Sunday, September 28, 2008

மீனாட்சி அம்மன் தாலாட்டு

தாலாட்டு பாடி ரொம்ப நாளாச்சுல்ல? அதான் நவராத்திரியும் அதுவுமா மீனாட்சி அம்மன் தாலாட்டு... :))) அம்மா படத்தை அவசியம் க்ளிக்கிப் பாருங்க.

இதுவரை பாடின மற்ற தாலாட்டெல்லாம் இங்கே .




ஆராரோ ஆரிரரோ என் கண்ணே ஆரிரரோ
பொழுது மினுமினுங்க – என் கண்ணே
மீனாட்சி அம்மன் பூக்கடையும் ஜோதி மின்ன
ஜரிகை தளதளங்க – என் கண்ணே
மீனாட்சி அம்மன் சந்நிதியும் ஜோதி மின்ன
ஆராரோ ஆரிரரோ என் கண்ணே கண்ணுறங்கு

கொத்தனில்லாக் கோபுரமாம் என் கண்ணே
மீனாட்சி அம்மன் குமரி விளக்குகளாம்
தச்சனில்லாக் கோபுரமாம் என் கண்ணே
மீனாட்சி அம்மன் சக்தி விளக்குகளாம்

கோபுரத்தின் கீழிறங்கி மீனாட்சி
குழந்தை வரம் தந்தாளோ
பக்கத்து முத்தெடுத்து மீனாட்சி அம்மன்
பத்திரமாய் உன்னைத் தந்தாளோ

மாவிளக்கு கொண்டு மதிலோரம் போகையிலே
மாவிளக்கை வாங்கி வைத்து மீனாட்சி அம்மன்
உன்னை மணிவிளக்காய்த் தந்தாளோ
காணிக்கை கொண்டு கடைத்தெருவில் போகையிலே
காணிக்கையை வாங்கி வைத்து மீனாட்சி அம்மன்
உன்னை மாணிக்கமாய்த் தந்தாளோ

நெய்விளக்கு கொண்டு நெடுந் தெருவிற் போகையிலே
நெய் விளக்கை வாங்கி வைத்து மீனாட்சி அம்மன்
உன்னை நிறை விளக்காய்த் தந்தாளோ
நீதி நிலவிளக்கோ என் கண்ணே
மீனாட்சி அம்மன் நிச்சயமாய்த் தந்த கண்ணோ
கண்ணான கண்ணே கண்ணுறங்கு கண்மணியே!

***

அனைவருக்கும் மனம் கனிந்த நவராத்திரி வாழ்த்துகள்!

--கவிநயா

11 comments:

  1. முத்தாய் மணி விளக்காய் மாணிக்கமாய் நிறை விளக்காய்
    தந்தாளோ அல்லது தானேதான்
    வந்து பிறந்தாளோ

    அற்புதமான தாலாட்டு.
    வாழ்த்துக்கள் கவிநயா!

    ReplyDelete
  2. சூப்பர்!
    //காணிக்கை கொண்டு கடைத்தெருவில் போகையிலே
    காணிக்கையை வாங்கி வைத்து மீனாட்சி அம்மன்
    உன்னை மாணிக்கமாய்த் தந்தாளோ//

    கடைத்தெரிவில் அம்மா அவள் பொம்மை

    வாங்கி நாமும் வைப்போமே கொலுவில்,
    கண்ணுறங்கேன் கற்பகமே கண்ணுறங்கு!

    ReplyDelete
  3. இனிமையான பாடல் கவிநயா.

    //கொத்தனில்லாக் கோபுரமாம் என் கண்ணே
    மீனாட்சி அம்மன் குமரி விளக்குகளாம்//
    நான் மிகவும் ரசித்த வரிகள். "நெய் விள்க்கை வாங்கி வைத்து நிறை விளக்காய் தந்தாளோ" அற்புதம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. மிக அருமையான தாலாட்டு....தந்தமைக்கு மிகுந்த நன்றி...

    உங்களுக்கும் எனது நவராத்ரி நல்வாழ்த்துக்கள்.

    //கொத்தனில்லாக் கோபுரமாம் என் கண்ணே
    மீனாட்சி அம்மன் குமரி விளக்குகளாம்
    தச்சனில்லாக் கோபுரமாம் என் கண்ணே
    மீனாட்சி அம்மன் சக்தி விளக்குகளாம்//

    மிகவும் பிடித்த வரிகள்

    ReplyDelete
  5. அருமை எளிமை இனிமை.

    நன்றி அக்கா.

    ReplyDelete
  6. நான் முதல் தாலாட்டு இடுகையில போட்டிருந்த டிஸ்கி, புதுசா படிக்கிறவங்களுக்காக இங்கே மறுபடியும்:

    ***
    தாலாட்டுங்கிற தலைப்புல நான் தரப் போறதெல்லாம் எனக்கு என் அம்மா பாடி, நான் என் பிள்ளைக்குப் பாடினதும், அப்புறம் நான் மேல சொன்ன புத்தகத்துல இருக்கறதும்தான். அதனால காப்பிரைட் ப்ரச்னை வராதுன்னு நெனக்கிறேன்! :)

    ***

    அதாவது இங்கே இதுவரை இடப்பட்ட தாலாட்டுகள நான் எழுதல :) இனிமே ஏதாச்சும் எழுதினா - ஹ்ம்... உங்களுக்கு சொல்லாமயா? :)

    பின்னூட்டங்களுக்கு பதிலிட பிறகு வரேன்!

    ReplyDelete
  7. //அற்புதமான தாலாட்டு.//

    ஆமால்ல? :) நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  8. //வாங்கி நாமும் வைப்போமே கொலுவில்,
    கண்ணுறங்கேன் கற்பகமே கண்ணுறங்கு!//

    வாங்க ஜீவா. இந்த தாலாட்டை தட்டச்சும்போது உங்க குட்டிப் பாப்பாவைத்தான் நினைச்சுக்கிட்டேன் :)

    ReplyDelete
  9. வாங்க ரமேஷ். ரசிச்சதுக்கு ரொம்ப நன்றி.

    ReplyDelete
  10. வாங்க மௌலி. ரசிச்சதுக்கு ரொம்ப நன்றி.

    ReplyDelete
  11. வாங்க குமரா. பின்னூட்டத்தை பார்த்தாலே ஆணி அதிகம்னு தெரியுது :) ரசிச்சதுக்கு நன்றி.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)