Sunday, October 12, 2008

பழப் பாயசம் செய்யலாம், வாங்க !



(இந்த இடுகைக்கு காரணமான துளசிம்மாவிற்கு நன்றிகள்! :)

முதல்ல ஒரு அஞ்சாறு பாதாம் பருப்பும், கொஞ்சம் முந்திரிப் பருப்பும் எடுத்துக்கோங்க. கொஞ்சூண்டு பால்ல இதெல்லாம் ஊற வைங்க. செய்யறதுக்கு ஒரு 2 மணி நேரம் முன்னாடியே ஊற வச்சிடுங்க. ஏன்னா பாதாம் ஊற நேரம் ஆகும். அல்லது வென்னீர்ல ஊற வச்சா 10 நிமிஷத்துல ஊறிடுமாம். (இது துளசிம்மா டிப்ஸ் - அவங்களோட மத்த டிப்ஸ்க்கு பின்னூட்டம் பாருங்க :)

இப்ப கொஞ்சம் பால் இன்னொரு கிண்ணத்துல எடுங்க. அதுல நம்ம கஸ்டர்ட் பவுடர் இருக்கில்ல? இல்லையா? அப்படின்னா போய் வாங்கிட்டு வாங்க! நான் இங்கயே இருக்கேங்க… நீங்க போய்ட்டு வாங்க…

ம்… வாங்கியாச்சா? இப்ப அதுல ஒரு 2 மேசைக்கரண்டி எடுத்து ஆறின பால்ல – அதான் அப்ப எடுத்து வச்சோமே, அந்த பால்ல நல்லா கரைச்சுக்கோங்க. கட்டி கிட்டியெல்லாம் இல்லாம, பவுடர் இருந்த அடையாளமே தெரியாம கரைச்சுக்கோங்க. சூடான பால்ல கரைக்க வராது. இது முக்கியம்!

மறுபடி ஒரு 2 கப் பாலை ஒரு பாத்திரத்துல எடுத்து அடுப்புல வச்சு நல்ல்ல்லா காய்ச்சணும். ஓ, சொல்ல மறந்துட்டேனா – முதல்ல அடுப்ப பத்த வைச்சுக்கணுங்க!

பால் காயும்போது, பாதாம் பருப்போட தோல (வலிக்காம) எடுத்துட்டு முந்திரியையும் அதையும் பாலோட சேர்த்து மிக்ஸில அரைச்சுக்கோங்க.

காஞ்சுக்கிட்டிருக்க பால்ல கஸ்டர்ட் கரைசலை மெதுவா ஊத்தணும். ஒரு கை ஊத்தும்போது இன்னொரு கை பாலை கிளறிக்கிட்டே இருக்கணும். இல்லன்னா கட்டி தட்டிரும்! இதை செய்யும்போது அடுப்பைக் குறைச்சு வச்சுக்கோங்க. கலக்க கலக்க கொஞ்சம் கெட்டியா ஆகும் பாலு. இதுதான் நிஜமாவே கொஞ்சம் கவனமா செய்ய வேண்டிய வேலை.

பாயசம் கெட்டியா வேணும்னா அதுக்குத் தகுந்தாப்ல கஸ்டர்ட் பவுடரை சேத்துக்கலாம் – தண்ணியா வேணும்னா குறைச்சுக்கலாம். ஆனா ஆறினப்புறம் இன்னும் கெட்டிப்படும். அதனால பார்த்துக்கோங்க!

அப்புறம் கண்டென்ஸ்ட் மில்க் – அதாங்க, நம்ம ஊர்ல மில்க்மெய்ட்னு சொல்வோமே, அது, அரைச்ச பருப்பு விழுது, சில சொட்டுகள் வென்னிலா எசென்ஸ், ஏலக்காய் தூள், எல்லாத்தையும் பால்ல சேருங்க. நல்லா கலக்குங்க!

கண்டென்ஸ்ட் மில்க் சேர்க்கிறது, இனிப்புக்காகத்தான். அது இல்லைன்னா வெள்ளை சீனி சேர்த்துக்கலாம். ஆனா எனக்கென்னமோ அது சேர்த்தாதான் கொஞ்சம் flavor, consistency, எல்லாம் நல்லாருக்குன்னு தோணும்.

இதோட அடுப்புக்கு வேலை முடிஞ்சிருச்சு. அடுப்பை அணைச்சு, பாயசத்தை எறக்கி வச்சு, நல்லா ஆற வச்சு, குளிர்பதனப் பொட்டில வைங்க.

பழப்பாயசம் பாக்கவும் அழகா இருக்கணும்னா பல வண்ணங்கள்ல பழங்கள் வாங்கி சேருங்க. ஆப்பிள், மாம்பழம் (ரொம்ப கனியாம கொஞ்சம் காய்வெட்டா இருக்கணும்), கருந்திராட்சை, செர்ரி, அன்னாசி, சாத்துக்குடி, இந்த பழமெல்லாம் சேர்க்கலாம். இன்ன பழம்தான் சேர்க்கணும்னு விதிமுறையெல்லாம் இல்லை. நல்லாருக்கும்னா சேர்த்துக்கோங்க. எல்லாத்தையும் அழகா நறுக்கி அதையும் குளிர்பெட்டில வைங்க.

