Thursday, July 22, 2010

வர வேணும்!

ஆடி வெள்ளி சிறப்பு பதிவு



சின்ன மணி சிலம்பொலிக்க
வெள்ளி மணி பரல்சிரிக்க
கண்மணியே நீ ஓடி வர வேணும் – வந்து
கட்டி முத்தம் ஒன் றெனக்கு தர வேணும்

நீண்ட பின்னல் தானசைய
நீள் நிலமும் சேர்ந்தசைய
நித்திலமே நீ ஓடி வர வேணும் – வந்து
நித்தம் கொள்ளை அன் பெனக்கு தர வேணும்

முத்து மணி நகையாட
முத்து நகை இதழாட
சித்திரமே நீ ஓடி வர வேணும் – வந்து
சித்த மெல்லாம் நிறைந் தருளைத் தர வேணும்

கா தணிகள் தான்குலுங்க
கை வளைக ளும்சிணுங்க
கண்மணியே நீ ஓடி வர வேணும் - வந்து
கன்னல் மொழி இன் னமுதம் தர வேணும்

பன்னிப் பன்னி நான் பாட
பண்ணில் உன்னைத் தினம் பாட
பொன்மணியே கொலு சொலிக்க வர வேணும் – வந்து
பண் ணமர்ந்து இன் னருளைத் தர வேணும்

--கவிநயா

Saturday, July 17, 2010

மறந்து(ம்) விடாத உறவுகள் - 3

(3)

முதல் பகுதி
இரண்டாம் பகுதி

ஆல்ஸைமர்ஸ். (தமிழில் அல்சிமர்).

டாக்டர் ஓரளவு கோடி காட்டுகையிலேயே நான் இந்த நோயைப் பற்றி முடிந்த போதெல்லாம் படிக்க ஆரம்பித்து விட்டேன். முதலிலேயே ஓரளவு அதைப் பற்றி அறிந்திருந்த போதிலும், மேலும் படிக்கப் படிக்க இது எவ்வளவு கொடுமையான நோய் இது என்று புரிய ஆரம்பித்தது.

"நான்" என்று எவற்றையெல்லாம் வைத்து நம்மை அடையாளப் படுத்திக் கொள்கிறோமோ அவற்றையெல்லாம் நம் கண் முன்னேயே சிறிது சிறிதாகக் கொள்ளையடித்து விடும் கள்வன்; நம் தனித்துவத்தை நலுங்காமல் பறித்துக் கொள்ளும் அரக்கன்; நம் நினைவுகளையும், குழந்தைகளையும், சொந்தங்களையும், நமக்கே இல்லாமல் செய்து விடும் கொடுங்கோலன்; என்பதெல்லாம் இந்த நோயைப் பற்றிப் படிக்கும் போது தெளிவாகியது.

இருந்தாலும் மனிதர்களுக்கே இயல்பான "நமக்கெல்லாம் அது வராது", என்ற முட்டாள்தனமான நம்பிக்கையும், நப்பாசையும் எனக்கும் இருந்தது, இன்று காலை வரையில். ஆசை நிராசையான பிறகு, "ஏன் எனக்குப் போய் வர வேண்டும்?" என்ற கேள்வியை விட என் மகளுக்கு நான் கொடுக்கப் போகும் துன்பங்களும், அவற்றைத் தடுக்க இயலாத என் கையாலாகாத நிலைமையையும் நினைத்துத்தான் மறுகுகிறது மனசு.

நிலைமை ரொம்ப மோசமாக ஆவதற்கு இன்னும் சில வருடங்கள் ஆகுமாம், டாக்டர் சொன்னார். இருந்தாலும் இப்போதே நான் மஞ்சுவிற்குக் கொடுக்கும் சிரமங்கள் அதிகமாகத் தோன்றுகிறது. உதவிக்கென்று வந்து விட்டு, பெரும் உபத்திரவமாக அல்லவா மாறிக் கொண்டிருக்கிறேன்?

