Sunday, November 15, 2009

தேடல்


ஏதோ ஒன்றைத் தேடித்தான்
எந்தன் மனசு அலைகிறது;
தேடும் பொருளே தெரியாமல்
திசைகள் எல்லாம் அளக்கிறது!

காற்றில் ஏறிப் பறக்கிறது;
கனவில் ஏறி மிதக்கிறது;
மலையில் ஏறி மலைக்கிறது;
கடலில் மூழ்கித் தவிக்கிறது!

எல்லாம் இருப்பது போலிருக்கும்;
ஏதோ ஒன்று இருக்காது!
எதுவும் இல்லை போலிருக்கும்;
இருப்பவை கண்ணுக்குத் தெரியாது!

அதனால் என்ன பூமனமே!
அலைக்கழியாதே என்மனமே!
நீ வெளியே தேடும் பொருளெல்லாம்
உன்னுள்ளே இருக்குது உணர்வாயே!


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/fernandosanchez/2384851617/sizes/m/


21 கருத்துகள்:

ஜீவி said...

//நீ வெளியே தேடும் பொருளெல்லாம்
உன்னுள்ளே இருக்குது உணர்வாயே!//

--இந்த வரிகள் தாம், இக்கவிதையின் அடிநாதம் போலும்; அப்படியாயின், மிகுந்த அர்த்தம் பொதிந்திருப்பது தெரிகிறது.
இன்னொன்று.
'மலையில் ஏறி மலைக்கிறது' என்கிற வார்த்தையைப் படித்தவுடனே தான், இதனால் மலைக்கே பெயர்க்காரணமாய் அந்தப் பெயர் வந்ததோ என்று மயங்க வைத்தது.

ராமலக்ஷ்மி said...

கவிதையையும் ரசித்தேன். ஜீவி அவர்களின் கருத்தையும் ரசித்தேன்.

கோபிநாத் said...

\\நீ வெளியே தேடும் பொருளெல்லாம்
உன்னுள்ளே இருக்குது உணர்வாயே!
\\

ம்ம்...உண்மை ;)

மாதேவி said...

நல்ல கவிதை. "தேடும் பொருளே தெரியாமல்
திசைகள் எல்லாம்அளக்கிறது"! ஆமாம்.

"அலை பாயுதே கண்ணா என் மனம்......" ஞாபகத்திற்கு வந்தது.

ஸ்வர்ணரேக்கா said...

//எதுவும் இல்லை போலிருக்கும்;
இருப்பவை கண்ணுக்குத் தெரியாது!//

நல்லாயிருக்கு இந்த வரிகள்...

கிருஷ்ணமூர்த்தி said...

வெளியே உள்ளே என்பதெல்லாம்
பார்க்கும் விதத்தில் உள்ளதுதான்!
பார்வை, படுவது, பார்ப்பவன் ஒன்றானால்
பரமே வெளியாய்ப் பரந்து வரும்!

கவிநயா said...

வாங்க ஜீவி ஐயா.

//இந்த வரிகள் தாம், இக்கவிதையின் அடிநாதம் போலும்;//

ஆம்!

//'மலையில் ஏறி மலைக்கிறது' என்கிற வார்த்தையைப் படித்தவுடனே தான், இதனால் மலைக்கே பெயர்க்காரணமாய் அந்தப் பெயர் வந்ததோ என்று மயங்க வைத்தது.//

தானாய் வந்து விழுந்த வரிகளில் ஒன்று. எனக்கும் அப்படி மயக்கம் ஏற்பட்டது உண்மைதான் :)

வருகைக்கு நன்றி ஐயா.

கவிநயா said...

//கவிதையையும் ரசித்தேன். ஜீவி அவர்களின் கருத்தையும் ரசித்தேன்.//

நன்றி ராமலக்ஷ்மி. நானும்தான்! :)

கவிநயா said...

//"அலை பாயுதே கண்ணா என் மனம்......" ஞாபகத்திற்கு வந்தது.//

நல்ல ஞாபகம் தான் :)

//நல்ல கவிதை.//

மிக்க நன்றி மாதேவி.

கவிநயா said...

//ம்ம்...உண்மை ;)//

நன்றி கோபி :)

கவிநயா said...

//நல்லாயிருக்கு இந்த வரிகள்...//

ரசனைக்கு நன்றி ஸ்வர்ணரேக்கா :)

கவிநயா said...

