Sunday, July 31, 2011

என்ன செய்யப் போறாளோ?

திண்ணையில சிலுசிலுன்னு காத்து வருது. சுகமா கண்ணை மூடி சாய்வு நாற்காலில சாஞ்சுக்கிட்டிருக்கான், முத்து. வாழ்க்கையை அனுபவிக்கத் தெரிஞ்சவன். எதுக்கும் ரொம்ப அலட்டிக்க மாட்டான். பொறுமை அதிகம். இந்த நிமிஷம் எந்தக் கவலையும் இல்லை. அந்த சுகத்தை அனுபவிக்க வேண்டாமோ?

மனைவி இவனுக்கு நேர் எதிர். எதுக்கெடுத்தாலும் பயப்படுவா, பதட்டப்படுவா. கவலைப்பட ஒண்ணுமே இல்லைன்னாலும், கண்டதை கற்பனை பண்ணிக்கிட்டு எதைப் பத்தியாவது கவலைப் பட்டுக்கிட்டே இருக்கணும், அவளுக்கு! “நான் முதல்ல போய் சேர்ந்துட்டா, இவ தனியா என்னதான் பண்ணுவாளோ”ன்னு முத்து நினைக்கிறதுண்டு. இப்ப உள்ளே சமையல்ல இருக்கா. ஒரே பொண்ணு முதல் வருஷம் பி.எஸ்.சி. படிக்கிறா. கல்லூரில இருந்து சுற்றுலா கூட்டிக்கிட்டு போயிருக்காங்க. இன்னும் ரெண்டு நாள் இருக்கு, வர.

உள்ள தொலைபேசி கூப்பிடற சத்தம் கேக்குது. ஆனாலும் முத்துவுக்கு எழுந்திருக்க மனசில்லை. ஏன், மூடின கண்ணைத் திறக்கக் கூட மனசில்லை; வாயைத் திறந்து மனைவியைக் கூப்பிட்டு ‘அந்த போனை எடேன்’ ன்னு கத்தவும் மனசில்லை! அந்த அமைதியிலேயே அப்படியே முழுக நினைக்கிறவனைப் போல அசையாம இருக்கான்.

அடுப்படில இருந்து கத்தறா ரமா. ‘என்னங்க, இந்த போனை எடுத்தா என்ன? நா இங்க கைவேலையா இருக்கேன்...”

இனியும் படுத்திருக்க முடியாது… ஹும்… பெருமூச்சோட, “சரி… சரி.. இதோ போறேன்…”

“ஹலோ”

“ஹலோ… மலரோட அம்மா அல்லது அப்பாகிட்ட கொஞ்சம் பேசணும்…”

“நான் மலரோட அப்பாதான் பேசறது. என்ன விஷயம், சொல்லுங்க…”

“கல்லூரில இருந்து சுற்றுலா வந்தோம் இல்லையா. நாந்தான் அவங்க கூட வந்த பேராசிரியை. என் பேரு கலாமணி. இங்க வந்த இடத்துல ஒரு சின்ன விபத்து…”

“என்ன? விபத்தா? ஐயோ! மலருக்கு என்ன ஆச்சு?”

கேள்வி கேக்கறான், ஆனா அவங்க சொல்ற பதிலை கேக்கறதுக்குள்ள கண்ணு செருகி மயக்கம் வந்துருச்சு. போன் கைல இருந்து நழுவுது. நல்ல வேளையா சோபால உட்கார்ந்து பேசினதால, மயக்கம் வந்த போது அப்படியே அதுல சாஞ்சுட்டான்.

இவன் சத்தத்தைக் கேட்டு ஓடி வரா, ரமா.

“என்னங்க ஆச்சு?” ஒரு நொடியில் நிலைமையை எடை போட்டவள், சட்டுன்னு போனை எடுத்து, “கொஞ்சம் இருங்க, என் கணவர் மயக்கமாயிட்டார்”னு சொல்லிட்டு, அவங்க பதிலுக்கு காத்திருக்காம போனை கீழே வைக்கிறா. வேகமா தண்ணி எடுத்துக்கிட்டு வந்து அவன் முகத்தில் தெளிக்கிறா. மயக்கம் தெளியற வரை இலேசா விசிறி விடறா. மெதுவா அவனை எழுப்பி உட்கார வைச்சு, கொஞ்சம் தண்ணியை குடிக்க வைக்கிறா. அப்புறம்தான் போனை எடுத்து பேசறா.

போன்ல இருந்தவங்க, “ஹலோ… ஹலோ…இருக்கீங்களா…”ன்னு சொல்லிக்கிட்டிருக்காங்க.

“மன்னிச்சுக்கோங்க. என் கணவர் மயக்கமாயிட்டார். அவரைக் கவனிக்கப் போனேன். காத்திருந்ததுக்கு நன்றி. நீங்க யாரு? என்ன சொன்னீங்க அவர்கிட்ட?”

கலாமணி, அவள் கணவர் நலத்தை விசாரிச்சுட்டு, மறுபடியும் விஷயத்தை சொல்றாங்க. இப்ப அதிர்ச்சி ஆகறது ரமா முறை. இருந்தாலும் சுதாரிச்சுக்கிட்டு, பதட்டமா கேக்கறா…

“என்னங்க ஆச்சு? எங்க மலருக்கு ஒண்ணும் ஆகலையே?”

