Wednesday, December 23, 2009

நம்பிக்கை
லவ் யூ ப்ரின்சஸ்”

அந்த பொம்மை, நாட்டியம் போல நடந்து வந்து, ரெண்டு கண்ணையும் மூடி மூடித் திறந்துகிட்டே சொல்லவும், மதுவின் முகத்தில் ஆயிரம் வாட் பல்பு போட்டது போல் பிரகாசம்! ரெண்டு கையையும் தட்டி கலகலன்னு சிரிக்கிறா, குழந்தை.

“அண்ணா! பாயு” மழலை மொழியில் சொல்லிக்கிட்டே ராஜாவோட சட்டையைப் பிடிச்சு இழுக்கறா, அவன்கிட்ட காட்டறதுக்கு.

அவன்தான் பாத்துக்கிட்டுதானே இருக்கான்! இது எப்படி சாத்தியம்னு அவனுக்கு ஒண்ணும் புரியல. இவனுக்கே தெரியாம அந்த பொம்மை இப்ப எப்பிடி இங்கே வந்தது? கிறிஸ்மஸ் மரத்துக்கு அடியில இருக்கிற அவனுடைய அன்பளிப்புகளை திறக்கணும்னு கூட தோணாம உட்கார்ந்திருக்கான்.

**

அமெரிக்காவுக்கு வந்ததுல இருந்து அவங்க மாதிரியே கிறிஸ்மஸ் மரம் வச்சு, லைட் போட்டு, அன்பளிப்புகள் பரிமாறிக்கிட்டு, இப்படி ஊரோடு ஒத்து வாழப் பழகிடுச்சு, ராஜாவோட குடும்பமும்.

மது, ராஜாவோட சித்தி பொண்ணு. அவ ஒண்ணரை வயசுக் குழந்தையா இருக்கும் போது, அவளை பாட்டி வீட்டுல விட்டுட்டு ஒரு விழாவுக்கு போன அவ அம்மாவும் அப்பாவும், பொட்டிலதான் திரும்பி வந்தாங்க. அப்ப ராஜாவுக்கு ஏழெட்டு வயசு இருக்கும். மதுவை சட்டப்படி தத்தெடுத்துக்கிட்டாங்க, ராஜாவோட அம்மாவும் அப்பாவும்.

மது மேல ராஜாவுக்கு அலாதி பிரியம். அவளை பூ மாதிரி பாத்துக்குவான். அவளும் அவனை அண்ணா, அண்ணான்னு சொல்லிக்கிட்டு பின்னாடியே சுத்துவா. இப்ப அவளுக்கு 4 வயசு ஆகப் போகுது. இன்னும் மழலை போகலை.

கிறிஸ்மஸ் வந்தாலே அவங்க வீட்டில கொண்டாட்டம் தான். மத்த புள்ளைங்க மாதிரியே கிறிஸ்மஸ் தாத்தாவுக்கு, அது வேணும், இது வேணும்னு ரெண்டு பேரும் பெரிய லிஸ்ட் அனுப்புவாங்க. “நீ நல்ல புள்ளையா இருந்தாதான் கிறிஸ்மஸ் தாத்தா நீ கேட்டதெல்லாம் தருவாரு”, அப்படின்னு சொல்லிச் சொல்லியே புள்ளைங்களை சொல்றது கேக்க வைப்பாங்க பெரியவங்க. புள்ளைங்களும் வருஷம் பூரா இருக்கறதை விட, கிறிஸ்மஸ் நெருங்க நெருங்க, ரொம்ப ஒழுங்கு மரியாதையா இருப்பாங்க!

மதுவுக்கும் சேர்த்து ராஜாவே லிஸ்ட் எழுதுவான். இந்த வருஷம்தான் அவனுக்கு கிறிஸ்மஸ் தாத்தாகிட்ட இருந்த நம்பிக்கை போயிருச்சு. கிறிஸ்மஸ் தாத்தாங்கிறதெல்லாம் சுத்த கட்டுக் கதை, அப்படின்னு தோண ஆரம்பிச்சிருக்கு. அம்மா அப்பாதான் நம்ம கேட்கிறதெல்லாம் நமக்கு தெரியாம வாங்கி வைக்கிறாங்கன்னு யோசனை வந்திருக்கு, அவனுக்கு. அதனால இந்த வருஷம் அவன் லிஸ்டே எழுத வேண்டாம்னு வச்சிட்டான். ஆனா மது ஏமாந்துரக் கூடாதுன்னு, அவளுக்காக மட்டும் எழுதினான்.

மது கேட்ட லிஸ்ட்ல, இந்த பேசற பொம்மைதான் முதல்ல. பிறகுதான் மத்ததெல்லாம்.

இந்த வருஷம் ராஜா, பெரிய பையனாயிட்டான். அப்பாவும் அம்மாவும் வாங்கிட்டு வர்ற அன்பளிப்பை எல்லாம் எங்கே ஒளிச்சு வைக்கிறாங்கன்னு கூட கண்டு பிடிச்சிட்டான்! ஆனா மதுவுடைய லிஸ்டை படிச்சாங்களா இல்லையான்னு மட்டும் அவனால கண்டு பிடிக்க முடியல.

