Monday, June 16, 2008

என் பிள்ளை அமெரிக்காவுல இருக்கான்...

“என் பிள்ளை அமெரிக்காவுல இருக்கான்”, அப்பாவின் குரலில் பெருமை பிடிபடவில்லை.

“அப்படியா? சரி,சரி. இப்பதான் குடும்பத்துக்கு ஒருத்தராச்சும் வெளிநாட்ல இருக்காங்களே”, என்று அவர் உற்சாகத்தில் தண்ணீர் தெளித்தார், பக்கத்தில் இருந்தவர். அப்பாவுக்கு முகம் சுண்டி விட்டது.

ஆனாலும் சமாளித்துக் கொண்டு, “அதான் அவன் அடுத்த முறை வரும்போது கல்யாணத்தை முடிச்சிடலாம்னு பாக்கிறேன். ஏதாச்சும் நல்ல வரன் தெரிஞ்சா சொல்லுங்க”, என்றார்.

“சரிங்க, உங்களுக்கு இல்லாமையா? கண்டிப்பா சொல்றேன்”, அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே கெட்டி மேளம் கொட்டியது. இவர்களும் கூட்டத்தில் இடித்துக் கொண்டு தாலி கட்டும் வைபவத்தைப் பார்த்து விட்டு, அட்சதை போட்டார்கள்.

“சரிங்க, பரிசைக் குடுத்துட்டு சாப்பிட்டுக் கெளம்ப வேண்டியதுதான். நான் வரேங்க”, என்று எழுந்தார், அந்தப் பக்கத்து இருக்கைக்காரர்.

“நானும் கெளம்ப வேண்டியதுதான். தூரத்துச் சொந்தம்; உள்ளூர்லயே கல்யாணம்கிறதால தலையைக் காட்டிட்டுப் போலாம்னு வந்தேன்”, என்றபடி அப்பாவும் கிளம்பினார்.

“அப்புறம், நான் சொன்னத மறந்துராதீங்க…”

***

விவேக்குக்கு அமெரிக்கா அவ்வளவாய்ப் பிடிக்கவில்லை. வந்து 3 மாதம் ஆகிறது. மிஞ்சிப் போனால், இன்னும் 3 மாதம் இருக்கும் வேலை. அதனால் பரவாயில்லை என்று நினைத்துக் கொண்டான்.

வந்த புதிதில், இரவு ஒன்பதரை வரை விழித்திருக்கும் கதிரவனும், ஒழுங்கு மாறாமல் ஓடும் போக்குவரத்தும், பார்க்கும் இடமெல்லாம் தெரிந்த பச்சையும், மனதைக் கவரத்தான் செய்தன. அதன் பிறகு இப்படியெல்லாம் நிதானிக்கவே நேரமில்லாமல் போய் விட்டது. எங்கே இருந்தாலும் அதே கணினிதான்; அதே வேலைதான். அதுவும் இங்கே அம்மா கைச்சாப்பாடு வேறு கிடையாது. அம்மா செல்லமான அவனுக்கு, என்ன வாழ்க்கை என்று சலிக்க, அதிக நாளாகவில்லை. நாட்களை எண்ணிக் கொண்டு காத்திருந்தான்.

***

நேரங் கெட்ட நேரத்தில் தொலைபேசி பிடிவாதமாக ஒலித்தது.

“யார் இது, இந்த நேரத்தில்?”, திட்டிக் கொண்டே தொலைபேசியை எடுத்து, தூக்கக் கலக்கத்துடன், “ஹலோ” என்றான்.

“விவேக். நான் அப்பா பேசறேன்..”

“அப்பாவா?” சட்டென்று தூக்கம் கலைந்து போனது.

“என்னப்பா, இந்த நேரத்துல?”

“வந்து… விவேக்…”, அப்பாவின் தயக்கம் கலவரத்தை அதிகரிக்க,

“சீக்கிரம் சொல்லுங்கப்பா. எல்லாரும் சுகம்தானே?”

“அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் விவேக். ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கோம்…”

இவனுக்கே ஹார்ட் அட்டாக் வந்து விடும் போல இருந்தது.

“என்னப்பா சொல்றீங்க? எப்படி? நல்லாதானே இருந்தாங்க? இப்ப எப்படி இருக்காங்க?”

பதற்றத்தில் கேள்விகளை அடுக்கினான்.

“இல்லப்பா… நேத்து அக்காவுக்கு ஒரு சின்ன ஆக்ஸிடெண்ட்…”

இன்னொரு அதிர்ச்சி.

“என்னப்பா சொல்றீங்க? ஏன் நேத்தே என்கிட்ட சொல்லல?”

“அக்காவும் அத்தானும், குழந்தையோட ஸ்கூட்டர்ல போகும்போது, கார் மோதி… அக்காவுக்கு கால்ல சின்ன ஃப்ராக்சர். அத்தான் நல்லாருக்கார். குழந்தைக்குதான் கொஞ்சம் மயக்கமும் தெளிவுமா மாத்தி மாத்தி இருக்கு. டாக்டர் இன்னும் டெஸ்ட்லாம் எடுத்துக்கிட்டிருக்காங்க. அவனோட அம்மா மேலதான் அவன் விழுந்திருக்கான்; அதனால கவலைப்பட ஒண்ணுமில்லைன்னுதான் சொல்றாங்க...”

ஒன்றரை வயது குட்டிக் கண்ணன். அவனுடைய பொக்கை வாய்ச்சிரிப்பு காதில் ஒலிக்கிறது. அவனுக்கா? நம்பவே முடியவில்லை. அம்மாவுடைய முதல் பேரன். செல்லப் பேரன். அதனால்தானோ?

“அவங்களைப் பாத்துட்டு வந்ததுல இருந்து அம்மா குமைஞ்சுக்கிட்டே இருந்தா. குழந்தை பேச்சில்லாம மயக்கத்துல இருக்கதைப் பாத்ததும் அவளால தாங்க முடியலைன்னு நினைக்கிறேன். திடீர்னு ரொம்ப வேர்த்து, மூச்சு விடச் சிரமப்பட்டா. உடனே ஹாஸ்பிடலுக்குக் கூட்டிப் போய்ட்டோம்…”

அவனை உடனே கிளம்பி வா என்று சொல்வதா வேண்டாமா என்ற குழப்பம் அப்பாவின் குரலில்.

“நீ வர முடிஞ்சா எங்களுக்கெல்லாம் கொஞ்சம் தைரியமா இருக்கும்ப்பா. வேலையில, விசாவுல ப்ரச்னைன்னா வேண்டாம். நாங்க பாத்துக்கிறோம்”

அப்பாவை நினைத்தால் பாவமாக இருந்தது அவனுக்கு. எல்லாருக்கும் உடல் நலம் சரியில்லாத நிலையில் அவர் மட்டும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்.

“நான் ஆஃபீஸ்ல சொல்லிட்டு கெளம்ப ஏற்பாடு பண்றேம்பா. கவலைப் படாதீங்க”

***

பேசி மூன்று நாளாகி விட்டது. விவேக்கிடம் இருந்து வருகிறேன், இல்லை, என்று எந்தத் தகவலும் இல்லை. குழந்தைக்கு ஒன்றுமில்லை என்று சொல்லி விட்டார்கள். அது வரை பெரிய நிம்மதி. அம்மாவுக்குத்தான் இன்னும் சரியாக வரவில்லை. முதல் அட்டாக்கே கொஞ்சம் சீரியஸாகி விட்டதாக டாக்டர் சொல்கிறார். அவளோ, “விவேக், விவேக்”, என்று மகன் பேரைச் சொல்லிப் புலம்பிக் கொண்டிருக்கிறாள்.

