Thursday, December 31, 2009

வாழ்க அனைவரும்! வாழ்க வளமுடன்!!வானம் மகிழ்ந்து பொழியணும்
பூமி நிறைஞ்சு விளையணும்
விளைநிலங்கள் கட்டிடங்கள்
ஆகாமே இருக்கணும்!

கா டெல்லாம் செழிக்கணும்
நா டெல்லாம் கொழிக்கணும்
புவியெங்கும் இயற்கை வளம்
அழியாமே காக்கணும்!

நோய் நொடிகள் குறையணும்
ஆரோக்யம் நிறையணும்
அன்பு ஒன்றே இல்லந்தோறும்
பெருஞ் செல்வம் ஆகணும்!

கல்வி சிறந்து வளரணும்
தமிழும் கலையும் தழைக்கணும்
சத்தியமே நித்தியமா
என்றும் எங்கும் ஒளிரணும்!!


--கவிநயா

அனைவருக்கும் மனம் கனிந்த புது வருட நல்வாழ்த்துகள்!
வாழ்க! வளர்க!!

Saturday, December 26, 2009

என்னைத் தொட்ட பட்டாம்பூச்சி


பட்டாம் பூச்சி ஒன்று என்னை
தொட்டுப் பார்த்துச் சென்றது
விட்டம் பார்த்து நானிருந்தேன்
கிட்டே வந்து நின்றது

ஏனோ இந்தச் சோகம் என்று
என்னைக் கேள்வி கேட்டது
சோகம் விட்டுச் சிரித்துப் பாரேன்
என்றே கொஞ்சிச் சொன்னது

நாவால் கண்ணீர் தொட்டுப் பார்த்து
கொஞ்சம் உப்பு என்றது
கண்ணீர் இல்லா வாழ்வும் உண்டோ
சொல்லேன் என்று கேட்டது

கூட்டுப் புழுவாய்த் தான் இருந்த
துயரக் கதையைச் சொன்னது
அதையும் தாண்டிச் சிற கடிக்கும்
என்னைப் பாரேன் என்றது

பட்டாம் பூச்சி பேச்சைக் கேட்டு
பூவாய் மனசு விரிந்தது
ஏதோ ஒன்று புரிந்தது போல்
தானும் சிரித்துக் கொண்டது.


--கவிநயா

உரையாடல் கவிதைப் போட்டிக்கு

Wednesday, December 23, 2009

நம்பிக்கை
லவ் யூ ப்ரின்சஸ்”

அந்த பொம்மை, நாட்டியம் போல நடந்து வந்து, ரெண்டு கண்ணையும் மூடி மூடித் திறந்துகிட்டே சொல்லவும், மதுவின் முகத்தில் ஆயிரம் வாட் பல்பு போட்டது போல் பிரகாசம்! ரெண்டு கையையும் தட்டி கலகலன்னு சிரிக்கிறா, குழந்தை.

“அண்ணா! பாயு” மழலை மொழியில் சொல்லிக்கிட்டே ராஜாவோட சட்டையைப் பிடிச்சு இழுக்கறா, அவன்கிட்ட காட்டறதுக்கு.

அவன்தான் பாத்துக்கிட்டுதானே இருக்கான்! இது எப்படி சாத்தியம்னு அவனுக்கு ஒண்ணும் புரியல. இவனுக்கே தெரியாம அந்த பொம்மை இப்ப எப்பிடி இங்கே வந்தது? கிறிஸ்மஸ் மரத்துக்கு அடியில இருக்கிற அவனுடைய அன்பளிப்புகளை திறக்கணும்னு கூட தோணாம உட்கார்ந்திருக்கான்.

**

அமெரிக்காவுக்கு வந்ததுல இருந்து அவங்க மாதிரியே கிறிஸ்மஸ் மரம் வச்சு, லைட் போட்டு, அன்பளிப்புகள் பரிமாறிக்கிட்டு, இப்படி ஊரோடு ஒத்து வாழப் பழகிடுச்சு, ராஜாவோட குடும்பமும்.

மது, ராஜாவோட சித்தி பொண்ணு. அவ ஒண்ணரை வயசுக் குழந்தையா இருக்கும் போது, அவளை பாட்டி வீட்டுல விட்டுட்டு ஒரு விழாவுக்கு போன அவ அம்மாவும் அப்பாவும், பொட்டிலதான் திரும்பி வந்தாங்க. அப்ப ராஜாவுக்கு ஏழெட்டு வயசு இருக்கும். மதுவை சட்டப்படி தத்தெடுத்துக்கிட்டாங்க, ராஜாவோட அம்மாவும் அப்பாவும்.

மது மேல ராஜாவுக்கு அலாதி பிரியம். அவளை பூ மாதிரி பாத்துக்குவான். அவளும் அவனை அண்ணா, அண்ணான்னு சொல்லிக்கிட்டு பின்னாடியே சுத்துவா. இப்ப அவளுக்கு 4 வயசு ஆகப் போகுது. இன்னும் மழலை போகலை.

கிறிஸ்மஸ் வந்தாலே அவங்க வீட்டில கொண்டாட்டம் தான். மத்த புள்ளைங்க மாதிரியே கிறிஸ்மஸ் தாத்தாவுக்கு, அது வேணும், இது வேணும்னு ரெண்டு பேரும் பெரிய லிஸ்ட் அனுப்புவாங்க. “நீ நல்ல புள்ளையா இருந்தாதான் கிறிஸ்மஸ் தாத்தா நீ கேட்டதெல்லாம் தருவாரு”, அப்படின்னு சொல்லிச் சொல்லியே புள்ளைங்களை சொல்றது கேக்க வைப்பாங்க பெரியவங்க. புள்ளைங்களும் வருஷம் பூரா இருக்கறதை விட, கிறிஸ்மஸ் நெருங்க நெருங்க, ரொம்ப ஒழுங்கு மரியாதையா இருப்பாங்க!

மதுவுக்கும் சேர்த்து ராஜாவே லிஸ்ட் எழுதுவான். இந்த வருஷம்தான் அவனுக்கு கிறிஸ்மஸ் தாத்தாகிட்ட இருந்த நம்பிக்கை போயிருச்சு. கிறிஸ்மஸ் தாத்தாங்கிறதெல்லாம் சுத்த கட்டுக் கதை, அப்படின்னு தோண ஆரம்பிச்சிருக்கு. அம்மா அப்பாதான் நம்ம கேட்கிறதெல்லாம் நமக்கு தெரியாம வாங்கி வைக்கிறாங்கன்னு யோசனை வந்திருக்கு, அவனுக்கு. அதனால இந்த வருஷம் அவன் லிஸ்டே எழுத வேண்டாம்னு வச்சிட்டான். ஆனா மது ஏமாந்துரக் கூடாதுன்னு, அவளுக்காக மட்டும் எழுதினான்.

மது கேட்ட லிஸ்ட்ல, இந்த பேசற பொம்மைதான் முதல்ல. பிறகுதான் மத்ததெல்லாம்.

இந்த வருஷம் ராஜா, பெரிய பையனாயிட்டான். அப்பாவும் அம்மாவும் வாங்கிட்டு வர்ற அன்பளிப்பை எல்லாம் எங்கே ஒளிச்சு வைக்கிறாங்கன்னு கூட கண்டு பிடிச்சிட்டான்! ஆனா மதுவுடைய லிஸ்டை படிச்சாங்களா இல்லையான்னு மட்டும் அவனால கண்டு பிடிக்க முடியல.

ஏன்னா, மதுவுக்கு வாங்கிட்டு வந்த ப்ரசண்ட்லாம் இவனைத்தான் பாக் பண்ணி கிறிஸ்மஸ் மரத்துக்கிட்ட வைக்க சொன்னாங்க. அப்ப அதுல அந்த பொம்மை இருக்கல. மதுவோட ஏமாற்றத்தை நினைச்சு இவனுக்குத்தான் கவலையா இருந்துச்சு.

இப்ப பார்த்தா கிறிஸ்மஸ் அன்னிக்குக் காலைல இங்கே வந்து உட்கார்ந்திருக்கு அந்த பொம்மை!

**

எல்லா அன்பளிப்புகளையும் எல்லாரும் திறந்து பார்த்து முடிச்சாச்சு. அம்மா மதுவை குளிக்கிறதுக்காக கூட்டிக்கிட்டு போயிட்டாங்க.

“ராஜா, என்ன பலமான யோசனை?” அப்படின்னு கேக்குறாரு அப்பா.

“அப்பா… மதுவோட அந்த பொம்மை…”, அப்படின்னு இழுக்கறான்.

“மது குழந்தை. அவளோட நம்பிக்கையில் எந்த கேள்விக்குறியும் இல்லை. அதான் அவ கேட்டது கிடைச்சிருச்சு”

அப்பா சொன்ன பிறகும் ராஜாவுக்கு குழப்பம் தீர்ந்த பாடில்லை. கிறிஸ்மஸ் தாத்தா உண்மையா, கதையா? என்ன சொல்றார் இந்த அப்பா?

உங்க நம்பிக்கை எப்படி?

--கவிநயா

அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் திருநாள் நல்வாழ்த்துகள்!!


Sunday, December 20, 2009

அந்தக் கால கவுஜ

'85-ல் எழுதிய கவிதை ஒன்று... திகழுக்காக... :)

நிலவு

நிலவே நிலவே! கொஞ்சம் நில்!
நினைவில் சற்றே தேங்கிச் செல்.

அல்லிகள் மலரும் உன் அழகினைக் கண்டு;
உள்ளங்கள் மலரும் உன் உருவினைக் கண்டு.

பௌர்ணமி நிலவே, வேடிக்கை ஏன்?
வளர்ந்தும் தேய்ந்தும் வேதனை ஏன்?
இன்பமும் துன்பமும் இயற்கையின் நியதி.
இதனை உணர்த்தவோ இவ் விளையாட்டு?

நட்சத்திரங்களின் நலமார்ந்த அன்னையே!
எத்தனை அருமைக் குழந்தைகள் பெற்றாய்!
குடும்பக் காட்டுப்பாடு உனக்கு மட்டும் இல்லையா?

இருள் எனும் அரக்கனின் இனிய எதிரியே!
காதலர் அனைவரின் கௌரவ சாட்சியே!

முழுமதியே! வெண்ணிலவே!
கதிரவனின் காதலியே!

சற்றே நில்!

உன் அழகின் இரகசியம்
சொல்லிச் செல்!


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/agrinberg/3347917839/sizes/m/

Saturday, December 12, 2009

இளமை விகடன் டிசம்பர் மின்னிதழில்...

பூங்குழலியும் வந்தியத் தேவனும் என்ன ஆனார்கள்?
இங்கே படிக்கலாம்; அல்லது இங்கே; அல்லது இங்கேயே! :)


து என்ன இடம்?

பழகிய இடம் போலத் தெரிகிறது; புது இடம் போலவும் இருக்கிறது…

பக்கத்தில் நீர் சலசலத்து ஓடும் ஓசை கேட்கிறது. ஆனால் கண்ணுக்கு ஒன்றும் புலப்படவில்லை. பகல் நேரத்திலும் இந்த இடம்தான் எத்தனை குளுமை!

வானளாவி உயர்ந்திருக்கும் மரங்களும், மரங்களில் பூத்துக் குலுங்கும் பூக்களும், அந்த அழகுக்குச் சளைக்காமல் கீழே பாய் விரித்திருக்கும் உதிர்ந்த இலைகளும், மலர்களும்… இத்தகைய இயற்கை அழகையெல்லாம் இந்த பூமியில் இனி காண முடியாது என்றல்லவா நினைத்தேன்! அதோ… தெரிகிறது ஆறு! ஆற்றில்தான் எவ்வளவு தண்ணீர்! சந்தோஷமாகச் சளசளக்கிறது, ரகசியங்கள் பேசிக் கொண்டு ஓயாமல் சிரித்துக் கொண்டிருக்கும் வாயாடிக் குறும்புக்காரப் பெண்களைப் போல!

அதோ கன்னிப் பெண்களின் அலறல் கேட்கிறது. கொஞ்சம் பக்கத்தில் போய் பார்க்கலாம்… அடேயப்பா! கண்ணைக் கூசச் செய்யும் அணிகலன்களுடன், கதிரவனையும் கூசச் செய்யும் அழகுடன் திகழ்பவள் யாராயிருக்கும்?

அவள் அருகில் இருப்பவள் சொல்வது காதில் விழுகிறது: “அக்கா, முதலைக்கு தண்ணீரில் இருக்கும் வரைதான் பலம். கரைக்கு வந்து விட்டால் ஒன்றுமில்லை. இந்தப் பெண்களைச் சற்று சும்மா இருக்கச் சொல்லுங்கள்!”

“வானதி! உனக்கு எப்படியடி இத்தனை தைரியம் வந்தது?!”

அதற்குள் எங்கிருந்தோ பறந்து வந்த வேல் ஒன்று அந்த முதலையின் மேல் வேகமாகத் தைத்தது.

அதற்கு மேல் நடந்ததைக் கவனிக்காமல் மூளை ‘விர்’ரென்று சுழன்றது. இவள் குந்தவைப் பிராட்டியல்லவா? அவள் அருகில் நிற்பவள்தான் வானதி! அருள்மொழிவர்மரை அடையப் போகின்ற அதிர்ஷ்டசாலி! இந்த ஆற்றின் பெயர் அரிசிலாறு அல்லவா?!

இதற்குள் ஒரு குதிரை அவசரமாக ஓடி மறையும் சப்தமும், குந்தவை தன் தோழிகளைக் கண்டிப்பதும் கேட்கிறது. குதிரையில் சென்றவன் வந்தியத் தேவனாகத்தான் இருக்க வேண்டும். அடடா, அவனை பார்க்க முடியாமல் போய் விட்டதே!

நான் அங்கே இருப்பதை யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. என்னையே நான் கிள்ளிப் பார்த்துக் கொள்கிறேன்.

“ஆ!”. வலிக்கத்தான் செய்கிறது.

***

ந்தியத் தேவனைப் பார்ப்பதைக் காட்டிலும், பொன்னியின் செல்வனைப் பார்க்கத்தான் எனக்கு மிகவும் ஆசை! இந்தக் கதாசிரியர்கள்தான் எத்தனை கெட்டிக்காரர்கள்! தான் படைக்கின்ற கதாபாத்திரங்கள் யாவையும் தங்களுக்கு ஒரே மாதிரிதான் என்று கதை விடுவார்கள்! ஆனால் ஒரு பாத்திரத்தின் மீது மதிப்பும் அன்பும் கூடிக் கொண்டே போகிற மாதிரியும், இன்னொன்றின் மீது வெறுப்பும் கோபமும் கூடிக் கொண்டே போகிற மாதிரியும் படைப்பதில் வல்லவர்கள்!

இந்த கல்கி கூட அப்படித்தான். முதல் பாகம் பூராவும் பொன்னியின் செல்வனைக் கண்ணிலேயே காட்டுவதில்லை. ஆனாலும் அவன் மீது அப்படியொரு பிரியத்தை ஏற்படுத்தி விடுகிறார். ஆதித்த கரிகாலனையும் சுந்தரச் சோழரையும் பற்றியும் கூட நன்றாகத் தான் சொல்கிறார். ஆனால் அவரே குந்தவை பற்றியும், பொன்னியின் செல்வன் பற்றியும் சொல்வதிலிருந்து மற்றவையெல்லாம் எத்தனை மாறுபடுகின்றன! இதிலிருந்தே தெரிகிறதல்லவா, அவர் பாரபட்சம் நிறைந்த பொல்லாதவர் என்று!

இதனால்தான் அந்தக் காலத்தில் கதை படித்தால் இந்தக் கதாநாயகனைப் போல நமக்குக் கணவன் அமைய மாட்டானா என்றும், அந்தக் கதாநாயகியைப் போல நமக்கு மனைவி அமைய மாட்டாளா என்றும், பலரும் கனவுகளை வளர்த்துக் கொண்டார்கள்! ஏன், கதாநாயகனும் கதாநாயகியும் அழகாகவும் அன்பாகவும் அறிவாளியாகவும் குணசாலியாகவும்தான் இருக்க வேண்டுமா என்ன? ஆனால் அதென்னமோ அப்படித்தான் படைத்தார்கள். ஒரு வேளை நிஜத்தில் காண முடியாததை கற்பனையிலாவது கண்டு களிக்கலாமென்ற எண்ணம் போலும்! இப்போது பரவாயில்லை, குற்றம் குறை உள்ளவரெல்லாம் கதையின் நாயகர்களாகவும், நாயகிகளாகவும், இருக்கிறார்கள்.

***

ஆகா…! குருட்டு யோசனையில் நேரம் போனதே தெரியவில்லை. வந்தியத்தேவன், பொன்னியின் செல்வனைப் பார்க்கத்தானே ஈழம் போகிறான்! அவனோடு சென்றால் இளவரசரைப் பார்த்து விடலாம். இந்த எண்ணம் ஏற்பட்டதும், மனோவேகத்தில் அவன் இருக்கும் இடத்துக்கு வந்து விட்டேன்!

அதோ பூங்குழலி!

குளித்துக் கொண்டிருக்கும் வந்தியத் தேவனின் உடைகளை எடுத்துக் கொண்டு ஓடுகிறாள். வந்தியத் தேவனும் அவளைப் பின் தொடர்ந்து ஓடுகிறான். நானும்…!

