Wednesday, May 21, 2008

அன்னையவள் அழகுக்கு ஈடேது!


பொன்ஒளிரும் மஞ்சள் முகம்
பூஒளிரும் மதி வதனம்
பிறை ஒளிரும் முடிமீதினில்(1)

விழிகளிலே கருணை பொங்க
இதழ்களிலே முறுவல் தங்க
மனங்கவரும் ஜகன் மோகினி(2)

வில் பழிக்கும் புருவங்கள்
வேல் பழிக்கும் கருவிழிகள்
குவளைப்பூ பழிக்கும் இமைகள்(3)

சிமிழ் போன்ற சிறுநாசி
செம் பவழக் கன்னங்கள்
சிவந்திருக்கும் சின்ன இதழ்கள்(4)

தங்க மணித் தாரகைகள்
செவி யிரண்டை அலங்கரிக்க
செந்தூரப் பொட் டொளிர(5)

கார்மேக மையெடுத்து
கண்மீன்கள் எழுதிக்கொள்ள
விண்மீன்கள் வியந்து நோக்க(6)

காற்றோடு கதைபேசி
காதுரசும் கூந்தல்நறு
மணத்திற்குப் பூக்கள் ஏங்க(7)

வெண்சங்கு வழவழப்பை
தோற்கடிக்கும் கழுத்தினிலே
கர்வமுடன் அணிகள் மின்ன(8)

திருமேனி மென்மையதை
தீண்டியதும் பட்டாடை
நாணம்கொண்டு சிவந்திருக்க(9)

வானரசி மனம் கவர
தானுரசிச் சிரித்தபடி
கைவளைகள் கலகலக்க(10)

பாசமும் அங் குசமும்
தேவியவள் கரங்களிலே
பதவிசாய் அமர்ந்திருக்க(11)

இல்லாத கொடியிடையை
ஒய்யார ஒட்டியாணம்
இருப்பதாய்க் காட்ட முயல(12)

சின்னமணி நூபுரங்கள்
செல்லமாய்ச் சிணுங்கியவள்
செம்பிஞ்சுப் பாதம் கொஞ்ச(13)

விரலொட்டி வளைந்திருக்கும்
சிறுமெட்டி சிரத்தையுடன்
திருப்பாதம் அலங்கரிக்க(14)

கற்பூர ஜோதியிலே
என்அன்னை உன்வதனம்
காந்தம் போல் கவர்ந்திழுக்க(15)

உன்னையன்றி ஒருநினைவு
எனக்கெதற்கு என்றுமனம்
உருக உனைச் சரணடைந்தேன்(16)

22 comments:

  1. //சின்னமணி நூபுரங்கள்
    செல்லமாய்ச் சிணுங்கியவள்
    செம்பிஞ்சுப் பாதம் கொஞ்ச(13)//

    ஆமாம்....மூகர் கூட அன்னையின் பாதங்களைச் சொல்கையில் தளிர் பாதங்கள் அப்படிங்கற மாதிரித்தான் சொல்லியிருக்கார்.

    //விரலொட்டி வளைந்திருக்கும்
    சிறுமெட்டி சிரத்தையுடன்
    திருப்பாதம் அலங்கரிக்க(14)//

    தங்களது ஆழ்ந்த கவனிப்பு தெரிகிறது.

    //கற்பூர ஜோதியிலே
    என்அன்னை உன்வதனம்
    காந்தம் போல் கவர்ந்திழுக்க(15)

    உன்னையன்றி ஒருநினைவு
    எனக்கெதற்கு என்றுமனம்
    உருக உனைச் சரணடைந்தேன்//

    அம்புட்டுதான்....இந்த சரணடைதல் முழுசா நடந்துட்டா, ப்ரம்மத்துடனான ஐக்கியந்தான்...

    நல்லா வந்திருக்கு கவிக்கா (கவிநயா+அக்கா).. நிறைய எழுதுங்க.. :)

    என்னை நினைவில் வச்சிருந்து அனுப்பியமைக்கு மிக்க நன்றிகள். :)
    அப்பறமா தனி மடல் அனுப்புறேன்.