டாக்டரே கேட்டு விட்டார், “என்ன சார், இத்தனை நாளா இப்படியே விட்டு வச்சிருக்கீங்க? உங்க பையன் ஏன் இன்னும் வரல? அவரைப் பாத்தாலாவது சீக்கிரம் குணமடைய சான்ஸ் இருக்கு…”

“என் பையன் அமெரிக்காவுல இருக்கான் டாக்டர்…”, இம்முறை அப்பாவின் குரல் சுரத்தில்லாமல் ஒலித்தது.

***

(இரண்டாவது முடிவு)

“இல்லப்பா. இங்கதான் இருக்கேன்”, என்றபடி விவேக் உள்ளே நுழைந்தான்.

அப்பாவின் கண்களில் விளக்குப் போட்டது போல் பிரகாசம். ஓடிச் சென்று அணைத்துக் கொண்டார்.

“விசா பிரச்னை. இப்போ போனா திரும்பி வர முடியாதுன்னு சொன்னாங்க. அதனால வேலையை விட்டுட்டேம்ப்பா. சொன்னாக் கவலைப் படுவீங்கன்னு சொல்லாம வந்துட்டேன்…”

“டாக்டர், என் பையன் என் பக்கத்துலதான் இருக்கான்”, அப்பாவின் குரலில் பெருமை பிடிபடவில்லை.

***

--கவிநயா

39 comments:

 1. முதல்முடிவுதான் நல்லா இருக்குங்க.

  ReplyDelete
 2. முதல் முடிவே பெரும்பாலான பெற்றோர் சந்திப்பது. "என்ன வளம் இல்லை நம் திரு நாட்டில்? ஏன் பெற்றவரை உற்றாரை விட்டிருக்க வேண்டும் அயல் நாட்டில்?" என்று திரும்பி வரும் இரண்டாம் முடிவு அரிது. பிள்ளைகளின் வளமான வாழ்வுக்கு முட்டுக்கட்டையாகி விடக் கூடாதென சொல்லவும் முடியாமல், அவர்களை நினைத்த மாத்திரத்தில் பார்க்க முடியாத வேதனையை மெல்லவும் முடியாமல் வாழும் ஆயிரக் கணக்கான பெற்றோருக்கு இக் கதை சமர்ப்பணம்.

  ReplyDelete
 3. ஒரே ஒரு வாக்கியம் ,அந்தந்த சந்தர்ப்ப சூழ்நிலையால், எப்படியெல்லாம் மாறுகிறது பாருங்கள்."என் பையன் அமெரிக்காவிலே இருக்கான்"...அருமையான எண்ண ஓவியம்.எதையும் இழக்காமல் எதுவும் கிட்டாது .நாம் எதற்கு முக்கியத்துவம் தருகிறோம் என்பதைப் பொறுத்து நம் வாழ்க்கையின் சுக துக்கங்கள் அமைகின்றன .இந்த உண்மை நமக்கு அடி பட்டால்தானே புரிகிறது.
  மகனை எப்படியாவது ஐ.டி.யில் நிறுத்திவிட வேண்டும்
  அடுத்த ஃபிளைட்டில் அமெரிக்காவுக்கு
  அனுப்பி விட வேண்டும் ..
  .பெருமையை மறைத்துப்
  போலியாக வருத்தப் படவேண்டும் .
  இறுதிச் சட்ங்குக்கு இல்லையே என்று
  உண்மையாகவே அழவேண்டும் .
  இதுதான் இன்றைய பெற்றோரைத்
  தாக்கும் ஐடி கலாச்சாரம்
  கதையை 'நயமான கவி'யாக்கி எழுதியிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. \\முதல்முடிவுதான் நல்லா இருக்குங்க\\

  டீச்சர் சொன்னதை வழிமொழிகிறேன்

  ReplyDelete
 5. முதல் முடிவுதான் டாப்பாகவும் நல்ல டச்சாகவும் இருக்கு... இரண்டாம் ரகம் சினிமா வாடை கொண்டது...

  வாழ்த்துக்கள்... தொடருங்கள்...

