Wednesday, August 31, 2011

கணபதியே போற்றி போற்றி!

சதுர்த்தித் திருநாளில் கற்பகக் கணபதியின் அருள் அனைவருக்கும் நிறைந்திருக்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.


இந்தப் பாடலை சுப்பு தாத்தா குரலில் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா! 

கார்மேக நிறங் கொண்ட கருணைமிகு கணபதியே
உன்பாதம் சரணமய்யா

பார்போற்றும் சதிபதியாம் பரமசிவன் பார்வதியின்
புதல்வனே சரணமய்யா

பேர்கொண்ட முதற்பிள்ளை தானென்று திகழும்உன்
திருப்பாதம் சரணமய்யா

மார்தன்னில் திருமகளைத் தாங்குகின்ற மாலவனின்
மருமகனே சரணமய்யா

வித்துக்கு வித்தாகி முத்தான முதற்பொருளே
முதல்வனே சரணமய்யா

சக்திக்குச் சொத்தான மத்தகக் கணபதியே
மலர்ப்பாதம் சரணமய்யா

தொந்திக்குள் உலகத்தை பந்தைப்போல் வைத்தாளும்
கஜமுகனே சரணமய்யா

வந்தித்து அனுதினமும் சிந்தித்து உனைப்பணிந்தோம்
சிவைமைந்தா சரணமய்யா

சுழிபோட்டு தொடங்கிவிட்டால் வழியெல்லாம் நேராக்கி
அருள்புரிவாய் போற்றி போற்றி

அழியாத வினைகளையும் பொழிகின்ற கருணையினால்
அழித்திடுவாய் போற்றி போற்றி

மரத்தடியாய் இருந்தாலும் மறுக்காமல் குடியேறும்
மயூரேசா போற்றி போற்றி

சிரத்தையுடன் பணிகின்றோம் சீக்கிரமே வந்திடுவாய்
திருவடிகள் போற்றி போற்றி!


--கவிநயா

Sunday, August 28, 2011

எங்க ஊருக்கு வந்த ஐரீன்


எதிர்பார்த்துக் கொண்டிருந்த புயல் ஆரம்பித்து விட்டது. மிகவும் பாதுகாப்பாக, வீட்டுக்குள்ளிருந்த வண்ணம் சன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

உள்ளேயிருந்து பார்க்கையில் பயங்கரம் தெரியவில்லை. மாறாக, புயற்காற்று மிகவும் அழகு மிகுந்ததாக, ஆக்ரோஷம் நிறைந்ததாக, கண்ணகல வைப்பதாக, ‘அடேயப்பா!’ என்று அதிசயிக்க வைப்பதாக, மனசை மயக்குவதாகத்தான் இருக்கிறது.

மழை அடித்து ஊற்றுகிறது. வேகமாக வரும் காற்று, அந்த மழையை அப்படியே நாம் கைகளால் அல்லது துடுப்பால் தண்ணீரைத் தள்ளுவது போல் தள்ளிக் கொண்டே போகிறது. அந்தத் தண்ணீரால் பூமியைத் தொடக் கூட முடியவில்லை. அப்படியே காற்றோடு கை கோர்த்து பறந்து போவது போல் ஒரே ஓட்டம். அப்பாவும் பிள்ளையும் நடக்கும் போது, அப்பா கையை விட்டு விட்டுப் போய்விட நேர்ந்தால், ‘அப்பா, அப்பா’ என்று பிள்ளை பின்னாடியே ஓடுவது போல்தான் மழைத் தண்ணீரும் தரையில் கால் பாவாமலேயே காற்றோடு ஓடிக் கொண்டிருக்கிறது.

மரங்களெல்லாம் பேயாட்டம் ஆடுகின்றன. இருக்கிற கைகளையெல்லாம் வான் நோக்கி விரித்துக் கொண்டு அந்த இறைவனை ‘இந்த க்ஷணமே வருகிறாயா, இல்லையா?’ என்று மிரட்டலாக இறைஞ்சுவது போல் இருக்கிறது. வராவிட்டால் தாமே அவனை எட்டிப் பிடித்து விட வேண்டுமென்ற எண்ணத்துடன், விண்ணைத் தொட்டு விடும் விடா முயற்சியுடன் இருப்பது போல் இருக்கிறது.

