Thursday, June 26, 2008

வண்டாடப் பூமலர வள்ளி வனங்காக்க கண்டாராம் வேல்முருகர்...

நாளைக்கு கிருத்திகை. வள்ளி கதையைத் தாலாட்டா போட்டா பொருத்தம்தானே! குழந்தைகள் இருக்கறவங்களும், குழந்தையா இருக்கறவங்களும், முருகனோட பக்தர்களும், அவன் அம்மா, அப்பா, அண்ணா, மாமன், இப்படி அவனோட உறவினர்களுடைய பக்தர்களும், இப்படி யார் வேணுன்னாலும் படிக்கலாம்! :)

ஆழ்ந்த தூக்கத்துக்கு போற நேரத்துல என்ன சொன்னாலும் மனசுல பதியுமாம். எங்கயோ படிச்சதுங்க. அதுக்குன்னு தரவெல்லாம் கேக்காதீங்க. தரத் தெரியாது, நமக்கு :) அதனாலதான் அந்தக் காலத்துல தூங்க வைக்கும்போது அருமையான தாலாட்டுகளையும், கதைகளயும் சொல்லித் தந்தாங்க. கதைகளை படிக்கிறதை விட சொல்லிக் கேக்க நல்லாருக்கும். அதை விட பாடிக் கேட்டா இன்னும் நல்லா மனசுல பதியும்தானே. குழந்தையா இருக்கும்போதே இப்படிக் கதைகளை மனசுல பதிய வைக்க தாலாட்டை விட சிறந்த யுக்தி எது!

வள்ளி தாலாட்டு கொஞ்சம் நீளம்தானுங்க. பொறுமையாப் படிங்க! பின்ன, குழந்தை தூங்கற வரை பாடறதுக்கு வேணுமில்ல? அதனாலதான் தாலாட்டெல்லாம் நீளமா இருக்குதுங்க! ஏதாச்சும் வார்த்தைக்கு அர்த்தம் தெரியலைன்னா, நம்ம குமரன்கிட்ட கேட்டுக்கலாம் :)

இதுக்கு முன்னாடி இட்ட "ஆரடிச்சா ஏனழுதாய்" தாலாட்டை இன்னும் படிக்காதவங்க இங்க படிக்கலாம்...

சரி சரி... நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருந்தா தாலாட்டக் கேக்காமயே தூங்கிடப் போறீங்க! இதோ தாலாட்டு:


வள்ளி தாலாட்டு

வள்ளி என்றால் வள்ளி மலைமேல் படரும் வள்ளி
கொடியில் கிடந்த வள்ளி கூவி அழும்போது…

வனத்துக் குறவர்களாம் மான்பிடிக்கும் வேடர்களாம்
குழந்தை குரல்கேட்டு குறவேடர் ஓடிவந்து
மதலை குரல்கேட்டு மான்வேடர் ஓடிவந்து
வாரியெடுத்து வண்ண மடியில் வைத்து
தூக்கியெடுத்து சொர்ண மடியில் வைத்து
மண்துடைத்து மடியில் வைத்து
வள்ளி என்ற பேருமிட்டு
வைத்தார் வனந்தனிலே…

உழக்குத் தினை விதைத்து வள்ளி உத்தமியை காவல் வைத்து
உத்தமியாள் காவலிலே ஓடிக் கிளிவிரட்டி
நாழி தினை விதைத்து வள்ளி நாயகியை காவல் வைத்து
நாயகியாள் காவலிலே நடந்து கிளிவிரட்டி
பதக்குத் தினை விதைத்து வள்ளி பசுங்கிளியை காவல் வைத்து
பசுங்கிளியாள் காவலிலே பாடி கிளிவிரட்டி
குறுணி தினை விதைத்து வள்ளி கொம்பனையாள் காவல் வைத்து
கொம்பனையாள் காவலிலே கூவி கிளிவிரட்டி
ஆலோலம் என்று சொல்லி வள்ளி அழகாய்க் கிளிவிரட்டி
எய்து கிளி விரட்டி வள்ளி இருந்தாள் பரண்மீது…

தினைப்புனமும் காத்து வள்ளி திகைத்து நிற்கும் வேளையிலே
வனத்திருக்கும் வேடரைப் போல் வந்தாராம் வேல்முருகர்
வண்டாடப் பூமலர வள்ளி வனங்காக்க கண்டாராம் வேல்முருகர்
கானக்குறவடிவேல் வள்ளி அழகுக்கும் வலதுகைத் தேமலுக்கும்
கன்னத்து மஞ்சளுக்கும் சுப்பையா கண்டாசை கொண்டாரோ
உட்கழுத்து மஞ்சளுக்கு சுப்பையா உள்ளாசைப் பட்டாரோ
கூந்தலழகுக்கு சுப்பையா குறவேசம் ஆனாரோ

தேனும் தினைமாவும் தெவிட்டாத வேலவரும்
பாலுந் தினைமாவும் பசியாற வந்தாராம் வள்ளியிடம்
தாகம் எடுக்குதென்று சாலங்கள் செய்தாராம்
நல்ல கிழவனைப்போல் சுப்பையா நடித்தாராம் தினைப்புனத்தில்…

ஆனை கொண்டு வந்தார் சுப்பையா
வள்ளி ஆரணங்கை மாலையிட்டார்
சிகப்பு வளையலிட்டார் சுப்பையா
வள்ளி தேன்மொழியை மாலையிட்டார்
பச்சை வளையலிட்டார் சுப்பையா
வள்ளி பசுங்கிளையை மாலையிட்டார்
கிள்ளு வளையலிட்டார் சுப்பையா
வள்ளி கிளிமொழியை மாலையிட்டார்…

வண்டாடும் தோகைமலை
வள்ளியம்மை வாழும்மலை
கைலாசநாதர் மலை
மானென்றும் வள்ளி
மயிலென்றும் சுப்பையா
தேனென்றும் தெய்வயானை
தென்பழனி வேலவரே!

