Sunday, March 15, 2009

சொட்டாங்கல்லும் தட்டாமாலையும்

ரொம்ப நாளைக்கு முன்னாடி திகழ்மிளிர் அவர்கள் ‘வழக்கொழிந்த சொற்கள்’ பற்றி தொடர் பதிவு இட அழைத்திருந்தார். நானும் சிரமப்பட்டு பலவிதமா – அதாங்க, உக்காந்துகிட்டு, படுத்துகிட்டு, சாஞ்சுகிட்டு, நின்னுக்கிட்டு, நடந்துகிட்டு, இப்படில்லாம் - யோசிச்சுதான் பார்த்தேன். ஆனா அப்படி ஒரு சொல்லும் தோணல. என்னோட வழக்கிலிருந்தும் அவங்கல்லாம் மறைஞ்சு போயிட்டதனாலயோ என்னவோ :(

ஆனா ‘வழக்கொழிந்து கொண்டிருக்கும்’ சில சொற்களை நினைச்சு கவலை வந்துருச்சு. தினமும் நாம பேசும் பேச்சை கொஞ்சம் கவனிச்சாலே தெரிஞ்சிரும். முக்கியமா, “அம்மா”, “அப்பா”, இந்த சொற்களே வேகமா மறைஞ்சுகிட்டு வருது. இப்ப இருக்கிற பெற்றோர்கள் எல்லாருமே குழந்தைகளுக்கு, “மம்மி”, “டாடி”ன்னுதான் சொல்லிக் கொடுக்கறாங்க!

காலைல எழுந்து "brush பண்ணாம", "பல் விளக்கு"ங்க! “walking” போகாம, “நடக்கலா”மே. அப்படி இல்லன்னா “exercise” செய்யாம, “உடற்பயிற்சி” செய்யலாம். “காபி”யோ “டீ”யோ குடிக்காம, “குளம்பி”யோ, “தேநீரோ” குடிக்கலாம். “லஞ்சை” “டிபன் பாக்ஸ்”ல எடுத்துக்கிட்டு “பஸ்”ல “ஆபீசு”க்கு போகாம, “மதிய உணவை” ஒரு “சம்புடத்”துல எடுத்துகிட்டு “பேருந்து”ல “அலுவலகத்து”க்கு போகலாம். “ஈவினிங்” “பீச்”சுக்கு போக வேணாம்; “சாயந்திரம்” “கடற்கரை”க்கு போகலாம். அங்கே "கிளிஞ்சல்" பொறுக்கலாம்.

“சம்புடம்” னா டப்பா. டப்பா தமிழ் வார்த்தையா? எனக்கு தெரியல. யாரங்கே! குமரனைக் கூப்பிடுங்கள்! :)

நம்ம ஸ்ரீ காழியூரர் இருக்காரே, அவர் நகைச்சுவையிலும் கலக்குவார்னு எல்லாருக்கும் தெரியும். அவர் ஒரு முறை "ஆட்டோ"வை, "குலுக்கி"ன்னு குறிப்பிட்டிருந்தார்! :)

ஒரு நாள் முழுக்க ஆங்கிலம் கலக்காம தமிழ் பேச முயற்சி செய்தோம்னா, நமக்கே தெரியும்... என்ன தெரியும்னு கேட்கறீங்களா? வேறென்ன, நம்ம (பேசும் தமிழோட) இலட்சணம்தான் :)

“அடுப்படி”, “முகப்பு”, “முற்றம்”, “கொல்லைப் புறம்”, “தோட்டம்”, இந்த மாதிரி சொற்கள் கூட மறைஞ்சுகிட்டுதான் வருது. போகப் போக “கிச்சன்”, "கலர்", இதெல்லாம் தமிழ் வார்த்தை ஆயிடும் போல இருக்கு! அதே போல “கவுண்ட்டர் டாப்”பும்! “மேடை”ன்னு அழகா சொல்லுவோம் அப்போ. “அலமாரி” “உக்கிராணம்” இதெல்லாமும் நினைவு வருது. “உக்கிராணம்”கிறது மளிகை சாமான் வைக்கும் அறை. எங்க ஊர்ப்பக்கம் இப்பவும் புழக்கத்தில் இருக்கிற சொல்.

