Wednesday, October 22, 2008

நம்பிக்கையின் சிறப்பு

ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகளிலிருந்து...


இறைவனை அடைய நினைப்பவர்களிடம் எது இருக்கிறதோ இல்லையோ, நம்பிக்கை அவசியம் வேண்டும். நம்பிக்கை, முழு நம்பிக்கை, absolute faith, என்பது அவ்வளவு சுலபமான விஷயமில்லை. நம்பிக்கை என்பது குழந்தைக்கு தாயிடம் இருப்பதைப் போல் இருக்க வேண்டும். "இவர் தான் உன் அப்பா", " இதுதான் உன் அண்ணன்", இப்படி தாய் சொல்வதை எல்லாம் அப்படியே நம்பித்தான் ஒவ்வொன்றையும் கற்றுக் கொள்கிறது குழந்தை. அம்மா தனக்கு நல்லதுதான் செய்வாள், சொல்வாள் என்பதை கேள்வி கேட்காமல் நம்புகிறது. அதே போன்ற நம்பிக்கைதான் நமக்கு இறைவனிடம் வேண்டும்.

ஒரு ஊரில் ஒரு தாயும் மகனும் வசித்தார்கள். அந்த பிள்ளை பள்ளிக்கு போவதற்கு அடர்ந்த காட்டு வழியே போக வேண்டியிருந்தது. அது அவனுக்கு மிகவும் பயமாக இருந்தது. தன் அம்மாவிடம் சொன்னான், "அம்மா, எனக்கு காட்டு வழியே தனியே நடக்கையில் மிகவும் பயமாக இருக்கிறதம்மா", என்று.

அம்மாவும், "இனிமேல் அப்படி பயமாக இருந்தால், மதுசூதனா என்று கூப்பிடு, அவன் துணைக்கு வருவான்", என்றாள்.

மகனும், மதுசூதனன் யார் என்று கேட்டதற்கு, அவள், "அது உன் அண்ணன்", என்றாள்.

மறுநாள் அவன் காட்டு வழி நடக்கையில் ஏதேதோ சப்தங்கள் கேட்டு பயந்து கொண்டான். அப்போது அம்மா சொன்னது நினைவு வந்தது.

"மதுசூதனா... மதுசூதனா...", என்று கூப்பிட்டான். யாரும் வரவில்லை. இன்னும் பலமுறை கூப்பிட்டும் வரவில்லை.

"அம்மா சொன்னாளே, அண்ணன் வரவில்லையே", என்று நினைத்து, பயந்து அழ ஆரம்பித்து விட்டான். அழுது கொண்டே அவன் திரும்பத் திரும்பக் கூப்பிட்டதும், அதற்கு மேல் பொறுக்க முடியாமல், வந்தே விட்டான் மதுசூதனன்!

அவனை பத்திரமாக கொண்டு போயும் சேர்த்து விட்டான். "இனி பயமாக இருக்கும் போதெல்லாம் கூப்பிடு. உடனே வருகிறேன்", என்றும் சொன்னான்.

அந்த மதுசூதனன் யாரென்று உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்குமே? அந்தக் குழந்தையைப் போன்ற அசைக்க முடியாத நம்பிக்கைதான் நமக்கும் இறைவனிடம் வேண்டும். அதைப் போன்ற நம்பிக்கையுடன் இறைவனுக்காக ஏங்கி அழுதால், அவனால் வராமல் இருக்கவே முடியாது என்கிறார், ஸ்ரீ ராமகிருஷ்ணர்.

ஸ்ரீ ராமன், அவனே இறையாக இருந்த போதிலும், கடலைக் கடக்க பாலம் கட்ட வேண்டியிருந்தது, ஆனால் ஆஞ்சநேயரோ, ஸ்ரீ ராமன் மேல் இருந்த நம்பிக்கை ஒன்றாலேயே கடலை ஒரே தாவில் தாண்டி விட்டார்; அவருக்கு பாலமெல்லாம் தேவைப்படவில்லை, என்று வேடிக்கையாகச் சொல்வார் ஸ்ரீ ராமகிருஷ்ணர்.

ஒரு மனிதன் கடலைக் கடக்க வேண்டி இருந்த போது, ராம நாமத்தை ஒரு ஓலையில் எழுதி, அதை அவன் மேல்துணியில் முடிந்து, "உனக்கு வேண்டியது இதில் இருக்கிறது. தைரியமாக போ", என்று அனுப்பி வைத்தானாம் விபீஷணன். அந்த மனிதனும் எந்த பிரச்சனையும் இல்லாமல் சாதாரணமாக நீர்மேல் நடந்து சென்றானாம். பாதி வழி போகையில், அந்த முடிப்பில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்க்க ஆசை வந்ததாம். அதை எடுத்து அதில் இருந்த ராம நாமத்தைப் பார்த்ததும், "இவ்வளவுதானா?" என்று நினைத்தானாம். அந்த எண்ணம் முடியும் முன்னே நீரில் முழுகி விட்டானாம்.

அதனால், குழந்தைக்கு தாயின் மேல் உள்ள நம்பிக்கை போல நமக்கு இறைவனிடம் ஏற்பட அவனிடமே இறைஞ்சுவோம்!

ஸ்ரீராமகிருஷ்ணரின் திருவடிகள் சரணம்!


