Sunday, December 6, 2009

நான் பேச நினைப்பதெல்லாம்...

நம்ப முடியவில்லை.

என்றைக்கும் இல்லாத அதிசயமாக இராத்திரி சாப்பாடு, வெற்றிலை மடிப்பெல்லாம் முடிந்த பிறகு, “என்னங்க, நான் இன்னிக்கு உங்க மடியில படுத்துக்கணும்”, என்றாள் மீனு என்கிற மீனலோசனி, அவளுக்கே உரித்தான மெல்லிய குரலில்.

“வாவா… படுத்துக்கயேன். இதெல்லாம் கேட்கணுமா என்ன?”, குறும்புச் சிரிப்புடன் அவள் படுப்பதற்கு வாகாக நகர்ந்து உட்கார்ந்து கொண்டார், சுந்தரம் என்கிற சோமசுந்தரம்.

பதிலுக்கு, சுருக்கம் நிறைந்திருந்தாலும், யாரையும் இன்னும் சற்றே நின்று திரும்பிப் பார்க்க வைக்கும் அழகிய அவள் முகம், வழக்கம் போல் வெட்கத்தில் சிவக்கவில்லை என்பதைக் கவனித்தார். “என்னம்மா ஆச்சு?”, கனிவுடன் புறப்பட்ட கேள்விக்கு,

“ஒண்ணுமில்லைங்க”, என்று இலேசாக புன்னகைத்தபடி, அவருடைய கையை எடுத்து கன்னத்தில் வைத்துக் கொண்டாள். அவள் விழிகளில் அவருக்கான அன்பு பொங்கித் ததும்பிக் கொண்டிருந்தது.

அவள் நெற்றி முடியை கவனமாக ஒதுக்கி விட்டு, இலேசாக அங்கே அவர் இதழ் பதித்த போதுதான்… அவளுடைய இதழ்களில் வழிந்த புன்னகையும், கண்களில் வழிந்த அபரிமிதமான அன்பும், அப்படியே உறைந்து விட்டிருந்ததை உணர்ந்தார்.

சுவாசம் நின்றதே தெரியாமல் நின்று விட்டிருந்தது.

அவள் கைக்குள் சிறைப்பட்டிருந்த தன் கையை விடுவிக்கும் எண்ணம் கூட இல்லாமல், அதிர்ச்சியில் தானும் உறைந்து, அப்படியே உட்கார்ந்திருந்தார், சுந்தரம்.

“மீனு… மீனு… என்னைப் பாரம்மா”, கன்னத்தில் தட்டியும், அவளை உலுக்கியும் பார்த்தார், பயனில்லை என்று மனம் சொன்ன போதும்.

“ஏன், எப்படி, இதுவும் சாத்தியமா…”, மடியில் கிடக்கும் அவளை பார்த்துக் கொண்டே எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தாரோ அவருக்கே தெரியாது. உலகம் சட்டென்று இருண்டு விட்டால் இப்படித்தான் இருக்குமோ? கண்ணை கறுப்புத் துணியால் கட்டி, அடர்ந்த காட்டுக்குள் தனியே விட்டு விட்டால் இப்படித்தான் இருக்குமோ? நம்மைத் தவிர ஏனைய உலகனைத்தும் உறைந்து விட்டாலும் இப்படித்தான் இருக்கும் போலும்.

மீனு… மீனலோசனி… அவளுடைய அழகிய விழிகள் இன்னும் திறந்தேதான் இருந்தன, அவர் முகத்தைக் காதலுடன் பார்த்த வண்ணம். அவற்றை மூட அவருக்கு இன்னும் மனம் வரவில்லை. அவருடன் அவள் பகிர்ந்து கொண்ட வாழ்வின் மகிழ்வுக்குச் சான்றாக இறுதி நொடியிலும் அன்பு ததும்பும் அந்தக் கண்கள்…

**

இருவருக்கும் திருமணம் ஆன போது எல்லோரும் மறக்காமல் சொன்ன விஷயங்களில், “பாருங்களேன், பெயர் பொருத்தம் கூட எத்தனை கச்சிதமா அமைஞ்சிருக்குன்னு!”, என்பதும் ஒன்று. மீனுவின் அழகுக்கு ஏற்பத்தான் இருந்தார் சுந்தரமும். வாட்ட சாட்டமாக, அவளை விட சற்றே உயரமாக, கருகருவென்ற சுருட்டை முடியுடன். யார் கண்ணும் பட்டு விடக் கூடாதென்று மீனுவின் அம்மா வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இவர்களை ஒன்றாக உட்கார வைத்து திருஷ்டி சுற்றிப் போடுவார். முதலில் அவர்களுக்கு மட்டும். பிறகு அவர்கள் குழந்தைகளையும் சேர்த்து.

