Sunday, August 26, 2012

மின்னஞ்சலெல்லாம் பொன்னஞ்சலல்ல!

                                         
நாம் எல்லோருமே உணர்ச்சிகளுக்கு அடிமைதான். சந்தோஷமோ, கவலையோ, கோபமோ, சில பேரை உடனடியா பெரிய அளவில் தாக்கும். சிலர் வெளிப்பார்வைக்கு நிதானமா தெரிஞ்சாலும், உள்ளுக்குள்ள அதிகமா பாதிக்கபடறவங்களா இருப்பாங்க. அல்லது என்னை மாதிரின்னா ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்ப மனசுக்குள்ள ஓட்டிப் பாத்து துன்பத்தை தக்க வச்சுக்கறவங்களா இருப்பாங்க.

சில சமயம் நினைச்சுப்பேன், சினிமாலேல்லாம் ஒரே நினைப்பை, அல்லது ஒரே flash back ஐ திரும்பத் திரும்பக் காண்பிச்சா நமக்கு எப்படி எரிச்சல் வரும்? ஆனா நாம அதைத்தானே தினம் தினம் பண்றோம் அப்படின்னு!

காலம் காலமா நமக்கு தெரிஞ்ச விஷயத்தைப் பற்றிதான் பேசப் போறோம் இன்றைக்கு.  அதாவது உணர்ச்சி வசப்பட்ட நிலையில் ஒரு காரியத்தைச் செய்யக் கூடாது. கொஞ்சம் தள்ளிப் போடணும். சொல்லும் போது சுலபமாதானே இருக்கு. ஆனா செயல்படுத்தறது ரொம்பவே கடினம்.

குறிப்பா கோபமா இருக்கும் போது நிச்சயம் எதுவுமே செய்யக் கூடாது, சொல்லவும் கூடாது. ஒருத்தர் மேல எக்கச்சக்கமா கோபமாவோ, வருத்தமாவோ இருக்கும் போது, அந்த நபருக்கு நாம மின்னஞ்சலோ, செய்தியோ அனுப்பவே கூடாது. அந்தச் சமயத்தில் நாம சொல்ற வார்த்தைகள் பின்னாடி நம்மையே வருத்தப்பட வைக்கிற சாத்தியக் கூறுகள் அதிகம். இந்த மாதிரி செய்துட்டு, என் மேல் தவறு இல்லாத சமயங்களில் கூட, என் இயல்பினால் நானே போய் அவர்களிடம் மன்னிப்பு கேட்ட அனுபவங்கள் எனக்கு இருக்கு. அவங்க என் மனதை ஏதோ ஒரு காரணத்தால் புண்படுத்தியதாலதான் கோபமே வந்திருக்கு. அது நியாயமாகவே இருந்தாலும், அந்தக் கோபத்தில் நான் ஏதோ சொல்லப் போய் அது திரும்ப அவங்க மனதைப் புண்படுத்தியிருக்கும் இல்லையா? இதுக்கு முதலிலேயே ஒழுங்கா நிதானிச்சிருக்கலாமேன்னு பிறகு தோணியிருக்கு.  பொதுவாகவே, நம்மை யாராச்சும் ‘சுருக்’குன்னு ஏதாச்சும் சொல்லிட்டா, உடனடியா அந்த ‘சுருக்’கை நாம திருப்பிக் கொடுத்துடணும்னு தோணும்! இந்தப் பழக்கத்தைக் கஷ்டப்பட்டுதான் மாத்திக்கணும்.

திரு. சுகிசிவம் சொல்லுவார் – அளவுக்கதிகமான கோபம் வந்தா, உடனே நம் position-ஐ மாத்திக்கணுமாம். அதாவது, நின்னுக்கிட்டிருக்கும் போது கோவம் வந்தா, உட்கார்ந்துடணுமாம். உட்கார்ந்திருக்கும் போது வந்தா, படுத்துடணுமாம்.  ஏன்? நம் உடலோட நிலைக்குத் தகுந்த மாதிரி நம் சுவாசத்தின் தன்மை மாறும். சுவாசம் நிதானப் பட்டுச்சுன்னா, நம்ம உணர்ச்சியும் மாறும்; நிதானப்படும். அதனாலதான், கோவம் வந்தா மூச்சை இழுத்து விடுங்க, மெதுவா 1,2,3 எண்ணுங்க, இப்படில்லாம் சொல்றாங்க. ஆனா அதெல்லாம் விட, திரு. சுகிசிவம் அவர்கள் சொன்னது எனக்குப் பிடிச்சிருந்தது.  (அதுக்குன்னு அலுவலகத்தில் மீட்டிங்கில் இருக்கும்போது கோவம் வந்தா உடனே படுத்துக்காதீங்க! அப்புறம் வேலையை விட்டு தூக்கிட்டாங்கன்னா, நான் பொறுப்பில்லை! ஹி…ஹி… :))

