Friday, January 2, 2009

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 9




9.

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே,
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே,
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீரடியோம்,
உன்னடியார் தாள் பணிவோம், ஆங்கவர்க்கே பாங்காவோம்,
அன்னவரே எம் கணவர் ஆவார், அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்,
இன்ன வகையே எமக்கு எங்கோன் நல்குதியேல்,
என்ன குறையும் இலோம், ஏலோர் எம்பாவாய்.



முன்னைப் பழம்பொருட்கும் - பழமையான பொருட்கள் எல்லாவற்றினும்

முன்னைப் பழம்பொருளே - மேலும் மிகப் பழமையான பொருள் ஆனவனே!

பின்னைப் புதுமைக்கும் - பின்னர் தோன்றிய எல்லா புதுமையான பொருள்களுள்ளும்

பேர்த்தும் அப் பெற்றியனே - மேலும் புதுமையானவனே!

உன்னைப் பிரானாகப் பெற்ற - உன்னை ஆண்டவனாகக் கிடைக்கப் பெற்ற

உன் சீரடியோம் - பெருமை வாய்ந்த அடியார்களான நாங்கள்

உன்னடியார் தாள் பணிவோம் - உன் தொண்டர்களுடைய திருவடிகளை வணங்குவோம்

ஆங்கு அவர்க்கே பாங்காவோம் - அப்படியே அவர்களுக்கு உரிமை உடையவர்களாவோம்

அன்னவரே - அந்தத் தகுதி வாய்ந்த அடியார்களே

எம் கணவர் ஆவார் - எங்களுக்கு நாயகர்கள் ஆவார்கள்

அவர் உகந்து சொன்ன பரிசே - அவர்கள் விரும்பிக் கட்டளைஇட்ட படியே

தொழும்பாய்ப் பணிசெய்வோம் - அடிமைகள் போல பணி செய்து வாழ்வோம்

இன்ன வகையே - இப்படி நாங்கள் விரும்பியபடியே

எங்கோன் - எங்களுக்குத் தலைவனான அரசனே!

எமக்கு நல்குதியேல் - எங்களுக்கு அருள்வாயானால்

என்ன குறையும் இலோம் - ஒரு குறையும் இல்லாதவர்களாவோம்

[பேர்த்து - மறுபடியும், again; பெற்றி - தன்மை; தொழும்பாய் - அடிமைகள் போல்]

உலகில் உள்ள பழமையான பொருட்கள் எல்லாவற்றினும் மேலும் பழமையானவனே! பின்னர் தோன்றிய எல்லா புதுமையான பொருள்களைக் காட்டிலும் மேலும் புதுமையானவனே! உன்னை ஆண்டவனாய்க் கிடைக்கப் பெற்ற, பெருமை வாய்ந்த உன் அடியார்களாகிய நாங்கள், உன்னுடைய தொண்டர்களை வணங்குவோம். அப்படியே அவர்களுக்கே உரிமையானவர்கள் ஆவோம். அப்படிப்பட்ட தகுதி வாய்ந்த அடியார்களே எங்களுக்கு நாயகர்கள் ஆவார்கள். அவர்கள் கட்டளை இட்டபடியே உனக்கு அடிமைகள் போலத் தொண்டு செய்து வாழ்வோம். எங்கள் தலைவனான அரசனே! இப்படி நாங்கள் விரும்பியபடியே எங்களுக்கு அருள் செய்வாயானால், நாங்கள் ஒரு குறையும் இல்லாதவர்கள் ஆவோம்.


பொருளுக்கு நன்றி: Thiruppaavai and Thiruvempaavai by S. Srinivasan
படத்துக்கு நன்றி: shaivam.org

9 comments:

  1. இந்த முன்னைப் பழம்பொருளுக்கு நல்லதொரு உவமையாகச் சொல்லப் பட்டது தங்கள் கானத்தை ஈசன் கேட்டுக் கொண்டே இருக்கவேண்டும் என வேண்டிய இரு கந்தர்வர்களையும் தோடுகளாய் மாற்றிக் காதில் அணிந்து கொண்டதைத் தான். இப்போ வாக்மேன் வச்சுக் கேட்கிறோம், உலகின் முதல் வாக்மேன் கண்டுபிடிப்பாளர் ஈசனே, ஆகவே அதுவும் பழய சமாசாரமே, புதுசு இல்லை என்பார்கள்,

    அதே போல் கங்கையைச் சடையில் தாங்கியதை. முதன் முதல் அணை கட்டி நீர்ப் பெருக்கைத் தடுத்தவர் ஈசன் என்று சொல்லுவதுண்டு. கங்கைக்கு அணை கட்டியவர் முதலில் ஈசனே, தன் சடாமுடியில் கட்டி, கங்கையின் வேகத்தை மட்டுப் படுத்திக் கொஞ்சம் கொஞ்சமாய் நீர்த் தாரையை விழ வைத்தார் அல்லவா? அதுக்கு அப்புறம் தான் மனிதன் கட்டிய அணைகள் என்றும் சொல்லுவதுண்டு. கொஞ்சம் பெரிசாப் போச்சோ?? :))))))

    ReplyDelete
  2. என்னோட பின்னூட்டங்களே வெளியிடலையே?? வரலையா?? :(((((( ஒளிஞ்சுட்டு இருக்கோ ஒரு வேளை?

    ReplyDelete
  3. //முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே,
    பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே//

    ஆஹா! இந்த வாக்கிய அமைப்பின்
    அழகு தான் என்னே!

    ReplyDelete
  4. வாங்க கீதாம்மா. எல்லாமே வெளியிட்டாச்சே. உங்களுக்கு கிடைக்கலையா?

    முதல் வாக்மேன், முதல் அணை, நல்லா சொன்னீங்க :) மிக்க நன்றி.

    ReplyDelete
  5. //ஆஹா! இந்த வாக்கிய அமைப்பின்
    அழகு தான் என்னே!//

    ஆமாம் ஜீவி ஐயா. உங்கள் தொடரில் நீங்களும் இதே கருத்தை எழுதியிருப்பது நினைவு வருது. வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  6. http://uk.youtube.com/watch?v=uziLROp-7MA

    here you will see the stanza set to Raag mukhari.
    subbu rathinam.

    ReplyDelete
  7. //http://uk.youtube.com/watch?v=uziLROp-7MA

    here you will see the stanza set to Raag mukhari.//

    கேட்க உருக்கமாக இருந்தது. மிக்க நன்றி சுப்பு தாத்தா.

    ReplyDelete
  8. அருமையான விளக்கம், நன்றிகள் பல.

    ReplyDelete
  9. //அருமையான விளக்கம், நன்றிகள் பல.//

    வாங்க மௌலி. உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி :)

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)