Monday, May 30, 2011

வைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை - 2

முதல் பகுதி இங்கே

இந்த முறை போகும் போது ஓரளவு வீட்டுப் பாடம் படிச்சிட்டு போனேன்.

எங்கூர்ல 10K அப்படின்னு 10 கி.மீ. மாரத்தான் ஒண்ணு நடந்தது. கோவிலுக்கு போறதுக்கு 2 வாரம் முந்திதான். அதில் ஓடறவங்க, நடக்கறவங்க, இல்ல ரெண்டும் மாத்தி மாத்தி செய்ய நினைக்கிறவங்க, எல்லாருமே கலந்துக்கலாம். தோழிகளோட நானும் நடக்கற குழுவில் சேர்ந்திருந்தேன். அதுக்காக வாரா வாரம் குறைஞ்சது ஒரு மணி நேரம் பயிற்சி செய்தோம். அதிலும் 10000 பேர் சேர்ந்திருந்தாங்க. அதைப் பற்றி எழுதப் புகுந்தா அது இன்னொரு பதிவாயிடும்! அதனால இதோட நிறுத்திக்கிறேன்!

எதுக்கு சொல்ல வந்தேன்னா, அதுல சேர்ந்ததால ரொம்ப தூரம் நடக்கறது பற்றி, அதுக்கு எப்படி தயாராகணும், அப்படிங்கிறது பத்தில்லாம் வாசிக்க நேர்ந்தது, உதவியா இருந்தது. அது முடிஞ்ச பிறகு, எங்க வீட்டுக்கு முன்னாடி பதிச்சிருக்கிற சரளைக்கல்லில், தினமும் அரை மணி நேரம் வெறுங் கால்ல நடந்து பழகினேன்.

சூடான மணல்ல நடந்தாலும், இந்த மாதிரி சரளைக்கல்லில் நடந்தாலும் பாதம் கடினமாயிடுமாம். அப்படி ஆகிட்டா கொப்பளம் வர்றது மாதிரியான பிரச்சனைகளை தவிர்க்கலாம். அப்படியும் எனக்கு தவிர்க்க முடியலைங்கிறது வேற விஷயம் :)

சரி… விட்ட இடத்துக்கு போவோம், வாங்க!

தெரிஞ்ச சாமி பாட்டு, ஸ்லோகம், பஜனை, இப்படி பாடிக்கிட்டே நடந்தோம். இந்த மாதிரி பயணத்தின் போது நிறைய பாட்டு கோஷ்டிகளை பார்க்கலாம். ரொம்ப நல்லா பாடறவங்க நிறைய இருக்காங்க. அவங்களுக்கு பாட்டெல்லாம் மனப்பாடமாவும் தெரியும். அவங்க பாடப் பாட, கூட்டமெல்லாம் ‘ஓம் நமசிவாய’ அல்லது ‘ஓம் சக்தி’ அல்லது ‘அரோகரா’ இப்படி பாட்டுக்குத் தகுந்த மாதிரி கோரஸ் பாடிக்கிட்டே நடக்கும். அந்த மாதிரி பாடல்கள் பொதுவாகவே ஒரு வேகத்தோட இருக்கும். அதை பாடும் போது நம்ம நடையும் தன்னால வேகம் எடுத்துரும்! ரொம்ப அருமையான அனுபவம் அது!

நாம சோர்ந்து போகிற சமயங்களில் அவளே அனுப்பி வச்ச மாதிரி எப்படியோ யாராச்சும் வந்து சேருவாங்க, அவ்ளோதான் வா, வான்னு சொல்லி பாட்டுப் பாடியே கூட்டிட்டு போயிடுவாங்க! இந்த மாதிரி முந்தைய வருஷங்களில் எனக்கே நிறைய நடந்திருக்கு.

எங்களுக்கு தெரிஞ்ச பாட்டெல்லாம் பாடி முடிச்சாச்சு. ரோடில் கல்லு ரொம்பவே குத்த ஆரம்பிச்சது. என் தங்கை, “செருப்பை வேணா போட்டுக்கோடி, போட்டுக்கோடி”, அப்படின்னு சொல்லிக்கிட்டே இருந்தா.