***

தூங்கி எழுந்ததுக்கப்புறம் மறக்காம உங்க கருத்துகளைப் பகிர்ந்துக்கோங்க! :)

--கவிநயா

Wednesday, June 25, 2008

என்றேனும் என் தேவதை வருவாள்!


என் தேவதை

என்றேனும் என் தேவதை வருவாள் – தன்
சிறகி லென்னைத் தாங்கிக் கொள்வாள்
கண்ணீரைத் துடைத் தவள் எறிவாள்
கண்ணே என் றணைத்துக் கொள்வாள்

அன்னை அன்பை அவள் எனக் கருள்வாள்
பிள்ளை எனைமடி ஏந்திக் கொள்வாள்
கண்ணின் இமை போல் என்னைக் காப்பாள்
கண மொன்றும் என்னை விலகா திருப்பாள்

அவள் கால் தூசில்என் கவலைகள் மறையும்
அவள் கண் பட்டாலே ஆனந்தம் நிறையும்
உடலை விட்டே உயிர் ஏகிடினும் - அவள்
அன்பில் நானே உயிர்த் திருப்பேனே...


--கவிநயா

Friday, June 20, 2008

ஸ்ரீராமகிருஷ்ணரும் சிட்டுக்குருவியும்…


கத்துக் குட்டியான நான் இந்த மாதிரி ஒரு பதிவு முதல் முறையா எழுதப் போறேன். அன்னையின் திருப்பதங்கள் பணிந்து துவங்கறேன்!

எனக்குத் தோணறதை, எனக்கு புரிஞ்சதை அப்படியே சொல்லப் போறேன். குற்றம் குறை இருந்தா பெரியவங்க மன்னிக்கணும்.

சரணாகதி! அப்படின்னு அடிக்கடி சொல்றோம் ஆன்மீகத்துல. முழுமையான நம்பிக்கை வைக்கணும்; முழுமையான பக்தி வைக்கணும். முழுமையா சரணடையணும். இப்படில்லாம் சர்வ சகஜமா சொல்றோம். ஆனா முயற்சி செய்யறப்பதான் தெரியுது, இது எதுவுமே அவ்வளவு சுலபமில்லைன்னு. சரணடையறதுன்னா என்ன? ஒருத்தரை முழுமையா நம்பி, நம்பறதுன்னா சும்மா இல்லை, துளி சந்தேகம் கூட இருக்கக்கூடாது! அவங்களால நமக்கு துன்பமே ஏற்பட்டாக் கூட, அதுவும் கூட ஏதோ ஒரு நன்மைக்குத்தான் அப்படின்னு நினைச்சு அதையும் இயல்பா ஏத்துக்கிற அளவு நம்பிக்கையும், பக்குவமும் வேணும். அப்படி ஒருத்தரை நம்பி, அவர்கிட்ட நம்மை அப்படியே ஒப்புக் கொடுக்கிறதுதான், சரணாகதி!

நம்மால அப்படி இருக்க முடியுதா? இறைநம்பிக்கை இருக்குன்னு சொல்லிக்கிறவங்ககூட இன்பம் வந்தா அதுலயே மூழ்கிப் போய், இறைவனை மறந்துடறோம். துன்பம் வந்துட்டாலோ அவனைத் திட்டித் தீர்த்திடறோம். விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட இறைவனை நாமும் விருப்பு வெறுப்பில்லாம வணங்கணும், அப்படின்னு ஐயன் சொல்லியிருக்கிறது நினைவிருக்கா?

வேண்டுதல் வேண்டாமை இலான் அடிசேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

சரணாகதின்னா என்னன்னு ஸ்ரீராமகிருஷ்ணர் அழகா ஒரு கதை மூலமா விளக்கறார். பூனைக் குட்டி, குரங்குக் குட்டி கதை. குரங்குக் குட்டி என்ன பண்ணும்? அம்மாவை இறுக்கிப் பிடிச்சுக்கும். அம்மா மரத்துக்கு மரம், கிளைக்குக் கிளை தாவற வேகத்துக்கு ஈடு குடுத்து அதுவும் பிடிச்சிக்கணும். இல்லன்னா அவ்ளோதான்! அதான் குரங்குப் பிடின்னு ஒரு பிரயோகம் கூட இருக்கே! :)

ஆனா பூனைக்குட்டி என்ன பண்ணுமாம்? அதுக்கு ஒண்ணுமே தெரியாதாம். தாய்பூனை அதை எங்க வைக்குதோ அங்க அப்படியே இருக்குமாம், தாய்பூனை வந்து அதை வேற இடத்துக்கு நகர்த்தற வரை, வச்சது வச்சபடி! எங்க போனாலும் தாய்பூனைதான் குட்டியை வாயில கவ்வி எடுத்துகிட்டு போகணும்! குட்டிக்கு பிடிச்சுக்க தெரியாது!

பூனைக் குட்டிதான் நாம. தாய்பூனைதான் இறைவன். சரணடையறதுன்னா அதுதான். தாயை நம்பி, இறைவனை நம்பி, நீ என்ன செய்தாலும் சரின்னு ஒத்துக்கறது! பரிபூரணமா நம்மை ஒப்படைக்கிறது!

அதுக்காக நாம ஒண்ணுமே செய்யாம பூனைக் குட்டி மாதிரி உட்கார்ந்திருக்கணும்னு அர்த்தம் இல்லைங்கோ! சொல்ல வந்த கருத்தை அந்த செயலுக்கு(context-க்கு) தகுந்த மாதிரி சரியா எடுத்துக்குவீங்கன்னு நம்பறேன்.