மரத்தின் மேலிருந்து கொண்டு வந்தியத் தேவனும் பூங்குழலியும் பேசுவதை சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்! பாவம் இந்த வந்தியத் தேவன்! இளைய பிராட்டி குந்தவையிடம் கூட அவ்வளவு சாமர்த்தியமாகப் பேசியவன், இந்தப் பூங்குழலியிடம் மாட்டிக் கொண்டு விழிப்பது கொஞ்சம் வேடிக்கையாகவும், பரிதாபமாகவும் இருக்கிறது!

இதோ கிளம்பி விட்டார்கள் இருவரும், ஈழத்திற்கு. பாடிக் கொண்டே படகு வலிக்கிறாள், பூங்குழலி.

“அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்?”

பூங்குழலியின் குரலிலும் குழல்தான் குழைகிறது. சோகமும்தான். பாவம் அவள், அவளுக்கு என்ன ஏக்கமோ? சேந்தன் அமுதனை நினைத்தால்தான் கொஞ்சம் கவலையாயிருக்கிறது.

“இதோ நாகத் தீவு வந்து விட்டது!” பூங்குழலியின் குரல்.

“எழுந்திரு!”

“இங்கே வாயேன்!”

என்ன இது, பூங்குழலியின் குரல் இப்போது கொஞ்சம் வேறு மாதிரி ஒலிக்கிறதே?

“ஏய்டி, எவ்வளவு நேரமாக் கூப்பிடறேன்! என்ன பண்ணிக்கிட்டிருக்கே!” இப்போது அதுவே என் தங்கையின் குரலாக ஆகி விட்டதோடு, இரண்டு வளைக்கரங்கள் என்னை உலுக்கவும் செய்கின்றன!

***

திருவிழாவில் தொலைந்த போன குழந்தை போல் சுற்றும் முற்றும் பார்த்து விழிக்கிறேன்!

பூங்குழலியும் வந்தியத் தேவனும் என்ன ஆனார்கள்? நாகத் தீவு எங்கே போச்சு? அடடா, அரும்பாடு பட்டும் கடைசியில் பொன்னியின் செல்வனைப் பார்க்க முடியவில்லையே…

அடச் சே! இவள் ஏன் இந்த சமயம் பார்த்து என்னைக் கூப்பிட்டாள்? என் தங்கையின் மீது ஒரே கோபமாக வருகிறது! கூடவே ஒரு குழப்பமும்!

“இது கனவா, அல்லது நனவா?” என்னையே கேட்டுக் கொள்கிறேன்.

“ரெண்டும் இல்லைடி... கதை!”

மடியில் கிடக்கும் புத்தகம் என்னைப் பார்த்துக் கண் சிமிட்டுகிறது!--கவிநயா

Sunday, December 6, 2009

நான் பேச நினைப்பதெல்லாம்...

நம்ப முடியவில்லை.

என்றைக்கும் இல்லாத அதிசயமாக இராத்திரி சாப்பாடு, வெற்றிலை மடிப்பெல்லாம் முடிந்த பிறகு, “என்னங்க, நான் இன்னிக்கு உங்க மடியில படுத்துக்கணும்”, என்றாள் மீனு என்கிற மீனலோசனி, அவளுக்கே உரித்தான மெல்லிய குரலில்.

“வாவா… படுத்துக்கயேன். இதெல்லாம் கேட்கணுமா என்ன?”, குறும்புச் சிரிப்புடன் அவள் படுப்பதற்கு வாகாக நகர்ந்து உட்கார்ந்து கொண்டார், சுந்தரம் என்கிற சோமசுந்தரம்.

பதிலுக்கு, சுருக்கம் நிறைந்திருந்தாலும், யாரையும் இன்னும் சற்றே நின்று திரும்பிப் பார்க்க வைக்கும் அழகிய அவள் முகம், வழக்கம் போல் வெட்கத்தில் சிவக்கவில்லை என்பதைக் கவனித்தார். “என்னம்மா ஆச்சு?”, கனிவுடன் புறப்பட்ட கேள்விக்கு,

“ஒண்ணுமில்லைங்க”, என்று இலேசாக புன்னகைத்தபடி, அவருடைய கையை எடுத்து கன்னத்தில் வைத்துக் கொண்டாள். அவள் விழிகளில் அவருக்கான அன்பு பொங்கித் ததும்பிக் கொண்டிருந்தது.

அவள் நெற்றி முடியை கவனமாக ஒதுக்கி விட்டு, இலேசாக அங்கே அவர் இதழ் பதித்த போதுதான்… அவளுடைய இதழ்களில் வழிந்த புன்னகையும், கண்களில் வழிந்த அபரிமிதமான அன்பும், அப்படியே உறைந்து விட்டிருந்ததை உணர்ந்தார்.

சுவாசம் நின்றதே தெரியாமல் நின்று விட்டிருந்தது.

அவள் கைக்குள் சிறைப்பட்டிருந்த தன் கையை விடுவிக்கும் எண்ணம் கூட இல்லாமல், அதிர்ச்சியில் தானும் உறைந்து, அப்படியே உட்கார்ந்திருந்தார், சுந்தரம்.

“மீனு… மீனு… என்னைப் பாரம்மா”, கன்னத்தில் தட்டியும், அவளை உலுக்கியும் பார்த்தார், பயனில்லை என்று மனம் சொன்ன போதும்.

“ஏன், எப்படி, இதுவும் சாத்தியமா…”, மடியில் கிடக்கும் அவளை பார்த்துக் கொண்டே எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தாரோ அவருக்கே தெரியாது. உலகம் சட்டென்று இருண்டு விட்டால் இப்படித்தான் இருக்குமோ? கண்ணை கறுப்புத் துணியால் கட்டி, அடர்ந்த காட்டுக்குள் தனியே விட்டு விட்டால் இப்படித்தான் இருக்குமோ? நம்மைத் தவிர ஏனைய உலகனைத்தும் உறைந்து விட்டாலும் இப்படித்தான் இருக்கும் போலும்.

மீனு… மீனலோசனி… அவளுடைய அழகிய விழிகள் இன்னும் திறந்தேதான் இருந்தன, அவர் முகத்தைக் காதலுடன் பார்த்த வண்ணம். அவற்றை மூட அவருக்கு இன்னும் மனம் வரவில்லை. அவருடன் அவள் பகிர்ந்து கொண்ட வாழ்வின் மகிழ்வுக்குச் சான்றாக இறுதி நொடியிலும் அன்பு ததும்பும் அந்தக் கண்கள்…

**

இருவருக்கும் திருமணம் ஆன போது எல்லோரும் மறக்காமல் சொன்ன விஷயங்களில், “பாருங்களேன், பெயர் பொருத்தம் கூட எத்தனை கச்சிதமா அமைஞ்சிருக்குன்னு!”, என்பதும் ஒன்று. மீனுவின் அழகுக்கு ஏற்பத்தான் இருந்தார் சுந்தரமும். வாட்ட சாட்டமாக, அவளை விட சற்றே உயரமாக, கருகருவென்ற சுருட்டை முடியுடன். யார் கண்ணும் பட்டு விடக் கூடாதென்று மீனுவின் அம்மா வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இவர்களை ஒன்றாக உட்கார வைத்து திருஷ்டி சுற்றிப் போடுவார். முதலில் அவர்களுக்கு மட்டும். பிறகு அவர்கள் குழந்தைகளையும் சேர்த்து.

அன்னியோன்யத் தாம்பத்யத்திற்கு இவர்களைத் தான் ஊரே உதாரணமாகக் கொண்டது. சின்னச் சின்னப் பூசல்களும், பொருளாதார நெருக்கடிகளும், இவர்கள் அன்புக்கும், நெருக்கத்திற்கும் உரம்தான் இட்டன. ராம லட்சுமணர்கள் போன்ற இரு பிள்ளைகளையும் ஒண்டுக் குடித்தனத்தில் இருந்து கொண்டே சிரமப்பட்டு படிக்க வைத்தனர். அவர்களும் இப்போது நல்ல வேலையில், மனைவி, ஆளுக்கொரு பிள்ளை என்று நன்றாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள்தான் அப்பா அம்மாவிற்கு பார்த்து பார்த்து இந்த வீட்டைக் கட்டித் தந்தார்கள். இப்போது நினைத்துப் பார்க்கையில் வாழ்க்கை நிறைவாகத்தான் தெரிந்தது. பட்ட கஷ்டங்கள் எதுவும் நினைவுக்கு வரவில்லை.

ஒரு முறை அவர்கள் உறவினர் ஒருவரின் இறப்புக்குச் சென்றிருந்தார்கள். அந்த பெண்மணிக்கு இரண்டும் சின்னக் குழந்தைகள். தன் கணவர் எங்கே என்ன, சொத்து வைத்திருக்கிறாரா, கடன் வைத்திருக்கிறாரா, அவர் நடத்தி வந்த மருந்துக் கடையின் நிலைமை என்ன, இப்படி ஒன்றுமே தெரியவில்லை, அவர் மனைவிக்கு.

“பாவம், அவளை உள்ளங்கையில் வச்சுத் தாங்கினான். அவளுக்கு தொந்தரவு வேண்டாமுன்னு பண வெவகாரமெல்லாம் அவ காதுக்கு போகாம பாத்துகிட்டான். இப்படி அல்ப ஆயுசில போவம்னு தெரியுமா என்ன?”, என்று அங்கலாய்த்தாள், இறந்தவனின் அத்தைக்காரி ஒருத்தி.

அதிலிருந்து சுந்தரத்துக்கு ஒரு உறுதி. மீனுவிற்கு தெரியாமல் எதுவுமே செய்வதில்லை அவர். அவளை கலந்து பேசித்தான் ஒவ்வொரு சேமிப்பும், செலவும், எதுவுமே நடக்கும். தான் திடீரென்று போய் விட்டால் அந்தப் பெண்மணியைப் போல மீனு கஷ்டப் படக் கூடாது. அதை அவரால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

அதே போலத்தான், “குளிச்சுத் துவட்டிக்க துண்டு வேணும்னா கூட பொண்டாட்டிதான் எடுத்துத் தர வேண்டியிருந்தது. இப்ப அவ பொசுக்குன்னு போயிட்டா. இவருக்கு இனிமே கஷ்டம்தான் பாவம்”, என்பது போன்ற உரையாடலையும் கேட்டிருக்கிறார். இதெல்லாம் பேச்சுக்கு மட்டும்தான் அழகாக இருக்கும் என்பதை உணர்ந்திருந்தார். அதனாலேயே தன் வேலைகளை அவர் தானேதான் செய்து கொள்வார்.

சனி ஞாயிறு வந்தாலே அவர்கள் வீட்டில் கொண்டாட்டம்தான். ஞாயிறு அன்றைக்கு மீனுவிற்கு கட்டாய ஓய்வு! அப்பாவும் பிள்ளைகளும்தான் அடுக்களை ஆட்சி அன்று! அன்று பூராவும் அவளை விரலைக் கூட அசைக்க விடாமல் மகாராணியைப் போல அப்படி கவனிப்பார்கள்!

மீனுவும் சொக்கத் தங்கம். பொறுமையின் சிகரம். அது வேண்டும் இது வேண்டும் என்று மற்ற பெண்கள் மாதிரி எந்த ஆசையும் கிடையாது அவளுக்கு. சில சமயம் இவள் வாயைத் திறந்து ஏதாவது கேட்க மாட்டாளா என்று கூட இருக்கும் சுந்தரத்திற்கு! அன்பு மீறி என்றைக்காவது, “மீனு, உனக்கு ஏதாச்சும் செய்யணும் போல இருக்கு. என்ன வேணும் சொல்லேன்”, என்று சுந்தரம் கேட்டு விட்டால்,

“எனக்கென்னங்க பெரிசா ஆசை இருக்கு? சாகும் போது உங்க மடில படுத்து சாகணும். என்னோட ஒரே ஆசை அதுதான்”, என்பாள்.

“என்னம்மா. எப்பக் கேட்டாலும் இதையே சொல்றே? உனக்கு முன்னாடி நான் போய்ச் சேரப் போறேன் பாரு. எனக்குத்தான் கொலஸ்ட்ரால், சர்க்கரை, இரத்த அழுத்தம், அப்படி இப்படின்னு எமனுக்குப் பிடிச்ச எல்லாம் இருக்கு”, என்று அவர் சொல்லி முடிக்கும் முன், மென்மையாக ஆனால் உறுதியாக அவர் வாயை மூடுவாள். கண்கள் கலங்கி விடும்.

இப்போது இதெல்லாம் நினைவுக்கு வர, அவர் கண்களில் இருந்தும் கண்ணீர் வழிந்து அவள் முகத்தை நனைத்தது.

“உன்னுடைய ஒரே ஒரு ஆசையும் நிறைவேறி விட்டதடி. அந்த இறைவனுக்கு நன்றி”, என்று சொல்லி, அவள் விழிகளில் மென்மையாக முத்தமிட்டார்.

“மீனு… ரொம்ப அசதியா இருக்கம்மா. ஒரு அரை மணி நேரம் படுத்திருந்திட்டு, பிறகு பிள்ளைகளைக் கூப்பிடறேன்”, என்ற வண்ணம் அவளை பூப்போல எடுத்து தலையணையில் படுக்க வைத்தார். அவள் கைகளை இறுகப் பிடித்தபடி பக்கத்தில் வழக்கம்போல் படுத்துக் கண்களை மூடிக் கொண்டார்.

நாளை? என்ற நினைப்பே அதற்கு மேல் ஓடவில்லை.

**
மறு நாள் காலை வேலைக்கு வந்த கற்பகம், அழைப்பு மணியை அழுத்தி அழுத்திப் பார்த்து விட்டு, இப்போது கதவுகளை பலமாகத் தட்ட ஆரம்பித்திருக்கிறாள்.


--கவிநயா

பி.கு. : இந்தக் கதை இளமை விகடனிலும்...

Wednesday, December 2, 2009

நினைவின் விளிம்பில் உலவும் நேரம் - 3

நேற்றைய பதிவின் தொடர்ச்சி...


சில காலத்திற்குப் பிறகு பல காரணங்களால் குழுமத்திற்கு தொடர்ந்து போக முடியலை. அப்படியே படிப்படியா குறைஞ்சிடுச்சு. சில மாதங்கள் எங்கேயுமே எழுதலை.

ஆன்மீகத்திலும், அதன் காரணமா பக்தி இலக்கியத்திலும் எனக்கு ஈடுபாடு
வ(ள)ர ஆரம்பிச்ச நேரமும் அதுதான். குமரனோட ‘அபிராமி அந்தாதி’ வலைப்பூதான் அப்பல்லாம் அடிக்கடி படிப்பேன். கண்ணனோட (கேயாரெஸ்) ‘பிள்ளைதமிழை’யும் விரும்பிப் படிச்சேன். அப்படித்தான் வலைப்பூக்களின் அறிமுகம் தொடங்கியது.

‘அன்புடனி’ல் மதச் சார்பான விஷயங்கள் எழுதக்கூடாது என்பது கொள்கை. அதில் தவறொன்றுமில்லை. நூற்றுக்கணக்கான பேர் இருக்கும் இடத்தில் அதனால் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம் என்பதால் அப்படி வச்சிருந்தாங்க.

எனக்கு இதுவும் எழுதணும், அதுவும் எழுதணும், எல்லாம் எழுதணும்னு இருந்தது :) கருத்து பரிமாறல்களும் சாத்தியமாகணும். ஏற்கனவே, எழுதுவதையெல்லாம் ஒரே இடத்தில் போட்டு வைக்கணும்கிற எண்ணம் வேறு இருந்தது.

ஒரு இணைய தளம் கூட ஆரம்பிச்சுட்டு, நேரமின்மை காரணமா அதைத் தொடர்ந்து பராமரிக்க முடியாம விட்டுட்டேன். வலைப்பூ பற்றி தெரிஞ்சதும், அட, இது நம்மைப் போல சோம்பேறி + அறிவிலிக்கு சுலபமா இருக்கேன்னு தோணிச்சு :)

முதல்ல எங்க ஊர் தமிழ்ச்சங்க வலைப்பூவில் தான் அவ்வப்போது எழுதிக்கிட்டிருந்தேன். என்ன இருந்தாலும் சொந்த வீடுன்னா கொஞ்சம் சௌகர்யம்தானேன்னு நினைச்சு ஆரம்பிச்சதுதான் இந்தப் பூ! என்னுடைய “என்று வருவான்?” என்கிற கவிதையில் இருந்தே வலைப் பூவிற்கு பெயரும் சூட்டினேன்.

அப்புறமா, 'அம்மன் பாட்டு', மற்றும் 'கண்ணன் பாட்டு' பூக்களின் குழுவில் குமரனும் கண்ணனும் அன்போடு என்னை சேர்த்துகிட்டாங்க. கண்ணன் பாட்டில் அவ்வப்போதும், அம்மன் பாட்டில் தொடர்ந்தும் எழுதிக்கிட்டிருக்கேன்.

கிட்டத்தட்ட 20 வருஷங்களுக்கு முன்னாடி எழுதிய என் கவிதை ஒன்றை இங்கே படிக்கலாம் :)

கவிதை, வாழ்க்கையின் பல கடினமான தருணங்களைக் கடக்க எனக்கு ரொம்ப உதவியிருக்கு. இப்பவும் அப்படித்தான். அதோட, உங்களோட சகிப்புத் தன்மையால, இப்ப உரைநடை எழுதவும் பழகிக்கிட்டிருக்கேன்!