நல்லா குளுகுளுன்னு ஆனதுக்கப்புறம் பரிமாறுறதுக்கு முன்னாடி ஜிலுஜிலு பாயசத்துல வகைவகையா பழங்களை போட்டு அழகழகா எல்லாருக்கும் குடுங்க! நீங்களும் மறக்காம சாப்பிடுங்க!!

இந்த கஸ்டர்டையே கொஞ்சம் கெட்டியா ஐஸ்க்ரீம் பதத்துக்கு செய்து அதுல பழங்கள் போட்டும் குடுக்கலாம். அதுக்கு பேரு பழ சாலட் (fruit salad)!!

தேவையானதை மறுபடி ஒரு தரம் தொகுத்து சொல்லிர்றேன்:

பால் – 2.5 கப்
கண்டென்ஸ்ட் மில்க் – 1 சின்ன can
கஸ்டர்ட் பவுடர் – 2 மேசைக் கரண்டி
முந்திரிப் பருப்பு – 6
பாதாம் பருப்பு – 6
ஏலக்காய் தூள் – ¼ தேக்கரண்டி
வென்னிலா எசென்ஸ் – சில சொட்டுகள்
பழங்கள் – விருப்பப்படி

செய்து சாப்பிட்டுட்டு எப்படி இருந்ததுன்னு மறக்காம சொல்லுங்க!


--கவிநயா

19 comments:

  1. செய்முறைக்கு டேங்கீஸ் கவிநயா.

    ஆமாம்....அடுப்பை எப்படிப்பாக் குறைப்பது?

    தீச்சுவாலையை வேணுமுன்னாக் குறைக்கவா?:-))))

    பாதாம் பருப்பைக் கொஞ்சம் நல்ல சூடான வெந்நீர்லே ஊறவச்சாப் பத்தே நிமிசத்தில் தோல் கழண்டுவந்துரும்.

    இந்தக் கஸ்டர்ட் சேர்க்காம, 'அகர் அகர்' ( Sea Weed) சேர்த்தும் செய்யலாம். ட்ரேயில் எடுத்து ஊற்றுமுன் பழவகைகளைச் சேர்த்துட்டால் குளிர் பதனமூட்டாமலேயே ஜெல்லியாட்டம் செட் ஆகிரும். துண்டு போட்டுத் திங்கலாம்.

    கட்டுன வீட்டுக்குப் பழுது சொல்லலைன்னா எப்படி ? அதான் இன்னும் நாலு வாக்கு சொல்லிட்டுப் போனேன்:-)

    ReplyDelete
  2. // இல்லையா? அப்படின்னா போய் வாங்கிட்டு வாங்க! நான் இங்கயே இருக்கேங்க… நீங்க போய்ட்டு வாங்க…//

    சரி...அப்படியே, அங்கேயே இருங்க, உங்க கிச்சனுக்கே போய் எடுத்துட்டு வந்துடறேன் :)

    ReplyDelete
  3. கஸ்டர்ட் போடாம நேரடியாக கண்டன்ஸ்ட் மில்க் போட்டு, கொஞ்சம் முந்திரி-பாதாம் விழுதினை அதிகமா சேர்த்து கெட்டியாக்க கூடாதா?. நல்லாயிருக்காதா? :)

    ReplyDelete
  4. ஆமாம், கண்டன்ஸ்ட் மில்க்-ல இருக்கும் ஸ்வீட் மட்டும் போதுமா?...
    சேச்செ எனக்கெல்லாம் நல்ல இனிப்பாக இருக்கணும்...ஆகவே அதிகப்படி சர்க்கரை சேர்க்கறது பற்றியும் சொல்லிடுங்க.. :)

    ReplyDelete
  5. இந்த முறையிலே ஆனால் மில்க்மெய்ட் பாதாம் முந்திரி சேர்க்காமல் ஃப்ரூட் சாலட் செய்வேன். இனி உங்க செய்முறையில் அசத்துகிறேன்:)!

    ReplyDelete
  6. அதானே! துள்சியா கொக்கா? கட்டிய வீட்டுக்கு பழுது மட்டும் செல்லாம பரிகாரமும் சொல்றாங்களே! அதான் துள்சி!
    அடுப்பை குறைப்பதுன்னால் தெரியாதா?
    அஞ்சு பர்னர் ஸ்டவை நாலு பர்னராக குறைச்சுக்கலாம். நாலை மூணாக, மூணை ரெண்டாகவும் ரெண்டை ஒன்றாகவும் கொறச்சுக்கலாமே!

    ReplyDelete
  7. வாங்க துளசிம்மா.