  ReplyDelete
 6. தூள்!!! ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்ல சிறுகதை வாசிச்ச திருப்தி. இதுபோல் நிறைய எழுதுங்கள்.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. பின்னூட்டம் போட்டவங்களுக்கெல்லாம் நன்றி! அப்புறமா பதில் எழுதறேன். இப்போதைக்கு சொல்ல வந்தது என்னன்னா:

  முதல் முடிவே நல்லாருக்குன்னு பெரும்பாலானோர் சொன்னதால ரெண்டாவது முடிவை எடுத்துட்டேன்... :)

  ReplyDelete
 8. திரண்ட கருப்பொருளைத் தேக்கிவரும் இக்கதைக்(கு)
  இரண்டாம் முடிவே இசை!

  பொருள்:-
  இந்த அருமையான கதைக்கு இரண்டாம் முடிவே புகழ்சேர்ப்பதாக விளங்குகிறது.

  வாழ்த்துக்கள் கவிநயா!

  ReplyDelete
 9. அய்யய்யோ! என்னோட ஒரு குறள்வெண்பா வீணாப்போச்சே!

  ReplyDelete
 10. சரி விடுங்க! இப்ப என்ன கெட்டுப்போச்சு. மாத்தி எழுதிட்டாப் போச்சு!

  கவிநயா செய்கதைக்கு முன்முடிவே நன்றாம்
  நவில்வேன் நாளும் நயந்து!

  ReplyDelete
 11. அருமையான கதை கவிநயா.
  இது ஒரு இளைஞனின் கதை மட்டுமல்ல.
  நிறைய பெற்றோரினதும் பிள்ளைகளினதும் வாழ்க்கை இந்தச் சுழலிலேயே சிக்குண்டு கிடக்கிறது.

  முதல் வார்த்தையில் இல்லாத அதிர்வினை அதே வார்த்தை கடைசியில் சுமந்து வருவதுதான் கதையின் அழகாக அமைந்திருக்கிறது.

  பாராட்டுக்கள்.
  தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி. :)

  ReplyDelete
 12. நல்வரவு துளசிம்மா. கருத்துக்கு நன்றி!

  ReplyDelete
 13. //பிள்ளைகளின் வளமான வாழ்வுக்கு முட்டுக்கட்டையாகி விடக் கூடாதென சொல்லவும் முடியாமல், அவர்களை நினைத்த மாத்திரத்தில் பார்க்க முடியாத வேதனையை மெல்லவும் முடியாமல் வாழும் ஆயிரக் கணக்கான பெற்றோருக்கு இக் கதை சமர்ப்பணம்.//

  ஆமாம் ராமலக்ஷ்மி! நன்றாகச் சொன்னீர்கள். மிக்க நன்றி!

  ReplyDelete
 14. //நாம் எதற்கு முக்கியத்துவம் தருகிறோம் என்பதைப் பொறுத்து நம் வாழ்க்கையின் சுக துக்கங்கள் அமைகின்றன .இந்த உண்மை நமக்கு அடி பட்டால்தானே புரிகிறது.//

  வாழ்வின் யதார்த்தத்தை அருமையாக எழுதியிருக்கிறீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, கோமா!

  ReplyDelete
 15. வருகைக்கும் வழிமொழிந்தமைக்கும் நன்றிகள், சின்ன அம்மிணி!

  ReplyDelete
 16. வருகைக்கும், முடிவுகள் பற்றிய கருத்துக்கும் நன்றி, விக்னேஷ்வரன்!

  ReplyDelete
 17. ரசித்ததற்கு மிக்க நன்றிங்க, ப்ளீச்சிங்பௌடர்!

  ReplyDelete
 18. வாங்க அகரம்.அமுதா. நீங்கமட்டும்தான் ரெண்டாவது முடிவு நல்லாருக்குன்னு சொன்னீங்க. உங்க பின்னூட்டம் பார்த்து மறுபடி அதைச் சேர்க்கலாமான்னு யோசிக்கிறதுக்குள்ள அடுத்த குறள் வெண்பா போட்டு என்னை காப்பாத்திட்டீங்க :) வருகைக்கும் அழகிய வெண்பாக்களுக்கும் நன்றிகள்!

