Sunday, July 13, 2008

இதற்குப் பெயர் என்ன?

வசுந்தரா கலங்கிப் போயிருந்தாள். கடும் வயிற்று வலியுடன் கண்டபடி வாந்தியெடுத்து, காய்ச்சல் மயக்கத்துடன் இருந்த பன்னிரண்டு வயது மகனை அள்ளிப் போட்டுக் கொண்டு அந்த இரவு நேரத்தில் மருத்துவமனைக்கு வருவதற்குள் படாத பாடு பட்டு விட்டாள். இதோ டாக்டர் உள்ளே அவனை பார்த்துக் கொண்டிருக்கிறார். இங்கே இனந்தெரியாத பயத்துடன் இவள் காத்திருக்கிறாள்…

பெண் தனியாக வாழுவதில் என்ன சிரமம் என்று வாய்கிழியப் பேசினாலும், இந்த மாதிரி சமயங்களில் அதைப் போன்ற கருத்துகள் பல்லிளித்து விடுவதே நிதர்சன உண்மை. இரண்டு வருடங்களுக்கு முன் கணவன் திடீரென கண்ணை மூடி விட, கையில் வேலை இருக்கும் தைரியத்தில் மகனுடன் தனியாக இருந்து விடுவேன் என்று கலங்காமல் பெற்றோரை கிராமத்துக்கு திருப்பி அனுப்பியவள்தான் இவள். மனம் குழம்பி இருக்கும்போது சம்பந்தமில்லாத விஷயங்களைத் தான் அதிகமாக அசைபோடும் போலிருக்கிறது… தன்னிச்சையாகக் கலங்கிய கண்களைத் துடைத்துக் கொள்கையில், தோளில் யாரோ கை வைப்பதை உணர்ந்து, திடுக்கிட்டு திரும்பினாள்…

“என்னம்மா ஆச்சு? யாருக்கு என்ன? நீங்க தனியா இருக்கற மாதிரி இருக்கு… மனசு கேட்கல… தவறா நினைக்காதீங்க…”, இதமான வார்த்தைகளை அன்போடு உதிர்த்த அந்த பெண்மணியை நிமிர்ந்து பார்த்தாள்.

“நான் தனியா இருந்தா உங்களுக்கென்ன? உங்க வேலையைப் பாத்துக்கிட்டு போங்க”, என்று பொரிந்து கொட்டத் தயாரான வார்த்தைகள், உள்ளேயே பிசுபிசுத்துப் போயின, கனிவு நிறைந்த அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்ததும். அதற்குப் பதில் இது வரை அடங்கிக் கிடந்த கண்ணீர் உடைப்பெடுத்துக் கொண்டது. இயலாமையும் பயமும் கவலையும் பதட்டமும் களைப்பும் எல்லாம் சேர்ந்து கொண்டன.

அந்தப் பெண்மணி கொஞ்சம் பயந்துதான் போய் விட்டாள். “என்னம்மா, இங்க பாருங்க... கொஞ்சம் கட்டுப் படுத்திக்கோங்க..”, அவள் கையை எடுத்துத் தன் கையில் வைத்துக் கொண்டாள். பிறகு அவள் அழுது முடிக்கட்டும் என்று தீர்மானித்தவள் போல் அவள் கைகளை இதமாக வருடியபடி அமைதியாக இருந்தாள்.

ஒருவழியாக அழுது முடித்த வசுந்தரா, “ஸாரிம்மா. அதென்னமோ உங்கள பார்த்ததும் எல்லாம் படபடன்னு வெளில வந்துருச்சு…”, கண்களைத் துடைத்தபடி இலேசாக புன்முறுவலித்தாள்.

பதிலுக்குப் புன்னகைத்த அந்தப் பெண், “இப்ப சொல்லுங்க. என்ன ஆச்சு?”, எனவும், வசுந்தரா அவளுக்கு தன் நிலையை எடுத்துச் சொன்னாள்.

இதற்குள் டாக்டர் வெளியில் வந்து, “மேடம், ஒரு நிமிஷம் வாங்க”, என்று இவளை அழைக்கவும், “இதோ வரேம்மா”, என்று அந்தப் பெண்மணியிடம் சொல்லி விட்டு உள்ளே போனாள்.

“உங்க பையனுக்கு அப்பெண்டிசிடிஸ் ஆபரேஷன் உடனே பண்ணனும். இல்லன்னா ஆபத்து. உங்க கூட யாரும் வந்திருக்காங்களா?”

