Wednesday, December 31, 2008

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 7




7.

அன்னே, இவையும் சிலவோ, பல அமரர்
உன்னற்கு அரியான், ஒருவன், இருஞ்சீரான்,
சின்னங்கள் கேட்பச் சிவன் என்றே வாய் திறப்பாய்,
தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகு ஒப்பாய்,
என்னானை என்னரையன் இன்னமுது என்று எல்லோமும்
சொன்னோம் கேள் வெவ்வேறாய், இன்னம் துயிலுதியோ,
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்,
என்னே துயிலின் பரிசு, ஏலோர் எம்பாவாய்.



அன்னே - தாயே!

இவையும் சிலவோ - இறைவனின் திருவிளையாடல்களில் இவையும் சில போலும்!

பல அமரர் - பல தேவர்களும்,

உன்னற்கு அரியன் - நினைத்தற்குக் கூட அரியவனும்,

ஒருவன் - ஒப்பற்றவனும்,

இரும் சீரான் - பெரும் புகழை உடையவனது,

சின்னங்கள் கேட்ப - சங்கு, தாரை முதலிய விடியற்காலை இசைக்கருவிகள் முழங்கக் கேட்டு,

சிவன் என்றே வாய் திறப்பாய் - சிவா சிவா என்று சொல்லிக் கொண்டே உன் வாய் திறப்பாய்

தென்னா என்னா முன் - தென்னவனே என்று சொல்லும் முன்னர்

தீசேர் மெழுகொப்பாய் - நெருப்பில் இடப்பட்ட மெழுகு போல் உருகுவாய்

என் ஆனை - என் தலைவன்

என் அரையன் - என் அரசன்

இன் அமுதன் - இனிய அமிழ்தம் போன்றவன் என்று

எல்லோரும் வெவ்வேறாய் சொன்னோம் கேள் - என்று நாங்கள் எல்லோரும் சொன்னாலும்

இன்னமும் துயிலுதியோ - இன்னும் உறங்குகிறாயே!

அன் நெஞ்சப் பேதையர் போல் - கல் போன்ற கடினமான மனமுள்ள அறிவில்லாதவர்களைப் போல்

வாளா - வீணாக, அசையாமல்

கிடத்தியால் - படுத்திருக்கின்றாயே!

என்னே துயிலின் பரிசு - தூக்கத்தின் சிறப்பைத்தான் என்னென்பது!

[இரும் சீரான் - பெரும் புகழுடையவன்; உன்னற்கு - நினைத்தற்கு]

அடீ அம்மா! இறைவனின் திருவிளையாடல்களில் இவையும் சில போலும்! முன்பெல்லாம், அதிகாலையில் சங்கு, தாரை எனும் வாத்தியங்கள் ஒலித்தவுடன், பல தேவர்களும் நினைத்தற்குக் கூட அரியவனும், ஒப்பற்றவனும், பெரும் புகழை உடையவனுமான அந்த இறைவனின் பெயரைச் சொல்லி, "சிவா சிவா" என்று சொல்லிக் கொண்டேதான் எழுந்திருப்பாய். "தென்னவனே" என்று சொல்லி முடிக்கும் முன் அனலில் இட்ட மெழுகென உருகி விடுவாய். ஆனால் இப்போதோ, "என் தலைவன், என் அரசன், அமிழ்தினும் இனிமையானவன்", என்றெல்லாம் நாங்கள் எல்லோரும் பலவாறாகச் சொல்வதைக் கேட்டும், இன்னும் உறங்குகின்றாயே! கல் போன்ற கடினமான நெஞ்சம் கொண்ட அறிவில்லாதவர்களைப் போல் வீணாக, அசையாமல், படுத்திருக்கின்றாயே! உன் தூக்கத்தின் சிறப்பைத்தான் என்னென்பது!


பொருளுக்கு நன்றி: Thiruppaavai and Thiruvempaavai by S. Srinivasan
படத்துக்கு நன்றி: shaivam.org

8 comments:

  1. படம் கேட்க நினைச்சேன், சொல்லிட்டீங்க , கண்ணன் எங்கே கிடைச்சான், நானும் திருடிட்டுப் போறேன், கண்ணனை!

    புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    திருவெம்பாவை இன்னும் படிக்கவில்லை. பிறகு வந்து படிக்கிறேன். :)

    ReplyDelete
  3. புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா.

    ReplyDelete
  4. நன்றி கீதாம்மா, ரமேஷ், மௌலி. அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளும்.

    ReplyDelete
  5. தென்னா என்னா முன்னம் தீ சேர் மெழுகு ஒப்பாய் - அருமை.

    ReplyDelete
  6. //தென்னா என்னா முன்னம் தீ சேர் மெழுகு ஒப்பாய் - அருமை.//

    எனக்கும் பிடிச்சது... நன்றி குமரா.

    ReplyDelete
  7. //"தென்னவனே" என்று சொல்லி முடிக்கும் முன் அனலில் இட்ட மெழுகென உருகி விடுவாய்.//

    இப்போதும் தங்கள் தேனான விளக்கத்தைக் கேட்டு எழுந்திடுவாள் பாருங்கள்.

    ReplyDelete
  8. //இப்போதும் தங்கள் தேனான விளக்கத்தைக் கேட்டு எழுந்திடுவாள் பாருங்கள்.//

    ம்.. :) வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)