சொல்வதையே திரும்பத் திரும்பச் சொல்வதும், அடிக்கடி பல பொருட்களையும் மறந்து வைத்து விடுவதும், பழக்கமான இடங்களிலேயே வழி தவறித் தொலைந்து போவதும்... மஞ்சுவும், மாப்பிள்ளையும் கண்ணைப் போலத்தான் பார்த்துக் கொள்வார்கள். அதற்காக அவர்களாலும் எவ்வளவு நாளைக்கு முடியும்? யோசிக்க யோசிக்கத் தலை சுற்றியது. பெரு மூச்சுடன் எழுந்து படுக்கச் சென்றேன்.

ஒரு வாரம் ஓடி விட்டது. அதற்குள் பல விஷயங்களையும் யோசித்து, சில முடிவுகளுக்கு வந்திருந்தேன்.

என் பெயரில் இருக்கும் வீட்டையும், மற்றவைகளையும் நினைவு இருக்கும் போதே மஞ்சு பெயருக்கு மாற்றி விடுவது. என்னுடைய மறதிக்கு மருந்தாக வழக்கமாகப் போகும் இடங்களுக்கும், அங்கிருந்து வீட்டிற்கும், வரும் வழிகளை எழுதி எப்போதும் என்னுடன் வைத்துக் கொள்வது. என் பெயரையும், அட்ரஸையும் எந்நேரமும் என்னுடன் வைத்துக் கொள்வது. முடிந்த வரை மஞ்சுவுக்கு சிரமம் கொடுக்காமல் இருப்பது. நிலைமை மோசமானால் சேர்த்து விட, இப்போதே ஒரு நர்ஸிங் ஹோம் பார்த்து வைப்பது.

இப்படியான சில முடிவுகளுக்கு வந்த பின் சற்றே அமைதியானாற் போல் இருந்தது மனசு.

அன்று சனிக்கிழமை. வழக்கம் போலக் குளித்து, பூஜை முடித்து, சமையலறையில் நுழைந்தேன். "பாட்டி, எனக்கு இன்னிக்குக் கேசரி பண்ணித் தர்றியா?" அம்முக்குட்டி வந்து என் கால்களைக் கட்டிக் கொண்டாள்.

சனி, ஞாயிறில் அவள் கேட்பதைச் செய்து கொடுப்பது என் வழக்கம். "கேசரிதானே, செஞ்சு தரேண்டா கண்ணா", குனிந்து அவளை அணைத்து முத்தமிட்டேன்.

வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் என் பின்னாலேயே சுற்றிக் கொண்டு, சளசளவென்று ஏதாவது கேட்டுக் கொண்டும், பேசிக் கொண்டும் இருப்பாள், அம்முக் குட்டி. இதையெல்லாம் அனுபவிக்க இன்னும் எவ்வளவு நாளைக்கு எனக்குக் கொடுத்து வைத்திருக்கிறதோ?

சே, இந்தக் கண்ணீர் வேறு நேரம் காலம் தெரியாமல் வந்து விடுகிறது. ரவையையும், சீனியையும் வெளியே எடுத்த வண்ணம், கண்ணீரை உள்ளிழுக்க முயன்றேன்.

"பாட்டீ, ஏன் அழற?" இந்தக் குட்டியிடமிருந்து தப்பவே முடியாது; கண்ணீருக்கிடையே பெருமிதப் புன்னகை விரிந்தது, இப்போது.

"இங்க வா, சொல்றேன்" அவளை அழைத்து என் மடியில் அமர்த்திக் கொண்டேன்.

"அம்மு, அன்னிக்கு ஒரு நாள், நாம ஒரு நர்ஸிங் ஹோம் போனோமே, ஞாபகம் இருக்கா?"

"ஓ. இருக்கே. நீ கூட உன் •ப்ரெண்ட ரொம்ப நாள் கழிச்சு பார்த்தேன்னியே?"

அந்த நர்ஸிங் ஹோமுக்குப் போனது மறக்க முடியாத நிகழ்ச்சியாகி விட்டது (இப்போதைக்கு).