பி.கு. : பக்தியிலும் நம்பிக்கையிலும் எனக்கு மிக மிகப் பிடிச்சவர் ஆஞ்சநேயர். அதான் அவருடைய படம் இங்கே. இங்கே இருந்து எடுத்தேன். http://www.dlshq.org/download/hindufestimg/hanuman.jpg

12 comments:

 1. ஸ்ரீ வாயு புத்ர நமோஸ்துதே....நானும் ஒரு முறை போற்றி வணங்கிக்கறேனுங்க....கதை முன்பே அறிந்தாலும், இன்னொருமுறை படித்து மனதிலிருத்திக் கொண்டேன்..நன்றி.வணக்கம்.

  ReplyDelete
 2. நம்பிக்கை என்றாலே அது என்றைக்கும் நூறு சதவிதமா இருக்கணும். மாறாது இருக்கணும். நல்ல கருத்தை வலியுறுத்தும் பதிவு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. //நம்பிக்கை, முழு நம்பிக்கை, absolute faith //
  இதுபோல படித்ததும், அதில் unshakable faith என்ற வரியைப் படித்ததும் நினைவுக்கு வருகிறது.

  ReplyDelete
 4. வாங்க மௌலி. உங்களுக்குத் தெரியாதது எதுவும் நான் சொல்லிட முடியுமா என்ன? :) வாசித்தமைக்கு நன்றி :)

  ReplyDelete
 5. வாங்க ராமலக்ஷ்மி. சரியாக சொன்னீங்க. நம்பிக்கைன்னாலே நூறு சதவிகிதம்னுதான் பொருள். ஆனா நமக்கு இருக்கதெல்லாம் ஊசலாடிக்கிட்டே இருக்கே :( அதான் அப்பப்ப நினைவுபடுத்திக்க வேண்டியிருக்கு. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)

  ReplyDelete
 6. வாங்க ஜீவா. அதுவும்தான். அசைக்க முடியாத நம்பிக்கை :) வருகைக்கு நன்றி :)

  ReplyDelete
 7. //இறைவனை அடைய நினைப்பவர்களிடம் எது இருக்கிறதோ இல்லையோ, நம்பிக்கை அவசியம் வேண்டும். நம்பிக்கை, முழு நம்பிக்கை, absolute faith, என்பது அவ்வளவு சுலபமான விஷயமில்லை. நம்பிக்கை என்பது குழந்தைக்கு தாயிடம் இருப்பதைப் போல் இருக்க வேண்டும். "இவர் தான் உன் அப்பா", " இதுதான் உன் அண்ணன்", இப்படி தாய் சொல்வதை எல்லாம் அப்படியே நம்பித்தான் ஒவ்வொன்றையும் கற்றுக் கொள்கிறது குழந்தை. அம்மா தனக்கு நல்லதுதான் செய்வாள், சொல்வாள் என்பதை கேள்வி கேட்காமல் நம்புகிறது. அதே போன்ற நம்பிக்கைதான் நமக்கு இறைவனிடம் வேண்டும். //

  அற்புதமான ஆரம்பம்..
  போகப்போக வேகமெடுக்கும் விரைவு
  வண்டி போல எண்ணங்கள் பறக்கின்றன.
  அற்புதமான முத்தாய்ப்பான முடிப்பு..
  நல்ல செய்திகளை எத்தனை தரம் படித்தாலும், எத்தனை பேர் எழுதினாலும் படிக்கவும், கேட்கவும் அலுப்பதேயில்லை.
  வீர ஆஞ்சநேயருக்கு அடிபணிந்த நமஸ்காரங்கள்.

  ReplyDelete
 8. வாருங்கள் ஜீவி ஐயா. உங்கள் வார்த்தைகள் எப்போதும் மிகுந்த ஊக்கமளிப்பவையாக இருக்கின்றன. மனமார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 9. நல்ல கதைகள் கவிநயா அக்கா.

  ReplyDelete
 10. வாங்க குமரன். நன்றி.

  ReplyDelete
 11. அழகான பதிவு கவிநயா. ராமகிருஷ்ணரின் அமுதமொழிகளிலிருந்து அவ்வப்பொழுது சில பகுதிகளை தேர்ந்தெடுத்து பகிர்ந்து வருவதற்கு நன்றி. விபீஷணர் கதை எனக்கு தெரியாது. ராம நாமத்தின் மகிமை அத்தகையது தான். முழுமையான நம்பிக்கையொடு ஜபிக்கும் பொழுது தான் அதன் பலனை அனுபவிக்க இயலும்.

  //பக்தியிலும் நம்பிக்கையிலும் எனக்கு மிக மிகப் பிடிச்சவர் ஆஞ்சநேயர். // எனக்கும் தான். அவர் தான் எனக்கு உதாரண புருஷர்.

  :( ராம நாமத்தைப் பற்றி ஒரு பதிவு போட்டிருக்கிறீர்கள், இவ்வளவு தாமதமாக பின்னூட்டம் இடுகிறேன். :(

  ReplyDelete
 12. வாங்க ரமேஷ். ராமர் பத்தி எழுதும்போது உங்கள நினைச்சென் :) தாமதமானாலும் வந்துட்டீங்களே. மிக்க நன்றி. ஸ்ரீ ராம ஜெயம்!

  ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)