Sunday, October 31, 2010

முடிவு

ன்னம்மா, இந்த நேரத்தில் இங்கே தனியா என்ன செய்யறே?”

வேறொரு உலகில் பயணித்துக் கொண்டிருந்த ராதா, குரல் கேட்டு திடுக்கிட்டுத் திரும்பினாள். அவள் முன்பின் பார்த்தறியாத பெண்மணி அவள் பதிலை எதிர்பார்த்து நின்றிருந்தாள்.

அந்த சூழ்நிலைக்கு பொருந்தாமல் நல்ல அரக்குச் சிவப்புப் புடவையும், குங்குமப் பொட்டும், மல்லிகைப் பூவுமாய் இருந்தாள். அழகிய அவள் முகம் நிலவொளியில் ஜொலித்தது. அவள் வயது என்ன என்பதை ஊகிக்க முடியவில்லை.

“உங்களுக்கென்ன அதைப் பற்றி அக்கறை?” அடக்க இயலாத ஆத்திரத்துடன் புறப்பட்ட கேள்வி, அந்த மங்கையின் முகத்தைப் பார்த்ததும், வந்த சுவடு தெரியாமல் புறப்பட்ட இடத்துக்கே சென்று விட்டது. ஒன்றும் சொல்லாமல் மௌனமாக இருந்தாள்.

அவர்களுக்கு வெகு அருகில், அடம் பிடிக்கும் குழந்தையைப் போல விடாமல் “ஹோ”வென்று இரைந்து கொண்டிருந்தது கடல். எத்தனை எத்தனை யுகங்களாக இப்படி அலையடித்துக் கொண்டிருக்க வேண்டும்! ஒரு நாளேனும், ஒரு கணமேனும் ஓய்ந்திருக்குமா? எப்படித்தான் ஓய்வில்லாமல் இருக்கிறதோ! எத்தனை வயதானாலும் அதே வேகத்துடன் இருக்கிறது. இது எவ்வாறு சாத்தியம்! நினைத்துப் பார்த்தால் இப்படி எத்தனையோ அதிசயங்கள் இந்த உலகத்தில்! இப்படியெல்லாம் சம்பந்தமில்லாமல் சிந்தனை ஓடிற்று, ராதாவிற்கு.

“என்னம்மா சிந்தனை? இந்த ஏரியால எல்லாம் இத்தனை நேரத்துக்கு மேல பெண்பிள்ளைகள் தனியா இருக்கிறது ஆபத்து. வீட்டுக்கு போயிடம்மா. வீட்டில் உன்னைத் தேட மாட்டாங்களா?” கனிவுடன் ஒலித்தது அந்த பெண்ணின் குரல்.

“என்னைச் சொல்றீங்களே, நீங்க என்ன பண்றீங்க இங்கே?” மறுபடியும் கேட்க எண்ணியதைக் கேட்காமல் விழுங்கிக் கொண்டாள்.

“என்னை யாரும் தேட மாட்டாங்க அம்மா. நான் ஒரு அனாதை.”

‘நான் அப்படியொன்றும் பொய் சொல்லலை, இந்த நிமிஷத்தில் நான் அப்படி உணர்வது உண்மைதானே’, என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

“தற்கொலை மிகப் பெரிய பாவம் மட்டுமில்லை, சுயநலமும் கூடத்தான்”, என்றாள் அந்தப் பெண்மணி.

ராதாவிற்கு தூக்கிவாரிப் போட்டது!

“என் மனதிலுள்ளது இவளுக்கு எப்படித் தெரிந்தது?” என்பது போல விழியகல அந்த பெண்மணியை பார்த்தாள்.

“இருக்கலாம். ஆனால் அவரவருக்கு துன்பம் வரும்போதுதான் தெரியும் அம்மா. அதற்குத் தகுந்தாற் போல நியாயங்களும் வேறுபடும்”

“வா. நடந்துகிட்டே பேசலாம். நல்லா இருட்டிப் போச்சு. இங்கே ரொம்ப நேரம் நிக்க வேண்டாம்”

அந்தப் பெண்மணியிடம் ஏதோ ஒரு காந்த சக்தி இருந்தது. மறுத்துச் சொல்ல மனம் தூண்டினாலும், அதை சட்டை செய்யாமல் அவளுடன் கூட நடக்க ஆரம்பித்தாள்.

“சுந்தர காண்டம் படிச்சிருக்கியா?”

இது என்ன சம்பந்தமில்லாத கேள்வி என்பது போல அந்த பெண்ணை ஏறிட்டுப் பார்த்து விட்டு, “படிச்சிருக்கேன்”, என்று முணுமுணுத்தாள்.

“படிக்கும் போது ஏன் இதை படிக்கிறோம்னு உணர்ந்து படிச்சியா, சும்மா படிக்கணுமேன்னு படிச்சியா?”