    ReplyDelete
  2. அட, இன்னிக்குத் தான் இங்கே வர முடிஞ்சது, இந்த அழகுக்கு ஈடு உண்மையில் ஏது? சீர்காழியின் குரலில், "சின்னஞ்சிறு பெண்போலே, சிற்றாடை இடை உடுத்தி," பாட்டுத் தான் எனக்கு எப்போவும் எந்த ஊர்க் கோயில் அம்மனைப் பார்த்தாலும் நினைவு வரும், அழகோ அழகு,பேரழகுக்கு ஈடாக எதைச் சொல்வது?

    ReplyDelete
  3. வாங்க, மௌலி. தெரிவிச்ச உடனே படிச்சிட்டீங்களே :) மிக்க நன்றி! நானும் அம்மா பைத்தியம்தான். அதான் உங்களைப் படிக்கச் சொன்னேன்.

    அச்சோ! உங்களுக்கும் அக்காவா! குமரா, இது சரியா? :)

    ReplyDelete
  4. கீதாம்மா! வாங்க வாங்க! உங்கள் வரவால் இந்த வலைப்பூ பாக்கியம் பெற்றது :) உங்களுக்கு ஜீவா பிறந்த நாள் வாழ்த்து சொன்னதைப் பார்த்தேன். நானும் என் மனம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவிச்சு உங்களை வணங்கிக்கிறேன்.

    அன்னையின் பேரழகுக்கும் பெருங்கருணைக்கும் ஈடே இல்லைதான்! அதான் நீங்களே இங்க வந்திருக்கீங்க! :) மிக்க நன்றி அம்மா!

    ReplyDelete
  5. அன்னையவள் அழகினையே
    ஆனந்தக் களிப்புடனே
    இனிய தமிழ்சொற்களிலே
    ஈர்க்கும்படி செதுக்கியது
    உள்ளமதில் நின்றபோழ்து
    ஊமையாகிப் போனேனம்மா !

    செஞ்சுருட்டி ராகம‌தில்
    சுகமாயமையும் இது.
    நெஞ்சுருகிப் பாடிடவே
    நீ எனக்கோர் வரமருள்வாய்.

    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.
    http://movieraghas.blogspot.com

    ReplyDelete
  6. வாங்க வாங்க, சுப்புரத்தினம் ஐயா! அன்னையின் அழகை யார் சொன்னாலும் இனிக்கும்தானே! உங்களுக்குப் பிடித்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி!

    //செஞ்சுருட்டி ராகம‌தில்
    சுகமாயமையும் இது.
    நெஞ்சுருகிப் பாடிடவே
    நீ எனக்கோர் வரமருள்வாய்.//

    ஆஹா! தங்கள் சித்தம், என் பாக்கியம்!

    ReplyDelete
  7. சித்திரத்தை முதல் காட்டி
    விசித்திரமாம் அன்னையிவள்
    உட்திறத்தைச் சொற்களிலே
    முத்திரையாய்ப் பதித்துவிங்கு
    சொற்திறமை காட்டுகின்ற
    இத்திறத்தை என் சொல்வேன்!

    வாழி நீ எனச் சொல்வதைத் தவிர்த்து!
    மிக மிக நன்று.

    ReplyDelete
  8. //சின்னமணி நூபுரங்கள்
    செல்லமாய்ச் சிணுங்கியவள்
    செம்பிஞ்சுப் பாதம் கொஞ்ச(13)//