  ReplyDelete
 19. வாங்க ரிஷான்!

  //நிறைய பெற்றோரினதும் பிள்ளைகளினதும் வாழ்க்கை இந்தச் சுழலிலேயே சிக்குண்டு கிடக்கிறது.//

  உண்மைதான்.

  எப்போதும் ஊக்க டானிக்குடன் வரும் உங்களுக்கு மிக்க நன்றி! :)

  ReplyDelete
 20. //அருமையான கதை கவிநயா.
  இது ஒரு இளைஞனின் கதை மட்டுமல்ல.
  நிறைய பெற்றோரினதும் பிள்ளைகளினதும் வாழ்க்கை இந்தச் சுழலிலேயே சிக்குண்டு கிடக்கிறது.

  பாராட்டுக்கள்.
  தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி. :)//

  தம்பி ரிஷான் மேலே சொன்னதுக்கு ஒரு ரீப்பிட்டேஏஏஏ!! போட்டுக்கறேன்.

  ReplyDelete
 21. //தம்பி ரிஷான் மேலே சொன்னதுக்கு ஒரு ரீப்பிட்டேஏஏஏ!! போட்டுக்கறேன்.//

  ஆணி பிடுங்கலுக்கு நடுவிலயும் வந்து கதை படிச்சு, கருத்து ரிப்பீட்டின உங்க அன்புக்கு மிக்க நன்றி, மௌலி! :)

  ReplyDelete
 22. “என் பையன் அமெரிக்காவுல இருக்கான் டாக்டர்…”, இம்முறை அப்பாவின் குரல் சுரத்தில்லாமல் ஒலித்தது.


  வாழ்கை வட்டம் என்று சொல்வது போல முடிவு அழகாகவும் உள்ளது, அழுத்தமாகவும் உள்ளது.

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 23. கதையல்ல இது. (இன்று இருக்கும் பல பெற்றோரின் யதார்த்த நிலை இதுவே )

  ஆயினும் ஒன்று சொல்லிக்கொள்ள ஆவல்.

  முடிவு எனும் சொல்லுக்கு இரு பொருள்கள் உள.
  ஒன்று decision.
  இரண்டாவது end.

  முடிவிலா கதைக்கு
  முடிவொண்டு வேண்டுமெனில்
  முடியுமா ?

  கீதாசார்யன் சொல்வது போல,
  எது நடக்கிறதோ அது நடந்தே தீரும்.
  நடந்ததிலும், நடப்பதிலும், நடக்க இருப்பதிலும்
  நாம் ஒரு சாட்சி. நாம்தான் நடத்துகிறோம் என்பது அக்ஞானம்.

  போர் அடிக்கவில்லையெனின் இன்னொன்றும் சொல்ல ஆசை.
  உயிர் பிரியும்போது மகன் (ள்) பக்கத்தில் இருப்பார்க்ளா என்பது
  அவரவர் கர்மவினைப் பயன்.

  வலை உலகத்திலே நூறு குழந்தைகளோடு தினந்தோறும்
  அளவளாவுகிறோம்.
  ஆண்டவன் கொடுத்த அருட்செல்வங்கள் இவை.
  அது போதாதா ?  சுப்பு ரத்தினம்.
  தஞ்சை.
  http://arthamullavalaipathivugal.blogspot.com

  ReplyDelete
 24. well written!
  shan nalliah-norway
  sarvadesatamilercenter.blogspot.com

  ReplyDelete
 25. //வாழ்கை வட்டம் என்று சொல்வது போல முடிவு அழகாகவும் உள்ளது, அழுத்தமாகவும் உள்ளது.//

  நல்வரவு பொடிப்பையன்! பொடியா இருந்தாலும் பெரிய கருத்தா சொல்லிட்டீங்க! மிக்க நன்றி!