அங்கு எதிர்பாரா விதமாக என்னுடன் வேலை செய்த ஒரு தோழியைப் பல வருடங்களுக்குப் பிறகு பார்த்தேன். எதிர்பார்த்தபடி, அவளுக்கு என்னைத் தெரியவில்லை. அவளுக்கு ஆல்ஸைமர்ஸ் முற்றிய நிலையில் இருந்தது.

ஏழைக் குடும்பத்தில் மூத்தவளாகப் பிறந்து, தம்பி, தங்கைகளுக்காகத் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்நாளைக் கழித்து விட்டிருந்தாள். இந்த வியாதி இருப்பது தெரிந்த பிறகு, தனியாக வாழ முடியாத நிலை வரும் முன்னர் அவளே அந்த நர்ஸிங் ஹோமில் சேர்ந்து கொண்டு விட்டிருக்கிறாள். அவளைப் பார்ப்பதற்கு யாருமே வருவதில்லை என்று அவளுடைய நர்ஸ் சொல்லிக் கொண்டிருந்தாள்.

வந்தால் மட்டும் அவளுக்குத் தெரியவா போகிறது என்று ஒரு கணம் தோன்றியது. ஆனால் யாராவது வந்தால்தானே அவளை நன்கு பார்த்துக் கொள்கிறார்களா, வசதிகள் நன்றாக இருக்கிறதா என்பதெல்லாம் கவனிக்க முடியும்?அவள் நிலைமையை நினைத்து ரொம்ப வருத்தமாக இருந்தது. நாமாவது நினைவு இருக்கும் வரை அவளைப் போய்ப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன்.

"ஆமா. ரொம்ப நாளக்கி முன்னாடி, அந்தப் பாட்டி எனக்கு ரொம்ப ஃப்ரெண்டா இருந்தாங்க. ஆனா அவங்களுக்கு உடம்பு சரியில்லாம போனதுக்கப்புறம் எல்லாரையும் மறந்துட்டாங்க. என்னையும் அவங்களுக்கு ஞாபகமே இல்ல. அதே மாதிரிதான் எனக்கும் ஆகப் போகுதுன்னு டாக்டர் சொன்னாருல்லையா? அதனால இன்னும் கொஞ்ச நாளக்கப்புறம் உன்னயும், அம்மாவையும் கூட எனக்கு மறந்து போயிடுண்டா, கண்ணா", சொல்லும் போதே குரல் கம்மியது, எனக்கு.

என்னுடைய நிலைமை பற்றி அவளுக்குத் தேவையான அளவு சொல்லி இருக்கிறாள், மஞ்சு.

"பாட்டீ, உனக்கு என்னை மறந்து போனா என்ன, எனக்கு உன்னை ஞாபகம் இருக்குமே?"

பளிச்சென்று கேட்ட அம்முக்குட்டியை அப்படியே அணைத்து உச்சி முகர்ந்தேன்.

நான் மறந்தாலும், என்னை மறந்து விடாத உறவுகளைத் தந்த வரை, இறைவனுக்கு நான் நன்றிதான் சொல்ல வேண்டும் என்பதை ஒரு நொடியில் உணர்த்தி விட்டாள் அல்லவா என் அம்முக்குட்டி?


(நிறைவு பெற்றது)

-- கவிநயா

Thursday, July 15, 2010

மறந்து(ம்) விடாத உறவுகள் - 2

(2)

முதல் பகுதி

வசதி இல்லாததாலும், பெண் பிள்ளைக்குப் படிப்பு அவசியமில்லை என்று என் பெற்றோர் நம்பியதாலும், எஸ்.எஸ்.எல்.சி வரை படித்ததே பெரிய விஷயமாய் இருந்தது.

தமக்கை இருவருக்கும் திருமணம் முடிந்த பின் எனக்கும் திருமணம் முடிந்தது. எனக்கு வாய்த்தவர் தங்கமானவராய் இருந்தார். அந்தக் காலத்திலேயே வரதட்சிணை வாங்காமல் என்னை ஏற்றுக் கொண்ட என் கணவரின் குடும்பம், என் குடும்பமாக மாற ரொம்ப நாள் ஆகவில்லை.

