Wednesday, December 24, 2008

கோதையின் வாடலும் பாடலும்

கோதை இல்லாத மார்கழியா? கண்ணன் இல்லாத சுடர்கொடியா? கோதையுடைய ஏக்கத்தைத் தீர்க்க முடியாட்டாலும், வெண்ணிலாவோட சேர்ந்து நாமும் அவள் பாடலை காது கொடுத்தாவது கேட்கலாம் வாங்க...



வெள்ளையாய்ச் சிரிக்குமெழில் வெண்ணிலாவே எந்தன்
வேதனையை அறியாயோ வெண்ணிலாவே?
கள்ளத்தனம் ஏனுனக்கு வெண்ணிலாவே இந்த
பேதையிடம் காய்வதென்ன வெண்ணிலாவே?

கண்ணனவன் திருமுகத்தைக் கண்டதுண்டோ என்
கண்அவனின் குழலமுதம் உண்டதுண்டோ?
விண்பொழியும் மழைமேகக் கருமைவண்ணன் அவன்
நீண்டகரு விழியழகைத் தின்றதுண்டோ?

சின்னக்குறு நகைஇதழில் விளையாட அவன்
வண்ணமலர் மார்பில்அணி அசைந்தாட
தோகைமயி லிறகவனோ டிசைந்தாட அந்த
போதையிலென் னுள்ளமவன் வசமாக

ஆற்றங்கரை ஓரத்திலே வெண்ணிலாவே அவன்
காத்திருந்தால் வருவேனென்றான் வெண்ணிலாவே
காற்றும்கூட பரிகசிக்க வெண்ணிலாவே அந்த
கள்வன்வர வேயில்லை வெண்ணிலாவே

கோபியரைக் கண்டவுடன் வெண்ணிலாவே இந்த
கோதையினை மறந்தானோ வெண்ணிலாவே?
வெம்பிமனம் காயுதடி வெண்ணிலாவே இந்த
பெண்ணின்துய ரறியாயோ வெண்ணிலாவே??

--கவிநயா

23 comments:

  1. \\கோதை இல்லாத மார்கழியா? கண்ணன் இல்லாத சுடர்கொடியா? கோதையுடைய ஏக்கத்தைத் தீர்க்க முடியாட்டாலும், வெண்ணிலாவோட சேர்ந்து நாமும் அவள் பாடலை காது கொடுத்தாவது கேட்கலாம் வாங்க...\\

    வந்துட்டேன் ...

    ReplyDelete
  2. அருமையான துயர்.

    நயமா சொல்லப்பட்ட கவிதை.

    ReplyDelete
  3. நீங்களே இவ்வளவும் எழுதறீங்களா......... எண்ணச் சிறகு எங்க எங்கோயோ பரக்குதுங்க

    ReplyDelete
  4. // காற்றும்கூட பரிகசிக்க வெண்ணிலாவே அந்த
    கள்வன்வர வேயில்லை வெண்ணிலாவே //

    வரிகள் கொள்ளை அழகு !!

    //கண்அவனின் குழலமுதம் உண்டதுண்டோ? //

    கண்கள் குழலமுதம் உண்பதா ??
    குழலழகை என்றோ பீலியழகை என்றோ இருந்தால் பொருத்தமாக இருக்கமோ

    கண்கள் நடையழகை மார்பழகை தோளழகை உண்ணலாம். செவிகளால் தானே குழலமுதை உண்ண முடியும்!

    அழகான கவிதை வாழ்த்துகள்

    ReplyDelete
  5. நல்லா இருக்குதுங்க அக்கா.

    ReplyDelete
  6. அழகான கவிதை வரிகள்.

    ReplyDelete
  7. அருமை!

    //வரிகள் கொள்ளை அழகு !!//
    அப்படியே!

    வலப்புறம், பாவை வரிகளை தரும் பாங்கும் அழகு!

    ReplyDelete
  8. //கண்ணனவன் திருமுகத்தைக் கண்டதுண்டோ என்
    கண்அவனின் குழலமுதம் உண்டதுண்டோ?
    விண்பொழியும் மழைமேகக் கருமைவண்ணன் அவன்
    நீண்டகரு விழியழகைத் தின்றதுண்டோ?
    //

    நான் மிகவும் ரசித்த வரிகள் இவை. சந்தம் இந்த பாடலில் மிக அருமையாக உள்ளது.

