Sunday, February 20, 2011

பேச்சில் என்ன இருக்கு?

நாம நினைக்கிறதையும் உணர்றதையும் சொல்றதுக்கு பேச்சு எவ்வளவு உதவியா இருக்கு! பேசறது எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியம், எப்ப பேசணும், எப்படி பேசணும், எந்த அளவு பேசணும், அப்படிங்கிறதும். மௌனத்தில் கூட எத்தனையோ விஷயங்களை தெரியப்படுத்தலாம். 'சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை'. இல்லையா? :)

அது சரி..., நாமே எப்பவும் பேசிக்கிட்டே இருந்தா, மற்றவங்க பேசறதை எப்பதான் கேட்கிறது? ஒரு புத்தகத்தில் படிச்சேன், ‘மற்றவங்க பேசறதை கவனிக்கிறவங்களை விட, அவர் எப்ப முடிப்பார், நாம எப்ப பேசலாம், அப்படின்னு காத்துக்கிட்டிருக்கவங்கதான் அதிகம்’, அப்படின்னு! ரொம்ப உண்மைன்னு தோணுச்சு. நீங்களும் அடுத்த முறை ‘கவனிச்சுப்’ பாருங்க :)

நாம பேசறது மற்றவங்க மனம் புண்படாதவாறு இருக்கணும். சில பேர் சாதாரணமா இருக்கும்போது பார்த்து, இனிமையாதான் பேசுவாங்க, ஆனா கோபம்னு வந்துட்டா கண்ணு மண்ணு தெரியாம வார்த்தைகளை அள்ளி வீசிடுவாங்க. கேட்கிறவங்க என்னை மாதிரி ஆள்னா பரவாயில்லை, மறந்துடுவாங்க :) அப்படி இல்லைன்னா கஷ்டம்தான். அவங்களைப் பார்க்கிற போதெல்லாம் அந்த உறுத்தல் ரெண்டு பேருக்குமே இருக்கும்.

தீயினால் சுட்ட புண் உள்ளாறும்
ஆறாதே நாவினால் சுட்ட வடு


அப்படின்னு வள்ளுவர் சொன்னதை நாம எல்லோருமே அனுபவத்தில் உணர்ந்திருப்போம்.

சில பேருக்கு அறிவுரைகளை அள்ளி விடறதுன்னா ரொம்பப் பிடிக்கும். உண்மையாகவே நல்லது நினைச்சு சொல்றது ஒரு ரகம்; எனக்கு எவ்வளவு தெரியுது பாரு, அப்படின்னு காட்டிக்கிறதுக்காக சொல்றது இன்னொரு ரகம். எப்படின்னாலும், அறிவுரை மட்டும் கேட்கப்பட்டால் மட்டுமே சொல்லணுமாம். நான் சொல்லலை, ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர் சொல்றார்.

ஒரு பிரச்சனையைச் சொல்லி, ‘இதுக்கு என்ன பண்றதுன்னு தெரியலை’ அப்படின்னு நம்மகிட்ட ஒருத்தர் வந்து சொன்னா, நமக்குத் தெரிஞ்சதை அவரிடம் பகிர்ந்துக்கலாம், தப்பில்லை. அப்படி இல்லாம, அவர் அந்த பிரச்சனையில் இருக்கார் என்பது தெரியும் என்பதற்காக, நாமளா அதில் மூக்கை நுழைச்சு, ‘இப்படிச் செய், அப்படிச் செய்’னு சொல்றது, அறிவுரையா இருக்காது; அதிகப்பிரசங்கித்தனமா ஆயிடும். அதனால, நாம நம்மளோட எல்லை தெரிஞ்சு, அதுக்குத் தகுந்தாப்போல நடந்துக்கணும்.