‘எத்தனை நாள்தான் ஒரே இடத்தில் நிற்பது? என்னை இடம் மாற்றி விடு’ என்று கேட்பது போலவும் இருக்கிறது.

இருக்கும் இடத்திலும் சிறக்க முடியாமல், வேறிடத்துக்கும் போக முடியாமல் அவதிப்படும் இரண்டுங்கெட்டானைப் போல, வேரைப் பிடுங்கிக் கொண்டு போகவும் முடியாமல், எட்டி வானத்தைத் தொடவும் முடியாமல் இந்த மரங்களெல்லாம் தவித்துக் கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது.

நாம் இப்படி இங்கே உட்கார்ந்து புயலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம், வேறு யாருக்குமே எதுவும் ஆகாமல், எல்லோருமே நலமாக இருக்க வேண்டுமே, என்ற பிரார்த்தனையும் எழுகிறது. எங்கள் வீட்டுக்கு அருகிலும் நிறைய மரங்கள் இருக்கின்றன. அவற்றையும் அச்சத்துடன் கவனித்துக் கொண்டிருக்கிறோம்.

மின்சாரம் இல்லாமல் போனாலும் போய்விடும். மின்சாரம் இல்லா விட்டால் ஒரு தேநீர் கூடக் குடிக்க முடியாது. இந்த யோசனையுடனே அவசரமாக இரவுக்கு வேண்டியதை விரைவாகச் சமைக்கிறேன்.

மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, கை விளக்கு, இப்படி எல்லாவற்றையும் எடுத்து கைக்கு எட்டிய தொலைவில், சட்டென்று எடுக்கும் விதமாக தயாராக வைக்கிறோம். ஆனால் எங்களுக்கு என்னவோ மின்சாரம் போகவில்லை. சில நண்பர்களுடன் தொலைபேசி, நலம் விசாரிக்கிறோம்.

வீட்டுக்கு அருகில் இரண்டு பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டிருக்கின்றன. வீட்டிற்கு எதிர்ப்புறமாக.

இரவு முடிந்து விட்டது. புயல் கடந்து விட்டது. மறு நாள் விடிந்து விட்டது. காற்றும் மழையும் ஓய்ந்து, மிகப் பிரகாசமாக வெயில் அடித்துக் கொண்டிருக்கிறது. நேற்றுதானா அத்தனை புயலும், மழையும், என்று வியக்கும்படி…

ஆங்காங்கே விழுந்து கிடந்த மரங்களும், கிளைகளும், வீதியெல்லாம் பாய் விரித்திருந்த இலைகளும்தான், ‘ஆம், நேற்றுதான்… அதற்கு நாங்களே சாட்சி’ என்று பதிலளிக்கின்றன.

இன்னும் நின்று கொண்டிருக்கும் மரங்களெல்லாம், பெருந் தாண்டவம் ஆடி முடித்த களைப்புடன், தியானத்தில் ஆழ்ந்து விட்டதைப் போல அசையாமல் நிற்கின்றன.


--கவிநயா

Saturday, August 27, 2011

ஜணுத ஜணுத தக...

(தொடர்ச்சி)

5. ஊர்த்துவ தாண்டவம்

தாண்டவத்துக்கு சிவன் அதிபதி போல, லாஸ்யத்துக்கு சக்தி அதிபதியாம். அதாவது தாண்டவத்தை சிவன் ஏற்படுத்தியதி போல, லாஸ்யத்தை ஏற்படுத்தியவள், சக்தி. லாஸ்யம் என்பது மென்மையும் நளினமும் கொண்டது.