கேட்டு விட்டு, பதிலை எதிர்பார்க்காமல் அந்தப் பெண்ணே தொடர்ந்தாள்:

“சீதை அசோகவனத்தில் தனியாக இருந்து சொல்லவொணாத துயரங்களை அனுபவிக்கும் காலம் அது. அதைப் படிக்கப் படிக்க, ஸ்ரீலக்ஷ்மியின் திரு அவதாரமான சீதையே இவ்வளவு துன்பம் அனுபவிச்சிருக்காளே, நம்முடைய துன்பமெல்லாம் எந்த மூலைக்குன்னு தோணும். அதனால படிக்கிறவங்களுக்கு துயரங்களைத் தாங்கிக் கொள்ளக் கூடிய மனப் பக்குவம் வரும். ஆஞ்சநேயர் தூது வருவதையும், சீதைக்கு ஆறுதல் சொல்வதையும் படிக்கையில், உயிரோடு இருந்தா நமக்கும் ஒரு நாள் துயரத்திலிருந்து விடுதலை கிடைக்கும் என்கிற நம்பிக்கை வரும். அதனாலதான் வாழ்க்கையில் துன்பம் வரும்போது பெரியவங்க அதை படிக்கச் சொல்றாங்க.”

ராதாவிற்கு ஏதோ கொஞ்சம் புரிவது போல் இருந்தது. அவள் மேலே யோசிக்கும் முன் அடுத்த கேள்விக் கணை வந்து விட்டது…

“சரி, சொல்லு… சீதையை விட உனக்கு அதிகமான கஷ்டம் வந்திடுச்சா?”

“ஆமாம் அம்மா. அவளைப் போலவே என் கணவனைப் பிரிய வேண்டிய நிலைமை எனக்கும்.”

அந்த மங்கைக்கு சிரிப்புதான் வந்தது. சீதாபிராட்டியுடன் தன் துயரத்தை ஒப்பிட்டுக் கொள்ளும் இந்தச் சிறுமியை என்ன செய்வது? தன் உணர்வுகளை நாடகத் தனமாக மிகைப் படுத்திச் சொல்வதில் இந்தப் பெண்ணுக்குத்தான் எத்தனை விருப்பம்?!

ராதாவிற்கு அன்றைக்கு காலையில் வந்த தொலைபேசி அழைப்பு நினைவில் ஓடியது.

“அண்ணி… நான் ரஞ்சனி பேசறேன். உங்களுக்கு ஒரு பேட் நியூஸ் அண்ணி.”

“இன்றைக்கு அண்ணாவுக்கு பொண்ணு பார்க்க போறாங்க. உங்களுக்கு 6 வருஷமா குழந்தை இல்லைன்னு காரணம் சொல்லி அண்ணனுக்கு இன்னொரு கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்யறாங்க அம்மா”

அமிலத் திராவகத்தை காதில் ஊற்றியது போல் இருந்தது ராதாவிற்கு.

“ராதா, நீ வேணும்னா உங்க அம்மா வீட்டுக்கு போய்ட்டு வாயேன். உன் தங்கச்சி கல்யாண வேலை நிறைய இருக்கும். கொஞ்சம் ஒத்தாசையா இருந்துட்டு வரலாமே”, என்ற மாமியாரின் கனிவுக்கு காரணம் இப்போதல்லவா தெரிகிறது?

“ரஞ்சனி, உங்க அண்ணா…”, என்று கேட்க ஆரம்பித்தவளை,

“அண்ணி, அம்மா வராங்க. நான் உங்களுக்கு போன் பண்றது தெரிஞ்சா என்னை பிச்சிடுவாங்க. பை”, அவள் பதிலுக்குக் காத்திராமல் ரஞ்சனி போனை வைத்து விட்டாள்.

இந்த விஷயமெல்லாம் கணவனுக்கு தெரியுமா என்று தெரிந்து கொள்ளத்தான் நினைத்தாள்.

“குழந்தையே பிறக்காவிட்டாலும் சரி, ராதா. உனக்கு நீயும் எனக்கு நானும்தான் குழந்தை”, என்று கனியக் கனியப் பேசிய கண்ணனா இப்படி? ஆனால், அவனுக்கு தெரியாமலா இத்தனையும் நடக்கும் என்ற முடிவுக்கு அவளே வந்து விட்டாள். இனி நான் வாழ்ந்து என்ன பயன், என்ற முடிவுக்கும்தான்!

“உன்னைப் போல சுயநலவாதிகள் நிறைய இருக்காங்க!” மறுபடியும் அந்தப் பெண்மணியின் குரல் அவளை உசுப்பியது.

ராதாவுக்கு கோபம் வந்து விட்டது!

“அம்மா! உங்களுக்கு என்னை முன்பின் தெரியாது. அதற்குள்ள என்னை எப்படி சுயநலவாதின்னு சொல்றீங்க?”

