Sunday, July 27, 2008

கண்ணனுக்குத் தந்த உள்ளம்... 5

(முதல் பகுதி; ரெண்டாம் பகுதி; மூன்றாம் பகுதி; நாலாம் பகுதி)

இன்னக்குதான் அந்தப் பொன்னான நாள். எங்க அப்பா அம்மாவப் பொறுத்த வரைக்கும். சாயந்திரம் என்ன பொண்ணு பாக்க வராங்க. யாரு என்னன்னு கேக்காதீங்க. நான் எதுவுமே கேட்டுக்கல. கேட்டு என்ன ஆகப் போகுது அப்படிங்கிற நெனப்புதான். காலைல என்னய வழக்கத்துக்கு மீறி ரொம்ப நேரம் தூங்க விட்டுட்டாங்க எங்கம்மா. எண்ணெயத் தேச்சு ஷாம்பூ போட்டு குளிச்சிட்டு வந்தேன். என்னய ஒரு வேலயும் பாக்க விடல. “பேசாம இருடி.. வேல பாத்தா டயர்டாயிரும். போய் உக்காரு. நாம் பாத்துக்கிறேன்”ன்னு சொல்லிட்டாங்க. இப்பிடிப்பட்ட அம்மாவுக்காக எதுவும் செய்யலாம்னு தோணுச்சு. நான் செஞ்சதில தப்பில்லன்னு மறுபடியும் தோணிச்சு. ஆனா, இந்த மனசு இருக்கே… அதுதான் மொரண்டு பண்ணிக்கிட்டே இருக்கு.

அதுக்கப்பறமும் நான் அவர நெனக்காம இருந்ததே இல்ல. தேவிகிட்ட கேட்டிருந்தா ஏதாச்சும் சொல்லியிருப்பா அவரப் பத்தி. ஆனா நான் கேட்டுக்கல. அவளும் சொல்லல. ஒரே ஒரு தரம், “ஏய், நாம ரெண்டு பேரும் மாத்ஸ்ல எவ்வளவு வாங்கினோம்னு சுந்தரண்ணா கேட்டாருடி”, அப்பிடின்னா. அதோட சரி.

காலேஜ் போக ஆரம்பிச்சோன்ன மத்த வேலைகள்ல அவர அப்பப்ப நெனக்காம இருந்தாலும், அவர நெனக்கும்போதெல்லாம் கூடவே தாள முடியாத ஒரு ஏக்கமும் வரும். கண்ணெல்லாம் கலங்கிரும். எதையோ எழந்துட்டாப்ல தவிப்பா இருக்கும். எல்லாத்தையும் பின்னுக்குத் தள்ளி வச்சுட்டு இயல்பா இருக்க முயற்சிக்கிறதுலயே இத்தன காலமும் ஓடிருச்சு. இப்ப கல்யாணத்த பத்தி பேச்சு வந்தோன்னதான் இதோட முழு பாதிப்பும் என் மனநிலையும் எனக்கே புரிய ஆரம்பிச்சுது.

ஆனா இப்ப என்ன செய்ய முடியும்? தேவிகிட்டயாவது சொல்லியிருக்கலாம்னு தோணுது இப்ப. மனசு பூரா இவ்ளோ அன்பை வச்சுக்கிட்டு… இது என்ன பைத்தியக்காரத்தனம், இது வாழ்க்கைடி… அப்பிடின்னு இந்த மனசு இப்பதான் இடிச்சுக் காட்டுது. எங்க அம்மா அப்பாவும் கண்ண மூடிக்கிட்டு காரியம் பண்ணுறவங்க இல்ல. அதுனால சொல்லித்தான் பாக்கலாமே அப்பிடின்னு தோணுது… இந்த மாப்பிள்ளய புடிக்கலன்னு சொல்லிட்டு அம்மாகிட்ட இன்னக்கி ராத்திரியே சொல்லிர வேண்டியதுதான்…

ஆனா… இத்தன வருஷத்துல…ஒரு வேள அவருக்கு… ஏற்கனவே கல்யாணம்… இந்த நெனப்பு வந்தோன்ன என்னால அத தாங்கவே முடியல! கண்ணு ரெண்டையும் இறுக்கி மூடிக்கிட்டு வேகமா தலைய ஆட்டி அந்த நெனப்ப ஒதறித் தள்ளுனேன். அப்பிடி ஏதாச்சும் பெரிய விஷயமா இருந்தா தேவி கட்டாயம் எங்கிட்ட சொல்லியிருப்பா. எப்பிடியும் இன்னக்கி அம்மாகிட்டயும் தேவிகிட்டயும் பேசிர்றதுன்னு முடிவு பண்ணிட்டேன். இந்த தீர்மானம் வந்தப்புறம் கொஞ்சம் நிம்மதியானாப்ல இருக்கு.

“கண்ணன் முகம் கண்ட கண்கள், மன்னர் முகம் காண்பதில்லை;
கண்ணனுக்குத் தந்த உள்ளம், இன்னொருவர் கொள்வதில்லை…”

சிடில சுசீலாம்மாவும் என் மன நெலைக்கு ஏத்த மாதிரி உருகிக்கிட்டிருக்காங்க…

“மது. போயி மொகத்தக் கழுவிட்டு வா. காப்பி போட்டு தரேன். குடிச்சிட்டு போய் ரெடியாகலாம்”, அம்மா அடுப்படிலருந்தே கொரல் குடுக்கறாங்க.

அம்மா எடுத்துக் குடுத்த பட்டுச் சேலைய கேள்வி கேக்காம கட்டிக்கிறேன். வேலயோட வேலயா அம்மா எந்தல முடியத் தளரப் பின்னி, எனக்குப் புடிச்ச மல்லிகப் பூவ தலை கொள்ளாம வச்சு விடறாங்க. “இந்த வளயலப் போடு, அந்த ஜிமிக்கியப் போடு”ன்னு கவிதா வேற என்னய ஒரேயடியா கவனிக்கிறா. பொட்டு வச்சு, மை எழுதி, கண்ணாடியில என்னய பாத்துக்கிறப்போவும் அவரு மொகம்தான் தெரியுது. இப்ப அவரு என்னயப் பாத்தா என்ன சொல்லுவாருன்னு மனசுக்குள்ள ஓடுது. எப்ப கொஞ்சம் நல்லா ட்ரஸ் பண்ணிக்கிட்டாலும் அவர் பாக்கலயேன்னு இருக்கும். இன்னக்கும் அப்பிடித்தான்…

என் இஷ்ட தெய்வமான விநாயகர் முன்னாடி போய் கையெடுத்துக் கும்பிடறேன், “எது நடந்தாலும் ஏத்துக்கிற மனப் பக்குவத்தை எனக்குத் தா”, அப்பிடின்னு எப்பவும் போல வேண்டிக்கிறேன். விபூதிய கீத்தா எடுத்து பொட்டுக்கு மேல இட்டுக்கும்போது, “அம்மா. அவங்கல்லாம் வந்துட்டாங்க”, கவிதா உற்சாகத்துல எட்டு வீட்டுக்குக் கேக்குறாப்ல கத்தறா.

