Sunday, March 13, 2011

அவளும் நானும்

வெள்ளிக்கிழமை. கோயிலுக்கு போகலாமா வேண்டாமான்னு கொஞ்சம் யோசனையா இருந்துச்சு. எங்க ஊர் கோவிலில் மகாலக்ஷ்மிக்கு அபிஷேகம், லலிதா சகஸ்ரநாமம், இதெல்லாம் வெள்ளிக்கிழமை விசேஷங்கள். எனக்கும் அன்றைக்கு ஒரு நாள்தான் உருப்படியா கோவிலுக்கு போற வழக்கம். அப்படின்னா இந்த தரம் மட்டும் என்ன யோசனைங்கிறீங்களா? அதுக்கு காரணம் இருக்கு.

போன வாரம் வெள்ளிக்கிழமை கோவிலுக்கு போன போது ஏதோ ஒரு காரணத்தால் மனசு ஏற்கனவே சஞ்சலப் பட்டுக்கிட்டிருந்தது. கோவிலுக்கு போயி, நல்லாதான் அபிஷேகம், அலங்காரம், எல்லாம் பார்த்தேன், லலிதா சகஸ்ரநாமமும் சொன்னேன். வழக்கமா தீபம் காண்பிச்ச பிறகு, அர்ச்சகர் தீபம், தீர்த்தம், சடாரி, பிரசாதம், இதெல்லாம் ஒவ்வொண்ணா குடுப்பார். தீபம், தீர்த்தம், ரெண்டும் கிடைச்சது. அடுத்ததா சடாரிக்கு குனியறதுக்காக, கைப்பையெல்லாம் கீழே வச்சுட்டு தயாரா நின்னேன்.. சந்நிதிக்கு ரெண்டு பக்கமும் நின்னவங்களுக்கு வரிசையா சடாரி வச்சுக்கிட்டே வந்தவர், என்னை மட்டும் மறந்துட்டு, போயே போயிட்டாரு! எனக்கு ஒரே வருத்தமா போச்சு. ஏற்கனவே வேற மனசு கஷ்டமா இருந்ததா, அதோட இதுவும் சேர்ந்துக்கிச்சு. சரி, என் மேல அவளுக்கு ஏதோ கோவம் போல, அப்படின்னு நினைச்சுக்கிட்டே வந்துட்டேன்.

அதனாலதான் இந்த வெள்ளிக்கிழமை கோயிலுக்கு போறது பத்தி சின்ன தயக்கம். ஆனா பழக்கம்கிறது விடக் கூடியதா என்ன? 7 மணிக்கு போய் அவள் முகத்தை பார்க்காமல் எப்படி இருக்கறது? சரின்னு அவகிட்ட ஒரு டீல் போட்டுக்கிட்டேன், “இன்றைக்கு எனக்கு எல்லாமே குறையில்லாம கிடைக்கணும், இல்லன்னா அடுத்த வாரத்திலிருந்து கோயிலுக்கு வர மாட்டேன், சொல்லிட்டேன்” அப்படின்னு!

அபிஷேகம் நல்லா முடிஞ்சது. பச்சைப் பட்டுப் புடவையில் அவ்ளோ அழகா இருந்தா. அர்ச்சனைக்கு குடுத்தவங்க யாரோ பூ வாங்கிக்கிட்டு வந்திருந்தாங்க, அந்த பச்சை புடவைக்கு பொருத்தமா, அதே பச்சையில் பூ. எப்படி அமையுது பாரு, அப்படின்னு தோணுச்சு. அதையும் வைச்சோன்ன, அழகுக்கு கேட்கவே வேணாம்!

தீபம் முடிஞ்சதும், வழக்கம் போல, தீபம், தீர்த்தம்…, இப்படி ஒவ்வொண்ணா வந்தது. எனக்கும் கிடைச்சது. சடாரி கொண்டு வந்தார். என்னை மறக்கப் போறார்னு நினைச்சுக்கிட்டே, ஆனாலும் தயாரா நின்னேன். மறக்கலை. அப்பாடின்னு இருந்தது! அடுத்ததா பிரசாதம்.

பிரசாதம்னா எங்க ஊர் கோவிலில் பாதாம் பருப்பும், கல்கண்டும் கலந்த கலவை. சில சமயம் பழம். இன்றைக்கு பருப்பு கலவை. ரெண்டு வரிசையிலும் மாத்தி மாத்தி குடுத்துக்கிட்டே வந்தவர், என்னை மட்டும் மறந்தே மறந்துட்டார்! எதிர்பார்க்கவே இல்லை. எனக்கு எப்படி இருந்திருக்கும்? சின்னப் புள்ள மாதிரி எனக்கும் குடுங்கன்னு கையை நீட்ட வெட்கமா இருந்தது. அவர் வேற ஏதோ அவசரத்தில் இருந்தார்.