என்னோடு இதுவரை வந்தவங்களுக்கும், வருகிறவர்களுக்கும், வரப்போகிறவர்களுக்கும், எல்லாவற்றுக்கும் மேலாக என்னை எழுத வைக்கின்ற, உங்களை வாசிக்க வைக்கின்ற, எல்லாம் வல்ல அந்த இறைவனுக்கும், என்னுடைய மனப்பூர்வமான நன்றிகள்.

எழுத்துக்கலையும் நடனக்கலை மாதிரிதான். பார்க்கிறாப்ல இருக்கோ இல்லையோ (!), நடனம் ஆடுவதே ஆடுபவருக்கு தனி ஆனந்தம் தரும். நடனம் ஆடுவதற்காவது வயசும் தோற்றமும் கொஞ்சம் வேணும். (நிறையவே வேணும்னு யாரோ சொல்றது காதில் விழுது! :)

ஆனால் எழுத்துக்கு இதெல்லாம் அவசியமில்லை! எழுதுவதே நிறைவைத் தரும் விஷயம். அதை பகிர்ந்துக்க சிலரும் சேர்ந்துட்டா கேட்கவே வேண்டாம்! அதனால உங்களுக்கெல்லாம் மீண்டும் நன்றி!

அனைவருக்கும் நன்றி சொல்ல வாய்ப்பு ஏற்படுத்தித் தந்த அன்பு கோபிக்கு சிறப்பு நன்றிகள்.

வலையுலகில் என் பூவும் மலர்ந்த கதை இதுதான். பாவம், நீங்கல்லாம் என்கிட்ட மாட்டிக்கிட்ட கதையும் இதுவேதான்!

நிஜம்ம்மாவே ரொம்ம்ம்ப பொறுமையா படிச்ச அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!

அப்பாடி! கதையும் முடிஞ்சது; கத்தரிக்காயும் காய்ச்சது! நினைச்சதை விட ரொம்பவே நீண்டுடுச்சு, மன்னிச்சுக்கோங்க. இத்தனைக்கும் உங்க மேல இரக்கப்பட்டு நிறைய்ய்ய்யவே கட் பண்ணிட்டேனாக்கும்!

உங்க எல்லாருடைய வலைப்பூ வந்த அனுபவமும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கதால தொடர் பதிவுக்கு யாரையும் குறிப்பிட்டு கூப்பிடல. இந்த பதிவை வாசிச்சவங்க எல்லாம் இதனையே அன்பான அழைப்பா எடுத்துக்கிட்டு, உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்களேன்!அன்புடன்
கவிநயா

Tuesday, December 1, 2009

நினைவின் விளிம்பில் உலவும் நேரம் - 2

(போன வாரத் தொடர்ச்சி...)


‘அன்புடனி’ல் எழுதிய நாட்கள் இனிமையானவை. அங்கே நிஜமாவே எல்லாரும் அன்பா இருந்தாங்க!

கவிதையை இட்டதும் உடனுக்குடன் கிடைச்ச கருத்துப் பரிமாறல்கள் திருப்தியைத் தந்தது. நல்ல நண்பர்கள் கிடைச்சாங்க. அன்புடன் புகாரி, சேதுக்கரசி, தி.சுந்தர், கவிஞர் ரமணன், ஆனந்த், காந்தி, வாணி, திரு.ஜெயபாரதன், திரு. சக்தி சக்திதாசன், சுரேஷ் பாபு, என்.சுரேஷ், ப்ரியன், முஜிப், ரிஷான், பூங்குழலி, இப்படி நிறைய பேர். சிலருடைய பெயர்கள் விட்டுப் போயிருக்க வாய்ப்பிருக்கு, அவங்க என்னை மன்னிக்கணும். இவங்கல்லாம் என் கவிதைகளை தொடர்ந்து படிச்சவங்க, இவங்க எழுத்துகளையும் இன்னும் பலரின் எழுத்துகளையும் நானும் விரும்பி படிச்சேன்.

தி.சுந்தரின் இழைகளைப் படிச்சா வாய் விட்டு சிரிக்காம இருக்க முடியாது! அப்படி ஒரு இயல்பான நகைச்சுவை, அவர் எழுத்தில். கவிதைகளும் அற்புதமா எழுதுவார். அவருடைய சிந்தனைகளே வித்தியாசமா இருக்கும். இவர் அறியாத விஷயமே இல்லை.

கவிஞர் ரமணன் அண்ணா போல கவிதைகள் எழுத முடியாது! தங்கு தடையில்லாம அவருக்கு வார்த்தைகள் வந்து விழும் விதத்தைப் பார்த்தால் பிரமிப்பா இருக்கும்.

திரு. ஜெயபாரதன் பல மொழி பெயர்ப்புக் கவிதைகளை எழுதியிருக்கார். அவர் ஒரு விஞ்ஞானியும் என்பதால் விஞ்ஞான புத்தகங்கள், கட்டுரைகள் எழுதியிருக்கார். இவர் எனக்கு ‘எமிலி டிக்கின்ஸன்’ என்று பெயர் சூட்டியிருந்தார்!

திரு. சக்தி சக்திதாசன் இயல்பான எளிமையான கவிதைகள் சரளமா எழுதுவார். நல்ல பண்பாளர். தவறாமல் அனைவரையும் ஊக்குவிப்பதில் மிக்க அன்பானவர்.

சுரேஷ் பாபு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருக்கு தெரியாத விஷயமே இல்லை என்கிற அளவிற்கு கணினியிலிருந்து அரசியல் வரை எல்லாவற்றையும் ஆழ்ந்த விஷய ஞானத்துடன் அலசுவார்.

அன்புடன் புகாரி அநாயாசமா கவிதைகள் எழுதுவார். புத்தகங்கள் வெளியிட்டிருக்கார். காதல் கவிதை ஸ்பெஷலிஸ்ட்! முதல் யூனி தமிழ் குழுமமான அன்புடனை ஆரம்பித்த பெருமை இவருக்கே உரியது!

சேதுக்கரசி எத்தனை இழை இருந்தாலும் அத்தனையும் தவறாமல் படிச்சு விவரமா பின்னூட்ட வேற செய்வாங்க! அத்தி பூத்தாப்ல கவிதை எழுதினாலும், எழுதறப்ப அசத்திருவாங்க.

ரிஷு என்கிற ரிஷானைப் பத்தி உங்களுக்கெல்லாம் நல்லாவே தெரியும்.

இப்படி ஒவ்வொருத்தரையும் பற்றி சொல்லிக்கிட்டே போகலாம், ஆனா நீங்களும் எழுந்து போயிருவீங்க! அதனால இப்போதைக்கு நிறுத்திக்கிறேன் :)

அன்புடனில் இருந்த அந்த சில வருஷங்களில்தான் நான் அதிக பட்ச கவிதைகள் எழுதியிருக்கேன்னு நினைக்கிறேன்.

சுவாரஸ்யமான பல இழைகள், கருத்தாடல்கள், கவியரங்கங்கள், ஆண்டு விழாக் கொண்டாட்டங்கள், கவிதை, கதைப் போட்டிகள், இப்படி பலப்பல நிகழ்ச்சிகள் நடந்தன, அன்புடனில்.

கவிதைப் போட்டிகளில் கலந்துகிட்டு பரிசு ஒண்ணும் வாங்கல. (இங்க குலோப்ஜாமூன் கதை மாதிரி இல்லப்பா! எக்கச்சக்க பேர், அதுவும் பெரீய்ய்ய கவிஞர்கள் கலந்துகிட்டாங்க!). எப்பவும் எங்கேயும் பரிசு வாங்கும் ஷைலஜாக்கா இங்கேயும் பரிசு வாங்கினது நினைவிருக்கு! ஒரு (வீடியோ)படக் கவிதைக்கு, நயாகரா அருவி பற்றியது, ஆறுதல் பரிசு வாங்கினேன். அது கொஞ்சமே கொஞ்சம் ஆறுதலா இருந்தது!

இன்னும் கொஞ்சூண்டு (காட் ப்ராமிஸ்!) இருக்கு; நாளைக்கு முடிச்சிடறேன்...

அன்புடன்
கவிநயா

Sunday, November 29, 2009

யார் இந்தக் குழந்தை?


இன்றைக்கு இங்கே ஏதோ விசேஷம் போலும். இந்த இடமே எத்தனை குதூகலமாக இருக்கிறது! வாருங்கள், நாமும் கொஞ்சம் வேடிக்கை பார்ர்கலாம்!

நேற்று வரை பசேலென்று மட்டுமே இருந்த மரங்களெல்லாம் இன்று பூத்துக் குலுங்குகின்றன. புள்ளிமான் குட்டிகள் புதர்ச் செடிகளின் பின்னால் ஒளிந்து கொண்டு தம் தாய் மான்களுடன் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கின்றன!

கருங்குயில்கள் யாரையோ எதிர்பார்ப்பது போல் வரவேற்பு கீதம் பாடுகின்றன. மூங்கில்களின் துளைகளில் புகுந்து புறப்படும் காற்று அதற்கேற்ப கானம் இசைக்கிறது. எப்போதும் மென்மையாகத் தவழும் தென்றல் கூட இன்று சற்றே அதிகமான துள்ளலுடன் ஜதி போடுகின்றது.

மயில்கள் “என்னைப் பார் என்னழகைப் பார்” என்று தம் பெரிய தோகைகளை ஒய்யாரமாக அசைத்து நடனம் புரிகின்றன. சின்னஞ்சிறு அணிற் பிள்ளைகளும், வெள்ளை வெளேர் முயல் குட்டிகளும், தம் கருகரு கண்களை அகல விரித்து, அந்த நடனத்தைக் கண்டு களித்துக் கொண்டிருக்கின்றன!

அதோ, அந்தப் பொய்கையில் நேற்று வரை அமைதியாகத் தளும்பிக் கொண்டிருந்த தண்ணீர், இன்றைக்கு எதனாலோ பூரிப்பு தாங்காமல் சளசளத்துக் கொண்டிருக்கிறது!

அதோ… கங்காதேவி பாய்ந்து வருகிறாள். அவளுடைய நீண்ட கரங்களில் எதையோ தாங்கி வருகிறாள். ஆம், செஞ்சடையானின் நெற்றிக் கண்ணிலிருந்து உதித்த நெருப்புச் சுடர்களைத்தான் ஏந்தி வருகிறாள். அவளாலேயே அவற்றின் வெம்மையைத் தாங்க முடியவில்லை போலும். வந்த வேகத்தில் நெருப்புச் சுடர்களை அதற்காகவே காத்திருக்கும் நமது பொய்கையில் விடுகிறாள்.

அழகான ஆறு தாமரை மலர்கள் மலர்ந்து மகிழ்ந்து அவற்றைக் குழந்தைகளாய் வாங்கிக் கொள்கின்றன!

அந்தக் குழந்தைகள்தான் எவ்வளவு அழகு!

ஒரு குழந்தை தன் சின்ன முகத்தைச் சுளுக்கிக் கொண்டு அழுகிறது.

ஒன்று ஈறுகள் தெரிய கலகலவெனச் சிரிக்கிறது.

மற்றொரு குழந்தை கட்டை விரலை வாயில் வைத்து சுவாரஸ்யமாகச் சூப்புகின்றது.

இன்னொரு குழந்தை தான் படுத்திருக்கும் தாமரை மலரின் இதழை இழுத்து விளையாடுகிறது.

மற்றுமொரு குழந்தை தன்னுடைய கருகமணி விழிகளைச் சுழற்றி, மான் கூட்டங்களையும் மயில் ஆட்டங்களையும் வேடிக்கை பார்க்கிறது.

ஆறாவது குழந்தையோ தியானத்தில் ஆழ்ந்து விட்டது போல அமைதியாக இருக்கிறது.

கார்த்திகைப் பெண்கள் ஆசையுடன் வளர்க்கும் அந்த ஆறு குழந்தைகளையும் அன்னை பராசக்தி கண்டதும், அவற்றின் மீது அன்பு மீற, ஒன்றாகச் சேர்த்து அரவணைத்துக் கொள்கிறாள்.

அந்தக் குழந்தைக்கு உகந்த நாளான இன்று நாமும் அவனை மனமார வாழ்த்துவோம்!


முருகா போற்றி கந்தா போற்றி!
முத்தமிழ் தந்த குமரா போற்றி!

அழகா போற்றி அமுதா போற்றி!
பழகிய திருக்கை வேலா போற்றி!

முக்கண் முதல்வன் மைந்தா போற்றி!
நெற்றிக் கண்ணில் பிறந்தாய் போற்றி!

பித்தன் பெற்ற முத்தே போற்றி!
சித்தம் நிறைந்த செவ்வேள் போற்றி!

ஆனை முகனின் இளையோய் போற்றி!
ஆறு முகங்கள் கொண்டாய் போற்றி!

மாலவனின் எழில் மருகா போற்றி!
வேலெடுத்து வினை களைவாய் போற்றி!

சக்தியின் கரங்களில் தவழ்ந்தாய் போற்றி!
அத்தனுக் கரும்பொருள் சொன்னாய் போற்றி!

பக்தியிற் சிறந்தோற் கருள்வாய் போற்றி!
நித்தமும் உன்பதம் பணிந்தோம் போற்றி!!


--கவிநயா

பி.கு.: "நினைவின் விளிம்பில் உலவும் நேரம்" நாளை மறு நாள் தொடரும் :)

படத்துக்கு நன்றி: http://murugan.org/gallery/kanda_puranam/images/kp_02.jpg

Monday, November 23, 2009

நினைவின் விளிம்பில் உலவும் நேரம்

பதிவெழுத வந்த கதையை பதிவா எழுதறதுதான் இந்த தொடர் பதிவின் நோக்கம் :) அன்புத் தம்பி கோபிநாத்தின் அழைப்புக் கிணங்கி இந்த பதிவு. அதனால் போற்றுதல்னா எனக்கும் தூற்றுதல்னா கோபிநாத்துக்கும் சேர்வதாக! ஹி..ஹி!!

கவிதை எழுதற பழக்கம் கல்லூரி நாளில் தொடங்கியது. என் அம்மாவுக்கு தமிழ் ஆர்வம் உண்டு. அவ்வப்போது ஏதாச்சும் எழுதுவாங்க. ஏதோ ஒரு சிரமமான காலகட்டத்தில், கவிதை போல ரெண்டு வரி சொன்னாங்க: “வேதனையும் சோதனையும் விருந்துக்கு வந்திருக்கு!” அப்படின்னு. அது மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருந்தது. அதில் இன்னும் சில வரிகள் சேர்த்து முழு கவிதையாக்கினேன்:

வேதனையும் சோதனையும்
விருந்துக்கு வந்திருக்கு.
‘உமக்கென்ன வேலை இங்கு?
போம்… போம்’, என
யாரோ விரட்டினார்கள்.
யார் இந்த நண்பர்கள்?
அட, நம்பிக்கையும் தைரியமும்தான்!

நல்லாருக்கா? :) இதுதான் என்னோட முதல் கவிதை.

அதற்குப் பிறகு பல வாழ்த்துக் கவிதைகளும், நட்புக் கவிதைகளும், இயற்கைக் கவிதைகளும் எழுதினேன். அவ்ளோதான். திருமணமான பிறகு மேல் படிப்புக்கும் சேர்ந்ததால் கவிதையெல்லாம் காற்றில் போயிடுச்சு! சில வருஷங்களுக்கு ஒண்ணும் எழுதல. அப்பப்ப பூர்வ ஜென்ம நினைவு மாதிரி சில கவிதைகள், கதைகள் எழுதியிருப்பேன். ஆனால் வாசகர்கள் யாருமில்லை.

அமெரிக்கா வந்த பிறகு தனிமை. மறுபடியும் எழுத்தோடு அறிமுகம். சில நண்பர்களோடு சேர்ந்து தமிழுக்கு சங்கம் ஆரம்பிக்க முடிவு செய்தோம். அப்போ அன்னைத் தமிழை வாழ்த்தி (உருப்படியா) ஒரு கவிதை எழுதி, தொடக்க நாளன்று மக்கள் முன்னாடி வாசிக்கவும் செய்தேன்.

கவிதை எழுதுவேன்னு தெரிஞ்சப்புறம் சில நண்பர்கள் நிறைய எழுதச் சொல்லி அன்பா ஊக்குவிச்சாங்க! இதில் நாகு, மற்றும் ஸ்ரீலதா (இவர்தான் என் முதல் வாசகரா ரொம்ப நாள் இருந்தார். என்ன எழுதினாலும் முதலில் இவருக்கு அனுப்பிடுவேன்!), இவங்க பெயர்களை சொல்லியே ஆகணும். பிறகு தமிழ்ச் சங்கம் மூலமா நடந்த கவிதை / சிறு கதை போட்டிகளில் பரிசு வாங்கினேன். அதுதான் என்னுடைய முதல் சிறுகதை முயற்சியும்!

இந்த இடத்தில் ஒரு குலோப்ஜாமூன் விளம்பரம் நினைவுக்கு வருது!

அப்பா: “என்ன விசேஷம், குலோப்ஜாமூன் செய்திருக்கே?”
அம்மா: “ரேஸ்ல செகண்டாம்”
அப்பா: “வெரி குட். வெரி குட். எத்தனை பேர் ஓடினாங்க?”
பையன்: “ரெண்டு!”

அந்த மாதிரிதாங்க! அந்த போட்டிகள்ல விரல் விட்டு எண்ணக் கூடியவங்கதான் கலந்துக்கிட்டிருப்பாங்க! :) ஆனால் இன்னொரு முறை “அவளைப் போல்” என்கிற கதைக்கும் பரிசு வாங்கினேன்.