நான்கு வருடங்களில் மஞ்சுவைப் பெற்றெடுத்தேன். என்னைப் போன்ற வாழ்வு யாருக்குக் கிடைக்கும் என்று இறுமாந்திருந்த வேளையில்தான் கண் பட்டாற் போல் அது நடந்தது; விபத்து ஒன்றில் சிக்கிய என் கணவர் கோமாவில் வீழ்ந்தார்.

அந்த ஒரு வருடமும் நரகம்தான். வயது சென்ற மாமனார், மாமியாருடனும், கைக்குழந்தையுடனும், நான் பட்ட மனக் கஷ்டத்திற்கும், பணக் கஷ்டத்திற்கும் அளவே இல்லை.

அருமைக் கணவர் பிழைப்பாரா என்று தெரியாமல், பிழைக்க வேண்டுமே என்று வேண்டியபடி சொந்தக் காலிலும் நிற்க முடியாமல் நான் பட்ட அவஸ்தையை விவரிக்க வார்த்தைகள் இல்லை. ஒரு வருடம் கழிந்த பின் என் கணவர் மற்றுமொரு முறை கண் திறக்காமலேயே இந்த உலகத்தை நீத்தார்.

அதன் பிறகு நானும் பலருடைய உதவியுடனும், பல விதமான சிரமங்களுக்கிடையில் பட்டம் படித்தேன். வேலைக்குப் போனேன். கொஞ்சம் கொஞ்சமாக வெளி உலகத்தை அறிந்து கொண்டேன். மஞ்சுவிற்கும் முடிந்த அளவு கற்றுக் கொடுத்தேன்.

இன்ஞினியரிங் படித்தாள். இப்போது காலேஜில் லெக்சரராக இருந்தபடி பி.எச்.டி. செய்கிறாள். இதற்கிடையில் அவள் விரும்பியவனுக்கே திருமணமும் முடித்தேன்.

அவளுக்குக் குழந்தை உண்டான போதுதான், "அத்தை, நீங்க எதுக்கு இன்னமும் வேலை செஞ்சுக்கிட்டு தனியா இருக்கணும்? எங்களோடயே தங்கிடுங்க. எங்களுக்கும் உதவியா இருக்கும்", என்று மாப்பிள்ளையே வற்புறுத்திய போது மறுக்க முடியவில்லை.

வாலன்ட்டரி ரிடையர்மென்ட் வாங்கிக் கொண்டு இங்கேயே வந்து விட்டேன். சம்பந்திமாரும் நல்லவர்களாக இருந்ததால், அவர்களிடமிருந்தும் இந்த ஏற்பாட்டிற்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.

இப்போது சமீப காலமாகத்தான் கொஞ்சம் பிரச்சினைகள் ஆரம்பம். எந்தக் கவலையும் இல்லாமல் சந்தோஷமாக இருந்தால், ஏதாவது ஒரு பிரச்சினையைக் கொடுத்து, "இப்போதாவது என்னை நினைத்துக் கொள்", என்பார் போலும், கடவுள். அப்படித்தான் எனக்கும் இப்போது மறதியைக் கொடுத்து விட்டார்.

சமையல் சாமான்களிலிருந்து எல்லாவற்றையும் கை தவறி வைத்து விட்டு மணிக் கணக்கில் தேடுவது வழக்கமாகி விட்டது, எனக்கு. சில சமயம் என்ன தேடுகிறேன் என்பதே மறந்து விடும்!

ஒரு முறை என்னிடமிருந்த வீட்டுச் சாவியை எங்கோ வைத்து விட்டேன். அம்முக்குட்டியை ஸ்கூலில் இருந்து கூட்டி வர நேரம் ஆகி விட்டது. சாவியைத் தேடிக் கொண்டிருக்க நேரமில்லை. பரவாயில்லை என்று கதவை இழுத்துச் சார்த்திக் கொண்டு போய் விட்டேன்.