  ReplyDelete
 26. வாங்க சுப்புரத்தினம் ஐயா. நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை. இதை அப்படிச் செய்திருக்கலாம், அதை இப்படிச் செய்திருக்கலாம் என்று எண்ணி மறுகும் உள்ளங்கள் எத்தனையோ. அப்படி இருக்கையில், எதுவும் நம் செயல் இல்லை என்ற தெளிவு எல்லோருக்கும் அவ்வளவு சுலபத்தில் வந்து விடுவதில்லை. படிக்கிறோம், புரிந்து விட்டதாக நினைக்கிறோம், ஆனால், இல்லை, உனக்கு புரியவில்லை, என்று ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒன்று வந்து ஏசிக் காட்டுகிறது.

  //வலை உலகத்திலே நூறு குழந்தைகளோடு தினந்தோறும்
  அளவளாவுகிறோம்.
  ஆண்டவன் கொடுத்த அருட்செல்வங்கள் இவை.
  அது போதாதா ? //

  உங்களுடைய அளவு கடந்த அன்பையே இந்த வார்த்தைகள் உணர்த்துகின்றன. உங்கள் அன்புக்குத் தலை வணங்குகின்றேன்! மிக்க நன்றி ஐயா!

  ReplyDelete
 27. நல்வரவு ஷான்!
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
 28. ரொம்ப நல்லா இருக்குங்க.. கவிநயா.. நேரத்துக்கு நேரம் நிலைமை மாறும் போது நம்ம மனசும் தான் எப்படி எல்லாம் மாறுது .. ஹ்ம்..

  ReplyDelete
 29. நல்ல கதைன்னு மட்டும் சொல்லி நிறுத்திக்கிறேன் அக்கா. போய் அப்பாவுடன் தொலைபேச வேண்டும். பேசி இரண்டு வாரங்களுக்கு மேலாகிவிட்டன.

  ReplyDelete
 30. அருமையாக இருந்தது கதை. அந்த இரண்டாம் முடிவு என்ன? இரு முடிவுகளையுமே பதிவில் போட்டு இருக்கலாமே....

  ReplyDelete
 31. வாங்க கயல்விழி! உண்மைதான். ஒரே மனசுதான், ஆனா நிமிடத்துக்கு நிமிடம் நிறம் மாறுது... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
 32. நன்றி குமரா! அப்பாகிட்ட முதல்ல பேசுங்க. வலைப் பூ, காயெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் :) தந்தைக்கு என்னுடைய பணிவான வணக்கங்கள்!

  ReplyDelete
 33. நல்வரவு சரவணகுமரன்! பாராட்டுக்கு நன்றி. நீங்க சொன்ன மாதிரி இரண்டாவது முடிவையும் போட்டிருக்கேன், பாருங்க!

  ReplyDelete
 34. இரு முடிவுகளுமே நல்லா இருக்கு. ஆனா,, இது மாதிரி நிறையக் கதை படிச்சாச்சே!

  ReplyDelete
 35. வாவ். ரொம்ப அருமையா இருந்தது கதை.

  ReplyDelete
 36. //இது மாதிரி நிறையக் கதை படிச்சாச்சே!//

  அப்படியா அண்ணா :( ஆனா நான் படிக்கல. நிறைய+1 தரம் படிச்சதுக்கு நன்றி!

  ReplyDelete
 37. //வாவ். ரொம்ப அருமையா இருந்தது கதை.//

  வாங்க சிவா! ரசிச்சதுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 38. //முதல்முடிவுதான் நல்லா இருக்குங்க.//

  Repeatu...

  Irandavathu para padikkumpothu "Same blood" nu padichen.. :))

  ReplyDelete
 39. நல்வரவுங்க ஜி! ஆனா

  //Irandavathu para padikkumpothu "Same blood" nu padichen.. :))//

  இது புரியலையே :(

  ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)