Sunday, July 31, 2011

என்ன செய்யப் போறாளோ?

திண்ணையில சிலுசிலுன்னு காத்து வருது. சுகமா கண்ணை மூடி சாய்வு நாற்காலில சாஞ்சுக்கிட்டிருக்கான், முத்து. வாழ்க்கையை அனுபவிக்கத் தெரிஞ்சவன். எதுக்கும் ரொம்ப அலட்டிக்க மாட்டான். பொறுமை அதிகம். இந்த நிமிஷம் எந்தக் கவலையும் இல்லை. அந்த சுகத்தை அனுபவிக்க வேண்டாமோ?

மனைவி இவனுக்கு நேர் எதிர். எதுக்கெடுத்தாலும் பயப்படுவா, பதட்டப்படுவா. கவலைப்பட ஒண்ணுமே இல்லைன்னாலும், கண்டதை கற்பனை பண்ணிக்கிட்டு எதைப் பத்தியாவது கவலைப் பட்டுக்கிட்டே இருக்கணும், அவளுக்கு! “நான் முதல்ல போய் சேர்ந்துட்டா, இவ தனியா என்னதான் பண்ணுவாளோ”ன்னு முத்து நினைக்கிறதுண்டு. இப்ப உள்ளே சமையல்ல இருக்கா. ஒரே பொண்ணு முதல் வருஷம் பி.எஸ்.சி. படிக்கிறா. கல்லூரில இருந்து சுற்றுலா கூட்டிக்கிட்டு போயிருக்காங்க. இன்னும் ரெண்டு நாள் இருக்கு, வர.

உள்ள தொலைபேசி கூப்பிடற சத்தம் கேக்குது. ஆனாலும் முத்துவுக்கு எழுந்திருக்க மனசில்லை. ஏன், மூடின கண்ணைத் திறக்கக் கூட மனசில்லை; வாயைத் திறந்து மனைவியைக் கூப்பிட்டு ‘அந்த போனை எடேன்’ ன்னு கத்தவும் மனசில்லை! அந்த அமைதியிலேயே அப்படியே முழுக நினைக்கிறவனைப் போல அசையாம இருக்கான்.

அடுப்படில இருந்து கத்தறா ரமா. ‘என்னங்க, இந்த போனை எடுத்தா என்ன? நா இங்க கைவேலையா இருக்கேன்...”

இனியும் படுத்திருக்க முடியாது… ஹும்… பெருமூச்சோட, “சரி… சரி.. இதோ போறேன்…”

“ஹலோ”

“ஹலோ… மலரோட அம்மா அல்லது அப்பாகிட்ட கொஞ்சம் பேசணும்…”

“நான் மலரோட அப்பாதான் பேசறது. என்ன விஷயம், சொல்லுங்க…”

“கல்லூரில இருந்து சுற்றுலா வந்தோம் இல்லையா. நாந்தான் அவங்க கூட வந்த பேராசிரியை. என் பேரு கலாமணி. இங்க வந்த இடத்துல ஒரு சின்ன விபத்து…”

“என்ன? விபத்தா? ஐயோ! மலருக்கு என்ன ஆச்சு?”

கேள்வி கேக்கறான், ஆனா அவங்க சொல்ற பதிலை கேக்கறதுக்குள்ள கண்ணு செருகி மயக்கம் வந்துருச்சு. போன் கைல இருந்து நழுவுது. நல்ல வேளையா சோபால உட்கார்ந்து பேசினதால, மயக்கம் வந்த போது அப்படியே அதுல சாஞ்சுட்டான்.

இவன் சத்தத்தைக் கேட்டு ஓடி வரா, ரமா.

“என்னங்க ஆச்சு?” ஒரு நொடியில் நிலைமையை எடை போட்டவள், சட்டுன்னு போனை எடுத்து, “கொஞ்சம் இருங்க, என் கணவர் மயக்கமாயிட்டார்”னு சொல்லிட்டு, அவங்க பதிலுக்கு காத்திருக்காம போனை கீழே வைக்கிறா. வேகமா தண்ணி எடுத்துக்கிட்டு வந்து அவன் முகத்தில் தெளிக்கிறா. மயக்கம் தெளியற வரை இலேசா விசிறி விடறா. மெதுவா அவனை எழுப்பி உட்கார வைச்சு, கொஞ்சம் தண்ணியை குடிக்க வைக்கிறா. அப்புறம்தான் போனை எடுத்து பேசறா.