அதெல்லாம் சரிதான், ஆனா சிட்டுக் குருவிக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்னு யோசிக்கிறீங்களா? நான் சில நாட்களுக்கு முன்னாடி இட்ட சிட்டுக்குருவி பதிவு நினைவிருக்கா? இன்னும் படிக்காதவங்க அதைப் படிச்சுட்டு வாங்க! நான் காத்திருக்கேன்...

ம்… படிச்சிட்டீங்களா? அந்த குருவிக் குஞ்சு எவ்வளவு உதவியற்ற நிலையில இருந்தது! அதனால செய்ய முடிஞ்சது எதுவுமே இல்ல :( அதுவும் பூனைக் குட்டி மாதிரியேதான். அதைப் பார்த்த போது எனக்கு ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்ன இந்தக் கதைதான் நினைவு வந்தது. அவர் சொன்ன பூனைக்குட்டிக்கும் இந்த குருவிக் குஞ்சுக்கும் அப்படி ஒண்ணும் வித்தியாசம் இல்லைன்னு தோணுச்சு. அம்புட்டுதாங்க விஷயம்! இவ்ளோ நேரம் பொறுமையா படிச்சதுக்கு நன்றி!

கொசுறு செய்தி:
நேத்து சாயந்திரம் எங்க வீட்டு செடி ஒண்ணுல இன்னொரு நல்ல ஆரோக்கியமான குருவிப் பாப்பாவைப் பார்த்தேன்! தன் அம்மாவோட தன் மொழில பேசிக்கிட்டிருந்தது :) அன்னிக்கு இறந்து போன குருவியை நினைச்சு வருந்தினதை மாத்தற மாதிரி இப்படி ஒண்ணு நடந்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம்! அந்தக் குருவிப் பாப்பாவின் படம்தான் மேல. எப்பவோ எழுதின இந்தப் பதிவை போடாம வச்சிருந்தேன். ஏன்னே தெரியல. இப்பதான் தெரியுது. இதுவும் அவள் செயலே! அன்னையின் திருவடிகள் சரணம், சரணம்!

--கவிநயா

தையல் நாயகி போற்றி!

2004-ல ஒரு வேண்டுதலுக்காக புதுக்கோட்டையிலிருந்து வைத்தீஸ்வரன் கோவிலுக்கு நடந்தேன். திரும்பி வந்தப்புறம் தையல்நாயகி மேல எழுதின பாடல் இது.

தையல்நாயகி படம் சரியா கிடைக்கல; அபிராமிதான் கிடைச்சா :) எவ்வுருவில் இருந்தாலும் அவள்தானே அன்னை, அப்படின்னு போட்டுட்டேன் :)


ஒளிசிந்தும் வதனமுடன் வைத்தீஸ் வரன்கோயில்
உறைகின்றதேவி யவள்!
அன்னையென்ற சொல்லுக்கு அன்பான இலக்கணமாய்
அருள்சுரக்கும் அரசியவள்!
ஏழுலகம் காப்பவளே ஏங்கியுனை அழைக்கின்றேன்
ஏழையெனைப் பார்த்தருள்வாய்!
தையல்நா யகியுந்தன் தளிர்ப்பாதம் பணிகின்றேன்
திருவடிகள் போற்றிபோற்றி!

கடல்போலத் துன்பங்கள் வந்தாலும் எனைநீயும்
கரைசேர்த்துக் காத்தருள்வாய்!
மலைபோலத் துயரங்கள் வந்திருக்கும் போதினிலும்
கடுகாக்கி மறைத்தருள்வாய்!
பனிபோலக் கவலைகள் யாவையும் கரைந்திடவே
பாவைநீ அருள்புரிவாய்!
தையல்நா யகியுந்தன் தளிர்ப்பாதம் பணிகின்றேன்
திருவடிகள் போற்றிபோற்றி!

குற்றங்களை மன்னித்து குறைகள்தம்மை மறந்துவிடும்
குழந்தைமனம் எனக்குவேண்டும்!
எப்போதும் நன்மையையே எல்லார்க்கும் வேண்டுகின்ற
வெள்ளைமனம் எனக்குவேண்டும்!
பற்றின்றி இருக்கையிலும் மற்றவர்க்கு உதவுகின்ற
அன்புமனம் எனக்குவேண்டும்!
தையல்நா யகியுந்தன் தளிர்ப்பாதம் பணிகின்றேன்
திருவடிகள் போற்றிபோற்றி!

நானென்ன செய்தாலும் நானென்ற கருவமது
வாரா திருத்தல்வேண்டும்!
எப்போதும் உன்னடிகள் பணிந்தபடி என் நிலைமை
மறவாதி ருத்தல்வேண்டும்!
வேண்டாத செல்வங்கள் ஆசைகள் போகங்கள்
தேடாதிருத்தல் வேண்டும்!
தையல்நா யகியுந்தன் தளிர்ப்பாதம் பணிகின்றேன்
திருவடிகள் போற்றிபோற்றி!

உனையெண்ணி அனுதினமும் ஊனுருகப் பாடுகின்றேன்
உமையவளே போற்றிபோற்றி!
மாந்தர் தம்மைக்காத்திடவே மனமுருகி வேண்டுகின்றேன்
மங்கை மீனாட்சிபோற்றி!
இடர்களெல்லாம் களைந்துஎமை கடைக்கண்ணால் ரட்சிக்கும்
கற்பகமே போற்றி போற்றி!
தையல்நா யகியுந்தன் தளிர்ப்பாதம் பணிகின்றேன்
திருவடிகள் போற்றிபோற்றி!