பொதுவாகவே எல்லோரும், குறிப்பா பெண்களும், அதிலும் குறிப்பா பருவ வயது பெண்களும் மின்னஞ்சல் விஷயத்தில் கவனமா இருக்கணும். நாம தனியான ஒரு நபருக்குதானே எழுதறோம்னு நினைச்சிருப்போம், ஆனா ஒரு முறை அது போயிடுச்சுன்னா, அப்புறம் அது நம்ம கட்டுப்பாட்டில் இல்லை; அதை ரிசீவ் பண்ணறவங்க, அதை என்ன வேணும்னாலும் செய்யலாம். யாருக்கு வேணும்னாலும் அனுப்பலாம்னு புரிஞ்சுக்கணும். முன்னயாவது forward பண்ணி வர்ற மின்னஞ்சலில் உள்ள செய்தியை மாற்ற முடியாம இருந்தது. ஆனா இப்பல்லாம் அப்படி வர்ற மின்னஞ்சலில் செய்தியை மட்டும் இல்லாம, எதை வேணுமானாலும் மாற்றலாம்!

நாம பலரிடமும் வெள்ளந்தியா பேசறோம், எழுதறோம். ஒரே ஒருத்தரிடம் மட்டும்தான் நாம கொஞ்சமே கொஞ்சம் நம்ம சொந்த விஷயத்தை பகிர்ந்துக்கறோம்னு நினைப்போம், ஆனா அது பிறகு யாரால எப்படியெப்படி பயன்படுத்தப் படும்னு நமக்கு தெரியாது.  சினிமாலேல்லாம் நிறைய பாத்திருக்கோமே, பழைய காதலன் காதல் கடிதங்களை வச்சு ப்ளாக் மெயில் பண்றதை!

ஒரு நாள், நான் ஒரு தோழிக்கு அனுப்ப நினைச்சு டைப் பண்ணின text message -ஐ இன்னொருத்தருக்கு அனுப்பிட்டேன்!  கண்ணாடி போடாம, அவசரமா அனுப்பினதால, அதே மாதிரி இருந்த இன்னொருத்தர் பெயருக்கு அனுப்பிட்டேன். நல்ல காலமா அது எதுவும் சொந்த விஷயமா இருக்கலை, பொதுவான ஒரு விஷயமா போச்சு.

கடிதம்னாலும், மின்னஞ்சல்னாலும், நாம எழுதற விஷயத்தை கவனமா எழுதணும். சில சமயம் நாம நல்ல நோக்கத்தோடயே எழுதினாலும், அவசரத்தில் எழுதிட்டோம்னு வைங்க, படிக்கிறவங்களுக்கு ரொம்ப rude-ஆ எழுதின மாதிரி இருக்கும். அப்புறம் அவங்க கோவப்பட, நாம சமாதானம் செய்ய, மறுபடி அதே வட்டம். பேசும்போதுன்னா, குரலை வச்சு, நேரிலன்னா, முகபாவத்தை வச்சு, நாம நல்லா சொல்றமா இல்லையான்னு தெரியும். ஆனா எழுத்தில் என்ன நம்ம முகமா தெரியுது? அதனால கொஞ்சம் நேரம் அதிகமானாலும் கூடுமானவரை சாதாரணத்தை விட கொஞ்சூண்டு அதிக மரியாதையோடயும், அதிக அன்போடயும் எழுதறது நல்லது.

குழும மடல்கள் வரும்போது, தனிப்பட்ட நபருக்கு மட்டும் பதில் எழுத நினைச்சு reply தட்டினா, குழும முகவரிதான் அதில் வந்து உட்கார்ந்திருக்கும். அதையும் கவனமா பார்த்துக்கணும். அந்த சமயத்தில் reply தட்டாம forward தட்டி, முகவரியை நாமே தட்டச்சி, பதில் எழுதினா இன்னும் கொஞ்சம் பாதுகாப்பு.

