Monday, November 8, 2010

சிறு துளி...

மழை எனக்கு ரொம்பப் பிடிக்கும்!

குறிப்பா, அது மென்மையா பூப்போல விழும்போது அண்ணாந்து முகமெங்கும் அந்த துளிகளை வாங்கிக்கப் பிடிக்கும். சன்னல் வழியா மழையை மணிக்கணக்கா வேடிக்கை பார்க்கப் பிடிக்கும். பச்சைப் பசேல்னு செடிகொடியெல்லாம் புத்தம் புதுசா நிற்கிறதைப் பார்க்கப் பிடிக்கும். மழை நின்ன பிறகு மரத்துக்கு அடியில் நின்னுக்கிட்டு, எட்டற தூரத்தில் இருக்கிற கிளையைப் பிடிச்சுக் குலுக்கி, அந்தக் குட்டி மழையில் நனையப் பிடிக்கும். இப்படி எத்தனையோ 'பிடிக்கும்'கள். உங்களுக்கும்தானே? :)

(பிடிக்காதவைகளும் இருக்கு, ஆனா அதைப் பற்றி இப்ப என்ன? :)



குட்டிக் குட்டித் துளித் துளியாக
குனிந்து மண்ணில் வீழுது பார்!
அடுக் கடுக்காகப் புள்ளிகள் வைத்து
அழகாய்க் கோலம் போடுது பார்!

அடிக்கும் காற்றின் திசைக் கேற்ப
தானும் அசைந்து ஆடுது பார்!
இசையில் சிறந்த கலைஞரைப் போலே
இனிதாய்த் தாளம் போடுது பார்!

நேரம் கொஞ்சம் செல்லச் செல்ல
வேகம் இன்னும் கூடுது பார்!
சடசட சடவென சப்தம் எழுப்பி
செல்லக் கோபம் காட்டுது பார்!

செடிகொடியெல்லாம் குளிக்கச் செய்ய
பூவாய் மேலே சொரியுது பார்!
பூமியை நன்றாய்ச் சுத்தம் செய்து
புத்தம் புதிதாய் ஆக்குது பார்!

பயிர்களை யெல்லாம் செழிக்கச் செய்து
பசித்தவர்க் குணவு படைக்குது பார்!
நீர்நிலை யெல்லாம் நிரம்பச் செய்து
உயிர்களின் தாகம் தீர்க்குது பார்!

சிறுதுளி யாகத் தொடங்கிய போதும்
ஆறாய் குளமாய் ஆகுது பார்!
அதுபோல் சிறுகச் சேமித் தாலும்
அறிவும் பொருளும் பெருகும் பார்!!


--கவிநயா

பாப்பா பாட்டு எழுதி ரொம்ப நாளாச்சுன்னு நினைவுபடுத்திய கபீரன்பருக்கு நன்றி :)
படத்துக்கு, கூகுளாருக்கு நன்றி!

16 comments:

  1. சிறுசிறு துளியாக
    சிலிர்ப்பான வார்த்தைகளுடன்
    பொழிந்த கவிச்சாரலில்
    நனைந்தேன் கவிநயா.

    மிக அருமை.

    ReplyDelete
  2. எளிமையான வரிகள்.அழகானக் கவிதை

    //சிறுதுளி யாகத் தொடங்கிய போதும்
    ஆறாய் குளமாய் ஆகுது பார்!
    அதுபோல் சிறுகச் சேமித் தாலும்
    அறிவும் பொருளும் பெருகும் பார்!!//

    அது...அது..கடைசியில் கவிநயா ஸ்டாம்பு !!!

    ReplyDelete
  3. சடசட சடவென சப்தம் எழுப்பி
    செல்லக் கோபம் காட்டுது பார்

    சிறுதுளி யாகத் தொடங்கிய போதும்
    ஆறாய் குளமாய் ஆகுது பார்!
    அதுபோல் சிறுகச் சேமித் தாலும்
    அறிவும் பொருளும் பெருகும் பார்!!

    அழகோ அழகு

    ReplyDelete
  4. \சிறுதுளி யாகத் தொடங்கிய போதும்
    ஆறாய் குளமாய் ஆகுது பார்!
    அதுபோல் சிறுகச் சேமித் தாலும்
    அறிவும் பொருளும் பெருகும் பார்!!\\

    கலக்கல் ;)

    ReplyDelete
  5. நீங்க விவரிச்ச மழைச்சாரலை ரொம்ப அனுபவிச்சேன் கவிநயா. படமும், கவிதையும் கொள்ளை அழகு.

    ReplyDelete
  6. //மிக அருமை.//

    நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  7. //அது...அது..கடைசியில் கவிநயா ஸ்டாம்பு !!!//

    நன்றி கபீரன்பரே :)

    ReplyDelete
  8. //அழகோ அழகு//

    சந்தோஷமோ சந்தோஷம் :)

    நன்றி பூங்குழலி.

    ReplyDelete
  9. //கலக்கல் ;)//

    நன்றி கோபி :)

    ReplyDelete
  10. /நீங்க விவரிச்ச மழைச்சாரலை ரொம்ப அனுபவிச்சேன் கவிநயா. படமும், கவிதையும் கொள்ளை அழகு.//

    மிக்க மகிழ்ச்சியும் நன்றியும், மீனா.

    ReplyDelete
  11. ஒன்றாம் வகுப்பு தமிழ் பாடநூலுக்கு இதனை நான் சிபாரிசு செய்கிறேன் :-)

    ReplyDelete
  12. //ஒன்றாம் வகுப்பு தமிழ் பாடநூலுக்கு இதனை நான் சிபாரிசு செய்கிறேன் :-)//

    நன்றி உழவன் :)

    ReplyDelete
  13. சும்மா சில்லுனு இருக்கு மிக அருமை.

    ReplyDelete
  14. //சும்மா சில்லுனு இருக்கு//

    ரசித்தேன் :)

    நன்றி மிதிலா.

    ReplyDelete
  15. மழையைக் கண்ட மகிழ்ச்சி

    ReplyDelete
  16. //மழையைக் கண்ட மகிழ்ச்சி//

    உங்களைக் கண்டதிலும் அதே மகிழ்ச்சி :) நன்றி திகழ்.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)