Monday, June 27, 2011

வைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை - 8

முந்தைய பகுதிகள்:
முதல் பகுதி; இரண்டாம் பகுதி; மூன்றாம் பகுதி;
நான்காம் பகுதி; ஐந்தாம் பகுதி; ஆறாம் பகுதி; ஏழாம் பகுதி;


அங்கேருந்து வந்து ஒரு ஆட்டோ பிடிச்சு, ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம்! அங்கே தோழியுடைய அம்மா, நாத்தனார் கணவர், அம்மா, அப்பா, இப்படி எல்லாரும் ஒண்ணு சேர்ந்தாச்சு. முதல்ல காலெல்லாம் நல்லா கழுவிட்டு சாப்பிட்டு ஒரு தூக்கம் போட்டோம். சாயந்திரமா எழுந்து குளிச்சிட்டு கோவிலுக்கு போனோம்.

இந்த இடத்தில், வை.கோவிலைப் பற்றி சுருக்கமா சொல்லிடறேன் –

புள்(ஜடாயு), இருக்கு(ரிக் வேதம்), வேள்(முருகன்), ஊர்(சூரியன்), இந்நால்வரும் இங்கிருக்கும் இறைவனை பூசித்ததால் புள்ளிருக்கு வேளூர்னு பேர் வந்துச்சாம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், இருவராலும் பாடல் பெற்ற ஸ்தலம். புகழ் பெற்ற அங்காரக (செவ்வாய்) தலமும் கூட. நவக்கிரகங்கள் இங்கே திரும்பித் திரும்பி இல்லாம, வரிசையாய் இருக்கும். இங்கே பிரசாதமாகக் கிடைக்கிற திருச்சாந்து உருண்டை தீராத நோய்களையும் தீர்க்கும் என்பது நம்பிக்கை. இங்கேதான் செல்வ முத்துக்குமரன் சூரபத்மனை அழிக்க, அன்னை பராசக்தியிடம் வேல் வாங்கினானாம். இந்த செல்வ முத்துக்குமாரசுவாமியின் மீதுதான் குமரகுருபரர் பிள்ளைத்தமிழ் பாடியிருக்கார்.

இன்னும் நிறைய இருக்கு, விவரமாக தெரிந்து கொள்ள விரும்பறவங்க, இங்கே பாருங்க…

வாங்க, இப்ப கோவிலுக்குள்ள போகலாம்…

கோவில்ல சரியான கூட்டம். கோவில் குளம் ரொம்ப மோசமா ஆயிருச்சு. மக்களெல்லாம் அதிலயே குளிச்சு, துவைச்சு, குப்பைகளை போட்டு, அநியாயம் பண்றாங்க. குளிச்சவங்க ஈரத்தோட கோவிலுக்குள்ள வர்றாங்க. அதனால கோவில் பூரா கால் வைக்கிற இடமெல்லாம் ஈரம். சில இடங்கள்ல தண்ணி தேங்கி வழுக்கி வேற விடுது. இதெல்லாம் யார், எப்ப, எப்படி, சரி பண்ணப் போறா? :(

நம்ம நடந்து வந்த காலோட ஈரத்தில் கால் வச்சா, வலி உயிர் போயிடும். ஒரு நிமிஷம் கூட காலை ஊணி நிக்க முடியாது. ரெண்டு காலையும் மாத்தி மாத்தி வச்சுக்கிட்டே நிக்கணும். இதனால முந்தின வருஷமெல்லாம் சரியாக்கூட சாமி கும்பிடாம, மற்ற சந்நிதிக்கெல்லாம் போகாமலேயே வந்திருக்கேன். இந்த வருஷம் கொஞ்சம் பரவாயில்லை. ஓரளவு நின்னு கும்பிட்டேன்.


கேயாரெஸ் அனுப்பிய முத்துக்குமாரசுவாமி படம்

இன்றைக்கு நிறைய ஊர்க்காரங்க அபிஷேகத்துக்கு குடுப்பாங்க. முத்துக்குமாரசாமி சந்நிதியில் முத்துலிங்கம்னு ஒரு குட்டி லிங்கம் இருக்குமாம். அதுக்குத்தான் முதலில் அபிஷேகமாம். (நான் பார்க்கலை). அப்புறம் வைத்தியநாதனுக்கு, அப்புறம்தான் தையல்நாயகிக்கு.

நான் ஊருக்கு போனபோது கண்ணன் என்கிற கேயாரெஸ், ஒரு வேண்டுதலுக்காக, தையல்நாயகிக்கு பட்டுப்புடவை வாங்கிட்டு போகச் சொல்லி பணம் அனுப்பி இருந்தார். இங்கேருந்து போன அன்னிக்கே சென்னையில் குமரன்ல போய் ஒரு அழகான ஒன்பது கெஜம் பட்டுப் புடவை அம்மாவுக்கு வாங்கினேன். நல்ல சிவப்பு நிறத்தில், கட்டம் போட்ட புடவை. ரொம்ப நாளா அவளுக்கு வாங்கணும் நினைச்ச நிறம், கண்ணன் காசுல என் ஆசைக்கு வாங்கிட்டேன் :)

அதை நாங்க இன்றைக்கு சாயந்திரம் கோவிலுக்கு போனப்ப குடுத்தோம். ஆனா அபிஷேகத்துக்குப் பிறகு வெள்ளிக்கவசம் சார்த்துவோம், அதனால இப்ப சேலை சார்த்த முடியாதுன்னுட்டாங்க. காலைல 6 மணிக்கு அபிஷேகம் ஆகும், அப்ப கொண்டு வாங்கன்னு சொன்னாங்க.

பிறகு தையல்நாயகி, முத்துக்குமாரசாமி, வைத்தியநாதன், எல்லாரையும் ஓரளவு நல்லாவே கும்பிட்டோம், அந்தக் கூட்டத்திலயும். முத்துக்குமரன் வள்ளி தெய்வானையோட ஜம்முன்னு இருந்தான். அவனுக்கும் வெள்ளிக்கவசம் சார்த்தி இருந்தாங்க. (போன முறை அவனுக்கு இரத்தின அங்கி போட்டிருந்தாங்க!) அர்ச்சனையெல்லாம் தனித்தனியா செய்ய முடியாது. அப்படியே தேங்காயை மட்டும் உடைச்சு தருவாங்க அவ்வளவுதான். அத்தனை அர்ச்சகர்கள் இருக்காங்க, ஆனா எல்லாருமே விபூதி, குங்குமம் குடுத்தே அசந்து போயிருப்பாங்க அன்றைக்கு. சாமி கும்பிட்ட பிறகு நாத்தனார் குடும்பம் கிளம்பிட்டாங்க.

அர்த்தசாமப் பூசை ஆன பிறகு, செல்வ(ல) முத்துக்குமாரசாமியை படுக்க வச்சிட்டுதான், சாமியும் அம்பாளும் படுக்க போவாங்களாம்! ச்வீட், இல்ல? :)

சாதாரணமா, மறுநாள் மறுபடி கோவிலுக்கு போறதில்லை, உடனே கிளம்பிடுவோம். இன்றைக்கு புடவை சார்த்தறதுக்காக காலைல 6 மணிக்கே எழுந்து குளிச்சு கிளம்பி போனோம். கோவிலுக்குள்ள இருக்கிற மண்டபத்திலயே நிறைய பேர் படுத்திருந்தாங்க. கோவில் பணியாளர்களை சும்மா சொல்லக் கூடாது, அந்த நேரத்திலும் சுத்தம் பண்ணிக்கிட்டேதான் இருந்தாங்க!

தையல்நாயகியுடைய அபிஷேகம் பார்த்தோம். எக்கச்சக்க புடவை வந்திருந்தாலும், இது பட்டுப் புடவைங்கிறதாலயோ என்னவோ, இதை உடனே சார்த்திட்டாங்க. செகப்புப் பட்டுப் புடவையில், கர்ப்பூர தீபத்தோட வெளிச்சத்தில், அவள் அழகுக்கு கேட்கணுமா! கண்ணன் புண்ணியத்தில் எங்களுக்கு இப்படி ஒரு தரிசனம். நன்றி கண்ணா!

மறுபடியும் அப்பா, புள்ளை, இவங்களையெல்லாம் பார்த்து விடைபெற்றுக்கிட்டு வந்தோம். கூட நடந்த நண்பர்கள்கிட்ட நேற்றே விடை பெற்றாச்சு.