“வாங்க வாங்க”, அப்பாவும் அம்மாவும் அவங்கள வரவேற்குறது எனக்கு கேக்குது. கொஞ்ச நேரத்துல என்னயக் கூப்புட அம்மா உள்ள வராங்க. “எங்கண்ணே பட்டுரும் போல இருக்கேடி”ன்னு சொல்லி கண்ணு கலங்க என் கன்னத்த வழிச்சு திருஷ்டி கழிக்கிறாங்க.

அம்மாவோட நான் ஹாலுக்கு போனதும் போகாததுமா அப்பா, “மாப்பிள்ள, இவதான் எம் பொண்ணு மது. அட, பாருங்க, உங்களுக்கே இண்ட்ரட்யூஸ் பண்ணிக்கிட்டிருக்கேன்… உங்களுக்குதான் தெரியுமே. மது, இவருதாம்மா மாப்பிள்ள சுந்தர்”, அப்பிடிங்கிறார்!

என்ன! தரையப் பாத்துக்கிட்டு நின்ன எனக்கு தூக்கிவாரிப் போடுது. என் இதயம் துடிக்கிற சத்தம் அங்க இருந்த எல்லாருக்குமே கேட்டிருக்குமோ… மெதுவா நிமிந்து அப்பாவப் பாக்கிறேன். அப்பா கண்ணச் சிமிட்டி சிரிக்கிறார். அப்பா பக்கத்துல உக்காந்திருக்கது… அவர்தான்… என்னோட உயிர்த் துடிப்போட ஒண்ணாக் கலந்துட்ட என்னோட அவரேதான்!

மனசு இறைவனுக்கு இடைவிடாம நன்றி சொல்ல, மந்திரிச்சு விட்ட மாதிரி அவரயே, அவரோட அந்த அழகுப் புன்னகை முகத்தையே பாத்துக்கிட்டு நிக்கிறேன்!

***

என்னய மொத மொதல்ல பாத்தோன்னயே அவருக்கும் எம்மேல பிரியம் வந்ததையும், நான் ட்யூஷன விட்டு நின்ன பெறகும் அவரு என்னய மறக்கவே இல்லைங்கிறதையும், தேவி வீடு மூலமா அவரு எப்பவுமே எம்மேல ஒரு கண்ணு வச்சிருந்தாருங்கிறதையும், எனக்கு கல்யாணம் பேச ஆரம்பிச்சது தெரிஞ்சோன்ன, தன் அப்பா அம்மாவ விட்டு எங்க வீட்டுல கேக்கச் சொன்னதையும்… இப்படி எல்லாத்தையும் அவர் அவருக்கே உரிய மென்மையான இனிமையான குரல்ல சொல்லச் சொல்ல, வாழ்நாள் பூரா……ம்… கொஞ்சம் இருங்க… என்னவர் கூப்பிடறாப்ல இருக்கு…. வரேங்க… அப்பறம் பாக்கலாங்க…

*சுபம்*


--கவிநயா

Saturday, July 26, 2008

கண்ணனுக்குத் தந்த உள்ளம்... 4

(முதல் பகுதி இங்கே; ரெண்டாம் பகுதி இங்கே; மூன்றாம் பகுதி இங்கே)

இன்னக்கி அவர்ட்ட சொல்லப் போறேன். எப்பிடித்தான் சொல்லப் போறேன்னு தெரியல. மனசு கெடந்து தவிக்குது. தேவியும் எங்கிட்ட எவ்வளவோ சொல்லிப் பாத்துட்டா. எங்கப்பா கூட சொல்லிட்டாரு. நாந்தான் யாரு சொன்னதயும் கேக்கல.

மழை வேற கொட்டு கொட்டுன்னு கொட்டுது. “இத்தன மழையில போய் இன்னக்கு சொல்லாட்டி என்னடி? நாளக்கி போயேன்”, அப்பிடிங்கிறாங்க அம்மா. ஆனா என்னால முடியாது. எவ்வளவு சீக்கிரம் சொல்றனோ அவ்வளவுக்கு நல்லதுன்னு தோணிப் போச்சு.

அன்னக்கு அவரு சொல்லிக் குடுக்க ஆரம்பிச்சதுமே எனக்கு கணக்கு மேல காதல் வந்திருச்சு. கணக்கு மேலயா, இல்ல…. ம்… அத அப்பறம் பாக்கலாம். என்ன அருமையா, பொறுமையா சொல்லித் தந்தாரு. நான் மொத நா நெனச்சது போலவே அவருக்கு கோவமே வரதில்ல. எவ்வளவு முட்டாள்தனமா கேட்டாலும் கோவிச்சுக்காம சின்னப் புள்ளக்கி சொல்ற மாதிரி எதமா பதமா சொல்லுவாரு. மொகத்துல இருக்க அந்த புன்னகை மாறுனதே இல்ல. அவர எனக்கு ரொம்பவே புடிச்சிருச்சு.

ஒரு தரம் தீபாவளிக்கு மறு நாள் ட்யூஷன் இருந்துச்சு. எங்கம்மா “இத கொண்டு போய் உங்க வாத்தியாருக்கு குடுடி”ன்னு சொல்லி பலகாரமெல்லாம் நெறய பாக் பண்ணி தந்தாங்க. நானும் தீபாவளிக்கு எடுத்த என்னோட அழகான புத்தம் புது பாவாட தாவணிய கட்டிக்கிட்டு போனேன். தேவி வீட்டுக்குள்ள இருந்தா போல. இவரு மட்டும் ஹால்ல இருந்தாரு. அவருக்கு வணக்கம் சொல்லிட்டு, எங்கம்மா குடுத்தாங்கன்னு சொல்லி பலகாரத்தக் குடுத்தேன். என்னய பாத்துக்கிட்டே அத வாங்கிக்கிட்டாரு. பெறகு, “புது ட்ரஸ்ஸா. நல்லா இருக்கு”,ன்னு சொன்னாரு. என்ன தோணுச்சோ எனக்கு, நாம்பாட்டுக்கு லூசு மாதிரி அழ ஆரம்பிச்சிட்டேன்.