எனக்கு இளையவளா இருந்தாலும் எங்க சின்னக் குழுவிற்கு அவதான் தலைவி! நல்லா பேசுவா, ரொம்ப சமர்த்து! ‘நீ மட்டும் எம்.பி.ஏ. படிச்சிருந்தா சூப்பர் மானேஜரா இருந்திருப்பேடி’ன்னு சொல்வேன்! எங்க கூட நடந்த தோழி ஏற்கனவே ஷு போட்டிருந்தா. சரி, இவ வேற ரொம்ப சொல்றா, வீட்லயும் ‘ஆமா, செருப்பு போட்டுக்கிட்டேன்’னு உண்மை(!) சொல்லணுமே, அப்படிங்கிற எண்ணத்தில் நானும் போட்டுக்கிட்டேன்…

இப்படி கொஞ்சம் மெதுவா நடந்துக்கிட்டிருந்த போது, தனியா நடந்திட்டிருந்த ஒருத்தர், ‘அரோகரா போடறீங்களா, வாங்க வாங்க’ன்னு சொல்லி, ‘அப்பனுக்கு… அரோகரா’ன்னு ஆரம்பிச்சு வேகமா முருகனோட பேர்களை சொல்லிக்கிட்டே போனார்… நாங்களும் உற்சாகமா அரோகரா போட்டுக்கிட்டு, அவரோட ஓரளவு வேகமாகவே நடந்தோம்.

இந்த மாதிரி பாட்டு கோஷ்டிகள் ரயில் சிநேகம் மாதிரி. முடிஞ்ச வரைக்கும் கொஞ்ச தூரம் அவங்களோட ஓடிட்டு, முடியலைன்னா பின் தங்கி நம்ம மெது நடைக்கு மாறிடுவோம்! ஆனா போன முறை நடந்த போது, அப்படி ரயில் சிநேகமா இல்லாம தொடர்ந்த சிநேகமாவே, ஒரு பாட்டு குழுவினரின் அறிமுகம் கிடைச்சது.

செந்தில் – வருஷா வருஷம் ‘இச்சடி’ங்கிற இடத்தில், நண்பர்களோட சேர்ந்து பாத யாத்திரை செய்யறவங்களுக்கு அன்னதானம் செய்துட்டு வரார். நல்ல பாடகர். பத்மநாபன் – ரொம்ப அருமையா பாடுவார். எப்பவும் ஏதாச்சும் பாடிக்கிட்டே இருப்பார். அருமையான குரல். இவரை நீங்க விஜய் டி.வி.ல சூப்பர் சிங்கரில் பார்த்திருக்கலாம்! என்ன, என் அம்மன் பாடல்களுக்கு இசையமைச்சு பாடறேன், பாடறேன்னு, இது வரை சொல்லிக்கிட்டே இருக்கார்! அடுத்தது ஷண்முகம் – இவரும் நல்லா பாடுவார். கண்ணதாசன் பாடல்கள், மற்றும் எந்த பாடலா இருந்தாலும் பிடிச்சிருந்தா வரிகளை உடனே மனப்பாடம் செய்துடுவார்! யாரையாச்சும் ஓட்டிக்கிட்டே இருப்பார் :) இவர் தன்னோட ஒரு வயசு குழந்தையை தூக்கிட்டு நடந்தார் இந்த வருஷம்.

இச்சடி, புதுக்கோட்டையிலிருந்து 12 கி.மி. அல்லது 18? - நினைவில்லை. அங்கே சாப்பிட வரணும்னு ஏற்கனவே செந்தில் அழைச்சிருந்தார். அரோகரா போட்டுக்கிட்டே நடந்துக்கிட்டிருந்த போது ‘இச்சடி’ங்கிற பெயர்ப் பலகையைப் பார்த்தோம். (அட, அதுக்குள்ள வந்திருச்சான்னு ஆச்சர்யமா இருந்தது. அப்ப ராத்திரி எட்டரைதான் இருக்கும்னு நினைக்கிறேன்.) எங்க கூட வந்தவர்கிட்ட “நாங்க கொஞ்ச நேரம் கழிச்சு வர்ரோம் அண்ணே”ன்னு சொல்லிட்டு, லைட்டெல்லாம் போட்டு ஜோரா சாப்பாடு நடந்துக்கிட்டிருந்த அந்த இடத்தில் நுழைஞ்சோம்.