வை. கோவிலுக்கு நடக்கிறவங்க, சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கும், தில்லை காளி கோவிலுக்கும் போயிட்டுதான் வீட்டுக்கு போகணுமாம். அதனால ஹோட்டலில் சாப்பிட்டுட்டு, அறையைக் காலி பண்ணிட்டு, அங்கேருந்து சிதம்பரத்துக்கு போனோம். அப்பதான் சரியா மரகத லிங்கத்துக்கு அபிஷேகம் ஆகிக்கிட்டு இருந்தது. நல்ல தரிசனம். துபாய் குமாரை அங்கே பார்த்தோம். மறுநாளே துபாய் கிளம்பறதா சொன்னார். எப்படித்தான் விமானத்தில் உட்காரப் போறாரோன்னு நினைச்சிக்கிட்டோம்.

எப்பவும் நடராஜரை மட்டும் பார்த்துட்டு அப்படியே வந்துருவோம். இந்த முறை சிவகாமி சந்நிதி வரை நடக்கறதுக்கு தெம்பிருந்தது. ஆனா அவளை பார்த்துட்டு வரதுக்குள்ள தில்லை காளி கோவில் மூடிட்டாங்க. மூடின கதவுக்கு முன்னாடி நின்னு கும்பிட்டு வர வேண்டியதாயிடுச்சு.

சென்னை வர வழியில்தான் கடலூர். அங்கே பாடலீஸ்வரர் கோவிலில் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்ததுன்னு தெரியும். அதனால அங்கேயும் நின்னு பாடலீஸ்வரரையும், பெரியநாயகியையும் பார்த்தோம். போகும்போதுதான் நம்ம திவாஜியைக் கூப்பிட்டு சொன்னேன், வந்துக்கிட்டிருக்கோம்னு. அவ்வளவு குறைச்ச நேரத்தில் சொன்னாலும், எங்களுக்காக கோவிலுக்கு வந்தார்.

இப்படியாக ஊரெல்லாம் சுத்திட்டு, ஒரு வழியா அன்றைக்கு ராத்திரி சென்னை வந்து சேர்ந்தோம்!

[மருந்தை தேனில் குழைச்சு சாப்பிடும் போது, கடைசியில் தேனின் தித்திப்பு மட்டுமே அடிநாக்கில் நிக்குமே, அது போலத்தான் வைத்தீஸ்வரன் கோவில் நடைப் பயணம்! நடந்து போய்ச் சேர்றதுக்குள்ள படற பாடு இருக்கே…. அப்பப்பா! அப்படில்லாம் கஷ்டப்படும் போது, ‘போதும், போதும், இனிமே இப்படி நடக்க முடியாது’ அப்படின்னு தோணும்; ஆனா போய் சேர்ந்த பிறகு, அந்த சந்தோஷமும், நிறைவும் மட்டுமே மனசில் நிக்கும்; அந்த சமயத்தில் பார்த்தா, இன்னொரு முறையும் நடக்க மாட்டமான்னுதான் தோணும்!]

வைத்தியநாதன் வழித்துணை வருவான்!
தையல்நாயகி தைரியம் தருவாள்!
முத்துக்குமரன் முன்னே வருவான்!

கூடவே வந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்! அவங்களும் நம்ம கூடவே இருந்து நம்மை வழி நடத்துவாங்க!

எல்லோரும் நல்லாருக்கணும்!

~சுபம்~

அன்புடன்
கவிநயா

Sunday, June 26, 2011

வைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை - 7

முந்தைய பகுதிகள்:
முதல் பகுதி; இரண்டாம் பகுதி; மூன்றாம் பகுதி;
நான்காம் பகுதி; ஐந்தாம் பகுதி; ஆறாம் பகுதி

எல்லாருமே கஷ்டப்பட்டுதான் வந்து சேர்ந்திருந்தாங்க போல. ஏற்கனவே ரொம்ப நேரம் ஆயிட்டதால சாப்பிட்டுட்டே குளிக்க போனோம். இன்றைக்கு தூங்க அவ்வளவா நேரம் கிடைக்கலை. இந்த வீட்டில் இடம் இல்லாததால எதிர் வீட்டில் போய் படுக்கச் சொன்னாங்க. அங்கேயும் ஏற்கனவே நல்ல கூட்டம். ஒரு குட்டி இடத்தில் ஒரு மாதிரி படுத்திருந்தோம். அதனாலயும் சரியா தூங்க முடியல. ஒரு மணி நேரம் ஒழுங்கா தூங்கி இருந்தா அதிகம். சீக்கிரமே எழுந்து குளிச்சு தயாராகிட்டோம். கடைசி நாள்னால எல்லாரும் ஒரு வித உற்சாகம், சந்தோஷம், எதிர்பார்ப்போட இருந்த மாதிரி இருந்தது. சில பேருடைய உறவினர்கள் வந்திருந்தாங்க.

நடக்கறவங்க எல்லாருமே 6 நாள், 5 நாள் நடக்கறவங்க இல்லை. ரெண்டு நாள், மூணு நாள் நடக்கறவங்களும் உண்டு. அதிலும் மூவலூரிலிருந்து கடைசி நாள் மட்டும் நடக்கறவங்க அதிகம். இன்றைக்கு என் நாத்தனார் மகளும் என் அப்பாவும் எங்களோட நடக்கறதா இருந்தாங்க. நாத்தனாரோட வீட்டுக்காரர் வேற ஒரு கோஷ்டியோட (6 நாள்) நடந்தாங்க.

சாயந்திரம் செந்தில், பத்மநாபன், ஷண்முகம், இவங்கெல்லாம் சேர்ந்து பல பஜனைப் பாடல்கள் பாடி ஒரு குட்டி நிகழ்ச்சியே நடத்திட்டாங்க! என் உறவினர் முத்துக்குமார் என்பவருடைய சொந்தக்காரப் பையன், ஒரு குட்டிப் பையன், ரொம்ப ஜோரா ஆடுவான். அவனும் நடந்தான். இன்றைக்கு இவங்க பாட, அவன் ஆட, ஒரே கொண்டாட்டம்தான். வை.கோவில் பயணத்துக்காகவே ஷண்முகம் என்னை சிவன் மேல ஒரு பாடல் எழுதச் சொல்லியிருந்தார், ரொம்ப நாள் முன்னதாகவே. அந்தப் பாடலையும் இப்ப பாடினார். சந்தோஷமா இருந்தது. என்னையும் (!) பாடச் சொல்லி அன்போட வற்புறுத்தினாங்க. (பாவம், என்னைப் பற்றி தெரியலை). நானும் என்னுடைய ஒரு அம்மா பாட்டு (சிந்தையில் நீ ஆட), பாடினேன். அதுக்கப்புறம் அவங்களோட இன்னொரு நண்பர் ஒரு குட்டி மாஜிக் ஷோ நடத்தினார். குழந்தைகளெல்லாம் நல்லா enjoy பண்ணினோம் :)

இப்படியே 6 மணி ஆயிடுச்சு. பஜனை கோஷ்டி கிளம்பிட்டாங்க. நாங்க என் நாத்தனாருக்காக காத்திருந்தோம். அவ வந்ததும், இட்லி சாப்பிட்டுட்டு தயாரானோம். என் அம்மாவும், நாத்தனாரும் வை.கோவிலில் சதாபிஷேகம் என்கிற ஹோட்டலில் தங்கியிருக்கறதா ஏற்பாடு. அதனால மகளை விட்டுட்டு, அவ அப்படியே கிளம்பிட்டா.

நாங்க கிளம்பும்போது மணி 7 இருக்கும். இன்றைக்கு 9 மணிக்கு கஞ்சி கிடைக்காதாம்! மற்றவங்கல்லாம் எங்களுக்கு முன்னாடி கிளம்பிட்டாங்க. துபாய் குமார்ங்கிறவர் மட்டும் இருந்தார். அவர் துபாயிலிருந்து நடக்கறதுக்காகவே வரதால அந்த பேராம். எங்க கூடத்தான் இவரும் தங்கியிருந்தார். ரொம்ப க்ஷ்டப்பட்டுத்தான் நடப்பாராம். ரெண்டு கால்லயும் பெரிய்ய்ய பாண்டேஜ் போட்டிருந்தார். போற வழியெல்லாம் இருட்டா இருக்கும், தனியா நடக்காதீங்க, வாங்க சேர்ந்து போயிடலாம்னு சொல்லிக்கிட்டே வந்தார். என்ன சொன்னாலும், என்னால வேகமா நடக்க முடியல. அவர் என்னை விட நல்லா வேகமா நடந்தார்! என் அப்பாவும் எங்களோட வந்தாங்க. அவங்களால எங்கள மாதிரி உட்கார்ந்து உட்கார்ந்து நடக்க முடியல. அவங்களுக்கு கீழே உட்கார்றது சிரமம். அதனால வேற, வாங்க போயிடலாம், போயிடலாம்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க. என் தங்கையும் வேற சேர்ந்துக்கிட்டா.