அடுப்படின்னா, அடுத்து சாப்பாடுதானே? :) “சோறு”ங்கிற சுத்தமான தமிழை விட்டுட்டு எல்லாரும் “சாதம்”னும், சில சமயம் அது கூட இல்லாம “ரைஸ்” னும் சொல்றோம். சோறு வச்சா, “வெஞ்சனம்” இல்லாம சாப்பிட முடியுமா என்ன? வெஞ்சனம்னா நாம சொல்றோமே, கூட்டு, பொரியல், அவியல், இந்த மாதிரி வகையறாக்களுக்கெல்லாம் பொதுவான பேரு. துணைக் கறின்னு சொல்லலாம்.

“அம்மி”, “ஆட்டுக்கல்”, “குழவி”, “உரல்”, “உலக்கை”, இதெல்லாம் நினைவிருக்கா?

எங்க ஊர்ப் பக்கம் காலணிக்கு “நடையன்” அல்லது “மிதியடி”ன்னு சொல்வாங்க. அழகா இருக்குல்ல? :)

தோழி ஒருத்தரோட பேசிக்கிட்டிருந்தப்ப “bore அடிக்குது” ங்கிறதுக்கு தமிழ்ல என்னன்னு கேட்டாங்க. எனக்கும் தெரியல. (தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா!) ஒரு வேளை தமிழ் மக்களுக்கு bore-ரே அடிச்சிருந்திருக்காது, அதனாலதான் அதுக்கு சமமான சொல் இல்லை போலருக்குன்னு அவங்ககிட்ட சொன்னேன். ஆனா “பொழுதே போக மாட்டேங்குது” அப்படிங்கிற பயன்பாட்டை பார்த்திருக்கேன். ரெண்டும் ஒண்ணுதானோ?

ஏன் bore அடிக்கலை அப்படின்னு யோசிச்சப்ப, எனக்கு நினைவு வந்தவைதான், சில ‘வழக்கொழிந்த விளையாட்டுகள்’! போச்சுடா, மலரும் நினைவுகளான்னு யாரோ ஓடறது கேக்குது. கொஞ்சம் பொறுமை! சுருக்கமாதான் சொல்லப் போறேன் :)

நான் வளர்ந்தது மதுரைப் பக்கம் உள்ள ஒரு (குக்)கிராமத்துல. அங்க ஒரு ஆரம்ப நிலைப் பள்ளியும், (அஞ்சாப்பு வரை) ஒரு உயர்நிலைப் பள்ளியும் (பத்தாப்பு வரை) இருந்துச்சு. அப்பல்லாம் தொ(ல்)லைக் காட்சி, கணினி இதெல்லாம் என்னன்னே தெரியாது (அதுக்குன்னு நான் ரொம்ப குடுகுடு கெழவின்னு நினைச்சுக்க வேணாம்! :) அதனால எப்பவுமே வெளிலதான் ‘வெள்ளாடி’க்கிட்டிருப்போம். அதுல முக்கியமானவை சொட்டாங்கல், தட்டாமாலை, கண்ணாமூச்சி, நொண்டி, பாண்டி (சில்லு), ஜோடிப் புறா, அப்புறம் 4 வட்டம் போட்டு, நடுவுல ஒரு வட்டம் போட்டு, கல் வச்சு ஒரு விளையாட்டு உண்டு. அதுக்கு பேரு மறந்து போச்சு. உங்களுக்கு நினைவிருக்கா? அப்புறம் ஊஞ்சல், தாயம், பரமபதம், பல்லாங்குழி, இதெல்லாம் இருக்கவே இருக்கு.

சொட்டாங்கல் என்கிறது கூழாங்கற்கள் வச்சு விளையாடறது. கல் எண்ணிக்கையையும் விதிமுறைகளையும் பொறுத்து, இதுலயே விதவிதமான விளையாட்டுகள் இருக்கு. எங்க வழவழன்னு கல்லப் பாத்தாலும் சேத்து வச்சுக்கிறதுண்டு. விளையாட விளையாட அது இன்னும் வழவழப்பா அழகா ஆயிடும்! இந்த விளையாட்டைப் பத்தி தனிப் பதிவே போடலாம்!

மற்ற விளையாட்டெல்லாம் ஓரளவு உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். விளையாடும்போது ஏமாத்தறவங்களை “கள்ளாட்டம்” ஆடறா, அல்லது “அழுகுணி ஆட்டம்” ஆடறா, அப்படின்னு சொல்வோம் :)

இப்ப சொன்னதுலயும் நெறைய வழக்கொழிந்த சொற்கள் இருக்குதானே? இதுல எனக்கு பிடிச்சது சொட்டாங்கல்லும், ஊஞ்சலும் :) ரொம்பப் பிடிச்சது தட்டாமாலை. இப்ப கூட ஆள் கெடச்சா இழுத்துகிட்டு சுத்தறதுண்டு! :)

அப்பாடி! தலைப்பு வச்சிட்டு ஆரம்பிச்சு, எப்படியோ தலைப்பை சம்பந்தப்படுத்தி எழுதிட்டேன்!

