Sunday, February 26, 2012

கண்ணீரில் கரைந்திடுமோ கர்மவினை?

மாபெரும் ஆன்மீக எழுத்தாளரான திரு.ரா.கணபதி அவர்கள் சிவராத்திரி அன்று இறைவனடி சேர்ந்தது குறித்து கேள்விப்பட்டது முதல், அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரைப் பற்றி ஏதாவது எழுத வேண்டுமென்று தோன்றிக் கொண்டே இருந்தது. அதுவும் திவாஜி அவர்கள் 'அண்ணா'வைப் பற்றி சொல்லுவதைப் படிக்கப் படிக்க, மனதின் நெகிழ்வும், கூடவே இந்த எண்ணத்தின் வலுவும் அதிகமாகியது. ஆனால் எழுத வேண்டும் என்ற என் ஆசைக்கும் அவசரத்துக்கும் தகுந்தாற்போல் இந்த வாரம் முழுக்க நேரம் இல்லை :( அவசரமாக எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதையாவது எழுதவும் விருப்பமில்லை.

முன்பு ஒரு முறை, கிட்டத்தட்ட சரியாக ஒரு வருஷம் முன்பாக, திரு ரா.கணபதி அவர்களின் 'காற்றினிலே வரும் கீதம்' படித்த தாக்கத்தில், கண்ணன் பாட்டில் ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதை இந்த சமயத்தில் இங்கு இடுவது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியதால்...

**

மீராபாயைப் பற்றி அதிகம் தெரியாது, இப்போதான் முதல் முறையா படிச்சேன்… ரா.கணபதி அவர்களின் "காற்றினிலே வரும் கீதத்" திலிருந்து ஒரு நிகழ்வையும், அதன் தாக்கத்தில் பிறந்த கவிதையையும் இங்கே பகிர்ந்துக்கறேன்...




எத்தனையோ துன்பங்களுக்கு பிறகு மீராவுடைய ஆசை நிறைவேறுகிறது. கார்மேகக் கண்ணனே அவளுக்கு கணவனாக வாய்த்து விட்டான். எப்பேர்ப்பட்ட பேறு அது. மணமான அன்று கண்ணன் தன்னைப் பிரியும் முன் அவனைப் பார்த்து மீரா கேட்கிறாளாம்:

“கண்ணா, நான் அனுபவிக்க வேண்டிய துன்பம் எல்லாம் தீர்ந்ததா? என் கர்ம வினை கழிந்ததா?” என்று.

அதற்கு பதிலாக தன் நிறத்தைத் தாங்கி அலையும் ஒரு மேகத்தைக் காட்டறான் கண்ணன்.

“மீரா, அதோ பார். அந்த கார்மேகத்தை.”

“அடேயப்பா… கண்ணா, இந்த மேகம்தான் எவ்வளவு பெரிசா, விரிஞ்சு பரந்து இருக்கு!”

“நீ தினமும் கண்ணுக்கு இட்டுக் கொள்ளும் அஞ்சனத்தின் அளவு என்ன, மீரா?”

“அதுவா? அது இந்த கார்மேகத்தில் அணுவளவு கூட இருக்காதே?”

“அந்த மை அளவுதான் உன் கர்ம வினை கழிந்திருக்கிறது, மீரா. இன்னும் கழிய வேண்டியது இந்த கார்மேகம் அளவு இருக்கு. உன் கர்ம வினை கழியக் கழிய, இந்த மேகம் அளவில் குறைஞ்சுக்கிட்டே வரும்”, அப்படின்னு சொல்றான் கண்ணன்.

அன்றிலிருந்து அந்த கார்மேகத்தை பார்ப்பதே மீராவுக்கு வேலையாயிருந்ததாம். ஏதாவது துயரம் ஏற்படும் போது, குடம் குடமா கண்ணீர் பெருக்கின பிறகு, மேகம் இப்போ நல்லா சின்னதாயிருக்குமேன்னு நினைச்சு அதைப் பார்ப்பாளாம். ஆனா அது கண்ணுக்கே தெரியாத அளவுதான் குறைஞ்சிருக்குமாம்…

போகப் போக துன்பம் அவளுக்கு பழகிடுது. எவ்வளவு துயரம் வந்தாலும் கலங்கறதில்லை. எப்படிப்பட்ட துன்பம் வந்தாலும் சந்தோஷப்படறா. ‘என் கர்ம வினையைக் கழிக்க என் கண்ணன் எனக்காக அனுப்பி வச்ச உதவி இது’ன்னு நினைச்சு பரவசப்படறளாம்…

கண்ணீர் பெருகப் பெருக, கார்மேகம் கரையத்தானே வேண்டும்?