பொதுவாகவே அநாவசியமான பேச்சுக்களை தவிர்க்கறது நல்லது. கவனிச்சுப் பார்த்தா தெரியும், மக்கள் சந்தோஷமா இருக்கும் போது அதிகம் பேசுவாங்க (எப்பவும் பேசறதை விட!). அப்படிப் பேசும் போது அந்த உற்சாகத்தில் வார்த்தைகளும் அதிகமாவே வந்து விழும், சில சமயம் அத்து மீறலோட, மற்றவங்க மனம் புண்படற அளவு கூட போயிடும். அதுக்கப்புறம் அதுக்காக வருத்தப்படணும். அதனால, எப்பவுமே நாம எங்கே இருக்கோம், என்ன செய்யறோம், என்ன பேசறோம், அப்படிங்கிறதுல விழிப்புணர்வோட இருப்பது நல்லது. அப்படி இருந்தா நம்மை நாமே, குறிப்பா நம்ம நாக்கை, கட்டுப்பாட்டில் வைப்பது சுலபம்.

இன்னொரு முக்கியமான, நம்ம நாக்குக்கு பிடிச்ச சுவையான விஷயம் ஒண்ணு இருக்கு! ஆனா அது சாப்பாடு இல்லை! :)

என்னன்னு இந்நேரம் ஊகிச்சிருப்பீங்க – அதுதான் வம்பு பேசறது, அல்லது பொறணி பேசறது :)

அதென்னமோ தெரியலை, மற்றவங்களைப் பற்றி பேசறதில், குறிப்பா குறை சொல்றதில், நமக்கு அப்படி ஒரு ஆர்வம்! பல சமயத்தில் இதைப் பற்றி யோசிப்பேன், ஏன் அப்படி செய்யறோம்னு. ஒரு வேளை நாம ரொம்ப ஒழுங்கு, மற்றவங்க அப்படி இல்லைன்னு நமக்கு நாமே நிரூபிக்க நினைக்கிறோமோ? அல்லது நம்ம குறைகள் தெரிஞ்சு, அவையே நிறைகளா இருக்கறவங்களைப் பார்த்து பொறாமையில் பேசறோமோ? அல்லது வாழ்க்கையில் நம்மை விட அவங்க நல்லா இருக்காங்களேன்னு வயிற்றெரிச்சலில் பேசறோமோ? அல்லது நெஜமாவே பொழுது போகாம, வேற விஷயம் கிடைக்காம, மற்றவங்களைப் பற்றி பேசறோமோ?

எதுவா இருந்தாலும் சரி, அது நம்மை எதிர்மறையான (negative) உணர்வுகளுக்கு இழுத்துக்கிட்டு போறதால, அது நல்லது இல்லைன்னு எல்லா பெரியவங்களும் ஆணித்தரமா சொல்றாங்க.

நாம ஒருத்தரால துன்பப்படும்போது அதைப் பற்றி யாரிடமாவது பகிர்ந்துகிட்டுதான் ஆகணும். அதுக்கு பேரு வம்பு இல்லை. அதையும் இதையும் போட்டுக் குழப்பிக்க வேணாம். ஆனா, நமக்கு சம்பந்தமில்லாதவங்களைப் பத்தி, அவங்களால நமக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாத போது, அவங்க செயல்களை விமர்சனம் பண்றதுதான் தப்பு; அதுதான் வம்பு. அதனால முடிஞ்ச வரைக்கும் பிறரைப் பற்றி பேசாமல் இருப்போம், அல்லது பேசினாலும் குறை சொல்லாமலாவது இருப்போம். கஷ்டம்தான்னாலும், முயற்சியாவது செய்யலாமே.

சுவாமி சிவானந்தர் சொல்லுவார், எவ்வளவுக்கெவ்வளவு கொஞ்சமா பேசறமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது, அப்படின்னு. கொஞ்சமா பேசு, அதையும் இனிமையா பேசுன்னுவார்.

[Speak truth at all cost. Speak a little. Speak sweetly. Always utter encouraging words. Never condemn, criticize or discourage. Do not raise your voice and shout at little children or subordinates. - Swami Sivananda]

வள்ளுவப் பெருந்தகை சொன்னதை மறுபடியும் இங்கே ஒரு முறை நினைவு படுத்திக்கலாம் –

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று


சுருக்கமா சொன்னா, நல்லதே நினைக்கணும், நல்லதே பேசணும், நல்லதே செய்யணும்.