“என்னங்க நீங்க? எதுக்கு அழறீங்க? எதும் தப்பா சொல்லிட்டனா? ரொம்ப ஸாரிங்க, அழாதீங்க”,ன்னு அவரு ரொம்பவே பதறிட்டாரு. அப்ப யாரோ வர்ற சத்தம் கேக்கவும், நான் கண்ணத் தொடச்சுக்கிட்டு சமாளிச்சுக்கிட்டேன். அப்பறமா நெனச்சுப் பாத்தேன்… அவரு பாக்கணும்னுதான அதக் கட்டிக்கிட்டுப் போனேன். பின்ன எதுக்கு அழுவணும்? அவரு என்னயப் பாத்ததையும் சொன்னதையும் நெனச்சுக்கிட்டே இருந்தேன். அவர் அப்பிடிச் சொன்னதுனால ஏற்பட்ட சந்தோஷத்துலதான் அழுதிட்டேன்னு தோணுச்சு. அது ஒண்ணுதான் அவரு எங்கிட்ட கொஞ்சம் பெர்ஸனலா பேசினது.

அவரும் நானும் எப்பவும் கணக்கும் பொதுவா சில வார்த்தைகளும் தவிர வேற எதுவும் பேசிக்கிட்டதில்ல. இருந்தாலும் அவர்கிட்ட நான் ரொம்ப நெருக்கமா உணர ஆரம்பிச்சிட்டேன். அவர் மேல ரொம்ப பிரியம் வச்சிருக்கேன்னு எனக்கே தெரியுது. ஆனா இது நல்லதுக்கா கெட்டதுக்கான்னு பயம் வந்திருச்சு இப்ப. அவரு மொகத்தக் கூட பாக்காம என்னய நம்பிக்கையோட ட்யூஷனுக்கு அனுப்பி வச்ச எங்க அம்மா அப்பாவ நெனச்சு பாக்கிறேன். காதல் கீதல்னு விழுந்துருவேன்னு அவங்கல்லாம் கனவுல கூட நெனச்சிருக்க மாட்டாங்க. அதுவும் இந்த வயசுல! ஆனா இப்பிடியே இவர்கூட பேசி பழகினா அது எங்க கொண்டு போய் விடுமோ. எம்மேல எனக்கே நம்பிக்கை இல்ல. அம்மா அப்பா நம்ம மேல வச்சிருக்க நம்பிக்கைய சிதைக்கணுமா. இப்பிடில்லாம் யோசிக்கிறேன். அவர பாக்காம இருக்கத நெனச்சாலும் தாங்க முடியல. அவருக்கு எம்மேல பிரியம் இருக்கா என்னனும் தெரியல. தெரிஞ்சு என்ன ஆகப் போகுது. இதுக்கு மேல வளர விட்டா தப்புன்னு மட்டும் தோணுது. அதனாலதான் இந்த முடிவு எடுத்தேன்.

அதான், இன்னக்கி சொல்லப் போறேன், இனிமே ட்யூஷனுக்கு வரலன்னு.

அப்பாகிட்ட, “இப்ப அடிப்படையெல்லாம் புரிஞ்சிருச்சுப்பா. நானா படிச்சுக்கிறேன். ட்யூஷனுக்கு போயிட்டு வரதிலயே நெறய நேரம் போயிருது. மத்ததும் படிக்கணும்ல”,ன்னு சொல்றேன். அப்பாவும் மொதல்ல கொஞ்சம் தயங்குனாலும், என்னோட மார்க்கெல்லாம் பாத்துட்டு இதுக்கு ஒத்துக்கிட்டாரு.

இதோ அவரு வந்துட்டாரு. “இனிமே நான் ட்யூஷனுக்கு வர மாட்டேங்க. இது வரைக்கும் சொல்லிக் குடுத்ததுக்கு ரொம்ப நன்றி. ஒங்ககிட்ட சொல்லிட்டு போகதான் வந்தேன்”, ன்னு சொல்றேன். அவரு கண்ணப் பாக்க தைரியமில்ல. தரையப் பாத்துக்கிட்டே எப்பிடியோ சொல்லி முடிச்சிட்டு நிமிந்து அவர பாக்குறேன். அவரு எப்பவும் போல அவருக்கே உரிய நிதானத்தோட இருக்காரு. ஏன் என்னன்னெல்லாம் கேக்கல. ஆனா என்னயவே குறுகுறுன்னு ரொம்ப நேரம் பாக்குறாரு. “அப்பிடியா. சரிங்க. எக்ஸாமுக்கு ஆல் தெ பெஸ்ட்.. நல்லா பண்ணுங்க. நாந்தான் ஒங்கள மிஸ் பண்ணுவேன்”, அப்பிடிங்கிறாரு. அதுக்கு என்ன அர்த்தமோ? அவருக்கும் கடவுளுக்கும்தான் தெரியும்.

அதான் நான் அவர கடைசியா பாத்தது.

(தொடரும்)

--கவிநயா

கண்ணனுக்குத் தந்த உள்ளம்... 3

(முதல் பகுதி இங்கே; ரெண்டாம் பகுதி இங்கே)

அன்னக்கு அவர பாத்ததுல இருந்து அவரு ஞாபகமாவே இருந்துச்சு. அவர் மொகமும் கண்ணும் எங்கண்ணயும் மனசயும் விட்டு அகலவே இல்ல. அவரு மேல மோதினதையும் அவரு சிரிச்சிக்கிட்டே சொன்னதயும் மனசுக்குள்ள திருப்பித் திருப்பி ஓட்டிப் பாத்துக்கிட்டே இருந்தேன். இன்னொரு முறை அவர எங்கயாச்சும் பாக்க மாட்டமான்னு ஒரே ஏக்கமா இருந்துச்சு. கூடவே, இது என்ன பைத்தியம்னு எனக்கே தோணுச்சு. இவ்ளோ பெரீய்ய்ய சென்னையில அவர எங்க பார்க்க முடியும். அவரு யாரு, என்ன பேருன்னு ஒரு மண்ணும் தெரியாது. அவரு சென்னைதானான்னு கூட தெரியாது. இப்பிடி இருக்கும்போது அவரையே நெனச்சுக்கிட்டு இருக்கேனேன்னு எனக்கே எம்மேலயே கோவமாவும் வந்தது.