    ReplyDelete
  9. //அருமையான துயர்.

    நயமா சொல்லப்பட்ட கவிதை.//

    வாங்க ஜமால். மிக்க நன்றி.

    ReplyDelete
  10. //நீங்களே இவ்வளவும் எழுதறீங்களா......... எண்ணச் சிறகு எங்க எங்கோயோ பரக்குதுங்க//

    ஆமாங்க SUREஷ் :)) கற்பனையின் சிறப்பே அதுதானே? முதல் வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  11. //கண்கள் குழலமுதம் உண்பதா ??//

    கண்கள் உண்பதாகச் சொல்லவில்லை கபீரன்பன் ஐயா. "என் கண் அவனின் குழலமுதம் உண்டதுண்டோ?" என்று, "என்னுடைய கண் அவன்" அப்படின்னு கண்ணனைச் சொல்லி, அவன் குழலமுதத்தை உண்டதுண்டோ என்கிறாள்.

    வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  12. //நன்று//

    மிக்க நன்றி பூர்ணிமா.

    ReplyDelete
  13. //நல்லா இருக்குதுங்க அக்கா.//

    மிக்க நன்றி குமரா.

    ReplyDelete
  14. //அழகான கவிதை வரிகள்.//

    மிக்க நன்றி சதங்கா.

    ReplyDelete
  15. //அருமை!

    //வரிகள் கொள்ளை அழகு !!//
    அப்படியே!

    வலப்புறம், பாவை வரிகளை தரும் பாங்கும் அழகு!//

    வாங்க ஜீவா. கவிதையையும் பாவை வரிகளையும் ரசித்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  16. //நான் மிகவும் ரசித்த வரிகள் இவை. சந்தம் இந்த பாடலில் மிக அருமையாக உள்ளது.//

    வாங்க ரமேஷ். மிக்க நன்றி.

    ReplyDelete
  17. //"என்னுடைய கண் அவன்" அப்படின்னு கண்ணனைச் சொல்லி..//

    அப்பா ! தமிழ் எப்படியெல்லாம் விளையாடுது !! விளக்கத்திற்கு நன்றி

    ReplyDelete
  18. //தமிழ் எப்படியெல்லாம் விளையாடுது !!//

    ஆம் ஐயா. தமிழின் அழகுக்கு ஈடேது :) மீள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  19. வெண்ணிலவைப் பார்த்துப் பாடும் இன்னொரு வெண்ணிலவாய் கண்ணிலே ஏக்கத்தைக் காட்டி வானிலே நிலவினை நோக்கி நிற்கும் கோதையின் படம் மட்டுமா மயக்குகிறது? பாடல் வரிகளும்தான் கவிநயா! வாழ்த்துக்கள்.

    //"என் கண் அவனின் குழலமுதம் உண்டதுண்டோ?" //

    விளக்கத்தையும் ரசித்தேன்.

    ReplyDelete
  20. //வெண்ணிலவைப் பார்த்துப் பாடும் இன்னொரு வெண்ணிலவாய் கண்ணிலே ஏக்கத்தைக் காட்டி வானிலே நிலவினை நோக்கி நிற்கும் கோதையின் படம் மட்டுமா மயக்குகிறது? பாடல் வரிகளும்தான் கவிநயா!//

    வருக ராமலக்ஷ்மி! கோதை கண்ணனை எதிர் பார்த்திருக்க, நான் எங்கே ராமலக்ஷ்மியைக் காணுமேன்னு பாத்துக்கிட்டிருந்தேன் :) பிறந்தநாள் பிசியா? மீண்டும் வாழ்த்துகள்! வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  21. வாசிக்கின்ற எவரும் விரும்பிய வகையில் ராகம் அமைத்து பாடும் வகையில் இனிமையாக, எளிமையாக உள்ளது.
    'அலைபாயுதே' பாடலைப்போல் அற்புதமாக இருக்கிறது.

    ReplyDelete
  22. வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி திலகா.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)