ஒரு பையன் பரீட்சைக்கு தென்னை மரத்தைப் பத்தி மட்டும் படிச்சுட்டு போனானாம். ஆனா பரீட்சையில மாட்டைப் பற்றி எழுத சொல்லியிருந்தாங்களாம். உடனே இந்தப் பையன் தென்னை மரத்தைப் பத்தி முழநீளக் கட்டுரை எழுதிட்டு, “இப்படிப்பட்ட மரத்தில்தான் மாட்டைக் கட்டுவார்கள்”னு முடிச்சானாம்! இது எப்படி இருக்கு? :)

இந்தத் தொடரைத் தொடர

தமிழ்ச் செம்மல், அ.உ.ஆ.சூ. குமரனையும்
தானைத் தலைவி கீதாம்மாவையும்
தமிழ் மணக்கும் மகரந்தத்துக்கு சொந்தக்காரர் ஜிராவையும்

வருக வருகவென வரவேற்கிறேன்!

அப்பாடா! நான் எழுதினதுலேயே நீ……ளமான பதிவு இது! யாருப்பா அங்கே! கொஞ்சம் சோடா கொண்டு வாங்க – (நிஜமாவே) இது வரைக்கும் படிச்சவங்களுக்கு மட்டும் குடுங்க!!

“போர்”, “வெறுப்பு” “வன்முறை”, “தீவிரவாதம்”, “பயங்கரவாதம்”, இது போன்ற சொற்களெல்லாம் விரைவில் வழக்கொழிந்த சொற்களாக ஆகி விட வேண்டும் என்ற என் சின்ன ஆசையை இங்கே தெரிவிச்சிக்கிட்டு (ஒரு வழியா) விடைபெறுகிறேன் அன்பர்களே!

அன்புடன்
கவிநயா

36 comments:

  1. //(அதுக்குன்னு நான் ரொம்ப குடுகுடு கெழவின்னு நினைச்சுக்க வேணாம்! :) //

    க்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னோட போட்டி? :)))))))

    கலக்கல் பதிவு இது தான் உங்க பதிவுகளிலேயே, அது என்ன நான் எழுத நினைச்சதெல்லாம் நீங்க எழுதிட்டீங்க?/ நான் தேடிக் கண்டு பிடிக்கணும் இப்போ! :P:P:P

    கொஞ்சம் நாள்/மாசம்??? ஆகும்! சரியா??? அந்தக் கல் ஆட்டம், நானும் விளையாடி இருக்கேன்,ம்ம்ம்ம்ம் பேரு?? கண்டு பிடிக்கப் பார்க்கிறேன்.

    ReplyDelete
  2. மிக நாஸ்டாலஜிக்கான இடுமை...ஆமாம், நாஸ்டாலஜிக் அப்படிங்கறதுக்கு தமிழ்ல என்னக்கா சொல்லணும்?. :(

    வார், வையலன்ஸ், டெரரிசம் இதல்லாம் தான் இப்போ தமிழ் சஞ்சிகைகள்/பத்திரிகைகளிலேயே வரும் வார்த்தைகளாயிடுச்சே, ஆகையால், போர், வன்முறை, திவிரவாதம் போன்றவை மறைந்து/மறந்து தான் போகிறது... :(

    ReplyDelete
  3. தட்டமாலை சுற்றலாம் வர்றீங்களா, நான் தயார் [கவனியுங்க, ‘ரெடி’ன்னு சொல்லலை:)]! அருமையான பதிவு கவிநயா.

    //
    ஒரு பையன் பரீட்சைக்கு தென்னை மரத்தைப் பத்தி மட்டும் படிச்சுட்டு போனானாம். ஆனா பரீட்சையில மாட்டைப் பற்றி எழுத சொல்லியிருந்தாங்களாம். உடனே இந்தப் பையன் தென்னை மரத்தைப் பத்தி முழநீளக் கட்டுரை எழுதிட்டு, “இப்படிப்பட்ட மரத்தில்தான் மாட்டைக் கட்டுவார்கள்”னு முடிச்சானாம்! இது எப்படி இருக்கு? :)//

    நல்லாவேயிருக்கு:))! நான் ஆசிரியரா இருந்தால் பையனின் சமயோஜிதத்தையும் குறும்பையும் பாராட்டி முழு மதிப்பெண்களே கொடுத்திடுவேன்:)!