அப்ப நான் ப்ள்ஸ் டூ படிச்சிக்கிட்டிருந்தேன். கணக்குல கொஞ்சம் வீக்கு நானு. என் அப்பாவுக்கு சொல்லிக் குடுக்க நேரம் இல்ல. ட்யூஷன் டீச்சர் கெடைப்பாங்களான்னு பாத்துக்கிட்டிருந்தோம். அப்பதான் என் ஃப்ரெண்டு தேவி வந்து எங்கப்பாகிட்ட சொன்னா…”அங்கிள், என் அண்ணனோட ஃப்ரெண்டு ஒருத்தரு ரொம்ப நல்லா மாத்ஸ் போடுவாரு. அவரு எனக்கு சொல்லித் தரேன்னு சொல்லியிருக்காரு. மதுவும் என்கூட வரட்டுமா அங்கிள்”ன்னு கேட்டா. உடனே எங்கப்பாவும், “ சரிம்மா. நீ போய்ப் பார்த்துட்டு வா”ன்னு சொல்லிட்டாரு.

அந்த சனிக்கெழம நான் தேவிகூட அவ வீட்டுக்கு போனேன். அன்னக்குதான் ட்யூஷன் ஆரம்பம். அவ அண்ணன் ராஜா வெளில கெளம்பிக்கிட்டிருந்தான். (அவ அவனை அவன், இவன்னு சொல்லி, எனக்கும் அப்பிடியே வந்துருச்சு).

“ஹாய் மது. போங்க போங்க. சுந்தர் உள்ளதான் இருக்கான்”, அப்பிடின்னு சொல்லிட்டு போனான்.

ஹால்ல உக்கார்ந்திருந்த அவரப் பாத்ததும் என் இதயம் ஒரு நிமிஷம் நின்னே போச்சு! பின்ன, இத்தன நாளும் என்னோட நெனப்புல இருந்த அதே மொகத்த நேர்ல பாத்தா… அவரேதான் இவரு. இவரேதான் அவரு… யப்பா. என் சந்தோஷத்த சொல்லி முடியாது!

“சுந்தரண்ணா. இவதான் மது. நாங்க ரெண்டு பேரும் உங்க ஸ்டூடண்ட்ஸ் இனிமே”, சிரிச்சுக்கிட்டே அவர்ட்ட என்னய அறிமுகம் பண்ணி வச்சா, தேவி.

“அப்பாடா. அண்ணான்னு சொல்லிட்டா!”, அப்பிடின்னு நிம்மதியாச்சு மனசு. நான் என்னமோ அவர அண்ணான்னு கூப்புடறதா இல்ல!

“ஹலோ”, அப்படின்னேன் மெதுவா, அவர பாத்தும் பாக்காம.

“ஹலோ. வணக்கங்க. நீங்கதானா…”, அப்பிடின்னு சொல்லிச் சிரிச்சாரு. அதே வெள்ளச் சிரிப்பு. மனச அள்ளிக்கிட்டு போற சிரிப்பு. அவருக்கு என்னய நெனப்பிருக்கோ என்னமோன்னு நெனச்சுக்கிட்டேன்.

“அன்னக்கு சுத்துப் புறம் தெரியாம பில்ல ரொம்ப கவனமா பாத்துக்கிட்டு வந்த மாதிரியே பாடத்தையும் கவனமாக் கேட்டுக்குவீங்கதானே”ன்னு சொன்னாரு.

அப்பிடி ஒரு சந்தோஷம் எனக்கு! மனசு கன்னா பின்னான்னு துள்ளிக் குதிச்சுச்சு! என்னய நெனவு வச்சிருக்காரே! உதட்டில ஒரு கள்ளப் புன்னகை வந்து ஒட்டிக்கிச்சு…தேவிதான் என்னய ஒரு மாதிரி பாத்தா. சரி சரி, ஒன்னய அப்பறம் வச்சுக்கறேங்கிற மாதிரி என்னயப் பாத்துட்டு, போய் மாத்ஸ் புத்தகத்த எடுத்துக்கிட்டு வந்தா…

(தொடரும்)

--கவிநயா

Friday, July 25, 2008

கண்ணனுக்குத் தந்த உள்ளம்... 2

(முதல் பகுதி இங்கே...)

“மது…எழுந்திருடி… மணி ஏழாகப் போகுது. இன்னும் என்ன தூக்கம்? நாளைக்கே கல்யாணம் ஆச்சுன்னா, மாமியார்காரி வந்து என்ன இப்பிடிப் பொண்ண வளத்து வச்சிருக்கீங்கன்னு என்னயத்தான் திட்டுவா…”, அம்மா காலைல வேலயோட வேலயா வழக்கமான சுப்ரபாதத்தோட என்னய எழுப்புறாங்க.

ஆனா நான் எப்பவோ எந்திரிச்சுட்டேன். ம்… தூங்கினாதான எந்திரிக்கிறதுக்கு. ராத்திரி பூரா தூக்கமே இல்ல. மனசு பூரா பூரான் ஓடுற மாதிரி இருக்குது. சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம என்னமோ ஒரு சங்கடம் வயத்தப் பெசயுது. என்ன செய்யறதுன்னு ஒண்ணும் புரியல.

நேத்துதான் எனக்கு பரீட்சையெல்லாம் முடிஞ்சது. பாஸ் பண்ணிட்டேன்னா நானும் ஒரு இன்ஜினியர்னு சொல்லிக்கலாம். இன்னக்கி ஃப்ரெண்ட்ஸோட சேந்து பெரிய ஊர் சுத்தல் ப்ளான் பண்ணியிருக்கோம். எட்டர மணிக்கு ரெடியாகணும். என் பெஸ்ட் ஃப்ரெண்டு தேவி வந்தோன்ன ரெண்டு பேரும் சேர்ந்து காலேஜ் வாசல்ல மத்தவங்கள மீட் பண்ணறதா இருக்கோம். ஆனா என் மனசெல்லாம் அதுல இல்ல. வேற எங்கயோ இருக்கு.

“மதூஊஊஊ…. உன் ஃப்ரெண்டு காலங்காத்தால ரெண்டு தரம் ஃபோன் பண்ணிட்டா… எந்திரிடி!!!”, வந்துட்டாங்க எங்க வீட்டு சின்ன மகாராணி. என் அருமத் தங்கச்சி கவிதாவத்தான் சொல்லுறேன்.

