Friday, September 30, 2011

கனக தாரை - 9, 10

Vishnu- Lakshmi - Garuda

9.
த(3)த்(3)யாத்(3) த(3)யானுபவனோ த்(3)ரவிணாம்பு(3) தா(4)ராம்
அஸ்மின்னகிஞ்சன விஹங்க(3) சி(H)சௌ(H) விஷண்ணே
து(3)ஷ்கர்ம த(4)ர்ம மபனீய சிராய தூ(3)ரம்
நாராயணப்ரணயினீ நயனாம்பு(3)வாஹ:


அலைகின்ற காற்றுப் பட்டு பொழிகின்ற மேகம் போல
பாலையாய் வறண்ட பூமி பசுமையாய் ஆக மழையாய்
சாதகப் பறவை தன்னின் தாகத்தைத் தீர்க்கும் பொழிவாய்
அன்னை நின் கருணை என்னும் காற்றினை வீசச் செய்வாய்
நாரணன் நங்கை உன்றன் கார்மேக விழிகள் பட்டால்
வினையெல்லாம் நிமிடம் கூட நிற்காமல் ஓடும் தாயே!


10.
கீ(3)ர்தே(3)வதீதி க(3)ருட(3)த்(4)வஜ ஸுந்த(3)ரீதி
சா(H)கம்ப(4)ரீதி ச(H)சி(H)சே(H)கர வல்லபே(4)தி
ஸ்ருஷ்டி ஸ்திதி ப்ரளய கேலிஷு ஸம்ஸ்திதாயை
தஸ்யை நமஸ்த்ரிபு(4)வனைக கு(3)ரோஸ்தருண்யை


கருடனைக் கொடியில் கொண்ட குமுதனின் காதல் தேவீ
நீயேதான் ஞானம் கல்வி அனைத்தையும் ஆளும் ராணி
பிறைதனை முடியில் கொண்ட பித்தனின் மனையும் ஆவாய்
யுகமது முடியும் போது அழிக்கின்ற சக்தியும் ஆவாய்
ஆக்கலில் தொடங்கி ஐந்து தொழில்களும் நீயே செய்வாய்
உலகெல்லாம் போற்றும் உன்னை வணங்கி நான் வாழ்த்துவேனே!

--கவிநயா

Thursday, September 29, 2011

கனக தாரை - 7, 8

Lord Vishnu and Goddess Laxmi

7.
விச்(H)வாமரேந்த்(3)ர பத(3)விப்(4)ரமதா(3)த(3)க்ஷ-
மானந்த(3) ஹேதுரதி(4)கம் மது(4_வித்(3)விஷோ(அ)பி
ஈஷன்னிஷீத(3)து மய க்ஷணமீக்ஷணார்த(4)-
மிந்தீவரோத(3)ர ஸஹோத(3)ர மிந்தி(3)ராயா:


நீலத்தா மரைகள் அனைய நிகிலத்தைக் காக்கும் விழிகள்
நிமிடத்தைக் கோர்க்கும் சின்ன நொடியேனும் மேலே பட்டால்
சுவர்க்கத்தை ஆளும் வாழ்வும் சுலபத்தில் வந்தே சேரும்
மதுவென்னும் அசுரனை வென்ற மாதவனை மகிழச் செய்யும்
சுரபதியைக் காத்த விழிகள் சற்றேனும் என்னைப் பார்த்தால்
எண்ணில்லாச் செல்வம் பெற்று என்றென்றும் மகிழ்வேன் தாயே!


