கத்தில் சோப்புத் தண்ணீரும் இருக்கு. சோப்புப் போட்டுக் கழுவி அங்கேயே இருக்கிற shelf-ல எல்லோரும் கவிழ்த்து வெச்சிடறாங்க! எவ்வளவு நல்ல system பாருங்க! இங்கேல்லாம் கூட இப்படிச் செய்யறதில்லை. எத்தனையோ disposables தான் பயன்படுத்தி, இயற்கையை நாசம் பண்ணிக்கிட்டு இருக்கோம் :( கத்துக்க வேண்டியதும், மாற்றிக்க வேண்டியதும், எவ்வளவோ இருக்கு!

நீங்களும் வாய்ப்பு கிடைச்சா இந்தக் கோயிலுக்கு போயிட்டு வாங்க!

எல்லோரும் நல்லாருக்கணும்!

அன்புடன்
கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.madurawelcome.com/tiruchirapalli/trichy_placesofinterest.htm 


13 comments:

  1. அடுத்தமுறை திருச்சி செல்லும் போது அங்கு செல்ல வேண்டும்.... நன்றி...

    நல்ல சுயநலக்கதை...

    ReplyDelete
    Replies
    1. அவசியம் போய் வாருங்கள் :) நன்றி திரு.தனபாலன்!

      Delete
  2. நல்ல பகிர்வு. பயணம் நன்றாக அமைந்திருந்தது அறிந்து மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு பதில் கிடையாதா:)?

      Delete
    2. அச்சோ! soooo sorry ராமலக்ஷ்மி :( எப்படியோ விட்டுப் போய் விட்டது. மன்னிச்சுக்கோங்க ப்ளீஸ். பல வேலைகளுக்கிடையிலும் நீங்கள் வருகை தருவது எனக்கு எப்போதுமே மகிழ்ச்சியளிக்கும் விஷயம் :) மிக்க நன்றி ராமலக்ஷ்மி!

      Delete
    3. கவனக்குறைவில் நேர்ந்தது எனத் தெரியும். சும்மாதான் கலாட்டா செய்தேன்:)!

      பதிவுகள் தொடரட்டும்!

      Delete
    4. good girl :) நன்றி ராமலக்ஷ்மி!

      Delete
  3. //தங்கையுடன் திருச்சியில் உள்ள ஒரு உறவினர் வீட்டுக்குப் போன போது அங்கே இருக்கிற ஐயப்பன் கோவிலுக்குப் போயிருந்தேன். (கீதாம்மா அடிக்க வராதீங்க! அரை நாள்தான் இருந்தது!) //

    அநியாயம், அக்கிரமம், அராஜகம்! இனி தொலைபேசி அழைப்பு வரட்டும். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்னு கூடச் சொல்லப் போறதில்லை! :(((((((((

    ReplyDelete
    Replies
    1. அம்மா! உங்களை மூச்சுக்கு முன்னூறு தரம் அம்மான்னு கூப்பிடறேனே... அம்மான்னாலே கோபப்படக்கூடாது; கோபம் வந்தாலும் உடனே திருப்பி அனுப்பிடணும், தெரியுமா? :)

      Delete
  4. கூடவே அழைச்சிட்டுப் போய் வந்த மாதிரி இருந்தது. ஏற்கெனவே பார்த்த இடம் என்றாலும், ஒரு தோழியோடு போய் வந்த நிறைவு.

    குட்டிக்கதையும் அருமை. ஒவ்வொரு பூஜையின் நிறைவிலும் பலன்களை பூஜா தெய்வத்திற்கு அர்ப்பணம் செய்ய வேண்டும் என்று ஒரு விதி இருப்பது இதனால் தான் என்று நினைக்கிறேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி பார்வதி!

      Delete
  5. நல்ல பயணம்....;நல்ல கதை....நல்ல பகிர்வு ;)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கோபி :)

      Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)