Monday, September 20, 2010

மனசு


வானம் போல விரிஞ்சிருக்கும்
வண்டு போலச் சுத்தி வரும்

கானங் கேட்டுக் கனிஞ்சிருக்கும்
கனவுக் குள்ள கத படிக்கும்

வெள் ளந்திப் புள்ள போல
சொல்லுக் கேக்க வாடிப் போகும்

மறுகி உருகி மாஞ்சு போகும்
மாத்துத் தேடி ஏங்கிப் போகும்

அன்பக் கண்டா அசந்து போகும்
ஆவல் மீற ஆட்டம் போடும்

காட்டு மல்லிப் பூவப் போல
காடும் மேடும் வாசம் வீசும்!


--கவிநயா

படத்துக்கு நன்றி: https://karkanirka.wordpress.com/2009/04/23/99tamilflowers_fotosource/

Monday, September 13, 2010

ஜலதோஷமும் சந்தோஷமும்


சந்தோஷம் என்பது பூமணம் போல. உங்ககிட்ட ஒரு கை மல்லிகைப்பூ இருக்குன்னு வைங்க, அதை நீங்க இன்னும் ரெண்டு பேருக்கு கொடுக்கறீங்க. அவங்க அதை வைக்கிற இடம் கமகமக்கும். பிறகு அதை அவங்க இன்னும் ரெண்டு பேருக்கு கொடுக்கறாங்க, இப்ப இன்னும் கொஞ்ச பேரோட இடம் மணமணக்கும்! இப்படியே உங்க பூவோட மணம் எவ்வளவு தூரத்துக்கு பரவுது பாருங்க.

சந்தோஷமும் அப்படித்தான். நீங்க கொஞ்சம் அடுத்தவங்களுக்கு குடுத்தா, அந்த சந்தோஷத்தில் அவங்க இன்னொருத்தவங்களுக்கு குடுப்பாங்க, அவங்க இன்னொருத்தங்களுக்கு, இப்படியே பரவும். மல்லிகைப் பூவாச்சும் ஒரு கட்டத்தில் தீர்ந்து போயிடும். ஆனா நாம பரப்பற சந்தோஷம் இருக்கே, அது இரட்டிப்பாகுமே தவிர, குறையாது.

அது சரி, ஒருத்தரை சந்தோஷப்படுத்த சுலபமான வழி எதுன்னு நினைக்கிறீங்க?

அவங்களைப் பாராட்டறதுதான்!

அன்னை தெரசா என்ன சொல்றாங்க பாருங்க –
“There is more hunger for love and appreciation in this world than for bread.”~ Mother Teresa

உங்களைப் பாராட்டினா உங்களுக்கு சந்தோஷமா இருக்காதா? நிச்சயமா இருக்கும். ஆனா, பாராட்டுவது சுலபமில்லைங்க, அதுவும் ஒரு கலைதான். ஒருத்தரைப் பாராட்டும் போது மனதார, உணர்ந்து, உண்மையா பாராட்டணும். அப்பதான் அது பாராட்டறவங்க, பாராட்டப்படறவங்க, இரண்டு பேருக்குமே உண்மையான சந்தோஷத்தைத் தரும்.

ஆனா பல சமயங்களில் நடப்பது என்ன? ஒருத்தர்கிட்ட காரியம் ஆகணும்கிறதுக்காக வலியப் போய் பொய்யான பாராட்டுக்களை அள்ளி விடறவங்கதான் அதிகமா இருக்காங்க.

அதோட மட்டுமில்லாம, பொதுவாகவே மற்றவங்களோட குறைகள்தான் நம் கண்ணில் அதிகம் படும்; நிறைகள் கண்ணில் படுவது அபூர்வம். அதனாலதான் நாம் மனதார பாராட்டுவதும் அபூர்வமா இருக்கு போல.