8.
இஷ்டா விசி(H)ஷ்ட மதயோ(அ)பி நரா யயா த்(3)ராக்
த்(3)ருஷ்டா ஸ்த்ரிவிஷ்டப பத(3)ம் ஸுலப(4)ம் ப(4)ஜந்தே
த்(3)ருஷ்டி: ப்ரஹ்ருஷ்ட கமலோத(3)ர தீ(3)ப்திரிஷ்டாம்
புஷ்டிம் க்ருபீஷ்ட மம புஷ்கர விஷ்டராயா:


பக்தர்கள் போற்றிப் பணியும் பெருநிதி ஆன தேவீ
பரிவோடு கனிவும் மிகுந்து பொங்கிடும் பார்வை யாலே
எத்தனை தவம் செய்தாலும் எளிதினில் கிட்டா சுவர்க்கம்
இகபர சுகம் எல்லாமே அடியார்க்கு அருள்வாய் நீயே
மலர்ந்திட்ட பதுமம் ஒத்த மங்கையுன் விழிகள் பட்டால்
உலகத்தில் யாவும் பெற்று உவப்பேன்நான் கமலத்தாயே!


--கவிநயா

(தொடரும்)

Wednesday, September 28, 2011

கனக தாரை - 5, 6

Devi Lakshmi e Vishnu

5.
காலாம்பு(3)தாளி லலிதோரஸி கைடபா(4)ரே:
தா(4)ராத(4)ரே ஸ்புரதி யா தடி(3)த(3)ங்க(3)னேவ
மாதுஸ்ஸமஸ்த ஜக(3)தாம் மஹனீய மூர்தி:
ப(4)த்(3)ராணி மே தி(3)ச(H)து பா(4)ர்க(3)வ நந்த(3)னாயா:



கைடப அரக்கன் தலையைக் கொய்தசக் ராயுத பாணி
சாமள வண்ணப் பரந் தாமனின் மார்பின் மேலே
கருத்திட்ட மேகத் திரளில் தெறித்திட்ட மின்னல் போலே
ஒளிர்ந் திட்டாய் பிருகு வம்சம் பிறந்திட்ட அன்புத் தாயே
அகிலத்தின் அன்னை உன்றன் எழில்விழி என்மேல் பட்டால்
இகபரச் சுகங்கள் யாவும் இன்றேநான் கொள்வேன் தாயே!


6.
ப்ராப்தம் பத(3)ம் ப்ரதமத: கலுயத் ப்ரபா(4)வாத்
மாங்கல்யபா(4)ஜி மது(4)மாதினி மன்மதேன
மய்யாபதேத் ததி(3)ஹ மந்தரம் ஈக்ஷணார்த(4)ம்
மந்தா(3)லஸம் ச மகராலய கன்யகாயா:


போர்க்கணை தொடுத்த அரக்கனைப் புறமிடச்செய் தோன்மீது
மலர்க்கணை தொடுத்து எளிதாய் மாரனும் வென்றது உன்றன்
நிகரில்லாக் காதல் பொங்கும் நீள்விழி துணையால் அன்றோ
நேயத்தால் நெகிழ்ந்து நோக்கும் நங்கையுன் விழிகள் தம்மின்
கடைவிழிப் பார்வை யேனும் கடையன்மேல் பட்டால் போதும்
அளவிலாச் செல்வம் பெற்று அவனியில் உய்வேன் தாயே!


--கவிநயா

 (தொடரும்)

Tuesday, September 27, 2011

கனக தாரை - 3, 4


3.
ஆமீலிதாக்ஷ மதி(4)க(3)ம்ய முதா(3) முகுந்த(3)ம்
ஆனந்த(3)கந்த(3) மனிமேஷ-மனங்கதந்த்ரம்
ஆகேகரஸ்தித கனீநிக பக்ஷ்ம நேத்ரம்
பூ(4)த்யை ப(4)வேன்மம பு(4)ஜங்க(3) ச(H)யாங்க(3)னாயா:


பாதியாய் மூடித் திறந்த விழிகளால் தலைவன் தன்னை
பார்த்தும்பா ராதது போலே பார்க்கின்ற பத்தினிப் பெண்போல்
பிரியமும் ஆசையும் கூட நாணமும் அதனுடன் சேர
பாம்பணை மீதில் துயிலும் முகுந்தனை நோக்கும் விழியை
சாடையாய் என்றன் மேலே சற்றேவைத் தாலும்கூட
பொழிகின்ற செல்வத்தாலே பொலிவுற்று வாழ்வேன் தாயே!


