Monday, June 13, 2011

வைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை - 3

முதல் பகுதி இங்கே;
இரண்டாம் பகுதி இங்கே.

போன முறையெல்லாம் நாங்க வந்து சேரவே (அதுவும் நானு, காலில் கொப்புளத்தோட) எட்டரை ஆனது. இந்த முறை எவ்வளவோ பரவாயில்லை. கொஞ்ச நேரம் செருப்பு போட்டதாலயோ என்னவோ காலில் உறுத்தற உணர்வு இருந்தாலும் கொப்புளம் இன்னும் வரலை.

வீட்டில் நுழைஞ்ச உடனேயே ஒரு பெரிய ஹால். எங்களுக்கு முன்னாடியே நிறைய பேர் வந்து அங்கே படுத்து தூங்கிக்கிட்டிருந்தாங்க. நாங்களும் கொஞ்சம் படுத்திருந்திட்டு குளிக்கலாம்னு நினைச்சு, காபி குடிச்சிட்டு படுத்துட்டோம்.

எழுந்து பார்க்கும் போதுதான் அங்கேதான் ஷண்முகமும், தங்கை, மனைவி, குழந்தையோட தங்கியிருக்கார்னு தெரிஞ்சது. எங்க வண்டியில் எங்களைச் சேர்த்து கிட்டத்தட்ட 20 பேர். எங்களைத் தவிர மற்றவங்க எல்லோரும் கோயமுத்தூரிலிருந்து பெரிய்ய குழுவா வந்திருந்தாங்க. அதில் ஷண்முகமும் ஒருத்தர்.

அவர் குழந்தையோட கொஞ்சம் விளையாடிட்டு, பிறகு போய் ஒவ்வொருத்தரா போய் குளிச்சிட்டு வந்தோம். குழாயில் தண்ணி வர அளவெல்லாம் தண்ணீர் வசதி இல்லை. ரெண்டு பெரீய்ய்ய அண்டாவில் தண்ணீர் வச்சிருந்தாங்க. அதைத்தான் எடுத்து பயன்படுத்தினோம். பின்னாடியே வராண்டா மாதிரி இருந்த இடத்தில் அடுப்பு போட்டு சமையல் செய்தாங்க. (அது ஒரு முஸ்லிம் வீடுன்னு பிறகு தெரிஞ்சது!) இந்த மாதிரி தங்கறப்போ, வீட்டுக்காரங்க அவ்வளவா வெளிய வர மாட்டாங்க. சாப்பாடு மட்டும் சிலர் நம்மகிட்ட இருந்து ஏத்துக்குவாங்க. மற்றபடி வீடு முழுக்க, வர்றவங்களுக்கு கொடுத்துருவாங்க!

இரண்டு மாற்றுத் துணிதான் எடுத்துட்டு போவோம். அதை வண்டியில் போட்டுருவோம். அவங்க தங்கற வீடுகளுக்கு கொண்டு வந்துருவாங்க. அதனால துவைச்சு துவைச்சு கட்டிக்கணும். அந்த அசதியில், கால்வலியில், துவைச்சு குளிக்கிறது ஒரு பிரம்ம பிரயத்தனம்தான்னே சொல்லலாம்.

ஒரு வழியா துவைச்சு காயப் போட்டு, (காயப் போட பெரும்பாலும் இடம் வேற அதிகம் இருக்காது, இத்தனை பேர் தங்கும்போது), குளிச்சிட்டு வந்து சாப்பிட்டோம். பிறகு காலில் எண்ணையோ, ஐயோடெக்ஸோ, அவங்கவங்க தடவிக்கிட்டு, படுத்தாச்சு.

2 மணிக்கு மதியம் சாப்பிட எழுப்பினாங்க. மறுபடி சாப்பிட்டுட்டு, கொஞ்சமே கொஞ்ச நேரம் படுத்தோம். 4 மணி போல துணியெல்லாம் எடுத்து வச்சிட்டு, மறுபடி ஒரு குளியல். சாயந்திரம் கிளம்பும் முன்னாடி ஒருதரம் குளிச்சாதான் நல்லா நடக்க முடியும். இல்லன்னா ரொம்ப கஷ்டம். தூக்கமும் அசதியும் அழுத்திரும். அனுபவத்தில் கண்ட உண்மை.