//வெளியே உள்ளே என்பதெல்லாம்
பார்க்கும் விதத்தில் உள்ளதுதான்!
பார்வை, படுவது, பார்ப்பவன் ஒன்றானால்
பரமே வெளியாய்ப் பரந்து வரும்!//

நீங்க சொன்னா சரியாதான் இருக்கும் கிருஷ்ணமூர்த்தி சார் :) எனக்கு இன்னும் எதுவும் பிடிபடலை.

வருகைக்கு நன்றி.

கிருஷ்ணமூர்த்தி said...

/எனக்கு இன்னும் எதுவும் பிடிபடலை./

எனக்கும் கூடத்தான்! ஆனால் பிடிபட்டுவிடும் என்ற நம்பிக்கை ஒன்றே பிடிபட்டுவிட்ட மாதிரிப் பீற்றிக் கொள்ள வைக்கிறது போல:-))

திகழ் said...

தேட‌லின் முடிவை
இறுதியில் வைத்தது
கவிதையை முடித்தது அருமை

.........................

எதை எதையோ தேடுகிறோம்
உள்ளில் இருக்கும்
உன்னை மறந்து
என்னுள் வாழும்
உன்னை மறந்து

என்பதைப் போன்று உள்ளது தங்களின் வரிகள்
................................

இந்த‌ வ‌ரிக‌ளைப் ப‌டிக்கையில் இந்த‌ வெண்பா நினைவிற்கு வ‌ருகிற‌து.

நிம்மதி தேடி நிதமும் அலைகின்றோம்
அம்மதி உள்ளே இருப்பதைப் பாராமல்
எம்மதியும் இங்கே கிடைக்கும் அதற்குநீ
சம்மதித்தால் மட்டும்போ தும்.

திகழ் said...

அப்துல் கையூம் அவ‌ர்க‌ளின் க‌விதை

தேடல்கள் .. ..

தேடல்கள் புதிதல்ல..

வாழ்க்கையே நமக்கு
வரிசையாய் தேடல்கள்தானே?

இரையைத்தேடியும்
இறையைத் தேடியும்
இலக்கைத் தேடியும்
இலக்கங்களைத் தேடியும்
கலைந்து போகும் காலங்கள்

பிறந்த பொழுதிலிருந்து
தேடத் தொடங்குகிறோம்


தேடலுக்கு எல்லை உண்டா?
என்றால் இல்லை ..
தேடலுக்கு வானமே எல்லை

தேடலுக்கு வயது உண்டா?
என்றால் இல்லை
தேடலுக்கு மரணமே எல்லை

வீடு போ.. போ.. என
விடை பகர
காடு வா.. வா .. என்
கரம் கொடுக்க
மண்ணறைக்குள்
மறையும் வரை
தொடரும் தேடல்


திக்குத் தெரியாத காட்டில் -உன்னை
தேடித் தேடி அலைந்தேனே என்று
கண்ணபிரானைத் தேடி
கவிதையிலே பொருள் வடித்த
கவிராஜன் பாரதியின்
தேடலும் ஒரு தேடல்

பூஜ்ஜியத்திலிருந்துக் கொண்டு
ராஜ்ஜியத்தை ஆள்பவனை

இருக்குமிடத்தை விட்டு
இல்லாத இடம்தேடி
எங்கேயோ அலைகின்றாய்
ஞானத் தங்கமே என்று

பரம்பொருளின் தேடலை
பாட்டாக வடித்தானே
ஒரு ஞானக் கிறுக்கன்
அவன் தேடலும் ஒரு தேடல்

தேடும் நேயர் நெஞ்சங்களில்
குடியிருப்பவன்
தேடாத மனிதருக்கும்
உணவளிப்பவன் என

பாறைக்குள் ஒளிந்திருக்கும்
தேரைக்கும்
பக்குவமாய் இரையை
பகிர்ந்தளித்தானே அந்த
முக்காலமும்அறிந்த
முழுமுதற் அரசன்

அவனைத் தேடுதல்
அது ஆன்மீகத் தேடல்

முகவரிகள் தொலைந்தனவோ
முகிலினங்கள் அலைகிறதோ
முகவரிகள் தொலைந்ததினால்
அது மழையோ? – இது ஒரு
தீந்தமிழ்க் கவிஞனின்
தேடல் கற்பனையின்
ஊடகப் படிமம்