4.
பா(3)ஹ்வந்தரே முரஜித: ச்(ஹ்)ரிதகௌஸ்துபே(4) யா
ஹாராவளீவ ஹரிநீலமயீ விபா(4)தி
காமப்ரதா(3) ப(4)க(3)வதோ(அ)பி கடாக்ஷமாலா
கல்யாணமாவஹது மே கமலாலயாயா


கௌஸ்துபம் என்னும் மணியை மார்பினில் அணிந்த மாயன்
மதுவென்னும் அரக்கன் தன்னை வதைத்தவன் மகிழும் வண்ணம்
மரகத மேனியின் மேலே மற்றொரு மாலை போலே
இந்திர நீல ஜாலம் காட்டிடும் உன்றன் பார்வை
கொஞ்சமே கொஞ்சம் என்மேல் கனிவுடன் பட்டால் கூட
கற்பனைக் கெட்டா பேறால் களிப்பேன்நான் கமலத் தாயே!


--கவிநயா

(தொடரும்)

Monday, September 26, 2011

கனக தாரை

ஓம் கம் கணபதயே நம:

ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பற்றி அறியாத பக்தர்கள் மிகவும் குறைவு. அந்த ஸ்தோத்திரத்தையும், அதன் பொருளையும் வாசிக்க வாசிக்க, அதனைத் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வம் மேலிட்டது. கவியரசர் கண்ணதாசன் அவர்கள் 'பொன்மழை' என்ற பெயரில் ஏற்கனவே இதனை மொழியாக்கம் செய்திருப்பதும் பெரும்பாலானோர் அறிந்ததே. அதனாலேயே ஒரு தயக்கமும் இருந்தது. இருந்தாலும் ஆசை யாரை விட்டது? அம்மாவுக்கு ஒரு (கவியரசு)பிள்ளை பிரமாதமான பரிசு அளித்து விட்டதால், இன்னொரு குட்டிப் பிள்ளை ஏதும் செய்யக் கூடாதென்று இருக்கிறதா என்ன? அதைப் போலத்தான் இந்தச் சிறியவள் தன்னால் இயன்ற அளவில் அம்மாவுக்காக நவராத்திரிக்கெனச் செய்த அன்புக் காணிக்கை, இது.

கிட்டத்தட்ட கடைசி நிமிடத்தில் தந்தாலும், உடனடியாக பொருளை சரி பார்த்து, சரியான நேரத்தில் பேருதவி செய்த என் அன்புக்குரிய தம்பி தக்குடுவிற்கு, என் மனமார்ந்த நன்றிகள். தக்குடுவிற்கும், மற்றும் இதனை வாசிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் அன்னை எல்லா நலன்களும் அளிக்க வேண்டுமாய் பிரார்த்திக்கிறேன்.


"வினையேன் தொடுத்த சொல் அவமாயினும் 
நின் திருநாமங்கள் தோத்திரமே"




கனகதாரா ஸ்தோத்திரம், தமிழில்...

1.
அங்க(3)ம் ஹரே: புளக பூ(4)ஷணம் ஆச்(H)ரயந்தீ
ப்(3)ருங்கா(3)ங்க(3)னேவ முகுளாப(4)ரணம் தமாலம்
அங்கீ(3)க்ருதாகில விபூ(4)தி: அபாங்க(3)லீலா
மாங்க(3)ல்யதா(3)ஸ்து மம மங்கள தே(3)வதாயா:


ஆனந்தத் தேவி நீயே அணியாக மார்பில் மின்ன
அதனாலே அங்கம் எல்லாம் இன்பத்தில் பொங்கித் ததும்பும்
தமால மலரை யொத்த மாலவன் மேனி தன்னை
மையலால் மகிழ்ந்து நோக்கும் பொன்வண்டை யொத்த விழிகள்
சற்றே திசைமாறி என்மேல் தொட்டுச்சென் றாலும்கூட
செல்வங்கள் யாவும் பெற்று சகத்திலே உய்வேன் தாயே!