பொறுத்துப் பொறுத்து, கடைசியில எனக்கு கோவம் வந்திருச்சு. நீங்கள்லாம் முன்னாடி போறதுன்னா போங்க, நான் மெதுவா வந்துக்கறேன்னு சொல்லிட்டேன்!

தோழி சென்னையில் டீச்சரா இருக்கா. நாத்தனார் மகள் 10-வது எழுதி இருந்தா. ரெண்டு பேரும் என்ன பேசினாங்களோ, நண்பிகள் ஆயிட்டாங்க. அவங்க பாட்டுக்கு வேகமா நடந்தாங்க. இன்றைக்கு அவங்களும் செருப்பு போடல.

வழியில் ஒரு பெரிய பெட்ரோல் பங்கில் எப்பவும் உட்காருவோம். ஆனா இந்த வருஷம் அங்க கால் வக்க இடமில்லாம மக்கள் படுத்திருந்தாங்க.

நிறைய இடத்தில் கூடாரம் அடிச்சு நாற்காலி போட்டு, காபி, டீ, வித்துக்கிட்டிருந்தாங்க. இந்த மாதிரி இடங்களில் உட்கார்றது அப்பாவுக்கும் கொஞ்சம் பரவாயில்லாம இருந்தது. ஒரு மாதிரியா இப்படி நடந்து நடந்து வைத்தீஸ்வரன் கோவில் எல்லைக்கு வந்தே சேர்ந்துட்டோம்! அப்ப மணி காலை மூணரை! முந்தின வருஷங்கள்ல நாங்க வந்து சேர அஞ்சரை ஆறு ஆயிரும். இந்த முறை ரொம்பவே பரவாயில்லை.

இனி விடிஞ்ச பிறகு பெரிய பிரகாரம் போனா போதும். பெரிய பிரகாரம் போயிட்டு வந்த பிறகு வேண்டுதல் முடிஞ்சிரும்! கோவிலுக்குள்ள போறது அப்புறம் போயிக்கலாம்.

சதாபிஷேகம் ஹோட்டல் காம்பவுண்டுக்குள்ள புல் தரையில் முன்னெல்லாம் எல்லாரையும் படுக்க விடுவாங்க, ஆனா இந்த முறை எக்கச்சக்க கூட்டம்கிறதால ஹோட்டலில் அறை எடுத்துருந்தவங்களை மட்டும் உள்ள விட்டாங்க. அம்மாவும் நாத்தனாரும் வந்து பார்த்துட்டு கொஞ்ச நேரம் பேசிட்டு போனாங்க. நாங்க அறைக்குள்ள போகக் கூடாது. அதனால எல்லாரும் வெளிலயே படுத்துக்கிட்டோம். அஞ்சரை மணி போல எழுந்து காபி குடிச்சிட்டு பெரிய பிரகாரம் வர ஆரம்பிச்சோம்.

பெரிய பிரகாரம் மட்டும் ரெண்டு கிலோ மீட்டர் இருக்கும். கூட்டம்னா கூட்டம், அப்படி ஒரு கூட்டம். நாம நடக்கவே வேணாம், சும்மா நின்னுக்கிட்டு இருந்தாலே அப்படியே தள்ளிக்கிட்டே போயிடுவாங்க. நிறைய போலீசெல்லாம் நின்னு கூட்டத்தை ஒழுங்கு படுத்தினாங்க…. அதாவது ஒழுங்குபடுத்த முயற்சி செய்தாங்க. அந்த நாலு ரோடிலும் போக்குவரத்தை நிறுத்தி வச்சுட்டாங்க.

பெரிய பிரகாரமும் முடிஞ்சிருச்சு! விழுந்து கும்பிட்டு வேண்டுதலும் முடிச்சாச்சு!

(பயணம் தொடரும்)

அன்புடன்
கவிநயா

Saturday, June 25, 2011

வைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை - 6

முந்தைய பகுதிகள்:
முதல் பகுதி; இரண்டாம் பகுதி; மூன்றாம் பகுதி; நான்காம் பகுதி; ஐந்தாம் பகுதி

இந்த வீட்டில் 2 மாடி இருந்தது. சமையல் செய்ய வசதி இல்லாததால அதுக்கு ஒரு வீடு, நாங்கல்லாம் தங்க இந்த வீடு. அங்கேருந்து சமைச்சு இங்கே எடுத்துட்டு வந்தாங்க!

கீழேயே கொஞ்ச நேரம் படுத்திருந்துட்டு, பிறகு போய் குளிச்சோம். ரெண்டாவது மாடிக்கு ஏறி போய் குளிக்க வேண்டியிருந்தது. மறுபடி கீழே வந்து சாப்பிட்டுட்டு, முதல் மாடியில் இருக்கிற அறையில் படுத்துக்கிட்டோம். ஷண்முகத்தோட அவரோட நண்பர்கள் ரெண்டு பேர் வந்திருந்தாங்க. அதில் ஒரு பையன் பேர் சிதம்பரம்னு நினைக்கிறேன். அவருக்கு காலை மசாஜ் பண்ணத் தெரியுமாம். பழனிக்கு நடக்கிற போது வேற ஒருத்தர் பண்றதைப் பார்த்து கத்துக்கிட்டாராம்.

நாங்கல்லாம் ரொம்ப சிரமப்படறதைப் பார்த்து, ஷண்முகமும், சிதம்பரமும், ஷண்முகம் தங்கைக்கும், எங்களுக்கும், பாதத்தை நல்லா மசாஜ் பண்ணி விட்டாங்க. ரொம்ப நல்லா இருந்தது. அப்படியே தூங்கிட்டோம்.

அன்றைக்கு மதியம் தாமதமாத்தான் எழுந்து சாப்பிட்டோம். சாயந்திரம் அப்பாவும் அம்மாவும் வந்துட்டாங்க! சொல்ற பேச்சே கேட்கறதில்லை!

அந்த வீட்டுக்காரங்க எங்களை ரொம்ப நல்லா கவனிச்சுக்கிட்டாங்க. அந்த வீட்டில் ஒரு ஏ.சி. ரூம் இருந்தது. எங்களை அங்கே இருக்க சொன்னாங்க. அந்த வீட்டு அம்மா போளி நல்லா பண்ணுவாங்களாம். அவங்களே அத்தனை பேருக்கும் போளியும் மிக்சரும் செய்து குடுத்தாங்க. நல்லா சாப்பிட்டு மறுபடி கிளம்பிட்டோம். இன்றைக்கு மூவலூர் வரைக்கும் நடக்கணும். நடந்தாச்சுன்னா, அந்தப் பக்கம் 18 கி.மீ.தான். போய் சேர்ந்த மாதிரிதான்!

கையில் இருக்கிற பாட்டுப் புத்தகங்களை பார்த்து படிக்கிறதுன்னா வெளிச்சதோடதான் முடியும், அதனால கொஞ்ச நேரம் அந்த மாதிரி பாட்டுகள் பாடிக்கிட்டு போனோம். இன்றைக்குதான் கும்பகோணம், ஆடுதுறை, இந்த மாதிரி ஊரெல்லாம் தாண்டி போகணும். நேற்று மாதிரி இருக்காது, வழியெல்லாம் ஊரா வரும், நடமாட்டம் இருந்துக்கிட்டே இருக்கும்னு சொன்னாங்க.

கும்பகோணத்தில் அடுத்தடுத்து ரெண்டு இடங்களில் சாப்பாடு இருக்கும். முதல் இடத்தில் உட்கார வச்சு; அடுத்த இடத்தில் பார்சல் போட்டு தருவாங்க. எப்பவும் முதல் இடத்துக்கு போவோம், இந்த தரம் என்னவோ போகலை. நேரம் ஆயிடும், பார்சல் சாப்பாடு மட்டும் கையில வாங்கிக்குவோம்னு சொல்லிட்டு வந்துட்டோம். கும்பகோணத்தில் இதுக்கு போலிசெல்லாம் வச்சு வரிசையெல்லாம் ஒழுங்குபடுத்தி விட்டிருந்தாங்க.

ஆனா அம்மாவும் அப்பாவும் முதல் இடத்தில் போய் எங்களுக்காக காத்திருந்தாங்களாம். செந்தில் அங்கேருந்து கூப்பிட்டு கேட்டார், உங்க அம்மா அப்பா இங்கே இருக்காங்க, நீங்க வரலையான்னு…

பார்சல் சாப்பாட்டை வாங்கிட்டு இன்னும் கொஞ்ச நேரம் நடந்த பிறகு ஒரு பெட்ரோல் பங்கில் உட்கார்ந்து சாப்பிட்டோம்.

