Wednesday, July 14, 2010

மறந்து(ம்) விடாத உறவுகள்

(1)

நட்சத்திரக் குழந்தைகள் எல்லாம் என்ன காரணத்தாலோ வானப் பள்ளிக்கு மட்டம் போட்டு விட, வானம் வெறுமையாகக் காட்சி அளித்தது, என் மனசைப் போல.

நேற்றுப் பெய்த மழையில் சின்னக் குட்டையாகத் தேங்கியிருந்த தண்ணீரில் பிரதிபலித்த நிலவின் பிம்பத்தை, "ப்ளக்" என்று குதித்த தவளை ஒன்று கலைத்து விட்டுச் சென்றது.

மெல்லிய கொலுசுச் சத்தம் என் பின்னால் ஒலித்தது. மஞ்சுதான். மௌனமாக என் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.

எத்தனையோ வருடங்களாக எங்கள் இருவரின் வம்புகளுக்கும், அரட்டைகளுக்கும், பிரச்சினைகளுக்கும், தீர்வுகளுக்கும் சாட்சியாக இருந்து வரும் நிலவு, இன்று எங்கள் அயர்ச்சி மிகுந்த மௌனத்தையும், அமைதியாகவே பார்த்துக் கொண்டிருந்தது.

சற்று நேரம் கழிந்த பின்னர், என் அருகில் நெருங்கி வாகாக அமர்ந்து கொண்ட மஞ்சு, என் மடியில் தலை வைத்து முகம் புதைத்துக் கொண்டாள். சிறிது நேரத்தில் சூடாக என் புடவையை நனைத்தது மஞ்சுவின் கண்ணீர்.

வாஞ்சையுடன் அவள் முகத்தில் விழுந்த கூந்தலை விலக்கி விட்டுக் கண்களைத் துடைத்து விட்டேன். ஆனால் எதுவும் சொல்லவில்லை. என்ன சொல்வது என்று தெரியவில்லை.

இதோ என் மடியில் படுத்து குழந்தையாய்க் கண்ணீர் விடுகிறாளே மஞ்சு, அவள் அப்படி ஒன்றும் சின்னக் குழந்தை இல்லை. அவளுக்கே ஏழு வயதில் தங்கப் பதுமை மாதிரி ஒரு மகள் இருக்கிறாள். இருந்தாலும், என் பெண்ணை நான் சரியாக வளர்க்கவில்லையோ என்று இப்போதெல்லாம் தோன்றுகிறது.

நானும், அவளும், ஒருவரை ஒருவர் சார்ந்தே வாழப் பழகி விட்டோம். பெண்ணும் மாப்பிள்ளையும் எவ்வளவுதான் சொன்ன போதிலும், நான் அவர்களுடன் வந்து இருக்கச் சம்மதித்தது பெரிய தவறு. ஆனால் அதைக் காலம் கடந்த பின் உணர்ந்து என்ன பயன்? கண்ணுக்குக் கண்ணாய் வளர்த்த என் செல்வ மகளுக்கு என் இறுதிக் காலத்தில் சிரமத்தையும் துன்பத்தையும்தான் தரப் போகிறேன் என்பது என்னவோ உறுதியாகி விட்டது.

இன்று காலையில் டாக்டர் சொன்னதெல்லாம் கனவு போல இருக்கிறது; ஆனால் கனவில்லை என்று என் மடியில் இறங்கும் மஞ்சுவின் கண்ணீர் அறிவிக்கிறது.

அப்படித்தான் இருக்க வேண்டும். எத்தனையோ வருடங்களுக்கு முன்பு அடுக்கடுக்காய் வந்த துன்பங்களைச் சகிக்க முடியாமல், "இறைவா, இந்த இருண்ட காலங்கள் எல்லாம் கனவாகப் போய் விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்", என்று மனம் நொந்து வேண்டிக் கொண்டிருக்கையில், வானில் போய்க் கொண்டிருந்த எந்தத் தேவனோ, "ததாஸ்து", சொல்லி இருக்க வேண்டும்.

என் அம்மா நான் சிறுமியாய் இருந்த போது சொல்லி இருக்கிறார். நினைவுகள் எல்லாம் எப்போதும் நல்லதாகவே இருக்க வேண்டுமாம்; ஏனென்றால் வானத்தில் உலவும் தேவர்கள் எப்போதாவது "ததாஸ்து" என்று சொன்னால், அந்த சமயத்தில் நாம் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறோமோ அது அப்படியே பலித்து விடுமாம்.

"ஏம்மா மஞ்சு, நீ வேண்ணா உள்ள போய் படுத்துக்கோ. நாளைக்கு ஏதோ ஸ்பெஷல் க்ளாஸ் இருக்குன்னியே?", என்றேன். காலேஜில் லெக்சரராக இருக்கிறாள். மடியிலேயே தலை அசைந்தது, "கொஞ்ச நேரம் ஆகட்டும்மா".

அவள் முகத்தைத் திருப்பி, நெற்றியில் முத்தமிட்டேன். மென்மையாக விரல்களால் கூந்தலை வருடி விட்டேன். அழுகை சற்றே அடங்கினாற் போல இருந்தது. சிறு வயதில் இருந்தே அப்படித்தான், எவ்வளவுதான் அழுகையும், ஆத்திரமும் இருந்தாலும், என் கை பட்டவுடன் அமைதியாகி விடுவாள்.

"மஞ்சு, உள்ள போய் படுத்துக்கிறியா? காலைல காலேஜுக்குப் போகணுமே?" என்றேன்.

விருட்டென்று தலை நிமிர்ந்து, "என்னம்மா நீங்க, இப்பத்தானே கேட்டீங்க..." என்று ஆரம்பித்தவள், சட்டென்று அவளே மௌனமானாள்.

"ஆமா, இப்பத்தானே கேட்டேன். ஸாரிடா", என்னும் போது என் கண்கள் குளம் கட்டின.

"அம்மா, ப்ளீஸ்...", என்றவள், என்னை இறுகக் கட்டி, கன்னத்தில் முத்தமிட்டாள்.

"சரிம்மா, நீங்களும் வாங்க, படுக்கலாம்", என்று எழுந்தாள்.

"இல்லடா, நீ போ. நான் கொஞ்ச நேரத்துல வர்றேன்"

"சீக்கிரமா வந்துடுங்க, குட் நைட்"


(தொடரும்)

7 comments:

  1. நல்ல தொடக்கம். போகப்போக வேகம் கூடுமென்பது இப்பவே தெரிகிறது.

    ReplyDelete
  2. ரைட்டு...அடுத்த பகுதிக்கு வெயிட்டிங் ;-)

    ReplyDelete
  3. நன்றி ஜீவி ஐயா. குட்டித் தொடர்தான், இன்னும் 2 பகுதிகளில் முடிந்து விடும். உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது.

    ReplyDelete
  4. வாருங்கள் திகழ்... உங்களையும் பார்த்து நாளாச்சு :) உங்கள் ஆவலுக்கு தகுந்தாற் போல கதை இருக்கணுமேன்னு கவலையா இருக்கு :)

    ReplyDelete
  5. வாங்க கோபி :) அடுத்த பகுதி இப்பதான் இட்டேன். படிச்சு சொல்லுங்க...

    ReplyDelete
  6. /கவிநயா said...
    வாருங்கள் திகழ்... உங்களையும் பார்த்து நாளாச்சு :) உங்கள் ஆவலுக்கு தகுந்தாற் போல கதை இருக்கணுமேன்னு கவலையா இருக்கு :)
    /

    :))))))))))))))

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)