--கவிநயா

Wednesday, June 18, 2008

அப்போது கிடைக்கலாம்…



நினைவுகளே நெய்யூற்ற,
வெந்து கொண்டிருக்கிறது
இதயம்...

வானம் பார்த்த பூமியைப் போல்
மனதை பார்த்து ஏமாந்து
வறண்டு விட்டது
புன்னகை...

நீராடை இல்லாமல் நிர்வாணமாக
உலா வர மறுக்கும் கண்கள்
முடிவில்லா இருளுக்குள்
விடியலைத் தேடுகின்றன...

இவளுடைய வானத்தில்
நிலாகூட கறுப்புப் பூசிக் கொண்டு
கண்ணாமூச்சி ஆடுகிறது...

மின்மினிப் பூச்சிகூட
இவளைக் கடக்கையில்
வெளிச்சம் உதறி
இருளணிந்து கொள்கின்றது...

காலடியில் விடாது
நழுவிக் கொண்டே இருக்கும் பூமி
என்றாவது ஒருநாள் வெடித்துச் சிதறி
இவளை விழுங்கி விடக்கூடும் -
அப்போது கிடைக்கலாம் அவளுக்கு,
அவள் இதுநாள் வரை
தேடிச் சலித்து விட்ட நிம்மதி…

--கவிநயா

Monday, June 16, 2008

என் பிள்ளை அமெரிக்காவுல இருக்கான்...

“என் பிள்ளை அமெரிக்காவுல இருக்கான்”, அப்பாவின் குரலில் பெருமை பிடிபடவில்லை.

“அப்படியா? சரி,சரி. இப்பதான் குடும்பத்துக்கு ஒருத்தராச்சும் வெளிநாட்ல இருக்காங்களே”, என்று அவர் உற்சாகத்தில் தண்ணீர் தெளித்தார், பக்கத்தில் இருந்தவர். அப்பாவுக்கு முகம் சுண்டி விட்டது.

ஆனாலும் சமாளித்துக் கொண்டு, “அதான் அவன் அடுத்த முறை வரும்போது கல்யாணத்தை முடிச்சிடலாம்னு பாக்கிறேன். ஏதாச்சும் நல்ல வரன் தெரிஞ்சா சொல்லுங்க”, என்றார்.

“சரிங்க, உங்களுக்கு இல்லாமையா? கண்டிப்பா சொல்றேன்”, அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே கெட்டி மேளம் கொட்டியது. இவர்களும் கூட்டத்தில் இடித்துக் கொண்டு தாலி கட்டும் வைபவத்தைப் பார்த்து விட்டு, அட்சதை போட்டார்கள்.

“சரிங்க, பரிசைக் குடுத்துட்டு சாப்பிட்டுக் கெளம்ப வேண்டியதுதான். நான் வரேங்க”, என்று எழுந்தார், அந்தப் பக்கத்து இருக்கைக்காரர்.

“நானும் கெளம்ப வேண்டியதுதான். தூரத்துச் சொந்தம்; உள்ளூர்லயே கல்யாணம்கிறதால தலையைக் காட்டிட்டுப் போலாம்னு வந்தேன்”, என்றபடி அப்பாவும் கிளம்பினார்.

“அப்புறம், நான் சொன்னத மறந்துராதீங்க…”

***

விவேக்குக்கு அமெரிக்கா அவ்வளவாய்ப் பிடிக்கவில்லை. வந்து 3 மாதம் ஆகிறது. மிஞ்சிப் போனால், இன்னும் 3 மாதம் இருக்கும் வேலை. அதனால் பரவாயில்லை என்று நினைத்துக் கொண்டான்.

வந்த புதிதில், இரவு ஒன்பதரை வரை விழித்திருக்கும் கதிரவனும், ஒழுங்கு மாறாமல் ஓடும் போக்குவரத்தும், பார்க்கும் இடமெல்லாம் தெரிந்த பச்சையும், மனதைக் கவரத்தான் செய்தன. அதன் பிறகு இப்படியெல்லாம் நிதானிக்கவே நேரமில்லாமல் போய் விட்டது. எங்கே இருந்தாலும் அதே கணினிதான்; அதே வேலைதான். அதுவும் இங்கே அம்மா கைச்சாப்பாடு வேறு கிடையாது. அம்மா செல்லமான அவனுக்கு, என்ன வாழ்க்கை என்று சலிக்க, அதிக நாளாகவில்லை. நாட்களை எண்ணிக் கொண்டு காத்திருந்தான்.

***

நேரங் கெட்ட நேரத்தில் தொலைபேசி பிடிவாதமாக ஒலித்தது.

“யார் இது, இந்த நேரத்தில்?”, திட்டிக் கொண்டே தொலைபேசியை எடுத்து, தூக்கக் கலக்கத்துடன், “ஹலோ” என்றான்.

“விவேக். நான் அப்பா பேசறேன்..”

“அப்பாவா?” சட்டென்று தூக்கம் கலைந்து போனது.

“என்னப்பா, இந்த நேரத்துல?”

“வந்து… விவேக்…”, அப்பாவின் தயக்கம் கலவரத்தை அதிகரிக்க,

“சீக்கிரம் சொல்லுங்கப்பா. எல்லாரும் சுகம்தானே?”

“அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் விவேக். ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கோம்…”

இவனுக்கே ஹார்ட் அட்டாக் வந்து விடும் போல இருந்தது.

“என்னப்பா சொல்றீங்க? எப்படி? நல்லாதானே இருந்தாங்க? இப்ப எப்படி இருக்காங்க?”

பதற்றத்தில் கேள்விகளை அடுக்கினான்.

“இல்லப்பா… நேத்து அக்காவுக்கு ஒரு சின்ன ஆக்ஸிடெண்ட்…”

இன்னொரு அதிர்ச்சி.

