Friday, February 27, 2009

இறைவனுக்கு உருவம் உண்டா, இல்லையா?

இந்தக் கேள்விக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணர் என்ன பதில் சொல்கிறார் என்று பாருங்கள் -

இறைவன் என்பவன் முடிவில்லாமல் பரந்து கிடக்கும் மகா சமுத்திரத்தைப் போன்றவன். சமுத்திரம் அதீத குளிர்ச்சியின் காரணமாக சில இடங்களில் உறைந்திருக்கும். அவ்விதம் உறைந்த பனிக் கட்டிகள் பலவித வடிவங்களில் இருக்கும். ஆனால் சிறிது வெப்பம் அதிகரித்ததும் பனி உருகி நீரோடு நீராகக் கலந்து விடும். பனிக்கட்டியும் நீரும் ஒரே சமுத்திரத்தைச் சேர்ந்தவைதான்.

இறைவனும் அப்படித்தான். பக்தியின் குளிர்ச்சியால் அவன் பக்தர்களுக்கு தகுந்தாற்போல பலவேறு வடிவங்களில் தோன்றுகிறான். ஞானம் என்ற வெம்மை செயல்பட ஆரம்பித்ததும், அவனும் வடிவமற்றவானாகி விடுகிறான். இவ்வாறாக, பக்தனுக்கு வடிவம் தேவைப்படுகிறது. ஞானிக்கு வடிவம் தேவைப்படுவதில்லை.

இதே செய்தியை (என்னை மாதிரி ஆட்களுக்கு) ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஒரு குட்டிக் கதையின் மூலமாக இப்படியும் விளக்குகிறார் -

ஒரு மனிதன் காட்டுக்குள் சென்றான். அங்கு ஒரு மரத்தின் மீது சின்ன விலங்கொன்றைப் பார்த்தான்.திரும்பி வந்த போது மற்றொரு மனிதனிடம், காட்டில் ஒரு அழகான சிவப்பு நிற விலங்கைப் பார்த்ததாகச் சொன்னான்.

அதைக் கேட்ட அம்மனிதன், "நானும் காட்டுக்குள் போன போது அந்த விலங்கைப் பார்த்தேன். ஆனால் அது பச்சை நிறமாக இருந்தது. நீ ஏன் சிவப்பு என்று சொல்கிறாய்?" என்றான்.

அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த இன்னொருவன், அவர்கள் இருவர் சொல்வதுமே தவறு என்றும் அந்த விலங்கின் நிறம் மஞ்சள் என்றும் தெரிவித்தான்.

இப்படியாக அங்கிருந்த ஒவ்வொருவரும், தாங்களும் அந்த விலங்கைப் பார்த்திருப்பதாகவும் ஆனால் பிறர் கூறும் நிறங்கள் தவறென்றும், தாங்கள் கண்டதே சரியென்றும் கூறினார்கள். ஒருவரை ஒருவர் நம்பாமல் தொடர்ந்த இந்த உரையாடல் வாக்குவாதமாக உருவெடுத்தது.விவாதத்துக்கு தீர்வு காணவென்று அனைவரும் சேர்ந்து அந்த மரத்தடிக்குச் சென்றார்கள்.

அந்த மரத்தடியிலே வாழ்ந்து வரும் ஒருவனிடம், தங்கள் பிரச்சனையை சொன்னார்கள். அவன், "ஆம், இந்த மரத்தடியில் நான் வெகு காலமாக வாழ்ந்து வருவதால், நீங்கள் சொல்லும் விலங்கைப் பற்றி நன்கு அறிவேன். நீங்கள் சொன்னது அனைத்துமே சரிதான். அந்த விலங்கு ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு நிறமாகத் தோன்றுவது உண்மைதான். சமயத்தில் நிறமே இல்லாமல் கூடத் தோன்றும் அதன் பெயர் பச்சோந்தி", என்று தெரிவித்தான்.

இவ்விதமாகவே இறையன்பர்களும் தாங்கள் விரும்பும் வண்ணமாகவே இறைவனைக் காண்கிறார்கள். இறைவனும் தன் அளப்பரிய அன்பினால் தன் பக்தன் எப்படி விரும்புகிறானோ அவ்விதமாகவே அவனுக்குக் காட்சி அளிக்கிறான்.

ஸ்ரீ ராமகிருஷ்ணர் 1800 களில் வாழ்ந்திருந்தாலும், அவருடைய செய்திகள் ஒவ்வொன்றும் எக்காலத்திற்கும் பொருந்துவன. அந்தக் காலத்திலேயே இறைவன் ஒருவனே என்றும், பலவித மதங்களும் ஒரே இறைவனை அடைவதற்கான வெவ்வேறு வழிகளே என்றும் அனுபவபூர்வமாக உணர்ந்து, மக்களுக்கும் உணர்த்தியவர். மற்றவர்களுடைய நம்பிக்கையை மதிக்க வேண்டும் என்றும் அப்போதே அறிவுறுத்தியிருக்கிறார்.

