Sunday, December 18, 2011

பேராசைக் கண்ணன்!

கோதையின் நிலையைக் கண்டு பெரியாழ்வாரின் உள்ளம் துவள்கிறது. அவளுக்கு எப்படி உற்சாகம் ஊட்டுவது என்று யோசிக்கிறார்.

“கோதை… அம்மா கோதை…”

தூணின் மேல் சாய்ந்து கொண்டு ஏதோ ஒரு உலகத்தில் இருந்தவளின் விழிகள், மெதுவாகத் திரும்பி அவரை நோக்குகின்றன.

“கூப்பிட்டீர்களா அப்பா?”

“ஆம் அம்மா. அப்படி என்னம்மா யோசனை, நான் உள்ளே நுழைந்தது கூடத் தெரியாமல்?”

அவளுடைய செவ்விதழ்கள் புன்னகையில் நெளிகின்றன, இலேசாக.

“எனக்கு வேறென்னப்பா யோசனை இருக்கப் போகிறது? தெரியாதது போல் கேட்கிறீர்களே?”

“இல்லையம்மா… உன் தோழிகள் வந்து சென்றார்களே… அவர்கள் கூட உன்னை எங்கோ கூப்பிட்டார்கள் போல் தெரிந்தது. நீ போயிருப்பாய் என்று நினைத்துக் கொண்டே வந்தேன்.”

“ஆம் அப்பா. அவர்கள் எல்லாம் ஆற்றுக்குப் போய் குளித்து விட்டு, அருகிலிருக்கும் நந்தவனத்தில் விளையாடப் போகிறார்களாம். என்னையும் கூப்பிட்டார்கள்.”

“போயிருக்கலாமே அம்மா. இங்கே தனியாக உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறாய்?”

“போங்கள் அப்பா. அவர்களெல்லாம் எந்தக் கவலையும் இல்லாதவர்கள், உல்லாசமாகப் பொழுதைக் கழிக்கிறார்கள். என் நிலை அப்படியா? என்னுடைய அந்தரங்கம் தெரிந்திருந்தும் நீங்கள் இப்படிக் கேட்பது நியாயமா அப்பா?”

மகளின் கண்களில் துளிர்க்கும் நீரைப் பார்த்ததும் பதறி விட்டார், தந்தை.

முற்றத்தின் வழியாக சத்தமின்றி நுழைந்த தென்றல், அவள் கூந்தலை அன்புடன் கோதி விடுகிறது, அவரை முந்திக் கொண்டு.

“நீ எப்போதும் இப்படி சோகத்திலேயே இருப்பதை என்னால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை அம்மா”

“என்னப்பா செய்யட்டும்? ஆனந்தமாக ஆடிப்பாடிக் களிக்க எனக்கும் ஆசைதான். அந்த ரங்கன் மட்டும் வந்து விட்டால்…”, விழியில் நீருடன் இப்போது கனவும் கோர்த்துக் கொள்கிறது.

“அவன் நிச்சயம் வருவானம்மா. சந்தேகமே இல்லை!”

“ஆனால் எப்போது?” கோதையின் குரல், அவளின் இயலாமையைப் பிரதிபலிக்கும் வண்ணம் சற்றே தழுதழுக்கிறது.

“நீ சூடிக் கொடுத்த மாலைதான் வேண்டுமென்கிறான். அதிலிருந்தே தெரியவில்லையா, அவன் உன்மீது அன்பு கொண்டிருப்பது?”


“அப்படிச் சொல்பவன் ஏன் என்னிடம் முகம் காட்ட மறுக்க வேண்டும்?”

“அங்குதான் இருக்கிறதாம்மா சூட்சுமம்”

“அப்படி என்னப்பா சூட்சுமம்?”

“நீ ஏன் உன் தோழிகளுடன் விளையாடப் போகவில்லை? அதைச் சொல் முதலில்!”

“ஏனப்பா பேச்சை மாற்றுகிறீர்கள்?” செல்லமாகச் சிணுங்குகிறாள் கோதை.

“காரணம் இருக்கிறது; சொல்லம்மா…”

“எங்கு சென்றாலும் எதைச் செய்தாலும் அவன் நினைவு அதிகமாகிறது, அப்பா. அது என் மனதை அறுத்துப் பிழிகிறது”

மறுபடியும் மெல்ல மெல்ல அவன் நினைவில் ஆழத் துவங்கும் மகளின் எழில் வதனத்தை, கனிவுடன் பார்க்கிறார் தந்தை.

விழிகள் ஏதோ ஒரு கிறக்கத்தில் செருகியிருக்க, இதழ்கள் எப்படியோ வார்த்தைகளைக் கண்டு பிடித்துப் பேசுகின்றன.

“ஆற்றில் விளையாடச் சென்றால், அவன் கோபியரின் ஆடைகளைக் களவாடி அவர்களுடன் கிரீடை செய்த நினைவு வருகிறது…”

“ம்…”, மகள் பேசுவதைச் செவிமடுத்த வண்ணம், திண்ணையின் மீது அமர்ந்து கொள்கிறார், அவர்.

“மலைச்சாரலில் பூத்திருக்கும் கருங்குவளை மலர்களைக் கண்டால் அவனுடைய மேனியின் நிறம் கண்முன்னே தோன்றுகிறது…”

“சரிதான்…”

“மழை பொழியத் தயாராக சூல் கொண்டிருக்கும் மேகங்களைக் கண்டால், ஒரே கோபமாக வருகிறது!”