ஏன்னா, மதுவுக்கு வாங்கிட்டு வந்த ப்ரசண்ட்லாம் இவனைத்தான் பாக் பண்ணி கிறிஸ்மஸ் மரத்துக்கிட்ட வைக்க சொன்னாங்க. அப்ப அதுல அந்த பொம்மை இருக்கல. மதுவோட ஏமாற்றத்தை நினைச்சு இவனுக்குத்தான் கவலையா இருந்துச்சு.

இப்ப பார்த்தா கிறிஸ்மஸ் அன்னிக்குக் காலைல இங்கே வந்து உட்கார்ந்திருக்கு அந்த பொம்மை!

**

எல்லா அன்பளிப்புகளையும் எல்லாரும் திறந்து பார்த்து முடிச்சாச்சு. அம்மா மதுவை குளிக்கிறதுக்காக கூட்டிக்கிட்டு போயிட்டாங்க.

“ராஜா, என்ன பலமான யோசனை?” அப்படின்னு கேக்குறாரு அப்பா.

“அப்பா… மதுவோட அந்த பொம்மை…”, அப்படின்னு இழுக்கறான்.

“மது குழந்தை. அவளோட நம்பிக்கையில் எந்த கேள்விக்குறியும் இல்லை. அதான் அவ கேட்டது கிடைச்சிருச்சு”

அப்பா சொன்ன பிறகும் ராஜாவுக்கு குழப்பம் தீர்ந்த பாடில்லை. கிறிஸ்மஸ் தாத்தா உண்மையா, கதையா? என்ன சொல்றார் இந்த அப்பா?

உங்க நம்பிக்கை எப்படி?

--கவிநயா

அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் திருநாள் நல்வாழ்த்துகள்!!


12 comments:

 1. உங்க நம்பிக்கை, என் நம்பிக்கை என்றெல்லாம் பிரித்துப் பார்ப்பதற்கு முன்னால், வாழ்க்கை என்பது நம்பிக்கை அவநம்பிக்கை இப்படி இந்த இரண்டுக்கும் நடுவே பாய்ந்துகொண்டிருக்கிற மின்சாரம் மாதிரி!

  ஸ்ரீ அரவிந்தர் சாவித்திரி மகாகாவியத்தில் சொல்கிற மாதிரி, இந்த மனிதப் பிறவியில் வெளிச்சத்தைப் பார்ப்பதற்கே, இருட்டு வேண்டியிருக்கிறது.

  உண்மையான சுவையை அதற்கு நேர் எதிரான ஒன்றால் தான் தெரிந்துகொள்ள முடிகிறது!

  அறிவால் இது என்ன யோசித்துவிட்டு இப்படி விடை சொல்ல ஆரம்பிக்கும்போதே, நம்பிக்கை என்பது உயிரின் ஒரு தன்மையாகவே இருப்பதையும் உணர முடிகிறது!

  ReplyDelete
 2. //நம்பிக்கை என்பது உயிரின் ஒரு தன்மையாகவே இருப்பதையும் உணர முடிகிறது!//

  இந்த வாசகம் ரொம்ப் பிடிச்சிருக்கு, கிருஷ்ணமூர்த்தி சார்.

  //ஸ்ரீ அரவிந்தர் சாவித்திரி மகாகாவியத்தில் சொல்கிற மாதிரி, இந்த மனிதப் பிறவியில் வெளிச்சத்தைப் பார்ப்பதற்கே, இருட்டு வேண்டியிருக்கிறது.//

  ஆகா. ஆம், இருள் மூடி இருக்கும் போதுதானே ஒளியின் தேவையை உணர்றோம், தேடறோம்?

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி, சார்.

  ReplyDelete
 3. //அப்பா சொன்ன பிறகும் ராஜாவுக்கு குழப்பம் தீர்ந்த பாடில்லை. கிறிஸ்மஸ் தாத்தா உண்மையா, கதையா? என்ன சொல்றார் இந்த அப்பா?

  உங்க நம்பிக்கை எப்படி?//

  *******

  நல்லா எழுதி இருக்கீங்க கவிநயா.

  நம்பிக்கை என்பது தனிமனித சம்பந்தப்பட்டது....

  கிருஷ்ணமூர்த்தி சொன்ன கருத்துக்கள் அருமை... அதை நீங்கள் ஆமோதித்தது உங்களின் மேலுள்ள மதிப்பினை மேலும் கூட்டி விட்டது...

  நம்பிக்கையே வாழ்வின் அஸ்திவாரம்... அதுவே இவ்வுலகிலுள்ள கோடிக்கணக்கானவர்களை முன்னிழுத்து செல்கிறது...

  என்னால் இதை செய்ய முடியும் என்ற நம்பிக்கையே வாழ்வில் பலரை பல பல சாதனைகள் புரிய வைக்கிறது...

  சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் வாழ்வில் நம்பிக்கை வைத்து, தைரியமாக கண்டக்டர் வேலையிலிருந்து சினிமாவிற்கு வந்ததே பின்னாளில் அவர் சூப்பர் ஸ்டார் ஆக வழிவகுத்தது...