நினைச்ச இடத்தில் உட்காருவோம், வீட்டு வேலை பார்க்கிறபோது செய்யற மாதிரி, சேலையைத் தூக்கி செருகிட்டுதான் நடக்கறது, இப்படில்லாம், ‘புற நாகரிக தோற்றங்களில்’ இந்த மாதிரி பயணங்களின் போது கவனமே இருக்கறதில்லை.

என் நாத்தனார் கேட்டா, பகல்ல இந்த இடத்தையெல்லாம் பார்த்தா, இங்கேயா உட்கார்ந்தோம்னு தோணுமில்ல அண்ணி?ன்னு. அது உண்மைதான். இந்த பயணம் முடிஞ்சு சென்னை போன அடுத்த நாளே சாயிபாபா கோவிலுக்கு போனோம். என் தங்கைக்காக ஒரு இடத்தில் நான் மட்டும் காத்திருக்க வேண்டி இருந்த்து. கால் அப்படிக் கெஞ்சுது. இன்னும் சரியா ஆகியிருக்கலை. 5 நிமிஷம் சேர்ந்தாப்ல நிக்க முடியாது. பக்கத்தில் ஒரு கடை பூட்டிதான் இருந்தது. நடக்கும் போதுன்னா, சட்டுன்னு அந்த மாதிரி கடை வாசலில் தயக்கமில்லாம உட்காருவோம். ஆனா அப்ப உட்கார என்னவோ போலிருந்தது!

இன்றைக்கு நடை ரொம்பவே சிரமமா இருந்தது. தோழிக்கும் ஷூ போடறது சரியா வரலை. என் செருப்பை நான் பயன்படுத்தாததால அதையும் கொஞ்ச தூரம் போட்டு நடந்து பார்த்தா. அதுவும் சரியா வரலை. கும்பகோணத்தில் நிறைய கடைகள் திறந்திருந்தது, நாங்க போன நேரத்தில். அங்கே என் தங்கை தோழிக்கு anklet braces வாங்கிட்டு வந்தா. இப்படி என்னென்னென்னவோ செய்துக்கிட்டு, நடந்தோம்.

இப்பல்லாம் அரை மணி நேரத்துக்கொரு முறை கால் உட்காரணும்னு சொல்லும். 1கி.மீ கூட வந்திருக்க மாட்டோம். லைட்டை பார்த்தா போச்சு, உடனே உட்காரணும்! விரிச்சு, காலை நீட்டி உட்கார்ந்து, ஒருத்தருக்கொருத்தர் ஐயோடெக்ஸ் தேச்சு விட்டு (நாங்க நடந்து முடிக்கறதுக்குள்ள ரெண்டு ஐயோடெக்ஸ் டப்பாவும், ஒரு மூவ் ட்யூபும் காலி!), தண்ணி குடிச்சு, பத்து நிமிஷத்தில் போலாம் நேரமாயிடும்னு கிளம்பிடுவோம். உட்கார்ந்துட்டு எழுந்து நடக்கும் போது கால் அப்படி வலிக்கும்! ஓரளவு சீரான வேகம் எடுக்கவே இன்னொரு கால்மணி நேரம் ஆயிடும். ஆனாலும் உட்காராம நடக்க முடியாது!

நிறைய பேர் நடுவில் ஒரு மணி நேரம், ரெண்டு மணி நேரமெல்லாம் எங்கேயாவது படுத்து தூங்கிருவாங்க. பிறகு எழுந்து விறுவிறுன்னு நடந்துருவாங்க. ஆனா நாங்க, தூங்கினா நாம அவ்வளவுதான்… அதனால முயல் ஆமை கதையில் வர ஆமை மாதிரி நாம நடந்துக்கிட்டே இருக்கணும், மத்தவங்க தூங்கினா தூங்கட்டும், அப்படின்னு சொல்லிச் சொல்லிக்கிட்டே நடந்தோம்!

திருவாலங்காடு அப்படிங்கிற இடத்தில் சுடச்சுட பொங்கல் குடுப்பாங்க. அங்கே போய் தொன்னையில பொங்கல் வாங்கிச் சாப்பிட்டு, பக்கத்தில் ஒரு கடையில உட்கார்ந்தோம், மழை வந்திடுச்சு. அங்கேதான் ஷண்முகமும் இருந்தார்; அவர் குழந்தையை தூங்கிட்டிருந்தது. பத்மநாபன், இன்னும் பலரும் அங்கே இருந்தாங்க. அது ஒரு இரும்புச் சாமான் கடை. ஒரே கடாமுடா சாமானா இருந்தது. இருக்கிற இத்தினியூண்டு இடத்தில் எல்லாரும் எப்படியோ உட்கார்ந்துக்கிட்டும் படுத்துக்கிட்டும் இருந்தோம். இதில் நிறைய பேர் தூங்க வேற தூங்கிட்டாங்க. அப்ப மணி மூணரை இருக்கும்.

ஊரில் என்னை ‘கவிநயா’வாக தெரிஞ்சவங்க பத்மநாபன், செந்தில், ஷண்முகம், இவங்கதான். அவங்க சில கவிதைகள் பற்றி பேசினாங்க. நேயர் விருப்பம் மாதிரி பத்மநாபனை சில பாடல்களை பாடச் சொல்லிக் கேட்டோம். இப்படியாக அந்த இடத்தில் கிட்டத்தட்ட 3 மணி நேரம் தங்கி இருந்தோம்! அப்படி ஒரு மழை! அங்கே என்னால தூங்க முடியலை.

ஒரு வழியா ஆறரைக்கு மழை இலேசா விடறாப்ல இருந்த்து. அவங்கவங்க செல் போனுக்கு மட்டும் ஒரு குட்டி ப்ளாஸ்டிக் கவர் அந்தக் கடையில் இருந்து வாங்கிக்கிட்டோம். மழைக்கு தலைக்கு மேல போட்டுக்க பெரிய பை மாதிரி தந்தாங்க. அதையும் வாங்கிக்கிட்டு கிளம்பிட்டோம்.

மழை வந்ததில் ரோடெல்லாம் தண்ணி தேங்கியிருந்தது. கல்லெல்லாம் வெளிய வந்து ரொம்ப நல்லா குத்த ஆரம்பிச்சிருச்சு. நடக்கவே முடியலை! அபிராமி அந்தாதிதான் எனக்கு துணை. 100 பாட்டை சொல்லி முடிக்க அரை மணி நேரம் ஆகும். ஒரு அரை மணி நேரம் கஷ்டப்பட்டு நடந்துரலாம், அந்தாதி ஒரு முறை சொல்லி முடிக்கிற வரைக்கும் நடக்கலாம், பிறகு உட்காரலாம், அப்படின்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டு நடந்தேன். இப்படியே அன்றைக்கு எத்தனை முறை அந்தாதி சொன்னேனோ! அப்படியும் பல முறை அந்தாதி முடிக்கும் முன்னேயே உட்கார வேண்டி வந்தது.

ஆனா மழைனால உட்காரக் கூட சரியா இடம் கிடைக்கலை. நேரம் ஆக ஆக, சுத்தமா முடியலை. என் கம்போட முனையை என் தங்கை பிடிச்சுக்கிட்டா, நான் கண்ணை மூடிக்கிட்டு அந்தாதி சொல்லிக்கிட்டே நடந்தேன். அவளுக்குமே முடியலை, அடிப்பிரகாரம் மாதிரி அடி மேல் அடி வச்சு மெது…வா நடந்தோம். நல்ல வேளை, மழை வந்ததால வெயில் அவ்வளவா உறைக்கலை. இந்த இடங்கள்ல தோழி கொஞ்சம் வேகமாவே முன்னாடி போயிட்டா!

மூவலூர் வந்து சேர்ந்தப்ப மணி 11-க்கும் மேலே இருக்கும். கால் வலி உயிர் போயிடுச்சு. உடம்பில் தெம்பே இல்லை. பசி வேற, தாகம் வேற. தண்ணியெல்லாம் தீர்ந்து போயிடுச்சு. கண்ல பட்ட ஒரு குடிசை வீட்டுக்குள்ள போய் தண்ணி கேட்டோம். அந்த வீடு அவ்வளவு அழகா, சுத்தமா, குளுகுளுன்னு இருந்தது. நாங்க போனதும் எங்களை உட்காரச் சொல்லி உபசரிச்சாங்க. விசிறியை ஓட விட்டு, சொம்பு நிறைய சில்லுன்னு தண்ணி குடுத்தாங்க. தேவாமிர்தமா இருந்தது. அப்படியே படுத்து காலை நீட்டிரலாம் போல இருந்தது.