ஒரு முறை சிவனுக்கும், சக்திக்கும், தத்தம் திறமையே உயர்ந்தது, அப்படின்னு கலகம் ஏற்பட்டதாம். அதைத் தீர்க்கறதுக்காக, அவங்க ரெண்டு பேரும் கந்தர்வர்கள், கின்னரர்கள், இன்னும் பல தேவசாதியினரின் முன்னால் நடனம் ஆட ஆரம்பிச்சாங்களாம். இரண்டு பேரின் நடனமுமே உயர்வு தாழ்வு பிரிச்சு சொல்ல முடியாதபடி ரொம்ப அருமையா இருந்ததாம். போகப் போக இலேசா சக்தியின் கை ஓங்கும் போல இருந்ததாம். அந்த சமயம், சிவன் அவரோட ஒரு காலை தலை வரை தூக்கி வச்சு தாண்டவம் செய்தாராம். சக்திக்கு அப்படிச் செய்ய விருப்பமில்லாமல் தோல்வியை ஒப்புக் கொண்டாளாம். அந்த சமயத்தில் சிவபெருமான் ஆடிய நடனம்தான் ஊர்த்துவ தாண்டவம்.

6. உமாமகேசுவர தாண்டவம்

அனைத்தையும் சிவபெருமான் தன்னுள் அடக்கிக் கொள்கிற சமயம், அவனும், அம்பிகையும், மயானத்தில் நடனம் செய்கின்றனராம். வீர பைரவனாக சிவ பெருமானும், வீர பைரவியாக அம்பிகையும், நிருத்தம் செய்யறாங்க. ஒவ்வொரு உடலினின்றும் விடுபடுகிற உயிர் வந்து அவர்களோட கலக்க, மயானத்தில் எரிஞ்சிக்கிட்டிருக்கும் சிதைகளில் இருந்து பொறிகளாக ஒளிக் கதிர்கள் அவர்களுக்குள்ளே புகுந்து விடுகின்றனவாம். அப்போது அவர்களுடைய நடனம், மலைகள் உருள, கடல்கள் பொங்க, நிலமே தடுமாறி அசைகிற மாதிரி வீராவேசமா இருக்காம். இந்த தாண்டவத்தையே உமா தாண்டவம் அல்லது உமாமகேசுவர தாண்டவம், அப்படின்னு சொல்றாங்க.

7. சம்ஹார தாண்டவம்

உலகங்கள் எல்லாத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்ட பின்னால் பரமசிவன் புரிகிற பிரளய தாண்டவத்தைத் தான் சம்ஹார தாண்டவம் அப்படிங்கிறாங்க. இந்தத் தாண்டவமும் மயானத்தில் தான் நடக்கிறதாம். உடலெங்கும் திருநீறணிந்து, செஞ்சடையில் சந்திரனின் கலை அசைந்து ஆட, உலக மாயையிலிருந்து சீவர்களை விடுவித்து தன்னில் அடக்கிக் கொண்டு விட்ட பெருமையை வெளிப்படுத்தும் வண்ணம் சிவன் இந்த தாண்டவத்தை ஆடுகிறானாம்.

இன்னும் எத்தனையோ விதமான தாண்டவங்களும், சில சமயங்களில் வெவ்வேறு பெயர்களிலும் அறியக் கிடைக்கின்றன. இவற்றை முக்கியமான ஏழு தாண்டவங்களாகக் கொள்ளலாம்.


அன்புடன்
கவிநயா

நன்றி: கலைமாமணி எஸ்.என்.ஸ்ரீராமதேசிகன் அவர்கள் தமிழாக்கம் செய்திருக்கும் 'பரதநாட்டிய சாஸ்திரம்'.

படம் இங்கேர்ந்து. அங்கேயே இன்னும் வேற நல்ல படங்களும் பார்த்தேன்.

Sunday, August 21, 2011

முத்தம் தர வாடா!

செல்லக் குட்டிக் கண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!


கண்ணன் - என் குழந்தை

சின்னக் கண்ணா வாடா, என்றன்
செல்லக் கண்ணா வாடா!
அன்னை மனம் மகிழ, நீயோர்
அன்பு முத்தம் தாடா!

பட்டுப் பிஞ்சுப் பாதம், பதித்து
தத்தித் தவழ்ந்து வாடா!
கட்டி முத்தம் ஒன்று, அம்மா
கன்னத் திலே தாடா!

