Saturday, December 27, 2008

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 3




3.

முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்து என்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்
தித்திக்கப்பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்து ஆட் கொண்டால் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நஞ்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோரெம்பாவாய்.



முத்து அன்ன வெண் நகையாய் - முத்து கோத்தது போல உள்ள வெண்மையான பற்களை உடையவளே!

முன் வந்து எதிர் எழுந்து - எங்களுக்கு முன்னமே எழுந்து வந்து,

என் அத்தன், ஆனந்தன், அமுதன் என்று - என் தந்தை, இன்பமே உருவானவன், அமிர்தம் போன்றவன் எனப் பலவாறு புகழ்ந்து,

அள்ளூறித் தித்திக்கப் பேசுவாய் - அனுபவித்து, வாய் நிறைந்து, இனிமையாகப் பேசுவாய்,

வந்து உன் கடை திறவாய் - வந்து உன் வாயில் கதவைத் திறப்பாயாக

பத்து உடையீர் - இறைவனிடத்து நீங்கள் மிகுந்த பற்று உடையவர்கள்,

பழ அடியீர் - பழைய தொண்டர்கள்,

பாங்குடையீர் - அவனிடம் மிக்க உரிமை உடையவர்களே,

புத்து அடியோம் - புதிய தொண்டர்களாகிய எங்களது

புன்மை தீர்த்து - கீழ்மை குணங்களை நீக்கி,

ஆட்கொண்டால் பொல்லாதோ - எங்களையும் உங்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொண்டால் கெட்டா போய்விடுவீர்கள்?

எத்தோ உன் அன்புடைமை - ஆகா, உன் அன்புதான் எவ்வளவு?

எல்லோம் அறியோமோ - என்பதெல்லாம் நாங்கள் அறியாதவர்களா?

சித்தம் அழகியார் - மனத்தூய்மை உடையவர்கள்

பாடாரோ நம் சிவனை - நம் இறைவனைப் பாட மாட்டார்களா?

இத்தனையும் வேண்டும் எமக்கு - நாங்கள் விரும்புவதெல்லாம் நீயும் வந்து எங்களோடு கலந்து கொள்ள வேண்டுமென்பதே!


"முத்து கோத்தது போல வெண்மையான பற்களை உடையவளே! எங்களுக்கு முன்னமே எழுந்து வந்து, என் தந்தை, இன்பமே உருவானவன், அமிர்தம் போன்றவன் என்று இறைவனைப் பலவாறு புகழ்ந்து, அனுபவித்து, வாய் நிறைய இனிமையாகப் பேசுவாயே. படுக்கையிலிருந்து எழுந்து வந்து உன் வாயிற் கதவைத் திறப்பாயாக", என்று தோழியர் அழைக்க,

படுக்கையிலிருப்பவள், "இறைவனிடத்தில் மிகுந்த பற்று உடையவர்களே, பழைய தொண்டர்களே, அவனிடத்தில் மிக்க உரிமை உடையவர்களே! புதிய தொண்டர்களாகிய எங்களது கீழ்க் குணங்களை நீக்கி, எங்களையும் உங்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொண்டால் கெட்டா போய்விடுவீர்கள்?" என்று கேட்க,

எழுப்ப வந்த தோழியர், "ஆகா. உன் அன்புதான் எவ்வளவு என்பதெல்லாம் நாங்கள் அறியாதவர்களா? மனத்தூய்மை உடையவர்கள், நம் இறைவனைப் பாட மாட்டார்களா? நாங்கள் விரும்புவதெல்லாம், நீயும் வெளியே வந்து எங்களோடு சேர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதானே!" என்கிறார்கள்.



பொருளுக்கு நன்றி : "Thiruppaavai and Thiruvempaavai" by S. Srinivasan
படத்துக்கு நன்றி : http://iranikulamtemple.com/kerala-hindu-temple/shivan.jpg

14 comments:

  1. படித்தேன் சுவைத்தேன். :)

    ReplyDelete
  2. வாங்க ரமேஷ். நன்றி :)

    ReplyDelete
  3. //அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித் தித்திக்கப் பேசுவாய்//

    ஹிஹி! பாத்தீங்களாக்கா, பொண்ணுங்க ஒருத்தரை ஒருத்தர் எப்படிக் கலாய்ச்சிக்கறாங்க-ன்னு! :)

    ரொம்ப தான் தித்திக்க சிவனே சிவனே-ன்னு பேசுவியே! ஆனா இப்போ சிவன் பேரைக் கேட்டும் நல்லாவே தூங்குறியே! போதும் டீ டிராமா! வந்து கதவைத் தொற! :)))

    //சித்தம் அழகியார் பாடாரோ நஞ்சிவனை//

    நஞ்சிவனை! நம் சிவனை-ன்னும் கொள்ளலாம்!
    நஞ்சு+இவனை! அன்று நமக்காக நஞ்சு உண்ட இவனை-ன்னும் கொள்ளலாம்-ல?

    ReplyDelete
  4. //ரொம்ப தான் தித்திக்க சிவனே சிவனே-ன்னு பேசுவியே! ஆனா இப்போ சிவன் பேரைக் கேட்டும் நல்லாவே தூங்குறியே! போதும் டீ டிராமா! வந்து கதவைத் தொற! :)))//

    உங்க ஸ்டைல்ல சொன்னா சூப்பராதான் இருக்கு :)

    //நஞ்சிவனை! நம் சிவனை-ன்னும் கொள்ளலாம்!
    நஞ்சு+இவனை! அன்று நமக்காக நஞ்சு உண்ட இவனை-ன்னும் கொள்ளலாம்-ல?//

    சரியா பிடிச்சிட்டீங்களே :) என்கிட்ட இருக்க புத்தகத்துல அந்த வரிக்கு மட்டும் பொருள் விட்டுப் போயிருக்கு. அதனால நானாதான் "நம் சிவனை"ன்னு பிரிச்சு எழுதினேன். நீங்கள் சொல்றதும் சரியாதான் வரும்.

    வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி கண்ணா.

    ReplyDelete
  5. எல்லோரும் சேர்ந்து பாடுங்கள்!

    ReplyDelete
  6. இனிமை....எளிதாக இருக்கிறது....நன்றி.

    ReplyDelete
  7. //எல்லோரும் சேர்ந்து பாடுங்கள்!//

    நீங்களும் வாங்க ஜீவா :) ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய! சிவாய நம ஓம்!

    ReplyDelete
  8. //இனிமை....எளிதாக இருக்கிறது....நன்றி.//

    வாங்க மௌலி. நன்றிப்பா.

    ReplyDelete
  9. சென்ற பாடலும் இந்தப் பாடலும் அழகான உரையாடல் அக்கா. அருமையாக இருக்கிறது ஒவ்வொரு சொல்லும்.

    ReplyDelete
  10. //சென்ற பாடலும் இந்தப் பாடலும் அழகான உரையாடல் அக்கா. அருமையாக இருக்கிறது ஒவ்வொரு சொல்லும்.//

    ஆமா; அழகா இருக்குல்ல? :)

    வருகைக்கு நன்றி குமரா.

    ReplyDelete
  11. அருமையான பாடல். அற்புதமான விளக்கங்கள்.

    //இத்தனையும் வேண்டும் எமக்கு//

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. //அருமையான பாடல். அற்புதமான விளக்கங்கள்.//

    வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  13. Hi,I am from Iranikulam, thanks for posting about the great temple.
    Om Nama Sivayah!

    ReplyDelete
  14. நல்வரவு பிரசாந்த். முதல் வருகைக்கு நன்றி :)

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)