2.
முக்தா(4) முஹுர் வித(3)த(4)தீ வத(3)னே முராரே:
ப்ரேமத்ரபா ப்ரணிஹிதானி க(3)தாக(3)தானி
மாலா த்(3)ருசோ(H)ர் மது(4)கரீவ மஹோத்பலே யா
ஸா மே ஸச்(H)ரியம் தி(3)ச(H)து சாக(3ரஸம்ப(4)வாய


நீலத்தா மரையின் மேலே பாகொக்கும் தேனைப் பருக
தரிகெட்டு அலைந்து திரியும் தேனீக்கள் போலே தாமும்
நாணத்தால் தயங்கிப் பின்னர் நெஞ்சத்தின் காதல் மீற
முராரி முகத்தின் எழிலைப் பருகும்உன் விழியிரண்டும்
நேயத்தால் சற்றே என்மேல் நிலைத்திடு மாயின் நானும்
பாக்கியம் செய்தே னாவேன் பாற்கடல் பிறந்த தாயே!


--கவிநயா

(தொடரும்)

Sunday, September 18, 2011

உருவ வழிபாடு ஏன்?


சுவாமி விவேகானந்தர் ஒரு முறை, இராஜபுதன சமஸ்தானம் ஒன்றிற்கு சென்றிருந்தார். அங்கிருந்த திவானுக்கு அவருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. அந்த திவான் ஒரு முறை, மகாராஜாவிடம் விவேகானந்தரைப் பற்றிக் கூற, அரசருக்கும் விவேகானந்தரைச் சந்திக்கும் ஆர்வம் ஏற்பட்டது.

இருவரும் சந்தித்து அளவளாவிக் கொண்டிருக்கும் போது, மகாராஜா, “சிலைகளை வணங்குவதில் எனக்கு விருப்பம் இல்லை; என் கதி என்ன ஆகும்?” என்று கேட்டு விட்டு ஏளனமாகப் புன்னகை புரிந்தார்.

சுவாமிகள் உடனே, “என்ன ஏளனம் செய்கிறீர்களா?”, என்று கேட்டார்.

மகாராஜா மீண்டும், “இல்லை சுவாமிகளே. பாமரர் போன்று நான் கல்லையும், மண்ணையும், உலோகத்தையும் வணங்க மாட்டேன். இது ஒரு குற்றம் என்றால் நான் மறுமையில் துன்புற நேரிடுமோ?” என்று கேட்டார்.

சுவாமிகள் அதற்கு, “ நல்லது. ஒவ்வொருவரும் அவரவர் கொள்கையின் படி நடந்து கொள்ளட்டும்”, என்று அமைதியாகக் கூறினார்.

சிறிது நேரம் கழிந்த பின், அங்கு சுவரில் மாற்றப் பட்டிருந்த படம் ஒன்றைக் கொண்டு வரச் செய்தார். அப்படத்தை வாங்கிக் கையில் வைத்துக் கொண்டு, திவானை நோக்கி, “நீர் சிறு காரியம் ஒன்றைச் செய்வீரா?” என்று கேட்டார்.

திவான் உடனே, “தங்கள் கட்டளையை நிறைவேற்ற நான் கடமைப் பட்டிருக்கிறேன்”, என்று கூறினார்.

அவரிடமிருந்து அந்த வாக்கைப் பெற்றுக் கொண்ட பிறகு, சுவாமிகள் தன் கையில் இருந்த படத்தின் மீது காறித் துப்பும்படி திவானை ஏவினார்; மற்றவர்களையும் அவ்வாறே தூண்டினார். ஆனால் அவர்கள் எல்லோருமே அவ்வாறு செய்வதற்கு அஞ்சினார்கள்.