கார்மேகம் கரைந்திடுமோ?
கர்மவினை கழிந்திடுமோ?
காலன்வரும் காலம்வரை
கண்ணீர்தான் சுகவரமோ?

பலப்பலவாம் பிறவிகளும்
பழவினையைக் கரைக்கவில்லை
நீளும்துன்ப மோஎன்னை
வேண்டாம்என்று வெறுக்கவில்லை

இப்பிறவியி லேனும்உன்னை
ஏற்றும்வரம் தந்துவிட்டாய்
தப்பாதுன் மலரடிகள்
மனதில்மணக்கச் செய்துவிட்டாய்!

--கவிநயா

சுப்பு தாத்தாவின் குரல் வண்ணத்தில்... நன்றி தாத்தா.

Sunday, February 19, 2012

வாயில் இருக்கு வழி!


சில நாட்களுக்கு முன்னால் வெளியூர் போக வேண்டியிருந்தது. வழக்கமாகப் போகிற ஊர் இல்லை, அதனால் வழி எல்லாம் புதுசாக இருந்தது. போகும் போது பரவாயில்லை, ஆனா வரும்போது இருட்டு; எக்கச்சக்க போக்குவரவு; கூடவே மழை வேறே. அதனால வண்டி சாரத்தியம் அத்தனை சுலபமாக இருக்கலை. வழி சொல்கிறவங்க (அதாங்க GPS) அவங்களே தொலைஞ்சு போயிட்டாங்க. அதனால சில சமயம் வழியில் நிறுத்திக்கிட்டு, வரைபடத்தை வச்சு பார்த்துக்கிட்டு, இப்படியே மெதுவா வர வேண்டியதாயிடுச்சு.

இந்த மாதிரி பிரயாணம் பண்ணும்போதுதானே குருட்டாம்போக்குல யோசனை ஓடும்? (அப்ப மட்டுந்தானான்னு கேக்குறீங்க… தெரியுது தெரியுது!). அப்ப தோணுச்சு, நம்ம ஊர்லன்னா அங்கங்க நிறுத்தி நிறுத்தி, வழியில் வர்ற ஆளுங்களை வழி கேட்டுக்கிட்டே போயிருவோம், இங்க இப்படி நாமளே கஷ்டப்பட்டு நிறுத்தி நிறுத்தி பாத்துக்கிட்டே வர வேண்டியதா இருக்கே, அப்படின்னு. அது கூட பரவாயில்லை, கொஞ்சம் விட்டுட்டோம்னா, சுத்தி கித்தி, தொலைஞ்சு போயி, மறுபடி சரியான வழியைப் பிடிக்கிறதுக்குள்ள டென்ஷன் ஆகி… போதும் போதும்னு ஆயிடும்.

அந்த குருட்டாம்போக்கு யோசனையின் போதுதான் நம்ம ஊர்ல சொல்ற பழமொழி நினைவு வந்தது – ‘வாயுள்ள புள்ளை பிழைக்கும்’னு சொல்வாங்க இல்ல? அதே போல ‘வாயில இருக்கு வழி’, அப்படின்னும் சொல்வாங்க. அதாவது பேச்சுத் திறமை இருந்தா போதும், பொழச்சுக்கலாம். வாயத் தொறந்து சங்கோஜமில்லாம வழி கேக்க தெரிஞ்சா போதும், ஊர் போய்ச் சேந்துரலாம்.

