Sunday, July 5, 2009

அன்பாய் இரு. பாசமாய் இராதே!

ஆன்மீகத்தில் அடிக்கடி காதில் விழுவது இதுதான். பற்றில்லாத அன்பே செலுத்த வேண்டும் என்பது. அதனால் இந்த கேள்வியும் அடிக்கடி எழும்: அன்புக்கும் பாசத்துக்கும் என்ன வித்தியாசம்? இது பற்றி ஒரு உரத்த சிந்தனை… என் புரிதல்கள் தவறாகவும் இருக்கலாம். உங்க எண்ணங்களையும் பகிர்ந்துக்கோங்க!

அன்பு என்பது, அதிலும் தூய்மையான அன்பு என்பது என்ன? இந்த குழப்பம் வரும்போதெல்லாம் எனக்கு மிக நல்ல உதாரணமா வந்து கை கொடுப்பது, “தாய் அன்பு” தான். இந்த உலகத்திலேயே அம்மாவுடைய அன்பு ஒண்ணுதான் தூய்மையானது (no strings attached)! தந்தைமார்கள் சண்டைக்கு வர வேண்டாம்! விதின்னு ஒண்ணு இருந்தாலே, அதற்கு விலக்குன்னும் ஒண்ணு உண்டு :) ஸ்ரீ ஆதிசங்கரர் சொல்லுவார், “கெட்ட பிள்ளைகள் இருக்கலாம், ஆனால் கெட்ட அன்னை என்று ஒருவர் இருக்கவே முடியாது” என்று. அன்னையரின் சிறப்பு இதிலிருந்தே தெரியுமே.

ஒரே வரில சொல்லணும்னா, தூய அன்பு என்பது, சுயநலம் கலக்காதது. எதிர்பார்ப்புகள் இல்லாதது.

உதாரணத்துக்கு, தம்பதிகளுக்கிடையில் இருக்கும் அன்பை எடுத்துக்கலாம். அவங்க அன்பில் possessiveness, அதனால் ஏற்படற அசூயை, இதெல்லாம் இருக்கத்தான் இருக்கும். அளவுக்கதிகமான அன்பினால்தான் அப்படி ஆகிறதுன்னு நாம சொல்றோம். ஆனால், அப்படி இருக்கிறதுக்கு பேரு, அன்பில்லை. பாசம்! பாசம் தான் உரிமை கொண்டாடும், உரிமை மறுக்கப்பட்டால் கோபப்படும், அதனால் துன்பப்படும், பிறகு வழுக்கியும் விடும்! இதுவே தூய்மையான அன்பாக இருந்தால், நாம் அன்பு செலுத்தும் நபரிடம் எதையுமே எதிர்பார்க்க மாட்டோம். அவரும் நம் மீது நம்மைப் போலவே அன்பு செலுத்த வேண்டும் என்று கூட!

“சராசரி மானுடர்க்கு எப்படி சுயநலம் இயல்பாயிருக்கிறதோ அது போல் தெய்வ நிலை அறியும்போது பெரியோர்க்கு பரோபகாரம் இயல்பாகும்; அன்பு பெருகும். மனம் கசடுகளை கொண்டிருக்கும் வரை அதில் ஏற்படுவது அன்பாயிருக்காது. பாசமாகத்தான் இருக்கும் என்று யோகம் சுட்டிக் காட்டுகிறது." – ‘நம்பிக்கை’ குழுமத்தில் ஸ்ரீ காழியூரர்.

'என் உடைமை' என்ற எண்ணம், சுயநலம், பொறாமை, கோபம், முதலான இந்த மாதிரி குணங்களைத்தான் ஸ்ரீ காழியூரர் “மனக் கசடுகள்” என்று குறிப்பிடுகிறார்.

எப்படி அன்பு செலுத்த வேண்டும் என்பது குறித்து (பாண்டிச்சேரி) ஸ்ரீ அன்னை சொல்வதை கேளுங்க:

“one must learn how to love better: to love with devotion, with self-giving, self-abnegation, and to struggle, not against love itself, but against its distorted forms: against all forms of monopolising, of attachment, possessiveness, jealousy, and all the feelings which accompany these main movements. Not to want to possess, to dominate; and not to want to impose one's will, one's whims, one's desires; not to want to take, to receive, but to give; not to insist on the other's response, but be content with one's own love; not to seek one's personal interest and joy and the fulfillment of one's personal desire, but to be satisfied with the giving of one's love and affection; and not to ask for any response. Simply to be happy to love, nothing more. - The Mother [CWMCE, 8:302-03]”

எவ்வளவு அழகா சொல்லியிருக்கிறார்!

கொஞ்சம் சிந்தித்தாலே தெரியும், நாம் பிறர் மீதும், ஏன், ஜடப் பொருட்கள் மீதும் கூட எவ்வளவு உரிமையும் பற்றும் பாசமும் கொண்டிருக்கிறோம் என்பது! அதனால்தான் பல துன்பங்களுக்கு ஆளாகிறோம்.

மனித இயல்பே சுயநலம்தான், சொந்தம் கொண்டாடுதல்தான், எனும்போது அதனை மாற்றிக் கொள்வது கடினம்தான். ஆனால் அதே காரணத்தால்தான், இந்த குணங்களை மாற்றிக் கொண்டால், அல்லது, மாற்றிக் கொள்ள வேண்டும் என்று முயற்சி செய்தால் கூட, மனிதன் தெய்வத் தன்மை கொண்டவனாகி விடுகிறான்!