டாக்டர் சொன்னதைக் கேட்டு பதட்டத்துடன், “வேற யாரும் வரல டாக்டர். நான் அவனோட அம்மா. என்ன செய்யணுமோ அதைச் செய்யுங்க…”, என்று சொன்னவள், ஆபரேஷன் பற்றிய விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டாள். பிறகு, “நான் என் பையனை இப்ப பார்க்கலாமா, டாக்டர்?” என்றாள்.

“ம். பார்க்கலாம் மேடம்”, என்றதும், மகனின் அருகில் சென்றாள். உணர்வுடன் தான் இருந்தான் இப்போது. கிழிந்த நார் போல் கிடக்கும் அவனைப் பார்க்கையில் விண்டு போனது மனது. அவனுக்கு ஆபரேஷன் பற்றி எடுத்துச் சொல்லி, அவனைத் தைரியமாக இருக்கச் சொன்னாள்.

“நீ பயப்பாடாதே அம்மா. எல்லாம் சரியாப் போயிடும் பாரேன்”, என்று பெரிய மனிதனைப் போல தனக்குச் சொன்ன மகனைக் கண்ணீருடன் அணைத்து உச்சி முகர்ந்தாள். பிறகு டாக்டரிடம் சொல்லி விட்டு வெளியே வந்தாள்.

வெளியில் அந்த பெண்மணி கையில் ஒரு பொட்டலத்துடன் நின்று கொண்டிருந்தாள். “என்னம்மா ஆச்சு? டாக்டர் என்ன சொன்னார்?”, கரிசனத்துடன் விசாரித்தாள்.

வசுந்தரா விவரம் சொல்லியபின், “கவலைப்படாதீங்கம்மா. இது ஆபத்தில்லாத ஆபரேஷன் தான். எல்லாம் சரியாயிடும்”, என்றவள், கையிலிருந்த பொட்டலத்தைக் கொடுத்து, “உங்களைப் பார்த்தா ரொம்பக் களைப்பா தெரியுது. இதோ இதைக் கொஞ்சம் சாப்பிடுங்க”, என்று சொல்லி, ஒரு தண்ணீர் பாட்டிலையும் கூடவே கொடுத்தாள்.

முன்பின் தெரியாத அந்த பெண்மணியின் அன்பில் மிகவும் நெகிழ்ந்து போன வசுந்தரா, “பெத்த அம்மா மாதிரி என்கிட்ட இவ்வளவு அன்பு காட்டறீங்களே. நீங்க யாரும்மா? நீங்க இங்க என்ன பண்றீங்க?”, பொட்டலத்தைப் பிரித்த வண்ணம் கேட்டாள்…

“என் பேர் புவனா அம்மா. என் மகனுக்கு கான்சர். இந்த ஆஸ்பத்திரிலதான் கீமோதெரபிக்கு அட்மிட் ஆகியிருக்கான்…”, என்று அவள் சொல்லத் தொடங்கியதும்…

இட்டிலியைப் பிட்டு வாயில் வைக்கப் போன வசுந்தராவின் கை அப்படியே உறைந்தது.


--கவிநயா

28 comments:

  1. nanraaha irukkirathu!!!

    Barathy

    ReplyDelete
  2. நல்ல டிவிஸ்ட்டுடன் முடிச்சுருக்கீங்க கவிக்கா!!!ஜூப்பரு..

    ReplyDelete
  3. அருமையான கதை கவிநயா.

    இதற்குப் பெயர்தான் என்ன?

    பல சமயங்களில் வாழ்க்கை நம் முதுகில் வைக்கிற அடிகள், மற்றவர் தலையில் விழுந்திருக்கும் இடிகளைப் அறிகையில், வலிகள் குறைந்ததாகவோ மறைந்ததாகவோ உணர்ந்து, இறைவனுக்கு நன்றி சொல்லி, எதையும் எதிர் நோக்கும் திறனையும் தரவே செய்கின்றன.

    ReplyDelete
  4. //தோளில் யாரோ கை வைப்பதை உணர்ந்து, திடுக்கிட்டு திரும்பினாள்… //

    வரையிலா இறைவனவன் ஒரு
    வயருமிலாத் தொடர்புடனே நம்
    துயர் யாவும் தெரிந்திடுவான்.
    மெய்யான அன்புடனே
    நெய்யாக அருள் செய்வான்.
    பெயர் தெரியா யார் வழியோ ? நாம்
    அறியாமல் துணையிருப்பான்.
    சரி செய்வான், பின்
    சிரி என்பான் . பிறகு
    சிரிக்கவும் செய்வான்.