    கடைசிப் பத்தியில் நீங்கள் சொல்லியிருக்கும் சின்ன ஆசைதான் எல்லோரது கனவும்.

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. யப்பா...எத்தனை நாள் ஆச்சு இந்த பதிவை எழுத!!!? கலக்கல் ;)

    \\ஒரு பையன் பரீட்சைக்கு தென்னை மரத்தைப் பத்தி மட்டும் படிச்சுட்டு போனானாம். ஆனா பரீட்சையில மாட்டைப் பற்றி எழுத சொல்லியிருந்தாங்களாம். உடனே இந்தப் பையன் தென்னை மரத்தைப் பத்தி முழநீளக் கட்டுரை எழுதிட்டு, “இப்படிப்பட்ட மரத்தில்தான் மாட்டைக் கட்டுவார்கள்”னு முடிச்சானாம்! இது எப்படி இருக்கு? :)\\\

    ;-) ;-) ;-)

    ReplyDelete
  5. நீண்ட பதிவில், ஊருக்கே இழுத்துச் சென்று விட்டீர்கள் எங்களை எல்லாம்.

    ஒருகாலத்தில இருந்து இன்று வரை, டாடி சொல்லு, மம்மி சொல்லுங்கிறது நாகரீகமா இருந்தது. இப்ப கொஞ்சம் மாற்றம் தெரிகிறது.

    இங்கே எங்க ஊரில், நிறைய பிள்ளைகள், அப்பா, அம்மா என்று தான் அழைக்கிறார்கள்.

    ReplyDelete
  6. நானும் நீங்க சொல்ற மாதிரியெல்லாம் தான் சிந்திச்சுப் பார்க்கணும். அப்படியும் ஏதாவது எழுதத் தேறுமாங்கறது ஐயம் தான். :-)

    எங்க குழந்தைகளுக்கு அம்மா அப்பாங்கற சொற்கள் தெரியுமான்னு நினைச்சுப் பார்த்தேன். மகனுக்குத் தெரியாது; மகளுக்குத் தெரியும். மகனுக்கு அம்பா பாபா தான் தெரியும் :-) மகள் அம்பா பாபாவுக்குத் தமிழ்ல என்ன சொல்லணும்ன்னு என்கிட்ட கத்துக்கிட்டு அவ தோழிக்குச் சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருக்கா. :-)

    பையன் 'ஈ பண்ணுவான்'; பொண்ணு 'பல் விளக்குவா' (சௌராஷ்ட்ரத்துல சொல்லுவோம்). ஆனா நாங்க நாலு பேரும் 'வாக்கிங்க்' தான் போறோம். அதே மாதிரி 'எக்ஸர்சைச்' தான் பண்றோம். எங்க வீட்டுல காப்பி டீ குடிக்கிறதில்லை. மத்ததெல்லாம் நீங்க சொன்னா மாதிரி ஆங்கிலத்துல தான் செஞ்சுக்கிட்டு இருக்கோம்.

    சம்புடம், டப்பா தமிழான்னு தெரியலையே அக்கா.

    ஆங்கிலம் கலக்காம பேசுறது மிகக்கடினம். சொல் ஒரு சொல் எழுதுறப்ப ஒரு முறை இராகவன் தொலைபேசினார். சொல் ஒரு சொல்லுக்காகவே முழுக்க முழுக்கத் தமிழ்லயே பேசணும்ன்னு முயற்சி செஞ்சா ரெண்டு பேருக்கும் முடியலை. அப்புறம் வழக்கம் போல ஆங்கிலம் கலந்து பேசத் தொடங்கிட்டோம்.

    பேச்சுல ஆங்கிலம் கலக்காம பேசுறதுக்கு முன்னாடி எழுத்துல ஆங்கிலமும் வடமொழியும் கலக்காம எழுத முயன்றா இன்னும் நல்லா இருக்கும். எழுத எழுத தமிழ்ச் சொற்களின் பழக்கம் வரும்; அதை அப்புறம் பேச்சுக்கும் கொண்டு போகலாம்.