நாகுதான் எங்க ஊர் எழுத்தாளர்கள் நிறைய பேருக்கு ‘பின்னாடி’ இருந்து ஊக்குவிக்கிறவர் (குத்தறவர் இல்லை!). அவர் மூலமாத்தான் ஈ-கலப்பை அறிமுகமாச்சு. தமிழ் தட்டச்ச கத்துக்கிட்ட பின் நிறைய எழுத ஆரம்பிச்சேன். நன்றி நாகு! அந்த காலகட்டத்தில்தான் ‘கவிநயா’ன்னு நானே நாமகரணம் செய்துகிட்டேன். ‘திண்ணை’யில் கவிதைகளும் சிறுகதைகளும் தொடர்ந்து வாராவாரம் எழுத ஆரம்பிச்சேன்.

‘திசைகள்’ வர ஆரம்பிச்சதும் அங்கேயும் கதை கவிதைகள் எழுதினேன். புது எழுத்தாளர்களை ஊக்குவித்துக் கொண்டிருந்த திரு.மாலன் அவர்கள், என்னோட “அமெரிக்க வாழ்க்கை” என்ற கவிதையை முதன் முதலா பிரசுரிச்சப்போ ரொம்ப சந்தோஷமா இருந்தது!

பிறகு வாசகர் வட்டத்தையும் கருத்து பரிமாறல்களையும் தேடி “மரத்தடி”க்குப் போனேன். ஆனா அங்கே அவ்வளவா ஒட்டலை. தூரத்தில் இருந்து பார்ப்பேன், அவ்வளவுதான். அங்கே என் கவிதை ஒன்றைப் படிச்ச முஜிப் என்பவர், ‘அன்புடன்’ தமிழ் குழுமத்தில் எழுதுங்களேன்னு சொல்லி, அங்கே என்னை அறிமுகம் செய்தார். அதுதான் என் எழுத்துக்கு சரியான உரமாக அமைஞ்சது!


இன்னும் கொஞ்சம் இருக்கு. அது அடுத்த வாரம்... (வேண்டாம்னு சொல்லிட மாட்டீங்கன்னு ரொம்பவே நம்பிக்கை! :)


அன்புடன்
கவிநயா

Saturday, November 21, 2009

பிறப்பும், இறப்பும், நடுவில் நாம் இருக்கும் இருப்பும்…

நாம் ஏன் பிறந்தோம்? வாழ்க்கை ஏன் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கு? நல்லவர்களாக இருக்கிறவங்க துன்பப் படறாங்க. கெட்டவர்களாக இருக்கிறவங்க சுகமா வாழறாங்க. பக்தர்களா இருக்கவங்க நிறைய சோதனைகளை அனுபவிக்கிறாங்க. ஏன் இப்படி? இந்த உலகத்தில் நடக்கிறதெல்லாம் முன்னுக்குப் பின் முரணாகவே இருக்கே?

இந்த மாதிரி கேள்விகள் நம்மில் பலருக்கு அவ்வப்போதோ, அடிக்கடியோ தோணறதுதான். நமக்கு மட்டும் இல்லை; காலம் காலமா சித்தர்களும், ஞானிகளும், பக்தர்களும், பலரும், விடை தேடுகிற கேள்விகள்தான்.

குறிப்பா இறப்பை, அதுவும் அகால மரணங்களை நம்மால ஜீரணிக்க முடியறதில்லை. சின்ன வயசில் ஏதோ ஒரு காரணத்தால் பிள்ளைகள் இறந்து விடும்போது, பெற்றோர் மட்டுமல்ல, மற்றோராலும் அதை ஒப்புக் கொள்ள முடியறதில்லை. இது என்ன கொடுமை? அந்தப் பிள்ளை என்ன பாவம் செய்தது? இப்படிப் பட்ட கேள்விகள் மீண்டும் மீண்டும் முளைத்துக் கொண்டே இருக்கின்றன.

ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கையை உதாரணமா எடுத்துக்கலாம். அவர் சாதாரண மனிதரில்லை, அவர் இறைவனின் அவதாரம் ஒன்று என்று நம்புகிறவர்கள் இருக்காங்க. அப்படியே அவர் சாதாரண மனிதராகவே இருந்தாலும், அவர் பெரிய மகான் என்பதை மறுக்க முடியாது. அவர் இறைவனை உணர்ந்து அறிந்தவர். Realized soul. அப்படிப்பட்டவருக்கு ஏன் தொண்டையில் புற்று நோய் வரணும்? சாதாரண மனுஷங்களைப் போல அவர் ஏன் வலியினாலும் வேதனையாலும் துன்பப்படணும்?

இறைவனைப் பற்றியபடி எப்படி உலகில் வாழ்வது என்று மனிதருக்கு காட்டுவதற்காகவே பிறந்தவர் குருஜி. பிறவி எடுத்த பிறகு யாராக இருந்தாலும் துன்பத்திலிருந்து தப்பிக்க முடியாது என்று உணர்த்துவதற்காகவே அவர் அத்தகைய கொடிய புற்று நோயை ஏற்றுக் கொண்டு, அந்த வேதனையை அனுபவித்ததாகச் சொல்லுவர். அவருக்கே அந்த நிலைமைன்னா, நாமெல்லாம் எந்த மூலைக்கு?

துன்பங்களிலிருந்து விடுதலை பெற, அல்லது அவற்றைத் தாங்கிக் கொள்ள, நமக்கு உதவி செய்யும் ஒரே வழி, நான் கற்றுக் கொண்ட வழி, இறைவனை விடாப்பிடியாகப் பற்றிக் கொள்ளுதல்தான். அவனைத் தவிர இந்த உலகில் எதுவுமே நிரந்தரமில்லை.

‘second wind’ அப்படின்னு சொல்லுவாங்க. மலை ஏறும்போதோ அல்லது ஏதோ ஒரு களைப்பு தரும் செயலைச் செய்யும்போதோ, இதுக்கு மேல முடியாதுங்கிற அளவு களைப்பு ஏற்படும். அதை மீறி ஒரு பிரயத்தனம் செய்துட்டோம்னா, மறுபடியும் புதுசா ஆரம்பிக்கிறாப்போல ஒரு சக்தி கிடைக்கும்.

இது நம்முடைய இறை நம்பிக்கைக்கும் பொருந்தும். துன்பம் எல்லை மீறும்போது மனசு விட்டுப் போவதும், நம்பிக்கை இற்றுப் போவதும் இயற்கை. எவ்வளவோ பூஜை செய்து, பரிகாரங்கள் செய்து, கோவில் குளம் போய் வந்து, என்னென்னமோ செய்யறோமே, என்ன பிரயோசனம்னு தோணும். ஆனால் ஒரு மூச்சுப் பிடித்து அதனை மீறி வந்தால்தான் அந்த இக்கட்டான சூழ்நிலையை எதிர் கொள்ளும் சக்தி நமக்குக் கிடைக்கும்.

வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்வும் ஏதோ ஒன்றை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது. முக்கியமாக துன்பத்தைப் போல நம் மனதைப் பண்படுத்தும் சக்தி வேறெதற்கும் இல்லை. என்ன… அது நமக்கு உடனே தெரியாது. காலம்தான் புரிய வைக்கும்.

தீர்க்க முடியாத துயரங்களும் தூசாவதற்கு - நம்மால்
பார்க்க முடியாத இறைவன் எனினும், அவன் அருள்வான்.

நம்புங்கள்.


அன்புடன்
கவிநயா

பி.கு. : இன்று நண்பர் ஒருவர் கேட்ட கேள்வியைப் பற்றி யோசிச்ச போது என் மனதில் ஏற்பட்ட எண்ணங்களின் பதிவே இது...

Sunday, November 15, 2009

தேடல்


ஏதோ ஒன்றைத் தேடித்தான்
எந்தன் மனசு அலைகிறது;
தேடும் பொருளே தெரியாமல்
திசைகள் எல்லாம் அளக்கிறது!

காற்றில் ஏறிப் பறக்கிறது;
கனவில் ஏறி மிதக்கிறது;
மலையில் ஏறி மலைக்கிறது;
கடலில் மூழ்கித் தவிக்கிறது!

எல்லாம் இருப்பது போலிருக்கும்;
ஏதோ ஒன்று இருக்காது!
எதுவும் இல்லை போலிருக்கும்;
இருப்பவை கண்ணுக்குத் தெரியாது!

அதனால் என்ன பூமனமே!
அலைக்கழியாதே என்மனமே!
நீ வெளியே தேடும் பொருளெல்லாம்
உன்னுள்ளே இருக்குது உணர்வாயே!


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/fernandosanchez/2384851617/sizes/m/


Sunday, November 8, 2009

நலந்தானே?

வணக்கம். நல்லாருக்கீங்களா? ரொம்ப நாள் ஓய்வு குடுத்தாச்சில்ல! அதான் நீங்க என்னை மறந்து போறதுக்குள்ளே கொஞ்சமா தலையை காண்பிச்சுட்டு போலாம்னு... :)


தென்கச்சின்னா என்ன நினைவு வரும் உங்களுக்கு? கரெக்ட்! சமீபத்தில் அவருடைய 'தென்கச்சி பதில்கள்' அப்படிங்கிற புத்தகத்தை படிக்கிற வாய்ப்பு கிட்டியது. அதிலிருந்து சில கேள்வி பதில்கள் இங்கே...


'பல் போனால் சொல் போச்சு' என்கிறார்களே ஏன்?


பல் போகாமல் இருக்கும்போது கூடச் சொல் போய் விடுகிறதே... அது தெரியுமா உங்களுக்கு! வெற்றிலை பாக்குப் போடுக்கிறவர்களைத்தான் சொல்லுகிறேன். தாம்பூலம் போட்டுக் கொண்டிருக்கும் ஒருவரைக் கூப்பிட்டு 'ஸ்டாம்பு' வாங்கி வரச் சொல்லிப் பாருங்கள்... அவர் 'ஷாம்பு' தான் வாங்கி வருவார்!

அறிவாளி எப்போது முட்டாள் ஆகிறான்? முட்டாள் எப்போது அறிவாளி ஆகிறான்?

அறிவாளி தன்னை அறிவாளி என்று நினைக்கிற போதெல்லாம் முட்டாள் ஆகிறான்! முட்டாள் தன்னை முட்டாள் என்று உணர்கிற போதெல்லாம் அறிவாளி ஆகிறான்!

மதுவும் - மாதுவும் ஒன்றுதானே?

ஏதோ ஒன்றில் மயங்கியிருக்கிறீர்கள்... அதனால்தான் உங்களுக்கு இரண்டும் ஒன்றாகத் தெரிகிறது. எனக்கு அப்படி இல்லை... எனக்கு எல்லாமே இரண்டு இரண்டாகத் தெரிகிறது!

தென்கச்சி எந்த மாவட்டத்தில் இருக்கிறது? அந்த ஊரின் சிறப்பு அம்சம் என்ன?

உங்கள் ஊர் (கேள்வி கேட்டவர் ஸ்ரீரங்கம்) எந்த மாவட்டத்தில் இருக்கிறதோ அதே மாவட்டத்தில்தான் இருக்கிறது. அப்படியிருந்தும் கூட அது இன்னும் உங்களுக்கு எட்டாமல் இருக்கிறதே அதுதான் அதன் சிறப்பு அம்சம்!

விதி என்பது என்ன? விளக்கம் தருக.

ஒருத்தன் ஒரு அம்மையாரை பார்த்து, "தாயே" என்றான்.
உடனே அந்த அம்மையார் இவனைப் பளாரென்று அறைந்து விட்டார்கள்! என்ன காரணம்?
இவன் 'தாயே' என்று அழைத்தது அந்த அம்மையார் காதில் 'நாயே' என்று விழுந்து விட்டது!
இதற்கு என்ன விளக்கம்? விதி! அவ்வளவுதான்!

மறுக்க முடியாதது எது? மறைக்க முடியாதது எது? மறக்க முடியாதது எது?

தயாராக இருங்கள்... உங்களை கொஞ்சம் குழப்பப் போகிறேன்...

மறக்க முடியாததை மறுக்க முடியாது! மறுக்க முடியாததை மறைக்க முடியாது! மறைக்க முடியாததை மறக்க முடியாது!

ஒரு மனிதனை அடையாளப் படுத்துவது எது?

உண்ணவும் உறங்கவும் பிறந்தவை விலங்குகள்; எண்ணவும் இரங்கவும் பிறந்தவன் மனிதன் என்பது வாரியார் வாக்கு. இதை அளவுகோலாக வைத்து அடையாளம் கண்டு கொள்ளுங்கள்!

***

இப்போதைக்கு அம்புட்டுதான்! பிடிச்சிருந்தா சொல்லுங்க, இன்னும் கொஞ்சம் தட்டச்சி தாரேன்!

இந்த கேள்விகளுக்கு நீங்க என்ன பதில் சொல்லியிருப்பீங்க என்பதையும் தெரிஞ்சுக்க ஆவல்!அன்புடன்
கவிநயா

Thursday, October 15, 2009

தீபாவளி சிறப்புப் பதிவு - 2009

அனைவருக்கும் மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்!

மத்தாப்பூ போலே மனங்கள் சிரிக்கட்டும்!
புத்தாடை அழகாய் பொலிந்து துலங்கட்டும்!
பட்சணங்கள் போலே வாழ்க்கை சுவைக்கட்டும்!
இக்கணமே எங்கும் இன்பம் நிறையட்டும்!

இந்த பதிவில் என்ன சிறப்புன்னு கேட்கறீங்களா? ஹும்... நான் சதங்காவுடைய தொடர் பதிவு வலையில் மாட்டிக்கிட்டதுதான் சிறப்பு! நான் கூட அவரை ஒரு முறை ஏதோ ஒரு தொடருக்கு அழைச்சதா நினைவு. அவர் அதுக்கு பதிவிட்டாரா இல்லையான்னே எனக்கு நினைவில்லை! உங்களுக்கு நினைவிருக்கா? :)

இது சிறப்பு பதிவு மட்டுமில்லாம ஒரு அவசரப் பதிவும் கூடத்தான். என்ன அவசரம்னு கடைசில சொல்றேன்!

இப்ப, கேள்விகள்:

1. உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?

அச்சோ! 'கேள்விக்கென்ன பதில்?' படிச்சா என்னை பற்றிய பெரீய்ய குறிப்பே கிடைக்கும்ங்க! :)

2. தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?

ஹ்ம்.. அப்படில்லாம் ஒண்ணும் நினைவுக்கு வரலை! ஸாரி...

3. 2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

ரிச்மண்டை விட்டா நமக்கு போக்கிடம் இல்லீங்க :)

4. த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?

ரெண்டு மூணு வருடங்களுக்கு முன்பு வரை நண்பர் குடும்பங்களுடன் சேர்ந்து பட்டாசு, பலகாரங்களுடன் கொண்டாடிக் கொண்டிருந்தோம். இப்ப எல்லாரும் ரொம்பவே பிசி ஆயாச்சு. தொலைபேசில தீபாவளி வாழ்த்து சொல்றதோட சரி. வீட்டில் பூஜை, சாப்பாட்டில் தினமும் சமைக்கிறதை விட கூட ரெண்டு சிறப்பு ஐட்டம் இருக்கும்.

5. புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?

போன முறை ஊர்ல இருந்து வாங்கி கொண்டு வந்த புடவையெல்லாமே இன்னும் ரிலீஸ் பண்ணாம இருக்கு!

6. உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?

எல்லாமே நாளைக்குதான்! என்னன்னு இனிமேதான் யோசிக்கணும் :)

7. உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?

மின்னஞ்சல், தொலைபேசி.

8. தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?

அது அந்தந்த நாளை பொறுத்தது. போன வருஷம் அலுவலகம் போயாச்சு. இந்த முறை சனிக்கிழமை பூரா நடன வகுப்புகள் இருக்கு.

9. இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் ?

நிறுவனங்களுக்குன்னு இல்லை; உறவினர்கள் மூலம் யாருக்காவது உதவி வேணும்னு தெரிஞ்சா செய்யறதுதான்.

10. நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?

யாருமே மாட்ட மாட்டேங்கிறாங்களே. கூப்பிடறவங்கள்ல பாதி பேர் பதிவிடறதும் இல்லை. இப்போதைக்கு

ஆர்.கோபிக்கும், தோழி ஜெஸ்வந்திக்கும் வலை விரிக்கிறேன்! :)

இப்போ இந்த தொடருக்கான விதிமுறைகள்:

1. கேள்விக‌ளுக்கு உங்க‌ள் வ‌லைத்த‌ள‌த்தில் புதிய பதிவில் ப‌திலளியுங்கள்.
2. 'தீபாவளி சிறப்புப் பதிவு - 2009' என்று தலைப்பிட்டால் நலம்.
3. இத்தொடர் தொடருவதைத் தெரிவிக்க, இங்கிருக்கும் தீபப் படத்தை உங்கள் வலைத்தளத்தில் ஒட்டி, உங்கள் பதிவிற்கான சுட்டியும் தரவும்.
4. அனைத்து கேள்விகளுக்கும் (மனம் திறந்து) பதில் அளியுங்கள்.
5. உங்கள் நண்பர்கள் நால்வரைத் தேர்ந்தெடுத்து தொடரைத் தொடர அழையுங்கள்.


அன்புடன்
கவிநயா


பி.கு: அவசரத்தின் காரணம் - அடுத்த வாரம் தொடங்கி ஒரு சில நாட்கள் வலையுலகம் பக்கம் வருவது சிரமம். அதனால குறைஞ்சது ரெண்டு வாரங்களுக்கு பதிவுகள் இருக்காது. (பொழச்சு போங்க! :) கோபி(நாத்), உங்க அழைப்பு நினைவிருக்கு. திரும்பி வந்த பிறகு எழுதறேன்! இது தீபாவளி தொடர் என்பதால் அவசரமா இட்டாச்!


படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/srivera/2799747313/sizes/m/Wednesday, October 14, 2009

தேடியதும், கிடைத்ததும்...

யாருக்குதான் தேடல் இல்லை? எல்லாரும் எப்போதும் எதையோ ஒண்ணை தேடத்தான் செய்யறோம். இன்றைக்கு தற்செயலாக இந்த படத்தை பார்க்க நேர்ந்தது. சுப்பு தாத்தாவிற்குதான் நன்றி சொல்லணும். அவர் அம்மன் பாட்டில் நான் இட்ட பாடலை பாடி அனுப்பியிருந்தார், வழக்கம் போல். அதை கேட்கப்போன போதுதான் இந்த படத்தை பார்த்தேன்.

முந்தி இதே செய்தியை படிச்சிருக்கேன்னாலும், அன்னையின் குரலில் கேட்கும்போது உள்ளுக்குள் ஏதோ ஒன்று உருகியது உண்மை. ஒரு 'light bulb' பளீர்ன்னு ஒளி விட்டதும் உண்மை.

"All suffering is the sign that the surrender is not total"

எவ்வளவு எளிமையா சொல்லிட்டாங்க!

குடைந்து கொண்டிருந்த ஏதோ ஒன்றுக்கு விடை போல பரிசாக கிடைத்த இந்த செய்தியை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளும் ஆர்வத்தில்...
அன்புடன்
கவிநயா

Sunday, October 11, 2009

பரீட்சைவிடிய விடிய விழித்தாலும்
விழி சிவக்கப் படித்தாலும்
பரீட்சை என்றாலே எனக்கு
பதட்டம் வந்து விடும்

பென்சில் களைச் சீவுவதும்
பேனாக் களை நிரப்புவதும்
ரப்பர் களைத் தேடுவதும்
ரிவிஷன் கள் செய்வதுமாய்
காலை எழுந்த நேரம் முதல்
கால் பாவாமல் பரபரத்தேன்

அதிகாலை அவதியிலும்
அடி வயிறு கலங்கையிலும்
கற்ற தெல்லாம் கருத்தில் நிற்க
படித்தது மட்டும் பரீட்சையில் வர
கண்கள் மூடி ஒரு நிமிடம்
கடவுளிடம் பேரம் செய்தேன்

ஷூவுக்குள் கால் திணித்து
புத்தகப் பை தூக்கி
சாப்பாடு சகிதமாக
ஸ்கூல் பஸ்ஸில் ஏறுகையில்...
"படித்த தெல்லாம் மறக்காதே
பார்த்து கவனமாய் எழுது
பெஸ்ட் ஆஃப் லக்"
என்று பரீட்சை எழுதும் பிள்ளையினை
வாழ்த்தி வழி அனுப்பி வைத்தேன்!!


--கவிநயா


பி.கு. முன்னொரு காலத்தில் எழுதிய கவிதை :) 'திண்ணை'யில் வந்ததோ... நினைவில்லை.

படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/kelvinlee/2984508104/

Sunday, October 4, 2009

காதல், கடவுள், அழகு, பணம்

இது ஒரு தொடர் பதிவு. காதல், கடவுள், அழகு, பணம், இவற்றை பற்றி நம் கருத்தை சொல்லணும் (இது பரவாயில்லை). பிறகு இன்னும் சில பேரை சொல்ல வைக்கணும் (இதான் கஷ்டம் :). அன்பால் என்னை மாட்டி விட்டவங்க, தோழி ஜெஸ்வந்தி.

காதல்

தமிழில் எனக்கு பிடித்த சில சொற்களில், தமிழ், அழகு, எழில், அன்பு, காதல், இவையெல்லாம் அடக்கம். காதல் பலவகைப் படும். ஆண் பெண் இடை இருக்கும் அன்பு மட்டுமேயா காதல்? சிலருக்கு படிப்பின் மேல் காதல். சிலருக்கு தொழிலின் மேல் காதல். சிலருக்கு தமிழின் மேல் காதல். சிலருக்கு கணினியின் மேல் காதல். சிலருக்கு ஏதேனும் ஒரு கலையின் மேல் காதல். இன்னும் சிலருக்கு கடவுள் மேல் காதல். ஏதோ ஒரு காதல் இல்லாவிட்டால் வாழ்க்கை கசந்து விடும். ஆதலினால் காதல் செய்வீர்! :)

கடவுள்
இவரை பற்றி ஏற்கனவே நிறைய எழுதியிருக்கேன். அன்பே சிவம், அதுவே கடவுள். இறைவனை நாம் எங்கெல்லாம் பார்க்கிறோமோ, எப்படியெல்லாம் பார்க்க விரும்புகிறோமோ, அப்படியே அவன் காட்சி அளிக்கிறான் என்பார், ஸ்ரீ ராமகிருஷ்ணர். மனம் உருகி செய்யும் பிரார்த்தனைகள் அனைத்துக்கும் இறைவன் தவறாமல் செவி சாய்க்கிறான் என்பார், ஸ்ரீ யோகானந்தர். இறைவனின் வழிகளை புரிந்து கொள்ளுதல் சராசரி மனித அறிவிற்கு அப்பாற்பட்ட விஷயம். அதனால், எது நடந்தாலும் நம்பிக்கையை கைவிடாதிருப்பது நல்லது.

அழகு
அழகா இருக்கணும்னு யாருக்குத்தான் ஆசை இருக்காது? ஆனா இந்த அழகுக்காக ஒவ்வொருத்தரும் என்னென்ன செய்யறோம்? எல்லாத்தையும் விட ரொம்ப சுலபமான, செலவே இல்லாத வழி ஒண்ணு இருக்கு, தெரியுமா? வாங்க, சொல்றேன்!

‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’. மனசு அழகா இருந்தாலே, முகத்திலும் அது தன்னால பளிச்சிடும். குட்டி பாப்பாவை பார்த்தா உடனே தூக்கி வச்சு கொஞ்ச தோணுது. அதே சமயம் புதுசா பார்க்கிற சிலரிடம் போய் ‘ஹலோ’ சொல்லக் கூட தயக்கமா இருக்கு. பெரியவர்களிடம் இல்லாத கவர்ச்சி சின்னக் குழந்தைகளிடம் இருக்கிறதே, ஏன்? ஏனென்றால், அவர்கள் கள்ளம் கபடம் இல்லாதவர்கள். அந்த காலத்தில் ரிஷிகளிடமெல்லாம் ‘தேஜஸ்’ ஒளி வீசியதாக சொல்வார்கள். ஏன் அப்படி? அவர்கள் உள்ளம் மாசில்லாமல் தூய்மையாக இருந்தது. யாருக்கும் கெடுதல் நினைப்பதில்லை. மனம் எப்போதும் சமநிலையில் ஆனந்தமாக இருந்தது. அதுதான் காரணம். அதனால் நாமும் நம் மனசை சுத்தமா, கல்மிஷமில்லாம, குழந்தை மனசு போல வச்சுக்குவோம். மற்ற அழகெல்லாம் தன்னால வந்திடும்.

பணம்மரத்தை பார்த்தா ஆசையா இருக்கில்ல? :) பணத்தை பற்றி என்ன சொல்றது? எல்லாருக்கும் தெரிஞ்சதையே சொல்றேன். (இது வரை வேறென்ன பண்ணேன்னு சொல்றீங்களா, அதுவும் சரிதான் :). பணம் நமக்கு முதலாளியா இருக்க கூடாது, நம்மதான் பணத்துக்கு முதலாளியா இருக்கணும். பணம் வாழ்க்கைக்கு தேவைதான், ஆனால் பணமே வாழ்க்கையாகிடாம பார்த்துக்கணும்.

***

என் வலையை இப்போ இவங்களுக்கு விரிச்சிருக்கேன்; மாட்டுவாங்களான்னுதான் தெரியல :)

கீதாம்மா
குமரன்
வல்லிம்மா

***

படங்களுக்கு நன்றி:
tulips - http://www.flickr.com/photos/krisdecurtis/412973107/sizes/m/
cute baby - http://www.warm103.com/Portals/1/Cute-Baby.jpg
kadavuL - http://www.spiritliferc.org/images/Praying%20Hands.jpg
money - http://www.boosttwitterfollowers.com/images/money_tree.jpg

Thursday, September 24, 2009

பால்வெள்ளை கமலத்தில்...

நவராத்திரி சிறப்பு பதிவு.
பால்வெள்ளை கமலத்தில் பனிமலர் கொடிபோலே
தேன்மொழியாள்அவள் வீற்றிருப்பாள்
வீணையிரு கரமேந்தி வேல்கள்இரு விழியேந்தி
கோலஎழில்வடிவுடையாள் கொலுவிருப்பாள்

வேதவடி வானவளாம் வேதனைகள் களைபவளாம்
நாதவடி வானவளாம் ஞானஒளி தருபவளாம்
நான்முகனின் நாயகியாய் நாவினிலே உறைபவளாம்
கோதகன்ற உள்ளமதை கோவிலென கொள்பவளாம்

நாடிவரும் நல்லவர்க்கு நலம்சேர்த் தருள்புரிவாள்
தேடிவரும் வினைகளைந்து கோடிசுகம் நல்கிடுவாள்
பாடிவரும் பக்தர்தம்மை பரிவுடன் பேணிடுவாள்
ஓடிவரும் தென்றலைப்போல் தேவிஅன்பு செய்திடுவாள்!


--கவிநயா

சுப்பு தாத்தா குரலில்... நன்றி தாத்தா!

Tuesday, September 22, 2009

பூமகளே பசும்பொன்னழகே !

நவராத்திரி சிறப்பு பதிவு.
திருமாலவனின் திருமார்பினிலே
சுடராய் ஒளியாய் இருப்பவளே!
திரைமாக் கடலை ததியாய் கடைய
மலராய் மகிழ்வாய் முகிழ்த்தவளே!

பகலினில் எத்தனை சூரியரோ என
பகலவன் மயங்கிடும் பேரெழிலே!
இரவினில் மலர்ந்திட்ட தாமரையோ என
சந்திரன் மயங்கிடும் சுந்தரியே!

வண்டுகள் போலிரு கருவிழிகள் எழில்
மாதவன் மலர்முகம் சுற்றிடுமே!
செண்டுகள் போலிரு தளிர்க்கரங்கள் அந்த
மாயவன் திருவடி பற்றிடுமே!

பூமகளே பசும்பொன் னழகே இந்த
நானிலம் காத்திடும் நாயகியே!
வான்மகளே எங்கள் தேவதையே இந்த
மாநிலம் வணங்கிடும் வசுந்தரியே!

தாமரை மலரெழில் விஞ்சுகின்ற செந்
தாமரைப் பதங்கள் சரணம் அம்மா!
தாமோ தரன்அவன் கொஞ்சுகின்ற பூந்
தாமரை வடிவே வரணும் அம்மா!!

--கவிநயா

ஷைலஜா அக்கா குரலில் - நன்றி அக்கா!

SriLakshmi_song_su...

Sunday, September 20, 2009

ஓம் ஓம் ஓம் !

நவராத்திரி சிறப்பு பதிவு.சிம்ம வாஹினி காந்த ரூபிணி சத்ய ஜோதிநீ
ஓம் ஓம் ஓம்!
சண்டி காளி நீ கமல வாசினி கர்ம நாசினி
ஓம் ஓம் ஓம்!

நெற்றிக் கண்ணிலே நெருப்பை உமிழ்ந்தபடி
நீலியாக வந்து நின்றவளே!
பற்றிக் கொண்டவரின் துயரம் போக்கவே
சூலமேந்தி பகை வென்றவளே!

பகைவர் நடுங்கவே பதினெண் கரங்களில்
படைக்கலம் தாங்கி வந்தவளே!
உலகம் உய்யவே ஊழிக்காற்று போல்
உக்கிர வேகம் கொண்டவளே!

கொடிய அசுரரைக் குத்தி கிழித்து அவர்
உதிரம் உறிஞ்சியே களிப்பவளே!
பணியும் அடியவர் பாவந் தொலையவே
கனிந்த அன்பினை அளிப்பவளே!

அணிகள் ஜொலித்திருக்க சிலம்பும் ஒலித்திருக்க
அரனுடன் திருநடம் இடுபவளே!
கணங்கள் சூழ்ந்திருக்க நிதமும் புகழ்ந்திருக்க
கயிலை நாதனுடன் திகழ்பவளே!

உள்ளம்ஒன்றி தினம் உந்தன் நாமந்தனை
ஓதும் அன்பினிலே மகிழ்பவளே!
வெள்ளம் போலப்பொங்கி பெருகும் கருணையினால்
விரைந்து ஓடிவந்து அருள்பவளே!

துக்கம் அகற்றவே துர்க்கை வடிவிலே
தோற்றம் கொண்டுவந்த தூயவளே!
பக்கம்நின் றெம்மைக் காக்க வேண்டியே
பாதம் பணிகின்றோம் பூமகளே!!


--கவிநயா

சுப்பு தாத்தாவின் குரலில் - நன்றி தாத்தா!

Friday, September 18, 2009

தங்கப் பெண்ணே... தங்கப் பெண்ணே...!

மகளுக்கும் ஒரு தாலாட்டு வேணும்னு கீதாம்மா சொன்னப்போ இந்த கவிதைதான் நினைவு வந்தது - இது தாலாட்டு இல்லைன்னாலுமே...

'சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா', 'சின்னஞ்சிறு பெண்போலே', இந்த பாடல்களையெல்லாம் ரசிக்காதவங்களே இருக்க முடியாது. புலியை பார்த்து பூனை சூடு போட்டுகிட்ட கதையா அன்னை பராசக்தியை குட்டிப் பொண்ணா நினைச்சு எழுத எனக்கு வந்த ஆசையின் விளைவுதான் இது. நவராத்திரிக்கும் பொருத்தம்தானே? :)

***

பட்டுப்பா வாடை கட்டி
பச்ச மரு தாணி வச்சு
பட்டுக் கன்னம் பளபளங்க
பச் சரிசிப் பல்லு மின்ன

சின்னப் பிறை நெத்தியிலே
செந் தூரப் பொட் டொளிர
வண்ணப் பிஞ்சுப் பாதத்திலே
வெள்ளி மணிக் கொலு சொலிக்க

சுத்திஜொ லிக்கும் கண்ணு
சூரி யனத் தோற்கடிக்க
கத்திக் கல கலக்கும்
கைவளையல் கதைகள் பேச

தத்தி நடை பழகும்
தங்கப் பெண்ணே தங்கப் பெண்ணே
கொத்திக்கொத்தி என் மனசை
கொள்ளை கொண்ட சின்னப் பெண்ணே

மோகமுல்லைச் சிரிப்பைக் கண்டு
சோகந் தொலைஞ்சு போச்சுதடி
பால்நிலவின் குளிர்ச்சி யிலே
பார மெல்லாங் கரைஞ்சதடி

உன்னழகைப் பாக்கையிலே
உள்ளம் உருகிப் போகுதடி
வாரி உன்னைக் கட்டிக்கத்தான்
வாஞ்சை மீற ஏங்குதடி!

--கவிநயா

***

அனைவருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துகள்!

Monday, September 14, 2009

நன்றி ஸ்வர்ணரேக்கா!

ஸ்வர்ணரேக்கா அன்போடு எனக்கு இந்த விருதுகளை வழங்கி சில வாரங்கள்(தான்) ஆச்சுங்க! :) வேற யாருக்கு பகிர்ந்து கொடுக்கறதுன்னு தெரியலை. இந்த பதிவை வந்து படிக்கிறவங்களுக்கெல்லாம் கொடுத்ததாக வச்சுக்கோங்க! சிறப்பா குறிப்பிட்டு குடுக்கலைன்னு கோவிச்சுக்காம ஏத்துக்கோங்க!

ஸ்வர்ணரேக்காவின் அன்பிற்கு மீண்டும் நன்றிகள்!

அன்புடன்
கவிநயா

Sunday, September 13, 2009

சிட்டுப்போல் கண்ணுறங்கு...!ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ

என்செல்லமே கண்ணுறங்கு
சிட்டுப் போல் நீயுறங்கு
அன்னை நான் தாலாட்ட
அற்புதமே கண்ணுறங்கு

தண்ணிலவு தான் வீச
வெண்மேகம் தொட்டில் கட்ட
தென்றலது தவழ்ந்து வந்து
தேவனுனைத் தழுவி நிற்க
கண்ணே நீயுறங்கு
கற்பகமே கண்ணுறங்கு

எந்தன்கலி தீர்க்க வந்த
என்னுயிரே மன்னவனே
புன்னகையில் முகம்ஒளிர
பூப்போலக் கண்ணுறங்கு
பொன்போல நீயுறங்கு
பெட்டகமே கண்ணுறங்கு

சின்னத் தமிழ்ச் சொல்லெடுத்து
சித்திரம் போல் தான் கோத்து
முத்து மணிச் சொல்லெடுத்து
முல்லைப் பூப்போல் தான் கோத்து
வண்ணத் தமிழ்ச் சொல்லெடுத்து
வானவில் போல் தான் கோத்து
கன்னித் தமிழ்ச் சொல்கோத்து
கதைகள் சொல்ல வந்தாயோ

வள்ளுவனின் வழியினிலே
வாழ வைக்க வந்தவனோ
கம்பனவன் வழியில் வந்து
காவியங்கள் செய்பவனோ
பாரதியின் வழியில் வந்து
பாட்டிசைக்க வந்தவனோ
முத்தமிழின் காவலனோ
மூவுலகின் மன்னவனோ
செல்லமே நீயுறங்கு
சிட்டுப்போல் கண்ணுறங்கு

ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ


--கவிநயா

பி.கு. எப்பவும் இடற தாலாட்டு போல இல்லாம, இது நானே எழுதினதாக்கும் :)

தூளி படம் வல்லிம்மா வலைல இருந்து சுட்டேன். நன்றி அம்மா!