“என்னப்பா சொல்றீங்க? ஏன் நேத்தே என்கிட்ட சொல்லல?”

“அக்காவும் அத்தானும், குழந்தையோட ஸ்கூட்டர்ல போகும்போது, கார் மோதி… அக்காவுக்கு கால்ல சின்ன ஃப்ராக்சர். அத்தான் நல்லாருக்கார். குழந்தைக்குதான் கொஞ்சம் மயக்கமும் தெளிவுமா மாத்தி மாத்தி இருக்கு. டாக்டர் இன்னும் டெஸ்ட்லாம் எடுத்துக்கிட்டிருக்காங்க. அவனோட அம்மா மேலதான் அவன் விழுந்திருக்கான்; அதனால கவலைப்பட ஒண்ணுமில்லைன்னுதான் சொல்றாங்க...”

ஒன்றரை வயது குட்டிக் கண்ணன். அவனுடைய பொக்கை வாய்ச்சிரிப்பு காதில் ஒலிக்கிறது. அவனுக்கா? நம்பவே முடியவில்லை. அம்மாவுடைய முதல் பேரன். செல்லப் பேரன். அதனால்தானோ?

“அவங்களைப் பாத்துட்டு வந்ததுல இருந்து அம்மா குமைஞ்சுக்கிட்டே இருந்தா. குழந்தை பேச்சில்லாம மயக்கத்துல இருக்கதைப் பாத்ததும் அவளால தாங்க முடியலைன்னு நினைக்கிறேன். திடீர்னு ரொம்ப வேர்த்து, மூச்சு விடச் சிரமப்பட்டா. உடனே ஹாஸ்பிடலுக்குக் கூட்டிப் போய்ட்டோம்…”

அவனை உடனே கிளம்பி வா என்று சொல்வதா வேண்டாமா என்ற குழப்பம் அப்பாவின் குரலில்.

“நீ வர முடிஞ்சா எங்களுக்கெல்லாம் கொஞ்சம் தைரியமா இருக்கும்ப்பா. வேலையில, விசாவுல ப்ரச்னைன்னா வேண்டாம். நாங்க பாத்துக்கிறோம்”

அப்பாவை நினைத்தால் பாவமாக இருந்தது அவனுக்கு. எல்லாருக்கும் உடல் நலம் சரியில்லாத நிலையில் அவர் மட்டும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்.

“நான் ஆஃபீஸ்ல சொல்லிட்டு கெளம்ப ஏற்பாடு பண்றேம்பா. கவலைப் படாதீங்க”

***

பேசி மூன்று நாளாகி விட்டது. விவேக்கிடம் இருந்து வருகிறேன், இல்லை, என்று எந்தத் தகவலும் இல்லை. குழந்தைக்கு ஒன்றுமில்லை என்று சொல்லி விட்டார்கள். அது வரை பெரிய நிம்மதி. அம்மாவுக்குத்தான் இன்னும் சரியாக வரவில்லை. முதல் அட்டாக்கே கொஞ்சம் சீரியஸாகி விட்டதாக டாக்டர் சொல்கிறார். அவளோ, “விவேக், விவேக்”, என்று மகன் பேரைச் சொல்லிப் புலம்பிக் கொண்டிருக்கிறாள்.

டாக்டரே கேட்டு விட்டார், “என்ன சார், இத்தனை நாளா இப்படியே விட்டு வச்சிருக்கீங்க? உங்க பையன் ஏன் இன்னும் வரல? அவரைப் பாத்தாலாவது சீக்கிரம் குணமடைய சான்ஸ் இருக்கு…”

“என் பையன் அமெரிக்காவுல இருக்கான் டாக்டர்…”, இம்முறை அப்பாவின் குரல் சுரத்தில்லாமல் ஒலித்தது.

***

(இரண்டாவது முடிவு)

“இல்லப்பா. இங்கதான் இருக்கேன்”, என்றபடி விவேக் உள்ளே நுழைந்தான்.

அப்பாவின் கண்களில் விளக்குப் போட்டது போல் பிரகாசம். ஓடிச் சென்று அணைத்துக் கொண்டார்.

“விசா பிரச்னை. இப்போ போனா திரும்பி வர முடியாதுன்னு சொன்னாங்க. அதனால வேலையை விட்டுட்டேம்ப்பா. சொன்னாக் கவலைப் படுவீங்கன்னு சொல்லாம வந்துட்டேன்…”

“டாக்டர், என் பையன் என் பக்கத்துலதான் இருக்கான்”, அப்பாவின் குரலில் பெருமை பிடிபடவில்லை.

***

--கவிநயா

Friday, June 13, 2008

ஜிலேபியில் இருக்கு சூட்சுமம்!!

"சிவாஜி வாயில ஜிலேபி"

இந்த தலைப்புல தொடர் பதிவு எழுதணும்னு சொன்னோன்ன எனக்கு ஒண்ணுமே புரியல (என்னை மாட்டி விட்ட ராமலக்ஷ்மி வாழ்க!). சிவாஜி தெரியும். ஜிலேபி தெரியும். அவர் வாயில இவங்கள எப்படிங்க போடறது!

உண்மைய சொன்னா ஜிலேபிக்கும் ஜாங்கிரிக்கும் எனக்கு வித்தியாசம் தெரியாதுங்கோ! தெரிஞ்ச மாதிரி இருக்கும் ஆனா தெரியாம போயிடும் :) ஆனா நம்ம வல்லிம்மாவுக்கு தெரியாம இருக்குமா? அதனாலதான் அவங்க பதிவுல இருந்து ஜிலேபிய (அதாவது படத்த) சுட்டேன்! நன்றி, வல்லிம்மா!