“ஏனம்மா அப்படி?”

“பின்னே என்னப்பா? அவன் வண்ணத்தைப் பூசிக் கொள்ள அவற்றுக்கு என்ன உரிமை இருக்கிறதாம்?”

“சரியாகச் சொன்னாய், தாயே!”

“குயிலின் கீதம் கேட்டால் அவன் இதழைச் சுவைத்துக் கொண்டிருக்கும் குழலின் நினைவு வருகிறது”

“அடேயப்பா! அப்புறம்…?”

“மயிலின் ஆட்டம் கண்டால் அவன் ஆயர்குலச் சிறுவர்களுடன் சந்தோஷமாகத் துள்ளித் திரிவதும், கோபிகளுடன் ஆடிப்பாடி மகிழும் காட்சியும் கண்முன்னே விரிகிறது”

”…..!”


“அதுமட்டுமல்ல. நந்தவனத்தில் வரிசையாகப் பூத்துக் குலுங்கும் முல்லை மலர்களைக் கண்டால், அவையெல்லாம் சேர்ந்து, என் நிலை கண்டு பல் தெரியச் சிரித்து என்னைப் பலவிதமாக ஏளனம் செய்வது போல் தோன்றுகிறதப்பா. அதனால்தான் அவன் நினைவுகளைத் தூண்டும் இடங்களுக்குப் போக எனக்குப் பிடிக்கவே இல்லை!”

குழந்தையைப் போன்ற பிடிவாதம், கோதையின் குரலில்.

“கோதை… இப்படி வா அம்மா”

தந்தையின் அருகில் வந்து, அவர் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொள்கிறாள். பெரியாழ்வார் அவள் தலையை பரிவுடன் வருடி விடுகிறார்.

“உன் நிலை எனக்கு நன்றாகப் புரிகிறதம்மா. ஆனால் நீ தோழியருடன் போகா விட்டால் மட்டும் என்ன? இங்கேயே இருந்த போதும், அவன் நினைவுடனே தானே இருக்கிறாய்?”

கோதையின் அழகிய கன்னங்கள், நாணத்தால் சற்றே சிவக்கின்றன.

“அத்துடன் நீ சொல்வதையெல்லாம் பார்க்கும் போது அவன் உள்ள உகப்பு என்ன என்று எனக்கு நன்றாகப் புரிகிறதம்மா”

“என்னப்பா அவன் உள்ள உகப்பு? என்னை இப்படி பிரிவாற்றாமையால் துன்புறச் செய்வதுதான் அவனுக்கு இன்பமா?”

பாவம் கோதை... அந்தக் கள்வன் மேல் கோபம் கொள்ள நினைத்தாலும் முடியவில்லை, அவளால்.

“அது இல்லை அம்மா. அவனுக்கான உன் அன்பு வளர்ந்து கொண்டே போக வேண்டுமென்பதுதான் அவன் விருப்பம். அதனால்தான் உன்னைப் பிரிந்தே இருக்கிறான்.”

தந்தையின் சொற்கள் அவள் ஆவலைத் தூண்டி விடுகின்றன. எழுந்து அமர்ந்து கொண்டு, அவர் சொல்வதை ஆர்வத்துடன் கவனிக்கிறாள்.

“அவனைப் பிரிந்திருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவனையே நினைக்கிறாய். காணுகின்ற பொருள் எல்லாவற்றிலும் அவனையே காண்கிறாய். ஒவ்வொரு சுவாசத்திலும் அவன் பெயரையே உச்சரிக்கிறாய். இப்படிச் செய்யச் செய்ய உனக்கு அவன் மீதான அன்பும் பிரேமையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன அல்லவா? அதனால்தான் சொல்கிறேன், உன் அன்பு முழுவதற்கும் தான் ஒருவனே சொந்தக்காரனாக வேண்டுமென்ற பேராசையம்மா, அந்தக் கள்வனுக்கு! அதனால்தான் உன் அன்பை வளர விட்டு வேடிக்கை பார்க்கிறான்!”

தந்தை சொன்ன விஷயம் சொல்ல முடியாத ஆனந்தத்தைத் தருகிறது, கோதைக்கு. சிறு குழந்தை போல் கை கொட்டிக் கலகலவென்று சிரிக்கிறாள். கண்ணீர்த் துளிகளுடன் சேர்ந்த அவளுடைய சந்தோஷ வதனம், பனித்துளிகளை ஏந்திய செந்தாமரை மலர் போலத் துலங்குகிறது.

“நீங்கள் சொன்னதைக் கேட்ட பின், எனக்கு பிரிவே பிடித்து விடும் போல் இருக்கிறது அப்பா!”

--கவிநயா

பி.கு.: முன்பு ஒரு முறை கண்ணன் பாட்டில் இட்டது. மார்கழிக்காக கண்ணனை இங்கே கடத்தி வந்து விட்டேன்!

6 comments:

 1. Miga alagu;Migavum Rasithen.
  Natarajan.

  ReplyDelete
 2. இன்னொரு முறை இந்த அருமையான கதையைப் படிக்க வாய்ப்பு தந்ததற்கு நன்றி அக்கா.

  ReplyDelete
 3. நன்றி திரு.நடராஜன்.

  ReplyDelete
 4. மீண்டும் வாசித்தமைக்கு நன்றி குமரன்!

  ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)