நாம் இறைவன் மீது வைக்கும் அன்பும் இவ்விதமே தூயதாக இருக்க வேண்டுமென்பார், ஸ்ரீ ராமகிருஷ்ணரும்.

ஆன்மீகமோ, இல்லையோ, இப்படிப் பட்ட தூய அன்பை பழகிக் கொண்டால், அது தினசரி வாழ்விலும் மிகுந்த மன அமைதியைத் தரும் என்பதில் சந்தேகமில்லை!

‘அன்புடன்’
கவிநயா

(நீங்க படிக்காட்டாலும் பின்னூட்டமிடாட்டாலும் கூட மாறாத அன்பாக்கும் இது! :)

45 comments:

  1. //நீங்க படிக்காட்டாலும் பின்னூட்டமிடாட்டாலும் கூட மாறாத அன்பாக்கும் இது! :)//

    ஆஹா.... இது :-) பாயிண்டைப் 'பக்'னு பிடிச்சுட்டீங்க!

    தாயன்பைப் பத்துன ஒரு சின்ன உரத்த சிந்தனை சொல்லிக்கவா கவிநயா?

    பிள்ளைகள் வளர்ந்து சம்பாரிக்க ஆரம்பிச்சபிறகோ, இல்லை மருமகள் வந்த பின்போ 'ஒரே பாசமா' ஆகிருது!

    வீட்டில் செல்லங்கள் வளர்க்கும்போது அவைகளிடம் உண்மையான அன்பு அந்த மனிதர்களுக்கு வந்துரும். ஏன்னா ஆரம்பத்துலே இருந்தே தெரியுமே..... அவுங்களால் நமக்கு மானிட்டரி பெனிஃபிட் ஒன்னும் கிடைக்காதுன்னு:-))))

    ReplyDelete
  2. அருமையான சிந்தனைப் பகிர்வு.

    அன்பு வையுங்கள். பாசம் என்பது attachment with detachment-ஆகவே இருக்கட்டும் என்பார்கள்.

    உங்கள் மாறாத அன்புக்கு எங்கள் மனமார்ந்த அன்பு [நன்றி]:)!!

    ReplyDelete
  3. பாசமில்லாமல் வெறும் அன்பால் விளைந்த பின்னூட்டம் இது. வாங்கிக்கோங்க.

    சொல்மண்டி இரா

    ReplyDelete
  4. அருமை

    என்றும் அன்புடன்
    திகழ்

    ReplyDelete
  5. //தூய்மையான அன்பாக இருந்தால், நாம் அன்பு செலுத்தும் நபரிடம் எதையுமே எதிர்பார்க்க மாட்டோம். அவரும் நம் மீது நம்மைப் போலவே அன்பு செலுத்த வேண்டும் என்று கூட!//

    இப்போத்தான் புரிஞ்சுக்க ஆரம்பிச்சிருக்கேன், என்றாலும் நடு நடுவில் எதிர்பார்ப்பு வந்துடும்! :((((((( என்ன செய்யறது????

    ReplyDelete
  6. //வீட்டில் செல்லங்கள் வளர்க்கும்போது அவைகளிடம் உண்மையான அன்பு அந்த மனிதர்களுக்கு வந்துரும்//

    அவைகள் நம்மை விட்டு நிரந்தரமாய்ப் பிரியும்போது??????

    ReplyDelete
  7. நல்ல இடுகை கவிக்கா......பல நேரங்களில் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டிய ஒன்று. :)


    துளசி டீச்சர் சொல்வதை இன்று கண்கூடாகப் பல இடங்களில் பார்க்க முடிகிறது. அன்பைத் தாய் அளிக்கும் போது எந்த எதிர்பார்ப்பும் இல்லாதிருந்தாலும், பிற்க்காலத்தில் பல தாய்மார்கள் அப்படி வளர்த்தேன், இப்படி வளர்த்தேன் என்று புலம்புவதை கவனித்திருக்கிறேன்.

    ReplyDelete
  8. அருமையான விளக்கம் தோழி. சிந்திக்கையில் நாங்கள் கடவுளுடன் கூட அன்பு வைக்கவில்லை என்று தோன்றுகிறது. தினம் எங்கள் பிரச்சனையைத் தீர்த்து வைப்பார் என்ற எதிர்பார்ப்பில் தானே அவரிடம் போகிறோம்.
    எங்கள் வேண்டுதல் கிடைக்கவில்லை என்றதும் ,'இந்தக் கடவுள் எங்கே போய் விட்டது? என்றோ ' கடவுளுக்குக் கண்ணில்லை' என்றோ திட்டக் கூடத் தயங்குவதில்லையே

    ReplyDelete
  9. பாசமாயிருப்பது இயல்பு. அன்பாய் இருப்பது பழக நாளாகும் கவிநயா. அது வாழ்வு பூராவும் கற்றுக்கொள்ள வேண்டிய நல்ல குணம், பழக்கம், மனநிலைமை, இன்னும் யோகம் என்று கூடச் சொல்லலாம்.

    எதிர்பார்த்தல் இல்லாத அன்பு நமக்குக் கைவர வேண்டும்,.
    இல்லாவிட்டால் சிரமம்தான்.

    ReplyDelete
  10. //தாயன்பைப் பத்துன ஒரு சின்ன உரத்த சிந்தனை சொல்லிக்கவா கவிநயா?

