Wednesday, June 24, 2009

யாருக்குத் தெரியும்?

ராமுவிற்கு வகுப்பில் கவனம் செல்லவில்லை. இத்தனைக்கும் அவனுக்கு பிடித்த கணக்கு பாடம். அவனுக்கு பிடித்த கனகா டீச்சர். இருந்தாலும் உடம்பு சரியில்லாத அம்மாதான் மனசில் வந்து கொண்டேயிருந்தாள்.

அம்மா மூன்று நாளாக வீட்டு வேலைக்கு போகவில்லை. காய்ச்சல் அதிகமாகிக் கொண்டே வருகிறது. மருந்து வாங்க காசில்லை. எப்போதடா பள்ளி நேரம் முடியும், யாரைக் கேட்கலாம் என்றே யோசனை ஓடிக் கொண்டிருந்தது. அதே யோசனையுடன் வீட்டுப் பாடத்தை கரும்பலகையில் எழுதிக் கொண்டிருந்த கனகா டீச்சரைப் பார்த்தவனுக்கு, சட்டென்று பொறி தட்டினாற் போல் இருந்தது. அவரையே கேட்டால் என்ன? கனகா டீச்சர் அன்பானவர். நிச்சயம் உதவுவார் என்று தோன்றியது.

மணி அடித்து விட்டது. கண் மூடித் திறப்பதற்குள் மந்திரம் போட்டாற் போல் வகுப்பறை காலியாகி விட்டது. டீச்சர் போய் விடுவதற்குள் அவரிடம் கேட்க வேண்டுமே… வேகமாக அவனும் வகுப்பை விட்டு வெளியே வரும்போதுதான் அதைக் கவனித்தான்.

அது ஒரு நூறு ரூபாய் நோட்டு. மேசைக்கு பக்கத்தில் கீழே கிடந்தது. வீட்டுக்குப் போகும் அவசரத்தில் யாருமே கவனிக்கவில்லை போலும். யாருடையதாய் இருக்கும்? சரி, அதுதான் டீச்சரைப் பார்க்க போகிறோமே, அவங்ககிட்டயே குடுத்துடலாம், என்று எண்ணமிட்டபடி அதை எடுத்துக் கொண்டான்.

கனகா டீச்சர், ஆசிரியைகள் அறையில் வீட்டுக்குக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தார்.

“உள்ளே வரலாமா டீச்சர்”, பணிவாகக் கேட்டபடி, அவர் தலையசைத்ததும் உள்ளே நுழைந்தான், ராமு.

“என்னப்பா ராமு? என்ன விஷயம்? ஏதாச்சும் சந்தேகமா?”

“இல்ல டீச்சர்… இந்த நூறு ரூபாய் நம்ம வகுப்பறையில் கிடந்தது. யாருதுன்னு தெரியல. இதை உங்ககிட்ட குடுத்துட்டு, அப்படியே இன்னொரு உதவியும் கேட்கலாம்னு வந்தேன்”.

“அப்படியா?” என்றபடி, தன்னுடைய பர்ஸை திறந்து பார்த்தவர், “அடடா, என்னுடையதுதாம்ப்பா. சரியா மூடாம வச்சிருந்ததால கீழ விழுந்திருச்சு போல. நேர்மையாக கொண்டு வந்து கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி உனக்கு”, என்றார்.

“அது சரி… ஏதோ உதவின்னியே, என்ன விஷயம்?”

“டீச்சர்… என் அம்மாவுக்கு மூணு நாளா உடம்பு சரியில்லை. மருந்து வாங்கணும். கொஞ்சம் பணம் வேணும் டீச்சர். கடனா குடுத்தா போதும்…”, கெஞ்சும் குரலில் தயங்கி தயங்கிக் கேட்டான்.

நூறு ரூபாயை கொண்டு வந்து கொடுத்து விட்டு பிறகு கடன் கேட்கும், தந்தை இல்லாத அந்த பத்து வயதுச் சிறுவனைப் பார்க்க டீச்சருக்கு கொஞ்சம் ஆச்சர்யமாகத் தான் இருந்தது.

“அதனால என்னப்பா. இதோ இதை வச்சுக்கோ…” என்று அவன் கையில் கொஞ்சம் பணத்தை வைத்தார்.

“வேற ஏதாச்சும் வேணும்னாலும் தயங்காம கேளு”

“ரொம்ப நன்றி டீச்சர். கட்டாயம் திருப்பி தந்திடுவேன். போயிட்டு வரேன் டீச்சர்”, என்று முகம் மலர கிளம்பிய ராமுவைத் தடுத்தது டீச்சரின் குரல்.

