Tuesday, March 8, 2011

அவள் வருவாளா?

முதல் பகுதி இங்கே; இரண்டாம் பகுதி இங்கே...

(3)

அன்றைக்கு தொடங்கி தினமும் அந்த குட்டி பொண்ணை எதிர்பார்த்துக் காத்திருப்பது சுந்தரிக்கு வாடிக்கை ஆகிப் போச்சு. முன்னெல்லாம் நடன நிகழ்ச்சிகளுக்கு பார்த்து பார்த்து பாடல்கள் தேர்வு செய்யறதைப் போல, அவளுடைய புதிய சின்னக் கண்ணமாவுக்காகவே பாடல்களை பார்த்துப் பார்த்து தேர்வு செய்யறா இப்பல்லாம்…

ரெண்டு பேருமா சேர்ந்து புது நடனங்கள் அமைப்பதும், அவற்றை சிவகாமியை ஆடச் சொல்லிப் பார்ப்பதும், சுந்தரிக்கு ரொம்ப பிடிச்சிருச்சு. ஒரு நாள் அவள் வரலைன்னாலும் இவளால தாங்க முடியறதில்லை.

பள்ளி விடுமுறைக்காலமா இருக்கறதால இவளோட நிறைய நேரம் இருக்க முடியுது அவளால.

நடனம் ஆடறது மட்டுமில்லாம சுந்தரிக்கு பயபக்தியோட பலவிதமா பணிவிடைகளும் உதவிகளும் செய்யறா, சிவகாமி.

ஒரு நாள், “அம்மா, இந்த எண்ணெய், காலுக்கு தடவினா நல்லதாம். வலி போயிருமாம், என் அம்மா குடுத்தாங்க”, என்றபடி ஒரு எண்ணெய் கொண்டு வந்தா. கொண்டு வந்ததோட நிக்கல; தினமும் வீட்டுக்குக் கிளம்பறதுக்கு முன்னாடி, தன்னோட பூப்போல சின்னக் கையால அவள் கால்ல அந்த எண்ணெயை தேய்ச்சு நல்லா நீவிவிடுவா. சுந்தரிக்கு ரொம்ப சுகமா இருக்கும். அந்த எண்ணெய் போட ஆரம்பிச்சதில் இருந்து அவளுக்கும் வலி குறைஞ்ச மாதிரி இருக்கு. அது மட்டுமில்லாம தாங்கி நடக்கறது கூட குறைஞ்ச மாதிரி இருக்கு…

இப்பல்லாம் இஷ்ட தெய்வமான மீனாக்ஷியை வணங்கும் போது, “அம்மா, சிவகாமியை எனக்குத் தந்ததுக்கு நன்றிம்மா. என் வாழ்க்கையிலேயே நான் இவ்வளவு சந்தோஷமா இருக்கறது இதுவே முதல் முறை… நடனமாடிக்கிட்டு நல்லா இருந்த காலத்தில் கூட எப்பவும் தனிமையாதான் உணர்ந்திருக்கேன்…”, அப்படின்னு சொல்றா.

அவள் சொன்னது மீனாக்ஷி காதில் கேட்டிருச்சு போல, அன்றைக்கு வெகு நேரமாகியும் சிவகாமி வரலை.

இத்தனை நாளும், என்னிக்காவது வர முடியலைன்னா, முன்னாடியே சொல்லிடுவா. ஆனா நேத்து அவ ஒண்ணுமே சொல்லலை. சுந்தரியும் காத்துக் காத்துப் பாத்துட்டு ராத்திரி ரொம்ப நேரம் கழிச்சுதான் வீட்டுக்குள்ள போறா. இயந்திரமா செய்ய வேண்டிதைச் செய்துட்டு படுக்கறா. ஆனா தூக்கம் என்னமோ வர்றதா இல்லை.

“அடியே மீனாக்ஷி, நான் சந்தோஷமா இருக்கிறது உனக்கு பொறுக்கலையா? என் சின்னக் கண்ணம்மாவுக்கு என்ன ஆச்சு? அவ ஏன் வரலை? அவள் வீடும் எனக்கு தெரியாதே? அவளை எங்கேன்னு போய்த் தேடுவேன்?”

ஏக்கத்திலும், சுய இரக்கத்திலும், தலையணை நனையுது…

இப்படியே எத்தனை நாள் ஓடுச்சோ, அவளுக்கே தெரியலை.

அன்றைக்கு பூஜை அறையில் விளக்கேற்றப் போகும்போது அழைப்பு மணி சத்தம்… ஆவலைக் கட்டுப் படுத்த முடியலை… சிவகாமியாதான் இருக்கும்! ஓ…..டிப் போய் கதவைத் திறக்கறா…ஆனா அங்கே யாருமே இல்லை. ஒண்ணும் புரியாம கொஞ்சம் வெளியில் வந்து சுத்து முத்தும் பாத்துட்டு ஏமாற்றத்தோட கதவைச் சாத்திட்டு திரும்பறா…

திரும்பும்போது தான் உணர்றா, கதவு திறக்க தான் ஓடி வந்ததை!