    பிள்ளைகள் வளர்ந்து சம்பாரிக்க ஆரம்பிச்ச பிறகோ, இல்லை மருமகள் வந்த பின்போ 'ஒரே பாசமா' ஆகிருது!//

    ஹா ஹா ஹா! டீச்சர் கலக்கிங்ஸ்! :)

    ஒரு அன்பு பாசம் ஆன கதை!
    அன்பா? பாசமா? - இப்படின்னு சினிமா டைட்டில்ஸ் இப்பவே போட்டு வச்சிக்கலாம்! :)
    பாடல்கள்: கவிநயா :)

    ReplyDelete
  11. கவிக்கா...
    டீச்சர் சொன்னதோடு கூட அடியேன் இன்னொரு உரத்த சிந்தனை சொல்லிக்கறேன்-க்கா!

    மனுசனாப் பொறந்துட்டா எதிர்பார்ப்பு-ன்னு ஒன்னு எல்லாருக்குமே இருக்கும்! அதனால் எதிர்பார்ப்பு இல்லாத அன்பு என்பது ரொம்பவும் அரிது!

    இதுக்கு ஒரே எளிய வழி...
    நாம எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கறது தான்! :)

    எதிர்பார்ப்புகளைக் கொண்டு தான் எதிர்பார்ப்புகளை அடக்க முடியும்! :)

    யார் மீது அளவில்லாப் பாசம் வச்சிருக்கீங்களோ,
    அவங்க எப்பவும் சிரிச்சி இருந்தா, அதுவே போதும்.....என்ற எதிர்பார்ப்பை வளர்த்துக்கிட்டா...

    இந்த பாசப் போராட்டம் எல்லாம் வராது!!! :)
    அவங்க சிரிச்ச முகம் ஒன்னே போதும், அவங்க மகிழ்ச்சி தான் என்னோட எதிர்பார்ப்பு...அவங்களைப் பார்த்தே நானும் மகிழ்வேன் என்று எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொண்டால், இனி எல்லாம் சுகமே!

    ஆன்மீகமாச் சொல்லணும்-ன்னா, அவனுடைய திரு உள்ள உகப்புக்கு நாம்! :)

    ReplyDelete
  12. பெரியவுங்க எல்லாம் சொல்லிறிங்க...இப்போதைக்கு காதுல போட்டு வச்சிருக்கிறதை விட வேற வழியில்லை எனக்கு...;)

    ReplyDelete
  13. பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி. தாமதத்திற்கு மன்னிக்கணும். சீக்கிரம் வரேன்...

    ReplyDelete
  14. கவி அக்கா, பின்னூட்டம் எழுதினேன். அது ஒரு பதிவு அளவுக்கு போயிடுத்து. அதனால் பதிவாகவே போட்டாச்சு!
    http://anmikam4dumbme.blogspot.com/2009/07/blog-post_0.html

    //பாசமாயிருப்பது இயல்பு. அன்பாய் இருப்பது பழக நாளாகும் கவிநயா. அது வாழ்வு பூராவும் கற்றுக்கொள்ள வேண்டிய நல்ல குணம், பழக்கம், மனநிலைமை, இன்னும் யோகம் என்று கூடச் சொல்லலாம்.//

    வல்லியக்காவோட பார்வை ரொம்ப ப்ரொபவுண்ட்!

    ReplyDelete
  15. ஸ்ரீ அரவிந்த அன்னை, இந்த உரத்த குரல் வருவதற்கு முன்னாலேயே, நீங்க எடுத்துக் காட்டிய உரையாடலை விட, மிகப் பொருத்தமா, இப்படிச் சொல்லியிருக்காங்க:
    "At first, one loves, when one is loved.

    Next, one loves spontaneously, but one wants to be loved in return!

    Then, one loves even if one is not loved, but one still wants one's love to be accepted!

    And finally, one loves purely and simply, without any other need or enjoy than that of loving!

    --The Mother
    அன்பு கூட, ஒரு பரிணாம வளர்ச்சியில் தான் படிப்படியாக உயர்ந்து, மனிதனுக்குக் கிடைக்கிறது போல!

    ReplyDelete
  16. வாங்க துளசிம்மா.

    //பிள்ளைகள் வளர்ந்து சம்பாரிக்க ஆரம்பிச்சபிறகோ, இல்லை மருமகள் வந்த பின்போ 'ஒரே பாசமா' ஆகிருது!//

    அது சரி...:) எனக்கு அந்த நிலை வரப்போ என் அன்பு பாசமாகிடாம இருக்க முயற்சிக்கிறேன் :)

    //வீட்டில் செல்லங்கள் வளர்க்கும்போது அவைகளிடம் உண்மையான அன்பு அந்த மனிதர்களுக்கு வந்துரும். ஏன்னா ஆரம்பத்துலே இருந்தே தெரியுமே..... அவுங்களால் நமக்கு மானிட்டரி பெனிஃபிட் ஒன்னும் கிடைக்காதுன்னு:-))))//

    உண்மைதான்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா.

    ReplyDelete
  17. வாங்க ராமலக்ஷ்மி.

    ///அன்பு வையுங்கள். பாசம் என்பது attachment with detachment-ஆகவே இருக்கட்டும் என்பார்கள்.//

    சொல்வதைக் கேட்டிருக்கேனே தவிர, அது முழுசா புரியாமலேயே இருந்தது. இப்பதான் புரிய ஆரம்பிச்சிருக்கு :)

    //உங்கள் மாறாத அன்புக்கு எங்கள் மனமார்ந்த அன்பு [நன்றி]:)!!//

    உங்களுக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  18. //பாசமில்லாமல் வெறும் அன்பால் விளைந்த பின்னூட்டம் இது. வாங்கிக்கோங்க.