    //பெத்த அம்மா மாதிரி என்கிட்ட இவ்வளவு அன்பு காட்டறீங்களே. நீங்க யாரும்மா?//

    வந்தவன் ( ள் )
    வாலறிவன்.
    வேலன்.

    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.
    பின் குறிப்பு: என்றோ 1985ல் எனது இளைய மகளை நாகை மருத்துவகத்தில்
    சேர்த்திருந்தபோது நானறியாத பலர் என் மகளுக்காக பிரார்த்தித்தது, துவா செய்தது,
    ஜெபம் செய்தது, நினைவுக்கு வருகிறது.
    நானிருக்க பயமேன் எனும் வாசகம் நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
  5. இறுதியில் சில வரிகள் மனதை நெகியச் செய்துவிடுகிறது. வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. அன்பின் கவிநயா,

    இந்த முடிவினை எதிர்பார்க்கவில்லை.
    அபாரம் சகோதரி.

    ReplyDelete
  7. நல்லா இருக்கு. மலையை கடுகாக்கிட்டீங்க

    வாழ்த்துகள் :)

    ReplyDelete
  8. கடைசி வரியில் உறைந்து போனது வசுந்தரா மட்டுமல்ல. இதுமாதிரி வேலூர் சிஎம்சியில் செய்யும் என் நண்பன் ராஜேஷின் தந்தையை நினைத்து நானும்தான்.

    அவரும் அப்படித்தான். ராஜேஷுக்கு போன் மேரோ பொருத்தம் கிடைத்ததை நினைத்து பொருத்தம் கிடைக்காமல் தவிக்கும் மற்றவர்களைப் பார்த்து மனதைத் தேற்றிக் கொள்கிறார்.

    சொல்ல வந்ததை நச்'சென்று சொல்லியிருக்கிறீர்கள். அருமை!

    ReplyDelete
  9. //கலக்கல்...!!!!!//

    நல்வரவு ரவி. முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள்!

    ReplyDelete
  10. //nanraaha irukkirathu!!!//

    வருக பாரதி. முதல் வருகைக்கும் கதையை ரசித்தமைக்கும் நன்றி!

    ReplyDelete
  11. //நல்ல டிவிஸ்ட்டுடன் முடிச்சுருக்கீங்க கவிக்கா!!!ஜூப்பரு..//

    அட, வாங்க மௌலி. எதிர்பார்க்கவே இல்லை :) மிக்க நன்றி!

    ReplyDelete
  12. //அருமையான கதை கவிநயா.//

    நன்றி ராமலக்ஷ்மி.

    //பல சமயங்களில் வாழ்க்கை நம் முதுகில் வைக்கிற அடிகள், மற்றவர் தலையில் விழுந்திருக்கும் இடிகளைப் அறிகையில், வலிகள் குறைந்ததாகவோ மறைந்ததாகவோ உணர்ந்து, இறைவனுக்கு நன்றி சொல்லி, எதையும் எதிர் நோக்கும் திறனையும் தரவே செய்கின்றன.//

    நல்லாச் சொன்னீங்க. தனக்கு எவ்வளவு துயரம் இருந்த போதிலும் மற்றவங்களுக்காக கரையற மனசை இந்தக் கதையில சொல்ல நினைச்சேன்... அப்படிப்பட்ட உணர்வை கருணைன்னு சொல்றதா, அன்புன்னு சொல்றதா? அப்படில்லாம் சொன்னா பத்தாதுன்னு தோணுச்சு, அதனாலதான் "இதற்குப் பெயர் என்ன?"ங்கிற கேள்வியே தலைப்பா ஆயிடுச்சு.

    ReplyDelete
  13. //மெய்யான அன்புடனே
    நெய்யாக அருள் செய்வான்.
    பெயர் தெரியா யார் வழியோ ? நாம்
    அறியாமல் துணையிருப்பான்.//

    வாங்க சுப்புரத்தினம் ஐயா. அழகான கவிதையில அவனுடைய கருணையை சொல்லிட்டீங்க. மேலே இருக்கது எனக்குப் பிடிச்ச வரிகள். அவன் வழிகளை யாரே அறிவார்! உங்க அனுபவத்தை பகிர்ந்துகிட்டதுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  14. //இறுதியில் சில வரிகள் மனதை நெகியச் செய்துவிடுகிறது. வாழ்த்துகள்.//

    மிக்க நன்றி அகரம்.அமுதா!

    ReplyDelete
  15. //இந்த முடிவினை எதிர்பார்க்கவில்லை.
    அபாரம் சகோதரி.//

    மிக்க நன்றி தம்பீ!