திரும்பி வரும் போது மழை பிடித்துக் கொண்டது. மஞ்சுவோ, மாப்பிள்ளையோ வர இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும். வேறு வழியில்லாமல் பக்கத்து வீட்டுக் கதவைத் தட்டி மஞ்சுவுக்கு ஃபோன் பண்ணி விஷயத்தைச் சொன்னேன். அவளோ அப்போதுதான் ஒரு வகுப்புக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள். உடனே வர முடியாத நிலைமை. அதனால் அவள் வரும் வரை நாங்கள் அதிகம் பழக்கமில்லாத அந்தப் பக்கத்து வீட்டில் இருக்க வேண்டி வந்து விட்டது.

மஞ்சு அன்றைக்கு என்னிடம் ரொம்பவே பொறுமை இழந்து விட்டாள். பக்கத்து வீட்டிலும் யாரும் இல்லாதிருந்திருந்தால், அன்றைக்கு அம்முக்குட்டியும் அவ்வளவு நேரமும் மழையிலேயே அல்லவா நனைய வேண்டி இருந்திருக்கும்?

மஞ்சு கோபித்துக் கொண்டதில் ஒன்றும் தவறில்லை. வேடிக்கை என்னவென்றால், திரும்பி வந்து பார்க்கும்போது சாவி நான் எப்போதும் வைக்கும் இடத்திலேயேதான் இருந்தது. சரி, ஏதோ வயதாகி விட்டதால் கூடவே வரும் மறதி என்று என்னைத் தேற்றிக் கொண்டு, இனி கவனமாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

மற்றொரு முறை அப்படித்தான், ஒரு வெள்ளிக் கிழமை மாலை வழக்கம் போல் எங்கள் தெரு முனையில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்குச் சென்றிருந்தேன். அன்றைக்கு ஏதோ விசேஷ பூஜை இருந்தபடியால் திரும்பும் போது இருட்டி விட்டது. நேரமாகி விட்டதே என்று எண்ணியபடி நடையைக் கொஞ்சம் எட்டிப் போட்டேன்.

பத்து நிமிடங்களில் வந்து சேர வேண்டிய வீடு எங்கே போயிற்று? நாற் புறமும் சுற்றிச் சுற்றி ஒவ்வொரு வீடாகப் பார்த்துக் கொண்டே, இப்போது கொஞ்சம் மெதுவாக நடக்க ஆரம்பித்தேன். எந்த வீட்டைப் பார்த்தாலும் புதிதாக இருப்பது போல் இருந்தது. பீதி மனதைக் கவ்வ, கலவரம் வயிற்றைக் கவ்வியது.

பதட்டப்படாதே என்று எனக்கு நானே சொல்லிக் கொண்ட வண்ணம், எங்கள் வீடு இருக்கும் தெரு பெயர் என்ன என்று யோசித்துப் பார்த்தேன். ம்ஹூம். சுத்தமாக நினைவில் இல்லை. வருடக் கணக்காகப் போகும் வழிதான். என்ன ஆயிற்று எனக்கு?

எவ்வளவு நேரம் அந்த இருட்டில் சுற்றினேனோ, ஒரு கட்டத்தில் நடக்கவே முடியாமல் கால்கள் பின்னியது. திடீரென்று என் அருகில் ஒரு கார் வந்து நின்றது. மஞ்சுவும் மாப்பிள்ளையும். அந்த நிமிடத்தில் கடவுளையே பார்த்த மாதிரி அப்படி ஒரு நிம்மதியாய் இருந்தது, எனக்கு…

ஆனால் எல்லாம் மஞ்சுவின் குரலைக் கேட்கும் வரைதான். "அம்மா, உங்கள எங்கெல்லாம் தேடறது?" அவள் குரலில் இருந்தது வருத்தமா, கோபமா?

மறு நாள் முதல் ஆரம்பித்தது, டாக்டர் விஜயம். இன்று காலைதான் எனக்கு என்ன பிரச்சினை என்று முடிவாகச் சொன்னார் டாக்டர்.


(தொடரும்)

Wednesday, July 14, 2010

மறந்து(ம்) விடாத உறவுகள்

(1)

நட்சத்திரக் குழந்தைகள் எல்லாம் என்ன காரணத்தாலோ வானப் பள்ளிக்கு மட்டம் போட்டு விட, வானம் வெறுமையாகக் காட்சி அளித்தது, என் மனசைப் போல.