    சொல்மண்டி இரா//

    ஆகா, ரொம்ப நன்றிங்க :)

    ReplyDelete
  19. //அருமை//

    நன்றி திகழ்மிளிர்.

    ReplyDelete
  20. வாங்க கீதாம்மா.

    //இப்போத்தான் புரிஞ்சுக்க ஆரம்பிச்சிருக்கேன், என்றாலும் நடு நடுவில் எதிர்பார்ப்பு வந்துடும்! :((((((( என்ன செய்யறது????//

    நானும் உங்களோடதான் இருக்கேன் அம்மா. நான் என் (நடன) மாணவிகளுக்கு அடிக்கடி சொல்றது - என்ன தவறு செய்யறோம்னு உணர்வதே அதை திருத்திக் கொள்ள முதல் படி, அப்படின்னு. "awarenss" முதலில் வந்துட்டா போதும். அப்புறம் முயற்சியும் பயிற்சியும் சேர்ந்துட்டா... அவ்வளவுதான்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா.

    ReplyDelete
  21. //அவைகள் நம்மை விட்டு நிரந்தரமாய்ப் பிரியும்போது??????//

    :'(((

    ReplyDelete
  22. வாங்க மௌலி.

    //நல்ல இடுகை கவிக்கா......பல நேரங்களில் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டிய ஒன்று. :)//

    மிக்க நன்றி.

    //துளசி டீச்சர் சொல்வதை இன்று கண்கூடாகப் பல இடங்களில் பார்க்க முடிகிறது.//

    உண்மைதான். ஆனா அதுவே, பெண்பிள்ளைகளை "நமக்கு சொந்தமில்லை" ன்னு நினைச்சே வளர்க்கிறதால அந்த பிரச்னை வரதில்லை. "என்னுடையது" நினைச்சாலே பிரச்சனைதான் என்பதற்கு இதுவே நல்ல உதாரணம்.

    வருகைக்கு நன்றி மௌலி.

    ReplyDelete
  23. வாங்க ஜெஸ்வந்தி.

    //அருமையான விளக்கம் தோழி. சிந்திக்கையில் நாங்கள் கடவுளுடன் கூட அன்பு வைக்கவில்லை என்று தோன்றுகிறது. தினம் எங்கள் பிரச்சனையைத் தீர்த்து வைப்பார் என்ற எதிர்பார்ப்பில் தானே அவரிடம் போகிறோம்.//

    ஆமாம், பெரும்பாலானவர்கள் அப்படித்தான் இருக்கிறோம். நான் சொல்ல வந்த முக்கியமான செய்திகளில் ஒன்று.

    வருகைக்கும் சரியான புரிதலுக்கும் மிக்க நன்றி ஜெஸ்வந்தி.

    ReplyDelete
  24. வாங்க வல்லிம்மா..

    //பாசமாயிருப்பது இயல்பு. அன்பாய் இருப்பது பழக நாளாகும் கவிநயா. அது வாழ்வு பூராவும் கற்றுக்கொள்ள வேண்டிய நல்ல குணம்//

    நான் சொல்ல வந்ததும் அதுவே. இயல்பை மீறி உயரத் தலைப் பட வேணும் என்பது.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்மா.

    ReplyDelete
  25. வாங்க கண்ணா.

    //யார் மீது அளவில்லாப் பாசம் வச்சிருக்கீங்களோ,
    அவங்க எப்பவும் சிரிச்சி இருந்தா, அதுவே போதும்.....என்ற எதிர்பார்ப்பை வளர்த்துக்கிட்டா...//

    நீங்க சொல்றது உண்மைதான். நான் சொல்ல வந்த நிலைக்கு இதனை ஒரு படியாகக் கொள்ளலாம். திரு.கிருஷ்ணமூர்த்தி எடுத்துக் காட்டிய வரிகள் ரொம்ப தெளிவா இருக்கு!

    வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி கண்ணா.

    ReplyDelete
  26. வாங்க கோபி.

    //பெரியவுங்க எல்லாம் சொல்லிறிங்க...இப்போதைக்கு காதுல போட்டு வச்சிருக்கிறதை விட வேற வழியில்லை எனக்கு...;)//

    நல்ல விஷயங்களை வாங்கி போட்டு வச்சுக்கிறது நல்லதுதான் :)

    வருகைக்கு நன்றி கோபி.

    ReplyDelete
  27. வாங்க திவா.

    //கவி அக்கா, பின்னூட்டம் எழுதினேன். அது ஒரு பதிவு அளவுக்கு போயிடுத்து. அதனால் பதிவாகவே போட்டாச்சு!//

    அடேங்கப்பா! சரி... நானும் உங்க பதிவை படிச்சு பின்னூட்டிட்டேன் :)

    வருகைக்கும் பதிவாக இட்ட பின்னூட்டத்திற்கும் நன்றிகள்!

    ReplyDelete
  28. வாங்க திரு.கிருஷ்ணமூர்த்தி.

    ஸ்ரீஅரவிந்த அன்னை பற்றி எழுதும்போது உங்களைத்தான் நினைச்சேன். நீங்க வந்ததில் மிக்க மகிழ்ச்சி!

    //"At first, one loves, when one is loved.

    Next, one loves spontaneously, but one wants to be loved in return!

    Then, one loves even if one is not loved, but one still wants one's love to be accepted!

    And finally, one loves purely and simply, without any other need or enjoy than that of loving!

