Saturday, November 21, 2009

பிறப்பும், இறப்பும், நடுவில் நாம் இருக்கும் இருப்பும்…

நாம் ஏன் பிறந்தோம்? வாழ்க்கை ஏன் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கு? நல்லவர்களாக இருக்கிறவங்க துன்பப் படறாங்க. கெட்டவர்களாக இருக்கிறவங்க சுகமா வாழறாங்க. பக்தர்களா இருக்கவங்க நிறைய சோதனைகளை அனுபவிக்கிறாங்க. ஏன் இப்படி? இந்த உலகத்தில் நடக்கிறதெல்லாம் முன்னுக்குப் பின் முரணாகவே இருக்கே?

இந்த மாதிரி கேள்விகள் நம்மில் பலருக்கு அவ்வப்போதோ, அடிக்கடியோ தோணறதுதான். நமக்கு மட்டும் இல்லை; காலம் காலமா சித்தர்களும், ஞானிகளும், பக்தர்களும், பலரும், விடை தேடுகிற கேள்விகள்தான்.

குறிப்பா இறப்பை, அதுவும் அகால மரணங்களை நம்மால ஜீரணிக்க முடியறதில்லை. சின்ன வயசில் ஏதோ ஒரு காரணத்தால் பிள்ளைகள் இறந்து விடும்போது, பெற்றோர் மட்டுமல்ல, மற்றோராலும் அதை ஒப்புக் கொள்ள முடியறதில்லை. இது என்ன கொடுமை? அந்தப் பிள்ளை என்ன பாவம் செய்தது? இப்படிப் பட்ட கேள்விகள் மீண்டும் மீண்டும் முளைத்துக் கொண்டே இருக்கின்றன.

ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கையை உதாரணமா எடுத்துக்கலாம். அவர் சாதாரண மனிதரில்லை, அவர் இறைவனின் அவதாரம் ஒன்று என்று நம்புகிறவர்கள் இருக்காங்க. அப்படியே அவர் சாதாரண மனிதராகவே இருந்தாலும், அவர் பெரிய மகான் என்பதை மறுக்க முடியாது. அவர் இறைவனை உணர்ந்து அறிந்தவர். Realized soul. அப்படிப்பட்டவருக்கு ஏன் தொண்டையில் புற்று நோய் வரணும்? சாதாரண மனுஷங்களைப் போல அவர் ஏன் வலியினாலும் வேதனையாலும் துன்பப்படணும்?

இறைவனைப் பற்றியபடி எப்படி உலகில் வாழ்வது என்று மனிதருக்கு காட்டுவதற்காகவே பிறந்தவர் குருஜி. பிறவி எடுத்த பிறகு யாராக இருந்தாலும் துன்பத்திலிருந்து தப்பிக்க முடியாது என்று உணர்த்துவதற்காகவே அவர் அத்தகைய கொடிய புற்று நோயை ஏற்றுக் கொண்டு, அந்த வேதனையை அனுபவித்ததாகச் சொல்லுவர். அவருக்கே அந்த நிலைமைன்னா, நாமெல்லாம் எந்த மூலைக்கு?

துன்பங்களிலிருந்து விடுதலை பெற, அல்லது அவற்றைத் தாங்கிக் கொள்ள, நமக்கு உதவி செய்யும் ஒரே வழி, நான் கற்றுக் கொண்ட வழி, இறைவனை விடாப்பிடியாகப் பற்றிக் கொள்ளுதல்தான். அவனைத் தவிர இந்த உலகில் எதுவுமே நிரந்தரமில்லை.

‘second wind’ அப்படின்னு சொல்லுவாங்க. மலை ஏறும்போதோ அல்லது ஏதோ ஒரு களைப்பு தரும் செயலைச் செய்யும்போதோ, இதுக்கு மேல முடியாதுங்கிற அளவு களைப்பு ஏற்படும். அதை மீறி ஒரு பிரயத்தனம் செய்துட்டோம்னா, மறுபடியும் புதுசா ஆரம்பிக்கிறாப்போல ஒரு சக்தி கிடைக்கும்.

இது நம்முடைய இறை நம்பிக்கைக்கும் பொருந்தும். துன்பம் எல்லை மீறும்போது மனசு விட்டுப் போவதும், நம்பிக்கை இற்றுப் போவதும் இயற்கை. எவ்வளவோ பூஜை செய்து, பரிகாரங்கள் செய்து, கோவில் குளம் போய் வந்து, என்னென்னமோ செய்யறோமே, என்ன பிரயோசனம்னு தோணும். ஆனால் ஒரு மூச்சுப் பிடித்து அதனை மீறி வந்தால்தான் அந்த இக்கட்டான சூழ்நிலையை எதிர் கொள்ளும் சக்தி நமக்குக் கிடைக்கும்.

வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்வும் ஏதோ ஒன்றை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது. முக்கியமாக துன்பத்தைப் போல நம் மனதைப் பண்படுத்தும் சக்தி வேறெதற்கும் இல்லை. என்ன… அது நமக்கு உடனே தெரியாது. காலம்தான் புரிய வைக்கும்.

தீர்க்க முடியாத துயரங்களும் தூசாவதற்கு - நம்மால்
பார்க்க முடியாத இறைவன் எனினும், அவன் அருள்வான்.

நம்புங்கள்.


அன்புடன்
கவிநயா

பி.கு. : இன்று நண்பர் ஒருவர் கேட்ட கேள்வியைப் பற்றி யோசிச்ச போது என் மனதில் ஏற்பட்ட எண்ணங்களின் பதிவே இது...

18 comments:

  1. கவிநயா அவர்களே...

    ஒரு மிக பெரிய விஷயத்தை ஆராய்ந்து எழுதி உள்ளீர்கள்...

    எவ்வளவு பெரிய ஞானியாக இருந்தாலும், கடவுள் மனித அவதாரம் எடுத்து விட்டால், அவர் மனிதன் படும் அத்தனை கஷ்டங்களையும் படுவது இயல்பு...

    இதன் மூலம் உணர்த்துவது என்னவென்றால், கஷ்டப்பட்டாலும், துன்பத்தை வாழ்வின் ஒரு பகுதியாக எடுத்து கொண்டு வீறுநடை போட வேண்டும் என்பதே...

    நல்ல பதிவிற்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. எல்லோரது மனதிலும் தோன்றியபடியே இருக்கும் கேள்விகள். ஆறுதலாய் வந்திருக்கிறது உங்கள் பதில். நம்பிக்கை வைப்போம் இறைவனிடம். நன்றி கவிநயா.

    ReplyDelete
  3. //‘second wind’ அப்படின்னு சொல்லுவாங்க. மலை ஏறும்போதோ அல்லது ஏதோ ஒரு களைப்பு தரும் செயலைச் செய்யும்போதோ, இதுக்கு மேல முடியாதுங்கிற அளவு களைப்பு ஏற்படும். அதை மீறி ஒரு பிரயத்தனம் செய்துட்டோம்னா, மறுபடியும் புதுசா ஆரம்பிக்கிறாப்போல ஒரு சக்தி கிடைக்கும்.//

    புரிந்த ஒன்றைச் சொல்லி, 'இதுவும் அப்படித்தான்' என்று சொல்லுகிற மாதிரி புரிஞ்சிண்ட அனுபவத்தைச் சொன்ன விதம், அதுக்கும் மீறி --அதைச் சொல்லத் தேர்ந்தெடுத்த இடம்--நன்றாக இருந்தது.

    ReplyDelete
  4. //எவ்வளவோ பூஜை செய்து, பரிகாரங்கள் செய்து, கோவில் குளம் போய் வந்து, என்னென்னமோ செய்யறோமே, என்ன பிரயோசனம்னு தோணும். //

    தற்செயலா வந்தேன், பூஜைகள் செய்வதையும், பரிகாரங்கள்னு செய்யறதையும் எதிர்பார்ப்போடு செய்தால் கட்டாயமாய் மனசு பரிதவிக்கத் தான் செய்யும். அது வேறே, நமக்கு வேண்டியதை இறைவன் கொடுப்பான்னு நினைச்சால் போதும். நமக்குனு உள்ளது கூடவும் கூடாது, குறையவும் குறையாது. அது புரிஞ்சாப் போறுமே.

    எங்க வீட்டிலேயே இந்த மாதிரிப் பிரார்த்தனைகள் நிறையவே உண்டு. ஆனாலும் என்னைப் பொறுத்த வரையிலும் மத்தவங்க சொல்றதை அவங்க திருப்திக்காகச் செய்வேனே தவிர, நானாக இறைவனிடம் நான் உனக்கு அது செய்யறேன், இது செய்யறேன், எனக்கு நீ திரும்ப நான் கேட்கிறதைக் கொடுனு கேட்கக் கூச்சமாய் இருக்கும். கேட்கத் தோணறதில்லை. அநேகமாய் நிறையப் பேருக்கு இப்படி இருக்கும்னும் நம்பறேன்.