“மலர் நல்லாருக்காம்மா. பஸ் ஒரு மரத்துல மோதிடுச்சு. ஆனா மெதுவாதான் போய்க்கிட்டிருந்ததால, யாருக்கும் அடி ரொம்ப இல்லை. முன்னாடி உட்கார்ந்திருந்தவங்களுக்கு மட்டும் இலேசான அடி. அவ்வளவுதான். மலருக்கு ஒண்ணுமே இல்லை”

“அப்பாடி!” நிம்மதிப் பெருமூச்சு, ரமாவிடமிருந்து.

“இருந்தாலும் புள்ளைங்க கொஞ்சம் பயந்துட்டாங்க. அதனால சுற்றுலாவை பாதியில் முடிச்சிக்கிட்டு நாளைக்கே திரும்பிடப் போறோம். அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன்”

“அப்படியா. ரொம்ப நன்றிங்க”, ரமா போனை வைச்சிட்டு, திரும்பி கணவனை பாக்கிறா.

“சுற்றுலாவை பாதியில் முடிச்சுக்கிட்டு நாளைக்கு திரும்பிடப் போறாங்களாம்… அதைச் சொல்லத்தான் கூப்பிட்டிருக்காங்க. நம்ம மலருக்கு ஒண்ணும் இல்லையாம். நல்லா இருக்காளாம்…”, சொல்லிக் கிட்டே அவன் பக்கத்தில் உட்கார்றா.

“எப்பவும் நிதானமா இருப்பீங்க, உங்க செல்லப் பொண்ணுக்கு என்னவோன்னு பயந்துட்டீங்களா, ம்…?” புன்னகையோட கேட்டுக்கிட்டே அவன் நெற்றி முடியை வாஞ்சையோட ஒதுக்கி விடறா. அவனும், இலேசான (அசடு வழியற) சிரிப்போட மெதுவா அவ கையை எடுத்து புறங்கையில் முத்தம் வைக்கிறான்.


--கவிநயா

Sunday, July 24, 2011

பருவத்தால் அன்றிப் பழா!


ஸ்ரீ ஞானானந்த சுவாமிகளை தரிசிக்க இரு அயல் நாட்டுப் பெண்மணிகள் வந்திருந்தனர். சுவாமிகளின் அருகில் அமர்ந்து அவரை நன்கு தரிசனம் செய்தனர். அவர்களில் ஒரு பெண்மணி, “சுவாமி, நடமாடும் தெய்வமாய் தங்களை நேரில் தரிசித்து, தங்களது திவ்ய கமலங்களில் சிரம் தாழ்த்தி வணங்கி, தங்கள் அமுத மொழிகளைக் கேட்டு அதில் திளைத்திருக்கும் எங்களுக்கு, தங்களது தரிசனப் ப்ராப்தியினாலேயே ஏன் இன்னும் ஆத்ம ஞானம் சித்திக்கவில்லை?” என்று மிக வருத்தத்துடன் வினவினார்.

குருநாதர், தம் அருகில் இருந்த வாழைப்பழச் சீப்பிலிருந்து இரு வாழைப்பழங்களை எடுத்து, தம் கையில் ஏந்தியவாறு கூறினார்: “இந்தப் பழம் ஒரு காலத்தில் பச்சையாகவும், துவர்ப்பாகவும், கடினமாகவும் இருந்தது. காலக் கிரமத்தில், பச்சை மஞ்சளாகவும், கடினம் மென்மையாகவும், துவர்ப்பு இனிமையாகவும் மாறி நிற்கின்றது. இந்தப் பச்சையில் மஞ்சளைப் பூசியவர் யார்? இந்த காடின்யத்தில் மென்மையைப் புகுத்தியவர் யார்? இந்த துவர்ப்பில் இனிமையைப் புகுத்தியது யார்? ‘பருவத்தாலன்றி பழா’ என்பதே போல் அப்பெண்மணி கேட்டதெல்லாம் தக்க காலத்தில் இனிது நிறைவேறும். இது குறித்துக் கவலைப்பட வேண்டாம்”.

பி.கு.: ஸ்ரீ ஞானானந்த சுவாமிகளின் தபோவனம் வெளியிடும் ‘ஞான ஒளி’ என்ற ஆன்மீக மாத இதழிலிருந்து…


அன்புடன்
கவிநயா

Wednesday, July 20, 2011

வேண்டும்!


நதியோடு ஜதிபோட்டு நான்ஆட வேண்டும்
நட்சத்திரப் பூப்பறித்து நான்சூட வேண்டும்!
வான்நிலவைக் கைவிளக்காய் நான்ஏந்த வேண்டும்
வானவில்என் வாசலிலே தோரணமாய் வேண்டும்!

கதிரவன்என் கவிதையில்தன் கனல்மறக்க வேண்டும் - நான்
காற்றாகிக் குழல் நுழைந்து மனம்மயக்க வேண்டும்!
மணம்வீசும் மலராகி நான்சிரிக்க வேண்டும் - நான்
ரீங்கார வண்டாகித் தேன்குடிக்க வேண்டும்!

சின்னச்சிற் றோடையாய்ச் சிலுசிலுக்க வேண்டும் - நான்
புத்தம்புது வெள்ளமாய்ப் புவிதழுவ வேண்டும்!
வண்ணச்சிட்டுக் குருவியாய்ச் சிறகடிக்க வேண்டும் - நான்
சிறகடித்து மனம்விரித்து வான்அளக்க வேண்டும்!

பாறைக்குள் பச்சையாய் நான்துளிர்க்க வேண்டும் - நான்
பாசமுடன் உயிர்கள் தமைநேசிக்க வேண்டும்!
அன்பென்னும் ஆதார ஸ்ருதியாக வேண்டும் - நான்
ஆசைகளைக் கடந்துலகில் அறம்வளர்க்க வேண்டும்!

--கவிநயா