செந்திலைக் கண்டுபிடிக்க கொஞ்சம் நேரம் ஆயிடுச்சு. சாம்பார் பத்தலைங்கிற டென்ஷன்ல இருந்தார்! இருந்தாலும் அந்த நேரத்திலும் எங்களை பார்த்து பேசி அன்பா சாப்பாடு பரிமாறி, கவனிச்சுக்கிட்டார். பத்மநாபன், அவர் குடும்பத்தை அறிமுகப்படுத்தினார். ஷண்முகத்தையும் அங்கேதான் பார்த்தோம். கணக்கு முடிச்சு சரி பண்ண ரொம்ப நேரம் ஆயிடும்கிறதால மறு நாளில் இருந்துதான் நடப்போம், அப்படின்னார் செந்தில். ஒரு வழியா அவங்ககிட்ட விடை பெற்றுக்கிட்டு மறுபடி கிளம்பிட்டோம்.

செருப்பு போட்டு நடக்கறது உறுத்தலா இருந்தது. பிடிக்கலை. அதனால கொஞ்ச நேரத்தில் மறுபடியும் கழற்றிட்டேன். சாதாரணமா ஒரு மணி நேரத்துக்கு 4 அல்லது 5கி.மீ. நடக்கலாம். நாங்களும் கிட்டத்தட்ட அந்த மாதிரிதான் நடந்தோம், ஆரம்பத்தில்! 2 மணி நேரமெல்லாம் உட்காராம நடந்திருக்கோம். ஆனா லைட் தெரிஞ்சா போதும், அங்க கொஞ்சம் உட்காரலாமான்னு கெஞ்ச ஆரம்பிச்சிரும் காலு!

இப்படி நடந்துக்கிட்டிருந்த போது தோழி ஷூ தடுக்கி கீழே விழுந்துட்டா! முழங்கால்ல சிராய்ச்சு நல்ல காயமாயிடுச்சு. ரத்தமும் நிக்காம வந்துக்கிட்டே இருந்துச்சு. அந்த இடத்தில் சூரிதார் துணியே கொஞ்சம் கிழிஞ்சிடுச்சுன்னா பாருங்க! எங்களுக்கு கொஞ்சம் பயமாயிடுச்சு. எங்கேடா லைட் வரும், உட்காரலாம்னு பார்த்துக்கிட்டே போனோம். வலது பக்கத்தில்தான் ஒரு வீடு மாதிரி தெரிஞ்சது.

அங்க போனா, இரண்டு மூணு பைரவர்! வீட்டில் வளர்க்கறாங்க போல! அந்த வீட்டுக்காரரும் அவர் மனைவியும் வந்து அதையெல்லாம் தள்ளி போகச் சொன்னாங்க. உட்காருங்கன்னு சொல்லி உபசரிச்சாங்க. அங்கேயே வாசலில் உட்கார்ந்தோம். விஷயம் தெரிஞ்சு முதல் உதவி சாமான் ஏதும் வேணுமான்னு கேட்டாங்க. ஆனா தோழியே எல்லாம் வச்சிருந்தா. அதனால அவ வச்சிருந்த பொருட்களை வச்சு, காயத்தை சுத்தம் பண்ணி, மருந்து போட்டு கட்டினோம். வீட்டுக்காரங்களுக்கு நன்றி சொல்லிட்டு கிளம்பினோம்.

இந்த பயணத்தின் போது மட்டும் எங்கே, யார் வீட்டுக்கு போனாலும், அல்லது வழியில் என்ன தேவைப்பட்டாலும், எல்லோருமே அப்படி ஒரு அன்பா, உதவி மனப்பான்மையோட நடந்துக்குவாங்க… கூட நடக்கிற பக்தர்களும் அப்படித்தான்… இது ஒரு மிக அருமையான உணர்வு… எப்பவுமே எல்லாருமே இப்படி இருந்தா எவ்வளவு நல்லாருக்கும்!