எல்லோரும் நல்லா இருக்கணும்!

அன்புடன்
கவிநயா

பி.கு. : நானு உங்களுக்கு அறிவுரை சொல்றேன்னு நினைச்சீங்களா? ஹி...ஹி... இல்லைங்க, எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்… :)

இதையும் படிங்க: மூன்று வாசல்கள்

24 comments:

  1. "ennai maadhiri aalna maranthudu
    vaanga".it is nearly impossible to
    forget;but it is easier to forgive
    and ignore.am i right?
    i fully agree with everything else.let us all do some introspection.

    ReplyDelete
  2. பொதுவாக அறிவுரை என்பது ஒருவர் பட்டு அனுபவித்ததற்குப் பிறகே அவர் அறிவு அறிந்த ஒன்றாக அது இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இல்லை என்றால், இன்னொருவர் சொல்லி அவர் கூட அதை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்.

    இன்னொருவர் தான் பட்ட துன்பம் அனுபவிக்க வேண்டாம் என்று தான் நல்ல எண்ணத்தில் 'அப்படி வேண்டாம்' என்று அவர் சொல்வது அறிவுரையாகப் படுகிறது இன்னொருவருக்கு.

    நல்ல எண்ணத்தில் ஒருவர் சொன்னாலும், மனித மனம் தான் பட்டு அனுபவித்த பிறகே அதை ஏற்றுக் கொள்கிறது.

    'பள்ளம் இருக்கிறது, பார்த்துப் போ' என்று சொன்னால் கூட, விழுந்து எழுந்த பிறகு தான் மறுமுறை அந்தப் பக்கம் போகும் பொழுது பார்த்துப் போகத் தோன்றுகிறது. அதே சமயம் அந்த பள்ளத்தில் ஒருவர் விழுந்து எழுவதை நேரடியாகப் பார்த்தோம் என்றால், பார்த்தவருக்கு ஜாக்கிரதை உணர்வு தான் அனுபவிக்காமலேயே ஏற்படுகிறது.

    அறிவுரைகளை நேரிடையாகச் சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தான் கதை- கவிதை எல்லாம் தோன்றியிருக்கிறது போலிருக்கிறது. ஒருவர் பட்டு அனுபவிக்கும் துன்பத்தை படிக்கும் பொழுது அது அறிவுரையாக இல்லாமல் இன்னொருவர் அனுபவித்ததாக மாறி, நம்முள் ஒரு ஜாக்கிரதை உணர்வைத் தோற்றுவிக்கிறது.

    ReplyDelete
  3. உங்களுக்கே சொன்னீங்களோ எங்களுக்கு சொன்னீங்களோ மொத்தத்துல உலகத்துக்கு தேவையான முக்கியமான விஷயத்தை புட்டு புட்டு வச்சிருக்கீங்க:)! மிக நல்ல பதிவு கவிநயா. கருத்தில் கொள்கிறேன். நன்றி.

    ReplyDelete
  4. ரொம்ப நல்ல விஷயம். சத்தம் போட்டு சொன்னாலும் பரவாயில்லை.

    //இடது பக்கம் உள்ள ‘சிந்திக்க’ பகுதியைப் பாருங்க.///

    "சிந்திக்க" சிவானந்தரோட மேற்கோளை மாத்துற அன்னிக்கு கட்டுரையிலும் அதைப்பற்றிய குறிப்பை மாற்ற வேண்டியதாய் போய்விடும். பொதுவா மறந்து போயிடும். அதனாலே அதை இப்பவே கட்டுரைக்குள்ளே போட்டுடங்க :))

    ReplyDelete
  5. //'பள்ளம் இருக்கிறது, பார்த்துப் போ' என்று சொன்னால் கூட, விழுந்து எழுந்த பிறகு தான் மறுமுறை அந்தப் பக்கம் போகும் பொழுது பார்த்துப் போகத் தோன்றுகிறது. அதே சமயம் அந்த பள்ளத்தில் ஒருவர் விழுந்து எழுவதை நேரடியாகப் பார்த்தோம் என்றால், பார்த்தவருக்கு ஜாக்கிரதை உணர்வு தான் அனுபவிக்காமலேயே ஏற்படுகிறது.