குனிஞ்சு ரெண்டு காலையும் பாத்துக்கறா… தனித் தனியா உதறிப் பார்க்கிறா; நடந்து பார்க்கிறா; ஓடிப் பார்க்கிறா… விபத்துக்கு முன்னாடி இருந்ததை விடவும் கால் ரெண்டும் உறுதியா இருக்கு! நம்பவே முடியலை அவளால! தட்டி நமஸ்காரம் செய்து, அரைமண்டி உட்கார்ந்து ரெண்டு ஜதி போட்டு ஆடிப் பாக்கிறா, “த கிட… த கிட”…

சந்தோஷம் தாங்கலை அவளுக்கு! உடனே சலங்கை கட்டி ஆடணும் போல இருக்கு. சிவகாமி வரும்போது, அவளோட தானும் சேர்ந்து ஆடலாம்! ஆஹா, எவ்வளவு நல்லாருக்கும்! மீனாக்ஷிக்கு முதல்ல நன்றி சொல்லணும். பூஜை அறைக்கு மறுபடி போறா….

மீனாக்ஷி முகத்தில் புன்னகை பிரகாசமா இருக்கு இன்றைக்கு… அவள் பக்கத்தில்… என்ன அது?

சிவகாமி, தன் சின்னக் கால்களில் கட்டியிருந்த சலங்கைகள்!

சுந்தரியின் கண்ல இருந்து கண்ணீர் பெருகி வழியுது.

சிவகாமி இனி வர மாட்டாள்.


--கவிநயா

(நிறைவுற்றது)

28 comments:

 1. மிக அருமை.அதிகம் எதிர்பார்த்தது
  வீண் போகவில்லை
  மிக அழகாகத் துவங்கி
  மிக அழகாகத் தொடர்ந்து
  மிக அழகாக முடித்துள்ளீர்கள்
  நல்ல படைப்பு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. i read the entire story at one stretch ;ambaal did come when sundari needed her mercy very badly.the narration is such that it gives all of us hope and boosts our faith .arumaiyaana piece of work!

  ReplyDelete
 3. //சிவகாமி இனி வர மாட்டாள்.//

  கூடவே இருப்பவள் எங்கிருந்து வரவேண்டும்!!

  நல்லா இருக்கு கதை !

  ReplyDelete
 4. மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கிறாள் படித்து முடித்தவுடன்.

  ReplyDelete
 5. மிகவும் அருமையான கதை. ரசித்து படித்தேன். ஏற்ற அலங்காரங்களுடன், முகத்தில் தெய்வீக கலையுடன் நடனம் ஆடுபவர்களை பார்க்கும் பொழுது என்னை மறந்து ரசிப்பேன்.

  எனக்கு சிறு வயதில் இருந்தே நடனத்தில் ஈடுபாடு அதிகம். படிப்பில் கவனம் சிதறி விடும் என்று என் பெற்றோர் அதற்கு அனுமதிக்கவில்லை. இப்பொழுதோ கல்யாணம் பண்ற வயசுல நடனமா? என்று மறுக்கின்றனர்.

  இந்தப் பதிவு என் ஆசையை மேலும் தூண்டி விட்டது. அருமையான படைப்பு கவிநயா :)

  ReplyDelete
 6. //மிக அருமை.அதிகம் எதிர்பார்த்தது
  வீண் போகவில்லை
  மிக அழகாகத் துவங்கி
  மிக அழகாகத் தொடர்ந்து
  மிக அழகாக முடித்துள்ளீர்கள்
  நல்ல படைப்பு
  தொடர வாழ்த்துக்கள்//

  மிக்க நன்றி ரமணி!

  ReplyDelete
 7. //i read the entire story at one stretch ;ambaal did come when sundari needed her mercy very badly.the narration is such that it gives all of us hope and boosts our faith .arumaiyaana piece of work!//

  மிக்க நன்றி லலிதாம்மா! வேணுமென்கிற போது ஏதோ ஒரு ரூபத்தில் வரத்தான் செய்கிறாள். நமக்குத்தான் தெரிவதில்லை :(

  ReplyDelete
 8. //கூடவே இருப்பவள் எங்கிருந்து வரவேண்டும்!!//

  நன்றாகச் சொன்னீர்கள் கபீரன்பன் ஜி :) ஆனால் அதை புரிந்து உணர்ந்து கொள்வதுதானே கடினமான விஷயம்.