இப்பல்லாம் மின்னஞ்சல்ல முகவரி டைப் பண்ணும்போதே ‘auto suggestion’ என்கிற பெயரில் நாம் தொடர்பு வரிசையில் வச்சிருக்க மின்னஞ்சல்களில் அதே மாதிரி ஆரம்பிக்கிற பெயர்களெல்லாம் வரிசையா வருது. அவசரப்பட்டு “return” –ஐத் தட்டிட்டா போச்சு! நாம யாருக்கோ அனுப்ப வேண்டிய மெயில் வேற யாருக்கோ போயிடும்! அது ரொம்ப sensitive ஆன சொந்த விஷயமா போயிடுச்சுன்னா என்ன பண்றது! தலை கீழா நின்னாலும் திரும்ப வருமா?

அதனால, உணர்ச்சி வசப்பட்டாலும் சரி, அல்லது ஒரு அந்தரங்கமான சொந்த விஷயத்தை யாரோடயாவது மின்னஞ்சல் மூலமா பகிர்ந்துக்க நினைச்சாலும் சரி, அல்லது ஒருத்தரைப் பற்றி புகார் பண்ணி (!) இன்னொருத்தருக்கு எழுதறதா இருந்தாலும் சரி, ஒரு முறைக்கு பல முறை யோசிச்சிட்டு செய்ங்க. முகவரியையும் ஒரு முறைக்கு பல முறை சரி பாருங்க. சில விஷயங்களை மின்னஞ்சலில் எழுதறதை விட, தொலைபேசியிலேயோ, நேரிலேயோ பேசிடறது நல்லது.

இந்த வம்பில் மாட்டிக்காம இருக்க ஒரே சுலபமான வழி, நாம எழுதற மடல்களெல்லாம் யாரையும் எந்த விதத்திலும் பாதிக்காம இருக்கறதுதான். (நம்மளையும் தான்! :)) அப்பதான் அது தவறான  ஆளுக்கே போயிட்டாலும், எந்த பிரச்சனையும் இருக்காது.

Never decide anything without stepping back, never speak a word without stepping back, never throw yourself into action without stepping back.”  அப்படின்னு அரவிந்த அன்னை சொல்றதை மனசில் வச்சுக்கறது நல்லது.

இனிமேலாவது இந்த விஷயத்தில் எல்லோருமே இன்னும் கொஞ்சம் கவனமா இருப்போம்! என்ன சொல்றீங்க!

எல்லோரும் நல்லாருக்கணும்!   

அன்புடன்
கவிநயா.

நன்றி: வல்லமை
படத்துக்கு நன்றி: http://esellermedia.com/2012/07/03/6-tips-punchy-email-campaign/

21 comments:

  1. // கொஞ்சம் கவனமா இருப்போம்! //

    எண்ணித்துணிக கருமம் துணிந்தபின்
    எண்ணுவம் என்பது இழுக்கு

    என்னும் வள்ளுவனின் குறளுக்கு
    இனிய உரை தந்தது
    தங்கள் கட்டுரை.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தாத்தா. வள்ளுவப் பெருந்தகை எல்லாமே சொல்லி வெச்சுட்டார். நமக்குதான் அதையெல்லாம் கடைப்பிடிச்சு வாழ இன்னும் தெரிய மாட்டேங்குது :( சரியாக எடுத்துக் காண்பித்தமைக்கு மிகவும் நன்றி.

      Delete
  2. “Never decide anything without stepping back,
    never speak a word without stepping back,
    never throw yourself into action
    without stepping back.”

    அப்படின்னு அரவிந்த அன்னை சொல்றதை மனசில் வச்சுக்கறது நல்லது.

    மிகவும் பயனுள்ள கருத்துகள்..

    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி அம்மா!