அங்கேருந்தே அண்ணனுக்கு போன் பண்ணி தங்கற வீட்டுக்கு வழி கேட்டுக்கிட்டோம். வீட்டுக்கு போய் சேரும்போது மணி பதினொன்றை இருக்கும். இது குட்டி வீடா இருந்தது. உள்ளே போய் காலை நீட்டி உட்கார்ந்தோன்ன கண்ல இருந்து கரகரன்னு தண்ணி வர ஆரம்பிச்சிருச்சு.

(பயணம் தொடரும்)

அன்புடன்
கவிநயா

Tuesday, June 21, 2011

வைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை - 5

முந்தைய பகுதிகள்:
முதல் பகுதி; இரண்டாம் பகுதி; மூன்றாம் பகுதி; நான்காம் பகுதி.

போனவுடனே கையோட குளிச்சிட்டே சாப்பிட்டுடலாம்னு, காபி குடிச்சிட்டு குளிச்சிட்டு வந்தோம். அங்கேயும் பக்கத்திலேயே பம்பு செட்டு இருந்தது. ரொம்ப நல்லாருக்கு, போய் குளிச்சிட்டு வாங்கன்னு எல்லாரும் சொன்னாங்க. ஆனா எங்களுக்கு தெம்பில்லை. அது ரொம்ப உயரமா வேற இருக்குமாம், ஏறுறதும், இறங்கறதும் கஷ்டம்னாங்க. அதனால வீட்லயே குளிச்சிட்டோம். நாங்கதான் கடைசியா வந்தோம்னு நினைக்கிறேன்.

அதுவும் நல்ல பெரிய வீடா இருந்தது. சாப்பிட்டு போய் படுத்தாச்சு, வழக்கம் போல. அப்பப்ப கரண்ட் வேற போயிடும். ஆனா நமக்கு இருக்கிற அசதில அதெல்லாம் ஒண்ணுமே தெரியாது.

வழக்கம் போல ரெண்டு மணிக்கு மதியச் சாப்பாடு, ஒரு நாலரைக்கெல்லாம் மறுபடி கிளம்பிட்டோம். இன்னிக்கு திருவலஞ்சுழி (சுவாமி மலை) வரைக்கும் நடக்கணும். நேற்றை விட குறைச்சு தூரம்தான் இன்னிக்கு. இன்றைக்கு நானும் பாதத்தில் கொப்புளம் வர மாதிரி இருந்த இடங்களில் ப்ளாத்ரி போட்டுக்கிட்டேன். ஏற்கனவே வந்த கொப்புளம் இடது கால் பெரு விரலுக்கும் அடுத்த விரலுக்கும் நடுவில் பெரிசா முழிச்சிக்கிட்டு நின்னது.

கிளம்பும்போதே சண்முகம் குழுவோட கிளம்பினோம். அவங்க குழந்தையை அவரும் அவர் நண்பர்களும் மாத்தி மாத்தி தூக்கிட்டு வந்தாங்க. அவரோட மனைவி, குழந்தைக்கு வேண்டிய பொருள்களோட காரில் கூடவே வந்துக்கிட்டிருந்தாங்க. அவரோட தங்கை நடந்து வந்தாங்க.

பாபநாசம் ரோடு பூரா ஒரு 20 கி.மீட்டருக்கு சுத்தமா விளக்கே இருக்காது. தனியா நடக்காதீங்க, யாரோடயாவது சேர்ந்து போயிடுங்கன்னு சொல்வாங்க. மற்ற இடங்களைப் போல நம்ம நினைக்கிறப்பல்லாம் உட்கார முடியாது. நடந்துக்கிட்டே இருக்கணும். அதுதான் ரொம்ப சிரமமா இருக்கும்.

இந்த இருட்டான பகுதியில் ஷண்முகம், பத்மநாபன் பாட்டு குழுவினரோட போயிட்டோம். தோழியாலதான் வேகமா நடக்க முடியலை. பல்லைக் கடிச்சுக்கிட்டு வா, இந்த இருட்டில் மட்டும் இவங்க கூடவே சேர்ந்து போயிடுவோம், பிறகு பின் தங்கிட்டா பரவாயில்லைன்னு சொல்லிச் சொல்லி அவளை இழுத்துக்கிட்டு போயிட்டோம். நடக்க முடியலைன்னா சில சமயம் நம்ம கம்போட ஒரு முனையை ஒருத்தர் பிடிச்சுக்குவாங்க, இன்னொரு முனையை நாம பிடிச்சுக்கிட்டோம்னா, கிட்டத்தட்ட இழுத்துக்கிட்டே போயிடுவாங்க. அந்த மாதிரி கொஞ்ச தூரம் அவளைக் கூட்டிப் போனோம்.

விளக்கு வெளிச்சம் வர்றதுக்கு முன்னாடியே கொஞ்சம் பின் தங்க ஆரம்பிச்சிட்டோம்னு நினைக்கிறேன்… பாபநாசம் தாண்டின பிறகா முன்னாடியான்னு நினைவில்லை, மட்டனேந்தல்னு ஒரு இடத்தில் ஒரு மில் இருக்கு. அதை யாத்திரீகர்களுக்கு திறந்து விட்டிருப்பாங்க. அங்கே சாப்பாடு மட்டுமில்லாம, காலுக்கு மசாஜ் செய்து விடுவாங்க. புதுக்கோட்டையிலிருந்து ஒரு பாங்கில் வேலை பார்க்கிறவங்க இங்க வந்து இந்த மாதிரி இலவச சேவை செய்யறாங்க. போன தரம் நாங்களும் செய்துக்கிட்டோம். செய்யும்போது சுகமா இருக்கும், ஆனா உடனே எழுந்து நடக்கறதால இன்னும் கஷ்டமா இருக்கும். அதனால இந்த முறை செய்துக்கலை. ஏற்கனவே கூட்டமா இருந்தாலும், ஒரு மாதிரி இடம் கண்டு பிடிச்சு, ஒரு ஹால் மாதிரி இருந்த இடத்தில் போய் படுத்துட்டோம்.

கிளம்பலாம்னு நினைக்கிறப்ப நல்ல மழை வந்துடுச்சு. அதனால கூடுதலா அரை மணிநேரம் ஓய்வு. ராத்திரி 12 மணி இருக்கும். எல்லாரும் தூங்கிட்டிருந்தாங்க. அந்த வீட்டுக்காரம்மா, நாங்க கிளம்பறதைப் பார்த்து, டீ தரவாம்மான்னு கேட்டு, சுடச்சுட டீ குடுத்தாங்க. அதை குடிச்சிட்டு தெம்பா கிளம்பும்போது, மழை இன்னும் முழுசா விடாம தூறிக்கிட்டிருந்தது. மணி பன்னிரெண்டரை. பரவாயில்லைன்னு நடக்க ஆரம்பிச்சிட்டோம்.

அந்த நேரம் ரோடுல ஈ காக்கா இல்லை! நாங்க மூணு பேரு மட்டும்தான்! சில தெருநாய்கள் சில சமயம் எங்க பின்னாடியே வரும். ஒரே நிசப்தமா இருந்த்து. ஒரு இடத்தில் நடக்கும்போது மல்லிக்கைப் பூ வாசம் வர மாதிரி இருந்த்து. இயல்பாதான் சொன்னேன், ‘மல்லிகைப் பூ வாசம் அடிக்கிற மாதிரி இருக்கில்ல?’ன்னு. உடனே என் தங்கைக்கு பயம் வந்துருச்சு போல, ‘ஹரஹர… சிவசிவ’ சொல்ல ஆரம்பிச்சிட்டா! போன முறையும் இதே ரோடுல நானும் என் தங்கையும் தனியாதான் நடந்தோம். (அப்ப கொலுசு சத்தம் கேட்ட்து :). நான் சொன்னேன், எப்பவுமே தையல்நாயகிதாண்டி நமக்கு துணைக்கு வரா, அப்படின்னு!

பாபநாசம் வந்தப்ப காலை அஞ்சு ஆயிருச்சுன்னு நினைக்கிறேன். அதுக்கப்புறம் திருவலஞ்சுழி வந்தப்ப ஏழு இருக்கும். நாங்க தங்கறதுக்கு திருவலஞ்சுழியும் தாண்டி தாராசுரம்கிற ஊருக்கு போகணுமாம்.

ஒரு வீட்டில் எங்க வண்டியை கட்டி போட்டிருந்தாங்க. (ஒவ்வொரு வண்டிக்கும் நம்பர் குடுத்திருப்பாங்க, ஒரு விலாசமும் இருக்கும்). அதைப் பார்த்து அடையாளம் கண்டுக்கிட்டு, வீடு வந்திருச்சுன்னு சந்தோஷமா உள்ள போனோம். அங்க அண்ணன் இருந்தாங்க. அவங்க, ‘இந்த வீடு இல்லம்மா. இங்க குளிக்க வசதி இல்லாத்தால உங்களுக்கு வேற வீடு பிடிச்சிருக்கோம். இங்க சமையல் மட்டும்தான். நீங்க அந்த வீட்டுக்கு போகணும், இன்னும் அரை மணி நேரம் நடந்தா வந்துரும்னாங்க!