    போர் அடிக்குதுங்கற சொல்லை ரெண்டு விதமா பயன்படுத்துறாங்க. பொழுது போகலைங்கறது ஒரு பயன்பாடு; பேசுறது, படிக்கிறது, பாக்குறது இதுல ஏதோ ஒன்னு சுவைப்படலைங்கறது இன்னொரு பயன்பாடு. நான் ஏதாவது இலக்கியம், ஆன்மிகம்ன்னு பேசத் தொடங்கினா எங்க வீட்டு அம்மணி அப்படி சொல்லுவாங்க. :-)

    தட்டாமாலை, கண்ணாமூச்சி, நொண்டி, பாண்டி இதெல்லாம் தெரியும். தட்டாமாலை தவிர மத்த மூணையும் வெள்ளாடியிருக்கேன். இப்ப பொண்ணு கூட நொண்டி பாண்டி எல்லாம் வெள்ளாடுறேன். தட்டாமாலையும். அதுல மட்டும் பையனும் போட்டிக்கு வருவான். ஆனா சொட்டாங்கல்லு, சோடிப்புறா எல்லாம் என்னன்னு தெரியலை. சொட்டாங்கல்லு பத்தி தனியா பதிவு போடுங்க அக்கா.

    ஊஞ்சல் பாட்டி வீட்டுல இருந்தது. தாயம், பரமபதம், பல்லாங்குழி இதெல்லாம் இப்ப கூட பொண்ணு கூட விளையாடுறேன். அவ பொறக்குறதுக்கு முன்னாடி அவங்க அம்மா கூட விளையாடியிருக்கேன்.

    ஆமாம் அக்கா. பேருந்துல படிக்கிறதுக்காக வெட்டி ஒத்துனப்ப கவனிச்சேன். இம்புட்டு நீளமாவா அக்கா எழுதியிருக்காங்கன்னு. :-)

    எனக்கு சோடா கட்டாயம் வேணும். என்னோட பின்னூட்ட நீளத்தைப் பார்த்தாலே தெரியும் நான் ஒழுங்கா முழுசா படிச்சிருக்கேன்னு. :-)

    ReplyDelete
  7. சதங்கா,

    எனக்குத் தெரிந்து சில பேர் இன்னும் 'டாடி சொல்லு', 'மம்மி சொல்லு'ன்னு சொல்றாங்க. அதோட 'ஈட் பண்ணு', 'ரன் பண்ணு', 'சிட் பண்ணு', 'ஸ்டான்ட் பண்ணு'ன்னு பண்ணுத்தமிழும் பேசறாங்க. பண்ணுத்தமிழ்த்தொல்லை தான் அதிகம். :-)

    ReplyDelete
  8. //க்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னோட போட்டி? :)))))))//

    :))) சில வருஷங்கள்ல அங்கே வந்துதானே ஆகணும், வேண்டாம்னாலும் :)))

    //கலக்கல் பதிவு இது தான் உங்க பதிவுகளிலேயே, //

    அப்படியா சொல்றீங்க... ரொம்ப நன்றி :)

    //கொஞ்சம் நாள்/மாசம்??? ஆகும்! சரியா???//

    திகழ்மிளிர் என்கிட்ட சொல்லியும் மாசம் ஆயிடுச்சு அம்மா!

    //அந்தக் கல் ஆட்டம், நானும் விளையாடி இருக்கேன்,ம்ம்ம்ம்ம் பேரு?? //

    நீங்க கண்டு பிடிச்சிருவீங்க :) வெயிட்டிங்...

    ReplyDelete
  9. //மிக நாஸ்டாலஜிக்கான இடுகை...ஆமாம், நாஸ்டாலஜிக் அப்படிங்கறதுக்கு தமிழ்ல என்னக்கா சொல்லணும்?. :(//

    வாங்க மௌலி. எனக்கும் தெரியல. எப்படி குமரன் கவனிக்காம விட்டாரு? :) "ஏங்க வைக்கும் அந்த நாள் ஞாபகம்"னு சொல்லலாமா?

