Thursday, January 1, 2009

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 8



8.


கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்,
ஏழில் இயம்ப இயம்பும் வெண் சங்கு எங்கும்,
கேழில் பரஞ்சோதி, கேழில் பரங்கருணை,
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ,
வாழி ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்,
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ,
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை,
ஏழை பங்காளனையே பாடு, ஏலோர் எம்பாவாய்.



கோழி சிலம்ப - சேவல் கூவவும்,

சிலம்பும் குருகெங்கும் - நாற்புறங்களிலும் சிறு பறவைகள் ஒலிக்கின்றன

ஏழில் இயம்ப - ஏழுதுளைகள் உள்ள குழல் ஒலிக்கவும்

வெண் சங்கு எங்கும் இயம்பும் - வெண்மையான சங்குகள் எங்கும் முழங்குகின்றன

கேழ் இல் பரம்சோதி - ஒப்பற்ற மேலான ஒளி வடிவாய் நின்றவனும்

கேழில் பரம் கருணை - ஒப்பில்லாத கருணை உடையவனும்

கேழ் இல் விழுப்பொருள்கள் பாடினோம் - இணையற்ற மேலான புகழை நாம் பாடினோம்

கேட்டிலையோ? - கேட்கவில்லையா?

வாழி - வாழ்க!

ஈது என்ன உறக்கமோ? - அப்படி என்னதான் உறக்கமோ?

வாய் திறவாய் - ஒரு வார்த்தையேனும் பேச மாட்டாயா?

ஆழியான் - எத்திசையிலும் தன் ஆணையைச் செலுத்தக் கூடிய இறைவனிடத்து

அன்பு உடைமை - நீ காட்டும் அன்பின் திறம்

ஆமாறும் அவ்வாறோ - இருக்கும் விதமும் இப்படிப் பட்டதுதானோ?

ஊழிமுதல்வனாய் நின்ற ஒருவனை - ஊழிக் காலத்தின் இறுதியில் தான் ஒருவனாய் நிற்கும் ஒப்பற்றவனான சிவபெருமானை

ஏழை பங்காளனை - உமாதேவியை தன் இடப் பாகத்தில் உடையவனை

பாடு - எழுந்து வந்து பாடுவாயாக!


[சிலம்ப - ஒலிக்க; குருகு - சிறு பறவைகள்; கேழ் - ஈடு, இணை, ஒப்பு, சமானம்; ஏழை - உமாதேவி]

சேவல் கூவுகிறது. சிறு பறவைகள் நாற்திசைகளிலும் சத்தமிடுகின்றன. குழல் ஒலிக்கிறது. வெண்சங்குகள் எங்கும் முழங்குகின்றன. ஒப்பற்ற, ஒளி வடிவாய் நின்றவனும், இணையேதும் இல்லா கருணை உடையவனும், ஆன பெருமானுடைய ஈடில்லாத புகழை நாங்கள் பாடினோம். பெண்ணே, உனக்குக் கேட்கவில்லையா? வாழ்க! இதென்ன உறக்கமோ! எழுந்து வராவிடினும் ஒரு சொல்லாவது பேச மாட்டாயா? திசைகளெங்கும் தன் ஆணையைச் செலுத்தக் கூடிய இறைவனிடத்தில் நீ காட்டும் அன்பின் திறம் இவ்வளவுதானா? ஊழிக் காலத்தில் அனைத்தும் அழிந்த போதிலும், தான் அழியாமல் நிற்பவனாகிய சிவபெருமானை, உமாதேவியை இடப்பாகத்தில் கொண்டவனை, பாடுவதற்காக நீயும் எழுந்து வருவாயாக!


இந்தப் பாடலுக்கு கேஆரெஸ் எழுதிய விளக்கம் இங்கே.


பொருளுக்கு நன்றி: Thiruppaavai and Thiruvempaavai by S. Srinivasan
படத்துக்கு நன்றி: shaivam.org

14 comments:

  1. தங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கவிநயா.

    ReplyDelete
  2. நன்றி கைலாஷி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் வாழ்த்துகளும்.

    ReplyDelete
  3. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கவிநயா..

    ReplyDelete
  4. நன்றி சரவணகுமார். உங்களுக்கும் இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. இவ்விடத்தில் கோழி சிலம்புகிற காட்சி

    http://pureaanmeekam.blogspsot.com

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  6. ஏழில் என்றால் ஏழு சுரங்களை உடைய யாழ் என்று நினைத்திருந்தேன். ஏனெனில் குழலுக்கு ஒன்பது துளைகள் என்று நினைவு. ஏழு துளைகளைக் கொண்ட குழலும் உண்டு போல.

    ReplyDelete
  7. ம்ம்ம்ம்??? இதுக்குத்தான் பின்னூட்டம் இட்டிருந்தேனோ?? சரியாத் தெரியலை, ஆனால் காணவில்லை, போகட்டும், இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. //இவ்விடத்தில் கோழி சிலம்புகிற காட்சி//

    வாங்க சுப்பு தாத்தா. நீங்க கொடுத்திருக்கிற லிங்க் வேலை செய்யலையே...

    ReplyDelete
  9. //ஏழில் என்றால் ஏழு சுரங்களை உடைய யாழ் என்று நினைத்திருந்தேன். ஏனெனில் குழலுக்கு ஒன்பது துளைகள் என்று நினைவு. ஏழு துளைகளைக் கொண்ட குழலும் உண்டு போல.//

    தெரியலை குமரா. அதுக்கு கேஆரெஸ் என்ன எழுதியிருக்காரு? மறந்து போச்சு.

    ReplyDelete
  10. //ம்ம்ம்ம்??? இதுக்குத்தான் பின்னூட்டம் இட்டிருந்தேனோ?? சரியாத் தெரியலை, ஆனால் காணவில்லை, போகட்டும், இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.//

    இல்லை கீதாம்மா. 7-க்கு போட்டிருந்தீங்க :) உங்களுக்கும் இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. oru 's" kooda poyvittathu.
    ennudaya blog
    http://pureaanmeekam.blogspot.com

    subburathinam

    ReplyDelete
  12. //oru 's" kooda poyvittathu.
    ennudaya blog
    http://pureaanmeekam.blogspot.com//

    இனிமையா இருக்கு. மிக்க நன்றி தாத்தா.

    ReplyDelete
  13. //சேவல் கூவுகிறது. சிறு பறவைகள் நாற்திசைகளிலும் சத்தமிடுகின்றன. குழல் ஒலிக்கிறது. வெண்சங்குகள் எங்கும் முழங்குகின்றன.//

    புது வருடமும் பிறந்தது. இங்கும் சொல்லிக் கொள்கிறேன். புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    //ஒப்பற்ற, ஒளி வடிவாய் நின்றவனும், இணையேதும் இல்லா கருணை உடையவனும், ஆன பெருமானுடைய ஈடில்லாத புகழை நாங்கள் பாடினோம்.//

    ஆமாம் பாடுகிறோம், கவிநயா தாங்கள் தவமாய் செய்யும் சேவையாலும்!

    ReplyDelete
  14. ////சேவல் கூவுகிறது. சிறு பறவைகள் நாற்திசைகளிலும் சத்தமிடுகின்றன. குழல் ஒலிக்கிறது. வெண்சங்குகள் எங்கும் முழங்குகின்றன.//

    புது வருடமும் பிறந்தது. இங்கும் சொல்லிக் கொள்கிறேன். புத்தாண்டு வாழ்த்துக்கள்.////

    அட, பொருத்தமா சொல்லி இருக்கீங்களே... உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)