இந்த உலகத்துல யார் யாருக்கு என்ன கிடைக்கணும்னு ஆண்டவன் ஏற்கனவே தீர்மானிச்சு வச்சிருக்கான்னு சொல்லுவாங்க! அரிசில கூட நமக்குரிய அரிசின்னா நம்ம பேரு எழுதி இருக்குமாம்! நம்ம பெரியவர் ரிஷானு அடிக்கடி சொல்ற பொன்மொழி - நமக்குன்னு உணவும் நீரும் எங்கெல்லாம் எழுதியிருக்கோ அங்கெல்லாம் நாம போய்த்தான் ஆகணும் - அப்படிங்கிறது. ஜிலேபி மட்டும் அதுக்கு விதிவிலக்கா என்ன! எத்தனை பேரு சிவாஜிங்கிற பேரை வச்சுக்கிட்டாலும், இறைவன் அவங்கவங்களுக்கு உள்ள ஜிலேபியையும் தீர்மானிச்சுத்தானே வச்சிருப்பார்! இந்த ஆழமான(!) சிந்தனையால் ஏற்பட்டதுதான் கீழ இருக்கிற பாட்டு!

உலகத்தில் உள்ள சிவாஜியெல்லாம்
இங்கே வாருங்கள்!

உங்களுக்கெனவே காத்திருக்கின்ற
ஜிலேபியை பாருங்கள்!

இந்த சிவாஜிக்கு இந்த ஜிலேபியென
இறைவன் எழுதி வைத்தான்!

அந்த ஜிலேபியே அவரவர் அடைவார்
உண்மை உணருங்கள்!

இதனால் நாம் அறிந்து கொள்ள வேண்டிய அரிய கருத்து யாதெனில், "உனக்குக் கிடைக்கணும்னு இருக்கது கிடைக்காம போகாது. ஆனா உனக்கு கிடைக்காதுன்னு இருந்தா, நீ எத்தனை காலம் தலைகீழா நின்னாலும் கிடைக்காது!".

அதனால மக்களே! உங்க பேர் போட்டது உங்களுக்கு கிடைச்சா அதை வச்சுக்கிட்டு சந்தோசமா இருங்க! மத்தவங்க பேர் போட்டது கிடைக்குமான்னு அலைஞ்சு டைம் வேஸ்ட் பண்ணாதீங்க! அம்புட்டுதாங்க!!

(இதை எங்கயோ கேட்ட மாதிரி இருந்தா, நான் பொறுப்பில்லைங்க! :)

என் வேண்டுகோளுக்கிணங்கி அடுத்த சுத்து ஜிலேபி சுத்த தயாராக இருக்கும் என்னுடைய ஆபத்பாந்தவர்களான ஜிரா, சஞ்சய், மற்றும் கேயாரெஸ்ஸை வருக வருக என வரவேற்கிறேன்!!


--கவிநயா

Tuesday, June 10, 2008

சின்னக் கண்ணா வாடா!!

சில கண்ணன் பாடல்கள் எழுதணும்கிற எண்ணம் ஏற்கனவே இருந்தது. நம்ம குமரன் இங்க போட்ட படத்தைப் பார்த்ததும் சொக்கிப் போய், உடனே எழுதிட்டேன்! :) அதே படம்தான் இங்கயும்... நன்றி, குமரா!




கண்ணன் - என் குழந்தை

சின்னக் கண்ணா வாடா
செல்லக் கண்ணா வாடா
அன்னை மடி ஏங்குதடா
அழகுக் கண்ணா வாடா!

பால் வடியும் முகத்தினிலே
பசும் மழலைச் சிரிப்பினிலே
தேன் வடியும் குரலினிலே
தே சொளிரும் தேகத்திலே

ஏழுலகின் எழிலையெல்லாம்
உன்னுருவில் ஏந்தி வந்து
அன்னை உள்ளம் கொள்ளை கொண்டாய்
அள்ளிக் கொள்ள ஆசை தந்தாய்!

பவழ வாய் திறந்து
பாலுக் கழுதி டுவாய்
பதறி நான் ஓடிவர
பகலவன் போல் சிரித்திடுவாய்!

திரட்டி வெண்ணை வைத்தால்
திகட்டாமல் தின்றிடுவாய்
விரட்டி பிடிக்க வந்தால்
விரைந்தோடி ஒளிந்திடுவாய்!

மண்ணை உண்டு விட்டு
மலங்க மலங்க விழித்திருப்பாய்
இழுத்து வாய் திறக்க
ஏழுலகம் காட்டிடுவாய்!

அறியாப் பாலகனாம்
அரக்கரெல்லாம் அழிப்பவனாம்
குறும்புச் சிரிப்பினிலே
ஊரைக் கொள்ளை அடிப்பவனாம்!

நல்வினையின் தவப் பயனாய்
என் மடியில் தவழ வந்தாய்
நீ எந்தன் சூல் தங்க
நூறு ஜன்மம் நானெடுப்பேன்!


--கவிநயா

Monday, June 9, 2008

அந்தி நேரத்தில்...




மின்னும் ஒளிக் கதிர்களை
வெள்ளிக் காசுகளாக்கி

ஏரி நீர் எங்கிலும்
எறிந்து மிதக்க விட்டு

துள்ளித் திரிகின்ற
தென்றல் குழந்தை வந்து

தத்தித் தவழ்ந்து அதன்
மேலே விளை யாடுகையில்

மலைக்கதவின் பின்னே நின்று
அரைகுறை மறைவினில்

(வண்ண) ஆடை மாற்றிக் கொள்ளும்
வானப் பெண்ணை எண்ணி

கொஞ்சிக் குலவியே
கூடி மகிழ்ந் திருக்க

இன்ப இரவை நோக்கி
இருப்புக் கொள் ளாமலே

காத்துக் கொண் டிருக்கிறான்
காதல் கதிரவன்...