அப்போது சுவாமிகள், “ஏன், இது வெறும் கண்ணாடியும், காகிதமும் தானே? இதில் துப்புவதற்கு என்ன தயக்கம்?” என்று வினவினார்.

அதற்கு அவர்கள், “இது எங்கள் அரசர் பெருமானின் படம் அல்லவா?” என்று அடங்கிய குரலில் கூறினார்கள்.

அதைக் கேட்ட சுவாமிகள், “இந்தப் படம் உங்கள் மகாராஜா அல்ல என்பது உங்களுக்குத் தெரியும். இது அவருடைய பிரதிபிம்பம் மட்டுமே. ஆனாலும் இதன் மூலம் நீங்கள் அவருக்கு மரியாதை காட்டுகிறீர்கள். இது போன்றே, கல்லும் மண்ணும் கடவுள் ஆகி விட மாட்டா. ‘கல்லே, மண்ணே, தாமிரமே’ என்று யாரும் வழிபடுவதில்லை. இவற்றால் செய்திருக்கும் விக்கிரகங்கள் அல்லது சின்னங்களின் மூலம் எல்லாம் வல்லவனாய், எங்கும் நிறைந்தவனாய் விளங்கும் முழுமுதற் கடவுளையே நினைத்து மக்கள் வணங்குகின்றனர். கடவுள் பற்றிய நினைவை உண்டாக்குவதற்கே உருவங்கள் உதவி புரிகின்றன”, என்று விளக்கமாகக் கூறினார்.

அதைக் கேட்ட மகாராஜா, “ சுவாமிகளே. இந்த விஷயத்தில் நான் இது வரை அறிவில்லாதவனாக இருந்தேன். இப்போது கண் விழித்துக் கொண்டேன்”, என்று கூறி விவேகானந்தரை கைகூப்பி வணங்கினார்.


-- "விவேகானந்தரின் வாழ்க்கை நிகழ்ச்சிகள்" என்ற புத்தகத்திலிருந்து...

Sunday, September 11, 2011

மொழி


பெற்றவளை அம்மா என்றுதான்
நானும் அழைத்தேன்
நீயும் அழைத்தாய்

அகர முதல எழுத்தெல்லாம்
அரிச் சுவடி தொடங்கித்தான்
நானும் படித்தேன்
நீயும் படித்தாய்

வானத்தின் நிறத்தை நீலம் என்பதாய்த்தான்
நானும் அறிந்தேன்
நீயும் அறிந்தாய்

வானவில் காண்கையில் அழகு என்றுதான்
நானும் ரசித்தேன்
நீயும் ரசித்தாய்

இருப்பினும்
கண்டத்தில் புறப்பட்ட
பொருளில்லாச் செருமல் போல்
நீ பேசுவன எனக்கும்
நான் பேசுவன உனக்கும்
புரியாமலே போவ தெப்படி?

--கவிநயா

Sunday, September 4, 2011

என்ன பேரு வைக்கலாம்?

பேர் வெக்கிறதுன்னா ரொம்பப் பிடிக்கும், சந்திரனுக்கு. இப்பன்னு இல்ல, சின்னப் புள்ளையில இருந்தே அப்படித்தான். ஒண்ணாங் கிளாஸ் படிக்கும் போதே ‘ஓகே மிஸ்’ அப்படின்னு இஞ்கிலீஷ் டீச்சருக்கு பேர் வச்சான்! ஏன்னா அவங்க “ஓகே? ஓகே?” அப்படின்னு மூச்சுக்கு முந்நூறு தரம் சொல்லுவாங்களாம்.

இப்ப குடும்பஸ்தனா ஆனபிறகும் அந்தப் பழக்கம் விடல. நண்பர்கள், உறவினர்கள், ஏன், பஸ்ல, ரயில்ல பழகறவங்களுக்குக் கூட பேர் வெச்சிருவான்.