    --The Mother//

    இதற்கும் ரொம்ப ரொம்ப நன்றி. என்னைப் போன்றவங்களுக்கு இது மிகுந்த தெளிவைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

    வருகைக்கும், எடுத்துக் காட்டிய கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  29. கடமையைச் செய். பலனை எதிர்பார்க்காதே அப்படின்னு அன்னிக்கு கண்ணபிரான் சொன்னாருன்னு கீதைலே எழுதிருக்குன்னு ஏகப்பட்ட பேர் சொல்றாக.


    நான் பார்க்கிற கண்ணபிரானோ,

    // மனுசனாப் பொறந்துட்டா எதிர்பார்ப்பு-ன்னு ஒன்னு எல்லாருக்குமே இருக்கும்! அதனால் எதிர்பார்ப்பு இல்லாத அன்பு என்பது ரொம்பவும் அரிது!
    //
    அப்படிங்கிறார் . அது ஐடியல், இது ப்ராக்மாடிக். அது லட்சியம். இது யதார்த்தம் அப்படின்னு மனசைத் தேத்திக்கவேண்டியது தானா ?

    யோசிச்சு பாத்தா, அன்னிக்கு அப்படி எழுதிய கண்ணபிரான், கலியுகத்திலே பிறந்தபின்னே தன்னோட வ்யூவை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கொன்டு
    விட்டாரோன்னு தோண்ரது. அவர் சொல்ற சொல்யூஷன்ஸ் டிமான்ட் அன்ட் ஸப்ளை தியரி படியும் கரெக்ட் தான். இருந்தாலும் இதைக் கொஞ்சம்
    ஆராய்வோம்.

    வாத்சல்யம், பாசம், அன்பு, காதல், பக்தி எனப்பலவிதமாக ஒரே உணர்வினை இடத்திக்கேட்டாற்போல் பெயரை மாற்றி சொன்னாலும், எல்லாவிதமான‌
    அன்புமே மனதிலே ஒரு பேரம் மாதிரி தான் உருவாகிறதெனவும் அதற்கான காரணங்களையும் உளவியல் அறிஞர் பால் சின்ற்லர் ஒரு வரைபடம் போட்டு
    விவரிக்கிறார்.

    இது ஒரு ரெட் முக்கோனம். மூன்று முனைகள். மூன்று பக்கங்கள். ஒவ்வொரு முனைக்கும் ஆர் , ஈ, டி என்றும் பெயர்.

    ஆர் என்பது யாரிடம் நாம் அன்பு வலையில் சிக்குகிறோமோ அவரிடத்த்தே நாம் மனதளவில் இடும் ரூல்ஸ்.
    ஈ என்பது எதிர்பார்ப்புகள். இவர் பிற்காலத்தில் நமக்கு இதைச் செய்வார் என எதிர்பார்ப்பது.
    டி என்பது வெளிப்படையே நாம் போடும் டிமான்ட்ஸ்.

    துவக்கத்தில் ஒரு கண்ணுக்குத் தெரியாத புள்ளியாகத் தோன்றும் இந்த முக்கோனம், நாளாக நாளாக ஒவ்வொரு முனையும் ஒரு நேற்கோட்டில் செல்கிறது. முக்கோணமும்
    பெரிதாகி ஒரு கால கட்டத்தில் அன்பு காட்டுபவரையும் அன்பு செலுத்துபவரையும் இந்த முக்கோணத்திற்குள்ளேயே தள்ளிவிட்டு சிறையிலைட்டு விடுகிறதாம்.

    இது ஒரு சம பக்க முக்கோனமாக இருந்தாலும் பரவாயில்லை. சில சமயங்களில் ஒரு பக்கம் அதீதமாக பெரிதாகிப்போய், உறவுப்பாலங்களைத் தகர்த்து விடுகிறது.


    இம்முக்கோணத்திலிருந்து வெளிவருவதே மனித நேயத்தின் லட்சியம் ஆகும். எதையுமே எதிர்பார்க்காது நாம் இன்னொருவரிடம் அன்பு செலுத்த முடியுமா ?
    அவரவர்கள் தம்மையே சுய பரீக்ஷை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

    இங்கே கவனியுங்கள். ஆசைக்கும் அன்புக்கும் உள்ள வேறுபாட்டினை ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் விளக்க: இதை எல்லோரும் கவனியுங்கள்.

    http://arthamullavalaipathivugal.blogspot.com/2009/06/blog-post_28.html
    இது எனது வலை. எப்பவோ எழுதியது.
    http://thesilentzonewithin.spaces.live.com/blog/cns!716303CC8015C159!1012.entry

    இப்போ ஒரு உரத்த சிந்தனை.

    இதெல்லாம் இருக்கட்டும். நம்ம எல்லாருமே வலை உலகத்திலே பக்கம் பக்கமாக , அதுவும் என்னைப் போல் வேற பெரிசா வேலை இல்லாதவர்கல் எல்லாம் ஒரு வலை போதாது
    அப்படின்னு ஒன்பது வலைப்பதிவுகளில் எழுதித் தள்ளுகிறோமே ! அதெல்லாம் என்ன நம்மிடம் இருக்கும் அசாத்ய அறிவு மற்றவர்களை அடைந்து அவர்களும் பயனடையவேண்டும் என்று சமூக உணர்வுடன் நினைக்கும் அன்புச் செயலோ !!! இல்லை .... பதிவு எழுதுவது இருக்கட்டும். பதிவுக்கு ஒரு பின்னூட்டம் போட்டு விட்டு, எப்படி அவங்க ரீ ஆக்ட்
    பண்ணுவாங்களோ என்று தலையைக் குடைஞ்சுகிட்டு இருக்கிறோமே பல தடவை ( என்னையே சொல்லிக்கொள்கிறேன் என வைத்துக்கொள்ளுங்கள் ) இதெல்லாம் என்ன ?