கோயமுத்தூர் குழுவில் ஒரு டாக்டர் இருந்தார். அவர்கிட்ட போய் தோழியோட காயத்தை சரிபண்ணி கட்டு போட்டுக்கிட்டோம். நிறைய பேருக்கு கொப்புளம் வர மாதிரி இருக்கிற இடத்தில், பாதத்தில் ப்ளாஸ்டர் போட்டு விட்டார். ஆனா நான் இன்னிக்கு போட்டுக்கலை. பிறகு உப்புமா சாப்பிட்டு காபி குடிச்சோம். அப்பதான் எங்க அம்மாவும் அப்பாவும் வந்தாங்க, எங்களைப் பார்க்க. எங்க பின்னாடியே காரில் வந்துக்கிட்டிருந்தாங்க. அவ்வப்போது சில இடங்களில் வந்து பார்ப்பாங்க. அவங்ககிட்ட பேசிட்டு கிளம்பினோம்.


படம் ஷண்முகம் அனுப்பி இருந்தார். நன்றி ஷண்முகம்!
ரொம்பக் கஷ்டப்பட்டு தேட வேணாம்! படத்தில் நானு இல்லை! :
)

இன்றைக்குதான் அதிக தூரம் நடக்கணும். பூண்டி வரைக்கும். 48கி.மீ. பூண்டியைப் பார்த்துட்டாலே, வை.கோவிலுக்கு போய்ச் சேர்ந்த மாதிரிதான்னு சொல்லுவாங்க. அவ்வளவு கஷ்டமான நடை. ஆனா பார்க்கப் போனா, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதத்தில் அப்படித்தான் தோணும்.

போகிற வழியெல்லாம் காபி, டீ, தண்ணீர், இளநீர், மோர், சாப்பாடு, இப்படி ஏதாவது கொடுத்துக்கிட்டே இருப்பாங்க. ஆனா தாமதமா போனா ரோடு பூரா குப்பையா கிடக்கிற வெற்று ப்ளாஸ்டிக் கப்கள்தான் நம்மை வரவேற்கும். நடக்கும்போது ரொம்பவே ஆதங்கப்பட்ட விஷயம் இது. அடியவர்களுக்கு அன்பா இதையெல்லாம் கொடுக்கறாங்களே தவிர, குப்பைகளை ஒரே இடத்தில் போடறது பற்றியோ, அந்த இடத்தை சுத்தம் பண்றது பற்றியோ யாரும் கவலைப்படற மாதிரி தெரியலை :(

இராத்திரி நாங்கல்லாம் நடந்துக்கிட்டிருக்கும் போது 9 மணி அளவில் எங்க பக்கத்தில் நாங்க சேர்ந்திருந்த வண்டிக் காரங்களோட கார் வந்து நின்னுது. தண்ணி ஊத்தின சாதத்துல மோர் ஊத்தி, எலுமிச்சை ஊறுகா போட்டு நல்லா கரைச்சு கொண்டு வந்தாங்க. அதுதான் நடக்கிறதுக்கு நல்ல சத்து குடுக்கும். முன்னெல்லாம் எல்லாம் வேண்டாம் வேண்டாம்னு சொல்லுவேன். ஆனா இப்ப கொஞ்சம் சமர்த்தாயிட்டேன், எதெது நல்லது, தேவைன்னு தெரிஞ்சுக்கிட்டேன். அதனால அதுல ஆளுக்கு ரெண்டு டம்ளர் குடிச்சிட்டு நடந்தோம்.

4 நாளும் சரியா அவங்க வண்டியில் வந்தவங்களைப் பார்த்து எப்படியோ கண்டு பிடிச்சு வந்து குடுத்திருவாங்க! 5 மணிக்கு ஏதோ சாப்பிட்டு கிளம்பறதால 9 மணிக்கு கஞ்சி குடிச்சா தெம்பா இருக்கும்.

பாட்டெல்லாம் சொல்லிக்கிட்டு, கொஞ்ச நேரத்துக்கு ஒரு தரம் உட்கார்ந்து கெஞ்சற காலைக் கொஞ்சம் கொஞ்சி தாஜா பண்ணிக்கிட்டு, நடந்தோம். இன்றைக்கும் கொஞ்ச நேரம் செருப்பு போட்டுக்கிட்டேன். திருக்காவனூர் பட்டிங்கிற இடத்தில் எங்க உறவினர் ஒருத்தவங்க அன்னதானம் பண்ணுவாங்க. அங்கே போயிட்டா கொஞ்சம் கூட நேரம் உட்காரலாம்கிற எதிர்பார்ப்போட நடந்தோம்.