சரிதான்.. இனியும் படுத்துக் கெடக்க முடியாதுன்னு தீர்மானிச்சு எந்திரிக்கிறேன். விறுவிறுன்னு காலை வேலையெல்லாம் முடிச்சுட்டு, தேவியக் கூப்புட்டு, “என்னடி விஷயம்”னு கேட்டா, அவ, “என்ன ட்ரஸ்டி போட்டுக்க போற இன்னக்கு?”, அப்பிடின்னு கேக்கறா! என்னமோ உலக சமாதானப் பிரச்சனை மாதிரி!

“ஏதோ ஒண்ணு. அதெல்லாம் யாரு யோசிச்சா?”, சலிச்சுக்கிட்டே சுவாரஸ்யமில்லாம சொல்லுறேன்.

“ஏய், என்னடி ஆச்சு ஒனக்கு? நானும் ஒரு வாரமா பாக்குறேன், சுரத்தே இல்லாம இருக்க. உன் பெஸ்ட் ஃப்ரெண்டுன்னு பேரு, என்கிட்டயும் ஒண்ணும் சொல்ல மாட்டேங்கிற” ன்னு திட்டுறா அவ.

“அப்பிடில்லாம் ஒண்ணும் இல்லடி.. சரி, நீ சொல்லு. என்ன ட்ரஸ் போடலாம்? சேல கட்டுவமா?” ன்னு கேக்கறேன்.

சேல கட்டுறதுதான் இப்பல்லாம் ரொம்ப ஸ்பெஷல். கொஞ்சம் பெரியவங்களே இப்பல்லாம் சேலை கட்டுறது அபூர்வமா இருக்கு. அதுனால இன்னக்கி மத்தவங்களும் சேலதான் கட்டுவாங்கன்னு நெனக்கிறேன். ஆனா எனக்கு சேல கட்டிக்கதான் ரொம்பப் புடிக்கும். சேலதான் இந்த ஒலகத்துலயே அழகான ட்ரஸ்ஸுன்னு நெனப்பு எனக்கு.

“ஓஹோ. ஆமாமா. ஒன்னய நாளைக்கி பொண்ணு பாக்க வராங்கள்ல? அதுக்கு இன்னக்கி ப்ராக்டிஸா?”அப்பிடின்னு கேட்டு கலகலன்னு சிரிக்கிறா தேவி.

அவளோட சேந்து என்னால சிரிக்க முடியல.

(தொடரும்)

--கவிநயா

Thursday, July 24, 2008

ஆடிவெள்ளிக் கெழமையிலே...

ஆடிவெள்ளிக் கிழமையில அம்மாவை மறக்கக் கூடாதில்லையா. அதனால "கண்ணனுக்குத் தந்த உள்ளம்..." தொடரை இன்னும் ரெண்டு நாள்ல தொடர்றேன் :)


ஆடி வெள்ளிக் கெழமையிலே
பாடி உன்னத் துதிக்க வந்தோம்
ஆசையோட பொங்க வச்சு
பாசத்தோட படைக்க வந்தோம்

மாவெளக்கு ஏத்தி வச்சோம்
மாரியாத்தா மனங் குளிர
மஞ்சப் பட்டு சாத்தி வச்சோம்
மகமாயி மனம் மகிழ

தீராத வெனை யெல்லாம்
உன்னக் கண்டா தீருமடி
மாறாத வெனை யெல்லாம்
மருண் டோடி மறையுமடி

தேடி வரும் வெனை தெகைச்சு
திரும்பி ஓடுமடி
பாடி உன்னச் சரணடைஞ்சா
பாவமெல்லாங் கரையுமடி

உன்னடியே கதியின்னு
ஓடோடி வந்தோமடி
பொன்னடியே புகலுன்னு
பணிஞ்சு நின்னோமடி!


--கவிநயா

Wednesday, July 23, 2008

கண்ணனுக்குத் தந்த உள்ளம்... 1

அப்பதான் அவர முதல் முதலா பாத்தேன். ஆரெம்கேவியில அம்மாவுக்கு பொடவை வாங்கிட்டு வெளில வரப்ப, கைல இருந்த பில்லப் பாத்துக்கிட்டே வந்தவ, ‘பட்’டுன்னு யார் மேலயோ மோதிட்டேன். நிமிந்து பாத்தா அவருதான். சுறுசுறுன்னு கோவம் வந்துருச்சு. “பொண்ணுங்கள இடிக்கவுன்னே கடைக்கு வருவீங்களோ”, அப்டின்னு ஆரம்பிக்க போனேன். அதுக்குள்ள அவரு, “ஏங்க, பாதைய பாத்து போங்க. பில்ல அப்பறம் பாத்துக்கலாம். எங்கயாச்சும் தடுக்கி கிடுக்கி விழுந்து கிழுந்து வக்க போறீங்க”, அப்பிடின்னு லேசா சிரிச்சுக்கிட்டே சொன்னாரு. அப்பதான் அவர ஒழுங்கா பாத்தேன். நெசமாச் சொல்றேங்க, “தோள் கண்டேன் தோளே கண்டேன்” ங்கிற பாட்டுக்கு அர்த்தம் எனக்கு அப்பதாங்க முதல் முறையா முழுசா புரிஞ்சது.

ஆம்பளங்க கூட இப்பிடி ஒரு ரோஜாப்பூ கலர்ல இருப்பாங்கன்னு அவரப் பாத்துதான் தெரிஞ்சுக்கிட்டேன். செகப்பா இருக்கவங்க பல்லு பளிச்சுன்னு தெரியாத மாதிரி இருக்கும். ஆனா இவரு லேசா சிரிக்கும்போதே அவரு பல்லு வரிசை, என்னழகைப் பாரேன்னு மின்னிச்சு. மீசையெல்லாம் இல்ல. மழுமழுன்னு இருந்திச்சு மொகம். கருகருன்னு முடி, தல கொள்ளாம. சந்தனக் கலர்ல பாண்ட்டும், ரோஸ் கலர்ல ஷர்ட்டும் போட்டிருந்தாரு. எல்லாத்துக்கும் மேல அவரோட கண்ணுதான் எனக்கு ரொம்பப் பிடிச்சது. அந்தக் கண்ணுல அப்பிடி ஒரு சாந்தம். அப்பிடி ஒரு அன்பு. கோவம்னா கிலோ என்ன வெலன்னு கேப்பாரு போல. அப்பிடியே மந்திரிச்சு விட்ட மாதிரி அவரையே பாத்துக்கிட்டு நின்னேன்.