    நமக்கு அங்கீகாரம் கிடைக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பா ?

    அப்ப எதிர் பார்ப்பே இல்லாம இருக்கமுடியுமா ?

    முடியும் போல் இருக்கிறதே !

    // அவனுடைய திரு உள்ள உகப்புக்கு நாம்! :)//

    பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை
    பற்றுக பற்றிவிடல் . என்பார் வள்ளுவர்.

    நாம் அந்த பாற்கடலான் பாதங்களைப் பற்றுவோம். அதுதான் வழி.


    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  30. " அது என்ன
    RED TRIANGLE !
    Rules, Expectations and Demands
    அப்படின்னு எழுதியிருக்கிறீரே கவினயா ப்ளாக்கிலே !
    பெருமாள்கிட்டே ஒரு அன்பு வச்சு பக்தி பண்ணும்போது இதெல்லாம் எப்படி வரும் ?"

    அப்படின்னு எதித்த ப்ளாக் எனது நண்பர் இன்டர் காமிலே கேட்டாராம்.
    என் தர்ம பத்தினி தான் ஃபோனை எடுத்திருக்கிறார். (என் நண்பர் என்னைப்போல ஒரு இன்டெர்னெட் டூரிஸ்ட். பதிவெல்லாத்தையும் படிப்பார்.
    பின்னுட்டம் எதுவும் போடமாட்டார். எனக்கென்ன தெரியும் அப்படின்னு ஜகா வாங்கிவிடுவார்.)

    அவர் இல்லையே ! அவர் வரட்டுமா நானே சொல்லட்டுமா எனக்கேட்டாளாம் இவள்.
    யதா செள்கர்யம். நீங்களே சொல்லுங்களேன் அப்படின்னாராம் அவர்.

    " காலம்பரே பெருமாள் கோவிலுக்கு போனேளோ ? "

    " ஆஹா! அது நித்யப்படி நான் செய்யறது தானே ! அக்கார வடிசல் பிரசாதம் கொடுத்தா பாருங்கோ !
    அதி பிரமாதம். நாளைக்கும் போகணும் . மனசிலேயே அக்கார வடிசல் ருசி நிண்ணுன்டு இருக்கு. "

    " அப்படியா ! சரி! தீர்த்தம், துளசி பிரசாதம் தந்திருப்பாளே ! "

    " அது இல்லாமயா ! ஆனா பாருங்கோ ! தீர்த்த பாத்திரம் அன்னி அன்னிக்கு நன்னா அலம்ப வேண்டாமோ ! அழுக்கா இருக்காப்பலே ஒரு பிரமை.
    அலம்பி இருக்கணுமேன்னு பயந்துண்டே ஒரு சொட்டு வாயிலே ஊத்திண்டேன். என்ன இருந்தாலும் கார்ப்பொரேஷன்
    வாட்டர் இல்லையோ ! "

    உடனே வந்துட்டேளா ?

    இல்லை. பிரசாதம் வாங்கிக்கிற போது வரவா எல்லாம் முட்டி மோதிண்டு தீர்த்தம், துளசி வாங்கிக்கிறது நன்னா இருக்கா ? எல்லாரும்
    க்யுவிலே இனிமே வரணும்னு ஒரு ஸர்குலர் நோட்டீஸ் போர்டுலே போடுங்கோ அப்படின்னு பட்டர்ட்டே சொல்லிட்டு வந்தேன்.

    அப்ப ஃபோனை வச்சுட்டமா ?

    நான் கேட்டதுக்கு நீங்க பதில் சொல்லலையே ?

    நீங்களே சொல்லிட்டேளே !
    " அக்கார வடிசல் ருசி நிண்ணுன்டு இருக்கு "
    expectations.
    " பாத்திரம் அன்னி அன்னிக்கு ..அலம்ப ... "
    Rule.
    " க்யுவிலே இனிமே வரணும்னு......."
    demands.

    "அப்படியா சொல்றேன். இதெல்லாம் நியாயமாத் தானே இருக்கு." அவர்.
    " நியாயம் இல்லைன்னு நான் சொல்லலையே.
    பெருமாள் மேல ஒரு அன்பு , பக்தி இருக்கும்போது கூட
    அது
    unconditional
    acceptance
    ஆக இருக்கணும்.
    அப்பதான் அது அந்த அன்பு
    Total surrender
    க்கு லீட் பண்ணும்."

    "அப்படியா சொல்றேள்.?"
    "ஆமாம். எனக்குத் தெரிஞ்சது அவ்வளவு தான்.
    மேலும் தெரியணும்னு தோணினா
    திவா ஸார் பிளாக்குக்கு போங்கோ."


    " என்ன கார்த்திப்பா ! நான் சொன்னது பேசினது எல்லாம் சரிதானே " அப்படின்னு இவ நான் வந்தப்புறம் கேட்டா.
    " நீ பேசறது, எல்லாம் சரியில்ல அப்படின்னு நான் என்னிக்கு சொல்லியிருக்கேன் ?" நான்.

    Unconditional Acceptance is the essence of True Love.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  31. வாங்க சுப்பு தாத்தா.

    உங்க பதிவை பார்த்தேன். ஸ்வாமிகள் அழகா சொல்லியிருக்கார், ஒருத்தரோட பழகும்போது, "இவரால் நமக்கு என்ன பயனுண்டு" அப்படின்னு நினைக்காம, "நாம் இவருக்கு எப்படி பயன்படலாம்"னு நினைச்சு பழகணுமாம்.