சின்னச் சிட்டுப் போலே, கிள்ளைமொழி
பேசிக் கொண்டு வாடா!
சின்னச் செப்பு வாயில், தேனொழுக
செல்ல முத்தம் தாடா!

வண்ண மயிற் பீலி, அசைய
அன்னம் போல வாடா!
வெண்ணெய் உண்ட வாயால், எனக்கோர்
வெல்ல முத்தம் தாடா!

மண்ணி லோர் மாமணியாய், வந்த
மன்ன வனே வாடா!
மண்ணை யுண்ட வாயால், எனக்கோர்
முத்து முத்தம் தாடா!

கண் ணிரண்டும் வண்டாய், சுழல
கண்ணின் மணி வாடா!
கன்னத்தில் கன்னம் வைத்து, எனக்கோர்
கன்னல் முத்தம் தாடா!

பூவைப்பூ வண்ணக் கண்ணா, பூப்போல்
மெல்ல மெல்ல வாடா!
பாதாதி கேச மெங்கும், பட்டுப்போல்
முத்தம் தரேன் வாடா!


--கவிநயா


படத்துக்கு நன்றி: http://www.punjabigraphics.com/pg/janmashtami/page/2/

Sunday, August 14, 2011

ஜணுத ஜணுத தகி ஜணுத ஜணுத தக

ஆறிலும் கத்துக்கலாம்..., அறுபதிலும் கத்துக்கலாம்...! - 4

பரதம் பற்றிய மற்ற பதிவுகள் இங்கே...


குனித்த புருவம்.
கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பு.
பனித்த சடை.
பவளம் போல மேனி.
பால் வெண்ணீறு.
இனித்தமுடன் எடுத்த பொற்பாதம்…

ஆஹா! அப்பர் சுவாமிகள் பாடும்போதே, அவரைப் போல நேரில் பார்க்கும் பாக்கியம் நமக்கு கிடைக்காட்டாலும், அப்படி ஒரு காட்சி கிடைச்சா எத்தனை பிறவி வேணும்னாலும் எடுக்கலாம், அப்படின்னு அவர் சொல்வதன் பொருள் இலேசா புரியறாப்லதானே இருக்கு!

அவரு இப்படி உருகி உருகிப் பாடும் அப்பேற்பட்ட அழகன் யாருன்னு நினைக்கிறீங்க? (இந்தப் பாட்டைப் பற்றி இது வரை தெரியாதவங்க மட்டும்தான் கை தூக்கணும்! :)

ஒரு குறிப்பு தரவா? … அவனுக்கு சுந்தரன், அப்படின்னு கூட ஒரு பேர் இருக்கு. என்ன, யூகிச்சீங்களா? ….. சரி, நானே சொல்லிர்றேன்… அது வேற யாருமில்ல, சாக்ஷாத், நம்ம சுந்தரியோட கணவன், எ(ன் த)ந்தை ஈசன்தான். சுந்தரி தன் மேனியை வேற அவனோட பகிர்ந்தாள் இல்லையா! அதனாலதான் அவனுக்கு அவ்ளோ அழகு வந்திருக்கு போல! :)

நடராஜன், நடனத்துக்கு மட்டும் ராஜனல்ல, இந்த அண்ட சராசரத்துக்கெல்லாம் ராஜன். அவன் எத்தனையோ வித விதமான நாட்டியங்களை ஆடறானாம். அப்படி அவன் ஆடுகிற நாட்டியத்துக்கெல்லாம் ‘தாண்டவம்’ அப்படின்னு பேரு. ‘தாண்டவம்’, அப்படிங்கிற சொல்லிலேயே எத்தனை கம்பீரம்!

இறைவனுக்கு ஐந்து தொழில்கள் உண்டாம். சாதாரணமா மூன்றைத்தான் பிரதானமா சொல்வாங்க. படைத்தல், காத்தல், அழித்தல், அப்படின்னு. ஆனா உள்ளபடி ஐந்து தொழில்கள் இருக்காம், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல், அப்படின்னு. இந்த ஐந்து தொழில்களையும் செய்யறதால ஈசனுக்கு ஏற்படுகிற ஆனந்தமே, தாண்டவங்களாக வெளிப்படுதாம்.