    அறிவுரைகளை நேரிடையாகச் சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தான் கதை- கவிதை எல்லாம் தோன்றியிருக்கிறது போலிருக்கிறது. ஒருவர் பட்டு அனுபவிக்கும் துன்பத்தை படிக்கும் பொழுது அது அறிவுரையாக இல்லாமல் இன்னொருவர் அனுபவித்ததாக மாறி, நம்முள் ஒரு ஜாக்கிரதை உணர்வைத் தோற்றுவிக்கிறது.//

    ஜீவி சார், இந்தக் கருத்து எனக்குப் பிடித்திருக்கிறது. கவிதை கதை போன்ற படைப்புகளில் எப்போதும் நீதியோ அறிவுரையோ இல்லாது இருப்பதே சிறப்பு எனும் பரவலான கருத்து இருப்பதுடன், அப்படியான ஆக்கங்கள் இப்போது அடிக்கடி விமர்சனங்களுக்கும் உள்ளாகின்றன. உங்கள் கருத்துடன் உடன்படும் என்போன்ற சிலருக்கு அந்த புதிய பாதையில் செல்ல நினைத்தாலும் கடைசி பத்தியில் தானாக ஒரு கருத்து வந்தே வந்து விடுகிறது:)! இங்கே உங்கள் பின்னூட்டம் ஆறுதலாக உள்ளது:)! நன்றி.

    ReplyDelete
  6. ஹை!!!! ஆச்சரியமா இருக்கே! நீங்க பேசுவீங்க??? ஒருதரம் பார்க்கணும், சீச்சீ, கேட்கணும், ரெகார்ட் பண்ணியும் வச்சுக்கணும்! :P
    இங்கேநீங்க பேசின விபரம் காணலாம்! :)))))))))))))))))))

    ReplyDelete
  7. வாங்க லலிதாம்மா. நீங்க சொன்னது உண்மைதான். ஆனாலும் என் மறதி கொஞ்சம் அலாதி. நல்லாவே மறந்துடுவேன் :) மறதியும் கவிதையும் இறைவன் தந்த வரம், அப்படின்னு அடிக்கடி நினைச்சுப்பேன் :) வருகைக்கு நன்றி அம்மா.

    ReplyDelete
  8. கீதா மேடம், அதே இந்திய விஜயத்தின் போது என்னிடம் வெகுநேரம் தொலைபேசியில் அளவளாவினார் என்பது உங்களுக்கு மேலதிகத் தகவல். நீங்க என்னவோ பயங்காட்டி வச்சிட்டீங்கன்னு நினைக்கிறேன்:))!

    ReplyDelete
  9. அறிவுரை பற்றி அழகாகச் சொன்னீர்கள் ஜீவி ஐயா. அதுவே context பொறுத்தும் இருக்கிறது. நெருங்கிய நட்பாகவோ உறவாகவோ இருந்தால் அங்கு இருக்கும் உரிமையே வேறு. அதனால்தான் 'நம் எல்லை தெரிந்திருக்க வேண்டும்' என்று குறிப்பிட்டேன்.

    //அறிவுரைகளை நேரிடையாகச் சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தான் கதை- கவிதை எல்லாம் தோன்றியிருக்கிறது போலிருக்கிறது. ஒருவர் பட்டு அனுபவிக்கும் துன்பத்தை படிக்கும் பொழுது அது அறிவுரையாக இல்லாமல் இன்னொருவர் அனுபவித்ததாக மாறி, நம்முள் ஒரு ஜாக்கிரதை உணர்வைத் தோற்றுவிக்கிறது.//

    குறிப்பாக நீங்கள் சொன்ன இந்தக் கருத்து பிடித்திருந்தது.

    வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  10. //உலகத்துக்கு தேவையான முக்கியமான விஷயத்தை புட்டு புட்டு வச்சிருக்கீங்க:)! மிக நல்ல பதிவு கவிநயா. கருத்தில் கொள்கிறேன். நன்றி.//

    மிக்க நன்றி ராமலக்ஷ்மி!

    ReplyDelete
  11. //ரொம்ப நல்ல விஷயம். சத்தம் போட்டு சொன்னாலும் பரவாயில்லை.//

    மிக்க நன்றி கபீரன்பன் ஐயா :)

    //"சிந்திக்க" சிவானந்தரோட மேற்கோளை மாத்துற அன்னிக்கு கட்டுரையிலும் அதைப்பற்றிய குறிப்பை மாற்ற வேண்டியதாய் போய்விடும். பொதுவா மறந்து போயிடும். அதனாலே அதை இப்பவே கட்டுரைக்குள்ளே போட்டுடங்க :))//

    உண்மைதான்! சிந்திக்க வச்சுட்டீங்க :) நீங்க சொன்னபடி பதிவில் சேர்த்துட்டேன் :)

    ReplyDelete
  12. //கடைசி பத்தியில் தானாக ஒரு கருத்து வந்தே வந்து விடுகிறது:)!//

    சினிமா போன்ற ஊடகங்களிலும் ஒரு 'message' இருக்கணும்னு சொல்றோம், கதை கவிதைகளில் இருப்பதில் ஒன்றும் தவறில்லை. இன்னும் சொல்லப் போனால் அது இயல்பாக ஆக்கங்களில் வந்து விடும்போது, இன்னும் சிறப்புதான் ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  13. //ஹை!!!! ஆச்சரியமா இருக்கே! நீங்க பேசுவீங்க??? ஒருதரம் பார்க்கணும், சீச்சீ, கேட்கணும், ரெகார்ட் பண்ணியும் வச்சுக்கணும்! :P
    இங்கேநீங்க பேசின விபரம் காணலாம்! :)))))))))))))))))))//

    வாங்க கீதாம்மா. பேச்சுன்னு பேச்சை எடுக்கும்போதே உங்களைத்தான் நினைச்சேன். புரை ஏறிடுச்சா? :)

    நான் பேசறதைப் பற்றி ஏதாச்சும் சொல்லி இருக்கேனா, பதிவில்? படிக்கலைதானே? உண்மையைச் சொல்லுங்க! :)

    ReplyDelete
  14. //தா மேடம், அதே இந்திய விஜயத்தின் போது என்னிடம் வெகுநேரம் தொலைபேசியில் அளவளாவினார் என்பது உங்களுக்கு மேலதிகத் தகவல். நீங்க என்னவோ பயங்காட்டி வச்சிட்டீங்கன்னு நினைக்கிறேன்:))!//

    ஆஹா, ராமலக்ஷ்மி. பக்கத்தில் வாங்க, உங்களுக்கு ஒரு [HUG] :) நல்லா சொல்லுங்க! அவங்க கூடவும்தான் ரெண்டு மூணு முறை தொலை பேசியிருக்கேன், அதெல்லாம் அவங்க காதில் விழவே இல்லை போல! :)

    ReplyDelete
  15. //கவிதை கதை போன்ற படைப்புகளில் எப்போதும் நீதியோ அறிவுரையோ இல்லாது இருப்பதே சிறப்பு எனும் பரவலான கருத்து இருப்பதுடன், அப்படியான ஆக்கங்கள் இப்போது அடிக்கடிவிமர்சனங்களு க்கும் உள்ளாகின்றன. உங்கள் கருத்துடன் உடன்படும் என்போன்ற சிலருக்கு அந்த புதிய பாதையில் செல்ல நினைத்தாலும் கடைசி பத்தியில் தானாக ஒரு கருத்து
    வந்தே வந்து விடுகிறது:)! //

    ராமலஷ்மி, மேடம்! இப்பொழுது தான் பார்த்தேன். அதனால் தான் இந்த தாமதம். உங்கள் கருத்து ஆறுதலாக இருந்தது என்று சொன்னமைக்கு நன்றி..