“ஏய் மது. சீக்கிரம் வாடி.. ஆட்டோ புடிச்சாச்சு”, தங்கச்சி கீழ இருந்து கத்தறா. பொது எடத்துல பேரச் சொல்லிக் கத்தாதேன்னு எத்தன தடவ இந்தக் கழுதக்குச் சொல்லுறது. அறிவே இல்ல. இரு ஒன்னய. வீட்டுக்கு வந்து கவனிச்சுக்கிறேன். மனசுக்குள்ள அவளத் திட்டிக்கிட்டே, “வந்துட்டேண்டி”, அப்பிடிங்கிறேன். இவர் மேல வச்ச கண்ண இன்னம் வாங்கல…

அந்த ஆரெம்கேவி வாசல்ல பார்க் பண்றதுக்கெல்லாம் எடம் இருக்காது. ஒரே சனக்கூட்டம்தான். அதுனால ஆட்டோக்காரங்க அவசரப்படுத்துவாங்க. அவர விட்டு வெலக மாட்டேன்னு அடம் புடிச்ச பார்வைய ரொம்ப செரமப்பட்டு வெலக்கிக்கிட்டு, “ஸாரிங்க”, அப்டின்னு எனக்கே கேக்காத மாதிரி சொல்லிட்டு ஆட்டோவுக்கு போனேன்... திரும்பித் திரும்பிப் பாத்துக்கிட்டேதான். அவரும் என்ன ஒரு தரம் திரும்பிப் பாத்தாரு. அத நானும் பாத்தேன். சந்தோஷமா இருந்துச்சு. ரெண்டு பேரும் சிரிச்சிக்கிட்டோம்…

(தொடரும்)

--கவிநயா

Thursday, July 17, 2008

காணும் பொருள் யாவிலும்... கண்ணா உன் முகம் காண்கிறேன்...


கண்ணன் - என் காதலன்

மணலாகி துகளாகி மல்லாந்து கிடக்கின்றேன்
கடலரசி கரம் கோர்த்து கரையோரம் நடக்கின்றேன்
பதிகின்ற சுவடுகளில் உன்னடிகள் தேடுகின்றேன்
காணாமல் உனைஎண்ணி கலங்கிமனம் வாடுகின்றேன்

கண்ணாஉன் முகம் காணவே...
கண்ணீரில் தினம் மூழ்கினேன்...

அன்றொரு நாள் விண்வெளியில் தேவனாய் வந்தாய்
அன்புமிகப் பொழிந்தெனக்கு அமிழ்தமாய்த் தந்தாய்
காற்றோடு கரம்கோர்த்து எங்குநீ சென்றாய்?
கதறிநான் அழைத்தபின்னும் வாராமல் நின்றாய்!

கண்ணன்மனம் கல்லாகுமோ - என்
கண்ணீரும் வீணாகுமோ?

உன்நீல நிறமெடுத்து மேலாடை யாய்த் தரித்தேன்
உன்கருமை சேர்த்தெடுத்து மைதீட்டி அலங் கரித்தேன்
பவழவாய்ச் சிவப்பெடுத்து சிந்தூரத் திலக மிட்டேன்
மயிலிறகின் தீண்டலிலே மயக்கத்திலே எனை மறந்தேன்

காணும் பொருள் யாவிலும்...
கண்ணாஉன் முகம் காண்கிறேன்...

உன்இதழ்பூத்த சிரிப்பெடுத்து மலராகச் சூடிக் கொண்டேன்
உன்மேனி சுகந்தமதைச் சந்தனமாய்ப் பூசிக் கொண்டேன்
**உன்முகமே நொடிதோறும் என்ஆடி காட்டக் கண்டேன்
வேய்ங்குழலின் இசைக்கேற்ப என்இதயம் துடிக்கக் கண்டேன்

என்றுநீ வருவாய் கண்ணா - வந்து
எனை அழைத்துச் செல்வாய் கண்ணா??


--கவிநயா

பி.கு.
--**குமரனோட "யத் பாவம் தத் பவதி"யும், கண்ணாடி சேவையும் படிச்சதோட பாதிப்பு.
--அழகுக் கண்ணன் படத்துக்கு மாதவிப் பந்தலாருக்கு நன்றி!

Sunday, July 13, 2008

இதற்குப் பெயர் என்ன?

வசுந்தரா கலங்கிப் போயிருந்தாள். கடும் வயிற்று வலியுடன் கண்டபடி வாந்தியெடுத்து, காய்ச்சல் மயக்கத்துடன் இருந்த பன்னிரண்டு வயது மகனை அள்ளிப் போட்டுக் கொண்டு அந்த இரவு நேரத்தில் மருத்துவமனைக்கு வருவதற்குள் படாத பாடு பட்டு விட்டாள். இதோ டாக்டர் உள்ளே அவனை பார்த்துக் கொண்டிருக்கிறார். இங்கே இனந்தெரியாத பயத்துடன் இவள் காத்திருக்கிறாள்…

பெண் தனியாக வாழுவதில் என்ன சிரமம் என்று வாய்கிழியப் பேசினாலும், இந்த மாதிரி சமயங்களில் அதைப் போன்ற கருத்துகள் பல்லிளித்து விடுவதே நிதர்சன உண்மை. இரண்டு வருடங்களுக்கு முன் கணவன் திடீரென கண்ணை மூடி விட, கையில் வேலை இருக்கும் தைரியத்தில் மகனுடன் தனியாக இருந்து விடுவேன் என்று கலங்காமல் பெற்றோரை கிராமத்துக்கு திருப்பி அனுப்பியவள்தான் இவள். மனம் குழம்பி இருக்கும்போது சம்பந்தமில்லாத விஷயங்களைத் தான் அதிகமாக அசைபோடும் போலிருக்கிறது… தன்னிச்சையாகக் கலங்கிய கண்களைத் துடைத்துக் கொள்கையில், தோளில் யாரோ கை வைப்பதை உணர்ந்து, திடுக்கிட்டு திரும்பினாள்…

“என்னம்மா ஆச்சு? யாருக்கு என்ன? நீங்க தனியா இருக்கற மாதிரி இருக்கு… மனசு கேட்கல… தவறா நினைக்காதீங்க…”, இதமான வார்த்தைகளை அன்போடு உதிர்த்த அந்த பெண்மணியை நிமிர்ந்து பார்த்தாள்.

“நான் தனியா இருந்தா உங்களுக்கென்ன? உங்க வேலையைப் பாத்துக்கிட்டு போங்க”, என்று பொரிந்து கொட்டத் தயாரான வார்த்தைகள், உள்ளேயே பிசுபிசுத்துப் போயின, கனிவு நிறைந்த அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்ததும். அதற்குப் பதில் இது வரை அடங்கிக் கிடந்த கண்ணீர் உடைப்பெடுத்துக் கொண்டது. இயலாமையும் பயமும் கவலையும் பதட்டமும் களைப்பும் எல்லாம் சேர்ந்து கொண்டன.