அங்கே போய்ச் சேர்ந்தப்ப ஒரு பத்தரை இருக்கும். அம்மாவும் அப்பாவும் ஏற்கனவே அங்க காத்திருந்தாங்க. நாங்க சாப்பிட்டுட்டு ஒரு இடத்தில் விரிப்பை விரிச்சு காலை நீட்டி உட்கார்ந்தோம். அம்மாவும் அப்பாவும் பக்கத்தில் ப்ளாஸ்டிக் நாற்காலியில் உட்கார்ந்திருந்தாங்க. தரை மேடு பள்ளமா இருந்தது, ஆனா எங்க அசதியில் அது யாருக்கும் உறைக்கலை. திடீர்னு அம்மா உட்கார்ந்திருந்த நாற்காலி பின்னாடி அப்படியே சாஞ்சிடுச்சு. அம்மா உடனடியா நினைவை இழந்துட்டாங்க.

(பயணம் தொடரும்)


அன்புடன்
கவிநயா

13 comments:

  1. acho! what happ to amma? did someone hold her?

    ReplyDelete
  2. //தண்ணி ஊத்தின சாதத்துல மோர் ஊத்தி, எலுமிச்சை ஊறுகா போட்டு நல்லா கரைச்சு கொண்டு வந்தாங்க//

    எனக்கு?

    ReplyDelete
  3. அதிர்ச்சி கொடுத்துவிட்டீர்களே.

    உங்களுடன் பயணம் தொடர்கிறது.

    ReplyDelete
  4. அம்மாவுக்கு என்ன ஆச்சுன்னு சொல்லிட்டு தொடரும் போட்டுயிருக்கலாம்..!

    ReplyDelete
  5. இறையருளால் அம்மா நலம். அதனாலதான் யாத்திரை நல்லபடியா முடிஞ்சது. அதை சொல்லியிருக்கணும்னு பிறகுதான் தோணுச்சு. மீதியை அப்புறம் சொல்றேன் :)

    ReplyDelete
  6. இல்லை கண்ணா. மண் தரையில்தான் விழுந்துட்டாங்க. நாங்க எழுந்திருக்கக் கூட நேரம் இருக்கலை.

    ReplyDelete
  7. //எனக்கு?//

    எங்க வீட்டுக்கு வந்தீங்கன்னா குளிரக் குளிர உப்பு போட்ட எலுமிச்சங்கா ஊறுகா போட்டு கஞ்சி கரைச்சு தாரேன்!

    (விருந்து சமைக்காம தப்பிச்சுக்கலாம் போல இருக்கே :)

    ReplyDelete
  8. //அதிர்ச்சி கொடுத்துவிட்டீர்களே.//

    அந்த நேரத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியும் பயமும் கவலையும் வார்த்தையால் சரியா சொல்ல முடியாது. இருந்தாலும் உங்களோடு கொஞ்சம் பகிர்ந்துக்கிட்டேன்.

    //உங்களுடன் பயணம் தொடர்கிறது.//

    மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி.

    ReplyDelete
  9. //அம்மாவுக்கு என்ன ஆச்சுன்னு சொல்லிட்டு தொடரும் போட்டுயிருக்கலாம்..!//

    ஆம் கோபி! இடுகை இட்டுட்டு படுக்க போன பிறகுதான் தோணுச்சு, பிறகு உங்க பின்னூட்டம் வந்ததும், உடனே சொல்லிட்டேன்... மிக்க் நன்றிப்பா.

    ReplyDelete
  10. அம்மா நலமென அறிந்து நிம்மதி. ஆயினும் அந்த நேர பதட்டத்தையும் அவரது நிலையையும் நினைக்கையில் வருத்தம்.

    களைப்புக்கு கஞ்சி அமிர்தமாய் இருந்திருக்கும்.

    தொடருங்க.

    ReplyDelete
  11. 3 பகுதிலையும் அக்கா கூடவே நடந்து 'சாத்தூத்தம்' குடிக்கர்துக்கும் வந்தாச்சு! அம்மா நலம்!னு படிச்சதுக்கு அப்புறம் தான் நிம்மதி ஆச்சு! தொடரும் போடர இடத்தை பாரு! சின்னப்புள்ளையாட்டாமா!....:))

    ReplyDelete
  12. வாங்க ராமலக்ஷ்மி. தொடர்ந்த வருகைக்கு நன்றி :)

    ReplyDelete
  13. //தொடரும் போடர இடத்தை பாரு! சின்னப்புள்ளையாட்டாமா!....:))//

    ஹாஹா :) ரொம்ப சரி. என்னைப் பத்திதான் தக்குடுவுக்கு நல்லாத் தெரியுமே :)

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)