இப்படி செய்து பார்க்கலாம்… ஒரு நாளைக்கு குறைஞ்சது ஒருத்தரையாவது உண்மையா பாராட்டணும் அப்படின்னு வச்சுக்குவோம். அந்த ஒருத்தர், நம்ம குடும்பத்தில் ஒருத்தரா இருக்கலாம், அலுவலகத்தில் வேலை செய்கிறவரா இருக்கலாம், ஏன், காய்கறிக் கடைக்காரராகக் கூட இருக்கலாம். அன்றைக்கு முழுக்க நாம சந்திக்கக் கூடிய நபர்களில் யாராக வேணும்னாலும் இருக்கலாம்.

ஒவ்வொருத்தரையும் ‘இவங்களை எப்படி பாராட்டலாம்?’ என்கிற எண்ணத்தோட பார்க்கும் போது என்ன ஆகும்? நாம இது நாள் வரை அவங்ககிட்ட பார்த்திருக்காத பல நல்ல விஷயங்கள் நம் கண்ணில் பட ஆரம்பிக்கும். அப்படி ஆகும்போது, அவங்களோட குறைகள் நம் பார்வையிலிருந்து மறைய ஆரம்பிச்சிடும்.

எவ்வளவு நல்ல விஷயம் பாருங்க அது! எங்கேயும் எப்பவும் நல்லதை மட்டுமே பார்க்கப் பழகுவது சாதாரணமான விஷயம் இல்லை. அப்படி ஒரு நல்ல விஷயத்தை எடுத்து, நீங்க ஒருத்தரை மனதார பாராட்டினீங்கன்னு வைங்க! அந்த சந்தோஷத்தில் அவர் இன்னொருவரிடம் அன்பாக நடந்து கொள்வார்; வேறொருவரை பாராட்டுவார், பிறகு அவங்க தங்களுடைய மகிழ்ச்சியை இன்னும் சிலரிடம் கொடுப்பாங்க… நீங்க ஆரம்பிச்ச சந்தோஷம் இப்படியே பரவிக்கிட்டேதானே போகும்!

அட, பாராட்ட எதுவும் கிடைக்கலையா, அன்பா ஒரு சில வார்த்தைகள். அதுவும் முடியலையா, கனிவா ஒரு புன்னகை, இப்படி ஏதாவது…

ஆக மொத்தம், ஜலதோஷம் போல சந்தோஷமும் ஒரு தொற்று வியாதிதான்!
(அப்பாடி, தலைப்பு வந்திருச்சா?)

பரப்புவோமா? :)

இப்ப உங்களுக்கு ஒரு கேள்வி: முகஸ்துதி பண்றது, காக்கா பிடிக்கிறது அப்படிங்கிற பிரயோகங்கள் எப்படி வந்தது?

அன்புடன்
கவிநயா

பி.கு.: படத்துக்கு நன்றி: தினமலர்

Friday, September 10, 2010

கணேச பஞ்சரத்னம்

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தித் திருநாள் நல்வாழ்த்துகள்!

கணேச பஞ்சரத்னம் எனக்கு பிடித்த ஸ்லோகங்களில் ஒன்று. எம்.எஸ் அம்மாவின் குரலில்... (யூட்யூபில் இட்டவருக்கு நன்றி)





முதாகராத்த மோதகம் ஸதாவிமுக்திஸாதகம்
கலாதராவதம்ஸகம் விலஸிலோகரக்ஷகம்
அநாயகைகநாயகம் விநாசிதே பதைத்யகம்
நதாசுபாசுநாசகம் நமாமி தம் விநாயகம்

நதேதராதிபீகரம் நவோதிதார்க்கபாஸ்வரம்
நமத்ஸுராரி நிர்ஜரம் நதாதிகாபதுத்தரம்
ஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்
மஹேச்வரம் ஸமாச்ரயே பராத்பரம் நிரந்தரம்

ஸமஸ்தலோகசங்கரம் நிரஸ்ததைத்யகுஞ்சரம்
தரேதரோதரம் வரம் வரேபவக்த்ரமக்ஷரம்
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
மநஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்