அப்படி கூத்தபிரான் செய்கிற தாண்டவங்கள், மொத்தம் 7. அவை, ஆனந்த தாண்டவம், சந்தியா தாண்டவம், கலிக தாண்டவம், விஜய தாண்டவம், ஊர்த்வ தாண்டவம், உமா தாண்டவம், சம்ஹார தாண்டவம், எனப்படுவன. அவற்றைப் பற்றி சுருக்கமா பார்க்கலாம்…

1. ஆனந்த தாண்டவம்

தன்னுடைய உலகப் படைப்பைக் கண்டு இறைவன் மகிழ்ச்சி கொண்டு ஆனந்த தாண்டவம் புரிகிறானாம்.

வலது கையில் ஏந்திய உடுக்கை, உலகப் படைப்புக்குக் காரணமான நாதத்தைத் தோற்றுவிக்கிறது. இடது கையில், படைப்புக்கு இடையூறாக வரும் தீய சக்திகளை ஒழிக்கும் அக்னியை ஏந்துகிறான். ஒரு கை அபயம் அளிக்க, இன்னொரு கை வெற்றியைக் குறிக்கிறது.

2. சந்தியா தாண்டவம்

இடையூறின்றி படைப்புத் தொழில் நடைபெறுவதில் ஆனந்தம் கொண்டு, அந்தி வேளையில் இந்த நடனம் புரிகிறானாம்.

உமா தேவி இரத்தின சிம்மாசனத்தில் வீற்றிருக்க, இந்திரன் குழல் ஊத, திருமால் மிருதங்கம் வாசிக்க, பிரும்ம தேவன் தாளமிட, கலைமகள் வீணை மீட்ட, தேவரெல்லாம் கண்டு களிக்க, சிவபெருமான் சந்தியா தாண்டவம் செய்கிறானாம்.

3. கலிக தாண்டவம்

உலக முன்னேற்றத்தைத் தடை செய்யும் அஞ்ஞானம், அதர்மம், போன்ற தீய சக்திகளை அழித்து, அணையா ஜோதியை ஏற்றி வைத்ததன் சிறப்பை இந்த தாண்டவத்தின் மூலம் உணர்த்துகிறானாம்.

4. விஜய தாண்டவம்

ரொம்ப காலங்களுக்கு முன்னால், சில பேருக்கு நெறய்ய மந்திர சக்தி இருந்துச்சாம். ஆனா அதை கெட்டது செய்யத்தான் பயன்படுத்தினாங்களாம். அவங்கள திருத்தறதுக்காக, நம்மாளு, ஒரு முனிவரைப் போல அவங்க இடத்துக்கு போனானாம். ஆனா அவங்க திருந்தற மாதிரி இல்லையாம். சிவனை அழிக்கறதுக்குன்னே ஒரு வேள்வி வளர்த்து, அதுல இருந்து ஒரு பயங்கரமான புலியை வர வச்சு, சிவபெருமான் மேல ஏவினாங்களாம். ஆனா சிவன், அந்தப் புலியை ரொம்ப சுலபமா பிடிச்சு, சுண்டு விரலாலேயே அதோட தோலை உரிச்சு, இடுப்புத் துணியா கட்டிக்கிட்டானாம்!

அடுத்த்தா அந்த கெட்ட முனிவர்கள், ஒரு பெரிய்ய்ய்ய நச்சுப் பாம்பை ஏவி விட்டாங்களாம். ஆலஹால விஷத்தையே விழுங்கினவனுக்கு பாம்பு எம்மாத்திரம்? அதையும் பிடிச்சு, தன் கழுத்தில் மாலை ஆக்கிட்டானாம்!