இதுக்குள்ள ரொம்பவே அசந்து போயிட்டோம். இன்னும் நடக்கணும்னு அவங்க சொன்னதும் எனக்கு அழுகையே வந்துருச்சு. என் முகம் போற போக்கை பார்த்தும் போயிரலாம்மா, கிட்டத்துலதான், அப்படின்னாங்க. அங்கேயே ஒரு காபி குடிச்சிட்டு, மறுபடியும் நடக்கறோம், நடக்கறோம், தாராசுரம் வரதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சு! எட்டரை மணி போல வந்து சேர்ந்தோம்.

(பயணம் தொடரும்)

அன்புடன்
கவிநயா

பி.கு.: அடுத்த வாரக் கடைசியில் மறுபடியும் விடுமுறைல போகப் போறேன்னு இப்பதான் திடீர்னு realize பண்ணினேன்! அதனால அதுக்குள்ள பயணத்தை முடிக்கிறதுக்கான முயற்சியில் இறங்கியிருக்கேன். அது மட்டுமில்லாம, முடிக்காம போனா கோபியும் கண்ணனும் ஆட்டோ அனுப்பிருவாங்களோன்னு பயம்! ஆனா நீங்க அவசரமா படிக்கணும்னு அவசியம் இல்லை :) நிதானமாவே படிங்க!

Sunday, June 19, 2011

வைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை - 4

முதல் பகுதி இங்கே; இரண்டாம் பகுதி இங்கே; மூன்றாம் பகுதி இங்கே.

அம்மாவை மடியில் தாங்கிக்கிட்டு பலமுறை எழுப்பியும் எழுந்திருக்கலை. தலையில் சின்னதா வீக்கம் இருந்தது. இதுக்குள்ள கூட்டம் கூடிடுச்சு. தண்ணீர் வாங்கி தெளிச்சோம், விசிறி விட்டோம். ஒண்ணும் பலனில்லை.

எப்பவும் கையில் விபூதி வச்சிருப்போம். கை நிறைய விபூதியை அள்ளி தையல்நாயகி, நீயே துணைன்னு நினைச்சுக்கிட்டே பூசி விட்டேன். ரொம்ப நேரம் கழிச்சு “என்ன ஆச்சு?” ன்னு கேட்டுக்கிட்டு அம்மா கண்ணு முழிச்சாங்க. கீழே விழுந்த நினைவே இல்லை. தண்ணி குடிக்க வச்சோம். ஏற்கனவே சர்க்கரை இருக்கதால மாத்திரை சாப்பிடாததாலதான் மயக்கம் வந்திருக்குமோன்னு என் தங்கை மாத்திரை சாப்பிட்டீங்களான்னு கேட்டா. அம்மாவுக்கு அதுவும் சொல்லத் தெரியலை. இப்படி தடுமாற்றத்தோடயே பேசவும் பயமாஆயிடுச்சு. உடனடியா மருத்துவமனைக்கு கூட்டிப் போய் பாத்துடணும்னு நினைச்சோம்.

அங்கதான் பிரச்சனை. நடக்கறதை விட்டுட்டு அம்மாவைக் கூட்டிக்கிட்டு அப்பாவோட மருத்துவமனை போறதா, என்ன பண்றது? அப்பதான் எங்க உறவினர்கள் ரெண்டு பேர் அப்பாவோட கூட போறதுக்கு முன் வந்தாங்க. பக்கத்தில்தான் தஞ்சாவூர். அங்கே 24-மணி நேரம் ஒரு மருத்துவமனை இருக்கும், அங்கே கூட்டிப் போறோம்; விழுந்ததால ஏற்பட்ட மயக்கமாதான் இருக்கும், நீங்க சாமியை வேண்டிக்கிட்டு தைரியமா நடங்க, ஒண்ணும் ஆகாது, நாங்க பாத்துக்கறோம்னாங்க.

அவங்களுக்கு ரொம்ப நன்றி சொல்லி அப்பா அம்மாவோட அவங்களை அனுப்பி வச்சுட்டு, மறுபடியும் நடக்க ஆரம்பிச்சோம். தஞ்சாவூர் ஊரைக் கடந்து போறதுக்கு ரொம்ப நேரம் ஆகும். அம்மாவைப் பற்றியும், நாங்களும் அந்த நாற்காலியை சரியா கவனிக்காம விட்டுட்டது பற்றியும் வருத்தப்பட்டு பேசிக்கிட்டே நடந்தோம். இப்ப செருப்பு போட்டுக்கலை நானு.

போன முறையை விட ஊர் நிறைய மாறி இருந்தது. புதுசா பாலம்லாம் இருந்த்து. ஆள் நடமாட்டம் இருக்கலைன்னா சில சமயம் நாம சரியான வழியிலதான் போறமான்னு சந்தேகம் வந்துரும்! அப்பவும் அப்படிதான் வந்திடுச்சு. ஒரு இடத்தில் கொஞ்சம் உட்கார்ந்து வேற யாரும் வர்றாங்களான்னு பாத்து, வழியை நிச்சயம் பண்ணிக்கிட்டு நடந்தோம்.

இதுக்குள்ள எனக்கு இடது காலில் கொப்புளம் வந்திருச்சு. நினைச்சாலும் செருப்பு போட முடியாது, இனி. ஆனா அது எனக்கு ரொம்ப நிம்மதியா இருந்தது!

நடுநடுவில் அப்பாவுடன் போன் பேசிக்கிட்டு போனோம். ஸ்கான் எடுத்து பார்த்த்தில் அம்மாவுக்கு எதுவும் இல்லைன்னு சொல்லிட்டாங்களாம். ரெண்டு நாள் ஓய்வெடுக்க சொன்னார் டாக்டர்னு சொன்னாங்க. அப்புறம்தான் நிம்மதியாச்சு. தையல்நாயகிக்கு மானசீகமா ஒரு பெரிய்ய்ய்ய நன்றி சொன்னேன்.

தஞ்சாவூரில் ஒரு பெரிய திடல் இருக்கும். அங்கே குடிக்க ஏதாச்சும் குடுப்பாங்க. மக்கள் படுப்பாங்க. நாங்க அங்கே போனப்ப யாருமே இல்ல. அங்கங்க சிலர் மட்டும் படுத்திருந்தாங்க. அங்கே உட்கார்ந்திருந்த போது, அப்பா காரை பாத்துட்டோம். அப்பதான் தஞ்சாவூரிலேயே இருக்கிற உறவினர் வீட்டுக்கு போய்கிட்டிருந்தாங்க. அப்ப ஒரு ஒரு மணி இருக்கும்னு நினைக்கிறேன். அப்புறம் ஓ…டி போய் அவங்களை நிறுத்தி பேசினோம். அம்மா இப்ப தெளிவா பேசினாங்க. இனி எங்க பின்னாடியே வர வேணாம், இனி கோவில்ல பார்ப்போம், ஓய்வெடுங்கன்னு கண்டிப்பா சொல்லி அனுப்பி வச்சோம்.

கொஞ்ச நேரத்துல நல்ல மழை பிடிச்சிக்கிச்சு. அங்கேயே ஒரு பேருந்து நிறுத்தத்தில் தங்க வேண்டியதாயிடுச்சு. அங்கே இன்னும் நிறைய பேரும் மழைக்கு ஒதுங்கி இருந்தாங்க. அரை மணி நேரத்தில் மழை விட்டதும் கிளம்பினோம்.

தோழிக்கு ஷூ போட்டு நடந்ததில் ஒரு பக்கமா உரசி, அவளுக்கு பாதத்தில் வலிச்சுக்கிட்டே இருந்தது. இந்த பயணத்தின் போது, ராத்திரியெல்லாம் மருத்துவ முகாம்கள் போட்டிருப்பாங்க. அந்த மாதிரி ஒரு இடத்தில் போய், அவளுக்கு மருந்து போட்டுக்கிட்டு, கையிலயும் மருந்து வாங்கிக்கிட்டோம். இதெல்லாமும் இலவச சேவையாதான் செய்யறாங்க.

நடக்கும் போது அடுத்த ஊருக்கு எத்தனை கிலோமீட்டர்னு யாரையும் கேட்டுறவே கூடாது! ஒரே மாதிரி ரெண்டு பதில் கிடைக்கவே கிடைக்காது. ஒருத்தர் 12-ம்பார், ஒருத்தர் 6-ம்பார்! மைல் கல்லே கூட அப்படித்தான் போட்டுருக்கும். ஒரு இடத்தில் 6-ன்னு போட்டிருந்தா, இன்னும் ஒரு மணி நேரம் நடந்துட்டு பார்த்தா மறுபடியும் 6! அதே ஊருக்கு!