அன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. சாயந்திரம் நொறுக்கறதுக்கு உருளைக்கிழங்கு போண்டா பண்ணியிருந்தா, அவன் மனைவி ரமா. சுடச் சுட ஆனந்தமா சாப்பிட்டான்.

“ரமா, இந்த போண்டாவைப் பார்த்தோன்ன உனக்கு என்ன ஞாபகம் வருது, சொல்லு பார்ப்போம்”

போண்டாவை எண்ணெயில போட்டுக்கிட்டே “ரவி… ரவி… நீயும் வந்து போண்டா எடுத்துக்கோட கண்ணா. உனக்குப் பிடிக்குமே”, என்று மகனைக் கூப்பிட்டவள், “எனக்கொண்ணும் நினைவு வரலையே?” புருவத்தைச் சுருக்கினா, ரமா.

“நம்ம வீட்டுக்கு வந்த ஒத்தர் நீ பண்ணின போண்டாவெல்லாம் யாருக்கும் மிச்சம் வெக்காம தானே சாப்பிட்டாரே… நினைவில்லயா நம்ம போண்டா மாமாவை? அப்பாடி. என்னமா சாப்டார் மனுஷன்!”

“ஏங்க, என் போண்டா அவருக்கு அவ்வளவு பிடிச்சதில எனக்கு சந்தோஷம் தான். பாவம் அவர ஏன் நீங்க இன்னும் கிண்டல் பண்றீங்க?” சொல்லிக்கிட்டே மணக்க மணக்க காஃபியைப் பக்கத்தில வெச்சா.

“அதில்ல ரமா. அவர் பொண்டாட்டி அவருக்கு போண்டாவே செஞ்சு குடுத்திருக்க மாடாங்கன்னு நெனக்கிறேன்… ஆமா, அந்தம்மாவை நினைவிருக்கோ ஒனக்கு?”

“ஏன் நினைவில்லாம? நல்லா நினைவிருக்கே”

“அதானே. எதை மறந்தாலும் அந்த ஜி.ஆர்.டி. ஆண்ட்டியை எப்படி மறப்பே?”

“ஏங்க, அவங்க எக்கச்சக்கமா நகை போட்டுக்கிட்டு வந்தது உண்மைதான், அதுக்குன்னு இப்படியா பேர் வெப்பீங்க?” அப்படின்னு சொன்னாலும் இதழில் பிறந்த புன்னகையைத் தடுக்க முடியலை, ரமாவுக்கு.

“பின்ன என்ன ரமா? நம்ம பையன் பிறந்த நாளுக்கு வர்றவங்க இப்படியா வர்றது? பையனோட அம்மா, நீயே அவ்வளவு பிரமாதமா அலங்காரம் பண்ணிக்கல! வந்தவங்களுக்கே சந்தேகம் வந்திருக்கும், அது யார் வீட்டு விசேஷம்னு!”

அத்தனையும் பேசிட்டு, கூடவே மறக்காமல், “காஃபியும் போண்டாவும் சூப்பர் ரமா”, மனைவியையும் மனமாரப் பாராட்டும் போது அழைப்பு மணி அடிச்சது.

“நாம் பாக்கிறேம்மா”, ரவி எழுந்து வாசலுக்கு ஓடிப் போய் கதவத் தொறந்தான்.

“ஹாய் அங்கிள். ஹாய் ஆண்ட்டி”, என்றவன், “அப்பா, நீங்க பேசிக்கிட்டிருந்தீங்களே அந்த போண்டா மாமாவும், ஜி.ஆர்.டி. ஆண்டியும் வந்திருக்காங்க”, என்று உள்ளே திரும்பி சத்தமாக அறிவித்தான்!

**

பாடம் 1: புறம் பேசாமல் இருப்பது மிக மிக நல்லது.
பாடம் 2: அப்படியே பேசினாலும் குறைந்தது குழந்தைகள் முன்பு பேசாமல் இருப்பது நல்லது.

**

--கவிநயா