    //வார், வையலன்ஸ், டெரரிசம் இதல்லாம் தான் இப்போ தமிழ் சஞ்சிகைகள்/பத்திரிகைகளிலேயே வரும் வார்த்தைகளாயிடுச்சே, ஆகையால், போர், வன்முறை, திவிரவாதம் போன்றவை மறைந்து/மறந்து தான் போகிறது... :(//

    நீங்க சொல்றது உண்மைதான் :(

    ReplyDelete
  10. //தட்டமாலை சுற்றலாம் வர்றீங்களா, நான் தயார் [கவனியுங்க, ‘ரெடி’ன்னு சொல்லலை:)]!//

    நல்ல பொண்ணு. தட்டாமாலைக்கு எப்பக் கூப்பிட்டாலும் நான் தயார் ராமலக்ஷ்மி :)

    //நல்லாவேயிருக்கு:))! நான் ஆசிரியரா இருந்தால் பையனின் சமயோஜிதத்தையும் குறும்பையும் பாராட்டி முழு மதிப்பெண்களே கொடுத்திடுவேன்:)!//

    நல்ல ஆசிரியை :) இந்த கதை நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைச்சேன்!

    //கடைசிப் பத்தியில் நீங்கள் சொல்லியிருக்கும் சின்ன ஆசைதான் எல்லோரது கனவும்.//

    கனவு நனவாகட்டும்.

    நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  11. வாங்க கோபி.

    //யப்பா...எத்தனை நாள் ஆச்சு இந்த பதிவை எழுத!!!? கலக்கல் ;)//

    அச்சோ. நாளெல்லாம் ஆகலப்பா. ரெண்டு மணி நேரம் ஆகியிருக்கும். சரக்குதான் ரொம்ப நாள் சிக்காமயே இருந்தது. தோணின பிறகு விறுவிறுன்னு எழுதிட்டேன் :)

    நன்றி கோபி :)

    ReplyDelete
  12. //இங்கே எங்க ஊரில், நிறைய பிள்ளைகள், அப்பா, அம்மா என்று தான் அழைக்கிறார்கள்.//

    மகிழ்ச்சியான விஷயம் சதங்கா :)

    வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  13. குமரா, தமிழ்க் கடவுளே! உங்க பின்னூட்டத்துக்கு பதில் எழுதறதுக்கு முந்தி சோடா குடிச்சிட்டு (உங்களுக்கும் எடுத்துகிட்டு) வாரேன். கொஞ்சூண்டு காத்திருக்கவும் :)

    ReplyDelete
  14. /*ஒரு நாள் முழுக்க ஆங்கிலம் கலக்காம தமிழ் பேச முயற்சி செய்தோம்னா, நமக்கே தெரியும்... என்ன தெரியும்னு கேட்கறீங்களா? வேறென்ன, நம்ம (பேசும் தமிழோட) இலட்சணம்தான் :)*/
    :-) வேதனையான உண்மை.

    ReplyDelete
  15. கல் ஆட்டம்? கல்பாரி ன்னு நாங்க சொல்லுவோம். ஓசூர் வழக்கு.

    ஆங்கிலம் கலவாத பேச்சு பசங்களோட நானும் ஆடி இருக்கேன். எப்பவும் எனக்குத்தான் முதல் பிரைஸ்! :-)))))))

    ReplyDelete
  16. //நானும் நீங்க சொல்ற மாதிரியெல்லாம் தான் சிந்திச்சுப் பார்க்கணும். அப்படியும் ஏதாவது எழுதத் தேறுமாங்கறது ஐயம் தான். :-)//

    உங்களுக்குத் தேறும்கிறதில் எனக்கு ஐயமில்லை குமரா :)

    குட்டிப் பொண்ணு உங்கள மாதிரியே தமிழ்ல ஆர்வமா வருவா போல! ரொம்ப சந்தோஷம் :) குட்டிப் பையன் "ஈ" தானே பண்றான்,, "E" பண்ணலயே :)

    சம்புடம் தமிழ்தான். டப்பாதான் தெரியல.

    ஆங்கிலம் கலக்காம பேசறது கடினம்தான். ஆனா நீங்க சொல்ற மாதிரி அப்படி எழுதிப் பழகினா, பேச்சுலயும் நாளாவட்டத்துல வந்ந்துரும். எனக்கே இப்பல்லாம் இயல்பாவே "சுத்த" தமிழ்தான் பேசும்போதும் வருது :)

    ReplyDelete
  17. //நான் ஏதாவது இலக்கியம், ஆன்மிகம்ன்னு பேசத் தொடங்கினா எங்க வீட்டு அம்மணி அப்படி சொல்லுவாங்க. :-)//

    அதையெல்லாம் கேட்க/படிக்கதான் நாங்க இருக்கோம்ல? அப்புறம் ஏன் அவங்கள வேற தொந்தரவு பண்றீங்க? :)

