Thursday, December 25, 2008

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 1

வணக்கம்.

எங்க ஊர் கோவில்ல தினம் காலைல திருவெம்பாவையும் திருப்பாவையும் படிக்கிறோம். திடீர்னு திருவெம்பாவை பொருளோட எழுதணும்னு தோணிச்சு. சரியா மார்கழி 10-ல ஏன் தோணனும், இது இறையருளேன்னு நினைச்சு தொடங்கறேன்.

எனக்கா பொருள் எழுதத் தெரியாது. நான் இங்கு இடுகிற பொருள், திரு. எஸ். ஸ்ரீநிவாசன் என்கிறவர் எழுதிய, "Thiruppaavai and Thiruvempaavai" என்கிற புத்தகத்துல இருந்து எடுக்கப்பட்டது. இந்த புத்தகம் வெளிநாடுகளில் வாழுகிற இந்தியர்களுக்காகவே எழுதப் பட்டிருக்கு. பாடல்களும் பொருளும் தமிழ்லயும், ஆங்கிலத்துலயும் (transliteration) தொகுத்துத் தரப்பட்டிருக்கு. எடுத்து எழுதினா பாடல் பொருளுடன் மனசில பதியுமே என்கிற சுயநலமும் ஒரு காரணம் :)

தினம் ஒரு பாடல் இடுவதாக, இடர் நீக்கும் கணபதியின், அவன் தகப்பன் ஈசனின், என் அன்னை சக்தியின், திருக்கழல்கள் பணிந்து தொடங்குகிறேன்.

திருவெம்பாவையை இன்னும் விளக்கமாகப் படிக்க வேண்டுபவர்கள், கைலாஷி அவர்கள் போன மார்கழியில் எழுதிய thiruvempavai.blogspot.com க்குச் சென்று பாருங்கள். படமும் அங்கிருந்துதான் எடுத்தேன். நன்றி கைலாஷி.




திருச்சிற்றம்பலம்

1.

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே! வளருதியோ? வன்செவியோ நின்செவிதான்!
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே! என்னே!
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்!


வாள் தடம் கண் மாதே - ஒளி பொருந்திய, அகன்ற கண்களையுடைய பெண்ணே!

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்சோதியை - தோற்றமும் முடிவும் இல்லாத அரிய பெரிய ஒளிவடிவானவனை,

யாம் பாடக் கேட்டேயும் - நாங்கள் பாடுவதைக் கேட்டும்,

வளருதியோ - இன்னும் உறங்குகின்றனையோ?

வன்செவியோ நின்செவிதான் - உன் காதுகள், சொல்வதைக் கேளாத வன்மையான செவிகளோ?

மாதேவன் வார்கழல்கள் - இறைவனான சிவபெருமானின் அழகிய வீரக்கழல்கள் அணிந்த திருவடிகளை,

வாழ்த்திய வாழ்த்தொலி போய் - நாங்கள் வாழ்த்திக் கொண்டே வரும் ஓசை,

வீதிவாய்க் கேட்டலும் - தெருவில் கேட்டவுடன் (ஒரு பெண்)

விம்மி விம்மி - தேம்பித் தேம்பி அழுது,

மெய்மறந்து - உணர்ச்சி இல்லாமல்,

போது ஆர் அமளியின் மேல் நின்றும் - மலர்கள் பொருந்திய படுக்கையிலிருந்து,

புரண்டு - உருண்டு கீழே விழுந்து,

இங்ஙன் ஏதேனும் ஆகாள் கிடந்தாள் - நிலத்தில், செயலற்று, ஒன்றுக்கும் உதவாதவளாய் கிடந்தாள்.

என்னே என்னே - இந்த அதிசயம் என்னென்பேன்?

ஈதே எம் தோழி பரிசு - எம் தோழியாகிய உன் நிலைமை இன்னும் படுத்துக் கிடப்பதோ?

16 comments:

  1. மிகவும் அருமையாக விளக்கியிருக்கிறீர்கள். கடைசியில் மீண்டும் உரைநடையில் அதன் அர்த்தத்தை எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும். தமிழின் சுவையும் பக்தியின் சுவையும் இருந்தால் வாழ்க்கையில் வேறெதுவும் தேவையில்லை.

    ReplyDelete
  2. // எனக்கா பொருள் எழுதத் தெரியாது.//

    ஒரு கேள்வி குறி மிஸ்ஸிங் போல இருக்கு!

    //மனசில பதியுமே என்கிற சுயநலமும் ஒரு காரணம் :)//

    சுயநலத்தில் நல்ல சுயநலம்! நடக்கட்டும்!

    ReplyDelete
  3. Good one... Please continue and looking forward to the series...