அகிஞ்சநார்த்தி மார்ஜநம் சிரந்தநோக்தி பாஜநம்
புராரிபூர்வநந்தநம் ஸுராரிகர்வ சர்வணம்
ப்ரபஞ்சநாசபீஷணம் தநஞ்சயாதிபூஷணம்
கபோலதாநவாரணம் பஜேபுராண வாரணம்

நிதாந்தகாந்ததந்தகாந்தம் அந்தகாந்தகாத்மஜம்
அசிந்த்யரூபமந்தஹீந மந்தராயக்ருந்தநம்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகிநாம்
தமேகதந்தமேவ தம் விசிந்தயாமி ஸந்ததம்

மஹாகணேச பஞ்சரத்ந மாதரேண யோந்வஹம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதிஸ்மரந் கணேச்வரம்
அரோகதாமதோஷதாம் ஸுஸாஹிதீம் ஸுபுத்ரதாம்
ஸமாஹிதாயுரஷ்டபூதிமப்யுபைதிஸோசிராத்


விக்கினங்களை தீர்த்தருளும் விநாயகனின் திருப்பதங்கள் சரணம்.


அன்புடன்
கவிநயா

Wednesday, September 1, 2010

கண்ணனைக் கண்டீரா?

செல்லக் குட்டிக் கண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

அவனோட பிறந்த நாளுக்கு ஏதாச்சும் எழுதணும்னு ஆசை, ஆனால் நேரம் கிடைக்கலை :( அதனால முன்னாடி கண்ணன் பாட்டு வலைப்பூவில் இட்ட கவிதை இப்போ இங்கேயும்...




கண்ணன் - என் குழந்தை

புல்லாங் குழலை ஊதும் என்றன்
பொல்லாத கண்ணனைக் கண்டீரா?
இரவு பகலாய்த் தேடுகிறேன்
இன்னமும் என்னிடம் சிக்கவில்லை!

நில்லாமல் சுற்றும் புவிபோலே – ஓய்
வில்லாமல் ஊரைச் சுற்றிடுவான்;
உறிமேல் பானை கண்டுவிட்டால்
பறிமுதல் உடனே செய்திடுவான்!

பத்தரை மாற்றுத் தங்கம் போல்
பாசாங்கு பலவும் புரிந்திடுவான்;
இத்தரை மீதில் இவனேதான்
இலக்கணம் போல நடந்து கொள்வான்!

கரிய விழிகளை விரித்து அதில்
கண்ணீரோடு நின்றிடுவான்;
பாவம் என்று விட்டு விட்டால்
மீதம் இன்றி தின்றிடுவான்!

உருட்டி மிரட்டி கட்டி வைத்தால்
உரலையும் இழுத்துச் சென்றிடுவான்!
தறிகெட் டலையும் கன்றினைப் போல்
திரியும் கண்ணனைக் கண்டீரா?

கன்னக் குழியில் குறும்பிருக்கும்
வன்னப் பீலி அசைந்தாடும்
தின்ன வெண்ணெய் எல்லாமே
திகட்டா இதழைச் சுவைத்திருக்கும்!

காதணி வதனம் கொஞ்சி நிற்கும்
மாமணி மார்பில் தவழ்ந்திருக்கும்
கிண்கிணி கொலுசு மணிகளெல்லாம் - அவன்
பாதங்கள் தொட்டு மகிழ்ந்திருக்கும்!

குழலில் குயிலும் மயங்கி நிற்கும்
குரலில் குழலே ஒலித்திருக்கும்
மடுவின் நடுவே மலர் போலே - அவன்
முகமே மனதில் மலர்ந்திருக்கும்

புல்லாங் குழலை ஊதும் என்றன்
பொல்லாத கண்ணனைக் கண்டீரா?
என்றன் ஏக்கம் அறிவீரா?
அவனைக் கண்டால் சொல்வீரா?

--கவிநயா