இறைவன் முக்குணங்களுக்கும், விருப்பு வெறுப்புகளுக்கும் அப்பாற்பட்டவன். மனித உணர்வுகளுக்குத் தகுந்தாற்போல நாமே அவனுக்கு உருவங்களையும், குணங்களையும் கற்பித்துக் கொண்டு, பிறகு நாமே அடித்துக் கொள்கிறோம். நமக்குப் பிடித்த மாதிரி இறைவனை வணங்குவதில் தவறே இல்லை. இன்னும் சொல்லப் போனால், அது அவரவருடைய உரிமை. அதற்காக நம்மைக் கேலி செய்யவோ தாழ்த்திப் பேசவோ எவருக்கும் உரிமை இல்லை.

அதே சமயம், நாமும் பிறருடைய நம்பிக்கைகளை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். பிறரைக் கேலி செய்யவும் தாழ்த்திப் பேசவும் நமக்கும் எந்த உரிமையும் இல்லை. இதை உணர்ந்து கொண்டு விட்டாலே, எந்த வித பிரச்சனையும் வராது. ஆனால், அது ஏன் அவ்வளவு கடினமாக இருக்கிறது என்றுதான் எனக்குப் புரிவதே இல்லை. உங்களுக்கு?

(ரெண்டு நாள் கழிச்சு பண்ணறதுக்கு schedule பண்ணினா, ப்ளாகருக்கு பிடிக்கல. சொதப்பி, உடனே பப்ளிஷ் பண்ணிருச்சு. குழப்பம் வேணாம்னு அப்படியே விட்டுட்டேன். மன்னிச்சுக்கோங்க)

20 comments:

  1. இறைவடிவம் (நம் கண்களால் அறிந்திராத) ஒளியே என்றே பலசமயங்களும் மதங்களும் கூட சொல்கின்றன. அதனால் வடிவமற்றது என்று சொல்லிவிடமுடியாது. எங்கும் இருப்பது எல்லாமுமாக இருப்பது என்று சொல்லிவிட்டால் பிரித்து பெயர் வைத்து வணங்குவதும் கூட கடினம் தான். நான் பலரிடம் சொல்வது சூரிய ஒளி எங்கும் இருக்கிறது என்பதற்காக சூரியன் எங்கும் உண்டு என்று சொல்லிவிடமுடியுமா ?

    :)

    நல்ல இடுகை கவிநயா.

    இராமகிருஷ்ணர் மற்றும் விவேகந்தர் பற்றி படிப்பது எனக்கு பிடித்தமான ஒன்று

    //அதே சமயம், நாமும் பிறருடைய நம்பிக்கைகளை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். பிறரைக் கேலி செய்யவும் தாழ்த்திப் பேசவும் நமக்கும் எந்த உரிமையும் இல்லை. இதை உணர்ந்து கொண்டு விட்டாலே, எந்த வித பிரச்சனையும் வராது. ஆனால், அது ஏன் அவ்வளவு கடினமாக இருக்கிறது என்றுதான் எனக்குப் புரிவதே இல்லை. உங்களுக்கு?//

    கடவுள் உயர்ந்தது என்பதுடன் நிற்பது இல்லை, நாம வழிபடும் கடவுளே உயர்ந்தவர் என்று நினைப்பதால் அவ்வாறு வேற்றுமைகள் பரவுகிறது. பிறரை தாழ்த்துவதன் மூலம் தான் உயர முடியும் என்கிற தாழ்வான நம்பிக்கை. இது கிட்டத்தட்ட ஒரே சமவெளியில் நிற்கும் ஒருவர் தான் மேலிருக்கிறோம் என்பதைக் காட்ட மற்றொருவரை கீழே தள்ளிவிடுவது போன்றாகும்.

    //(ரெண்டு நாள் கழிச்சு பண்ணறதுக்கு schedule பண்ணினா, ப்ளாகருக்கு பிடிக்கல. சொதப்பி, உடனே பப்ளிஷ் பண்ணிருச்சு. குழப்பம் வேணாம்னு அப்படியே விட்டுட்டேன். மன்னிச்சுக்கோங்க)//

    நல்ல செய்தி சொல்வதால் அதுவே வெளியாகிவிட்டது போல் !
    :)

    ReplyDelete
  2. நல்ல கருத்துக்கா....ஏதோ புரிந்தமாதிரி இருக்கு :-)

    ReplyDelete
  3. //ஏன் அவ்வளவு கடினமாக இருக்கிறது என்றுதான் எனக்குப் புரிவதே இல்லை. உங்களுக்கு?//


    பூஜியத்துக்குள்ளே ஒரு ராஜியத்தை ஆளவந்து புரியாமலே இருப்பான் ஒருவன்.
    அவனை புரிந்துகொண்டால் அவன் தான் இறைவன்.


    அது சரி ! மதுரையம்பதி சொல்வது வியப்பாக இல்லை ?


    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  4. நல்ல சிந்தனை, நல்ல கருத்து.

    ReplyDelete
  5. அருமையான கருத்து

    ReplyDelete
  6. //நல்ல இடுகை கவிநயா.//

    வாங்க கோவி.கண்ணன். முதல் வருகை, முதல் பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சியும் நன்றியும் :)

    //சமவெளியில் நிற்கும் ஒருவர் தான் மேலிருக்கிறோம் என்பதைக் காட்ட மற்றொருவரை கீழே தள்ளிவிடுவது போன்றாகும்.//

    நன்றாகச் சொன்னீர்கள்.