அன்னியோன்யத் தாம்பத்யத்திற்கு இவர்களைத் தான் ஊரே உதாரணமாகக் கொண்டது. சின்னச் சின்னப் பூசல்களும், பொருளாதார நெருக்கடிகளும், இவர்கள் அன்புக்கும், நெருக்கத்திற்கும் உரம்தான் இட்டன. ராம லட்சுமணர்கள் போன்ற இரு பிள்ளைகளையும் ஒண்டுக் குடித்தனத்தில் இருந்து கொண்டே சிரமப்பட்டு படிக்க வைத்தனர். அவர்களும் இப்போது நல்ல வேலையில், மனைவி, ஆளுக்கொரு பிள்ளை என்று நன்றாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள்தான் அப்பா அம்மாவிற்கு பார்த்து பார்த்து இந்த வீட்டைக் கட்டித் தந்தார்கள். இப்போது நினைத்துப் பார்க்கையில் வாழ்க்கை நிறைவாகத்தான் தெரிந்தது. பட்ட கஷ்டங்கள் எதுவும் நினைவுக்கு வரவில்லை.

ஒரு முறை அவர்கள் உறவினர் ஒருவரின் இறப்புக்குச் சென்றிருந்தார்கள். அந்த பெண்மணிக்கு இரண்டும் சின்னக் குழந்தைகள். தன் கணவர் எங்கே என்ன, சொத்து வைத்திருக்கிறாரா, கடன் வைத்திருக்கிறாரா, அவர் நடத்தி வந்த மருந்துக் கடையின் நிலைமை என்ன, இப்படி ஒன்றுமே தெரியவில்லை, அவர் மனைவிக்கு.

“பாவம், அவளை உள்ளங்கையில் வச்சுத் தாங்கினான். அவளுக்கு தொந்தரவு வேண்டாமுன்னு பண வெவகாரமெல்லாம் அவ காதுக்கு போகாம பாத்துகிட்டான். இப்படி அல்ப ஆயுசில போவம்னு தெரியுமா என்ன?”, என்று அங்கலாய்த்தாள், இறந்தவனின் அத்தைக்காரி ஒருத்தி.

அதிலிருந்து சுந்தரத்துக்கு ஒரு உறுதி. மீனுவிற்கு தெரியாமல் எதுவுமே செய்வதில்லை அவர். அவளை கலந்து பேசித்தான் ஒவ்வொரு சேமிப்பும், செலவும், எதுவுமே நடக்கும். தான் திடீரென்று போய் விட்டால் அந்தப் பெண்மணியைப் போல மீனு கஷ்டப் படக் கூடாது. அதை அவரால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

அதே போலத்தான், “குளிச்சுத் துவட்டிக்க துண்டு வேணும்னா கூட பொண்டாட்டிதான் எடுத்துத் தர வேண்டியிருந்தது. இப்ப அவ பொசுக்குன்னு போயிட்டா. இவருக்கு இனிமே கஷ்டம்தான் பாவம்”, என்பது போன்ற உரையாடலையும் கேட்டிருக்கிறார். இதெல்லாம் பேச்சுக்கு மட்டும்தான் அழகாக இருக்கும் என்பதை உணர்ந்திருந்தார். அதனாலேயே தன் வேலைகளை அவர் தானேதான் செய்து கொள்வார்.

சனி ஞாயிறு வந்தாலே அவர்கள் வீட்டில் கொண்டாட்டம்தான். ஞாயிறு அன்றைக்கு மீனுவிற்கு கட்டாய ஓய்வு! அப்பாவும் பிள்ளைகளும்தான் அடுக்களை ஆட்சி அன்று! அன்று பூராவும் அவளை விரலைக் கூட அசைக்க விடாமல் மகாராணியைப் போல அப்படி கவனிப்பார்கள்!

மீனுவும் சொக்கத் தங்கம். பொறுமையின் சிகரம். அது வேண்டும் இது வேண்டும் என்று மற்ற பெண்கள் மாதிரி எந்த ஆசையும் கிடையாது அவளுக்கு. சில சமயம் இவள் வாயைத் திறந்து ஏதாவது கேட்க மாட்டாளா என்று கூட இருக்கும் சுந்தரத்திற்கு! அன்பு மீறி என்றைக்காவது, “மீனு, உனக்கு ஏதாச்சும் செய்யணும் போல இருக்கு. என்ன வேணும் சொல்லேன்”, என்று சுந்தரம் கேட்டு விட்டால்,

“எனக்கென்னங்க பெரிசா ஆசை இருக்கு? சாகும் போது உங்க மடில படுத்து சாகணும். என்னோட ஒரே ஆசை அதுதான்”, என்பாள்.