    ReplyDelete
  5. கமெண்ட் கொடுத்தேன் போச்சா என்னனு தெரியலை, அதுக்குள்ளே கணினி விளையாட்டை ஆரம்பிச்சுடுச்சே! :( திரும்ப நாளைக்கு வரேன்.

    ReplyDelete
  6. //இதன் மூலம் உணர்த்துவது என்னவென்றால், கஷ்டப்பட்டாலும், துன்பத்தை வாழ்வின் ஒரு பகுதியாக எடுத்து கொண்டு வீறுநடை போட வேண்டும் என்பதே...//

    உண்மைதான் கோபி.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  7. //நம்பிக்கை வைப்போம் இறைவனிடம்.//

    ஆம். நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  8. //புரிந்த ஒன்றைச் சொல்லி, 'இதுவும் அப்படித்தான்' என்று சொல்லுகிற மாதிரி புரிஞ்சிண்ட அனுபவத்தைச் சொன்ன விதம், அதுக்கும் மீறி --அதைச் சொல்லத் தேர்ந்தெடுத்த இடம்--நன்றாக இருந்தது.//

    உங்கள் கணிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது. நன்றீ ஜீவி ஐயா.

    ReplyDelete
  9. //பூஜைகள் செய்வதையும், பரிகாரங்கள்னு செய்யறதையும் எதிர்பார்ப்போடு செய்தால் கட்டாயமாய் மனசு பரிதவிக்கத் தான் செய்யும். நமக்கு வேண்டியதை இறைவன் கொடுப்பான்னு நினைச்சால் போதும்.//

    அம்மா, நான் சொன்னது உலகிலுள்ள பெரும்பாலானவர்களின் நிலை :) நீங்க அந்த பெரும்பான்மையில் இல்லைன்னு எனக்குத் தெரியுமே! :)

    ரொம்ப நாள் கழிச்சு எட்டிப் பார்த்ததுக்கு நன்றி கீதாம்மா :)

    ReplyDelete
  10. \\தீர்க்க முடியாத துயரங்களும் தூசாவதற்கு - நம்மால்
    பார்க்க முடியாத இறைவன் எனினும், அவன் அருள்வான்.\\

    ரைட்டு ;)))

    ReplyDelete
  11. //ரைட்டு ;)))//

    வாங்க கோபி! :)

    ReplyDelete
  12. தமிழ்"மனத்தில்" தற்செயலாகப் பார்த்தேன். எளிய நடையில் சொல்வது எல்லோருக்கும் வராது. உங்களுக்கு வாய்த்திருக்கிறது.

    ReplyDelete
  13. //puliangudi said...

    தமிழ்"மனத்தில்" தற்செயலாகப் பார்த்தேன். எளிய நடையில் சொல்வது எல்லோருக்கும் வராது. உங்களுக்கு வாய்த்திருக்கிறது.//

    உங்கள் முதல் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி தருகிறது :) மிக்க நன்றி.

    ReplyDelete
  14. //:-)//

    வாங்க திவா. இந்தப் புன்னகைக் கென்ன பொருள் (விலை)? :)

    ReplyDelete
  15. அன்பு கவிநயா. அருமையான தத்துவங்களை இந்தச் சிறிய வயதிலேயே நீங்கள் யோசித்துப் பதிவு செய்வது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.
    பிறப்பைச் சுலபமாக ஏற்றுக் கொள்ளும் மனது இறப்பை ஜீரணிக்கச் சிரமப் படுகிறது.
    எல்லோரும் உடனே சாந்தமாக மாற முடியாவிட்டாலும் கொஞ்ச நாள் கழித்தாவது
    நமது நம்பிக்கையை மீட்டுக் கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது. நல்ல சிந்தனைகளைத் தூண்டிவிட்டதற்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
  16. //எல்லோரும் உடனே சாந்தமாக மாற முடியாவிட்டாலும் கொஞ்ச நாள் கழித்தாவது
    நமது நம்பிக்கையை மீட்டுக் கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது.//

    சரியாகச் சொன்னீர்கள் வல்லிம்மா. சில பாடங்களை அனுபவத்தின் மூலம் கஷ்டப்பட்டுத்தான் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது :(

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்மா.

    ReplyDelete
  17. அனுபவ பூர்வமான சொற்கள்ன்னு தெரியுது கவிநயா அக்கா.

    ReplyDelete
  18. //அனுபவ பூர்வமான சொற்கள்ன்னு தெரியுது கவிநயா அக்கா.//

    நன்றி குமரா!

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)