நேற்றுப் பெய்த மழையில் சின்னக் குட்டையாகத் தேங்கியிருந்த தண்ணீரில் பிரதிபலித்த நிலவின் பிம்பத்தை, "ப்ளக்" என்று குதித்த தவளை ஒன்று கலைத்து விட்டுச் சென்றது.

மெல்லிய கொலுசுச் சத்தம் என் பின்னால் ஒலித்தது. மஞ்சுதான். மௌனமாக என் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.

எத்தனையோ வருடங்களாக எங்கள் இருவரின் வம்புகளுக்கும், அரட்டைகளுக்கும், பிரச்சினைகளுக்கும், தீர்வுகளுக்கும் சாட்சியாக இருந்து வரும் நிலவு, இன்று எங்கள் அயர்ச்சி மிகுந்த மௌனத்தையும், அமைதியாகவே பார்த்துக் கொண்டிருந்தது.

சற்று நேரம் கழிந்த பின்னர், என் அருகில் நெருங்கி வாகாக அமர்ந்து கொண்ட மஞ்சு, என் மடியில் தலை வைத்து முகம் புதைத்துக் கொண்டாள். சிறிது நேரத்தில் சூடாக என் புடவையை நனைத்தது மஞ்சுவின் கண்ணீர்.

வாஞ்சையுடன் அவள் முகத்தில் விழுந்த கூந்தலை விலக்கி விட்டுக் கண்களைத் துடைத்து விட்டேன். ஆனால் எதுவும் சொல்லவில்லை. என்ன சொல்வது என்று தெரியவில்லை.

இதோ என் மடியில் படுத்து குழந்தையாய்க் கண்ணீர் விடுகிறாளே மஞ்சு, அவள் அப்படி ஒன்றும் சின்னக் குழந்தை இல்லை. அவளுக்கே ஏழு வயதில் தங்கப் பதுமை மாதிரி ஒரு மகள் இருக்கிறாள். இருந்தாலும், என் பெண்ணை நான் சரியாக வளர்க்கவில்லையோ என்று இப்போதெல்லாம் தோன்றுகிறது.

நானும், அவளும், ஒருவரை ஒருவர் சார்ந்தே வாழப் பழகி விட்டோம். பெண்ணும் மாப்பிள்ளையும் எவ்வளவுதான் சொன்ன போதிலும், நான் அவர்களுடன் வந்து இருக்கச் சம்மதித்தது பெரிய தவறு. ஆனால் அதைக் காலம் கடந்த பின் உணர்ந்து என்ன பயன்? கண்ணுக்குக் கண்ணாய் வளர்த்த என் செல்வ மகளுக்கு என் இறுதிக் காலத்தில் சிரமத்தையும் துன்பத்தையும்தான் தரப் போகிறேன் என்பது என்னவோ உறுதியாகி விட்டது.

இன்று காலையில் டாக்டர் சொன்னதெல்லாம் கனவு போல இருக்கிறது; ஆனால் கனவில்லை என்று என் மடியில் இறங்கும் மஞ்சுவின் கண்ணீர் அறிவிக்கிறது.

அப்படித்தான் இருக்க வேண்டும். எத்தனையோ வருடங்களுக்கு முன்பு அடுக்கடுக்காய் வந்த துன்பங்களைச் சகிக்க முடியாமல், "இறைவா, இந்த இருண்ட காலங்கள் எல்லாம் கனவாகப் போய் விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்", என்று மனம் நொந்து வேண்டிக் கொண்டிருக்கையில், வானில் போய்க் கொண்டிருந்த எந்தத் தேவனோ, "ததாஸ்து", சொல்லி இருக்க வேண்டும்.

என் அம்மா நான் சிறுமியாய் இருந்த போது சொல்லி இருக்கிறார். நினைவுகள் எல்லாம் எப்போதும் நல்லதாகவே இருக்க வேண்டுமாம்; ஏனென்றால் வானத்தில் உலவும் தேவர்கள் எப்போதாவது "ததாஸ்து" என்று சொன்னால், அந்த சமயத்தில் நாம் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறோமோ அது அப்படியே பலித்து விடுமாம்.