அதுக்கப்புறம் தோழியால ரொம்ப வேகமா நடக்க முடியல. இருந்தாலும் அமைதியாகவே நடந்து வந்தா… இப்படியாக நடந்து, ஒரு வழியா கந்தர்வ கோட்டைக்கு வந்து சேர்ந்தோம்! அங்கதான் அன்னிக்கு தங்கணும். தங்கற வீட்டை ஏற்கனவே அடையாளம் கேட்டு வச்சிருந்தோம். அதன்படி கேட்டுக் கேட்டு அந்த வீட்டுக்கு நாங்க போய் சேர்ந்தப்ப, காலை மணி ஆறரை!

(பயணம் தொடரும்…)

அன்புடன்
கவிநயா

10 comments:

  1. எங்களுக்கும் வைதீஸ்வரன் கோவில் குல தெய்வமாகும். அண்மையில் நடந்த ஒரு மஹா யக்ஞத்தில்
    நானும் பங்கு பெற வாய்ப்பு கிடைத்தது.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  2. //‘அப்பனுக்கு… அரோகரா’ன்னு ஆரம்பிச்சு வேகமா முருகனோட பேர்களை சொல்லிக்கிட்டே போனார்…//

    அரோகரா! - சொன்னாலே வேகம் கூடி விடாதா? சரியாத் தான் வந்து உங்களை நடக்க வச்சிருக்காரு அந்த மனிதர்!

    சரீஈஈஈஈ...இந்தப் பதிவிலும் அவன் வரலையா? காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி....
    எங்கே அவன்? எங்கே அவன்? :)

    ReplyDelete
  3. முருகா...வந்துக்கிட்டே இருக்கோம் அக்கா ;)

    \\சரீஈஈஈஈ...இந்தப் பதிவிலும் அவன் வரலையா? காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி....
    எங்கே அவன்? எங்கே அவன்? :)\\

    உங்களுக்கே தெரியாதா!!!!! ;)

    ReplyDelete
  4. //எங்களுக்கும் வைதீஸ்வரன் கோவில் குல தெய்வமாகும். அண்மையில் நடந்த ஒரு மஹா யக்ஞத்தில்
    நானும் பங்கு பெற வாய்ப்பு கிடைத்தது.//

    மிக்க மகிழ்ச்சி சுப்பு தாத்தா. வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  5. //சரீஈஈஈஈ...இந்தப் பதிவிலும் அவன் வரலையா? காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி....
    எங்கே அவன்? எங்கே அவன்? :)//

    இப்பதானே முதல் நாள் நடையே முடிஞ்சிருக்கு தம்பீ... இன்னும் 4 நாள் இருக்கே!

    காத்திருந்தால் கிடைப்பான் :)

    வருகைக்கு நன்றி கண்ணா.

    ReplyDelete
  6. //முருகா...வந்துக்கிட்டே இருக்கோம் அக்கா ;)//

    வாங்க கோபி!

    //உங்களுக்கே தெரியாதா!!!!! ;)//

    அதானே! :)

    ReplyDelete
  7. நடக்க எடுத்த பயிற்சி, நல்ல தகவல். உற்சாகம் தந்து கூட நடந்தவர்களைப் பற்றிய பகிர்வும் அருமை. தொடருங்கள்.

    ReplyDelete
  8. வாங்க ராமலக்ஷ்மி. மிக்க நன்றி :)

    ReplyDelete
  9. நடக்க எடுத்த பயிற்சி, நல்ல தகவல்.
    முருகா..முருகா..

    ReplyDelete
  10. //நடக்க எடுத்த பயிற்சி, நல்ல தகவல்.
    முருகா..முருகா..//

    வருகைக்கு நன்றி இராஜராஜேஸ்வரி. அவன் பேரைச் சொன்னால் தனி தெம்பு வரும் என்பது உண்மைதான் :)

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)