    //அவரவர்கள் தம்மையே சுய பரீக்ஷை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை.//

    உண்மை.

    ஒரு முறை என்னுடைய கவிதை ஒன்று பற்றி சொல்லும் போது ஒருத்தர் சொன்னார், "யோசிக்க வச்சாலே கவிதைக்கு வெற்றிதான்" அப்படின்னு. அதே போல இந்த பதிவும், வாசிச்சவர்களை யோசிக்க வச்சிருந்தா இதற்கு வெற்றிதான் :)

    //அப்ப எதிர் பார்ப்பே இல்லாம இருக்கமுடியுமா ?

    முடியும் போல் இருக்கிறதே !//

    நீங்களே சொல்லிட்டீங்க.

    //நாம் அந்த பாற்கடலான் பாதங்களைப் பற்றுவோம். அதுதான் வழி.//

    வழியும் சொல்லியாச்சு. அப்புறம் என்ன?

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தாத்தா.

    ReplyDelete
  32. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் உணர்வுகள் மிகவும் அர்த்தமுள்ளவை; அனுபவித்து சுகித்து ஆனந்தப்பட வேண்டியவை.
    இந்த அனுபவங்கள் இல்லாத வாழ்க்கை, ரொம்பவும் வரட்சியாகப் போய் விடும். நாளாவட்டத்தில் வாழ்வதே சுமையாகிப் போகும்.

    இப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்படக் கூடாதென்பதற்காகத் தான் இறைவன் மனத்தைப் படைத்து இந்த உணர்வுகளைக் கூட உலாவ விட்டிருக்கிறான் என்றே நினைக்கிறேன். இறைவன் வாழும் கோயில் மனம் என்றால், அன்பு,பாசம், நேசம், கருணை, இரக்கம் போன்ற அடிப்படை உணர்வுகள் உற்சவ விக்கிரகங்கள். இவை இறைவனையே பிரதிநிதித்துவப் படுத்துபவை. 'அன்பே சிவம்' என்றாற் போல.

    இவைகளை விட்டு விடுதலைப் பெறுதலை விட்டு, வேண்டிக் கைவரப் பெறின், இவற்றிலேயே இறைவனைக் காணின், இறைவன் எப்போதும் நம் கூட இருக்கும் பலம் கிட்டும்.

    வாழ்க்கைப் படகில் அமர்ந்து பிறவிப் பெருங்கடல் கடந்து இறைவனைச் சேரக் கிடைத்த துடுப்புகள் இவை.
    துடுப்புகள் இன்றி யாரேனும் படகோட்டுவாரோ?..

    ReplyDelete
  33. வாங்க ஜீவி ஐயா.

    //இவைகளை விட்டு விடுதலைப் பெறுதலை விட்டு,//

    மன்னிக்க வேண்டும் ஐயா, அவற்றிலிருந்து விடுதலை பெற வேண்டுமென்று சொல்ல வரவில்லை. அன்பு இருக்க வேண்டும், ஆனால் பக்க விளைவுகளான எதிர்மறை உணர்வுகள் இல்லாமல் தூய்மையானதாக இருக்க வேண்டும் - என்கிறதுதான் இங்கே சிந்திக்கப்படுகிற கருத்து.

    பல்வேறு வகை மனிதர்கள் நிறைந்த இந்த உலகத்தில் ஸ்ரீ அரவிந்த அன்னை குறிப்பிட்ட வெவ்வேறு நிலைகளில்தான் அவர்கள் இருந்து கொண்டிருப்பார்கள். பார்வைகளும், இலக்குகளும், அவற்றை அடையும் வழிகளும் பலப்பல. தூய்மை நிறைந்த அன்பு பொங்கி பெருகும் பட்சத்தில் வறட்சி என்ற ஒன்று சாத்தியமே இல்லை.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  34. //" நீ பேசறது, எல்லாம் சரியில்ல அப்படின்னு நான் என்னிக்கு சொல்லியிருக்கேன் ?" நான்.

    Unconditional Acceptance is the essence of True Love.//

    :-)))))))))))
    ஆமா மாமியும் என் ப்ளாக் படிக்கறாளானா?! இன்னும் ஜாக்கிரதையா எழுதணும் போல இருக்கு!

    ReplyDelete
  35. பலரையும் சிந்திக்க வெச்ச பதிவு இது!
    கவிநயா கீப் இட் அப்!

    ReplyDelete
  36. வணக்கம்.. நல்லா இருக்கு.. நன்றி..

    ReplyDelete
  37. சுப்பு தாத்தா, உங்க ரெண்டாவது பின்னூட்டம் என்னுடைய மின்னஞ்சலுக்கு வரலை; நானும் வலைப்பூ பக்கம் வராததால (:) இன்னிக்குதான் பார்த்தேன். மன்னிச்சுக்கோங்க.

    //" நீ பேசறது, எல்லாம் சரியில்ல அப்படின்னு நான் என்னிக்கு சொல்லியிருக்கேன் ?"//

    எல்லாம் சரியில்லைன்னு சொல்ல மாட்டீங்க, ஆனா ஏதாவது ஒண்ணு ரெண்டு மட்டும் சரியில்லைன்னு சொல்வீங்க போல! :)

    பாட்டிக்கும் என்னுடைய நன்றிகள்.

    ReplyDelete
  38. //பலரையும் சிந்திக்க வெச்ச பதிவு இது!
    கவிநயா கீப் இட் அப்!//

    தி.வா. மீள் வருகைக்கும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி!