Sunday, September 6, 2009

சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயில்வண்டி...!சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயில் வண்டி
கத்திகத்தி கரும்புகை விடும் வண்டி
திக்கிதிக்கி மூச்சிரைக்க வரும் வண்டி
முத்துமுத்து புன்னகையை தரும் வண்டி!

குடுகுடு குடுவென வரும் வண்டி
விடுவிடு வேகமெடுத் திடும் வண்டி
கடகட கடகட எனும் வண்டி
தடதட தண்டவாளம் அதிர் வண்டி!

காடுகடல் மலையெல்லாம் புகும் வண்டி
மேடுபள்ள பேதமில்லா புகை வண்டி
ரோடுஇல்லா பாதையிலும் வரும் வண்டி
கோடுபோல நீண்டுநெளிந் திடும் வண்டி!

பெட்டிபெட்டி யாகஇழுத் திடும் வண்டி
சுட்டிப்பிள்ளை களின்உள்ளம் கவர் வண்டி
பட்டிதொட்டி யிலும்நிற்கும் ஒரு வண்டி
பத்திரமாய் கொண்டுசேர்க்கும் ரயில் வண்டி!

அன்னை யெனதாலாட்டி விடும் வண்டி
பிள்ளை யெனகூவிஓடி வரும் வண்டி
உன்னைஎன்னை ஏற்றிக்கொண்டு செல்லும் வண்டி
நம்மைநல்ல நண்பராக்கும் ரயில் வண்டி!!


--கவிநயா

Sunday, August 30, 2009

நினைவுகள்...
உன்நினைவு மகரந்தங்களை
சேமித்து வைத்துக் கொண்டு
மலராமல் காத்திருக்கிறது
என் இதயத் தாமரை -
உன் வருகைக்கென.

--

இலக்கை அடைய எத்தனித்து,
முடியாமல்,
உன் நினைவுகளில்
தடுக்கித் தடுக்கி
விழுந்து கொண்டேயிருக்கிறது
மனசு.

--


நிலவொளியை மட்டுமே
உண்டு உயிர் வாழும்
சகோர பறவையைப் போல
உன் நினைவுகளை மட்டுமே
உண்டு உயிர் வாழும்
நான்.

--

--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/leo-avelon/467505613/sizes/m/

Sunday, August 23, 2009

மலரும் மனமும்

“வாங்கக்கா… பூ பறிக்கவா?”, வெள்ளைச் சிரிப்புடன் கேட்ட உஷாவிடம், “ஆமா உஷா. நீ வேலை இருந்தா பாரு. நாம்பாட்டுக்கு பறிச்சிட்டு கெளம்பறேன்…”, என்றாள் சுந்தரி.

“ஆமாங்க்கா. அடுப்புல குக்கர் வச்சிருக்கேன். தோ வர்றேன்…”, சுவாதீனமாக சொல்லியபடி உள்ளே சென்று விட்டாள் உஷா.

தோட்டத்தில் முல்லைக் கொடிக்குப் பக்கத்தில் நிரந்தரமாக சாற்றி வைத்திருந்த ஏணியில் ஏறியும், கீழே நின்றும், பலவிதமாக எட்டி, முடிந்த அளவு பறித்து முடித்த பின், “வரேன் உஷா”, என்று குரல் கொடுத்தபடி கிளம்பிய போது, உஷாவின் ஐந்து வயது வாண்டு அக்ஷயா ஓடி வந்தது… “நானும் வரேன் ஆண்ட்டி”, என்று.

வீட்டுக்குள் இவள் நுழையும் போதே கணவன் குமாரும் நுழைந்தான். “ம்..ம்…”, என்று மூச்சை இழுத்து வாசனையை அனுபவித்தான்.

“நீங்க ட்ரஸ் மாத்துங்க. அதுக்குள்ள காஃபி போட்டுர்றேன்…”, பூவை மேசை மீது வைத்து விட்டு அடுக்களைக்குள் நுழைந்தாள்.

இதற்குள் உஷாவின் வாண்டு அக்ஷயாவும், சுந்தரியின் வாண்டு மதுவும், வரவேற்பறை முழுக்க விளையாட்டு சாமான்களை கடை பரப்பியிருந்தார்கள். அறைக்குள் சென்று கணவனின் கையில் காஃபியை கொடுத்தாள்.

“பூ நெறய பூத்திருக்கு போலருக்கே…”, குமார் பேச்சுக் கொடுத்தான்.

“ஆமாங்க. கட்டறதுக்குள்ள விடிஞ்சிரும். அவ்ளோ இருக்கு”, குரலில் வெளிப்படையாக அலுப்பு தெரிந்தாலும், உள்ளூர இருந்த பெருமையும் சேர்ந்துதான் ஒலித்தது.

“உஷாகிட்ட கொஞ்சம் குடுத்திருக்கலாம்ல? நீயும் இத்தனை காலமா பறிக்கிற, அவங்களுக்கு ஒரு முறை கூட குடுக்கல. அவங்க ஏதும் நினைக்க மாட்டாங்களா?”

“நல்லாருக்கே… நாம வச்சு தண்ணி ஊத்தி கஷ்டப்பட்டு வளர்க்கிறது. நம்ம நேரம், கொடி பூரா காம்பவுண்டு சுவரை தாண்டி, பக்கத்து வீட்டுக்குள்ள போய் பூத்துக் குலுங்குது. எனக்கு பூன்னா உயிர்னு உங்களுக்கு தெரியாதா… அதெப்படி குடுப்பேன்?”

குமார் எதுவும் பதில் சொல்லும் முன் மது ஓடி வந்தது.

“அம்மா, என்னோட புது டாக்டர் செட் எங்கே? நானும் அக்ஷயாவும் விளையாட போறோம்”, என்றதும், உள்ளே இருந்த செட்டை எடுத்துக் கொடுத்து விட்டு அவளும் வந்து பூ தொடுக்க ஆரம்பித்தாள்.

பெரியவன் ட்யூஷன் போயிருக்கிறான். உஷாவுக்கு அக்ஷயாதான் பெரியவள். ஒன்றரை வயதில் இன்னொரு குட்டி பையன் இருக்கிறான், அவளுக்கு. அவள் கணவன் அடிக்கடி வேலை விஷயமாக வெளியூர் சென்று விடுவதால், இரண்டு சின்னக் குழந்தைகளையும் வைத்துக் கொண்டு திண்டாடுவாள். சுந்தரி அவ்வப்போது குழந்தையையும் பார்த்துக் கொள்வாள். “நீங்க இல்லைன்னா நான் என்ன செய்வேனோ தெரியலைக்கா”, என்பாள் உஷா, நன்றியுடன்.

திடீரென்று சப்தம் பெரிதாகவும், கவனம் சிதற, “என்ன சண்டை அங்கே?” என்று விசாரித்தாள்.

“ஆண்ட்டி, இனிமே நான் மதுவோட விளையாட மாட்டேன். அவ டாக்டர் செட்டை ஷேர் பண்ண மாட்டேங்கிறா. அவளே எப்பவும் டாக்டரா இருக்கா”, அழுகை கலந்த குரலில் குற்றப் பத்திரிகை வாசித்தாள், அக்ஷயா.

“மதூ! ஷேர் பண்ணிதான் விளையாடணும்னு தெரியாதா உனக்கு? அக்ஷயா உன் ப்ரெண்டுதானே? ஸ்டெதாஸ்கோப்பை அவகிட்ட குடு. அவ கொஞ்ச நேரம் டாக்டரா இருக்கட்டும்!”, கண்டிப்பான குரலில் அறிவித்தாள்.

“ஏம்மா, உஷா ஆண்ட்டியும் உன் ப்ரெண்டுதானே? நீ மட்டும் அவங்க கூட பூவை ஷேர் பண்ண மாட்டேங்கிறே?”

பூ தொடுத்துக் கொண்டிருந்த கை அப்படியே உறைந்தது.

சுதாரித்துக் கொண்டு, “சரி.. சரி.. பெரிய மனுஷி மாதிரி என்கூட வாதம் பண்ணாம ஒழுங்கா ஷேர் பண்ணி விளையாடு… அம்மா வேலை முடிச்சதும் அக்ஷயாவை அவ வீட்டில் விட்டுட்டு வரலாம்…”, உறுத்தும் மனசுடன் விறுவிறுவென்று பூவைக் கட்டி முடித்தாள்.

அஷயாவை விடப் போகையில், உஷாவின் கையில் அந்த பூப்பந்தை வைத்த போது, அவள் முகம் பூவுடன் போட்டி போட்டுக் கொண்டு அதை விட அதிகமாய் மலர்ந்தது.

“அக்கா… எல்லாமே எனக்கா? இவ்வளவு கஷ்டப்பட்டு பறிச்சு, இவ்வளவு நேரம் கட்டி, எனக்கே கொடுத்திட்டீங்களே… உங்களுக்கு எப்படித்தான் மனசு வந்துச்சோ? இந்தாங்க… நீங்க கொஞ்சமாவது வச்சுக்கோங்க”, சந்தோஷத்தில் படபடவென்று பேசிக் கொண்டே, பாதியை வெட்டி அவளிடமே கொடுத்தாள், உஷா.

தோழியின் கள்ளமில்லா உள்ளத்தை கண்டு கொஞ்சம் நாணினாலும்,
சுந்தரிக்கு பூவோடு மனசும் சேர்ந்து இன்றைக்கு அதிகமாகவே மணத்தது!


--கவிநயா

Wednesday, August 19, 2009

பிள்ளையாரே பிள்ளையாரே!

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!

விக்ன விநாயகன் வினைகளைத் தீர்க்கட்டும்!
நற்குண நாயகன் நானிலத்தைக் காக்கட்டும்!


பிள்ளையாரே பிள்ளையாரே - மிக
சுட்டித்தனம் கொண்ட எங்கள் பிள்ளையாரே!
பிள்ளையாரே பிள்ளையாரே - இந்த
பிள்ளைகளை காக்க வேணும் பிள்ளையாரே!

உலகத்தை சுற்றச் சொன்னால்
பெற்றவரை சுற்றிடுவாய்!
பாரதத்தை எழுதச் சொன்னால்
தந்தம்கொண்டு எழுதிடுவாய்!

அவல்பொரி கடலை யெல்லாம்
அளவின்றி தின்றிடுவாய்!
மோதகத்தைப் பார்த்து விட்டால்
மோகம்மிகக் கொண்டிடுவாய்!

பார்வ தியின் தலைமகனே!
பார்புகழும் கோமகனே!
கூர் மதியைக் கொண்டவனே!
கொஞ்சுதமிழ் நாயகனே!

மூஞ்சூறில் ஏறி வந்து
மூவுலகும் காப்பவனே!
நா மணக்க பாடுகிறோம்
நல்லவழி காட்டிடுவாய்!!


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.mazhalaigal.com/images/issues/mgl0903/im0903-06_pillaiyar.jpg

Sunday, August 16, 2009

கடவுளை பார்க்கணுமா?

ஸ்ரீராமகிருஷ்ணர் சொல்லுவார், "யார் வேண்டுமானாலும் இறைவனைப் பார்க்கலாம், பேசலாம்", என்று. அதற்கு என்ன தகுதி வேணுமாம்? அவரே அதையும் சொல்லுவார் கேளுங்கள்...

முதலில் இறைவனை அறியணும் என்கிற ஏக்கம் வேணும்
பிறகு உள்ளத்தால் எல்லாவற்றையும் துறக்க வேணும்

உலக இன்பங்களில் சிறிதளவேனும் பற்று இருக்கும் வரை இறைவனைக் காண முடியாது என்கிறார். நூலில் ஒரு சின்ன பிசிறு இருந்தாலும் அதனை ஊசியில் கோர்க்க முடியாது. அதைப் போலத்தான் ஒரு சின்ன உலகப் பற்று இருந்தாலும் இறைவன் வர மாட்டான்.

தாய் ஒருத்தி அடுக்களையில் வேலையாக இருக்கிறாள். குழந்தையை சில விளையாட்டு சாமான்களுடன் விளையாட விட்டு விட்டு, தன் வேலையை கவனித்துக் கொண்டிருக்கிறாள். குழந்தையும் சிறிது நேரம் நன்றாக விளையாடுகிறது. பிறகு அம்மாவுக்காக அழ ஆரம்பிக்கிறது. தாய் குழந்தையின் குட்டி அக்காவை அனுப்பி வேடிக்கை காட்ட செய்கிறாள். கொஞ்சம் அமைதி ஆகிறது குழந்தை. திரும்பவும் அம்மா வேண்டுமென அழும் போது, குழந்தையின் அண்ணன் போய் அதனுடன் விளையாடுகிறான். மறுபடியும் கொஞ்சம் அமைதி ஆகிறது. பிறகு மறுபடியும் அழும் போது குழந்தையின் தந்தை பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார். இப்படி ஒவ்வொருவராக போகவும் அவர்களோடு விளையாடிக் கொண்டு அமைதி அடையும் குழந்தை, கடைசியில், அம்மாதான் வேண்டுமென அழத் தொடங்குகிறது. அந்த சமயத்தில் எந்த பொம்மையைக் கொடுத்தாலும் தூக்கி எறிகிறது. அக்கா, அண்ணா, அப்பா, என யாரிடமும் வராமல், முகம் சிவக்க விடாமல் அழுகிறது. அப்போதுதான் அதன் அம்மா, கை வேலையை அப்படியே போட்டு விட்டு ஓடோடி வருகிறாள். குழந்தையை வாரி அணைத்துக் கொள்கிறாள்.

அதே போலத்தான், இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் விளையாடுவதற்கு ஒவ்வொரு பொம்மையாக அனுப்பி கொண்டே இருக்கிறான். நாமும் பொம்மைகளில் லயித்துப் போய், அவனை மறந்து விட்டு, ஆட்டத்தில் குறியாக இருக்கிறோம். குழந்தை எப்படியாவது விளையாடும் வரை, சந்தோஷமாகத்தான் இருக்கிறது என்று அம்மாவும் வருவதில்லை. நாம் விளையாட்டில் 'பிஸி'யாக இருக்கும் வரை இறைவனும் வருவதில்லை.

அதற்காக, எல்லாவற்றையும் துறந்து, இல்வாழ்க்கையையும் துறந்து துறவியாகச் சொல்லவில்லை, ஸ்ரீராமகிருஷ்ணர். உலக இன்பங்களில் நாட்டத்தை துறக்க வேண்டும் என்றே சொல்கிறார். 'கடமையை மட்டும் செய்; பலன்களில் பற்று வைக்காதே' என்கிற கீதை வாக்கியமும் இதைத்தான் குறிக்கிறது. நமக்கு எத்தனை வேலைகள், கடமைகள் இருந்தாலும், இறைவனை ஒரு கையால் பற்றிக் கொண்டு, அவனே நம்மை இயக்குபவன் என உணர்ந்து, மறு கையால் நம் கடமைகளை செய்ய வேண்டும்.

அந்தக் கால வீடுகளில் (எங்க ஊர்ப்பக்கம் இப்பவும்) பெரிய பெரிய தூண்கள் இருக்கும். (அவை அழுக்காகக் கூடாதென்று அழகாக சேலை வேறு கட்டி வைத்திருப்பார்கள் :). சின்ன வயதில் அந்த தூணைப் பிடித்துக் கொண்டு அதனைச் சுற்றி சுற்றி வருவது பிடித்தமான விளையாட்டு. அதைப் போலத்தான் இறைவனை பிடித்துக் கொண்டு, அவனை ஆதாரமாக வைத்துக் கொண்டு, நம் காரியங்களை செய்ய வேண்டும்.

சுலபமில்லைதான். அதற்கான முயற்சியும் பயிற்சியும் ஏக்கமும் பக்தியும் வர இறைவன் அருளட்டும்! கேளுங்கள்... கொடுக்கப்படும்!

ஸ்ரீராமகிருஷ்ணரின் திருவடிகள் சரணம்.


அன்புடன்
கவிநயா

Friday, August 14, 2009

பாரதம் வாழியவே!

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்!!


வாழிய பாரதம் வாழிய பாரதம் வாழிய வாழியவே!
வாழிய எங்களின் மணித்திரு நாடு வாழிய வாழியவே!

கல்வியில் சிறந்தே கலைகளில் செறிந்தே பாரதம் வாழியவே!
அன்பினில் நிறைந்தே அகத்தினில் மலர்ந்தே வாழிய வாழியவே!

ஆல்விழு தெனவே அகிலம் தாங்கிட பாரதம் வாழியவே!
வேல்விழி மாதரும் சரிநிக ரெனவே வாழிய வாழியவே!

போரினை விடுத்தே பாரினைக் காத்திட பாரதம் வாழியவே!
வீரத் துடன்வி வேகமும் சேர்ந்திட வாழிய வாழியவே!

விஞ்ஞானத் துடன்மெய் ஞானமும்ஒளிர்ந்திட பாரதம் வாழியவே!
அஞ்ஞானம் எனும் இருளகற்றி என்றும் வாழிய வாழியவே!