    ReplyDelete
  16. //நல்லா இருக்கு. மலையை கடுகாக்கிட்டீங்க//

    பார்வை, பார்வை! :) அற்புதமா சொன்னீங்க! மிக்க நன்றி கபீரன்! (கபீரன்பன் தானே நீங்க? கபீரன்னு பாத்தோன்ன கொஞ்சம் குழப்பம்)

    ReplyDelete
  17. //இதுமாதிரி வேலூர் சிஎம்சியில் செய்யும் என் நண்பன் ராஜேஷின் தந்தையை நினைத்து நானும்தான்.//

    உங்க நண்பர் விரைவில் பூரண நலமடைய என்னுடைய வேண்டுதல்கள் நாகு. நீங்களும் உங்க நண்பர்களும் சேர்ந்து எடுக்கிற அரிய முயற்சிகளுக்காகவேனும் அவர் நல்லாயிடுவார். அவர் தந்தைக்கும் என் வணக்கங்கள்.

    //சொல்ல வந்ததை நச்'சென்று சொல்லியிருக்கிறீர்கள். அருமை!//

    மிக்க நன்றி!

    ReplyDelete
  18. இதற்குப் பெயர்தான் என்ன என்கிற என் கேள்வியை உங்கள் பதில் தெளிவு படுத்தியது, நன்றி கவிநயா!

    ReplyDelete
  19. ///கபீரன்பன் தானே நீங்க? கபீரன்னு பாத்தோன்ன கொஞ்சம் குழப்பம் ///

    இவனே அவன்; அவனே இவன். புது கூகிள் பயனர் பதிவினால் வந்த குழப்பம். :))

    ReplyDelete
  20. சுருக்கமான.. சுவையான கதை... பாராட்டுக்கள்

    ReplyDelete
  21. 'பிறர் துன்பத்தில் பரிவு கொள்ளும் பொழுது, தன் துன்பம் தானே குறையும்'-- என்கிற மனவியல் உண்மையை அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்..
    ஒருவருக்கொருவர் மனசை இலேசாக்கிக் கொள்ளவும் முடிந்தது என்பதும் ஓர் உண்மை.

    கதை விவரிப்பு வரிகளை நன்றாகக் கையாண்டிருக்கிறீர்கள்..
    இன்னும் பல மேம்பட்ட முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  22. //இதற்குப் பெயர்தான் என்ன என்கிற என் கேள்வியை உங்கள் பதில் தெளிவு படுத்தியது, நன்றி கவிநயா!//

    தெளிவுபடுத்த வாய்ப்பளித்தமைக்கு நன்றி ராமலக்ஷ்மி :)

    ReplyDelete
  23. //இவனே அவன்; அவனே இவன். புது கூகிள் பயனர் பதிவினால் வந்த குழப்பம். :))//

    பின்னூட்டத்தைப் பார்த்ததும் அப்படித்தான் நெனச்சேன்; பேரைப் பார்த்துதான் குழப்பம். தெளிவித்ததற்கு நன்றி கபீரன்பன் :)

    ReplyDelete
  24. //சுருக்கமான.. சுவையான கதை... பாராட்டுக்கள்//

    மிக்க நன்றி ரமேஷ்!

    ReplyDelete
  25. //'பிறர் துன்பத்தில் பரிவு கொள்ளும் பொழுது, தன் துன்பம் தானே குறையும்'-- என்கிற மனவியல் உண்மையை அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்..//

    வருக ஜீவி ஐயா. கதையை ஒரே வரியில சொல்லீட்டிங்களே.. கபீரன்பன் மொழியில மலையைக் கடுகாக்கிட்டீங்க :)

    //கதை விவரிப்பு வரிகளை நன்றாகக் கையாண்டிருக்கிறீர்கள்..
    இன்னும் பல மேம்பட்ட முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்..//

    மிக்க நன்றி ஐயா. ஆனாலும் உங்கள மாதிரி எழுத முடியாது. உங்களோட எழுத்து நடை வெகு இயல்பு!

    ReplyDelete
  26. கவிக்கா.

    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொன்னாலும் நோயின்றி யார் தான் வாழ்கிறார்கள்? நல்ல கதையைச் சொன்னீர்கள்.

    ReplyDelete
  27. //நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொன்னாலும் நோயின்றி யார் தான் வாழ்கிறார்கள்? நல்ல கதையைச் சொன்னீர்கள்.//

    உண்மைதான் குமரா. நன்றி!

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)