“ஏன்னா, அப்படிப்பட்டவங்கதான் தற்கொலை பண்ணிக்க துணிவாங்க. தனக்கு என்ன கிடைக்கலைன்னு பார்ப்பாங்க, ஆனால் மற்றவங்களைப் பற்றி கொஞ்சமும் யோசிக்க மாட்டாங்க. நீயே கொஞ்சம் யோசிச்சுப் பாரு… இந்த முடிவு எடுத்தியே, உன் அப்பா அம்மாவைப் பற்றியோ, அடுத்த மாசம் கல்யாணம் நடக்கவிருக்கிற உன் தங்கையைப் பற்றியோ, ஏன், உன் கணவனைப் பற்றியோ, ஒரு நிமிஷமாவது சிந்திச்சியா?”

அவள் சொல்வது எத்தனை உண்மை! தனக்கு என்ன பாதிப்பு, தான் எவ்வளவு துயரப்படப் போகிறோம், கணவனைப் பிரிய நேர்ந்தால் என்ன செய்வது, தன் வாழ்க்கை என்ன ஆகும், இப்படிப்பட்ட எண்ணங்கள்தான் அவள் கண்ணீருக்கும் முடிவிற்கும் காரணமாக இருந்தனவே தவிர, வேறு யாருடைய நினைப்பும் அவளுக்கு வரவே இல்லை! நினைத்துப் பார்க்கையில் அவளுக்கே வெட்கமாக இருந்தது.

“உன் கணவனை தொலைபேசியில் கூப்பிட்டு பேசணும்னு உனக்கு தோணவே இல்லையா?”

“அவருக்கு தெரியாமலா அம்மா, பொண்ணு பார்க்க போவாங்க?”

“இவ்வளவுதானா நீ உன்னவர் மேல வச்சிருக்க அன்பும் நம்பிக்கையும்?” என்று அவள் கேட்ட போது ராதாவிற்கு ‘சுருக்’கென்றது.

“ராதா… எந்த ஒரு பிரச்சனையையும் எத்தனையோ விதமா தீர்க்கலாம். நீ ரொம்ப முட்டாள்தனமான வழியை தேர்ந்தெடுத்திருக்கே. அவ்வளவுதான் சொல்லுவேன்!”

சிறிது நேரம் மௌனமாக நடந்தார்கள். ராதாவின் மனம் பல விஷயங்களையும் எண்ணி பரபரப்படைந்திருந்தது. கரையை நோக்கி நடந்து கொண்டிருந்ததையும், கிட்டத்தட்ட சாலையருகில் வந்து விட்டதையும் கூட அவள் உணரவில்லை.

வீட்டுக்கு போனதும் முதல் வேலையாக கண்ணனைக் கூப்பிட்டு பேச வேண்டும். நாம் செய்யவிருந்த காரியம் மட்டும் அவனுக்குத் தெரிய வந்தால்! இந்த பெண்மணி மட்டும் சரியான சமயத்தில் வந்து நம் கண்களைத் திறக்காமல் இருந்திருந்தால்! அடடா, அவர் பெயரைக் கூட இன்னும் கேட்கவில்லை, நன்றி கூடச் சொல்லவில்லை...

ராதாவிற்கு இந்த நினைப்பு வரவும், அந்தப் பெண்மணி வழியில் வந்த ஆட்டோவை கை காட்டி நிறுத்தவும், சரியாக இருந்தது. ஆட்டோக்காரருக்கு அம்மா வீட்டு விலாசத்தை சொன்னாள், ராதா.

ஏறிக் கொள்ளும் முன், “ரொம்ப நன்றி அம்மா” என்று சொல்லியவாறே விடைபெற்றுக் கொள்ளத் திரும்பினாள்.

ஆனால் அங்கே விரவிக் கிடந்த இரவு மட்டுமே அவளைப் பார்த்துப் புன்னகைத்தது.


--கவிநயா

6 comments:

  1. நல்ல முடிவு.

    அருமை கவிநயா.

    ReplyDelete
  2. சுந்தர காண்டத்தை ஏன் படிக்கச் சொல்கிறார்கள்? அருமையான விளக்கம் அக்கா.

    வந்தது உலகன்னையா வேறு ஏதோ ஒரு ஆத்மாவா?

    ReplyDelete
  3. //நல்லாயிருக்கு ;)//

    நன்றி கோபி :)

    ReplyDelete
  4. //அருமை கவிநயா.//

    நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  5. //சுந்தர காண்டத்தை ஏன் படிக்கச் சொல்கிறார்கள்? அருமையான விளக்கம் அக்கா.//

    நன்றி குமரா.

    //வந்தது உலகன்னையா வேறு ஏதோ ஒரு ஆத்மாவா?//

    கதையின் நாயகி அதிர்ஷ்டசாலி; அவளுக்காக அம்மாவே வந்துட்டா :)

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)