‘வாயில இருக்கு வழி’ பத்தி நினைக்கும் போதுதான் ‘பளீர்’னு ஒரு பல்பு எரிஞ்சது. ஒரு வேளை இது ஆன்மீக சம்பந்தமாக ஏற்பட்டதோ, அப்படின்னு. பலப்பல மகான்களும், நாம சங்கீர்த்தனம்தான் இறைவனை அடைய கலியுகத்தில் சுலபமான வழின்னு சொல்லியிருக்காங்க. நாம சங்கீர்த்தனம் வாயினாலதானே பண்ணனும்? அதன்படி பார்த்தா, இறைவனை அடையும் வழி வாயில்தானே இருக்கு!

இது எப்படி இருக்கு? :) 


--கவிநயா

நன்றி: வல்லமை 
படத்துக்கு நன்றி: தினமலர்

Sunday, February 12, 2012

சோடி போட்டு பாடுங்க!

அனைவருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துகள்!

கீழே இருக்கிற பாட்டை 'மூத்த' காதலர் ஒருத்தர் பாடித் தந்திருக்காரு. நீங்களே போட்டுப் பார்த்துக் கண்டு பிடிங்க! கண்டிப்பா கடைசி வரை பாருங்க. கடைசியில் ஒரு surprise இருக்கு! :)

லலிதாம்மாவும் 'why this கொல வெறி' மெட்டில் பாடி அசத்தி இருக்காங்க, இங்கே!



பெண்:
வச்ச கண்ணு வாங்கவில்ல
வாங்கிய பின் தூங்கவில்ல
ராசாவே செல்ல ராசாவே

ஆண்:
மச்ச விழிப் பார்வையாலே
மச்சான் நெஞ்சத் தைக்கிறியே
ரோசாவே சின்ன ரோசாவே

பெண்:
சின்ன மனக் கூட்டுக்குள்ள
சிம்மாசனம் போட்டு வச்சேன்
சிம்மாசனத்துக்குன்னே
சிங்கம் போல வந்து சேர்ந்தே

ஆண்:
வம்பெதுவும் வேணாமுன்னு
எம்மனசப் பூட்டி வெச்சேன்
கள்ளச் சாவி கொண்டுகிட்டு
காத்தப் போல நீ நுழைஞ்சே

பெண்:
ஊருறங்கும் வேளையிலே
ஊதக் காத்து வீசையிலே
யாரு கண்ணும் படாம
பேசுறது வேணாமய்யா

ஆண்:
ஊரெல்லாங் கூட்டி வச்சு
ஒங் கழுத்தில் தாலி கட்டி
கண்ணப் போலக் காப்பாத்துவேன்
கவலையெதும் வேணாமடி


--கவிநயா

படத்துக்கு நன்றி: கூகுளார்

Sunday, February 5, 2012

பூஜை அறையா? வேண்டாமே!

ல்யாணம் சிறப்பாக முடிந்து விட்டது. “சாப்பாடு பிரமாதம்”, என்று சொல்லியபடி, ஒவ்வொருவராக விடை பெறவும் தொடங்கி விட்டார்கள். கொஞ்சம் ஓரமாக இடப்பட்டிருந்த நாற்காலிகளில் மாப்பிள்ளையும் மணப் பெண்ணும் அமர்ந்திருந்தார்கள். மாப்பிள்ளை சுந்தரின் நண்பர்களும், மணப் பெண் சோனுவின் தோழியரும் சேர்ந்து கொண்டு இருவரையும் கலகலப்பாய்க் கலாய்த்துக் கொண்டிருக்க, பெரியவர்கள் ஆங்காங்கே அமர்ந்து வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டு கதை அளந்து கொண்டிருக்க, குட்டிப் பிள்ளைகள் அங்குமிங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். மொத்தத்தில் அந்த இடமே கல்யாணக் களையுடன் களிப்பாய் இருந்தது.

“சுந்தரா, கண்ணால் ஒரு சேதி… சொல்லடா இந்நாள் நல்ல தேதி”, என்று சோனுவின் தோழி ஒருத்தி பாட, “why this கொல வெறி கொல வெறிடி?” என்று சுந்தரின் தோழன் எதிர்ப்பாட்டு பாட, ஒரே கலாட்டாதான்!