"ஏம்மா மஞ்சு, நீ வேண்ணா உள்ள போய் படுத்துக்கோ. நாளைக்கு ஏதோ ஸ்பெஷல் க்ளாஸ் இருக்குன்னியே?", என்றேன். காலேஜில் லெக்சரராக இருக்கிறாள். மடியிலேயே தலை அசைந்தது, "கொஞ்ச நேரம் ஆகட்டும்மா".

அவள் முகத்தைத் திருப்பி, நெற்றியில் முத்தமிட்டேன். மென்மையாக விரல்களால் கூந்தலை வருடி விட்டேன். அழுகை சற்றே அடங்கினாற் போல இருந்தது. சிறு வயதில் இருந்தே அப்படித்தான், எவ்வளவுதான் அழுகையும், ஆத்திரமும் இருந்தாலும், என் கை பட்டவுடன் அமைதியாகி விடுவாள்.

"மஞ்சு, உள்ள போய் படுத்துக்கிறியா? காலைல காலேஜுக்குப் போகணுமே?" என்றேன்.

விருட்டென்று தலை நிமிர்ந்து, "என்னம்மா நீங்க, இப்பத்தானே கேட்டீங்க..." என்று ஆரம்பித்தவள், சட்டென்று அவளே மௌனமானாள்.

"ஆமா, இப்பத்தானே கேட்டேன். ஸாரிடா", என்னும் போது என் கண்கள் குளம் கட்டின.

"அம்மா, ப்ளீஸ்...", என்றவள், என்னை இறுகக் கட்டி, கன்னத்தில் முத்தமிட்டாள்.

"சரிம்மா, நீங்களும் வாங்க, படுக்கலாம்", என்று எழுந்தாள்.

"இல்லடா, நீ போ. நான் கொஞ்ச நேரத்துல வர்றேன்"

"சீக்கிரமா வந்துடுங்க, குட் நைட்"


(தொடரும்)

Friday, July 9, 2010

தனிமை



மலரைத் தொலைத்த இதழாக
வானைத் தொலைத்த நிலவாக
வேரைத் தொலைத்த விழுதாக
என்னைத் தொலைத்தது என்மனது

காற்றில் அலையும் இலையாக
கரை சேராத அலையாக
கனவில் சிக்கிய நினைவாக
கனலில் சிக்கிய தென்மனது

மனிதர்கள் இல்லை; மனங்கள் இல்லை;
உயிர்கள் இல்லை; உணர்வும் இல்லை;
எதுவும் இல்லா ஓரிடத்தில்
தனியாய்த் தீவாய் என்மனது

மனதின் மயக்கம் கலைந்திடுமோ?
மூடிய பனிஇனி விலகிடுமோ?
கண்கள் ஒளியைய்க் கண்டிடுமோ?
கண்ணீர்தான் கடல் சேர்ந்திடுமோ?


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/_f1guy68_/1643679095/sizes/m/

Monday, July 5, 2010

அமைதி




தகிக்கின்ற பூமி
கொதிக்கின்ற பாதை
வெறிக்கின்ற கதிரவன்
எரிக்கின்ற பார்வை

முத்துமுத் தெனவே
முளைத்து முகிழ்த்திடும்
சொத்துக்கள் சேர்ந்தென்னை
சோர்ந்திட வைத்திடும்

ஆயாசம் மேலும் கூடும்
ஆகாயம் போலே நீளும்
நெஞ்சுக்குள் தீயை மூட்டி
நினைவுக்குள் கங்காய்க் காய்க்கும்

முட்களே பாதை போடும்
வலிகளே வாழ்க்கை ஆகும்
கண்ணீரே காயம் ஆற்றும்
குருதியே தாகம் தீர்க்கும்

உள்ளுக்குள் உறையும் நேசம்
உயிரெல்லாம் வாசம் வீசும்
வெந்தாலும் வேதனை இல்லை
குளிர்ந்தாலும் குதூகலம் இல்லை

--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.southshoreyoganetwork.com/db4/00355/southshoreyoganetwork.com/_uimages/lotuspose.bmp