Monday, September 24, 2012

ரோஜா நேரம்!ரு நாள் சாயந்திரம் என்ன பண்றதுன்னு தெரியாம, தொ(ல்)லைக் காட்சியைப் போட்டுப் பார்த்துக்கிட்டிருந்தேன். ஏதோ ஒரு சானல்ல ஏதோ ஒரு படம் போய்க்கிட்டிருந்தது. கொஞ்சம் வித்தியாசமான படமா இருந்தது. எதைப் பற்றிய படமா இருக்கும்னு தெரிஞ்சுக்கிற ஆவலில் தொடர்ந்து பார்க்க ஆரம்பிச்சேன். புரிந்தும் புரியாமலும் காட்சிகள் ஓடிக்கிட்டே இருந்தது. இது என்ன மாதிரிப் படம், எதைப் பற்றிய படம், அப்படின்னு அனுமானிக்கிறதுக்கு முன்னாடி படமே முடிஞ்சிருச்சு!

இப்படித்தானே நம்ம வாழ்க்கையும் ஓடுது, அப்படின்னு தோணுச்சு. நாம வந்த வேலை என்னன்னு தெரியறதுக்கு முன்னாடியே வாழ்க்கையே முடிஞ்சிரும் போல இருக்கு. எதுக்காக வாழறோம்னு தெரியாமலேயே ஒவ்வொரு நாளையும் கழிக்கிறோம். ஏதோ ஒரு சுழற்சியில் அகப்பட்டுகிட்டு, எதுக்குன்னு தெரியாமலேயே பல செயல்களைச் செய்யறோம். நம்ம இலக்கு என்ன என்கிறதைப் பற்றி சிந்திக்கக் கூட நேரம் இருக்கறதில்லை. அப்படியே இலக்கு என்னன்னு ஓரளவு தெரிஞ்சிருந்தாலும் அது இந்த சுழிக்காற்றின் வேகத்தில் கண்ணுக்குத் தெரியாமலேயே மறைஞ்சு, மறந்தே போயிடுது.

சமீபத்தில் நடந்த ஒரு இளம் உறவினரின் திடீர் மரணம் மனசுக்கு பெரிய பாதிப்பா இருந்தது; பலப்பல விஷயங்களையும் சிந்திக்க வெச்சது. முடிஞ்சா அதைப்பற்றி இன்னொரு நாள் பேசலாம். ஒவ்வொரு நாளும் எத்தனையோ பேர் இறந்தாலும், இருக்கிறவங்கல்லாம் நாம மட்டும் என்னவோ சாஸ்வதம் மாதிரியே நினைச்சுக்கிட்டிருக்கோம். பாரதத்தில் தருமன் சொன்ன மாதிரி உலகத்திலேயே மிகப் பெரிய அதிசயம்தான், இது.  இந்த உலகத்துக்கு வந்த எத்தனையோ அரிய பெரிய மகான்கள் எல்லோரும் மறைஞ்சு போயிட்டாங்க. அப்படின்னா நாமெல்லாம் எந்த மூலைக்கு? எத்தனை நாளைக்கு? இதை நான் சொல்லலை, சுவாமி விவேகானந்தர் சொல்றார்.

இதை நினைவில் வச்சுக்கிட்டு, சண்டை சச்சரவில்லாம, போட்டி, பொறாமை இல்லாம, கோப தாபம் இல்லாம, முடிஞ்ச வரை அன்பை மட்டுமே தந்தபடி, வந்த வேலையை மட்டும் கவனிப்போம்.

அப்பப்ப நிதானிச்சு, வாழ்க்கையில் எது முக்கியம் என்பதையும், இலக்கை நோக்கித்தான் போறோமா என்பதையும் நிச்சயப்படுத்திக்கிட்டு, பிறகு மறுபடி ஓட்டத்தை தொடருவதும் அவசியம். அதோட கூடவே கண்டிப்பா, மறக்காம, Take the time to smell the roses!

இப்போதைக்கு ‘நினைவின் விளிம்பில்…’ இருந்து உங்களுக்கு (எனக்கும்!) கொஞ்சம் ஓய்வு! இன்னும் கொஞ்ச நாளைக்கு கணினி நேரம் கிடைப்பது அரிது என்பதால் தற்காலிக விடுமுறை. இறை விருப்பம் இருந்தால் நவராத்திரி சமயத்தில் மீண்டும் சந்திக்கலாம்!

அது வரைக்கும்… go enjoy the roses! :)

எல்லோரும் நல்லாருக்கணும்!

அன்புடன்
கவிநயா

7 comments:

 1. சீக்கிரம் வந்துடுங்க...

  தொ(ல்)லைக் காட்சி பார்க்காதீங்க...

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான், தொல்லைக் காட்சி பார்ப்பதைத் தவிர்க்கத்தான் வேணும் :)
   நன்றி தனபாலன்!

   Delete
 2. உலகத்துல எத்தனையோ இருக்கு. அத்தனையிலும் பெருசு நிம்மதி.

  அந்த நிம்மதி உங்களுக்கும் கிடைக்கட்டும்.

  விரைவில் மீண்டும் சந்திப்போம்.

  ReplyDelete
 3. இழப்பின் பாதிப்பிலிருந்து குடும்பத்தினர் வெளிவர வேண்டிக் கொள்கிறேன்.

  /அப்பப்ப நிதானிச்சு, வாழ்க்கையில் எது முக்கியம் என்பதையும், இலக்கை நோக்கித்தான் போறோமா என்பதையும் நிச்சயப்படுத்திக்கிட்டு, பிறகு மறுபடி ஓட்டத்தை தொடருவதும் அவசியம்./

  நல்லா சொன்னீங்க. நவராத்திரி இதோ இப்ப வந்திடும். சந்திப்போம் கவிநயா.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ராமலக்ஷ்மி! :) நவராத்திரிக்கு வெய்ட்டிங்...

   Delete
 4. சமீபத்தில் நடந்த ஒரு இளம் உறவினரின் திடீர் மரணம் மனசுக்கு பெரிய பாதிப்பா இருந்தது; பலப்பல விஷயங்களையும் சிந்திக்க வெச்சது.//

  மன ஆறுதலுக்குப் பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)