-- கவிநயா

Wednesday, June 4, 2008

விடுதலை

உணர்வுக் குவியலான இதைப் போன்ற கதைகளை, கவிதைகளை இட ஒரு தயக்கம் உண்டு... ஆனால் பதிவுலகின் செல்லப் பிள்ளையாக வலம் வருகின்ற அன்புத் தம்பி ரிஷானின் விருப்பத்துக்கு இணங்கி, இதனை இடுகிறேன்... இந்தக் கதை முன்பு "திசைகளில்" வெளியானது... கதை, கவிதை, கட்டுரை, நகைச்சுவை எனப் பலவாறாகக் கலக்கும் ரிஷானுடைய இந்தக் கதையையும் படித்துப் பாருங்கள்...

***

விடுதலை

அவள் நின்ற இடத்திலேயே உறைந்து போய் நிற்கிறாள். தொலைபேசியைப் பிடித்திருந்த கை அதனுடனேயே ஒட்டிக் கொண்டு விட்டது போல் இருக்கிறது. ஏதாவது ஒரு உணர்ச்சிக்காகக் காத்திருக்கிறாள். வருத்தம், கவலை, அழுகை, ஏன் மகிழ்ச்சிக்கும் கூடத்தான். ஆனால் ஒன்றுமே வரவில்லை. மனசு மரத்துப் போயிருக்கிறது. "மிஸஸ். சங்கர், ஹலோ, ஏதாவது பேசுங்க மேடம்..." தொலைபேசியின் மறு முனையிலிருந்த குரல் சற்றே பதட்டமாய் ஒலிக்கிறது. "ஒ...ஒண்ணும் இல்ல சார். எ...எந்த மருத்துவமனைன்னு சொன்னீங்க?" வார்த்தைகள் கொஞ்சம் உடைந்து வருகின்றன. "விஜயா ஹாஸ்பிடல், மேடம்". "ரொம்ப நன்றி, சார்", தொலைபேசியை அதன் இடத்தில் மெதுவாக வைக்கிறாள்.

எல்லாமே கனவு மாதிரி இருக்கிறது. அன்று காலையில் நடந்ததை மனசு திரும்பிப் பார்க்கிறது. அவள் குளியலறையில் இருக்கிறாள். அவளுடைய அடைக்கல வாசஸ்தலம். சக்தி அனைத்தையும் பிரயோகித்து உடம்பு பூராவும் தேய்க்கிறாள். தோலே சிவந்து புண்ணாகி உரிந்து விடும் போலிருக்கிறது. அப்படியும் அவளுக்கு சுத்தமான திருப்தி இல்லை. முதல் நாள் இரவின் அடையாளங்களையும் சேர்த்துக் கழுவுதல் அத்தனை சுலபமாக இல்லை. அழுகையும் கையாலாகாத ஆத்திரமுமாக அவள் தேய்க்கையில், அவள் கணவன் சங்கரின் குரல் அவளைத் திடுக்கிட வைக்கிறது: "ஏய், என்னடி பண்ற? நாந்தான் இங்க வேலக்குப் போறவன். எனக்கு லேட்டாகுது. இப்ப வெளிய வரப் போறியா இல்லயா?" தூக்கி வாரிப் போட, குளியலைக் கூட முடிக்காமல் அப்படியே அரைகுறையாக சேலையைச் சுற்றிக் கொண்டு சங்கர் கதவை உடைக்கும் முன் அவசரமாக வெளியே வருகிறாள். வேக வேகமாக அவனுக்குக் காலை இட்லியும், மதியச் சாப்பாடும் தயார் பண்ணுகிறாள். அவன் வந்து இட்லியைப் பிட்டுச் சட்னியில் தோய்த்து ஒரு வாய் வைக்கிறான். அவ்வளவுதான், தட்டு அவள் முகத்தைக் குறி வைத்துப் பறக்கிறது. "ஏய், என்ன சமையல்லயே என்னக் கொன்னுடலாம்னு திட்டமா? உன் சமையலும் உன் மூஞ்சி மாதிரியே இருக்கு", உறுமியபடி அதே கோபத்துடன் ஸ்கூட்டரை உதைத்துக் கிளப்புகிறான். தினமும் நடக்கும் கதைதான் என்றாலும், அவளுக்கு அழுகையும், ஆத்திரமும் தினமும் போலவே கொப்பளிக்கிறது. அணைக்கு அடங்காமல் திமிறிக் குதிக்கும் புது வெள்ளம் போல் அடி வயிற்றைக் கீறிக் கொண்டு பொங்குகிறது கோபம். "பாவி, நீ அப்படியே ஏதாவது விபத்தில சிக்கித் தொலைய மாட்டியா?" .

அவளுடைய தினசரிச் சாபம் இன்றைக்குப் பலித்து விட்டது போலிருக்கிறது. அவன் ஸ்கூட்டருடன் தண்ணீர் லாரி ஒன்றின் அடியில் சிக்கி விட்டானாம். விஜயா மருத்துவமனையில் சீரியஸான நிலைமையில் இருக்கிறானாம். ஒரு காவல் அதிகாரிதான் அவளுக்குத் தொலைபேசியில் விஷயத்தைத் தெரிவித்தார். அவளுக்கு என்ன நினைப்பது என்று தெரியவில்லை. உடை மாற்றிக் கொண்டு ஆஸ்பத்திரிக்குக் கிளம்புகிறாள். அவனை ஐ.சி.யு - வில் வைத்திருக்கிறார்கள். அவளை உள்ளே அனுமதிக்கவில்லை. அதுவும் அவளுக்கு நல்லதாகவே போயிற்று. அவனைக் கண்ணாடிக் கதவின் வழியாகப் பார்க்கிறாள். அவனைச் சுற்றிலும் பலவித உபகரணங்கள். அடையாளமே தெரியாத அளவு உடல் முழுக்கக் கட்டுகள். அவன் கோமாவில் இருப்பதாகவும், அதிலிருந்து மீண்டு வருவானா என்று இப்போதைக்குச் சொல்ல முடியாது என்றும் டாக்டர் சொல்கிறார். அவள் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. டாக்டரும் அதைக் கவனித்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை.