இப்படியாக, இன்றைக்கும் ஒரே வருத்தமா போச்சு. என்ன பண்றதுன்னு தெரியாம, அங்கேயே சில நிமிஷங்கள் அப்படியே நின்னுக்கிட்டிருந்தேன். எதையோ இழந்த மாதிரி ஒரு உணர்வு. சந்நிதியிலிருந்து எல்லாரும் கலைஞ்சு போன பிறகு வழக்கம் போல பக்கத்தில் போய் விழுந்து கும்பிட்டேன். “அப்படின்னா நான் அடுத்த வாரத்திலிருந்து வர வேண்டாமா? இல்ல, என்னால வராம இருக்க முடியுதான்னு சோதிச்சு பார்க்கிறியா?” அப்படின்னு அவளைக் கேட்டேன். “அப்ப நம்ம டீல் படி இனி நான் வராம இருக்க வேண்டியதுதானா?” அப்படின்னு சொல்லும் போது கண் கலங்கிடுச்சு…

அப்பதான் இன்னொருத்தரும் சந்நிதிக்கு அருகில் வந்தார்… எனக்கு தெரிஞ்ச ஒரு நண்பர்தான். வந்து கையை நீட்டினார், நானும் என்னன்னே தெரியாம, அனிச்சையா, இயல்பா, கையை நீட்டினேன். என் கையில் அவர் என்ன கொடுத்திருப்பார்னு உங்களுக்கே இந்நேரம் தெரிஞ்சிருக்கும்!

என் சந்தோஷத்தை சொல்லி முடியாது! அப்புறம் என்ன? அடுத்த வெள்ளியும் அவளை பார்க்கத்தான் போறேன்!

அன்னையின் திருவடிகள் சரணம்.

அன்புடன்
கவிநயா

பி.கு. பொதுவா சின்ன புள்ளங்களுக்குத்தான் கல்கண்டு, பாதாம்லாம் பிடிக்கும். அதனால கோவிலில் வாங்கற பிரசாதத்தை நானுமே அங்கே பார்க்கும் புள்ளைகளுக்கு குடுக்கறதுண்டு. ஆனா! நான் எவ்ளோ பெரிய (சின்ன) பிள்ளை! என் முகத்தில் என்ன எழுதியிருந்ததோ! எனக்கு குடுக்கணும்னு அந்த நண்பருக்கு தோணியிருக்கே… தோண வச்சிருக்காளே… அவளைப் போல யாருண்டு?

21 comments:

 1. //நான் எவ்ளோ பெரிய (சின்ன) பிள்ளை! என் முகத்தில் என்ன எழுதியிருந்ததோ//

  அதானே!! இந்த அம்பாள் உம்மாச்சிக்கு இதே ஜோலியா போச்சு அக்கா!! நம்பள மாதிரி சின்ன குழந்தேளை ஏமாத்தரமாதிரி ஏமாத்திட்டு அப்புறம் குடுக்குர மாதிரி குடுப்பா!!..:) ஆனா அந்த கல்கண்டு வாங்கும் போது உங்க முகமண்டலம் எப்பிடி இருந்துருக்கும்னு இங்கேந்தே பாக்க முடியுது...:)))

  ReplyDelete
 2. தெய்வம் மனித உருவில்தான் வரும் என்பதை
  பூடகமாகச் சொல்லிபோகும் உங்கள் பதிவு அருமை
  சொல்லிய விதமும் பிரமாதம்
  நல்ல பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. நல்ல டீல்..

  நம்பினோர், கைவிடப் படார், இல்லையா?

  ReplyDelete
 4. நம்ம வீட்டு வாண்டுங்க எதாவது கேட்டு கெஞ்சி கொஞ்சி நின்னா நம்ம அந்த அழகை ரசிக்கனும்னே இழுத்தடிகறதில்லையா. அது மாதிரி தான் அம்பாளும் ரெண்டு நாள் உங்கள கெஞ்ச விட்டு ரசிச்சிருக்கா போல.

  ReplyDelete
 5. எங்களுக்கே பிரசாதம் கிடைத்த உண்ர்வு.அனுபவம் அருமை.

  ReplyDelete
 6. //நம்பள மாதிரி சின்ன குழந்தேளை//

  சின்னக் குழந்தை வரிசையில என்னையும் சேர்த்துக்கிட்ட தக்குடு வாழ்க! :)

  //ம்பள மாதிரி சின்ன குழந்தேளை ஏமாத்தரமாதிரி ஏமாத்திட்டு அப்புறம் குடுக்குர மாதிரி குடுப்பா!!..:)//

  ஆமாம்! உண்மை.

  //ஆனா அந்த கல்கண்டு வாங்கும் போது உங்க முகமண்டலம் எப்பிடி இருந்துருக்கும்னு இங்கேந்தே பாக்க முடியுது...:)))//

  சரிதான் தக்குடு :) ஆயிரம் வாட்ஸ் பல்புன்னு சொல்வாங்களே... நான் பார்த்ததில்லை, ஆனா அப்படித்தான் இருந்திருக்கும் என் முகம் அப்போ :)))

  தக்குடு வாசிச்சதில் பரம சந்தோஷம் :)

  ReplyDelete
 7. //தெய்வம் மனித உருவில்தான் வரும் என்பதை
  பூடகமாகச் சொல்லிபோகும் உங்கள் பதிவு அருமை
  சொல்லிய விதமும் பிரமாதம்
  நல்ல பதிவு
  தொடர வாழ்த்துக்கள்//

  தவறாத உங்கள் வருகைக்கும், ஊக்கமளிக்கும் பின்னூட்டத்திற்கும், மிக்க நன்றி ரமணி!

