Sunday, November 29, 2009

யார் இந்தக் குழந்தை?


இன்றைக்கு இங்கே ஏதோ விசேஷம் போலும். இந்த இடமே எத்தனை குதூகலமாக இருக்கிறது! வாருங்கள், நாமும் கொஞ்சம் வேடிக்கை பார்ர்கலாம்!

நேற்று வரை பசேலென்று மட்டுமே இருந்த மரங்களெல்லாம் இன்று பூத்துக் குலுங்குகின்றன. புள்ளிமான் குட்டிகள் புதர்ச் செடிகளின் பின்னால் ஒளிந்து கொண்டு தம் தாய் மான்களுடன் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கின்றன!

கருங்குயில்கள் யாரையோ எதிர்பார்ப்பது போல் வரவேற்பு கீதம் பாடுகின்றன. மூங்கில்களின் துளைகளில் புகுந்து புறப்படும் காற்று அதற்கேற்ப கானம் இசைக்கிறது. எப்போதும் மென்மையாகத் தவழும் தென்றல் கூட இன்று சற்றே அதிகமான துள்ளலுடன் ஜதி போடுகின்றது.

மயில்கள் “என்னைப் பார் என்னழகைப் பார்” என்று தம் பெரிய தோகைகளை ஒய்யாரமாக அசைத்து நடனம் புரிகின்றன. சின்னஞ்சிறு அணிற் பிள்ளைகளும், வெள்ளை வெளேர் முயல் குட்டிகளும், தம் கருகரு கண்களை அகல விரித்து, அந்த நடனத்தைக் கண்டு களித்துக் கொண்டிருக்கின்றன!

அதோ, அந்தப் பொய்கையில் நேற்று வரை அமைதியாகத் தளும்பிக் கொண்டிருந்த தண்ணீர், இன்றைக்கு எதனாலோ பூரிப்பு தாங்காமல் சளசளத்துக் கொண்டிருக்கிறது!

அதோ… கங்காதேவி பாய்ந்து வருகிறாள். அவளுடைய நீண்ட கரங்களில் எதையோ தாங்கி வருகிறாள். ஆம், செஞ்சடையானின் நெற்றிக் கண்ணிலிருந்து உதித்த நெருப்புச் சுடர்களைத்தான் ஏந்தி வருகிறாள். அவளாலேயே அவற்றின் வெம்மையைத் தாங்க முடியவில்லை போலும். வந்த வேகத்தில் நெருப்புச் சுடர்களை அதற்காகவே காத்திருக்கும் நமது பொய்கையில் விடுகிறாள்.

அழகான ஆறு தாமரை மலர்கள் மலர்ந்து மகிழ்ந்து அவற்றைக் குழந்தைகளாய் வாங்கிக் கொள்கின்றன!

அந்தக் குழந்தைகள்தான் எவ்வளவு அழகு!

ஒரு குழந்தை தன் சின்ன முகத்தைச் சுளுக்கிக் கொண்டு அழுகிறது.

ஒன்று ஈறுகள் தெரிய கலகலவெனச் சிரிக்கிறது.

மற்றொரு குழந்தை கட்டை விரலை வாயில் வைத்து சுவாரஸ்யமாகச் சூப்புகின்றது.

இன்னொரு குழந்தை தான் படுத்திருக்கும் தாமரை மலரின் இதழை இழுத்து விளையாடுகிறது.

மற்றுமொரு குழந்தை தன்னுடைய கருகமணி விழிகளைச் சுழற்றி, மான் கூட்டங்களையும் மயில் ஆட்டங்களையும் வேடிக்கை பார்க்கிறது.

ஆறாவது குழந்தையோ தியானத்தில் ஆழ்ந்து விட்டது போல அமைதியாக இருக்கிறது.

கார்த்திகைப் பெண்கள் ஆசையுடன் வளர்க்கும் அந்த ஆறு குழந்தைகளையும் அன்னை பராசக்தி கண்டதும், அவற்றின் மீது அன்பு மீற, ஒன்றாகச் சேர்த்து அரவணைத்துக் கொள்கிறாள்.

அந்தக் குழந்தைக்கு உகந்த நாளான இன்று நாமும் அவனை மனமார வாழ்த்துவோம்!


முருகா போற்றி கந்தா போற்றி!
முத்தமிழ் தந்த குமரா போற்றி!

அழகா போற்றி அமுதா போற்றி!
பழகிய திருக்கை வேலா போற்றி!

முக்கண் முதல்வன் மைந்தா போற்றி!
நெற்றிக் கண்ணில் பிறந்தாய் போற்றி!

பித்தன் பெற்ற முத்தே போற்றி!
சித்தம் நிறைந்த செவ்வேள் போற்றி!

ஆனை முகனின் இளையோய் போற்றி!
ஆறு முகங்கள் கொண்டாய் போற்றி!

மாலவனின் எழில் மருகா போற்றி!
வேலெடுத்து வினை களைவாய் போற்றி!

