Monday, August 4, 2008

எப்போ??


விட்டு விடு தலை யாகி - அந்த
விண்ணில் பறப்பது எப்போ?

பட்ட துய ரங்கள் யாவும் - மண்ணில்
செத்து மடிவது எப்போ?

கட்டிக் கொண்டு வந்த சோறு - அதைத்
தின்று முடிப்பது எப்போ?

முட்டி முட்டி வரும் கண்ணீர் - அது
வற்றித்தான் போவது எப்போ?

சுற்றி வரும் துன்பந் தன்னை - தலை
சுற்றி எறிவது எப்போ?

பற்று ஏதும் இல்லா வாழ்வை - மனம்
பற்றிக் கொள்ளுவதும் எப்போ?


--கவிநயா

***

ஒரு அறிவிப்பு:
இனி எழுதும் அன்னை மீதான பாடல்களையும் பதிவுகளையும், கற்பூரநாயகியே கனகவல்லி வலைபூவில் பதிவதாய் இருக்கிறேன். சென்ற ஆடி வெள்ளிக்கும், இந்த ஆடிச் செவ்வாய்க்கும் பதிவுகள் இட்டிருக்கிறேன். நேரம் கிடைக்கையில் வந்து வாசித்து அன்னையின் அருள் பெறுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

25 comments:

  1. அழகிய கவிதை வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. முதல் வரவுக்கும் வாசிப்புக்கும் நன்றி அகரம்.அமுதா.

    ReplyDelete
  3. சட்சட்டென்று வந்து பட்டாக பட்டொளி வீசிப் பறக்குது, ஆகா!

    ReplyDelete
  4. //சட்சட்டென்று வந்து பட்டாக பட்டொளி வீசிப் பறக்குது, ஆகா!//

    ஆஹா. ரசனைக்கு நன்றி ஜீவா.

    ReplyDelete
  5. கடைசி வரிகளுக்கான பதில், மேலே குறிப்பிட்ட எல்லா வரிகளையும் மறந்து இருக்கையில் எனலாமா ?

    ஒன்று சொல்வார்களே !

    Yesterday is past (முடிஞ்சு போச்சு, தூற எறிவோம்)
    Tomorrow is future (வருவது வரட்டும்)
    Today is present.(இதல்லவோ இனிமை)

    என கவலை மறந்து, இனிமை கொள்வோமே. அப்பொழுது மனம் பற்றில்லாத வாழ்வை பற்றுமல்லவா ?!!

    ReplyDelete
  6. பாறையின் மீது விழுந்த நீர்த்திவலை பட்டுத் தெறிப்பது போல, ஒவ்வொரு வார்த்தையும், அது சுமந்த ஒவ்வொரு வரியும் நெஞ்சில் மோதித் தெறித்து கனக்கச் செய்தது.

    எனது, 'தினம் தினம் சந்தோஷத்தில்' மாற்றாக நிறைய எழுத வேண்டும் என்று தோன்றியது.

    ReplyDelete
  7. வருக சதங்கா. இன்பம் வந்தால் துள்ளிக் குதிக்காமலும், துன்பம் வந்தால் துவண்டு போகாமலும், எல்லாவற்றையும் ஒரே விதமாக எடுத்துக் கொள்ளுவதே பற்றின்மை என்பது. கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  8. வருக ஜீவி ஐயா.

    //பாறையின் மீது விழுந்த நீர்த்திவலை பட்டுத் தெறிப்பது போல, ஒவ்வொரு வார்த்தையும், அது சுமந்த ஒவ்வொரு வரியும் நெஞ்சில் மோதித் தெறித்து கனக்கச் செய்தது.//

    நீங்கள் எழுதும் உரைநடையே கவிதையாய் இருக்கையில் நீங்கள் தனியாய்க் கவிதை எழுதத் தேவையில்லை :) என்ன அழகான உருவகம்!

    //எனது, 'தினம் தினம் சந்தோஷத்தில்' மாற்றாக நிறைய எழுத வேண்டும் என்று தோன்றியது.//

    ஆஹா. நிறைய எழுதுங்கள். காத்திருக்கிறேன்...

    ReplyDelete
  9. ஜீவா சொன்னதை வழிமொழிகிறேன் அக்கா.

    ReplyDelete
  10. //ஜீவா சொன்னதை வழிமொழிகிறேன் அக்கா.//

    மிக்க நன்றி குமரா.

    ReplyDelete
  11. //அழகிய கவிதை //

    நன்றிங்க திகழ்மிளிர்.

    ReplyDelete
  12. எல்லோர் மனதிலும் அப்பப்போ வந்து முட்டி முட்டி நிற்கும் எப்பப்போக்கள் இவை!

    அருமை கவிநயா!

    இவற்றிற்கு விடை தேடித்தான் ஒவ்வொருவர் வாழ்வும் பயணப் படுகிறது.

    ReplyDelete
  13. வாங்க ராமலக்ஷ்மி. எங்கே காணோமேன்னு பார்த்தேன் :) கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  14. நீங்கள் திரைப்படத்திற்கு பாடல் எழுதலாம். நல்லா வந்திருக்கு.