“என்னம்மா. எப்பக் கேட்டாலும் இதையே சொல்றே? உனக்கு முன்னாடி நான் போய்ச் சேரப் போறேன் பாரு. எனக்குத்தான் கொலஸ்ட்ரால், சர்க்கரை, இரத்த அழுத்தம், அப்படி இப்படின்னு எமனுக்குப் பிடிச்ச எல்லாம் இருக்கு”, என்று அவர் சொல்லி முடிக்கும் முன், மென்மையாக ஆனால் உறுதியாக அவர் வாயை மூடுவாள். கண்கள் கலங்கி விடும்.

இப்போது இதெல்லாம் நினைவுக்கு வர, அவர் கண்களில் இருந்தும் கண்ணீர் வழிந்து அவள் முகத்தை நனைத்தது.

“உன்னுடைய ஒரே ஒரு ஆசையும் நிறைவேறி விட்டதடி. அந்த இறைவனுக்கு நன்றி”, என்று சொல்லி, அவள் விழிகளில் மென்மையாக முத்தமிட்டார்.

“மீனு… ரொம்ப அசதியா இருக்கம்மா. ஒரு அரை மணி நேரம் படுத்திருந்திட்டு, பிறகு பிள்ளைகளைக் கூப்பிடறேன்”, என்ற வண்ணம் அவளை பூப்போல எடுத்து தலையணையில் படுக்க வைத்தார். அவள் கைகளை இறுகப் பிடித்தபடி பக்கத்தில் வழக்கம்போல் படுத்துக் கண்களை மூடிக் கொண்டார்.

நாளை? என்ற நினைப்பே அதற்கு மேல் ஓடவில்லை.

**
மறு நாள் காலை வேலைக்கு வந்த கற்பகம், அழைப்பு மணியை அழுத்தி அழுத்திப் பார்த்து விட்டு, இப்போது கதவுகளை பலமாகத் தட்ட ஆரம்பித்திருக்கிறாள்.


--கவிநயா

பி.கு. : இந்தக் கதை இளமை விகடனிலும்...

16 comments:

 1. அழகான கதை. உருக்கமான முடிவென்றாலும் உள்ளத்தைத் தொட்டது தம்பதியரின் அன்பும் அவர்களது ஆசை நிறைவேறிய விதமும்.

  இளமை விகடனில் முன்பே வாசித்திருந்தேன். வாழ்த்துக்கள் கவிநயா.

  ReplyDelete
 2. இந்த தம்பதிக்கு திருஷ்டி சுத்தி போட வேண்டியது தான். என்ன ஒரு அருமையான தாம்பத்யம்! முடிவின் சோகத்தை ஊடுருவி ஏதோ ஒரு நிறைவு. சூப்பர்!

  ReplyDelete
 3. அங்கேயும் இங்கேயும் வாசித்து பின்னூட்டிய அன்பிற்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி :)

  ReplyDelete
 4. //அருமை !//

  நன்றி கோபி!

  ReplyDelete
 5. //முடிவின் சோகத்தை ஊடுருவி ஏதோ ஒரு நிறைவு. சூப்பர்!//

  உங்களுக்கு பிடித்திருப்பது பற்றி மிக்க மகிழ்ச்சி மீனா. மிக்க நன்றி :)

  ReplyDelete
 6. //தியாவின் பேனா said...

  வாழ்த்துகள்//

  முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 7. இயல்பான நடையில் ஒரு நல்ல கதை படித்த திருப்தி. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. கதை முடிவு சோகமாக இருந்தாலும் தம்பதிகளின் அன்பான வாழ்க்கை மனத்தில் நிற்கிறது.

  ReplyDelete
 9. //இயல்பான நடையில் ஒரு நல்ல கதை படித்த திருப்தி. வாழ்த்துக்கள்.//

  முதல் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி, பூங்குன்றன்.

  ReplyDelete
 10. //கதை முடிவு சோகமாக இருந்தாலும் தம்பதிகளின் அன்பான வாழ்க்கை மனத்தில் நிற்கிறது.//

  நன்றி மாதேவி!

  ReplyDelete
 11. அழகான கதை!அப்புறம் மத்ததும் படிச்சுட்டேன். பின்னூட்டம் போடலை.

  ReplyDelete
 12. வாங்க திவாஜி. நீங்க வாசிப்பதே மகிழ்ச்சி :) மிக்க நன்றி.

  ReplyDelete
 13. வாவ். என்ன சொல்றதுன்னு தெரியலை அக்கா. பேச நினைப்பதெல்லாம் எழுத்தில் வந்துவிட்டது போல.

  ReplyDelete
 14. //வாவ். என்ன சொல்றதுன்னு தெரியலை அக்கா. பேச நினைப்பதெல்லாம் எழுத்தில் வந்துவிட்டது போல.//

  வருக குமரன் :) இப்படி ஒரு ideal வாழ்க்கை இருந்தா எப்படி இருக்கும்னு நினைச்சு பார்த்ததன் விளைவு :) வாசிப்புக்கு நன்றி.

  ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)