அந்தப் பெண்மணி கொஞ்சம் பயந்துதான் போய் விட்டாள். “என்னம்மா, இங்க பாருங்க... கொஞ்சம் கட்டுப் படுத்திக்கோங்க..”, அவள் கையை எடுத்துத் தன் கையில் வைத்துக் கொண்டாள். பிறகு அவள் அழுது முடிக்கட்டும் என்று தீர்மானித்தவள் போல் அவள் கைகளை இதமாக வருடியபடி அமைதியாக இருந்தாள்.

ஒருவழியாக அழுது முடித்த வசுந்தரா, “ஸாரிம்மா. அதென்னமோ உங்கள பார்த்ததும் எல்லாம் படபடன்னு வெளில வந்துருச்சு…”, கண்களைத் துடைத்தபடி இலேசாக புன்முறுவலித்தாள்.

பதிலுக்குப் புன்னகைத்த அந்தப் பெண், “இப்ப சொல்லுங்க. என்ன ஆச்சு?”, எனவும், வசுந்தரா அவளுக்கு தன் நிலையை எடுத்துச் சொன்னாள்.

இதற்குள் டாக்டர் வெளியில் வந்து, “மேடம், ஒரு நிமிஷம் வாங்க”, என்று இவளை அழைக்கவும், “இதோ வரேம்மா”, என்று அந்தப் பெண்மணியிடம் சொல்லி விட்டு உள்ளே போனாள்.

“உங்க பையனுக்கு அப்பெண்டிசிடிஸ் ஆபரேஷன் உடனே பண்ணனும். இல்லன்னா ஆபத்து. உங்க கூட யாரும் வந்திருக்காங்களா?”

டாக்டர் சொன்னதைக் கேட்டு பதட்டத்துடன், “வேற யாரும் வரல டாக்டர். நான் அவனோட அம்மா. என்ன செய்யணுமோ அதைச் செய்யுங்க…”, என்று சொன்னவள், ஆபரேஷன் பற்றிய விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டாள். பிறகு, “நான் என் பையனை இப்ப பார்க்கலாமா, டாக்டர்?” என்றாள்.

“ம். பார்க்கலாம் மேடம்”, என்றதும், மகனின் அருகில் சென்றாள். உணர்வுடன் தான் இருந்தான் இப்போது. கிழிந்த நார் போல் கிடக்கும் அவனைப் பார்க்கையில் விண்டு போனது மனது. அவனுக்கு ஆபரேஷன் பற்றி எடுத்துச் சொல்லி, அவனைத் தைரியமாக இருக்கச் சொன்னாள்.

“நீ பயப்பாடாதே அம்மா. எல்லாம் சரியாப் போயிடும் பாரேன்”, என்று பெரிய மனிதனைப் போல தனக்குச் சொன்ன மகனைக் கண்ணீருடன் அணைத்து உச்சி முகர்ந்தாள். பிறகு டாக்டரிடம் சொல்லி விட்டு வெளியே வந்தாள்.

வெளியில் அந்த பெண்மணி கையில் ஒரு பொட்டலத்துடன் நின்று கொண்டிருந்தாள். “என்னம்மா ஆச்சு? டாக்டர் என்ன சொன்னார்?”, கரிசனத்துடன் விசாரித்தாள்.

வசுந்தரா விவரம் சொல்லியபின், “கவலைப்படாதீங்கம்மா. இது ஆபத்தில்லாத ஆபரேஷன் தான். எல்லாம் சரியாயிடும்”, என்றவள், கையிலிருந்த பொட்டலத்தைக் கொடுத்து, “உங்களைப் பார்த்தா ரொம்பக் களைப்பா தெரியுது. இதோ இதைக் கொஞ்சம் சாப்பிடுங்க”, என்று சொல்லி, ஒரு தண்ணீர் பாட்டிலையும் கூடவே கொடுத்தாள்.

முன்பின் தெரியாத அந்த பெண்மணியின் அன்பில் மிகவும் நெகிழ்ந்து போன வசுந்தரா, “பெத்த அம்மா மாதிரி என்கிட்ட இவ்வளவு அன்பு காட்டறீங்களே. நீங்க யாரும்மா? நீங்க இங்க என்ன பண்றீங்க?”, பொட்டலத்தைப் பிரித்த வண்ணம் கேட்டாள்…

“என் பேர் புவனா அம்மா. என் மகனுக்கு கான்சர். இந்த ஆஸ்பத்திரிலதான் கீமோதெரபிக்கு அட்மிட் ஆகியிருக்கான்…”, என்று அவள் சொல்லத் தொடங்கியதும்…

இட்டிலியைப் பிட்டு வாயில் வைக்கப் போன வசுந்தராவின் கை அப்படியே உறைந்தது.


--கவிநயா

Monday, July 7, 2008

கைப்பைக் கனவுகள்...


அன்றொரு நாள்…

என் கனவுகளை மடித்துக்
கைப்பையில் வைத்திருந்தேன்…

மெலிதாய் ஒரு தென்றல் வந்து
முடி கலைத்துச் செல்கையிலே
காற்றின் மேல் காதல் கொண்டு
கலைந்து சென்ற தொரு கனவு...

கடற் கரையின் ஓரத்திலே
காத லரின் நேரத்திலே
நினை வலையின் வேகத்திலே
கரை ஒதுங்கிய தொரு கனவு...

வான வில்லின் வர்ணம் கண்டு
விண் வெளியில் ஆசை கொண்டு
தொடு வானம் தொட முயன்று
தொலைந்து விட்ட தொரு கனவு...

பறவை களைப் பார்த்து விட்டு
பறப்ப தற்குப் பயில எண்ணி
சிட்டுக் குருவிச் சிறகினிலே
சிக்கிக் கொண்ட தொரு கனவு...

கனவுகளை எல்லாமே
காணாமல் போக்கிய பின்
கைப்பையின் கட்டுக்குள்
இப்போது...

கசப்பான நிஜம் மட்டும்…


--கவிநயா

Friday, July 4, 2008

ஆயிரங் கண்ணுடையாள்!


ஆயிரங் கண்ணுடையாள் – நெஞ்சின்
ஆலயத்தில் உறைவாள்!
சிங்கத்தின்மேல வருவாள் – அவள்
சிந்தையிலே நிறைவாள்!