    ஆகா! எவ்வளவு ஒயிலான வர்ணிப்பு?
    அன்னையவளின் அழகு திருவுருவை
    வணங்கி வழிபட முற்படின், அது முடிவில்லாமல் நீண்டு கொண்டே போகும் என்பது உண்மைதான்!
    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. வாங்க, வாங்க டாக்டர்! உங்கள் வரவு நல்வரவாகட்டும்! அன்னையின் அருள் உங்களையும் கூட்டி வந்துடுச்சு! :) அன்னிக்கு முருகன் பாட்டை கண்ணன் (கேஆரெஸ்) நல்லாருக்குன்னு சொன்ன போது வசிஷ்டர் வாயால பிரம்மரிஷி பட்டம் கிடைச்சாப் போல இருக்குன்னு சொன்னேன். இப்ப என்ன சொல்றதுன்னு தெரியாம திகைக்கிறேன்! உங்களுக்கே உரித்தான அழகுத் தமிழால அற்புதமா வாழ்த்தினதுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  10. வாங்க ஜீவி! 'ஒயிலான வர்ணிப்பு' ன்னு அழகா சொன்னீங்க! உங்க ரசனைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி! :)

    ReplyDelete
  11. இந்த பாடலை முதலில் செஞ்சுருட்டியில் அமைத்திட எண்ணிய போதிலும்
    மெட்டு போடும்போது யதுகுல காம்போதி இன்னும் அழகாக, பக்தி ரசம்
    உள்ளிட்டதாக அமைந்தது. இதை இங்கே நீங்கள் கேட்கலாம்.

    http://www.youtube.com/watch?v=-Kg9mQxLpd4

    ஒன்று முக்கியமாய் சொல்லிடவேண்டும். நாங்கள் பாடகர்கள் அல்ல.
    சொற்கள் உச்சரிப்பில் ஏற்படும் பிழை பொறுத்தருள வேண்டும். இந்த‌
    கிழவனுக்கு ஏதோ கொஞ்சம் கர்னாடக சங்கீத இலக்கணம் தெரியும். அவ்வளவே.
    பாடலைக் கேட்கும்போது, எங்கள் குரல் வளத்தில் கவனம் செலுத்தாது
    பாடலின் பக்திரசத்தில் மனதைச் செலுத்திட பயன் தெரிய வரும்.

    பாடலைப் பாடிட அனுமதி அளித்தமைக்கு மிக்க நன்றி.
    அன்னையின் அருளால் ஆயிரமாயிரம் பாடல்கள் பாடிடுவீர்.

    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.
    http://movieraghas.blogspot.com

    ReplyDelete
  12. பாடல் மிக அருமை, ஐயா! அன்னை அழகே என்று நீங்கள் பாடியிருப்பது மேலும் அழகூட்டுகிறது! கண்பனிக்கக் கேட்டேன். உங்களுக்கு எப்படி நன்றி சொல்ல முடியும்!

    //அன்னையின் அருளால் ஆயிரமாயிரம் பாடல்கள் பாடிடுவீர்.//

    இந்த ஆசி ஒன்றே போதும். மனம் நெகிழ வணங்குகின்றேன்!

    ReplyDelete
  13. ஈரெட்டு வரிகளில்
    ஈன்றவளை வர்ணிக்க
    ,
    ஈடாகும்
    ஈஸ்வரியின் அன்பும்,
    இரண்டும் எட்டுமாய்
    சுமந்த

    அன்னையின் அன்புக்கு
    .

    ReplyDelete
  14. ஜீவி ஐயாவின் இந்தப்பாடல் இப்போதுதான் சமீபத்தில் கேட்டது.
    தொடர்ந்து இரண்டு பாடல்கள் - புவனேஸ்வரியின்
    அருள்தான் என்னே!

    ReplyDelete
  15. பாடலை இருவரும் சேர்ந்து பாடி இருப்பது அருமையாக இருந்தது சூரி ஐயா, மிக்க நன்றிகள்!