    //நல்ல செய்தி சொல்வதால் அதுவே வெளியாகிவிட்டது போல் !//

    மீண்டும் நன்றி :)

    ReplyDelete
  7. வாங்க மௌலி.

    //நல்ல கருத்துக்கா....ஏதோ புரிந்தமாதிரி இருக்கு :-)//

    எனக்கும்தான் :) கிளிப்பிள்ளை மாதிரி அவர் சொன்னதை திருப்பிச் சொன்னேன். அவ்ளோதான். போகப் போகப் புரியும் (அப்டின்னு ஒரு நம்பிக்கைதான் :) வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி.

    ReplyDelete
  8. //பூஜியத்துக்குள்ளே ஒரு ராஜியத்தை ஆளவந்து புரியாமலே இருப்பான் ஒருவன்.
    அவனை புரிந்துகொண்டால் அவன் தான் இறைவன்.//

    நல்லா சொன்னீங்க சுப்பு தாத்தா.

    //அது சரி ! மதுரையம்பதி சொல்வது வியப்பாக இல்லை ?//

    உருவம் உண்டா இல்லையாங்கிற விஷயத்தை பத்தி அப்படி சொன்னார்னு நினைக்கிறேன் தாத்தா :)

    வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  9. //நல்ல சிந்தனை, நல்ல கருத்து.//

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்வாமிஜி.

    ReplyDelete
  10. //அருமையான கருத்து//

    வருக திகழ்மிளிர். மிக்க நன்றி.

    ReplyDelete
  11. எளிமையான கருத்துகள் கவிநயா அக்கா.

    ReplyDelete
  12. //எளிமையான கருத்துகள் கவிநயா அக்கா.//

    நன்றி குமரா.

    ReplyDelete
  13. //நல்ல பதிவுக்கா ;)//

    நன்றி கோபி :)

    ReplyDelete
  14. ராமகிருஷ்ணர் பிறந்த நாளன்று ராமகிருஷ்ணரின் கருத்துக்களை படிப்பது இன்னும் சிறப்பாக இருக்கும் அல்லவா. அது தான் ப்ளாகர் சொதப்பிச்சு.

    பகிர்தலுக்கு நன்றி.

    ReplyDelete
  15. //ராமகிருஷ்ணர் பிறந்த நாளன்று ராமகிருஷ்ணரின் கருத்துக்களை படிப்பது இன்னும் சிறப்பாக இருக்கும் அல்லவா. அது தான் ப்ளாகர் சொதப்பிச்சு.//

    அட, அதுவும் அப்படியா? சுப்பு தாத்தா "மாதேஸ்வரி" என்ற அம்மா பேர் வந்த வரியைப் பாடும்போது அவருக்கு பேரக் குழந்தை பிறந்த் செய்தி வந்ததை இங்கு குறிப்பிட்டிருந்தார். அதைப் போலவே இருக்கே இதுவும்! நீங்க சொன்னதும் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி ரமேஷ். மிக்க நன்றி.

    ReplyDelete
  16. //இறையன்பர்களும் தாங்கள் விரும்பும் வண்ணமாகவே இறைவனைக் காண்கிறார்கள். இறைவனும் தன் அளப்பரிய அன்பினால் தன் பக்தன் எப்படி விரும்புகிறானோ அவ்விதமாகவே அவனுக்குக் காட்சி அளிக்கிறான்.//

    ராமக்கிருஷ்ணரின் விளக்கங்களுடன் அருமையான பதிவு கவிநயா.

    //அதே சமயம், நாமும் பிறருடைய நம்பிக்கைகளை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். பிறரைக் கேலி செய்யவும் தாழ்த்திப் பேசவும் நமக்கும் எந்த உரிமையும் இல்லை. இதை உணர்ந்து கொண்டு விட்டாலே, எந்த வித பிரச்சனையும் வராது. ஆனால், அது ஏன் அவ்வளவு கடினமாக இருக்கிறது என்றுதான் எனக்குப் புரிவதே இல்லை. உங்களுக்கு?//

    கூடவே உங்களது வரிகளும் எழுப்பியிருக்கும் கேள்வியும் மூடியிருக்கும் சிலரது மனங்களைத் திறக்கட்டும்.

    ReplyDelete
  17. வாங்க ராமலக்ஷ்மி. வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  18. "இறைவன் ஒருவனே என்றும், பலவித மதங்களும் ஒரே இறைவனை அடைவதற்கான வெவ்வேறு வழிகளே என்றும் அனுபவபூர்வமாக உணர்ந்து, மக்களுக்கும் உணர்த்தியவர்."
    அவரது கருத்துக்களால் வழிநடத்தப்பட்டவன் நானும் ஒருவன்.

    ReplyDelete
  19. நல்வரவு டொக்டர்.எம்.கே.முருகானந்தன் ஐயா. முதல் வருகைக்கும் பகிர்தலுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)