தேடலும் ஒரு சுகம்

காதலாகட்டும்
கைகளின் சில்மிஷமாகட்டும்
கவிதையில் மறைந்திருக்கும்
கருத்தாழம் ஆகட்டும்

தேடலும் ஒரு சுகம்

ஆய கலைகள்
அறுபத்தி நான்கிலும்
தேடாத சுகங்கள்
ஆயிரம் உண்டு

எல்லா தேடலும் சுகமா?
என்றால் இல்லை …

சில தேடல்கள்
சில்லென்று ரத்தத்தை
உறைய வைக்கும் …
உள்ளத்தை உருக வைக்கும்
நெஞ்சை பிழிய வைக்கும்..
இதயத்தை நெக

கவிநயா said...

//கிருஷ்ணமூர்த்தி said...

எனக்கும் கூடத்தான்! ஆனால் பிடிபட்டுவிடும் என்ற நம்பிக்கை ஒன்றே பிடிபட்டுவிட்ட மாதிரிப் பீற்றிக் கொள்ள வைக்கிறது போல:-))//

ஆகா! நம்பிக்கை நல்ல விஷயம் தானே :))

கவிநயா said...

வாங்க திகழ்.

என்ன சொல்ல, உங்க பின்னூட்டங்களையும் எடுத்துக் காட்டிய கவிதைகளையும் பார்த்து அசந்து போயிட்டேன்!

//எதை எதையோ தேடுகிறோம்
உள்ளில் இருக்கும்
உன்னை மறந்து
என்னுள் வாழும்
உன்னை மறந்து//

நீங்க தந்த வெண்பாவையும், கவிதையாக நீங்க சொன்ன வரிகளையும் ரசித்தேன்.

அப்துல் கையூம் அவர்களின் அருமையான வரிகளை அயராமல் தட்டச்சித் தந்தமைக்கு மிக்க நன்றி. ஆம், தேடல்தான் வாழ்க்கை, வாழ்க்கைதான் தேடல். அழ வைக்கும் தேடல்களும், அதிர வைக்கும் தேடல்களும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன :(

சி.கருணாகரசு அவர்களின் கவிதை வரிகளும் அருமை.

//உங்களின் கவிதையைப் படிக்கையில் வாசித்த பல கவிதைகள்
நினைவிற்கு வந்தது. என்ன செய்ய ........

எல்லாம் உங்களைப் போன்ற கவிஞர்களின் வரிகள்
என்னுள் சுவாசமாக இருக்கிறது.//

இவ்வளவும் உள்வாங்கிக் கொண்டு தகுந்த சமயத்தில் தருகின்ற உங்கள் நினைவாற்றலும் ஆர்வமும் கண்டு பிரமித்தேன்.

//மீண்டும் மீண்டும் தங்களின்
வார்த்தைகளை, வரிகளை
வாசிக்கும் வாசகனாக‌//

உங்களைப் போன்ற வாசகர் கிடைத்ததற்கு நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும். மனமார்ந்த நன்றிகள்!

திவா said...

ம்ம்ம்ம் நல்லா இருக்கு!
//அதனால் என்ன பூமனமே!
அலைக்கழியாதே என்மனமே!//
சரியா வந்த மாதிரி தோணலையே?
"அதனால் எந்தன் பூமனமே!"
சரியா இருக்குமோ?

கவிநயா said...

வாங்க திவா.

//"அதனால் எந்தன் பூமனமே!"
சரியா இருக்குமோ?//

இரண்டுமே சரியாதான் தோணுது. 'அதனால என்ன, பரவாயில்லை'ன்னு ஆறுதல் சொல்றோமில்லையா, அந்த மாதிரி பொருளில் வந்த வரி. அடுத்த வரியில் 'என்மனம்'னு வந்திருச்சே.

ஆனா எழுதும் போது இப்படியெல்லாம் யோசிச்சு எழுதலை, இயல்பா வந்ததை எழுதிட்டேன் :)

வருகைக்கு நன்றி திவா.

sury said...

வருக. தங்கள் கவிதையைக் கேட்க,
http://vazhvuneri.blogspot.com
சுப்பு ரத்தினம்.

கவிநயா said...

///வருக. தங்கள் கவிதையைக் கேட்க,
http://vazhvuneri.blogspot.com
சுப்பு ரத்தினம்.//

கேட்டு மகிழ்ந்தேன். அங்கே பின்னூட்டியும் இருக்கிறேன். மிக்க நன்றி தாத்தா!