சக்தியின் கரங்களில் தவழ்ந்தாய் போற்றி!
அத்தனுக் கரும்பொருள் சொன்னாய் போற்றி!

பக்தியிற் சிறந்தோற் கருள்வாய் போற்றி!
நித்தமும் உன்பதம் பணிந்தோம் போற்றி!!


--கவிநயா

பி.கு.: "நினைவின் விளிம்பில் உலவும் நேரம்" நாளை மறு நாள் தொடரும் :)

படத்துக்கு நன்றி: http://murugan.org/gallery/kanda_puranam/images/kp_02.jpg

20 comments:

 1. தமிழ் கடவுள் பிறந்த கதையை சொல்லுகையில் தமிழும் தென்றலெனத் தவழ்ந்து விளையாடி இருக்கிறது. அருமையான இடுகை. எல்லோருக்கும் அந்த முருகன் அருள் கிடைக்கட்டும். நன்றி கவிநயா.

  ReplyDelete
 2. நல்லா ரசிச்சு எழுதியிருக்கீங்க, கவி...
  நல்லாயிருக்கு...

  ஆமா.. நினைவின் விளிம்பில் உலவும் நேரம் - பார்ட் 2 எங்கே..?

  ReplyDelete
 3. கார்த்திகையின் கார்த்திகையையொட்டி கார்த்திகை பெண்களால் தாலாட்டப்பட்ட கார்ஹ்திகேயனின் பாடல் அருமை கவிநயா.

  இனிய கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. அழகன் முருகன் ஆடி வந்த பாடல்
  தமிழும் முருகும் கலந்து இனிமை தந்த இடுகை.
  வந்துவிட்டான் கார்த்திகேயன்
  கவிநயாவின் கவிதை வரிகளில் .
  அனைவருக்கும் கார்த்திகைத் திரு நாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. அப்பனுக் கரும்பொருள் சொன்னாய் போற்றி!

  அழகான வர்ணிப்பைத் தொடர்ந்து, அத்தனை
  போற்றிகளும் அற்புதமாக இருந்தது.. தொடர்ந்து 'போற்றி'களை இன்னும் எழுதிக் கொண்டே போகலாம் போலவுமிருக்கிறது.. எங்கேயாவது
  நிறுத்தித்தானே ஆகவேண்டும்?.. அதனால் தான் முற்றுப்புள்ளி போலும்.

  கார்த்திகை தீப வாழ்த்துக்கள், கவிநயா!

  ReplyDelete
 6. //தமிழ் கடவுள் பிறந்த கதையை சொல்லுகையில் தமிழும் தென்றலெனத் தவழ்ந்து விளையாடி இருக்கிறது.//

  ரசித்தமைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

  //எல்லோருக்கும் அந்த முருகன் அருள் கிடைக்கட்டும்.//

  ததாஸ்து! :)

  ReplyDelete
 7. //நல்லா ரசிச்சு எழுதியிருக்கீங்க, கவி...
  நல்லாயிருக்கு...//

  நன்றி ஸ்வர்ணரேக்கா.

  //ஆமா.. நினைவின் விளிம்பில் உலவும் நேரம் - பார்ட் 2 எங்கே..?//

  இன்னும் ஒரு நாள் பொறுங்க! (நீங்க இப்படி கேட்டோன்ன 'குளுகுளு'ன்னு இருந்துச்சு :)

  ReplyDelete
 8. //கார்த்திகையின் கார்த்திகையையொட்டி கார்த்திகை பெண்களால் தாலாட்டப்பட்ட கார்ஹ்திகேயனின் பாடல் அருமை கவிநயா.

  இனிய கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றி கைலாஷி. உங்களுக்கும் கார்த்திகை திருநாள் வாழ்த்துகள்!

  ReplyDelete
 9. //அப்பனுக் கரும்பொருள் சொன்னாய் போற்றி!//

  ஆம் ஜீவி ஐயா! இப்படி எழுதினாலும் சரியாதான் இருந்திருக்கும். நான் எழுதும்போது அபிராமி அந்தாதி மனசில் ஓடிக்கிட்டிருந்தது - 'அத்தர் சித்தம் எல்லாம் குழைக்கும்' - 'அத்தன்' அப்படின்னாலும் தந்தை, அல்லது சிவனைக் குறிக்கும்னு படிச்சிருக்கேன், அதைத்தான் இங்கே பயன்படுத்தினேன்.

  //அழகான வர்ணிப்பைத் தொடர்ந்து, அத்தனை
  போற்றிகளும் அற்புதமாக இருந்தது..//

  மிக்க நன்றி ஐயா.