எப்போதும் கலகலப்பாகப் பேசித் தள்ளும் சோனு, இன்றைக்கு மிக அமைதியாக, கன்னங்கள் வெட்கத்தில் சிவக்க, இதழ்கள் புன்னகையில் பூரிக்க, ஓரக்கண்ணால் சுந்தரையும், ‘கொலை வெறிக்’ கண்ணால் மற்றவர்களையும் (‘எங்களைக் கொஞ்சம் தனியா விட்டால் என்னவாம்?’) பார்த்துக் கொண்டிருந்தாள்.

மகளின் சந்தோஷ முகத்தைப் பார்த்துப் பார்த்துப் பூரித்துக் கொண்டிருந்தார், தந்தை மகேஸ்வரன். இருக்காதா பின்னே? சின்ன வயதிலேயே அம்மாவை இழந்தவளை ஒற்றை ஆளாய், தாயும் ஆனவராய் இருந்து வளர்த்த தந்தை ஆயிற்றே!

“அது என்ன, தமிழ் பேரா வைக்காம, ‘சோனு’ன்னு வெச்சிருக்கீங்க?”, பெண் பார்க்க வந்த அன்றைக்கே கேட்டு விட்டான், சுந்தர்.

“ம்… அதுவா மாப்பிள்ளை? நாங்களும் என்னென்னவோ பேரெல்லாம் யோசிச்சுதான் வச்சிருந்தோம். ஆனா பொறந்தோன்னயே எம்பொண்ணு தங்கம் மாதிரி தகதகன்னு ஜொலிச்சா. ‘சோனு’ அப்படின்னா ‘தங்கம்’னு அர்த்தம்னு தெரியும். அதனால அப்பவே ‘சட்’டுன்னு முடிவு பண்ணி அந்தப் பேரை வெச்சோம்.”

“அப்ப மட்டுமா? இப்பக் கூடத்தான் தங்கம் மாதிரி ஜொலிக்கிறா”, சோனுவை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே சுந்தர் தனக்குத் தானே முணுமுணுத்தான்.

“என்ன சொன்னீங்க மாப்பிள்ளே?”, எனவும்,

“ஒண்ணுமில்ல மாமா. பொருத்தமாதான் இருக்குன்னு சொன்னேன்”, என்று இலேசான வெட்கத்துடன் சிரித்துக் கொண்டே சமாளித்தான்.

ஆயிற்று. பெண்ணை புகுந்த வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்து விட்டது. மாப்பிள்ளையும் பெண்ணும் காரில் ஏற வேண்டியதுதான் பாக்கி.

“மாப்பிள்ளை, இப்படிக் கொஞ்சம் வாங்க”, என்று அவனைத் தனியாக அழைத்தார்.

“சொல்லுங்க மாமா.”

“மாப்பிள்ளை, என் பொண்ணு அடிக்கடி பூஜை அறைக்கு போகாம பாத்துக்கறது உங்க கையிலதான் இருக்கு.”

“என்ன மாமா சொல்றீங்க?” சுந்தருக்கு ஒன்றுமே புரியவில்லை.

“அதொண்ணுமில்ல, மாப்பிள்ளை. அம்மா இல்லாம வளர்ந்த பொண்ணாச்சா? எல்லாம் என்கிட்ட பகிர்ந்துக்குவான்னாலும், என்கிட்டயும் சொல்ல முடியாத மனக் கஷ்டம் ஏற்பட்டா, பூஜை அறைதான் அவளுக்கு அடைக்கலம். விநாயகர்தான் அவளோட அத்யந்த நண்பர். அதனால, நீங்கதான் அவளைக் கண்கலங்காம பாத்துக்கணும்கிறதைத்தான் அப்படிச் சொன்னேன்”, சொல்லி முடிப்பதற்குள் மகேஸ்வரனுக்கு கண் கலங்கி விட்டது.

“அடடா… என்ன மாமா நீங்க? சோனுவை நான் பூ மாதிரி பாத்துக்குவேன். சாமி கும்பிடறதுக்கு தவிர அவ வேற எதுக்கும் பூஜை அறைக்குப் போகாம நான் பாத்துக்கறேன். சரிதானே? நீங்க கண் கலங்காதீங்க… இங்கே பூஜை அறை வேற இல்லை”, என்று சிரித்துக் கொண்டே சொல்லவும், மகேஸ்வரன் முகத்தில் சந்தோஷப் புன்னகை பெரிதாய் விரிந்தது.


--கவிநயா