    உங்கள் உணர்வுகள் புரிகின்றன.
    அப்படி எழுதமுடியாமல் இருப்பதற்கான காரணங்களை நாம் தான் களைய வேண்டும். எழுத முடிவதற்கான சாத்தியக்கூறுகளை சமைத்துக் கொள்ள வேண்டும்.

    எழுதுவதே அதற்காகத் தான் என்றிருக்கையில், எழுதமுடியாத இடங்களில் எழுதாமலிருப்பது முதல் நடவடிக்கை. எழுத முடிந்த இடங்களை நன்கு பயன்படுத்திக் கொள்ளுதல் அடுத்த நடவடிக்கை.

    இதெல்லாம் ஒரு காலகட்டம் வரை தான். பெயரும், புகழும் வந்து சேர்ந்து விட்டதென்றால், எழுத வேண்டும்; அவ்வளவே. எது எழுதினாலும் சரியே.

    என் பின்னூட்டத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  16. >>>மக்கள் சந்தோஷமா இருக்கும் போது அதிகம் பேசுவாங்க (எப்பவும் பேசறதை விட!).

    கரெக்ட் தான்

    ReplyDelete
  17. மீள் வருகைக்கு நன்றி ஜீவி ஐயா.

    ReplyDelete
  18. சி.பி.செந்தில்குமார் said...

    //>>>மக்கள் சந்தோஷமா இருக்கும் போது அதிகம் பேசுவாங்க (எப்பவும் பேசறதை விட!).

    கரெக்ட் தான்//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி செந்தில்குமார்.

    ReplyDelete
  19. அப்பப்பா எவ்வளவு விஷயங்கள் சொல்லி விட்டீர்கள் பேசுவதை பற்றி.
    நான் பேசுவது என்றால் பேசுவது என்றுதான் இது வரை நினைத்துக் கொண்டிருந்தேன்.(எதிராளியின் கவனம் என் பக்கம்தான் இருகிறதா என்று கூட சட்டை செயாமல் பேசி பழகி விட்டேன் அதைத்தான் இப்படி சொன்னேன்)

    உண்மையில் பேச்சை பற்றி நிறைய கற்றுக் கொண்டேன் இந்த பதிவின் மூலம். இனிமேல் தேவையான நேரத்தில், தேர்ந்தெடுத்த வார்த்தைகள் கொண்டு , எதிரில் பேசுபவரின் நேரத்தை வீணடிக்காமல் பேச வேண்டும் என்று குட்டி சபதம் எடுத்து விட்டேன் (சபதத்தை கடைசி வரை நிறைவேற்ற எனக்காக கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள் ப்ளீஸ்)

    என் கண்ணை திறந்து வாயை மூட வைத்ததற்கு நன்றி கவிநயா :)

    ReplyDelete
  20. //என் கண்ணை திறந்து வாயை மூட வைத்ததற்கு நன்றி கவிநயா :)//

    நீங்க சொன்ன விதத்தை ரசித்தேன், மிதிலா :) இவ்ளோ நல்ல புள்ளையா இருக்கீங்களே...

    //(சபதத்தை கடைசி வரை நிறைவேற்ற எனக்காக கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள் ப்ளீஸ்)//

    ஆகட்டும் :)

    பகிர்ந்து கொண்டவை பயன்பட்டால் மகிழ்ச்சியே. நன்றி மிதிலா.

    ReplyDelete
  21. //இவ்ளோ நல்ல புள்ளையா இருக்கீங்களே//

    என்னை நல்ல புள்ளைன்னு சொன்னதுக்கு நன்றி கவிநயா :)

    ReplyDelete
  22. //எவ்வளவுக்கெவ்வளவு கொஞ்சமா பேசறமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது//
    .

    ReplyDelete
  23. ////எவ்வளவுக்கெவ்வளவு கொஞ்சமா பேசறமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது//
    .//

    ஹாஹா :) கொஞ்சம் பேசலாம்னுதானே சொன்னேன்.. அதுக்குன்னு நீங்க பேசாமலேயெ போயிட்டீங்க? :)

    வருகைக்கு நன்றி திவா ஜி.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)