    //இப்ப பொண்ணு கூட நொண்டி பாண்டி எல்லாம் வெள்ளாடுறேன். தட்டாமாலையும்.//

    பரவாயில்லயே. இந்த விளையாட்டெல்லாம் இப்பவும் விளையாடறது எனக்குத் தெரிஞ்சு நீங்க மட்டும்தான்! உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! :)

    //அவ பொறக்குறதுக்கு முன்னாடி அவங்க அம்மா கூட விளையாடியிருக்கேன்.//

    ம்... :))

    //இம்புட்டு நீளமாவா அக்கா எழுதியிருக்காங்கன்னு. :-)//

    ஆமா, நானே எழுதி முடிச்ச பிறகுதான் உணர்ந்தேன். அப்புறம் எதைக் குறைக்கிறதுன்னு தெரியாம அப்படியே போட்டுட்டேன்.

    //எனக்கு சோடா கட்டாயம் வேணும். என்னோட பின்னூட்ட நீளத்தைப் பார்த்தாலே தெரியும் நான் ஒழுங்கா முழுசா படிச்சிருக்கேன்னு. :-)//

    ஆமாம்! ரொம்ப சமர்த்துதான் நீங்க! ஒழுங்கா படிச்சதுக்கு ரொம்ப நன்றி :) என்னிக்காவது உங்கள பார்க்கும்போது சோடா வாங்கி தர்றேன் :)

    ReplyDelete
  18. //:-) வேதனையான உண்மை.//

    வாங்க அமுதா. வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி :)

    ReplyDelete
  19. //பண்ணுத்தமிழ்த்தொல்லை தான் அதிகம். :-)//

    ஆமாம், அது இன்னும் மோசம் :)

    ReplyDelete
  20. வாங்க திவா.

    //கல் ஆட்டம்? கல்பாரி ன்னு நாங்க சொல்லுவோம். ஓசூர் வழக்கு.//

    கேள்விப்பட்ட மாதிரி இருக்கு...

    //ஆங்கிலம் கலவாத பேச்சு பசங்களோட நானும் ஆடி இருக்கேன். எப்பவும் எனக்குத்தான் முதல் பிரைஸ்! :-)))))))//

    முதல் பரிசு?? :)))

    ReplyDelete
  21. ஆ! ¨பாய்ண்ட¨ பிடிச்சுட்டீங்க!

    ReplyDelete
  22. //ஆ! ¨பாய்ண்ட¨ பிடிச்சுட்டீங்க!//

    ஹா... ஹா :)))

    ReplyDelete
  23. முதலில் பதிவிற்கு நன்றிங்க

    ReplyDelete
  24. /ஒரு நாள் முழுக்க ஆங்கிலம் கலக்காம தமிழ் பேச முயற்சி செய்தோம்னா, நமக்கே தெரியும்... என்ன தெரியும்னு கேட்கறீங்களா? வேறென்ன, நம்ம (பேசும் தமிழோட) இலட்சணம்தான் :)
    /

    சரியாகச் சொன்னீர்கள். நானும் முட்டி மோதி முயன்ற அளவு பிறச்சொல் கலக்காது தமிழ் பேச முயன்று கொண்டிருக்கிறேன்

    ReplyDelete
  25. /தோழி ஒருத்தரோட பேசிக்கிட்டிருந்தப்ப “bore அடிக்குது” ங்கிறதுக்கு தமிழ்ல என்னன்னு கேட்டாங்க. எனக்கும் தெரியல. (தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா!) ஒரு வேளை தமிழ் மக்களுக்கு bore-ரே அடிச்சிருந்திருக்காது, அதனாலதான் அதுக்கு சமமான சொல் இல்லை போலருக்குன்னு அவங்ககிட்ட சொன்னேன். ஆனா “பொழுதே போக மாட்டேங்குது” அப்படிங்கிற பயன்பாட்டை பார்த்திருக்கேன். ரெண்டும் ஒண்ணுதானோ?