  //நல்லா இருக்கு கதை !//

  நீங்கள் வாசித்ததில் மகிழ்ந்தேன். மிக்க நன்றி.

  ReplyDelete
 9. //மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கிறாள் படித்து முடித்தவுடன்.//

  அப்படியா. மிக்க மகிழ்ச்சி, "குறட்டை " புலி. வாசித்தமைக்கு நன்றி :)

  ReplyDelete
 10. வாங்க மிதிலா. ஆகா, பரத பிரியரா நீங்க? கத்துக்கவும் ஆசையா? அப்படின்னா நீங்க கண்டிப்பா இந்த பதிவை படிக்கணும் :)

  கதையை ரசித்து வாசித்தமைக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 11. ஓஹோ! சுந்தரிக்கு சிவகாமியா, என்னோட தோஸ்த் அபிராமி. அவளோட போன்லையே நான் பேசியாச்சு! உங்களுக்கு தெரியுமா அதை பத்தி?..:PP

  ReplyDelete
 12. பொறுமையாகப் படித்தேன்.
  அருமை.
  சிவகாமி வந்து விட்டாள்.
  கவிநயா - எனக்கு பெண் பிறந்தால் வைக்க ஆசைப்பட்ட பெயர்.

  ReplyDelete
 13. //ஓஹோ! சுந்தரிக்கு சிவகாமியா, என்னோட தோஸ்த் அபிராமி. அவளோட போன்லையே நான் பேசியாச்சு! உங்களுக்கு தெரியுமா அதை பத்தி?..:PP//

  எனக்கு தெரியாதே! சொன்னா தெரிஞ்சுக்கறேன் :)

  வாசிச்சதுக்கு நன்றி தக்குடு :)

  ReplyDelete
 14. //பொறுமையாகப் படித்தேன்.
  அருமை.
  சிவகாமி வந்து விட்டாள்.//

  முதல் வருகைக்கும், பொறுமைக்கும், மிக்க நன்றி சிவகுமாரன். ஜீவி ஐயா உங்களைப் பற்றி இந்த இடுகையின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்.

  //கவிநயா - எனக்கு பெண் பிறந்தால் வைக்க ஆசைப்பட்ட பெயர்.//

  அப்படியா... அப்படின்னா இப்போ ஆண் குழந்தையா? :)

  ReplyDelete
 15. முடிவு நன்றாக இருக்கிறது.

  நமக்குத்தான் ஆயிரம் சந்தேகங்கள் வந்துவிடுமே.

  ReplyDelete
 16. அவள் (சிவகாமி) வர மாட்டாளா, இனி வரவே மாட்டாளா என்று கேட்க தோன்றவில்லை, அவள் பிரிந்து போகவே இல்லை, கூடவே இருக்கிறாள் என்றெண்ணும் போது...

  வாவ்...

  ரொம்ப அருமையாகவும், நெகிழ்வாகவும் இருந்தது படிப்பதற்கு..

  என்றும் உடனிருக்கிறாள் என்று சொன்னேன் படித்து முடித்தவுடன்...

  வாழ்த்துக்கள் கவிநயா...

  ReplyDelete
 17. நல்லாயிருக்கு கதை! :-))

  ReplyDelete
 18. பக்தியின் மிக உயர்ந்த நிலை தெய்வத்தை மனிதரில் பார்ப்பது. அது உங்களால் முடிந்திருக்கிறது.

  எந்நேரமும் தன் கூட இருப்பதாக சுந்தரி உணரும் அவளின் இஷ்ட தெய்வம் மீனாட்சி, சிவகாமியாகக் காட்சியளித்து 'உன் கூடவே தான் இருக்கிறேன்' என்று சுந்தரிக்கு உணர்த்திய கதை அழகாக சொல்லப் பட்டிருக்கிறது; இல்லை, சொல்ல நினைத்ததை அழகான கதையாக உருவகப்படுத்த முடிந்திருக்கிறது.
  மதுரையாயிருந்தால் என்ன, இல்லை சிதம்பரமாக இருந்தால் தான் என்ன? மீனாட்சியும் சிவகாமசுந்தரியும் அம்பாளின் அருள் உருவன்றோ?..

  இன்னொரு விஷயத்திற்கு உங்களைப் பாராட்டியே ஆக வேண்டும். ஆரம்பத்திலிருந்து முடிவு வரை கதை முழுவதையும் நிகழ்காலத்தில் சொல்ல முயற்சித்து வெற்றி பெற்றதற்கு பாராட்டுகள். எழுதுவதில் இது மிக சிரமமான காரியம். அதை அழகாக அற்புதமாகச் செய்திருக்கிறீர்கள்.