    //ஆமாம்....அடுப்பை எப்படிப்பாக் குறைப்பது?//

    அச்சோ! எழுதும்போதே நெனச்சேன், அப்புறம் மின் அடுப்பு வச்சிருக்கவங்க இன்னும் வேற ஏதாச்சும் ஏடாகூடமா கேப்பாங்களோன்னு அப்படியே விட்டுட்டேன் :)

    வென்னீர் ட்ரிக் எனக்கே தெரியும்... சமையல் செய்து ரொம்ப நாளாச்சா... அதான் எழுதும்போது உடனே நினைவு வரல... ஹிஹி...

    'அகர் அகர்' புதுசா இருக்கு. செய்து பார்க்கிறேன்.

    //கட்டுன வீட்டுக்குப் பழுது சொல்லலைன்னா எப்படி ?//

    ரீச்சர்னாலும் அம்மான்னாலும் அதானே இலக்கணம்? :) அதனால நிறையவே சொல்லுங்க. அப்பதானே நாங்களும் கத்துக்கலாம்? :)

    நன்றி அம்மா!

    ReplyDelete
  8. //சரி...அப்படியே, அங்கேயே இருங்க, உங்க கிச்சனுக்கே போய் எடுத்துட்டு வந்துடறேன் :)//

    வாங்க மௌலி. flight போட்டுக்கிட்டு இங்க வரீங்களா? அது சரி..:) ஆனாலும் என் கிச்சன்ல உங்களுக்குக் கிடைக்கிறது சந்தேகம்தான் :)

    //கஸ்டர்ட் போடாம நேரடியாக கண்டன்ஸ்ட் மில்க் போட்டு, கொஞ்சம் முந்திரி-பாதாம் விழுதினை அதிகமா சேர்த்து கெட்டியாக்க கூடாதா?. நல்லாயிருக்காதா? :)//

    நல்லாருக்குமே! ஆனா அது thick-ஆ ஆகாது; நம்மளத்தான் இன்னும் thick-ஆ ஆக்கிடும் :)

    //சேச்செ எனக்கெல்லாம் நல்ல இனிப்பாக இருக்கணும்...//

    ஆஹா, அவ்ளோ இனிப்பு ப்ரியரா? அதுக்கென்ன, எவ்ளோ வேணாலும் சேர்த்துக்கோங்க. இல்லன்னா கண்டென்ஸ்ட் மில்க்ல கொஞ்சூண்டு பால் கலந்து, அதுல பழத்தை போட்டும் சாப்பிடலாம் :))

    ReplyDelete
  9. வாங்க ராமலக்ஷ்மி! அசத்துங்க, அசத்துங்க! :)

    ReplyDelete
  10. வாங்க நானானி அம்மா! அடுப்பைக் குறைக்க அழகா வழி சொல்லியிருக்கீங்களே :) நன்றி :)

    ReplyDelete
  11. எனக்கு இது ஆரண்ய காண்டம். சென்னையில் மேன்ஷன் வாழ்க்கையை வேறு எப்படி சொல்வது? யுத்த காண்டமெல்லாம் முடிந்து, பட்டாபிஷேகம் ஆன பிறகு இதை அம்மாவிடம் காட்டி செய்யச் சொல்கிறேன். :)

    ReplyDelete
  12. ஒரு தகவல். ஆங்கிலத்தில் கீதைக்கான தளம் ஒன்றை துவங்கியுள்ளேன், நேரம் கிடைக்கும் பொழுது வருகை தரவும.

    ReplyDelete
  13. நன்றி :)

    ReplyDelete
  14. //கண்டென்ஸ்ட் மில்க்ல கொஞ்சூண்டு பால் கலந்து, அதுல பழத்தை போட்டும் சாப்பிடலாம் :))//

    ஹிஹிஹி...எப்படி நான் சாதாரணமா பண்ணுறதை தெரிஞ்சுக்கிட்டீங்க?..பால் எல்லாம் எதுக்கு, டேஸ்ட் போயிடும் :))

    ReplyDelete
  15. வாங்க ரமேஷ். சீக்கிரமே பட்டபிஷேக ப்ராப்திரஸ்து! :)

    உங்களுடைய புது தளம் பற்றின தகவலுக்கு நன்றி. வந்து பார்க்கிறேன்...

    ReplyDelete
  16. வாங்க தூயா. உங்க வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி! மிக்க நன்றி.

    ReplyDelete
  17. //ஹிஹிஹி...எப்படி நான் சாதாரணமா பண்ணுறதை தெரிஞ்சுக்கிட்டீங்க?..பால் எல்லாம் எதுக்கு, டேஸ்ட் போயிடும் :))//

    மௌலி, பெண்களூர்ல மில்க் மெய்ட் வியாபாரம் பிச்சுக்கிட்டு போகுதுன்னு சொன்னாங்க. இப்பல்ல தெரியுது? :))

    ReplyDelete
  18. வணக்கம்

    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது. வாழ்த்துக்கள்
    பார்வையிட முகவரி இதோ.
    http://blogintamil.blogspot.com/2015/01/2_21.html?showComment=1421802621436#c6674180774255170451
    என்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்போடு
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஆராரோ பாடிடுவோம்:
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு மிக்க நன்றி, ரூபன்.

      Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)