கவிஞரும் கலைஞரும் அறிஞரும் போற்றிட பாரதம் வாழியவே!
புவியினர் யாவரும் புகழ்ந்திட மகிழ்ந்திட வாழிய வாழியவே!!


--கவிநயா

Thursday, August 13, 2009

குட்டிக் கவிதைப் பக்கம்

அவள் கண்களை மீன்கள் என்று
சொல்லாதவரே இல்லை.
அவை எப்போதும்
கண்ணீரில் மிதப்பதாலோ?

***

பட்டப் பகலில்
சுற்றுப்புறம் பார்க்காமல்
கட்டிக் கொள்ளத் துடிக்கும்
புது மணக் கணவன் போல்
விடாமல் என்னைத் துரத்துகிறது
என்னுடைய பகல் தூக்கம்!

***

இன்பம் என்ன துன்பம் என்ன
இதுதான் உலக வாழ்க்கையடி
கண்ணில் கண்ணீர் இதழில் சிரிப்பு
பழகிப் போன பாஷையடி
எது வந்தாலும் எது போனாலும்
கலங்கா மனமே வேண்டுமடி
முயன்று பார்த்தால் முடியும் பெண்ணே - உன்
வாழ்க்கை உந்தன் கையிலடி!

***

வண்ணம்பல குழைத்து வைத்து
வரிசையாகக் கோர்த் தெடுத்து
வாகாய் இழுத்து விட்டானோ?
வான வில்லாய் நட்டானோ?

***

நான் உன்னை அர்ச்சிக்கும் பூக்களை எல்லாம்
அவை உன் பாதம் தொடும் முன்னேயே
காற்று தட்டிச் சென்று விடுவதைப்
பார்க்கும் போதுதான் தோன்றியது –
என் வேண்டுதல்களும் இப்படித்தான்
உன்னை வந்து
சேராமலே போய்விடுகின்றனவோ என்று…

***

அறிவாயா என் ஆதங்கம்?
பரிவாயா உன் அன்பாலே?
வருவாயா என் கனவிலேனும்?
தருவாயா உன் தரிசனத்தை?

***

நடக்கும் நன்மை நம்பி விடு!
இறக்கும் துயரம் இயம்பி விடு!
கனக்கும் சுமையை இறக்கி விடு!
விடியல் காண விரைந்து விடு!

***

பேசும் உலகம் உன் பெயரை...
பாடும் என்றும் உன் புகழை...
நாடி வரும் நல் வாய்ப்புகளை
நழுவ விடாமல் நீ முடித்தால்!

***

மனம்…

மனம் கணமும் நில்லாது
நலம் எதுவும் சொல்லாது
மதுவைப் போல மயங்க வைக்கும்
தெளிவைத் தூரத் தள்ளி வைக்கும்
குரங்கைப் போலக் குதித்திருக்கும்
குழம்ப வைத்து மீன் பிடிக்கும்!

***

நட்சத்திரங்கள்

கோலமிடச் சென்ற பெண்
கோபம் கொண்டு சென்றதால்
அரைகுறையாய் நின்று போன
அழகான புள்ளிகள்!


--கவிநயா

(குட்டிக் கவிதைகளை இனி நீங்கள் வலைப்பூவின் வலது பக்கத்தில் வாசித்து மகிழலாம்)

Monday, August 10, 2009

விழுங்குதல்...

"கண்ணை மூடிக் கொண்டு
ஒரே மடக்கில் விழுங்கிவிடு"
முதன் முதலாய்
மாத்திரை விழுங்கியபோது
கிடைத்த அறிவுரை.

அன்று தொடங்கி
மாத்திரை மட்டுமன்றி
மற்றதும் விழுங்கக் கற்றாயிற்று.
கோபங்களை, தாபங்களை
அழுகைகளை, அவமானங்களை
இப்படி...

அதிகமாய் விழுங்குவதென்னவோ
வார்த்தைகளைத்தான்.

கூர்தீட்டிப் பதம்பார்த்த ஆயுதமாய்
தாக்கிக் காயப்படுத்துகின்ற
பிறர் சொன்ன வார்த்தைகளை மட்டுமல்ல
பதிலுக்குப் பதில் தாக்கத் தயாராகும்
என் வார்த்தைகளையும் சேர்த்துத்தான்
விழுங்கிக் கொண்டே இருக்கிறேன்...

சப்தமில்லாமல்,
வேதனை காட்டாமல்,
முகஞ் சுளிக்காமல்,
ஊசிகளை விழுங்கும்
வாழைப்பழம் போல்...


--கவிநயா

Monday, August 3, 2009

விருது வாங்க வாரீகளா?

அன்புள்ளங்களிடம் இருந்து மேலும் இரண்டு விருதுகள் கிடைத்திருக்கின்றன. விருது வாங்கறதுல சிரமமான விஷயம், அதை யார் யாருக்கு குடுக்கலாம்னு தீர்மானிக்கிறதுதான்! ஒவ்வொருத்தரும் நிறைய பேருக்கு பகிர்ந்தளிப்பதால், இதற்குள் எல்லாருமே வாங்கியிருப்பாங்கன்னு தோணுது. ஆணி ரொம்ப ரொம்ப அதிகமா இருப்பதால், மற்ற வலைப்பூக்களுக்கு போய் வாங்கியவங்க, வாங்காதவங்க யாருன்னு பார்க்கவும் முடியல. அதனால, மனசில் தோணறவங்களுக்கு இந்த விருதுகளை பகிர்ந்து அளிக்கிறேன். தவறா நினைக்காம அன்புடன் அங்கீகரிக்கணும்னு கேட்டுக்கறேன்.

முதலில் "This blogger is my best friend" விருது. இதனை எனக்கு அன்புடன் அளித்தவர், தோழி ஜெஸ்வந்தி. மிக்க நன்றி ஜெஸ்வந்தி!
இந்த விருதிற்கான விதிமுறைகள்:

1. நீங்கள் இதனை எத்தனை பேருக்கும் அனுப்பலாம்.
2. இதனுடன் பரிசு வேண்டுமானாலும் சேர்த்து அனுப்பலாம்.
3. நீங்கள் இவர்களை ஏன் தெரிவு செய்கிறீர்கள் என்பதைச் சுருக்கமாக சொல்லி விட வேண்டும் .
4. எக்காரணம் கொண்டும் விருது நீக்கப் படக் கூடாது. அப்படி நீக்குவதானால் உரிய விளக்கம் அளிக்கப் பட வேண்டும்.

நான் இந்த விருதினை அளிக்கும் நண்பர்கள்:

ராமலக்ஷ்மி - பதிவுலகிலும் மின்னஞ்சல் மூலமாகவும் தவறாமல் ஊக்கம் அளிப்பவர். சமூக அக்கறை கொண்ட இவரது எழுத்துகளும், இவருடைய புகைப்படங்களும், குறிப்பாக அவற்றுக்கு இவர் எழுதும் comments-ம் ரொம்ப பிடிக்கும்.
மதுரையம்பதி - இவருடைய பதிவுகள், கதைகள், சமஸ்கிருத ஸ்லோகங்களுக்கான விளக்கங்கள் மிகவும் பிடிக்கும்.
கண்ணன் - இவர் ஒவ்வொரு பாடலையும், செய்தியையும், கருத்தையும், அலசி ஆராய்ந்து, உவமான உவமேயங்களுடன் சுவாரஸ்யமாக விளக்குவார். (இவரை கேயாரெஸ்-னு சொன்னாதான் நிறைய பேருக்கு தெரியும் :)
குமரன் - இவருடைய தமிழ் அறிவும், சமஸ்கிருத அறிவும், அவற்றைக் கொண்டு சங்கப் பாடல்கள், ஸ்லோகங்கள் முதற்கொண்டு அழகாய் விளக்கும் திறனும் என்னை வியக்க வைப்பவை.

அடுத்ததாக "Interesting Blog Award". எதிர்பாராவிதமாக தோழி அமுதாவிடம் இருந்து இந்த விருது கிடைத்தது :) நன்றி அமுதா!
இதனை குறைந்தது ஆறு பேருக்கு பகிர்ந்தளிக்க வேண்டுமாம். (மற்றவங்க கோச்சுக்காதீங்கப்பா!)

கீதாம்மா - நடமாடும் கலைக் களஞ்சியம். சில பேருக்கு பாட்டீ; சில சமயம் பாப்பா :)
கபீரன்பன் அவர்கள் - ஒரு கருத்தை சொல்வதற்கு, அதற்கு பொருத்தமாக பல்வேறு செய்திகளை தொகுத்து வெகு அழகாக சொல்லுவார்.
கைலாஷி அவர்கள் - இவருடைய புகைப்படங்கள் மிகப் பிரசித்தி பெற்றவை. கூடவே அழகான பொருத்தமான பாடல்களை இலக்கியங்களிலிருந்து எடுத்துத் தருவார்.
வல்லிம்மா - ரொம்ப ச்வீட்டானவர். முக்கியமான செய்திகளை இயல்பாக சொல்லி விடுவார்.
ஜீவி ஐயா - இவருடைய கதைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். மனசை அள்ளும் இயல்பான நடை. அழகான கதாபாத்திரங்கள்.
மீனா சங்கரன் - ஆங்கிலம், தமிழ், இரண்டிலும் நகைச்சுவையில் கலக்கும் எங்க ஊர் தோழி. இவர் பாடினா கேட்டுக்கிட்டே இருக்கலாம்.


அன்புடன்
கவிநயா

Thursday, July 30, 2009

வரம் தருவாய் அம்மா வரலக்ஷ்மி !


வரம் தருவாய் அம்மா வரலக்ஷ்மி - எங்கள்
வாழ்வினில் மங்களம் அருள் லக்ஷ்மி!

(வரம்)

ஆதி கேசவனின் அழகு மார்பினிலே
வாசம் செய்யுகின்ற ஆதிலக்ஷ்மி!

தங்கக் கலசமுடன் சங்குச் சக்கரமும்
தாங்கி அருளுகின்ற தனலக்ஷ்மி!

பச்சை ஆடையது இடையில் துலங்கிடவே
பசுமை காக்கின்ற தான்யலக்ஷ்மி!

வெள்ளைப் பாற்கடலில் உதித்து மாலவனின்
உள்ளம் ஆளுகின்ற கஜலக்ஷ்மி!

(வரம்)

எம்மைக் காக்கவென்றே அன்னையாக வந்து
தோற்றம் கொண்டசந் தானலக்ஷ்மி!

வில்லும் அம்புடனும் சூலம் வாளுடனும்
அபயம் அளிக்கின்ற வீரலக்ஷ்மி!

எட்டுக் கரங்களுடன் சுற்றி வரும்பகைகள்
வெட்டி வீழ்த்துகின்ற விஜயலக்ஷ்மி!

மாயை இருள் களைந்து ஞான ஒளியேற்றி
முக்தி அளிக்கும்வித் யாலக்ஷ்மி!

அஷ்ட லக்ஷ்மிவடி வாக வந்திருந்து
இஷ்டம் பூர்த்தி செய்யும் வரலக்ஷ்மி!

உன்னை மனமுருக வணங்கும் பக்தரெலாம்
உய்ய அருள்செய்வாய் ராஜ்யலக்ஷ்மி!

(வரம்)


--கவிநயா

Sunday, July 26, 2009

கற்பக கணபதியே!கற்பக கணபதியே
பிள்ளையார் பட்டியில் உறைநிதியே!
சொற்பதம் கடந்தவனே
உந்தன் பொற்பதம் பணியவந்தோம்!

ஆறடி உயரத்திலே
அதி யற்புத வடிவத்திலே
கோதறு குணத்தினிலே
வளர் பார்புகழ் கணபதியே!

கல்லினால் ஆனவனே
கருணையில் கரும்பென இனிப்பவனே!
புல்லினால் பூஜித்தாலும்
அகம் மிகமகிழ்ந் தருள்பவனே!

உமையவள் திருமகனே
எம்மை இமையென காப்பவனே!
குறைகளை தீர்ப்பவனே
எங்கள் சுமைகளை ஏற்பவனே!

வலம்புரி நாயகனே
பழம்பெற இறைவலம் வந்தவனே!
மறைகளின் அதிபதியே
எங்கள் மனம்அமர் குணநிதியே!


--கவிநயா

பிள்ளையார்பட்டி பிள்ளையார் மேல ஒரு பாட்டு எழுதலாமேன்னு சுப்பு தாத்தா ஒரு முறை சொன்னார். அவர் சொன்னவுடனேயே எழுதிட்டேன்; இருந்தாலும் இப்பதான் பதிவிட முடிஞ்சது. கற்பக கணபதியின் பொற்பதங்கள் சரணம்.

சுப்பு தாத்தா இந்த பாடலை  மீண்டும் அழகுற கானடா ராகத்தில் அமைத்துத் தந்திருக்கிறார்.  மிகவும் நன்றி தாத்தா!

Sunday, July 19, 2009

முடியும் !

முன்னேறு நீ முன்னேறு!
முடியும் உன்னால் முன்னேறு!

முன்னேறு நீ முன்னேறு!
இலக்கை நோக்கி முன்னேறு!

முதல்அடி வைத்தால் முடிவினைத் தொடலாம்
ஓரிடம் கிடந்தால் எதைத் தான் பெறலாம்?
அயர்ச்சியை விடுத்து முயற்சிகள் செய்தால்
அகிலம் போற்றும்! அகமும் போற்றும்!

ஒவ்வோர் அடியும் ஒவ்வொரு படியாம்
ஒவ்வோர் படியும் உந்தன் வழியாம்!
தடுக்கி விழுந்தாலும் முடங்கி விடாதே!
எடுத்த காரியத்தில் தளர்ந்து விடாதே!

முடுக்கி விடப்பட்ட விசையினைப் போலே
சொடுக்கி விடப்பட்ட அம்பினைப் போலே
கருத்தைப் பதிப்பாய் இலக்கினிலே!
கடுகிச் செல்வாய் பாதையிலே!

முன்னேறு நீ முன்னேறு!
முடியும் உன்னால் முன்னேறு!


--கவிநயா

Sunday, July 5, 2009

அன்பாய் இரு. பாசமாய் இராதே!

ஆன்மீகத்தில் அடிக்கடி காதில் விழுவது இதுதான். பற்றில்லாத அன்பே செலுத்த வேண்டும் என்பது. அதனால் இந்த கேள்வியும் அடிக்கடி எழும்: அன்புக்கும் பாசத்துக்கும் என்ன வித்தியாசம்? இது பற்றி ஒரு உரத்த சிந்தனை… என் புரிதல்கள் தவறாகவும் இருக்கலாம். உங்க எண்ணங்களையும் பகிர்ந்துக்கோங்க!

அன்பு என்பது, அதிலும் தூய்மையான அன்பு என்பது என்ன? இந்த குழப்பம் வரும்போதெல்லாம் எனக்கு மிக நல்ல உதாரணமா வந்து கை கொடுப்பது, “தாய் அன்பு” தான். இந்த உலகத்திலேயே அம்மாவுடைய அன்பு ஒண்ணுதான் தூய்மையானது (no strings attached)! தந்தைமார்கள் சண்டைக்கு வர வேண்டாம்! விதின்னு ஒண்ணு இருந்தாலே, அதற்கு விலக்குன்னும் ஒண்ணு உண்டு :) ஸ்ரீ ஆதிசங்கரர் சொல்லுவார், “கெட்ட பிள்ளைகள் இருக்கலாம், ஆனால் கெட்ட அன்னை என்று ஒருவர் இருக்கவே முடியாது” என்று. அன்னையரின் சிறப்பு இதிலிருந்தே தெரியுமே.

ஒரே வரில சொல்லணும்னா, தூய அன்பு என்பது, சுயநலம் கலக்காதது. எதிர்பார்ப்புகள் இல்லாதது.

உதாரணத்துக்கு, தம்பதிகளுக்கிடையில் இருக்கும் அன்பை எடுத்துக்கலாம். அவங்க அன்பில் possessiveness, அதனால் ஏற்படற அசூயை, இதெல்லாம் இருக்கத்தான் இருக்கும். அளவுக்கதிகமான அன்பினால்தான் அப்படி ஆகிறதுன்னு நாம சொல்றோம். ஆனால், அப்படி இருக்கிறதுக்கு பேரு, அன்பில்லை. பாசம்! பாசம் தான் உரிமை கொண்டாடும், உரிமை மறுக்கப்பட்டால் கோபப்படும், அதனால் துன்பப்படும், பிறகு வழுக்கியும் விடும்! இதுவே தூய்மையான அன்பாக இருந்தால், நாம் அன்பு செலுத்தும் நபரிடம் எதையுமே எதிர்பார்க்க மாட்டோம். அவரும் நம் மீது நம்மைப் போலவே அன்பு செலுத்த வேண்டும் என்று கூட!

“சராசரி மானுடர்க்கு எப்படி சுயநலம் இயல்பாயிருக்கிறதோ அது போல் தெய்வ நிலை அறியும்போது பெரியோர்க்கு பரோபகாரம் இயல்பாகும்; அன்பு பெருகும். மனம் கசடுகளை கொண்டிருக்கும் வரை அதில் ஏற்படுவது அன்பாயிருக்காது. பாசமாகத்தான் இருக்கும் என்று யோகம் சுட்டிக் காட்டுகிறது." – ‘நம்பிக்கை’ குழுமத்தில் ஸ்ரீ காழியூரர்.