    (உங்க பதிவுகளை எக்கச்சக்க பேர் படிக்கிறாங்க, தெரியாதா? :)

    ReplyDelete
  39. //குறை ஒன்றும் இல்லை !!! said...
    வணக்கம்.. நல்லா இருக்கு.. நன்றி..//

    வருகைக்கும் வாசிப்புக்கும் மிக்க நன்றி உங்களுக்கும்.

    ReplyDelete
  40. முடிந்ததால் என் வலயத்துக்கு ஒரு முறை வாருங்கள். ஒரு செய்தி காத்திருக்கிறது.

    ReplyDelete
  41. ஸ்ரீ ஆதிசங்கரர் சொல்லுவார், “கெட்ட பிள்ளைகள் இருக்கலாம், ஆனால் கெட்ட அன்னை என்று ஒருவர் இருக்கவே முடியாது” என்று. அன்னையரின் சிறப்பு இதிலிருந்தே தெரியுமே.//

    This is a wrong view not based on ground realities.

    Sankarar was an ascetic. He did not live in a family circle. Hence, his distorted view.
    A mother shows disinterested love upon her child only when the child is a baby and or a little son or daughter wholly dependent upon her, or the parents. The dependency coupled with the fact that the child is yet to know the world enough to save itself, makes her extra conscious of its vulnerability. Such consciousness is called maternal instinct to save and preserve her children from adverse circumstances. However, such maternal instinct slowly gets eroded, or corrupted into different forms, when the child becomes an adult and no longer is in need of external help like hers to save itself. As an adult, the erstwhile child rather saves the mother as she comes to depend upon the child, reversing the roles in human relationship.

    It is rare to see mothers having unalloyed love for adult children today. All of them have become self-interested, not disinterested, because they, too, have to survive. தாயும் பிள்ளையுமானால் வாயும் வயிறும் வேறே.

    Real-life stories abound where mothers discriminate between her own children. The last one gets more love and attention for the same reasons as adumbrated in my first para here. Sons beating mothers, or adult children hating parents for such discrimination, are staple themes of today TV soaps. Such soaps (serials) are not all false.

    You are writing emotionally. Cool thinking requires courage to face life’s harsh realities – one of which is the myth that a human mother shows disinterested love.

    ReplyDelete
  42. அன்பு-பாசம்

    Your understanding vastly differs from mine.

    The first word is in general use, correctly, because the act of showing concern for anyone can be called love. If it is disinterested - that is, expects no returns - the moralists call such act of love as pure and divine. If it expects returns, such act is called corruption of mind.

    One can show love to anyone in any circumstances. Here, too, the principle of vulnerability comes into play more.

    For e.g if a child coughs suddenly, all in the crowd shows concern. Once I was travelling with my child - a boy of four. He had persistent cough. The passengers one by one came and suggested remedy. Some extended it.

    While travelling by a public transport bus in Hyderabad city, a young girl suddenly fell ahead due to the sudden stopping of the bus, and a slight bruish was caused, the boys (I was one among them) who were previously talking in Tamil salaciously about the girl, grew great concern and came forward with remedy as some of them are doctors.

    The crowd where the child coughed, and the bus where the boys showed concern - did so more love, because the subjects of their love are vulnerable humans (In traditional view of males, girls and women are vulnerable and need to be shown love)

    What do you call it? Love. No returns for such love. Then what else?

    Scientists say, it is called altruism. This human trait is embedded in evolution itself. That is, as long as humans live, they will exhibit such acts of altruism.

    ReplyDelete
  43. பாசம்

    This is love with different characterists in different cirucmstances involving different subjects.

    Of course, as you said, it expects returns - but not always.

    It is selfish in its noble sense often.

    The subjects of our pasam are geneally our parents, bros, sis, sis and broinlaws, or even one who comes to live with us, or who interacts with us in personal life, although they may not our family relations.

    Paasam is indeed a greater thing than love. It is deeper and intimate.

    Since materials cares and concern govern our lives, the paasam between hus and wif gets corrupted, as you said. But there are instances galore where you will be disappointed to see that the pasam falls under the noble category I like.

    I often tease my wif: all such concerns are self-interested.

    Her usual reply is: May it be. But let it last long as long as I live.

    My mom and dad's usual bickering is about who should predecease who?

    I used to intervene to say to mom: Since you are junior to dad in age, he will predecease you.

    My mom prayed for many years for a death before my father. Alas, her prayers were not granted. My dad died before her.

    The reason for my mom's prayer was that she did not like the idea of her husband neglected and uncared for.

    I have seen many couples who love one another, withot expecting. Paasam in permanent action there.

    One woman used to bemoan about her husband. You are worried about a man who is jobless and is of no use to you, I would say.

    Her reply was: 'All that I want is let him be present at home if he could not find a job. His presence is sufficient for me"

    She was working. He depended upon her as he became invalid.

    The woman was my mom and her man was my dad.

    Paasam ? It does exist, Madam!

    ReplyDelete
  44. கருத்துகளுக்கு நன்றி திரு.கள்ளபிரான்.

    ReplyDelete
  45. நன்றி அன்பர்களே எனக்கு அன்புக்கும் பாசத்துக்கும் அர்த்தம் புரிஞ்சிடிச்சு. நன்றி இவ்வளவு நாட்களா possessiveness என்ற ஒரு பைத்திய காரனிடம் சிக்கி கொண்டு தவித்தேன் இன்று முதல் தெளிந்துவிடுவன் என்று நம்புகிறேன். நன்றி...... இப்படிக்கு அன்பு என்றால் என்ன வென்று தெரியாத அன்பன் ராஜேஷ்................

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)