  தமிழில் முதன் முதலில் நிகழ்கால நடையில் ஒரு நாவலையே எழுதி பரிசோதித்துப் பார்த்தவர், குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. அவர்கள். அந்த நாவலின் பெயர், 'ஓவியம்'.

  ReplyDelete
 19. //நமக்குத்தான் ஆயிரம் சந்தேகங்கள் வந்துவிடுமே.//

  மிகவும் உண்மை, மாதேவி. அசையாத நம்பிக்கை வேண்டும்.

  வருகைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 20. //என்றும் உடனிருக்கிறாள் என்று சொன்னேன் படித்து முடித்தவுடன்...//

  சரியாகவே சொல்லியிருக்கிறீர்கள் கோபி.

  நெகிழ்ந்து வாசித்தமைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 21. //சொல்ல நினைத்ததை அழகான கதையாக உருவகப்படுத்த முடிந்திருக்கிறது.//

  மிக்க நன்றி ஜீவி ஐயா. கற்பனை என்றாலும் நிஜம் போலவே நிகழ்வுகள் மனக்கண் முன்னால் விரிந்து கொண்டே இருக்கின்றன, நானே வாசிக்கும்போது கூட. ஆசையும், ஏக்கமும், கனவும், நனவும், இன்பமும், துன்பமும், இப்படி எல்லாம்தானே படைப்புகளாக உருவெடுக்கின்றன...

  //மீனாட்சியும் சிவகாமசுந்தரியும் அம்பாளின் அருள் உருவன்றோ?..//

  நன்கு சொன்னீர்கள் ஜீவி ஐயா.

  //ஆரம்பத்திலிருந்து முடிவு வரை கதை முழுவதையும் நிகழ்காலத்தில் சொல்ல முயற்சித்து வெற்றி பெற்றதற்கு பாராட்டுகள்.//

  மிக்க நன்றி ஜீவி ஐயா.

  //தமிழில் முதன் முதலில் நிகழ்கால நடையில் ஒரு நாவலையே எழுதி பரிசோதித்துப் பார்த்தவர், குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. அவர்கள். அந்த நாவலின் பெயர், 'ஓவியம்'.//

  அப்படியா. புதிய தகவல் தெரிந்து கொண்டேன். எஸ்.ஏ.பி. அவர்களின் நாவல்கள் படித்திருக்கிறேன், ஆனால் இந்த நாவல் படிக்கவில்லை என்று நினைக்கிறேன்... வாய்ப்பு கிடைக்கையில் வாசிக்கிறேன்.

  வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி ஜீவி ஐயா.

  ReplyDelete
 22. சந்தோஷம் தாங்கலை அவளுக்கு! உடனே சலங்கை கட்டி ஆடணும் போல இருக்கு. //
  சந்தோஷத்தை படிப்பவர்களுக்கும் பரவச்செய்த வரிகள் அருமை.

  ReplyDelete
 23. //சந்தோஷத்தை படிப்பவர்களுக்கும் பரவச்செய்த வரிகள் அருமை.//

  வருகைக்கும், ரசனைக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி :)

  ReplyDelete
 24. //நல்லாயிருக்கு கதை! :-))//

  மிக்க நன்றி திவா ஜி! எப்படியோ உங்களை மிஸ் பண்ணிட்டேன் :( மன்னிச்சுக்கோங்க.

  ReplyDelete
 25. அழகிய நடை ,அழகிய கற்பனை ,நல்ல சொல்வளம் ,மொத்தத்தில் கதை அருமை,ரசித்து மனக்கண்ணில் கட்சிகளாக உருவகமாக்கி படித்து ரசித்தேன் ,வாழ்த்துக்கள் கவிநயா

  ReplyDelete
 26. //சிவகாமி இனி வர மாட்டாள். //

  அதுதான் கூடவே இருக்கிறாளே!

  வாசித்ததும் எனக்கும் தோன்றியது இதுதான்:)!

  கதை தெய்வீக ராகத்தில். நன்று கவிநயா.

  ReplyDelete
 27. //அழகிய நடை ,அழகிய கற்பனை ,நல்ல சொல்வளம் ,மொத்தத்தில் கதை அருமை,ரசித்து மனக்கண்ணில் கட்சிகளாக உருவகமாக்கி படித்து ரசித்தேன் ,வாழ்த்துக்கள் கவிநயா//

  முதல் வருகைக்கும், ரசித்து வாசித்தமைக்கும், மிக்க நன்றி, செந்தில்வேலன்!

  ReplyDelete
 28. //அதுதான் கூடவே இருக்கிறாளே!//

  வாசித்ததும் எனக்கும் தோன்றியது இதுதான்:)!//

  நல்லது ராமலக்ஷ்மி. அதுதானே வேண்டும் :)

  //கதை தெய்வீக ராகத்தில்.//

  ரசித்தேன் :)

  மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

  ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)