சில சமயம் இவ்வளவு தூரமான்னு மலைப்பா இருக்கும். எவ்வளவு தூரமா இருந்தாலும் நடந்துதானே ஆகணும், வா, அப்படின்னு சொல்லிக்கிட்டே நடப்போம்.

‘ஹர ஹர… சிவசிவ
ஓம்சக்தி… பராசக்தி
வைத்தியநாதன்… வழித்துணை வருவான்
தையல்நாயகி… தைரியம் தருவாள்
முத்துக்குமரன்…முன்னே வருவான்’

இதுதான் அடிப்படையான கோஷம். இதெல்லாம் வை.கோவிலில் இருக்கிற சிவன், அம்பாள், முருகன், பெயர்கள். இதோட அவங்கவங்க கற்பனை வளத்துக்கும் அனுபவத்துக்கும் தகுந்தாற்போல நிறைய சேர்த்துக்குவாங்க. தெரிஞ்ச பாட்டெல்லாம் பாடியாச்சுன்னா, இதைச் சொல்லிக்கிட்டே நடப்போம். அல்லது ரொம்ப தெம்பே இல்லாத மாதிரி இருந்தாலும், சொல்லுவோம்.

ரோடெல்லாம் இந்த முறை பரவாயில்லைன்னாலும், நிறைய இடங்களில் பார்க்கிறதுக்கு நல்லாருக்க மாதிரி இருந்தாலும், காலை வச்சா அம்புட்டுதான்! அப்படி ஒரு குத்தல். அந்த மாதிரி இடங்களில், ‘ஓம் சக்தி.. பராசக்தி’ன்னு சொல்லிக்கிட்டே பல்லைக் கடிச்சுக்கிட்டு முழு பாத்த்தையும் பதிச்சு நடப்பேன். அப்படி ஒரு இடத்தில், ‘பாருடி ரோடு பூரா ரோஜாப்பூவா விரிச்சிருக்கு’, அப்படின்னேன்… பக்கத்தில் நடந்தவங்கள்லாம் சிரிச்சாங்க!

தஞ்சாவூரில் கவிதா மன்றம்னு ஒரு இடம் இருக்கு. அங்கே காலைல இட்லி, பொங்கல் சுடச் சுட. அதாவது 3 மணி, 4 மணி காலைல! மருத்துவ முகாமும் அங்கேயே போட்டிருப்பாங்க. அதனால ஒரே கூட்டம். நாங்க அங்கே போன போது மூணரை இருக்கும்னு நினைக்கிறேன். அங்க போய் சாப்பிட்டுட்டு, ஒரு அரை மணி நேரத்துக்கு படுத்து நல்லா தூங்கிட்டோம். மண்டபமா இருக்கறதால கட்டிடத்துக்குள்ள படுக்கலாம்.

போன முறை நடந்த போது பூண்டிக்கு போய் சேர முடியலை. அதுக்கு 3,4 கி.மீ முன்னாடி மயில் பண்ணைன்னு ஒரு குட்டி இடம் (ஊர்?) இருக்கு. அங்க பம்பு செட்டு இருக்கும். குளிக்க விடுவாங்க. சாப்பாடும் போடுவாங்க. நாங்க போன முறை அங்கே வந்து சேரவே 9 மணி ஆயிடுச்சு. வெயிலில் மேலே நடக்க முடியாதுன்னு அங்கேயே தங்கிட்டோம். அப்பா கார் கொண்டு வந்தாதால, அவங்க வண்டிக்கு போய் துணிமணி எடுத்துட்டு வர சொன்னாங்க.

இந்த முறை மயில் பண்ணை வரும்போது மணி எட்டு இருக்கும்னு நினைக்கிறேன். சாப்பாட்டுக்கு மகா பெரீய்ய்ய்ய வரிசை. அதில் நின்னு சாப்பாடு வாங்கினா நேரம் வேற ஆயிடும். அதனால அசதி தீர பம்பு செட்டு தண்ணியிலாச்சும் ரெண்டு நிமிஷமாவது நின்னுட்டு போலாம்னு நினைச்சோம். மாற்றுத்துணியெல்லாம் இல்லை. சேலையோட அப்படியேதான் குளியல். நடக்கும்போது சீக்கிரம் காஞ்சுடும்னுதான்! அங்கேயும் கூட்டம். ரெண்டு நிமிஷத்துக்கு மேல நிக்க முடியாது. தோழி குளிக்கலைன்னுட்டா. தங்கையும் நானும்தான் (பம்பு செட்டு குளியல்) ருசி கண்ட பூனைகள்!

குளிச்சிட்டு இன்னும் எத்தனை கிலோமீட்டர் தங்கற ஊருக்கு (கோவிலூர்), அப்படின்னு விசாரிச்சப்பதான் இந்த ஊருதான் அந்த ஊருன்னாங்க! அதாவது நாங்க தங்கற இடம் பூண்டிக்கு முன்னாடியே. அதனால அந்த தூரத்தை சேர்த்து நாளைக்கு நடக்கணும்! நாங்க இன்னும் ரெண்டு மணி நேரமாச்சும் நடக்க வேண்டி இருக்கும்னு நினைச்சுக்கிட்டிருந்ததால, இது எங்களுக்கு இன்ப அதிர்ச்சியா இருந்த்து! அப்புறம் அந்த வீட்டை கண்டுபிடிச்சு போய் நடக்க இன்னும் முக்கால் மணி நேரம் ஆனது.

எங்க ஈரத்தைப் பார்த்துட்டு, ‘என்னம்மா குளிச்சிட்டு வந்தீங்களா’ன்னு கேட்டாங்க அண்ணன். ‘ஆமா அண்ணே, மயில் பண்ணைல இருந்து ரொம்ப தூரம் நடக்கணுமாக்கும்னு நினைச்சு குளிச்சோம்’னு சொன்னோம்.

(பயணம் தொடரும்)

அன்புடன்
கவிநயா

பி.கு.: என் தங்கைகிட்ட இன்னிக்கு பேசினப்ப, 'என்னடி இன்னும் பூண்டியே போய் சேரலையா? இந்த வேகத்தில் போனா எப்ப கோவிலுக்கு போய் சேர்றது?!' ன்னு கேட்டா :)

Monday, June 13, 2011

வைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை - 3

முதல் பகுதி இங்கே;
இரண்டாம் பகுதி இங்கே.

போன முறையெல்லாம் நாங்க வந்து சேரவே (அதுவும் நானு, காலில் கொப்புளத்தோட) எட்டரை ஆனது. இந்த முறை எவ்வளவோ பரவாயில்லை. கொஞ்ச நேரம் செருப்பு போட்டதாலயோ என்னவோ காலில் உறுத்தற உணர்வு இருந்தாலும் கொப்புளம் இன்னும் வரலை.

வீட்டில் நுழைஞ்ச உடனேயே ஒரு பெரிய ஹால். எங்களுக்கு முன்னாடியே நிறைய பேர் வந்து அங்கே படுத்து தூங்கிக்கிட்டிருந்தாங்க. நாங்களும் கொஞ்சம் படுத்திருந்திட்டு குளிக்கலாம்னு நினைச்சு, காபி குடிச்சிட்டு படுத்துட்டோம்.

எழுந்து பார்க்கும் போதுதான் அங்கேதான் ஷண்முகமும், தங்கை, மனைவி, குழந்தையோட தங்கியிருக்கார்னு தெரிஞ்சது. எங்க வண்டியில் எங்களைச் சேர்த்து கிட்டத்தட்ட 20 பேர். எங்களைத் தவிர மற்றவங்க எல்லோரும் கோயமுத்தூரிலிருந்து பெரிய்ய குழுவா வந்திருந்தாங்க. அதில் ஷண்முகமும் ஒருத்தர்.

அவர் குழந்தையோட கொஞ்சம் விளையாடிட்டு, பிறகு போய் ஒவ்வொருத்தரா போய் குளிச்சிட்டு வந்தோம். குழாயில் தண்ணி வர அளவெல்லாம் தண்ணீர் வசதி இல்லை. ரெண்டு பெரீய்ய்ய அண்டாவில் தண்ணீர் வச்சிருந்தாங்க. அதைத்தான் எடுத்து பயன்படுத்தினோம். பின்னாடியே வராண்டா மாதிரி இருந்த இடத்தில் அடுப்பு போட்டு சமையல் செய்தாங்க. (அது ஒரு முஸ்லிம் வீடுன்னு பிறகு தெரிஞ்சது!) இந்த மாதிரி தங்கறப்போ, வீட்டுக்காரங்க அவ்வளவா வெளிய வர மாட்டாங்க. சாப்பாடு மட்டும் சிலர் நம்மகிட்ட இருந்து ஏத்துக்குவாங்க. மற்றபடி வீடு முழுக்க, வர்றவங்களுக்கு கொடுத்துருவாங்க!