ஆஸ்பத்திரியில் அவள் செய்யக் கூடியது எதுவும் இல்லை. அதனால் அவள் வீட்டுக்குத் திரும்பிப் போகிறாள். அவனுடைய அக்காவைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொல்கிறாள். அக்காவும் பதறிப் போகிறாள். குழந்தைகள் பள்ளியில் இருக்கிறார்கள், உடனே வர முடியாது என்று வருந்துகிறாள். அவள் வந்தாலும் செய்யக் கூடியது ஒன்றும் இல்லை என்று இவள் புரிய வைக்கிறாள். தானே சமாளித்துக் கொள்வதாகவும், ஏதாவது முன்னேற்றம் இருந்தால் மறுபடி தெரிவிப்பதாகவும் சொல்கிறாள்.

நேரம் ஆக ஆக அவளுக்கு நிலைமை புரிவது போல் இருக்கிறது. விடுதலை உணர்வு இலேசாக எட்டிப் பார்க்கிறது. இனி மணிக்கொரு தரம் தொலைபேசி ஒலிக்காது - அவள் வீட்டில்தான் இருக்கிறாளா இல்லையா என்று பார்க்க. அவள் எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் போகலாம். யாரிடம் வேண்டுமானாலும், எவ்வளவு நேரமானாலும் பேசலாம். ஒவ்வொரு இரவும் நரகம் அனுபவிக்கத் தேவையில்லை. மனதைக் குத்திக் கிழிக்கும் வார்த்தைகளையும், உடலை இரணமாக்கும் தாக்குதல்களையும் எதிர் கொள்ள வேண்டியதில்லை.

இவ்வளவு மோசமான மனிதனுடன் ஏன் இன்னும் வாழ்கிறாள் என்று அவளுக்கே புரியவில்லை. அவளுக்குக் கஷ்டப்பட்டுத் திருமணம் முடித்து வைத்த அவளுடைய பெற்றோர் கூட இப்போது உயிருடன் இல்லை. போன வருடம்தான் ஒருவர் பின் ஒருவராக இறந்து விட்டார்கள். குழந்தையும் இல்லை. பிறகு ஏன்? படுக்கையில் படுத்த வண்ணம் பலவற்றையும் சிந்திக்கிறாள். இப்படியெல்லாம் நினைத்துப் பார்க்க இது வரை எங்கே சந்தர்ப்பம் கிடைத்தது? அவனையும், அவன் கோபத்தையும் சமாளிப்பதிலேயே எல்லா சக்தியும் செலவழிந்து விட்டது. தன்னுடைய சாபம் பலித்து விட்டது குறித்து குற்ற உணர்வோ, வருத்தமோ இருக்கிறதா என்று தன்னையே கேட்டுப் பார்க்கிறாள். எதுவும் இல்லை. அவளுக்கே கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. வெகு நாட்களுக்குப் பிறகு முதல் முறையாக குழந்தையைப் போல் தூங்குகிறாள்.

ஒரு வாரம் ஓடி விடுகிறது. தினமும் ஒரு முறை மருத்துவமனைக்குப் போய் அவனைப் பார்த்து விட்டு வருகிறாள். வீட்டின் அமைதி அவளுக்கு சீக்கிரத்தில் பழகி விடுகிறது. பிடித்தும் இருக்கிறது. திருமணமான மூன்று நீண்ட வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறாள். எதிர்காலத்தைப் பற்றியோ, மருத்துவச் செலவை எப்படிச் சமாளிப்பது என்பது போன்ற விஷயங்களைப் பற்றியோ இன்னும் எதுவும் யோசிக்கவில்லை.

அன்றைக்குக் காலையில் சூரியன் உதித்த பின்னும் தூங்கிக் கொண்டிருப்பவளைத் தொலைபேசி பிடிவாதமாக ஒலித்து எழுப்புகிறது. "ஹலோ?" தூக்கக் கலக்கத்துடன் ஒலிக்கிறது அவள் குரல். "மிஸஸ். சங்கர். எப்படி இருக்கீங்க? உங்களை எழுப்பிட்டேன் போல இருக்கு. மன்னிச்சிடுங்க", மறு முனையில் இதமாக ஒலித்த டாக்டரின் குரலைக் கண்டு கொள்கிறாள். "பரவாயில்லை. சொல்லுங்க டாக்டர்", கேட்கும் போதே "எதற்கு இந்தக் காலையில் கூப்பிடுகிறார்?" என்ற எண்ணம் எழ, மூச்சு விடக் கூட மறந்து அவர் பதிலுக்குக் காத்திருக்கிறாள். "உங்க மேலயும் அவர் வாழ்க்கை மேலயும் உங்க கணவர் எவ்வளவு ஆசை வச்சிருக்கார்னு இப்பதான் தெரியுது, மேடம். இன்னிக்குக் காலைல உங்க கணவருக்கு நினைவு திரும்பிடுச்சு. கண் விழிச்சதும் உங்களத்தான் கேட்டார்", டாக்டர் உற்சாகமாகப் பேசிக் கொண்டே போகிறார்.

அவள் நின்ற இடத்திலேயே உறைந்து போய் நிற்கிறாள்.


-- கவிநயா