அப்பவும் அந்த முனிவர்கள் முயற்சியை விடலையாம். எல்லா தீய சக்திகளையும் ஒண்ணு சேர்த்து, கஜாசுரன் அப்படிங்கிற அசுரனை ஏற்படுத்தி, சிவனை அழிக்க அனுப்பினாங்களாம். அந்த அரக்கனை சிவபெருமான் தன் காலடில போட்டு மிதிச்சு வெற்றி பெற்று, தாண்டவம் செய்தானாம். அதுதான் விஜய தாண்டவமாம்.

**

மீதி இருக்கிற 3 தாண்டவங்களையும் பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்...

அன்புடன்,
கவிநயா

நன்றி: கலைமாமணி எஸ்.என்.ஸ்ரீராமதேசிகன் அவர்கள் தமிழாக்கம் செய்திருக்கும் 'பரதநாட்டிய சாஸ்திரம்'.


Thursday, August 11, 2011

வரலக்ஷ்மி தேவி!

வரலக்ஷ்மி விரத சிறப்புப் பதிவு.



லலிதாம்மா மூலமாக அறிமுகமான கலா அவர்கள் இந்தப் பாடலை தன் மிக இனிமையான குரலில் பாடித் தந்திருக்காங்க. கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி கலா, மற்றும் லலிதாம்மா!

வரலக்ஷ்மி தேவி வரவேண்டும் அம்மா!
வேண்டும் வரம் அத்தனையும் தர வேண்டும் அம்மா
(வரலக்ஷ்மி தேவி)

மறைக ளெல்லாம் போற்ற அலைகடலில் உதித்தாய்
மரகத வண்ணனை மன்னவனாய் வரித்தாய்!
(வரலக்ஷ்மி தேவி)

மாலவன் மார்பினிலே மணியெனவே ஒளிர்வாய்
தாளிணைகள் பணிகின்றோம் தயக்கமின்றி அருள்வாய்
கோல எழில் தாமரையில் கொஞ்சும் வடிவுடனே
கோலம் கொண்ட திருமகளே தஞ்சம், அருள் தருவாய்!
(வரலக்ஷ்மி தேவி)

--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.hindudevotionalblog.com/search/label/Goddess%20Lakshmi%20Images

Sunday, August 7, 2011

சொக்கத் தங்கமே உறங்கு...!

Sleeping Baby

ஆராரோ ஆரிரரோ ஆரிரரோ ஆராரோ
ஆராரோ ஆரிரரோ ஆரிரரோ ஆராரோ

அம்மவென் றழைக்கவந்த அஞ்சுகமே கண்ணுறங்கு
ஆராரோ பாடுகிறேன் அம்மாடி நீயுறங்கு

தேவரெல்லாந் தாலாட்ட தெய்வமக ளேயுறங்கு
மூவருன்னைத் தாலாட்ட முத்தமிழே கண்ணுறங்கு

வான்நிலவு தாலாட்ட வண்ணமல ரேயுறங்கு
தேன்நிலவு தாலாட்ட தேவதையே கண்ணுறங்கு

ஆடிவருந் தென்றலிலே அல்லிமல ரேயுறங்கு
பாடிவருந் தென்றலிலே பங்கயமே கண்ணுறங்கு

வண்டாடுஞ் சோலையிலே வண்ணமயில் போலுறங்கு
செண்டாடும் பூவிழியே செண்பகமே கண்ணுறங்கு

சூரியனும் உறங்குதடி செல்வமக ளேயுறங்கு
வாரியுன்னைக் கட்டிக்கொள்ள வட்டமிடுங் கண்ணுறங்கு

சிப்பிக்குள்ளே முத்துறங்க சிட்டுப்போல நீயுறங்கு
வித்துக்குள்ளே மரமுறங்க அத்திப்பூவே கண்ணுறங்கு

மேகத்திலே மழையுறங்க மெல்லமெல்ல நீயுறங்கு
சோகமெல்லாந் தீர்க்கவந்த சொக்கத்தங்க மேயுறங்கு

ஆராரோ ஆரிரரோ ஆரிரரோ ஆராரோ
ஆராரோ ஆரிரரோ ஆரிரரோ ஆராரோ


--கவிநயா