போன்ல இருந்தவங்க, “ஹலோ… ஹலோ…இருக்கீங்களா…”ன்னு சொல்லிக்கிட்டிருக்காங்க.

“மன்னிச்சுக்கோங்க. என் கணவர் மயக்கமாயிட்டார். அவரைக் கவனிக்கப் போனேன். காத்திருந்ததுக்கு நன்றி. நீங்க யாரு? என்ன சொன்னீங்க அவர்கிட்ட?”

கலாமணி, அவள் கணவர் நலத்தை விசாரிச்சுட்டு, மறுபடியும் விஷயத்தை சொல்றாங்க. இப்ப அதிர்ச்சி ஆகறது ரமா முறை. இருந்தாலும் சுதாரிச்சுக்கிட்டு, பதட்டமா கேக்கறா…

“என்னங்க ஆச்சு? எங்க மலருக்கு ஒண்ணும் ஆகலையே?”

“மலர் நல்லாருக்காம்மா. பஸ் ஒரு மரத்துல மோதிடுச்சு. ஆனா மெதுவாதான் போய்க்கிட்டிருந்ததால, யாருக்கும் அடி ரொம்ப இல்லை. முன்னாடி உட்கார்ந்திருந்தவங்களுக்கு மட்டும் இலேசான அடி. அவ்வளவுதான். மலருக்கு ஒண்ணுமே இல்லை”

“அப்பாடி!” நிம்மதிப் பெருமூச்சு, ரமாவிடமிருந்து.

“இருந்தாலும் புள்ளைங்க கொஞ்சம் பயந்துட்டாங்க. அதனால சுற்றுலாவை பாதியில் முடிச்சிக்கிட்டு நாளைக்கே திரும்பிடப் போறோம். அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன்”

“அப்படியா. ரொம்ப நன்றிங்க”, ரமா போனை வைச்சிட்டு, திரும்பி கணவனை பாக்கிறா.

“சுற்றுலாவை பாதியில் முடிச்சுக்கிட்டு நாளைக்கு திரும்பிடப் போறாங்களாம்… அதைச் சொல்லத்தான் கூப்பிட்டிருக்காங்க. நம்ம மலருக்கு ஒண்ணும் இல்லையாம். நல்லா இருக்காளாம்…”, சொல்லிக் கிட்டே அவன் பக்கத்தில் உட்கார்றா.

“எப்பவும் நிதானமா இருப்பீங்க, உங்க செல்லப் பொண்ணுக்கு என்னவோன்னு பயந்துட்டீங்களா, ம்…?” புன்னகையோட கேட்டுக்கிட்டே அவன் நெற்றி முடியை வாஞ்சையோட ஒதுக்கி விடறா. அவனும், இலேசான (அசடு வழியற) சிரிப்போட மெதுவா அவ கையை எடுத்து புறங்கையில் முத்தம் வைக்கிறான்.


--கவிநயா

14 comments:

 1. நல்ல கதை கவிநயா:)!

  ReplyDelete
 2. நன்றி ராமலக்ஷ்மி :)

  ReplyDelete
 3. சிம்பிளி சூப்பரு ;-)

  ReplyDelete
 4. //சிம்பிளி சூப்பரு ;-)//

  நன்றி கோபி :)

  ReplyDelete
 5. //Nallairukke!//

  நன்றி திரு.நடராஜன்.

  ReplyDelete
 6. கொஞ்சம் நீட்டியிருக்கலாம்; ஆனால் படிக்கிறவர்களைப் பதட்டப்பட வைக்கக் கூடாதென்று பொறுக்காது சட்டுபுட்டென்று முடித்து விட்டீர்கள் போலிருக்கு!

  ReplyDelete
 7. இது என்ன நடந்த கதை மாதிரி இருக்கே?!