    ReplyDelete
  16. //ஈரெட்டு வரிகளில்
    ஈன்றவளை வர்ணிக்க
    ,
    ஈடாகும்
    ஈஸ்வரியின் அன்பும்,
    இரண்டும் எட்டுமாய்
    சுமந்த

    அன்னையின் அன்புக்கு//

    அட! அழகா சொன்னீங்க ஜீவா. ஜீவி அவர்களின் பாடலைத் தந்ததற்கும் நன்றிகள்! அ/எங்கும் அவளே இருப்பதைப் பார்த்தேன். :)

    ReplyDelete
  17. பாடலும் அருமை! இசையமைப்பும் வெகு சோர்! இசை பக்தியை தூண்டும் விதமாக அமைந்துள்ளது. தஞ்சை சுப்பு அவர்களே, பாட்டமைப்புக்கு நன்றி!

    நயமான கவிதைகளை அனாயசமாக எழுதும் கவிநயா அவர்களே, உங்களது பல கவிதைகள் இது போல் இசை உருப்பெற்று உலகெங்கும் பிரபலமாக என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    தமிழ் வாழ்க! தங்கள் தொண்டு வளற்க!

    -மீனா சங்கரன்

    ReplyDelete
  18. வாங்க மீனா! உங்க பின்னூட்டம் பார்த்து ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. நீங்களும் உங்க தோழியும் இசையமைச்சு வள்ளித் திருமணத்துல பாடின நம்ம முருகன் பாடலை சீக்கிரமே ஒலிப்பதிவு செய்து தாங்க. அதைக் கேட்க இங்க நிறைய பேர் ஆவலா இருக்காங்க :)

    ReplyDelete
  19. அன்னையை கண் முன்னே கொண்டு நிறுத்தும் பாடல் தான் அக்கா இது. தற்காலக் கவிதை படித்து நாட்கள் ஆகிவிட்டதால் கொஞ்சம் ஊன்றிப் படித்தேன். கவிதை எளிது தான்; என் பயிற்சி தான் கெட்டுப் போயிருந்தது. :-)

    குவளையைக் கண்களுக்குத் தானே உவமையாக்குவார்கள்? நீங்கள் இமைகளுக்குச் சொன்ன காரணமென்ன?

    சில இடங்களில் உவமை, உவமேயம் இடம் மாற்றிக் கொள்ளும் போது சுவையாக இருக்கின்றன. ஒட்டியாணத்தின் முயற்சியைப் படித்த போது புன்னகை தோன்றியது.

    அடியேனும் தாங்கள் காட்டிய அன்னையின் திருவுருவைக் கண்டு அன்னையின் திருப்பாதங்களில் சரணடைந்தேன்.

    ReplyDelete
  20. குமரா, நீங்கள் இன்னும் இதைப் படிக்கவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நீங்கள் கவிதைகள் அதிகம் படிப்பதில்லை என்றதால் ஒன்றும் சொல்லாமல் இருந்தேன். இப்போது உங்கள் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி! :)

    //குவளையைக் கண்களுக்குத் தானே உவமையாக்குவார்கள்? நீங்கள் இமைகளுக்குச் சொன்ன காரணமென்ன?//

    இப்படிக் கடினமான கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது! :) அன்னையே எழுதிக் கொள்கிறாள்; அவளே படிக்கவும் வைக்கிறாள்... :) எனக்கென்னவோ குவளை குவிந்து விரிகையில் அன்னையின் இமைகளுக்கு பொருத்தமாய் இருக்கும் என்று தோன்றியது...

    //அடியேனும் தாங்கள் காட்டிய அன்னையின் திருவுருவைக் கண்டு அன்னையின் திருப்பாதங்களில் சரணடைந்தேன்.//

    மிக்க மகிழ்ச்சி, குமரா! அதுதானே வேண்டும்! :)

    ReplyDelete
  21. //உன்னையன்றி ஒருநினைவு
    எனக்கெதற்கு என்றுமனம்
    உருக உனைச் சரணடைந்தேன்//

    மனம் உருகி உருகி நீங்கள் செதுக்கியிருக்கும் வர்ணனைகள் அத்தனையும் அற்புதம், கவிநயா!

    ReplyDelete
  22. உங்கள் ரசனைக்கு மிக்க நன்றி, ராமலக்ஷ்மி!

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)