      Delete
  3. நல்லாச் சொன்னீங்கக்கா. சில மெயில்கள் ஏண்டா வருதுன்னு இருக்கும். படிச்சா கடுப்பு வரும். எதுக்குத் தேவையில்லாம நமக்கு டென்ஷன்னு சில மெயில் ஐடிகளுக்கு ஆட்டோ டெலீட் போட்டுட்டேன். மெயில் வந்ததும் தெரியாது. டெலீட் ஆனதும் தெரியாது. Bliss :)

    ReplyDelete
    Replies
    1. படிச்சவுடனே அடப்பாவி! அப்படின்னு தோணுச்சு! :) சில மடல்கள் அப்படி இருந்தாலும், அதிலேயே சில முக்கியமானது இருந்தா என்ன பண்றது? அது சரி... என் ஐடிக்கு அப்படிப் போடலைதானே? :)

      Delete
    2. ஹாஹாஹா ஒங்க மெயில் ஐடிக்கு இல்ல. ஒங்களுக்குத்தான் பதிலெல்லாம் எழுதுறேனே :)

      Delete
    3. நல்ல பிள்ளை! :)

      Delete
  4. ம்ம்ம்ம்ம் எல்லாரும் செய்யற ஒரு தப்பு. இதைப் படிச்சாலும் திரும்பவும் பலரும் இதே தப்பைச் செய்வோம்; செய்யப் போறோம். :)))))) கூடியவரையிலும் ஜாக்கிரதையாத் தான் இருக்கேன். என்றாலும்...........:))))))

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அம்மா. சில விஷயங்களை அடிக்கடி நினைவுபடுத்திக்கிட்டா என்றைக்காவது பலன் கிடைக்கலாம் :) எல்லாமே நம்பிக்கைதான் :) நன்றி அம்மா.

      Delete
  5. நல்ல பகிர்வு அக்கா..;-)

    \\பேசும்போதுன்னா, குரலை வச்சு, நேரிலன்னா, முகபாவத்தை வச்சு, நாம நல்லா சொல்றமா இல்லையான்னு தெரியும். ஆனா எழுத்தில் என்ன நம்ம முகமா தெரியுது? அதனால கொஞ்சம் நேரம் அதிகமானாலும் கூடுமானவரை சாதாரணத்தை விட கொஞ்சூண்டு அதிக மரியாதையோடயும், அதிக அன்போடயும் எழுதறது நல்லது.\\

    மிக மிக சரி...உபயோகமான பாயிண்ட் ;))

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி கோபி! :)

      Delete
  6. இந்த வம்பில் மாட்டிக்காம இருக்க ஒரே சுலபமான வழி, நாம எழுதற மடல்களெல்லாம் யாரையும் எந்த விதத்திலும் பாதிக்காம இருக்கறதுதான்.

    --- mail பத்தி நீங்க சொன்னது ரொம்ப சரி தான்... ஒரு கோவத்துல நாம ஏதாவது எழுதப்போயி, அது காலத்துக்கும் கஷ்டத்தை குடுத்துடக் கூடாது இல்லையா...

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி ஸ்வர்ணரேக்கா!

      Delete
  7. வாழ்த்துக்கள் ! நல்ல பயனுள்ள பதிவு. ஒரு முறை என் சித்தி பையனுக்கு அனுப்புவதாக நினைத்துக்கொண்டு அதே பெயருள்ள வேறு ஒரு நபருக்கு மெயில் அனுப்பிவிட்டேன். அது ஒரு பார்வர்ட் செய்யப்பட்ட நையாண்டி பதிவு. அந்த நபரிடமிருந்து பதில் வந்தது "who is this? I am not able to understand this unknown language." என்று. அப்போது தான் புரிந்தது, ஐயோ ! வேறுயாருக்கோ அனுப்பி இருக்கிறோம். நல்லவேளை அவனுக்கு தமிழே தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை! அதோட forwarded mail தானே, அதனால பரவாயில்லை :) வருகைக்கு நன்றி தலைவி!

      Delete
  8. மிகவும் பயனுள்ள கருத்துகள்...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…

    (கோபம் வரும் நேரத்தில் பிடித்த இசையை கேட்டால் எல்லாம் பறந்து போய் விடும்...)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், அதுவும் நல்ல வழிதான்! வருகைக்கு மிகவும் நன்றி திரு.தனபாலன்!

      Delete
  9. /மின்னஞ்சலெல்லாம் பொன்னஞ்சலல்ல!/

    சரியாகச் சொன்னீர்கள் கவிநயா! கவனத்தில் கொள்ள வேண்டிய எச்சரிக்கைகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராமலக்ஷ்மி!

      Delete

  10. அன்புடையீர்! வணக்கம்!
    அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (16/06/2015)
    தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை, மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பாராட்டுகள். வாழ்த்துகள்.

    இணைப்பு: http://gopu1949.blogspot.in/

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)