    //எங்க ஊர் கோவில்ல தினம் காலைல திருவெம்பாவையும் திருப்பாவையும் படிக்கிறோம்.//

    Inga padichidhaan theriyudhu indha vishayam ellam :-(

    ReplyDelete
  4. அருமையான துவக்கம்-க்கா!
    நீங்க பத்தாம் நாள் துவக்கினாலும், இதுவும் மார்கழி முடிவில் தான் முடியும்! ஏன்னா திருவெம்பாவையில் 20 பாடல்கள் தான்!

    மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலியில் அடியேனும் வாழ்த்துகிறேன்!
    நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க வாழ்க!

    ReplyDelete
  5. //மிகவும் அருமையாக விளக்கியிருக்கிறீர்கள்.//

    அச்சோ. நான் இல்லைப்பா. திரு.எஸ்.ஸ்ரீநிவாசன் அவர்கள் :)

    //கடைசியில் மீண்டும் உரைநடையில் அதன் அர்த்தத்தை எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.//

    உண்மைதான். முயற்சிக்கிறேன்.

    //தமிழின் சுவையும் பக்தியின் சுவையும் இருந்தால் வாழ்க்கையில் வேறெதுவும் தேவையில்லை.//

    நன்றாகச் சொன்னீர்கள்.

    மிக்க நன்றி ரமேஷ்.

    ReplyDelete
  6. //ஒரு கேள்வி குறி மிஸ்ஸிங் போல இருக்கு!//

    கிண்டல்தானே? :) எனக்கு பொருள் எழுதத் தெரியாதுன்னு சொல்ல வந்தேன் :)

    //சுயநலத்தில் நல்ல சுயநலம்! நடக்கட்டும்!//

    :))

    வருகைக்கு நன்றி திவா.

    ReplyDelete
  7. //Good one... Please continue and looking forward to the series...//

    முயற்சிக்கிறேன் நாகு :)

    //Inga padichidhaan theriyudhu indha vishayam ellam :-(//

    இப்பதான் தெரிஞ்சிருச்சே. இனி தினம் காலைல 7 மணிக்கு உங்களைக் கோவில்ல பார்க்கிறேன் :)

    ReplyDelete
  8. //ஏன்னா திருவெம்பாவையில் 20 பாடல்கள் தான்!//

    ஆமா கண்ணா. அவரும் மார்கழி 10-லதான் ஆரம்பிச்சாராமே.

    //மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலியில் அடியேனும் வாழ்த்துகிறேன்!//

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கண்ணா.

    ReplyDelete
  9. //எடுத்து எழுதினா பாடல் பொருளுடன் மனசில பதியுமே என்கிற சுயநலமும் ஒரு காரணம் :)
    //

    இந்த சுயநலம் தான்கா என்னையும் எழுத வச்சுக்கிட்டு இருக்கு. :-)

    ReplyDelete
  10. உங்க அன்னை சக்தின்னா இடர் நீக்கும் கணபதி உங்க அண்ணனா? :-)

    ReplyDelete
  11. பொருள் ரொம்ப எளிமையா அருமையா இருக்குங்க அக்கா. :-)

    ReplyDelete
  12. //இந்த சுயநலம் தான்கா என்னையும் எழுத வச்சுக்கிட்டு இருக்கு. :-)//

    உங்களுடைய அந்த சுயநலம் என்றும் நீங்காதிருக்கட்டும்! :)

    ReplyDelete
  13. //பொருள் ரொம்ப எளிமையா அருமையா இருக்குங்க அக்கா. :-)//

    ஆமால்ல? :)

    ReplyDelete
  14. //உங்க அன்னை சக்தின்னா இடர் நீக்கும் கணபதி உங்க அண்ணனா? :-)//

    ஆமா, கணபதி என் அண்ணன், குமரன் என் தம்பி :)

    (அதென்னவோ உங்க இந்த ரெண்டு பின்னூட்டமும் என் மின்னஞ்சலுக்கு வரல; இப்பதான் dashboard -ல பார்த்தேன்)

    ReplyDelete
  15. shri ramesh sadasivam said...

    //கடைசியில் மீண்டும் உரைநடையில் அதன் அர்த்தத்தை எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.//

    தாங்கள்:

    //உண்மைதான். முயற்சிக்கிறேன்.//

    சொன்னபடி செய்து விட்டீர்கள், தொடர்ந்த பதிவுகளில். உங்கள் முயற்சி திருவினையானது.

    ReplyDelete
  16. //சொன்னபடி செய்து விட்டீர்கள், தொடர்ந்த பதிவுகளில். உங்கள் முயற்சி திருவினையானது.//

    வாங்க ராமலக்ஷ்மி. மிக்க நன்றி.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)