    அன்புடன்,
    ஜோதிபாரதி.

    ReplyDelete
  15. //நீங்கள் திரைப்படத்திற்கு பாடல் எழுதலாம். நல்லா வந்திருக்கு.//

    நல்வரவு ஜோதிபாரதி. இப்பதான் முதல் முறையா இந்தப் பக்கம் வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன். பாராட்டுக்கு நன்றி :)

    ReplyDelete
  16. கவி நயா மேடம் ! உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.
    உங்களது கவிதைகள் நான் 1950 ‍ = 1960 ல் படித்த ஆங்கிலக் கவிஞர்
    கீட்ஸ் அவர்களின் ரொமான்டிக் யுகக்கவிதைகளையும், எலியட்டின் கவிதைகள் (சோகத்தில்
    சிங்காரம் ) மற்றும் இந்தியின் தலை சிறந்த கவிஞர் ஹரிவம்ச ராய் பச்சன்
    ( அமிதாப் பச்சன் அவர்களின் தந்தையார்) அவர்களின் ரஹஸ்ய வாத் என்னும்
    சொல்லிடும் கவிதைகளையும் அஷ்டபதியில் கோபிகைகள் உருகும் காட்சிகளையும்
    நினைவு படுத்துகின்றன.

    ஜீவாத்மா பரமனுடன் ஐக்கியம் ஆகவேண்டிய நிலையில் உடலை விடவேண்டும் ஆயினும் எப்போது விடுவேன் என தான் அனுபவிக்கும் மன நிலையை பரிபூரணமாகப் பிரதியெடுத்துக்
    கொடுத்தாற் போல் அமைந்துள்ளது.

    சிந்து பைரவி எனும் ராகத்தில் இதற்கு மெட்டு போட்டுள்ளேன். இந்த ராகம் எல்லோருக்கும்
    பழக்கமான ராகம் தான்.
    http://in.youtube.com/watch?v=4tM4qcEG6OM
    உங்கள் அனுமதியை எதிர் நோக்கி இதை யூ ட்யூபில் சேர்த்திருக்கிறேன்.
    உங்கள் வலையின் வலது பக்கத்தில் ஏதோ காபி ரைட், டீ ரைட் என்று எழுதியிருக்கிறது.
    தாத்தாவுக்கு ட்யூன் போட அனுமதி உண்டல்லவா ?

    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.
    P

    ReplyDelete
  17. அம்மா கவி நயா !
    என்னா அப்படி ஒரு பாட்டு எழுதிப் போட்டுட்ட !
    நேரம் போவது கூட தெரியாம
    எங்க வீட்டு அய்யா பாடிக்கினே இருக்காரு.

    சாப்பிட வாங்கன்னு சொன்னா = இதுபோல‌
    சிந்து பைரவில்ல ஒரு பாட்டு கிடைக்குமா !
    ஒரு நூறு வருசத்திலே தான்
    ஒரு பாட்டு இப்படி அமையும்னு சொல்றாரு.

    மீனாட்சி பாட்டி.
    தஞ்சை.
    http://ceebrospark.blogspot.com

    ReplyDelete
  18. சுப்பு தாத்தா, நீங்கள் அனுமதியெல்லாம் கேட்கவே வேண்டாம். தம்பி ரிஷுவின் அனுபவத்தால் ஒரு தற்காப்புக்காக போட்டு வைத்திருக்கிறேன், அவ்வளவுதான். அதன் பொருள் commercial-ஆக பணம் பண்ணுவதற்கு இந்த வலைபூவிலிருக்கும் எதையும் பயன்படுத்தக்கூடாது என்பதே. உங்களைப் பொறுத்த வரை எப்போதும் போல் தொடரலாம் :) நீங்கள் காத்திருப்பீர்களே என்று அவசரமாக எழுதுகிறேன். பின்னூட்டத்திற்கு பதிலிட பிறகு வருகிறேன், பாட்டியிடமும் சொல்லி விடுங்கள் :)

    ReplyDelete
  19. //கவி நயா மேடம் ! உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.
    உங்களது கவிதைகள் நான் 1950 ‍ = 1960 ல் படித்த ஆங்கிலக் கவிஞர்
    கீட்ஸ் அவர்களின் ரொமான்டிக் யுகக்கவிதைகளையும், எலியட்டின் கவிதைகள் (சோகத்தில்
    சிங்காரம் ) மற்றும் இந்தியின் தலை சிறந்த கவிஞர் ஹரிவம்ச ராய் பச்சன்
    ( அமிதாப் பச்சன் அவர்களின் தந்தையார்) அவர்களின் ரஹஸ்ய வாத் என்னும்
    சொல்லிடும் கவிதைகளையும் அஷ்டபதியில் கோபிகைகள் உருகும் காட்சிகளையும்
    நினைவு படுத்துகின்றன.

    ஜீவாத்மா பரமனுடன் ஐக்கியம் ஆகவேண்டிய நிலையில் உடலை விடவேண்டும் ஆயினும் எப்போது விடுவேன் என தான் அனுபவிக்கும் மன நிலையை பரிபூரணமாகப் பிரதியெடுத்துக்
    கொடுத்தாற் போல் அமைந்துள்ளது.