“ஒரு நிமிஷம் ராமு…”

நின்று திரும்பினான். “டீச்சர்?”

“உனக்கு இவ்வளவு அவசரமா பணம் தேவையாய் இருந்திருக்கு. அப்படின்னா நீயே அந்த நூறு ரூபாயை எடுத்துக்கிட்டு போயிருக்கலாமே? ஏன் என்கிட்ட கொண்டு வந்து குடுத்தே? நீதான் எடுத்தேன்னு யாருக்கு தெரிய போகுது?”

சற்றும் தயங்காமல் பதில் வந்தது, “எனக்கு தெரியுமே, டீச்சர்!”


--கவிநயா

18 comments:

 1. மனம்

  சாட்சி

  -----------------

  அருமையான நிலை - ஆரோக்கியம்.

  ReplyDelete
 2. //'எனக்குத் தெரியுமே'//

  பெரிய விஷயத்தை எளிமையாய் புரிய வைக்கும் அழகான கதை கவிநயா. பாராட்டுக்கள்!

  ReplyDelete
 3. மிக அருமையான குழந்தை, அவனே உங்களுக்கு பரிசினைப் பெற்றுத்தரட்டும்:) (ஆமா, இந்த கதை போட்டிக்குத்தானே? :-))

  ReplyDelete
 4. \\சற்றும் தயங்காமல் பதில் வந்தது, “எனக்கு தெரியுமே, டீச்சர்!”\\

  அட்டகாசம்...


  இசைஞானி அவர்கள் துளிக்கடல் என்ற புத்தகத்தில் இப்படி சொல்லுவாரு

  "எனக்கு குரு
  என் தவறுகள்
  உனக்கு!?"

  "தனியாக எந்த சித்திர குப்தனும் இல்ல நமக்கு நாமே தான் சித்திர குப்தன் எல்லாம்"... அப்படின்னு சொல்லாததும் உண்மை என்ற புத்தகத்தில் திரு. பிரகாஷ்ராஜ் சொல்லியிருப்பாரு.

  உங்க கதையின் கடைசி வரிகளை படித்ததவுடன் இவைகள் ஞாபகத்துக்கு வந்துச்சி ;)

  ReplyDelete
 5. படிப்பினையுள்ள ஒரு குட்டிக் கதை. அழகான நடை.

  ReplyDelete
 6. வாங்க ஜமால்.

  ஆமாம், நீங்களும் அழகா சொன்னீங்க!

  வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 7. //பெரிய விஷயத்தை எளிமையாய் புரிய வைக்கும் அழகான கதை கவிநயா.//

  மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 8. வாங்க மௌலி.

  //ஆமா, இந்த கதை போட்டிக்குத்தானே?//

  ஹ்ம்... அப்படி நினைச்சுதான் அவசரமா பதிஞ்சேன். ஆனால் பிறகு, ஒரு ஆங்கிலப் புத்தகத்தில் படிச்ச ஒரு உண்மைச் சம்பவத்தை கருவாகக் கொண்டு எழுதியது என்பதால் 'இது முழுக்க என் சொந்த கற்பனை' என்று எழுதி கையெழுத்திட மனசு ஒப்பலை. அதனால போட்டிக்கு அனுப்பல. (அதுவும் மனசாட்சி பற்றிய கதை. how ironic!)

  ReplyDelete
 9. வாங்க கோபி.

  //அட்டகாசம்...//

  மிக்க நன்றி. அதே போல பொருத்தமாக நீங்க எடுத்துக் காட்டியிருக்கும் செய்திகளும் அட்டகாசம் :) மீண்டும் நன்றி.

  ReplyDelete
 10. //படிப்பினையுள்ள ஒரு குட்டிக் கதை. அழகான நடை.//

  மிக்க நன்றி ஜெஸ்வந்தி.

  ReplyDelete
 11. நல்லா இருக்குது

  ReplyDelete
 12. இறுதி வரிகளில் மனதைத் தொட்டுவிட்டீர்கள் சகோதரி !

  ReplyDelete
 13. வாங்க மயாதி. நன்றி.

  ReplyDelete
 14. வருக ரிஷு. நன்றி.

  ReplyDelete
 15. மிக்க நன்றி திவா!

  ReplyDelete
 16. கதை மிக்க அருமை, கடைசி வரி அற்புதம்

  ReplyDelete
 17. மிக்க நன்றி கைலாஷி!

  ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)