  //தொடர்ந்து 'போற்றி'களை இன்னும் எழுதிக் கொண்டே போகலாம் போலவுமிருக்கிறது..//

  பல சமயங்களில் நாடி பிடித்தாற் போல, கூட இருந்து பார்த்தாற் போல, நீங்க சொல்கிற விஷயங்கள் என்னை ஆச்சர்யப் பட வைக்கும் :)அதே போலத்தான் இதுவும். இதை எழுதும் போதே நினைச்சேன், முருகனுக்கு போற்றி எழுதறது எவ்வளவு இயல்பாவும் சுலபமாவும் இருக்குன்னு! அதையே நீங்களும்...

  //கார்த்திகை தீப வாழ்த்துக்கள், கவிநயா!//

  உங்களுக்கும்!

  ReplyDelete
 10. //அழகன் முருகன் ஆடி வந்த பாடல்
  தமிழும் முருகும் கலந்து இனிமை தந்த இடுகை.
  வந்துவிட்டான் கார்த்திகேயன்
  கவிநயாவின் கவிதை வரிகளில் .//

  உங்கள் பின்னூட்டமும் கவிதையாக இருக்கு வல்லிம்மா. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

  //அனைவருக்கும் கார்த்திகைத் திரு நாள் வாழ்த்துகள்.//

  உங்களுக்கும் அம்மா!

  ReplyDelete
 11. கார்த்திகைத் திருநாளின் இனிய நினைவுகளில் அழகன் முருகனின் கவிதை அருமை.

  ReplyDelete
 12. //கார்த்திகைத் திருநாளின் இனிய நினைவுகளில் அழகன் முருகனின் கவிதை அருமை.//

  மிக்க நன்றி மாதேவி!

  ReplyDelete
 13. //முருகனுக்கு போற்றி எழுதறது எவ்வளவு இயல்பாவும் சுலபமாவும் இருக்குன்னு//

  சின்ன முகம் காட்டி அழுதாய் போற்றி
  ஈறுகள் தெரிய சிரித்தாய் போற்றி
  கட்டை விரல் சூப்பினாய் போற்றி
  தாமரை இதழ் இழுத்தாய் போற்றி
  மானாட மயிலாட பார்த்தாய் போற்றி
  தியானத்தில் ஆழ்ந்தாய் போற்றி

  போற்றி எழுதுவது சுலபமில்லை. ஆறு குழந்தைகளையும் நீங்கள் வர்ணித்த வார்த்தைகளை கொண்டே சும்மா எழுதினேன்.

  என்னை மன்னிப்பாய் போற்றி

  ReplyDelete
 14. இனிய நடையில் அருமையான இடுகை. நன்றிங்கோ!

  ReplyDelete
 15. http://www.youtube.com/watch?v=CCsEbcLd8_o

  ReplyDelete
 16. //போற்றி எழுதுவது சுலபமில்லை. ஆறு குழந்தைகளையும் நீங்கள் வர்ணித்த வார்த்தைகளை கொண்டே சும்மா எழுதினேன்.//

  சும்மா எழுதினதே அருமையா இருக்கு. போற்றி எழுதினா முருகன் ஆசீர்வதிப்பான். எதுக்கு மன்னிப்பு? :)

  முதல் வருகைக்கு மிக்க நன்றி சகாதேவன் ஐயா.

  ReplyDelete
 17. //இனிய நடையில் அருமையான இடுகை. நன்றிங்கோ!//

  அடேடே ,மௌலிக்கு இந்தப் பக்கம் வரக்கூட வழி தெரிஞ்சிருக்கே? :)

  வருகைக்கு நன்றி மௌலி.

  ReplyDelete
 18. போற்றி அருமையா இருக்கு சுப்பு தாத்தா! படங்களெல்லாம் கண்ணையும் மனசையும் பறிக்கின்றன. எப்படித்தான் கிடைக்குதோ, உங்களுக்கு?

  மிக்க நன்றி!

  ReplyDelete
 19. கார்த்திகையிலும் முருகன் பிறந்தானா? அருமை அக்கா. நான் வந்து படிப்பதற்குத் தான் மார்கழி ஆகிவிட்டது. :-(

  வைகாசியிலும் இதே போல் ஒரு பாடலை எழுதுங்கள்.

  ReplyDelete
 20. //கார்த்திகையிலும் முருகன் பிறந்தானா? அருமை அக்கா.//

  ஆமாம், திருக்கார்த்திகைன்னா நியாயமா அடிமுடி இல்லாத அண்ணாமலையான் தான் நினைவு வரணும். எனக்கென்னவோ முருகன்னு மனசில் பதிஞ்சிட்டுது. அதான் அப்படி :) ரசிச்சதுக்கு நன்றி குமரன் :)

  //வைகாசியிலும் இதே போல் ஒரு பாடலை எழுதுங்கள்.//

  கண்டிப்பா... அதாவது அவன் எழுத வச்சா... :)

  //நான் வந்து படிப்பதற்குத் தான் மார்கழி ஆகிவிட்டது. :-(//

  அதனால என்ன? நீங்க எப்படியும் வாசிப்பீங்கன்னு தெரியும் :) அதுவே போதும் :)

  ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)