    சிந்து பைரவி எனும் ராகத்தில் இதற்கு மெட்டு போட்டுள்ளேன். இந்த ராகம் எல்லோருக்கும்
    பழக்கமான ராகம் தான்.
    http://in.youtube.com/watch?v=4tM4qcEG6OM
    உங்கள் அனுமதியை எதிர் நோக்கி இதை யூ ட்யூபில் சேர்த்திருக்கிறேன்.
    உங்கள் வலையின் வலது பக்கத்தில் ஏதோ காபி ரைட், டீ ரைட் என்று எழுதியிருக்கிறது.
    தாத்தாவுக்கு ட்யூன் போட அனுமதி உண்டல்லவா ?

    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.
    P//

    நான் சொன்னது உடனே பலித்துவிட்டது. வாழ்த்துக்கள்! தஞ்சை சுப்பு தாத்தாவிற்கு மிக்க நன்றி!

    அன்புடன்,
    ஜோதிபாரதி.

    ReplyDelete
  20. சுப்பு தாத்தா. என்னை மேடம்னு கூப்பிடறதை விட மாட்டீங்க போல :(

    என்னென்னமோ சொல்லிட்டீங்க, எனக்கு தெரியாதவங்க பேரெல்லாமும் சேர்த்து :) தெரிஞ்சவங்கள்லயும் பேர் மட்டும்தான் தெரியும். அந்த அளவுக்கு அடியேன் ஒரு அறிவிலி. படிப்பிலி :)

    கவிதை சொல்லும் மனநிலையைப் புரிஞ்சுக்கிட்டு அதுக்கு ஏத்த மாதிரி அருமையா இசையும் அமைச்சுட்டீங்க! உங்கள் அன்புக்கு நன்றி சொல்ல எனக்கு இந்த வாழ்நாள் போதாது போலருக்கு :)

    பாருங்க... பாட்டி சொல்லைத் தட்டாம நேரத்துக்கு சாப்பிடுங்க... இல்லன்னா அவங்க என்னைக் கோவிச்சுக்கப் போறாங்க :) சொல்லிட்டேன் பாட்டீ. சரிதானே? :)

    ReplyDelete
  21. //நான் சொன்னது உடனே பலித்துவிட்டது. வாழ்த்துக்கள்! தஞ்சை சுப்பு தாத்தாவிற்கு மிக்க நன்றி!//

    நன்றி ஜோதிபாரதி. சுப்பு தாத்தா இது வரை நான் இங்கு பதித்த (கிட்டத்தட்ட) எல்லாக் கவிதைகளுக்குமே, இசையமைத்திருக்கிறார்.

    ReplyDelete
  22. கட்டிக் கொண்டு வந்த சோறு - அதைத்
    தின்று முடிப்பது எப்போ?

    அருமையான வரி. நாம் ஒவ்வொருவரும் எவ்வளவோ வினைகளோடு பிறக்கிறோம். அதையெல்லாம் தீர்த்தால் தான் நிம்மதி.

    ReplyDelete
  23. //அருமையான வரி. நாம் ஒவ்வொருவரும் எவ்வளவோ வினைகளோடு பிறக்கிறோம். அதையெல்லாம் தீர்த்தால் தான் நிம்மதி.//

    மிகச் சரியாகப் புரிந்து கொண்டீர்கள் ரமேஷ்! மிக்க நன்றி.

    ReplyDelete
  24. மாங்காட்டுத் திருத்தலத்தில் காமாக்ஷி என்று பெயர்... எனத்துவங்கும்
    உங்களது பாடலை (அம்மன் பாட்டு எனும் உங்கள் வலை )முதலில் எனது வீட்டு எசமானி ஆனந்த பைரவியில்
    முதலில் பாடி அதை யூட்யூபில் போட்டிருந்தோம். எங்கள் வலை
    ஸீப்ராஸ்பார்க்கிலும் பார்க் செய்திருந்தோம்.
    காலையில் வாக்கிங் போனபோது என்னையும் அறியாமல் வாய்
    இந்தப்பாட்டை முணுமுணுத்தது ராகம் பெளளியில் .
    நன்றாக இருக்கிறதே என்று நானே பாடி ( ! ) அதை
    எங்கள் வலை
    http://menakasury.blogspot.com
    ல் போட்டிருக்கிறோம்.
    காலை வேளையில் இந்த ராகம் பொதுவாக பாடப்படுகிறது.
    பூபாளமும் இந்த பெளளியும் ஒன்று போல் இருக்கும்.

    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.
    பி.கு. நான் போட்டிருக்கும் மெட்டுகளுக்கும் மேடம் கவி நயாவுக்கே
    காப்பி ரைட் உரிமை உண்டு !!

    ReplyDelete
  25. கேட்டு, பின்னூட்டமும் இட்டு விட்டேன் தாத்தா.

    நன்றி.. நன்றி.. நன்றி!!

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)