  சூப்பர் மெஸேஜ் கவிநயா...

  இது போல நிறைய எழுதுங்க... நேரமிருப்பின் இங்கேயும் வந்து பாருங்க...

  www.jokkiri.blogspot.com

  www.edakumadaku.blogspot.com

  ReplyDelete
 4. சின்னக் கதை மூலம் பெரிய விஷயத்தை யோசிக்க வைக்கிறீர்கள்.

  கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பின்னூட்டமும் நன்று.

  எல்லோருக்கும் கிறுஸ்துமஸ் வாழ்த்துகக்ள்.

  ReplyDelete
 5. //நம்பிக்கை என்பது தனிமனித சம்பந்தப்பட்டது....//

  உண்மைதான், கோபி. ஆனால் இது பதிலை எதிர்பார்த்து வைக்கப்பட்ட கேள்வி அல்ல. அவரவர் தனக்குள் தானே பார்த்துக் கொள்ள ஒரு தூண்டுகோல். அவ்வளவே.

  தன்னம்பிக்கை பற்றி நீங்கள் சொல்லியிருப்பவையும் உண்மையே.

  //நேரமிருப்பின் இங்கேயும் வந்து பாருங்க...//

  கண்டிப்பா வரேன்!

  வெகு நாள் கழித்து உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி கோபி.

  ReplyDelete
 6. வாங்க ராமலக்ஷ்மி. வாசிப்புக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 7. படத்தை மட்டும் பார்த்திருக்கேன் அக்கா. ரெண்டு குழந்தைகளுக்கும் இந்த படம் ரொம்ப பிடித்துவிட்டது. பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். :-)

  ReplyDelete
 8. //குமரன் (Kumaran) said...

  படத்தை மட்டும் பார்த்திருக்கேன் அக்கா. ரெண்டு குழந்தைகளுக்கும் இந்த படம் ரொம்ப பிடித்துவிட்டது. பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். :-)//

  அது சரி :) குட்டீஸ்க்கு அன்பான வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. காலம் காலமாகத் தொடரும் நம்பிக்கை வாழ்க. இது தான் குழந்தைகளுக்கு பேரானந்தம்.

  ReplyDelete
 10. வாருங்கள் ஜெஸ்வந்தி. நன்றி :)

  ReplyDelete
 11. அன்னிக்கு படத்தைப் பார்த்துட்டுப் போனதோட சரி. இன்னிக்குத் தான் கதையைப் படிக்க முடிஞ்சது.

  எங்க வீட்டுல சேந்தனுக்கு தாடி வச்ச தாத்தா எல்லாருமே சான்டா தான். நேத்து கூட மால் அஃப் அமெரிக்காவுல ஒரு தாத்தா அவனுக்கு கையாட்டுனப்ப 'சான்டா கையாட்டிக் காமிச்சாரு'ன்னு சொன்னான். அவனுக்கு சான்டா வருஷாவருஷம் சாக்லேட் கொண்டு வந்து குடுப்பாரு. தேஜஸ்வினி கொஞ்சம் பெரிய பொண்ணா ஆனதுனால கடையில இருக்குற சான்டா எல்லாம் வேஷம் போட்ட சான்டா; உண்மையான சான்டா வடதுருவத்துல இருந்து கிருஸ்துமஸ் ராத்திரி மட்டும் தான் வருவாருன்னு சொல்லிக்கிட்டு இருக்கா. வருஷம் பூராவும், டிசம்பர்ல கூட அவ சொன்ன பேச்சு கேக்கலை; அதனால அவளுக்கு எதுவும் சான்டா கொண்டு வந்து கொடுக்க மாட்டார்ன்னு நினைச்சுக்கிட்டு இருந்தா. அவளுக்கும் சாக்லேட் மட்டும் கிடைச்சது; கூட ஒரு கடிதமும் சான்டாகிட்ட இருந்து. அடுத்த வருடம் பெரியவங்க சொன்ன பேச்சு கேட்டா அவ கேக்குறது கிடைக்கும்ன்னு. ஏதோ சான்டா அவ மேல கோபம் இல்லாம சாக்லேட்டாவது குடுத்தாரேன்னு அவளுக்கு சந்தோஷம். ஆனா இன்னும் சொன்ன பேச்சு மட்டும் கேக்குறதில்லை. :-)

  ReplyDelete
 12. உங்க குட்டீஸ் ரெண்டும் ச்சோ ச்வீட் குமரன் :)

  //ஏதோ சான்டா அவ மேல கோபம் இல்லாம சாக்லேட்டாவது குடுத்தாரேன்னு அவளுக்கு சந்தோஷம்.//

  இப்படி ஏமாத்தலாமா புள்ளய? :)

  //ஆனா இன்னும் சொன்ன பேச்சு மட்டும் கேக்குறதில்லை. :-)//

  நீங்கதான் அவ கேக்குற மாதிரி சொல்றதில்லையாம்! :)

  மறக்காம மறுபடி வந்து கதை வாசிச்சதுக்கு நன்றி!

  ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)