  ReplyDelete
 8. //கொஞ்சம் நீட்டியிருக்கலாம்; ஆனால் படிக்கிறவர்களைப் பதட்டப்பட வைக்கக் கூடாதென்று பொறுக்காது சட்டுபுட்டென்று முடித்து விட்டீர்கள் போலிருக்கு!//

  :) எப்பவுமே கதை/கட்டுரை எழுதும் போது எவ்வளவு நீளம் எழுதலாம்னு இன்னும் தெரியலை. வாசிக்கிறவங்களுக்கு அலுத்துடக் கூடாதேன்னு தோணிக்கிட்டே இருக்கும்...

  வாசிச்சதுக்கு மிக்க நன்றி ஜீவி ஐயா.

  ReplyDelete
 9. //இது என்ன நடந்த கதை மாதிரி இருக்கே?!//

  அப்படியா? ஆனா என் கற்பனையில் பிறந்த கதைதான். எதிர்பாராத அதிர்ச்சிகளை / நிகழ்வுகளை எதிர்கொள்ளும் திறன் சிலருக்குத்தான் இருக்கும் (presence of mind). சாதாரண நேரங்களில் நிதானமா இருக்கவங்கங்க கூட திடீர் நிகழ்வுகள்ல முழுக்க தடுமாறிடறதை பார்த்திருக்கேன். பெண்களுக்கு இயல்பாக உள்ள மனோபலத்தால், எதிர்பாரா நிகழ்வுகளை சமாளிக்கும் திறனும் அதிகம் என்பதும் என்னுடைய எண்ணம். அதை வச்சு பிறந்ததுதான் இந்த கற்பனை.

  வாசிச்சதுக்கு நன்றி குமரா.

  ReplyDelete
 10. எதையும் இயல்பாக யதார்த்தமாக எடுத்துக்கொண்டு
  அடுத்து என்ன செய்யலாம் என்று நிதானத்துக்கு
  திரும்பும் குணம் அதிகம் பெண்களிடம்தான் உண்டு
  என்பது உண்மை,
  அதை மிக அழகாகச் சொல்லிப்போகிறீர்கள்
  மயக்கமடைந்த கணவனைக் கவனித்து பின்
  போன் அட்டண்ட் பண்ணுவது
  தனக்கு ஒரு சிறு உதவி செய்யாது போயினும்
  (அடிக்கிற போனை முதலில் எடுக்காது)
  பெண் மீது பிரியமாக இருப்பது குறித்து
  மகிழ்ந்து போவதை மிக அழகாகச் சொல்லிப் போகிறீர்கள்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. //மனம் கவர்ந்த பதிவு//

  வாருங்கள் ரமணி. ரசித்து வாசித்தமைக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 12. //வாசிக்கிறவங்களுக்கு அலுத்துடக் கூடாதேன்னு தோணிக்கிட்டே இருக்கும்...//

  There the point is! அந்த நினைவு வராதபடிக்கு எழுதிகிட்டே இருக்கலாம்! எழுத உந்துதல் கிடைக்கும் பொழுது அதை உள்வாங்கிக் கொண்டு அனுபவித்து எழுதுதலும் ஒரு பேறு தான்! நிறைய எழுதிவிட்டோம் என்று தோன்றினால், இன்னொரு தடவை படித்து எடிட் செய்து, நீக்கியவற்றை இன்னொன்றுக்கு உபயோகித்துக் கொள்ளலாம். நினைவில்படிந்து அந்த நினைவிலேயே சஞ்சரித்து நம்மை மறந்து எழுதுவது எதுவும் வீண் இல்லை; ஒரு வரமே! எனெனில், வேண்டினாலும் வாராது இந்த வரம்! வந்தாலும் நினைவில் நச்சரித்து நச்சரித்து எழுதித் தீர்க்கும் வரை ஓயாது!

  ReplyDelete
 13. //நினைவில்படிந்து அந்த நினைவிலேயே சஞ்சரித்து நம்மை மறந்து எழுதுவது எதுவும் வீண் இல்லை; ஒரு வரமே!//

  உண்மைதான் ஜீவி ஐயா. நீங்க சொன்னதை கவனத்தில் வச்சுக்கறேன் இனிமே :)

  மீள் வருகைக்கு மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)