'என் உடைமை' என்ற எண்ணம், சுயநலம், பொறாமை, கோபம், முதலான இந்த மாதிரி குணங்களைத்தான் ஸ்ரீ காழியூரர் “மனக் கசடுகள்” என்று குறிப்பிடுகிறார்.

எப்படி அன்பு செலுத்த வேண்டும் என்பது குறித்து (பாண்டிச்சேரி) ஸ்ரீ அன்னை சொல்வதை கேளுங்க:

“one must learn how to love better: to love with devotion, with self-giving, self-abnegation, and to struggle, not against love itself, but against its distorted forms: against all forms of monopolising, of attachment, possessiveness, jealousy, and all the feelings which accompany these main movements. Not to want to possess, to dominate; and not to want to impose one's will, one's whims, one's desires; not to want to take, to receive, but to give; not to insist on the other's response, but be content with one's own love; not to seek one's personal interest and joy and the fulfillment of one's personal desire, but to be satisfied with the giving of one's love and affection; and not to ask for any response. Simply to be happy to love, nothing more. - The Mother [CWMCE, 8:302-03]”

எவ்வளவு அழகா சொல்லியிருக்கிறார்!

கொஞ்சம் சிந்தித்தாலே தெரியும், நாம் பிறர் மீதும், ஏன், ஜடப் பொருட்கள் மீதும் கூட எவ்வளவு உரிமையும் பற்றும் பாசமும் கொண்டிருக்கிறோம் என்பது! அதனால்தான் பல துன்பங்களுக்கு ஆளாகிறோம்.

மனித இயல்பே சுயநலம்தான், சொந்தம் கொண்டாடுதல்தான், எனும்போது அதனை மாற்றிக் கொள்வது கடினம்தான். ஆனால் அதே காரணத்தால்தான், இந்த குணங்களை மாற்றிக் கொண்டால், அல்லது, மாற்றிக் கொள்ள வேண்டும் என்று முயற்சி செய்தால் கூட, மனிதன் தெய்வத் தன்மை கொண்டவனாகி விடுகிறான்!

நாம் இறைவன் மீது வைக்கும் அன்பும் இவ்விதமே தூயதாக இருக்க வேண்டுமென்பார், ஸ்ரீ ராமகிருஷ்ணரும்.

ஆன்மீகமோ, இல்லையோ, இப்படிப் பட்ட தூய அன்பை பழகிக் கொண்டால், அது தினசரி வாழ்விலும் மிகுந்த மன அமைதியைத் தரும் என்பதில் சந்தேகமில்லை!

‘அன்புடன்’
கவிநயா

(நீங்க படிக்காட்டாலும் பின்னூட்டமிடாட்டாலும் கூட மாறாத அன்பாக்கும் இது! :)

Sunday, June 28, 2009

காத்திருப்பேன்...அன்றொரு நாள் அழுதிருந்தேன்
ஆதுரமாய் அன்பு செய்தாய்
உயிர் கொண்ட தேவதையாய்
உவந்தென்னை மகிழ வைத்தாய்

கைகால்கள் முளைத்தெழுந்த
கனவாக நீ வந்தாய்
கவிதைக்குள் கருவானாய்
நிஜத்தினிலே உருவானாய்

துயர்துடைத்து முடித்த பின்னே
தொலைவினிலே மறைந்து விட்டாய்
உன் கடமை முடிந்தது போல்
உதறி விட்டுச் சென்று விட்டாய்

வந்திடுவாய் நீ என்றே
வாசல் பார்த் திருக்கின்றேன்
உன்னோடு சேர்ந்திடவே
உயிர் சேர்த்து வைக்கின்றேன்...


--கவிநயா

('அன்புடன்' குழுமத்தில் நிறைய எழுதிக் கொண்டிருந்த போது படத்திற்கென எழுதிய கவிதை)

சுப்பு தாத்தாவின் குரலில், இசையமைப்பில்... (நன்றி தாத்தா!)

Wednesday, June 24, 2009

யாருக்குத் தெரியும்?

ராமுவிற்கு வகுப்பில் கவனம் செல்லவில்லை. இத்தனைக்கும் அவனுக்கு பிடித்த கணக்கு பாடம். அவனுக்கு பிடித்த கனகா டீச்சர். இருந்தாலும் உடம்பு சரியில்லாத அம்மாதான் மனசில் வந்து கொண்டேயிருந்தாள்.

அம்மா மூன்று நாளாக வீட்டு வேலைக்கு போகவில்லை. காய்ச்சல் அதிகமாகிக் கொண்டே வருகிறது. மருந்து வாங்க காசில்லை. எப்போதடா பள்ளி நேரம் முடியும், யாரைக் கேட்கலாம் என்றே யோசனை ஓடிக் கொண்டிருந்தது. அதே யோசனையுடன் வீட்டுப் பாடத்தை கரும்பலகையில் எழுதிக் கொண்டிருந்த கனகா டீச்சரைப் பார்த்தவனுக்கு, சட்டென்று பொறி தட்டினாற் போல் இருந்தது. அவரையே கேட்டால் என்ன? கனகா டீச்சர் அன்பானவர். நிச்சயம் உதவுவார் என்று தோன்றியது.

மணி அடித்து விட்டது. கண் மூடித் திறப்பதற்குள் மந்திரம் போட்டாற் போல் வகுப்பறை காலியாகி விட்டது. டீச்சர் போய் விடுவதற்குள் அவரிடம் கேட்க வேண்டுமே… வேகமாக அவனும் வகுப்பை விட்டு வெளியே வரும்போதுதான் அதைக் கவனித்தான்.

அது ஒரு நூறு ரூபாய் நோட்டு. மேசைக்கு பக்கத்தில் கீழே கிடந்தது. வீட்டுக்குப் போகும் அவசரத்தில் யாருமே கவனிக்கவில்லை போலும். யாருடையதாய் இருக்கும்? சரி, அதுதான் டீச்சரைப் பார்க்க போகிறோமே, அவங்ககிட்டயே குடுத்துடலாம், என்று எண்ணமிட்டபடி அதை எடுத்துக் கொண்டான்.

கனகா டீச்சர், ஆசிரியைகள் அறையில் வீட்டுக்குக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தார்.

“உள்ளே வரலாமா டீச்சர்”, பணிவாகக் கேட்டபடி, அவர் தலையசைத்ததும் உள்ளே நுழைந்தான், ராமு.

“என்னப்பா ராமு? என்ன விஷயம்? ஏதாச்சும் சந்தேகமா?”

“இல்ல டீச்சர்… இந்த நூறு ரூபாய் நம்ம வகுப்பறையில் கிடந்தது. யாருதுன்னு தெரியல. இதை உங்ககிட்ட குடுத்துட்டு, அப்படியே இன்னொரு உதவியும் கேட்கலாம்னு வந்தேன்”.

“அப்படியா?” என்றபடி, தன்னுடைய பர்ஸை திறந்து பார்த்தவர், “அடடா, என்னுடையதுதாம்ப்பா. சரியா மூடாம வச்சிருந்ததால கீழ விழுந்திருச்சு போல. நேர்மையாக கொண்டு வந்து கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி உனக்கு”, என்றார்.

“அது சரி… ஏதோ உதவின்னியே, என்ன விஷயம்?”

“டீச்சர்… என் அம்மாவுக்கு மூணு நாளா உடம்பு சரியில்லை. மருந்து வாங்கணும். கொஞ்சம் பணம் வேணும் டீச்சர். கடனா குடுத்தா போதும்…”, கெஞ்சும் குரலில் தயங்கி தயங்கிக் கேட்டான்.

நூறு ரூபாயை கொண்டு வந்து கொடுத்து விட்டு பிறகு கடன் கேட்கும், தந்தை இல்லாத அந்த பத்து வயதுச் சிறுவனைப் பார்க்க டீச்சருக்கு கொஞ்சம் ஆச்சர்யமாகத் தான் இருந்தது.

“அதனால என்னப்பா. இதோ இதை வச்சுக்கோ…” என்று அவன் கையில் கொஞ்சம் பணத்தை வைத்தார்.

“வேற ஏதாச்சும் வேணும்னாலும் தயங்காம கேளு”

“ரொம்ப நன்றி டீச்சர். கட்டாயம் திருப்பி தந்திடுவேன். போயிட்டு வரேன் டீச்சர்”, என்று முகம் மலர கிளம்பிய ராமுவைத் தடுத்தது டீச்சரின் குரல்.

“ஒரு நிமிஷம் ராமு…”

நின்று திரும்பினான். “டீச்சர்?”

“உனக்கு இவ்வளவு அவசரமா பணம் தேவையாய் இருந்திருக்கு. அப்படின்னா நீயே அந்த நூறு ரூபாயை எடுத்துக்கிட்டு போயிருக்கலாமே? ஏன் என்கிட்ட கொண்டு வந்து குடுத்தே? நீதான் எடுத்தேன்னு யாருக்கு தெரிய போகுது?”

சற்றும் தயங்காமல் பதில் வந்தது, “எனக்கு தெரியுமே, டீச்சர்!”


--கவிநயா

Sunday, June 21, 2009

உயிர்த்தோழிக்கு...சொந்தமில்லை என்பதனால் சோதரியாய் ஆனாயோ
பந்தமில்லை என்பதனால் பாசமழை பொழிந்தாயோ
ஆரிரரோ பாடாமல் அன்னையென ஆனாயோ
காரிருளில் கைவிளக்காய் காரிகையே வந்தாயோ

ஆதாயம் தேடாத அன்புண்டோ என்றிருக்க
ஆகாயம் போல்விரிந்த அன்பையே நீதந்தாய்
சேதாரம் இல்லாத உறவுண்டோ என்றிருக்க
ஆதாரம் நீயாகி அச்சாணியாய் அமைந்தாய்

குற்றமெதும் காணாத சுற்றமென வந்தவளே
உற்றவளாய் உரியவளாய் உடனென்றும் இருப்பவளே
விட்டகுறை தொட்டகுறை தீர்க்கவென வந்தாயோ
சுட்டசங்கைப் போலவெள்ளை நட்பதனைத் தந்தாயோ

அன்புக்கும் நட்புக்கும் அடைக்குந்தாழ் ஏதுமுண்டோ
காற்றுக்கும் கடலுக்கும் வேலிகட்டி மாள்வதுண்டோ
அள்ளிஅள்ளி அனைத்தும்நீ அளக்காமல் தந்துவிட்டாய்
கிள்ளித் தரக்கூட ஏதுமில்லை என்னிடத்தில் -

உள்ளத்தின் உள்ளிருந்து
துள்ளித் தெறித்து வந்த
இந்த கவிதைத் துளியைத் தவிர...--கவிநயா

உலகத்தில் உள்ள அனைத்து உய(யி)ர் நட்பிற்கும், நண்பர்களுக்கும் இந்தக் கவிதை சமர்ப்பணம்.

படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/30006798@N05/3642105216/sizes/l/in/pool-33853651896@N01/

Thursday, June 18, 2009

கேள்விக்கென்ன பதில்?

என்னையும் பொருட்டாக மதித்து அன்புடன் ஆட்டத்தில் சேர்த்துக்கிட்ட குமரனுக்கும், கபீரன்பன் அவர்களுக்கும் நன்றி!


1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

தானா வரலைங்க. நானே வச்சுக்கிட்டேன்! ரொம்பவே பிடிக்கும் :) சில வருஷங்களுக்கு முன்னால், தொடர்ந்து எழுதலாம்கிற எண்ணம் ஏற்பட்ட போது புனை பெயர் வேணும்னு தோணிச்சு. அதற்காக எனக்கு பிடித்த கவிதையையும், அபிநயத்தையும் சேர்த்து நானே (முதன்முதலா) உருவாக்கினது. (காப்பிரைட் வாங்கியிருக்கணுமோ? :)

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

ஏற்கனவே உடல் நலம் குன்றிய அம்மாவுக்கு மேலும் சில பிரச்சனைகள் இருக்குன்னு கண்டுபிடிச்சிருப்பதை அறிந்த போது.

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

இன்னும் கொஞ்சம் அழகா இருக்கலாம் என்கிற எண்ணம் ஏற்படுவதுண்டு. ஆனா எல்லாருக்கும் புரியறாப்லதான் இருக்கும்.

4. பிடித்த மதிய உணவு என்ன?

ரசஞ்சோறு, உருளைக்கிழங்கு கறி :) அம்மா வைக்கும் அவல் பாயசம் ரொம்பப் பிடிக்கும்.

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

புன்னகையும் அன்பும் எப்பவும் எல்லோருக்கும் உண்டு. ஆழ்ந்த நட்பிற்கு நாளாகும்.

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

கடலில் குளிச்சிருக்கேன். அருவில குளிச்சதே இல்ல :( அட, நெசமாதாங்க! பம்பு செட்டு குளியல் ரொம்ப பிடிக்கும். அதான் இதுவரை எனக்கு கிடைச்ச அருவி!

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முகமும் கண்ணும்.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்சது - பெரிசா எந்தவிதமான ஆசைகளும், எதிர்பார்ப்புகளும் இல்லாமல் இருக்கறது.
பிடிக்காதது - சின்ன விஷயத்துக்கும் துவண்டு போயிடறது.

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

சாய்ஸ்ல விட்டாச்!

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

என் பெற்றோர் பக்கத்தில்.

11. இதை எழுதும் போது என்ன வண்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

பழுப்பு வண்ண சூரிதார்.

12. என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

கடிகாரச் சத்தம் கேட்டுக்கிட்டு பதி(ல்)வு எழுதிக்கிட்டிருக்கேன்.

13. வண்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

நீலம்.

14. பிடித்த மணம்?

காட்டுமல்லி வாசம்.

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

சுப்பு தாத்தா - இவருக்கு தெரியாத விஷயமே இல்லை. ஆனால் என்னை மாதிரி ஒண்ணும் தெரியாதவங்ககிட்டயும் அன்பா இருப்பார். நான் எழுதற எல்லா கவிதைகளுக்கும் தவறாமல் இசை அமைச்சிடுவார்!

சதங்கா - யூத் விகடனை சிறுகதை எழுத குத்தகைக்கு எடுத்திருக்கார். கவிதை எழுதுவார், படம் வரைவார், சமையல் பண்ணுவார்... வேறென்னங்க பண்ணுவீங்க? எங்க ஊர்ல இருந்துகிட்டே முகம் காட்டாம பேர் சொல்லாம ரொம்ப நாள் ஏச்சுக்கிட்டிருந்தார். யூத் விகடன் வந்ததும் இவர் முகமுடி கிழிஞ்சதில் (என் யூகம் சரியானதில்) எனக்கு ரொம்ப குஷி! :)

திகழ்மிளிர் - இவரோட அழகான பெயரும் தமிழில் இவருக்குள்ள ஆர்வமும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதோடு தவறாமல் இங்கே பின்னூட்டறதையும் சேர்த்துக்கலாம் :)

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

கபீரன்பன் அவர்கள் - இவருடைய கபீரின் கனிமொழிகள் வலைப்பூ மிகவும் பிடித்தது. இவருடைய பிற வலைப்பூக்களுக்கும் அவ்வப்போது போவேன். அருமையாக படங்களும் வரைவார் என்பது தெரியும்.

குமரன் - வலை உலகிற்கு வந்த போது இவர் பதிவுகளைத்தான் முதன் முதலில் ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தேன். இவருடைய அபிராமி அந்தாதி வலைப்பூவும், கோதைத் தமிழும், மிக மிக பிடித்தது.

17. பிடித்த விளையாட்டு?

கேரம், ஷட்டில், விளையாட. பார்க்க கூடைப்பந்து, டென்னிஸ்.

18. கண்ணாடி அணிபவரா?

ஆமாம். கணினிக்கும், படிக்கவும்.

19. எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?

திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் மாதிரியான சில அந்தக் கால படங்கள் பிடிக்கும். இப்பல்லாம் திரைப்படம் பார்க்க அவ்ளோ பிடிக்கிறதில்லை.

20. கடைசியாகப் பார்த்த படம்?

தசாவதாரம்னு நினைக்கிறேன்.

21. பிடித்த பருவ காலம் எது?

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொண்ணு பிடிக்கும். பனிக்காலத்திலும் பனிப்பூ பிடிக்கும்; குளிர் மட்டும் பிடிக்கவே பிடிக்காது.

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

ஸ்ரீ சாரதாதேவி பற்றின "அம்மா" என்ற புத்தகம். திரு.ரா.கணபதி எழுதியது.

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

மாத்தறதில்லை.

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்தது - குழந்தையின் கலகல சிரிப்பு சத்தம், கொலுசு சத்தம், பறவைகள் சத்தம்.
பிடிக்காதது - மும்முரமா எழுதும் போதோ வேலை செய்யும் போதோ தொந்தரவு செய்யற எந்த சத்தமும்.

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

இப்போ இருக்கிறதுதான்.

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

தெரியல. என்னை தெரிஞ்சவங்கதான் சொல்லணும்.

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

அப்படி எதுவும் சட்டுன்னு தோணலை. (எனக்கு சகிப்புத் தன்மை கொஞ்சம் அதிகம் :)

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

தாழ்வு மனப்பான்மை. அதனால பல சமயங்களில் நினைச்சதை பளிச்சுன்னு சொல்ல ஏற்படும் தயக்கம்.

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

கடலும் அருவியும் ஆறும் ஏரியும் இருக்கிற இடங்கள்.

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

குழந்தை மனசுடன், பகைவனுக்கும் அருளும் அன்புடன்.

31. கணவன் இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

பதிவுகள் எழுதுவதும் படிப்பதும். (நன்றி: குமரன் :)

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

வாழ். வாழ விடு.