இரண்டு மாற்றுத் துணிதான் எடுத்துட்டு போவோம். அதை வண்டியில் போட்டுருவோம். அவங்க தங்கற வீடுகளுக்கு கொண்டு வந்துருவாங்க. அதனால துவைச்சு துவைச்சு கட்டிக்கணும். அந்த அசதியில், கால்வலியில், துவைச்சு குளிக்கிறது ஒரு பிரம்ம பிரயத்தனம்தான்னே சொல்லலாம்.

ஒரு வழியா துவைச்சு காயப் போட்டு, (காயப் போட பெரும்பாலும் இடம் வேற அதிகம் இருக்காது, இத்தனை பேர் தங்கும்போது), குளிச்சிட்டு வந்து சாப்பிட்டோம். பிறகு காலில் எண்ணையோ, ஐயோடெக்ஸோ, அவங்கவங்க தடவிக்கிட்டு, படுத்தாச்சு.

2 மணிக்கு மதியம் சாப்பிட எழுப்பினாங்க. மறுபடி சாப்பிட்டுட்டு, கொஞ்சமே கொஞ்ச நேரம் படுத்தோம். 4 மணி போல துணியெல்லாம் எடுத்து வச்சிட்டு, மறுபடி ஒரு குளியல். சாயந்திரம் கிளம்பும் முன்னாடி ஒருதரம் குளிச்சாதான் நல்லா நடக்க முடியும். இல்லன்னா ரொம்ப கஷ்டம். தூக்கமும் அசதியும் அழுத்திரும். அனுபவத்தில் கண்ட உண்மை.

கோயமுத்தூர் குழுவில் ஒரு டாக்டர் இருந்தார். அவர்கிட்ட போய் தோழியோட காயத்தை சரிபண்ணி கட்டு போட்டுக்கிட்டோம். நிறைய பேருக்கு கொப்புளம் வர மாதிரி இருக்கிற இடத்தில், பாதத்தில் ப்ளாஸ்டர் போட்டு விட்டார். ஆனா நான் இன்னிக்கு போட்டுக்கலை. பிறகு உப்புமா சாப்பிட்டு காபி குடிச்சோம். அப்பதான் எங்க அம்மாவும் அப்பாவும் வந்தாங்க, எங்களைப் பார்க்க. எங்க பின்னாடியே காரில் வந்துக்கிட்டிருந்தாங்க. அவ்வப்போது சில இடங்களில் வந்து பார்ப்பாங்க. அவங்ககிட்ட பேசிட்டு கிளம்பினோம்.


படம் ஷண்முகம் அனுப்பி இருந்தார். நன்றி ஷண்முகம்!
ரொம்பக் கஷ்டப்பட்டு தேட வேணாம்! படத்தில் நானு இல்லை! :
)

இன்றைக்குதான் அதிக தூரம் நடக்கணும். பூண்டி வரைக்கும். 48கி.மீ. பூண்டியைப் பார்த்துட்டாலே, வை.கோவிலுக்கு போய்ச் சேர்ந்த மாதிரிதான்னு சொல்லுவாங்க. அவ்வளவு கஷ்டமான நடை. ஆனா பார்க்கப் போனா, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதத்தில் அப்படித்தான் தோணும்.

போகிற வழியெல்லாம் காபி, டீ, தண்ணீர், இளநீர், மோர், சாப்பாடு, இப்படி ஏதாவது கொடுத்துக்கிட்டே இருப்பாங்க. ஆனா தாமதமா போனா ரோடு பூரா குப்பையா கிடக்கிற வெற்று ப்ளாஸ்டிக் கப்கள்தான் நம்மை வரவேற்கும். நடக்கும்போது ரொம்பவே ஆதங்கப்பட்ட விஷயம் இது. அடியவர்களுக்கு அன்பா இதையெல்லாம் கொடுக்கறாங்களே தவிர, குப்பைகளை ஒரே இடத்தில் போடறது பற்றியோ, அந்த இடத்தை சுத்தம் பண்றது பற்றியோ யாரும் கவலைப்படற மாதிரி தெரியலை :(

இராத்திரி நாங்கல்லாம் நடந்துக்கிட்டிருக்கும் போது 9 மணி அளவில் எங்க பக்கத்தில் நாங்க சேர்ந்திருந்த வண்டிக் காரங்களோட கார் வந்து நின்னுது. தண்ணி ஊத்தின சாதத்துல மோர் ஊத்தி, எலுமிச்சை ஊறுகா போட்டு நல்லா கரைச்சு கொண்டு வந்தாங்க. அதுதான் நடக்கிறதுக்கு நல்ல சத்து குடுக்கும். முன்னெல்லாம் எல்லாம் வேண்டாம் வேண்டாம்னு சொல்லுவேன். ஆனா இப்ப கொஞ்சம் சமர்த்தாயிட்டேன், எதெது நல்லது, தேவைன்னு தெரிஞ்சுக்கிட்டேன். அதனால அதுல ஆளுக்கு ரெண்டு டம்ளர் குடிச்சிட்டு நடந்தோம்.

4 நாளும் சரியா அவங்க வண்டியில் வந்தவங்களைப் பார்த்து எப்படியோ கண்டு பிடிச்சு வந்து குடுத்திருவாங்க! 5 மணிக்கு ஏதோ சாப்பிட்டு கிளம்பறதால 9 மணிக்கு கஞ்சி குடிச்சா தெம்பா இருக்கும்.

பாட்டெல்லாம் சொல்லிக்கிட்டு, கொஞ்ச நேரத்துக்கு ஒரு தரம் உட்கார்ந்து கெஞ்சற காலைக் கொஞ்சம் கொஞ்சி தாஜா பண்ணிக்கிட்டு, நடந்தோம். இன்றைக்கும் கொஞ்ச நேரம் செருப்பு போட்டுக்கிட்டேன். திருக்காவனூர் பட்டிங்கிற இடத்தில் எங்க உறவினர் ஒருத்தவங்க அன்னதானம் பண்ணுவாங்க. அங்கே போயிட்டா கொஞ்சம் கூட நேரம் உட்காரலாம்கிற எதிர்பார்ப்போட நடந்தோம்.

அங்கே போய்ச் சேர்ந்தப்ப ஒரு பத்தரை இருக்கும். அம்மாவும் அப்பாவும் ஏற்கனவே அங்க காத்திருந்தாங்க. நாங்க சாப்பிட்டுட்டு ஒரு இடத்தில் விரிப்பை விரிச்சு காலை நீட்டி உட்கார்ந்தோம். அம்மாவும் அப்பாவும் பக்கத்தில் ப்ளாஸ்டிக் நாற்காலியில் உட்கார்ந்திருந்தாங்க. தரை மேடு பள்ளமா இருந்தது, ஆனா எங்க அசதியில் அது யாருக்கும் உறைக்கலை. திடீர்னு அம்மா உட்கார்ந்திருந்த நாற்காலி பின்னாடி அப்படியே சாஞ்சிடுச்சு. அம்மா உடனடியா நினைவை இழந்துட்டாங்க.

(பயணம் தொடரும்)


அன்புடன்
கவிநயா

Monday, June 6, 2011

நீ இல்லாத போதும்...

(100-வது கவிதை)கடற்கரை மணலில்
கால் பதித்து நடக்கிறேன்
கூடவே பதிகின்றன
உன் பாதச் சுவடுகளும் -
என்னருகில் நீ இல்லாத போதும்…

தனிமையின் அமைதியிலும்
இரைச்சலில் அமிழ்கையிலும்
தெளிவாய் ஒலிக்கிறது,
உன்னுடைய இன்குரல் மட்டும் -
என்னருகில் நீ இல்லாத போதும்…

தெருவின் வெறுமையிலும்
திருவிழாக் கூட்டத்திலும்
புன்னகையுடன் பளிச்சிடுகிறது,
அன்பொளிரும் உன் வதனம் -
என்னருகில் நீ இல்லாத போதும்…

--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/eaglella/246690652

பி.கு.: பாத யாத்திரை செய்வதை விட, அதைப் பற்றி எழுதறது கஷ்டமா இருக்கும் போல! போன வாரம் முழுக்க எழுதறதுக்கு போதிய நேரம் கிடைக்காததால இந்த வாரம் கவிதை. கூடிய விரைவில் யாத்திரையை தொடர்கிறேன்...