  ReplyDelete
 8. //நல்ல டீல்..//

  :)))

  //நம்பினோர், கைவிடப் படார், இல்லையா?//

  அதேதான்!

  நன்றி ஸ்வர்ணரேக்கா.

  ReplyDelete
 9. //நம்ம வீட்டு வாண்டுங்க எதாவது கேட்டு கெஞ்சி கொஞ்சி நின்னா நம்ம அந்த அழகை ரசிக்கனும்னே இழுத்தடிகறதில்லையா. அது மாதிரி தான் அம்பாளும் ரெண்டு நாள் உங்கள கெஞ்ச விட்டு ரசிச்சிருக்கா போல.//

  அட, அதுவும் அப்படியா... :) ஆமா, அதிலும் என்னை அழ விடறது அவளுக்கு ரொம்ப பிடிக்கும் :)

  வருகைக்கு நன்றி மிதிலா.

  ReplyDelete
 10. //எங்களுக்கே பிரசாதம் கிடைத்த உண்ர்வு.அனுபவம் அருமை.//

  முதல் வருகைக்கு மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி. உங்க பேர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு :)

  ReplyDelete
 11. //soooooppppper deal!//

  ஆமால்ல? :)

  நன்றி லலிதாம்மா!

  ReplyDelete
 12. //நான் எவ்ளோ பெரிய (சின்ன) பிள்ளை!//

  பெரிய ஆனால் சின்ன பிள்ளைதான்:)! அவசரங்களில் சிலநேரங்களில் இப்படி நடப்பதுண்டு. உங்க மென் மனசறிஞ்சு அன்னையும் உடனேயே தேற்றி அருளியது அற்புதம்.

  ReplyDelete
 13. Rombave nallaairukku.Arumaiyo arumai.
  Natarajan.

  ReplyDelete
 14. //பெரிய ஆனால் சின்ன பிள்ளைதான்:)!//

  ஹை! :)

  //அவசரங்களில் சிலநேரங்களில் இப்படி நடப்பதுண்டு.//

  ஆமாம் ராமலக்ஷ்மி. சாதாரணமா இதுக்கு வருத்தப்பட்டிருக்க மாட்டேன். என்னோட டீல்னால வந்த பிரச்சனை :)

  //உங்க மென் மனசறிஞ்சு அன்னையும் உடனேயே தேற்றி அருளியது அற்புதம்.//

  ச்வீட்ல? :)

  மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 15. //Rombave nallaairukku.Arumaiyo arumai.//

  மிக்க நன்றி திரு.நடராஜன் :)

  ReplyDelete
 16. சாதாரணமாக் கல்யாணங்கள்லே தான் இப்படியான அநுபவங்கள் வாய்க்கும். கோயிலிலுமா?? :)))

  ம்ம்ம்ம்?? ஆனா ஒரு விஷயம். நம்ம மனசிலே ஒண்ணை நினைச்சுட்டுக் கோயிலுக்குப் போனால் இன்னிக்குப் பிரசாதம் கிடைச்சால் நல்ல சகுனம், இல்லைனா நல்ல சகுனம் இல்லைங்கறாப்போல் செண்டிமெண்டெல்லாம் எனக்கும் இருந்தது. :)))))))))

  ReplyDelete
 17. எதிர்பாராமல் உங்களுக்குக் கிடைச்சாப்போல் எதுவுமே கிடைக்கும் என்ற எண்ணமே இல்லாமல் போகும்போது நல்ல தரிசனம், நல்ல பிரசாதங்கள், நல்ல சேவை என்று பெற்றதும் உண்டு. எதிர்பார்ப்புக் கூடாது என்பதையே வலியுறுத்தும் நிகழ்வோ??

  ReplyDelete
 18. //இல்லைனா நல்ல சகுனம் இல்லைங்கறாப்போல் செண்டிமெண்டெல்லாம் எனக்கும் இருந்தது. :)))))))))//

  //எதிர்பார்ப்புக் கூடாது என்பதையே வலியுறுத்தும் நிகழ்வோ??//

  எனக்கும் past tense-தான் கீதாம்மா :) அதாவது முந்தி இருந்த மாதிரி இப்பல்லாம் எதிலுமே அவ்வளவா எதிர்பார்ப்புகளும் இல்லை, sentiments-ம் இல்லை. அன்றைக்கு என்னவோ அபூர்வமா அப்படி ஒரு மனநிலை...

  வருகைக்கு நன்றி கீதாம்மா.

  ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)