(ஆயிரங்)

ஆயுதங்கள் தாங்கி – அவள்
ஆணவத்தை அழிப்பாள்!
அன்புதனைத் தாங்கி – அவள்
அன்னையாகி அருள்வாள்!

(ஆயிரங்)

அஞ்சேல் என்றுசொல்லி – அவள்
அபயம் தந்திடுவாள்!
நெஞ்சின் துயரையெல்லாம் – அவள்
பஞ்சுபஞ்சாய் எரிப்பாள்!

(ஆயிரங்)

பாதம்பற்றி அழுதால் – அவள்
பாவங்களைக் களைவாள்!
நம்பித்தினம் தொழுதால் – அவள்
நற்றுணையா யிருப்பாள்!

(ஆயிரங்)

--கவிநயா

Tuesday, July 1, 2008

அப்படி என்னதான் பேசுவாளோ?

சுமதிக்கு வேலையே ஓடவில்லை. அனிதா யாருடன் அரை மணி நேரமாகக் குசுகுசுவென்று தொலை பேசிக் கொண்டிருக்கிறாள்? அவள் ஒரு அறையில் பேசும்போது இவள் ஏதாவது வேலை வைத்துக் கொண்டு அங்கே போனால், உடனே வேறு அறைக்கு நழுவி விடுகிறாள்; சற்று நேரம் கழித்து அதே போல செய்தால், அவளும் அதே போல! ஒரு வாரமாகவே இப்படித்தான். இதென்ன கண்ணாமூச்சி ஆடுகிறாளா என்னோடு? சுமதிக்கு இயலாமையால் ஏற்படும் எரிச்சலும் கோபமும் வந்து முட்டிக் கொண்டு நின்றன. அந்த வேகத்தில் அடுக்களையில் பாத்திரங்கள் படாத பாடு பட்டன.

“அம்மா. சாப்பிடலாமா?” என்று கேட்டுக் கொண்டே அடுக்களைக்குள் நுழைந்தாள், அனிதா.

மகள் முகத்தைப் பார்த்ததும் வழக்கம்போல கோபமெல்லாம் ஆவியாகி விட்டது, சுமதிக்கு! 18 வயதுக்கே உரிய செழுமையான அழகுடன், முத்துப் பற்கள் தெரியப் புன்னகைத்தபடி வந்த மகள் மீது அவளுக்குக் கொள்ளைப் பிரியம்!

மறந்து போன கோபத்தை அவசரமாக நினைவுபடுத்திக் கொண்டாள்.

“யார்கிட்ட இவ்வளவு நேரம் அரட்டை, மேடம்?”

“என் ஃப்ரெண்டு திவ்யா, அம்மா”, வழக்கமான பதில். அம்மா எதிர்பார்த்த, ஆனால் திருப்தியடையாத பதிலை அசுவாரஸ்யமாகத் தந்து விட்டு,

“இன்னிக்கி என்னம்மா சமையல்?” என்றபடி ஒவ்வொரு பாத்திரமாக திறந்து ஆராயத் தொடங்கினாள்.

“ஏய். உண்மையச் சொல்லுடா. என்கிட்ட சொன்னா என்ன?”, தோழி போல பழகும் அம்மாவிடம் அனிதா இது வரை எதையும் மறைத்ததில்லை.

“அம்மா. எங்க காலேஜ் ம்யூசிக் க்ரூப்ல கிடார் வாசிக்கிற ரமேஷை எனக்கு ரொம்பப் பிடிக்கும்மா. ஸோ க்யூட்!”, என்று அவளிடமே சொல்பவள்! இப்போது என்ன திடீரென்று ஒளிவு மறைவு ரகசியம் எல்லாம் வந்து விட்டது?

“அம்மா! விட மாட்டியா! ஒண்ணும் இல்லம்மா. டீனேஜ் பொண்ணுங்க வேறென்ன பேசுவோம்? அதாம்மா. எல்லாமே உங்கிட்ட சொல்ல முடியுமா? எனக்கு ரொம்ம்ம்ம்பப் பசிக்குதும்மா. இப்ப சாப்பாடு போடப் போறியா இல்லையா?”, சிணுங்கியபடி கழுத்தைக் கட்டிக் கொண்டு “நச்”சென்று கன்னத்தில் முத்து பதித்தாள், செல்ல மகள்.

***

“கிஃப்ட் வாங்க போகணும்னு சொன்னேனே. என்னம்மா பண்றே? திவ்யா அக்கா கல்யாணத்துக்கு இன்னும் பத்து நாள்தாம்மா இருக்கு. திவ்யா வீட்டுக்குப் போய் அவளையும் கூட்டிட்டுப் போகணும். சீக்கிரம் வா!”

“ரெடியாதாண்டா இருக்கேன். வா போலாம்”, வாஷ் பேசின் கண்ணாடியில் ஒரு முறை அலங்காரத்தைச் சரி பார்த்துக் கொண்டு கிளம்பினாள், சுமதி.

திவ்யா வீட்டுக்குப் போனபோது வாசலில் ஏகப்பட்ட செருப்புகள்!

“அட, திவ்யா வீட்ல அதுக்குள்ளயும் கல்யாண களை கட்டிடுச்சே!”, வியந்து கொண்டே உள்ளே நுழைந்ததும் –

“சர்ப்ரைஸ்!! ஹாப்பி பர்த் டே டு யூ…”, என்று ஒரு பெரிய்ய்ய்ய்ய கும்பல் கத்தியது!

அப்போதுதான் சுமதிக்கு நினைவே வந்தது, தன் பிறந்த நாளைப் பற்றி. நேற்றுதான் பிறந்த குழந்தையைப் போல் ஒன்றும் புரியாமல் விழித்தவளை இறுக அணைத்து முத்தமிட்டு, “பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா!” என்றாள், மகள். கணவரும் அருகில் வந்து, “ஹாப்பி பர்த் டே சுமி! சர்ப்ரைஸ் எப்படி? எல்லாம் உம் பொண்ணோட ஏற்பாடுதான்”, என்றார், மகளைப் பார்த்து கண் சிமிட்டியபடி.

“இதாம்மா நானும் திவ்யாவும் குசுகுசுன்னு பேசின விஷயம்”, அம்மாவின் காதோடு கிசுகிசுத்தாள் மகள்.

“கேக் வெட்ட வாங்க சுமதி”, என்று திவ்யாவின் அம்மா வந்து அழைக்க, பிரமிப்பு விலகாமல் அவளுடன் போனாள், சுமதி.

--கவிநயா