    /
    உண்மை தான்

    /ஒரு பையன் பரீட்சைக்கு தென்னை மரத்தைப் பத்தி மட்டும் படிச்சுட்டு போனானாம். ஆனா பரீட்சையில மாட்டைப் பற்றி எழுத சொல்லியிருந்தாங்களாம். உடனே இந்தப் பையன் தென்னை மரத்தைப் பத்தி முழநீளக் கட்டுரை எழுதிட்டு, “இப்படிப்பட்ட மரத்தில்தான் மாட்டைக் கட்டுவார்கள்”னு முடிச்சானாம்! இது எப்படி இருக்கு? :)
    /

    ;))))))))))))))))

    ReplyDelete
  26. /போர்”, “வெறுப்பு” “வன்முறை”, “தீவிரவாதம்”, “பயங்கரவாதம்”, இது போன்ற சொற்களெல்லாம் விரைவில் வழக்கொழிந்த சொற்களாக ஆகி விட வேண்டும் என்ற என் சின்ன ஆசையை இங்கே தெரிவிச்சிக்கிட்டு (ஒரு வழியா) விடைபெறுகிறேன் அன்பர்களே!

    /

    அப்படியே ஆக வேண்டும்

    வாழ்த்துகள்
    மீண்டும் ஒருமுறை

    அன்புடன்
    திகழ்

    ReplyDelete
  27. வாங்க திகழ்மிளிர். உங்களதான் எதிர்பார்த்தேன் :)

    //சரியாகச் சொன்னீர்கள். நானும் முட்டி மோதி முயன்ற அளவு பிறச்சொல் கலக்காது தமிழ் பேச முயன்று கொண்டிருக்கிறேன்//

    உங்க தமிழ் ஆர்வத்தை பார்க்கும்போது உங்களுக்கு அது மிக சுலபமாகவே வரும்கிறதில சந்தேகமில்லை :)

    வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  28. \\“அம்மி”, “ஆட்டுக்கல்”, “குழவி”, “உரல்”, “உலக்கை”, இதெல்லாம் நினைவிருக்கா?
    \\

    இத மறக்க இயலுமா

    இன்னும் நாங்க பெயரலிவிலாவது உபயோகிக்கின்றோம் ...

    ReplyDelete
  29. //இன்னும் நாங்க பெயரலிவிலாவது உபயோகிக்கின்றோம் ...//

    @நட்புடன் ஜமால், ஆற்காட்டார் தயவிலே நாங்க இன்னமும் அம்மியைப் பயன்படுத்தறோம். ஆட்டுக்கல் இருக்கு, ஆனால் பயன்படுத்த முடியலை. என்றாலும் அதையும் பயன்படுத்த ஆரம்பிக்கணும்னு ஒரு சின்ன ஆசை இருக்கு. அம்மி தவிர்க்க முடியலை, தேவை இருக்கு.

    ReplyDelete
  30. புது இடுகை இருக்கானு பார்க்க வந்தேன்! பின்னூட்டங்கள் அனைத்துமே ஒரு புது இடுகையா இருக்கு. நன்னிங்கோ! :)))))))

    ReplyDelete
  31. //இன்னும் நாங்க பெயரலிவிலாவது உபயோகிக்கின்றோம் ...//

    அப்படியா... மகிழ்ச்சி ஜமால் :) வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  32. //அம்மி தவிர்க்க முடியலை, தேவை இருக்கு.//

    அச்சோ, பாவம் அம்மா. கைவலியோட அம்மி வேறயா? :(((

    அம்மி ஆட்டுக்கல்லுல எல்லாம் அரைச்சிருக்கேன் சின்ன வயசுல. மிளகாய் அரைச்சா கை நல்லாவே எரியும்! ஆனா அரைக்க பிடிக்கும் :) (அறுக்கன்னு படிச்சா நான் பொறுப்பில்லேங்க :)

    ReplyDelete
  33. //பின்னூட்டங்கள் அனைத்துமே ஒரு புது இடுகையா இருக்கு. நன்னிங்கோ! :)))))))//

    நல்லா சொன்னீங்க... :)))

    //புது இடுகை இருக்கானு பார்க்க வந்தேன்!//

    வருகைக்கு நன்றி அம்மா :)

    ReplyDelete
  34. //பின்னூட்டங்கள் அனைத்துமே ஒரு புது இடுகையா இருக்கு. நன்னிங்கோ! :)))))))//

    நல்லா சொன்னீங்க... :)))

    //புது இடுகை இருக்கானு பார்க்க வந்தேன்!//

    வருகைக்கு நன்றி அம்மா :)

    ReplyDelete
  35. மிக சிறப்பான படைப்புகள். வாழ்த்துக்கள் தொடருங்கள்.

    ReplyDelete
  36. வாங்க புகழ். ஜெய பிரபு.

    முதல் வருகைக்கும் ஊக்கமளிக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)